Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 22

அத்தியாயம் – 22

சென்னை உயர்நீதிமன்றம்!

 

“ஆகையால் கணம் கோர்ட்டார் அவர்களே என் கட்சிக்காரர் இதுவரை ஏழுக்கும் மேற்பட்ட வழக்குகளில் ஜாமீனில் வந்துள்ளார். ஜாமீனில் வருவது என்பது அவருக்கு புதிதல்ல. எந்த ஒரு ஜாமீன் வழக்கிலாவது, அவர் சாட்சியைக் கலைத்ததாகவோ, சட்டத்திற்கு புறம்பாக நடந்ததாகவோ எதிர் தரப்பு வக்கீல் நிரூபித்தாரானால் இந்த வழக்கில், அவருக்கு ஜாமீன் கேட்டதை நானே நிராகரித்து விடுகிறேன். ஆகவே இந்த வழக்கிலும் என் கட்சிக்காரருக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.,

தட்ஸால் யுவர் ஆனர்”

 

அரசாங்க வக்கீலால் ஒன்றும் பேச முடியவில்லை.  கற்பழிப்பு, கஞ்சா கடத்துதல், திருடுதல் என அத்தனைவகை குற்றங்களையும் சர்வ சாதாரணமாய் செய்துவிட்டு, ஒரு மாதம் கூட உள்ளே இருக்கவில்லை. ஜாமீனிற்கு தாக்கல் செய்து வெளியே செல்லப் போகிறான். இனி வெளியே போய் அடுத்து என்ன செய்யப் போகிறானோ! எவன் குடியைக் கெடுக்கப் போகிறானோ!

 

இதற்கு வாதாட, மனசாட்சியை அடகு வைத்த வக்கீல் வேறு. அந்தாளுக்கு ‘ஜாமீன் புகழ் வக்கீல்’ என்றே பெயர். எப்பாடுபட்டாவது ஜாமீன் வாங்கி கொடுத்துவிடுவார். பேசாமல் அவர் கட்டியிருக்கும் பதினொன்னரை (ஒரு வீடு பாதியில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அநேகமாய், இந்த மாத ஜாமீன் வழக்கில் அதை முடித்துவிடுவார்) வீட்டிற்கும், ” ஜாமீன் இல்லம்” என்றே பெயர் வைக்கலாம்.

 

“ஏன் ஜாமீன் வழங்கக் கூடாதென தெள்ளந்தெளிவாக அரசாங்க வக்கீல், நிரூபணம் செய்யத் தவறியதால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிடுகிறேன். மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர், பிணைத் தொகையாக ரூபாய்  இருபதினாயிரம் மட்டும், நீதிமன்றத்திற்கு செலுத்த வேண்டும். அதோடு மட்டுமல்லாது, மாதம் முதல் திங்கட் கிழமை, காலை பத்து மணிக்குள், உள்ளூர் காவல் நிலையத்தில் கையொப்பம் இட வேணுமாய் நீதிமன்றம் உத்தரவிடுகிறது”

 

கிழக்குக் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த அந்த புது மாடல் காரில் இருந்தனர் வக்கீலும், ஜாமீனில் வெளிவந்த வாசுவும்…

 

“எப்படிய்யா வாசு… ஜாமீன் இந்த முறை கிடைக்காதுனு சொன்னியே, பாத்தியா

வாங்கிக் கொடுத்தாச்சுல்ல”

 

“சார் தொட்ட கட்டு என்னிக்கு தொலங்காம இருந்திருக்கு. இந்த வாட்டி கை வச்சது பெரிய இடமாச்சே! அந்த பயம் இருந்துச்சு. அதான் கொஞ்சம் பயந்தேன்”

 

“பெரிய இடமாவது சின்ன இடமாவது, நான் இருக்கிற வரை நீ எதுக்கும் கவலைப் படாத… எவ்வளவு தப்பு பண்ண முடியுமோ பண்ணு… ஜாமீனுக்கு நான் பொறுப்பு”

 

” என்ன சார், தப்பு பண்ணாம ஒழுங்கா இருடானு சொல்லாம”

 

“உன்னை மாதிரி ஆளுங்க தப்பு பண்ணாதாண்டா எங்களை மாதிரி ஆளுங்களுக்கு துட்டு, மணி, காசு எல்லாம். அண்ணாநகர்ல வீடு வேற பாதில நிக்குது… இவன் வேற ஒழுங்கு மழுங்குனு பேசிட்ருக்கான்”

 

“ஹஹ வித்தியாசமான வக்கீல் சார் நீங்க”

 

” போடா முட்டாள். முக்காலே மூணு வீசம் வக்கீலுங்க எல்லாம் இப்படித்தான்டா! அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம்னு  நியாயவாதி வக்கீலுங்க இருப்பாங்க! அவனுங்களை வேணா வித்தியாசமான வக்கீல்னு சொல்லு”

 

“நீங்கள்லாம் இருக்குற வரை எங்களுக்கு என்ன கவலை”

 

” சரி சரி பேச்சுவாக்குல பீஸை மறந்துடாத. ஒரு லட்சம், அதோட கோர்ட்ல உனக்காக நான் கட்டுன இருபதாயிரம் சேத்து எண்ணி வை., வக்கீலுக்கே கறுப்பு கவுன காட்டாத”

 

“என்ன சார், நான் என்னிக்கு ஏமாத்திருக்கேன். இதோட நாலாவது முறை நீங்க என்னை வெளிய எடுக்கறீங்க!

