Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Veppangulam

Share Us On

[Sassy_Social_Share]

வேப்பங்குளத்தில் ஒரு காதல் – 7

அத்தியாயம் : 7

உழவர் திருநாள் :

பொங்கல் என்றாலே அது கிராமத்தில் தான் களைகட்டும். அதுவும் உழவர் திருநாள், அதாவது கறிநாள்.

 

என்று கிராமத்தில் கூறப்படும் நாள் கிராமத்திற்கே உறிய பாங்கில் கொண்டாடப்பட்டது. அன்று அசைவம் சமைத்து உண்பதால் இப்பெயர் தோன்றியிருக்கலாம்.

 

இரவு வெகுநேரம் கழித்து உறங்கியதால் சற்று தாமதமாகத்தான் எழுந்தாள் ரம்யா . குளித்து முடித்து கூடத்திற்கு வர எத்தனித்தவள் தயங்கி நின்றாள் காரணம், கூடம் முழுவதும் பெண்களின் கூட்டம். அழகான பாவாடை தாவணி அணிந்து தலைநிறைய பூவைத்து கணிசமான நகைகளை அணிந்து மிக மிக லட்சனமாக இருந்தனர். இதில் சிறுமிகளும் அடக்கம்.

 

“என்னாச்சு?  ஊரில் உள்ள திருமணமாகாத பெண்களெல்லாம் கூடி வந்திருக்காங்க. உன் மூணாவது அண்ணனுக்கு சுயம்வரமா? ” மென்சிரிப்புடன் சுகுணாவின் காதை கடித்தாள் ரம்யா.

 

“ம்….ஹீம் உனக்கு கொழுப்பு அதிகம் தாண்டி “.

 

“சரி சரி சொல்லேன் என்ன. விஷயம். ”

 

“இது கொப்பி  தட்டரதுன்னு சொல்லுவாங்க. இதோ இந்த கொப்பி இருக்குல….”என்று சுகுணா  காட்டிய தட்டில் பத்து பண்ணிரண்டு சின்ன சைஸ் வரட்டி இருந்தது. அதுபோல் பல தட்டுக்களும் இருந்தன.

 

“அந்த கொப்பி செய்து நடுவில் வெச்சு  பெண்கள்  எல்லாம்  சுத்தி வந்து கும்மி அடிப்பாங்க.இது நாட்டாமை காரர் வீட்டில் ஆரம்பித்து  கணக்கு பிள்ளை, மணியக்காரர், பூசாரி என்று முக்கிய புள்ளிகள் வீட்டில் தொடர்ந்து இறுதியாக குளத்தங்கரையிலே இறுதி கும்மி கொட்டி விட்டு குளத்தில் அந்த கொப்பிகளை கரைத்து விடுவார்கள்.கும்மி அடிக்கும் வீடுகளில் கொடுக்கும் உணவு, பண்டம், கரும்பு, வாழைப்பழம் எல்லாம் குளக்கரையில் வெச்சு பகிர்ந்து உண்டுவிட்டு  வீட்டை நோக்கி கிளம்புவார்கள், இதுதான் இன்றைய ஸ்பெஷல்.”

 

விழி விரிய இதையெல்லாம் கேட்டவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது.இது தான் பாரம்பரியமா, இதுதான் பண்டிகையா,என்ன அழகு …..என்ன கொண்டாட்டம். ஆவலாக அங்கே தட்டில் இருந்த கொப்பிக்களையும் பெண்களையும் பார்கலானாள் ரம்யா.

 

“நாட்டாமை மணிவண்ணன் வருகை புரியவும் பெண்கள் எல்லோரும் எழுந்து  நின்று வணங்கி விட்டு அமர்ந்தார்கள். வீட்டில் இருந்த. எல்லோரும் கூடத்தில் தான் கூடி இருந்தார்கள்.பாஸ்கரனை தவிர.

 

“ஏ…….பொண்ணுகளா அதுதான் நான் வந்துட்டுடேனுல்ல, கும்மிய ஆரம்பிக்கரது “தங்கச் சங்கலிகளை வெளியே எடுத்து  விட்டுக் கொண்டே  மணிவண்ணன் குரல் கொடுக்க

 

“சின்னைய்யா வராம கும்மியா? அய்யாவும் வந்துரட்டுமே ங்கய்யா? அங்கே தலைவி போல் வீற்றிருந்த பெண் பதிலளித்தார்.

 

“ம்……அதுதானே பார்த்தேன்  அவனை விட்டுபுடமாட்டீங்களே “மரிக்கொழுந்து முனுமுனுத்தாள்.

 

“பெரிய இவரு உங்க அண்ணன்  வேணும்னே லேட்டா வராரு பாரு “,

 

“லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவாரில்ல “இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள் சுகுணா.

சட்டென அந்த கூட்டத்தில் ஒரு சலசலப்பு, உடனே ரம்யாவிற்கு புரிந்து விட்டது, பாஸ்கரன் வந்துவிட்டானென்று, எல்லோரும் எழுந்து அவனுக்கு வணக்கம் தெரிவித்தனர்.பதில் வணக்கம் தெரிவித்தவன்,

 

“கொஞ்சம் தாமதமாயிடுச்சு “என்றானே தவிர மன்னிப்பு கோரவில்லை. காட்டான் என்று உள்ளுக்குள் நினைத்துக் கொண்டாள் ரம்யா.

 

“பரவாயில்லை மாமோய் ” என்றது பலக்குரல் “.

 

இத்தனை முறைப் பெண்களா  என்று கேலியும் கிண்டலுமாக பாஸ்கரனிடம் தன் பார்வையை செலுத்த, அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.சிவந்த அவனது கண்கள் முன்தினம் நடந்தவற்றை நினைவுப் படுத்த முகம் இறுகி விட்டது ரம்யாவிற்கு.

 

“ம்….ம்….அதுதான் அண்ணன் வந்துட்டாரே இனி மேலாவதுகும்மி போடுவீங்களா இல்ல, அடுத்த பொங்கலுக்குதானா “காளிதாசனின் கேலிக்குரல்  அங்கே கூடியிருந்த பெண்களை  உசுப்பி விட்டது.உடனே எல்லோரும் எழுந்து நடுவில்  அந்த கொப்பித் தட்டுகளை வைத்து விட்டு சுற்றி பெரும் வட்டமாக நின்று கொண்டனர்.தலைவி போல் இருந்த பெண் பாட ஆரம்பித்தாள்.கணீர் குரலில் அவள் பாடியது அந்த கூட்டத்தின் மூலை முடுக்கு வரை தெள்ளத் தெளிவாக கேட்டது.

 

“தந்தானே தானே, தன்னானே தானே வாடாம வதங்காம வளத்தேனே கொப்பி

 

வடவாத்தங் கரையோரம் போவாயோ கொப்பி

 

சிந்தாம செதராம சேத்தேனே கொப்பி

 

சிற்றாற்றங்கரை யோட போவாயோ கொப்பி

 

அந்தான்ட கப்பல இந்தான்ட வெச்சு

 

வெள்ளக்காரன் கப்பல்ல வெளக்கேத்தி வைக்க

 

போரீயோ கொப்பி

 

தந்தானே தானே, தன்னானே தானே ”

 

கும்மிப் பாட்டையும் அந்த அழகிய பெண்கள் கொட்டும் கும்மியையும் ரசித்து கவனித்தாள் ரம்யா. எத்தனை அழகாக இருக்கிறது?  பக்கவாத்தியமில்லை, ராகம்., தாளம், எதை பற்றியும் கவலையில்லை. கைகளே தாளம்,குரலே ராகம். ஒன்று சேர்ந்து ஒரு பாட்டை கோரஸாக பாடும் பொழுது கூட பிசிரில்லாமல் கேட்க அருமையாகவே இருந்தது. அவர்கள் கைகளை ஒன்றாக தட்டும் பொழுதும், உடலை அதற்கேற்றார் போல் ஒன்றாக வளைக்கும் பொழுதும் அதில் தெரிந்த நளினம் ரம்யாவை வெகுவாக ஈர்த்தது. கும்மி ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே வீட்டு வாண்டுகள் ஒன்று கூடி சுகுணாவையும் ரம்யாவையும் பற்றி இழுத்துக்கொண்டு கும்மி வட்டத்திற்குள் சென்றனர்.முதலில் வெறுமனே சுற்றி சுற்றி வந்தவள் பின் தப்பும் தவருமாக கைககளை தட்ட.,அவளது சத்தம் தனியாக கேட்டது. பாஸ்கரனின்  விழிப்பார்வை வேறு அவளையே சுற்றுவது புரிந்து நாணம் அவளை பற்றிக்கொண்டது.

 

“ச்சே… என்ன இவர் இப்படி பார்த்து வைக்கிறார்? ” மனதில் நினைத்தவள் அக்கம் பக்கம் பெண்களை பார்த்து ஓரளவு அதேபோல் கைத் தட்டவும் உடல் வளைத்து குனிந்து  நிமிரவும் முயற்சி செய்தாள் அந்த முயற்சியில் ஓரளவு வெற்றியும் பெற்றாள். ஒரு வாரு கும்மி பாட்டு முடிந்து எல்லாப் பெண்களும் கீழே அமர்ந்தனர்.

 

“ஏ பூங்காவனம் இங்கவா புள்ள! “என்ற மணிவண்ணனின் குரலுக்கு துள்ளி குதித்து எழுந்து ஓடினாள்.கும்மி பாட்டு படித்த அந்த பெண் .

 

சில நூறு ரூபாய்களை தன் சட்டைபையிலிருந்து  எடுத்ததவர், அதனை அவளிடம் கொடுத்து, “எல்லோர்க்கும் கொடு புள்ள” என்றார்.

 

அவருக்கு வணக்கம் கூறி அதனை பெற்றுக் கொண்டவள் அங்கே இருந்த கொப்பி தட்டுகளில் பகிர்ந்து வைத்தாள்.

 

அதற்குள் மரிக்கொழுந்து கைநிறைய சிறிது  சிறிதாக வெட்டப்பட்ட கரும்புத் துண்டுகளை எடுத்து வந்து கொப்பித் தட்டுகளுக்கு அருகில் வைத்தார். பின்னோடு   வீட்டு  முதல் மருமகள் பார்வதி வாழைப்பழங்களை எடுத்து வந்து வைத்தாள்.

 

பின்னோடு இரண்டாம் மருமகள் கவிதா மாவிளக்கு மாவை வைத்தாள்.

 

“மாமா……”என்ற ஒருக்குரல் கேட்க அது தன் தங்கை மகள் மதி அழகி என்பதனை உணர்ந்து

 

“என்னம்மா மதி “என்று பதில் குரல் கொடுத்தார் மணிவண்ணன்.

 

“நீங்க மட்டும் தாம்பூலம் வெச்சா ஆச்சா?  பாஸ்கர் அத்தானும் காளிதாசன் அத்தானும் தாம்பூலம் வெச்சாத்தான் நாங்க எங்க கொப்பித்தட்ட எடுப்போம் “என்றாள்

 

பாஸ்கரன் அமைதியாக தன் சட்டையை துழாவ காளிதாசன்  “வாடி என் அத்த மவளே  அதுதான் நாட்டாரு கொடுத்துட்டாருள்ள அப்புறமென்ன கொசுரு கேக்குற “என்று கேட்டுக் கொண்டே அவளை நெருங்கி விட்டான்.

 

“அது மாமா கொடுத்தது, இது அத்தான்கொடுக்க வேண்டியது “அவன் அருகே வந்து விட்டதாலேயே லேசாக கன்னம் சிவந்தாள் மதி அழகி.

 

“அத்தான் கொடுக்க வேண்டியது இன்னொன்றும் இருக்கு வாங்கிக்கிறியா? “என்றான் அடங்கிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம். அவ்வளவு தான் முகம் கன்றிச் சிவந்து விட்டது. தலைகவிழ்த்து செங்கொழுந்தாய் நின்ற பெண்ணிற்கு துணைப்புரிந்தான் பாஸ்கரன்.

 

“இந்தாடா எதுக்கு சின்ன புள்ளைய போட்டு இந்த மெரட்டு மெரட்டுற பயந்து  நடுங்குது பாரு “என்று அதட்டியவன். இந்தா மதி இதவெச்சுக்க.

 

“என்று சில நூறு ரூபாய் தாளை அவள் கையில் தினித்தான்.

 

“ம்க்கும் …….பயந்து நடுங்குதா? இந்த புள்ளயா? அட அண்ணா  நீவேற ஊரையே தூக்கி சாப்பிட்டுட்டு ஏப்பம் விடுவா இவ, இவளப்போயி சின்ன புள்ளங்கிறியே? ”

 

“மெதுவா பேசுடா அப்பா பாக்குறார் ”

 

“ஏன் என் அத்தமகள நான் வம்பளக்கறேன் இதுல அவுரு யாரு ஊடால “தெனாவட்டாக கேள்வி கேட்டான்.

 

“அப்படியா இரு  அப்…….”அப்பா என்று கூப்பிட விரைந்த பாஸ்கரனின் வாய்பொத்தி அங்கிருந்து நகர்த்திச் சென்றான் காளிதாசன். போகிறபோக்கில் அவன் சார்பாக சில நூறுகளை மதிஅழகியின் கைகளில் அழுத்திவிட்டு நகர்ந்தான்.  அங்கு நடந்ததையெல்லாம் ஆவலாக பார்த்தாள் ரம்யா. அழகான ஒரு நாடகம் நடப்பது போல் தோன்றியது. எத்தனை இனிமை, உறவுகளுக்குள் இருக்கும் உரிமையும் அன்பும் அப்பப்பா…..அங்கே நடந்தது ஓரளவு அருகிலிருந்தோர் காதுகளை எட்டித்தான் இருக்கும். இருப்பினும் அதனை அதிகமாக யாரும் பொருட்படுத்தவில்லை இதுதான் இயற்கை என்பது போல, அவரவர் வேலையில் ஈடுப்பட்டனர். ஆனால் ரம்யாவால் தான் அது முடிய வில்லை.இந்த காட்சிளை கண்டு தானாக இதழ்களில்  வெட்கப்புன்னகை மலர்ந்தது. அவளது புன்னகையை கவனிக்க பாஸ்கரன் மறக்கவில்லை. பெண்களின் குழு மெல்ல வெளியேற ஆரம்பிக்க, மெதுவாக ரம்யாவின் அருகில் நகர்ந்தான். அவள்புறம்  ஒரு நூறு ரூபாய் தாளை நீட்ட கேள்வியாய்  அவனை ஏறிட்டாள்.

 

“கும்மி கொட்டும் பெண்களுக்கு கொடுப்பது வழக்கம், வாங்கிக்கொள் “.அவனது குரலில் ஒரு உரிமை இழையோடியது. சற்று  தயங்கியவள் பின் பெற்றுக் கொண்டாள்.அதனோடே ஒரு வித்தியாசமும் தோன்றியது. அவர்கள் உறவுகளுக்குள் பேசிக் கொள்ளும்  பேச்சுவழக்கு தமிழை அவளிடம் மட்டும்  பயன் படுத்த மறுக்கிறான். இது ஒரு விலகல் தானே.

 

 

ஆயிரம் தான் இருந்தாலும் நீ யாரோ என்பது போல் ஆகாதா? மனதில் எழுந்ததை அவனிடம் கேட்டு விட்டாள் ரம்யா.

 

“சார்    ஒரு நிமிடம் உங்கள் பேச்சு வழக்கு மிகவும் அழகாகவே இருக்கிறது.ஆனால் என்னிடம் மட்டும் ஏன் அப்படி பேச மாட்டேங்கரீங்க” அவளது கேள்வியில் ஏக்கம் இழையோடியது.

 

“பட்டணத்தில் வசிப்பவர்களுக்கு எங்கள் பேச்சு பட்டிக்காட்டான் பேசுவது போல்  தோன்றும் அது மட்டுமில்லாமல் சிலருக்கு புரிவதும் இல்லை அதனால்தான் “அவன் முடிக்கும் முன் மறுத்தாள்.

 

“இல்லை இல்லை சார் அந்தப் பேச்சில் ஒருமண் மனம்  அழகாய் உரிமையாய், இதமாய், அன்பாய்  இப்படி எல்லாம் இருக்கிறது,இதற்காகவே இங்கேயே தங்கிவிட என் மனம் துடிக்கிறது.அதற்கான வாய்ப்பு உண்டா? ” விழி விரிய ஆவலாக கேட்டவளை, விசித்திரமாய் பார்த்தான் பாஸ்கரன்.

 

‘இவள் என்ன அர்த்தத்துல இப்படி கேக்குறா? தெரிஞ்சுதான் கேக்குறாளா? இல்ல தெரியாம கேக்குறாளா? “அவனது பார்வை ரம்யாவிற்கு சிலவற்றை உணர்த்த உடனே சுதாரித்தவள்,

 

“அ…….அதாவது ……..இங்கேயே ஏதேனும்  வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும்னு யோசித்தேன், அவ்வளவுதான் “என்று உளரிகொட்டி  கிளரி மூடினாள்.அத்தோடு தப்பித்தோம் பிழைத்தோம் என்று அந்த இடத்திலிருந்தே ஓடி மறைந்தாள்.

***************

சுகுணாவின் வற்புறுத்தலின் பெயரில் குளத்தங்கரைக்கு அவளுடன் சென்றிருந்த ரம்யா வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டாள்

கிராமத்து பெண்கள் வெகுளி வெகுளி என்று நினைத்ததவள் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டாள். இவர்கள் எல்லாம் தெரிந்தும் அமைதியாக இருக்கிறார்கள் அவ்வளதான்.அங்கே பெண்களுக்கான படித்துறையில் அமர்ந்த பெண்கள் கூட்டம்  நாட்டாமை, கணக்கு பிள்ளை, மணியக்காரர், வீடுகளில் கிடைத்த கரும்பு, தேங்காய், பழம், திண்ப்பண்டங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து உண்டனர். பின் மெதுவாக பணத்தை  பங்கிட்டு கொண்டனர். பின் ஊர் கதை அளந்தனர். எதிர் வீட்டு மாடு கண்ணு போட்டதுல தொடங்கி, மாலா அக்கா கருவுற்றது வரை எல்லாம் பேசப்பட்டது.பின் சிறு சிறு விளையாட்டு, பின்  கொப்பிகளை தண்ணீரில் கரைப்பது. அதற்கு ஒருப்பாட்டு  அடடா அருமை, நாள் முழுக்க பார்த்து கொண்டே இருக்கலாம் போல் தோன்றியது ரம்யாவிற்கு. ஆனால் அதற்குள் கோவில் ஒலிபெருக்கியில் போட்டிகள் நடப்பதற்கான அறிவிப்பு ஒலிக்கப்பட்டது.பெண்கள் கூட்டம் கலைந்தது.

