Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


Readers Comments

Recent Updates

முட்டக்கண்ணி முழியழகி-8

முட்டக்கண்ணி – 8

 

மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில்:

 

    வருசநாடு, கடமலை, மயிலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியின் காவல்தெய்வமாக இருப்பது மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில். ‘தன் எல்லையில் எந்த தவறு, யார் செய்தாலும் அதற்கான தண்டனைகளை கொடுத்து விடுவார்’  என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு இங்குள்ளவர்களிடம்.

 

இங்குள்ள மக்கள் காவல்துறையையோ, காவலர்களையோ நம்புவதை விட, காவல் தெய்வமான கருப்பசாமியைத் தான், தங்கள் குலத்தைக் காப்பவராக நம்புகிறார்கள்.

 

தெய்வசக்தி நிறைந்த கருப்பனின் முன்னால் நின்றிருந்தனர், அன்றுக் காலையில் தங்கள் குலதெய்வமான பேச்சியம்மனின் முன் திருமணம் நடந்த நிலவனும் கனலியும்.

 

கோவிலின் உள்ளே பூசாரி சாமியாடி, ஒவ்வொருவராக அனைவருக்கும் விபூதி வைத்துக் கொண்டிருந்தார். நிலவனிடம் வந்தவர், அவனை பார்த்து ஏதேதோ வாய்க்குள்ளே சொல்லிவிட்டு விபூதி வைத்தார்,

 

பின் கனலியிடம் திரும்பி “இவந்தான் உனக்கு எல்லாம், உன் வாழ்க்கை இனி இவன் கூடதான். கருப்பன் துணை உனக்கு எப்பவும் இருக்கு… கவலைப்படாம போய் பொழப்ப பாரு, உண்மைக்கும் நேர்மைக்கும் கருப்பன் காவலா நிப்பான்..” என்றவர், ஒரு கை நிறைய விபூதியை எடுத்து அவள் தலையில் கொட்ட, அமைதியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் சட்டென்று மாறி, தன் குறும்புத்தனம் மேலெழும்ப, சாமியாடியைப் பார்த்து கண்ணடித்தவள், நிலவனின் இடுப்பில் தட்டிவிட, அடுத்த நொடி அவனும் துள்ளிக் குதிக்க, மற்றவர்கள் என்ன என்று பார்ப்பதற்குள் இரண்டு பேரின் தலையையும் பிடித்துக் கொண்டு இவள் சாமியாடிக் கொண்டிருந்தாள்.

 

நிலவனோ அதிர்வில் இருந்து மீளாமல் அவள் குதிப்பதற்கு ஏதுவாக அவனும் அங்குமிங்கும் இழுபட,  பூசாரியின் நிலையோ இன்னும் பரிதாபம், அவள் இழுத்த இழுப்பில், கட்டியிருந்த காவி வேஷ்டியும் கழண்டு விழுந்தது கூடத் தெரியாமல், தலையைப் பிடித்து இழுத்ததில் வலித்ததை மறைக்க வேறுவழியின்றி அவரும் நாக்கைத் துருத்தி அவளோடு குதித்துக் கொண்டிருந்தார்.

 

எல்லோரும் “அய்யோ என்ன குத்தம் நடந்துசோ தெரியலயே, கருப்பன் பொட்டப்புள்ள மேல வந்துட்டானே, கருப்பா நாங்க என்னத் தப்பு செஞ்சாலும் மன்னிச்சுடு, ஊருல மழைத் தண்ணி இல்ல, வெள்ளாம குறைஞ்சு போயிடுச்சு, அப்படியிருந்தும் உனக்கு செய்ய வேண்டிய பூஜையெல்லாம் சரியாத்தான செய்றோம். இன்னும் ஏன் இப்படி உக்கிரமா இருக்க..” என அழாக்குறையாக புலம்ப,

 

கனலியின் ஆட்டத்தில் சிறிது நேரம் அவள் இழுப்புக்கு போனவன், பின் அவள் வேண்டுமென்றே தான் ஆடுகிறாள் என்பது புரிய, கனலியிம் புடவை அவிழ்ந்து விடாமல் பிடிப்பதாக பேர் பண்ணி, அவளை மொத்தமாக பின்னிருந்து அணைத்தான்.

 

அவன் அப்படி அணைப்பான் என்று அறியாதவள், அவன் முடியைப் பிடித்திருந்தக் கையை விட்டுவிட, “முட்டக்கண்ணி கொஞ்சம் அசந்த நேரத்துல என்ன ஆட்டம் போடுற, இப்போ நீ ஆட்டத்த நிறுத்தின, எல்லாரையும் ஏமாத்திட்ட, சாமிகுத்தம் ஆயிடுச்சு சொல்லி வச்சிடுவேன், ஒழுங்கா ஆடு..” என அவள் காதோரம் கிசுகிசுக்க,

 

“அதெல்லாம் முடியாது , இப்ப விடப்போறியா இல்லையா..” என இவளும் கடுகடுக்க,

 

“அதை என் முடியைப் பிடிச்சு ஆடுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கனும்டி குட்டிப்பிசாசு..” எனவும்,

 

அவள் “விடுடா நெடுமாறா..” என இருவரும் மாறி மாறி வம்பளக்க, இது தெரியாமல், பேச்சியோ “கண்ணா புள்ளைய கெட்டியா பிடிச்சுக்கோ ராசா… ரொம்பத் துடியா இறங்கிட்டான் கருப்பன்..” என கன்னத்தில் போட்டுக்கொள்ள,

 

நிலவனோ ‘இப்போ என்ன செய்வ..’ என்பது போல் பார்த்து அவளை மேலும் இறுக்கினாலும், கண்களில் சிரிப்புத் தாண்டவமாடியது.

 

“ஏய் கிழவி உன்னை இரு..” என்று சத்தமாக சொல்ல முடியாமல் பல்லைக் கடித்தவள், நிலவனின் கால் மேலேறி குதிப்பது போல் மிதிக்க,அப்போதும் அவன் பிடியை விடாமல் இறுக்கிப் பிடிக்க, பேலன்ஸ் இல்லாமல் இருவரும் கீழே விழுந்தனர்.

 

பின்னிருந்து நிலவன் பிடித்திருந்ததால், அவன் விழுந்து அவனுக்கு மேலேக் கனலி விழுந்திருந்தாள். இதுக்குமேல் ஆகாது என்பது போல் மயக்கம் வந்தது போல் கண்ணை மூடிவிட, அவளை அசைத்து பார்த்தவன், அசையவில்லை எனவும் திரும்பி பார்க்க, அதற்குள் அவர்களைச் சுற்றிக் கூட்டம் வந்துவிட, இனி சீண்ட வேண்டாம் என்று நினைத்தவன் அவளை அப்படியே மடியில் கிடத்திக் கொள்ள, விபூதி அடித்தும், நீரைத் தெளித்தும் அவளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.

 

ஆனால் என்ன நடந்தது என்று அறியுமுன்னே அனைத்தும் முடிந்திருக்க, மனைவியின் இந்த செயலில் நிலவனின் முகம் நிரந்தரப் புன்னகையை பூசிக்கொண்டது.

 

கல்யாண கலாட்டக்கள் எல்லாம் முடிந்து ஒரு வழியாக வீடு வர மதியமாகியிருந்தது. இனி மாலை வரவேற்பு வேறு, ‘அய்யோடா என்றிருந்தது கனலிக்கு’. பூசாரியை வம்பிழுப்பதாக நினைத்து, தேவையில்லாமல் உடல்வலியை இழுத்துகொண்டது தான் மிச்சம்.

 

மாலையில் நடக்கும் வரவேற்பில் இருந்து எப்படி தப்பிப்பது’ என்று யோசிக்க ஆரம்பித்திருந்தாள். அதே அறையில் தான் ஷாலினியும் இருந்தாள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக மிகவும் அமைதியாக, அப்போதுதான் கனலியும் கவனித்தாள்.

 

நேற்றிலிருந்து அவள் சரியாக பேசவே இல்லையே என்று. ‘புள்ளய ரொம்பத் திட்டிட்டோம் போல.. அதான் கோவமா இருக்கா… கோவமா இருந்தாலும், கல்யாணம் முடியுறவரைக்கும் இருக்கனுமேன்னு நினைச்சு இருக்காளே..’ என எண்ணியவாறே பார்வையை அவள்மேல் ஓட்ட, துணிகளை எடுத்து அடுக்க ஆரம்பித்தவள், என்ன நினைத்தாலோ,  அந்த துணி பேகை கொண்டு வந்து அப்படியேக் கனலியின் மேல் போட்டாள்.

 

“ஏய் எருமை..” என்றுக் கத்த ஆரம்பிக்கும் போதே, “ஏதாவது பேசுன,எங்கண்ணன் விடோவா ஆனாலும் பரவாயில்லைன்னு உன்னை போட்டுத் தள்ளிடுவேன், என்ன உனக்குத்தான் பேசத் தெரியுமா..? எனக்குத் தெரியாதா..? மறக்க மாட்டேன், எல்லாம் மைண்ட்ல செட் பண்ணிருக்கேன், எனக்கும் ஒரு காலம் வரும். அப்போ உன்னை வச்சுக்குறேன்டி.. ரிசப்ஷன் முடிஞ்சதும் கிளம்பிடுவேன், இனி உன் முகத்துல கூட முழிக்க மாட்டேன்..” என முடிப்பதற்குள் கண்கள் தாரை தாரையாக நீரை ஊற்றியது.

 

“ஹேய்… என்ன மச்சி, நான் ஏதோ கோபத்துல, அதுக்குப் போய் நீ எதுக்கு எமோஷன் ஆகுற, உனக்குத் தெரியாதா..? இந்த மேரேஜ் பெரியவங்களுக்கு எவ்வளவு நிம்மதியைக் கொடுக்கும்னு, அவங்க நிம்மதி தானே என்னோட சந்தோசம், அதைப் போய் நீ இப்படி பண்ணிட்டன்னு தான்.. சாரி உன்ன தெரிஞ்சும் அப்படி பேசியிருக்கக் கூடாது  தான் சாரிடா… ரியல்லி வெரி சாரி..” என ஷாலினியின் கண்ணீரைத் துடைக்க வந்தாலும் விடவில்லை அவள்.

 

கனலியின் கையைத் தட்டிவிட்டவள், அழுந்த முகத்தைத் துடைத்துவிட்டு, “எனக்குத் தெரியும் நீ மூடிட்டு கிளம்பு..” என்று எரிந்து விழுந்தவள் அறையைவிட்டு வெளியேற, “ஏய் என்ன..? என்னைக் கிளம்ப சொல்லிட்டு நீ போற..” என்ற கனலியின் நக்கல் காற்றோடு தான் போனது.

 

அன்றைய விழாவில் மனைவியை அதிகம் சீண்டவில்லை நிலவன். மாறாக ஷாலினியோடு அதிகம் பேசிக்கொண்டிருந்தான். ஏதெற்கெடுத்தாலும் ஷாலு, ஷாலுதான்.. இதெல்லாம் பார்த்துக் கனலிக்கு காதில் புகை வராத குறை.

 

செந்திலும், தமிழும் வந்து சென்றதும் கணவனின் காதில் ‘எனக்கு கால் வலிக்குது’ என்றாள் அறிவிப்பாய். அவன் காதில் வாங்காதது போல் ஷாலினியிடம் பேச, “மாமா எனக்கு கால் வலிக்குது, நான் உட்காரப் போறேன்..” எனப் பல்லைக் கடித்து வார்த்தைகளைத் துப்ப,

 

அவள் தோளில் கையைப் போட்டவன், அணைத்தவாறே அங்கிருந்த சோஃபாவில் உட்கார, அதில் நெளிந்தவள் “யோவ், கையை எடு… எல்லாரும் நம்மளயே பார்க்கிறாங்க..” என,

 

“பார்த்தா பார்க்கட்டுமே எனக்கு என்ன… என் போண்டா டீ மேலதான கைப் போட்டேன்.. என்னமோ ஊரான் பொண்டாட்டி மேல கைப்போட்ட  மாதிரி குதிக்குற,” எனவும்,

 

“சத்தியமா முடியல, நீ இம்புட்டு பேசுவியா.. இந்த கிழவிங்களும், உன் அம்மாவும், உன்னை ஒரு வாயில்லா பூச்சி ரேஞ்சுக்கு எங்கிட்ட பில்டப் கொடுத்துச்சுங்க, இப்ப பாரு நீ எவ்ளோ பேசுற..” நிஜாமவே அவள் அழுவது போலத்தான் பேசினாள்.

 

“அட என்ன நீ பேசுறதுக்கு எல்லாமா அழுவாங்க.. சின்னப்புள்ளத்தனமா.. என் கூட யாருமே இல்லையா.. எப்பவும் தனியாவே இருப்பேன். ப்ரண்ட்ஸும் எனக்கு செட் ஆகல, ஆபிஸ்ல இருந்தாலும் ஹையர் பொசிஷன்ல இருக்கிறதால யாரும் க்ளோஸ் கிடையாது. யு.எஸ் ல யும் அப்படித்தான்.”