வெட்டுவாங்கன்னி தொடும்போது நம்மாளு பணத்தோட நிப்பான். கவலை படாத சாரு”

 

“ஆமா! ஏன்டா ஒவ்வொரு தடவையும் இங்கையே வச்சு பணத்தை செட்டில் பன்ற”

 

“ஹஹ ஒரு ராசிதான்”

 

” என்னடா கன்னின உடன  ஒரு கன்னி நிக்குது. அங்க பார்ரா, ரோட்டுல! முன்னாடி வண்டி ஒன்னு நிக்குது. வண்டி மக்கர் போல லிப்ட் கேக்குது. பட்சி மட்டும் மடிஞ்சதுன்னா உன்கிட்ட பணத்த வாங்கிட்டு, அப்டியே வண்டிய பாண்டிக்கு விட வேண்டியதுதான்”

 

“முதல்ல நிறுத்தி பாருங்க! எதாவது வில்லங்கமா இருக்கப் போகுது”

 

அந்த பெண்ணை ஒட்டியபடி வண்டியை நிறுத்தினார் வக்கீல்.

“யெஸ்”

 

” சார், கார் ப்ராப்ளம் ஆகியிருச்சு. என்னை ஈஞ்சம்பாக்கத்ல ட்ராப் பண்ண முடியுமா?”

 

” வித் ப்ளஷர்”

 

“தாங்ஸ் சார்… ஓ… நீங்க லாயரா! கார்ல  சிம்பள் இருக்கே”

 

” எஸ்… யு ஆர் அப்சல்யூட்லி கரெக்ட். டேக் யுவர் சீட் அட் ரியர்”

 

“சார், இப் யு டோண்ட் மைண்ட், நான் முன்னாடி உக்காந்துக்கவா! ஜஸ்ட் ஐ வான்ட் டு என்ஜாய் தி ப்ரண்ட் வ்யூ!”

 

“வொய் நாட்… வாசு நீ பின்னால உக்காரு”

 

“எகெய்ன் தாங்ஸ் சார்”

 

முன்னாடி ஏறி அமர்ந்தவள் ஏஸிக்காக கண்ணாடியை ஏற்றியதும், லிப்ஸ்டிக் சாதனம் போன்று ஒன்றை எடுத்தாள்.

எதோ ஒரு பாட்டை ஹம் செய்து கொண்டே ஏஸி காத்து வரும் க்ரில்லில் தாளம் போட்டபடியே வந்தாள்… ஐம்பதடி தள்ளி,  இளநீர் கடையொன்று சாலையின் ஓரத்திலேயே இருந்தது.

 

“சார் சார் அந்த இளநி கடைல, ஒன் செகண்ட் நிறுத்துங்க சார். வெயில்ல நின்னது தாகமா இருக்கு”

 

“ஷ்யூர். ஒன்னென்ன ரெண்டாகூட வாங்கிகங்க ஐ வில் பே இட்…. என்று ஜொள்ளியபடியே ஓரமாய் நிறுத்தவும், அவள் அந்த லிப்ஸ்டிக் சாதனத்தை அழுத்தவும், என்ன ஒரு மாதிரி இருக்கே என உணர்வதற்குள் இருவரும் உணர்விழக்கவும், இளநீர் கடைக்காரர் விரைவாக வந்து லாயரைத் தள்ளி ட்ரைவர் சீட்டில் அமர்ந்தபடியே எதோ ஒரு மூச்சுவிடும் சாதனம் ஒன்றை அவளிடம் தூக்கிப்போட்டு, தானும் ஒன்றை மாட்டிக் கொண்டு கார் வேகமெடுக்கவும், அதே நேரம் முன்னாடி உள்ள  இரண்டு பக்க கண்ணாடியை கொஞ்சமே கொஞ்சம் இறக்கவும் ஆறு நொடிதான். ஆங்கிலப் படம் பார்ப்பது போல் இருந்தது.

அத்தனை வேகம். ஆனால் படபடப்பை வெளியில் காட்டாத வேகம்….

 

ஐந்து நிமிடம் இருவரும் எதுவும் பேசவில்லை.

 

” இனிமே கவலை இல்ல. எக்ஸாஸ்ட் ஆகியிருக்கும்”

 

இருவரும் சாதனத்தை கழட்டி, கண்ணாடியை மேலேற்றினர். அவள் அதே பாடலை மீட்டும் ஹம் செய்யத் தொடங்கினாள். சட்டென்று கேட்டாள்.,

 

“அவங்க வந்திருப்பாங்களா?”

 

“ஏன் சந்தேகம். இதுவரைக்கும் எது தவறியிருக்கு. என்னிக்கு தவறுதோ, அப்போ நாம செய்றது ஆண்டவனுக்கு பிடிக்கலைனு அந்த நொடியே எல்லாத்தையும் நிறுத்திடுவேன்”

 

“இல்ல., பாண்டிச்சேரி கோர்ட்லருந்து வரணுமே… அதான் கேட்டேன்”

 

“எங்க இருந்தா என்ன. சரியான திட்டமிடல் இருந்தா! எதுவும் சாத்தியமாகும்”

 

“அப்புறம் கடவுளையும் நம்பறேங்கற”

 

“ஹஹ இப்போ இவங்க ஈசிஆர் ரோட்ல வராம ரூட் மாறியிருந்தா என்ன பன்னுவ, உனக்காக நிறுத்தலைனா, இளநி கடைல நிறுத்தலைனா இப்படி எத்தனையோ  “னா” இருக்கு. அது எல்லாம் மிஸ்ஸாகாம நடக்கறதெல்லாம்  இறைவன் செயல்தான”

 

“அப்பா! உங்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா” என்றவள் அவனே எதிர்பார்க்காத வேளையில் அவன் கன்னத்தில், தன் உதட்டினை பச்சக்கென ஒற்றி எடுத்தாள்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *