Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

இல்லறம் இதுதான்

Share Us On


Readers Comments

Recent Updates

இல்லறம் இதுதான் – 10

அத்தியாயம் – 10

 

சங்கர் வீட்டுத் தோட்டத்தில் எதையோ கொத்திக் கொண்டிருந்தான். லட்சுமியும் சிவாவும் சத்தமில்லாமல் அவன் பின்னால் சென்று நின்றனர். யாரோ தன பின்னால் நிற்பதை உணர்ந்து அவன் திரும்பிப் பார்த்தான்.

 

“அடடே, என்ன இது? ரெண்டு குறும்புக் காரிகளும் இன்று என்னை கலைக்க வந்துட்டிங்களா?”

 

“அதெல்லாம் இருக்கட்டும். மணி ஆறு முப்பதாகுது. இருட்டியாச்சு. இன்னும் தோட்டத்தில் என்ன வேலை… பூச்சி எதுவும் கடிச்சிடுச்சின்னா என்ன பண்ணறது?” சிவா கண்டித்தாள்.

 

“ஹாஸ்ப்பிட்டல் போறது” கண்ணடித்தான்.

 

“அடிங்…” சிவா அவனை பிடிக்க ஓட அவன் அவளிடம் அகப்படாமல் தப்பித்து ஓடினான்.

 

மூச்சிரைக்க நின்றாள் சிவா “போதும் அத்தான். தோல்வியை ஒத்துக்கறேன்”

 

“சரி…” அவள் அருகில் வந்தான்.

 

“உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அக்கா எங்கே?”

 

“அவள் தலை வலி என்று நல்லா தூங்கறா”

 

“ஓ… உங்ககிட்ட கொஞ்சம் பேசனும். மாடிக்கு வாங்க”

 

“சொல்லுங்க என்ன விஷயம்” – மாடிக் கைப்பிடி சுவரில் சாய்ந்தபடி கேட்டான் சங்கர்.

 

“அது வந்து…” இழுத்தாள் சிவா.

 

“சொல்லு சிவா… என்கிட்டே உனக்கு என்ன தயக்கம்”

 

“நேத்து நீங்களும் அக்காவும் போயி மெடிக்கல் டெஸ்ட் எடுத்துட்டிங்களா?”

 

“ஆமா”

 

“அது வந்து…”

 

“சொல்லு…”

 

“அந்த ரிசல்ட் நாங்க பார்த்தோம் அத்தான். அக்காவுக்கு குறை இருக்கறதா ரிப்போர்ட் சொல்லுது”

 

“ம்ம்ம்” சிறிதும் அதிர்வில்லாமல் கேட்டான்.

 

“அக்காவுக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லைன்னு..”

 

“அதுக்கு என்ன இப்போ”

 

“என்ன அத்தான்… இவ்வளவு பெரிய விஷயத்தை சாதாரணமா கேட்கறீங்க. உங்களுக்கு அதிர்ச்சியா இல்லையா?”  லட்சுமி கேட்டாள்.

 

“என்னம்மா அதிர்ச்சி… உண்மையை ஏத்துக்கத்தானே வேணும்”

 

“போதும். நான் என்ன செய்யணும். அதை மட்டும் சொல்லுங்க”

 

“ஒன்னும் இல்லை அத்தான். இப்போவே அக்காவுக்கும் அத்தைக்கும் ஆகமாட்டேங்குது. இதுல இந்த விஷயம் வேற தெரிஞ்சதுன்னா அத்தை அக்காவை…”

 

“அதுனால?”

 

“குறை உங்களுக்கு இருக்கறதா மாத்தி எழுதணும்”

 

“எழுதினா?”

 

“அத்தைக்கு அக்கா மேல அனுதாபம் வரும். இவங்க கோபமா பேசினாலும் நம்ம மகனால தானே இவ மலடிங்கற பட்டத்தோட வாழரான்னு தோணும்”

 

“அப்புறம்?”

 

“எப்பவும் நம்ம குடும்பம் சந்தோஷமா இருக்கும்”

 

“முடிச்சாச்சா? இப்போ நான் பேசலாமா?”

 

“பேசுங்கத்தான்…”

 

“உங்களுக்கு என் மனைவி மேல இருக்கற அக்கறைக்கு ரொம்ப நன்றி. ஆனால் நீங்க ஒன்னை மறந்துட்டிங்க. நீங்களே இவ்வளவு நினைச்சிருக்கும் போது நான் யோசிக்க மாட்டேனா? நேத்து நானும் ஹாப்பிட்டல் போயிருந்தேன். டாக்டரை பார்த்து ரிசல்ட்டை கேட்டு வாங்கினேன். ரொம்ப அதிர்ந்து போயிட்டேன். மனசெல்லாம் சுக்கு நூறாயிடிச்சு. ஆனால் தேத்திகிட்டேன். சாரதாவுக்கு தெரிஞ்சா நொறுங்கிடுவா. அவ நிம்மதி எனக்கு ரொம்ப முக்கியம்.  டாக்டர் கால்ல கைல விழுந்து ரிப்போர்ட்டை மாத்திட்டு தான் வந்தேன். அதாவது.. இப்போ நீங்க சொன்னதை நான் நேத்தே முடிச்சுட்டேன்”

 

“அத்தான்!!!” இருவரும் ஒருசேர அதிர்ந்தார்கள்.

 

அவன் அமைதியாக புன்னகைத்தான். காதல் எதையும் செய்ய தூண்டும் என்பது உண்மைதான் போல…

 

“ஆனால்… அக்காவுக்கு உங்க மேல வெறுப்பு வந்துடவும் வாய்ப்பு இருக்கு அத்தான். அதை யோசிச்சிங்களா?”

 

“என் சாரதாவை எனக்கு நல்லா தெரியும் சிவா… அவளால என்னை வெறுக்க முடியாது. நிச்சயமா வெறுக்க மாட்டா… எங்களுக்குள்ள வர்ற சண்டையெல்லாம் ரொம்ப சின்னது… தூசி மாதிரி… நிமிஷத்துல பறந்துடும்…”

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ பாய்ந்தோடி வந்த சாரதா மற்ற இருவரையும் புறம் தள்ளிவிட்டு கணவனை கட்டிக் கொண்டாள். காற்றுப் போகவும் இடைவெளி இல்லாமல் இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள். கண்களில் கண்ணீர் தாரைத் தாரையாக வழிந்தது.

 

“சாரிங்க… சாரிங்க…” அவள் வாய் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.

 

சிவாவும் லட்சுமியும் நாகரீகமாக அந்த இடத்தை விட்டு வெளியேற முயன்ற போது சாரதா சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டாள். அவர்களுக்கும் நன்றி கூறி அனைத்துக் கொண்டாள். வீட்டில் உண்மையை சொல்லிவிடலாம் என்று அவள் எவ்வளவோ கூறியும் அதை மூவரும் மறுத்துவிட்டார்கள்.

 

ராஜம் உடைந்துப் போய்விட்டாள். தன மகனுக்கு குறை என்று நொந்துப் போனாள். சாரதாவை அருகில் வைத்துக் கொண்டு ஆறுதல் கூறினாள். அவளுக்குத் தான் தர்ம சங்கடமாய் இருந்தது. மகனையும் மருமகளையும் பாசமாக வழியனுப்பி வைத்தாள்.

இல்லறம் இதுதான் - 9
இல்லறம் இதுதான் - 11
Leave a Reply

1 Comment on "இல்லறம் இதுதான் – 10"

avatar
  Subscribe  
newest oldest most voted
Notify of
Thadsayani Aravinthan
Member

Hi mam

இவர்கள் உண்மையை மறைக்கின்றார்கள் இது எங்கே கொண்டுபோய் விடுமோ தெரியவில்லை .

நன்றி

error: Content is protected !!