 

பின் கோவில் மைதானத்தில் பலப் போட்டிகள் நடத்தப்பட்டன.பெண்களுக்கு நொண்டி, கோலாட்டம், பாட்டு, பாட்டிலில் தண்ணீர்  நிறைப்பது, கூடை பந்து.இப்படி நடத்தப்பட்டது.ஆண்களுக்கு சைக்கிள் ரேஸ், கோணி ஓட்டம், உறி அடிப்பது, மஞ்சகுதிரை தாண்டுவது.இப்படி நடத்தப்பட்டன.சிறுவர்களுக்கு ஓட்டப்பந்தயம், தவளை ஓட்டம், ஆட்டம், பாட்டம், நாடகம் என்று நடத்தப்பட்டது.

 

எல்லாம் முடிவதற்கு இரவாகிவிட்டது.எல்லா மக்களும் அந்த மைதானத்தில் ஒன்று கூடி அமர்ந்தனர். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் மூன்று பரிசுகள் அறிவிக்கப்பட்டன.சிலப் பரிசுகள் ரம்யாவிற்கும் சுகுணாவிற்கும் கிடைத்தது அடுத்து ஒலிபெருக்கியில்.

 

“அடுத்ததாக கோலப் போட்டி, பொங்கல் அன்னிக்கு நம்ம ஊர் பொண்ணுக போட்ட கோலத்திற்கு பரிசுகள் வழங்கப்படும்.

 

மூன்றாம் பரிசு………..தெக்கி தெரு வாணி

 

இரண்டாம் பரிசு……..பம்பு செட்டு வீடு கண்ணாத்தா

 

முதல்      பரிசு …………..பட்டனத்து பொண்ணு ரம்யா

 

அவளது பெயரை கேட்ட ரம்யாவிற்கு தலைகால் புரிய வில்லை தன் அலங்கோலத்திற்கு பரிசா? அடடா…….என்ன ஆச்சர்யம்? கைகள் சில்லிட்டது, தெரியாத ஒன்றை பயின்று அதில் பரிசு வேறா,

 

அவளது தயக்கத்தை  உணர்ந்த நாட்டாமை மைக்கைப்பற்றி  “வாம்மா ரம்யா ? இந்த பரிசு உனக்குத்தான் .சிலருக்கு அதிக குழப்பம் இருக்கும் இந்த பொண்ணு அப்படி என்னத்தை  போட்டுச்சுன்னு? நீங்க எல்லாம் வருசா வருசம் கோலம்  போடுறவங்க ஆனா அந்த புள்ள கத்துகுட்டி, மாவு புடிச்சி கோலம் வரைய கூட தெரியல., இருந்தாலும் முயற்சி செஞ்சிருக்கா!  அதே நேரம் நீங்கள்ளாம், மயில், அண்ணம், ரோஜா, தாமரை, வாத்துன்னு கோலம் போட்டீங்க, ரம்யா மட்டும் தான் ஒரு முழுபொங்கல் காட்சியை கோலமா வரஞ்சிருந்தா. சூரியனில் தொடங்கி தாம்பூலத்தட்டு வரை எல்லாமே அழகு. அதனால் இந்த பரிசு ரம்யாவுக்குத்தான்.” என்று முடித்தவர் ஜிகினாத்தாள் சுற்றிய பரிசை ரம்யாவிடம் கொடுத்தார். கைத்தட்டல்கள் அமர்களப்பட்டது. கண்கள் தாமாக பாஸ்கரனிடம் சென்றன. அவன் புன்சிரிப்புடன் கைகளை தட்டிக்கொண்டிருந்தான். மனம் நிறைந்துவிட்டது ரம்யாவிற்கு. இந்த நிறைவு இத்தனை நாள் எங்கே சென்றது. மனம் மறுபடியும் பழையதில் சிக்கித்தவித்தது. இதயத்தில் நெரிஞ்சிமுள் ஆழமாக அழுத்தியது.




2 Comments

You cannot copy content of this page