 

நான், நீ வளர்ந்த மாதிரி ஒரு சூழல்ல வளரல இல்லையா.. அதான் அதிகம் யாரு கூடவும் பேசவும் விரும்புறது இல்ல… ஒருவேளை நானும் உன்னைமாதிரி இங்கேயே இருந்திருந்தா, இதெல்லாம் ஈசியா பழகியிருப்பேனோ என்னவோ ..?” என்றவன், அவள் தன்னையேப் பார்ப்பதை உணர்ந்து ‘என்ன’ என பார்வையால் வினவ, “தமிழண்ணி சொன்ன மாதிரி நீ ஹேன்ட்சம் தான், கொஞ்சம் பார்க்கிற மாதிரி தான் இருக்க..” என்றாள் விரிந்த புன்னகையோடு.

 

வரவேற்பில் இருவருக்கும் நீல வண்ணம் தான். அவளுக்குப் பச்சைதான் பிடிக்கும், அதனால்தான் நிச்சயப்பட்டு பச்சையில் எடுத்தார் நாயகி. நீலம் நிலவனுக்குப் பிடித்தது. நீலத்தில் வெள்ளிச்சரிகையிட்ட பட்டு, வைட் ஆன்டிக் நகைகளில் பெரிதான எந்த அலங்காரமும் இல்லாமல் வான் தேவதையாய் ஜொளித்தாள் கனலி.

 

அது கூட அவளுக்குத் தெரிந்ததா என்று தெரியவில்லை. தன்னை அழகு என்கிறாளே என்றிருந்தது அவனுக்கு. கொஞ்சமும் ஆர்ப்பாட்டமில்லாத அழகில் அவன் தொலைந்து கொண்டேயிருந்தான். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்க, மண்டபம் வாயிலில் சிறு சலசலப்பு, பார்வையை அங்கே ஓட்ட, அந்தப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களும், நரிக்குறவர்களும் என வாசலில் நின்றிருந்தனர்.

 

அவர்களைப் பார்த்ததும் மனைவியின் கண்களில் தெரிந்த ஒளியை உள்வாங்கியவன், கதிரவனையும், சாரதியையும் அழைத்து எதுவோக கூற, அவர்களும் சரியென்று கிளம்பிவிட்டனர்.

 

சில நிமிடங்களில் அவர்கள் அனைவரும் வரிசையாய் மேடையேற, கனலியின் கண்ணில் நீர் சரம், “ராணிம்மா உங்களை இப்படி பார்க்க, எங்களுக்கெல்லாம் எம்புட்டு சந்தோசமா இருக்கு, நீங்க புள்ளக்குட்டியோட நூறு வருசம் நிம்மதியா, மனமகிழ்ச்சியா வாழனும்..” என பழங்குடி மக்களில் தலைவர் போல் இருந்தவர் கூற, அவர் காலில் கனலி விழ,  சற்றும் யோசிக்காமல் நிலவனும் விழுந்து வணங்கினான்.

 

“நீங்க தாலிக்கட்டுக்கே வருவீங்கன்னு நினைச்சேன், இப்போதான் எனக்கு முழு சந்தோசம். கண்டிப்பா எல்லாரும் சாப்பிட்டுத்தான் போகனும்..” என்றவளை வாஞ்சையாய் பார்த்தவர், நிலவனின் கையைப் பிடித்து, “சாமிய்யா எங்கள காக்க வந்த சாமிய்யா இவங்க, நல்லா பார்த்துக்கோங்க..” என்று விட்டு, கனலியின் தலையைத் தடவிவிட்டு மேடையை விட்டிறங்கினார்.

 

அடுத்து நரிக்குறவர்கள், “ராசா மாதிரி மாப்பிள்ள சாமி, இவுகளப் போய் வேணாம்னுட்டிகளே, நல்ல புள்ள சாமி நீங்க..” என்று கனலியிடம் குறைபட்டவர்,

 

நிலவனிடம் திரும்பி, “ராசா சாமி, எங்க சனத்தையும் மனுசனா மதிச்சு, நல்லது கெட்டது சொல்லிக் கொடுத்து, எங்கப் புள்ளைங்க பள்ளிக்கூடத்துக்குப் போறதுக்கு முழுக்காரணமும் இவுகதான் சாமி. நல்லா பார்த்துக்கோங்க… எல்லா பிரச்சினையும் தீர்ந்து நீங்க நல்லா வாழுவீக சாமி..” என்றவர் இருவரையும் உச்சி முகர, பெற்றோர்களுக்கும், பெரியவர்களுக்கும் வேற என்ன வேண்டும்.

 

வலியவர்களும், எளியவர்களும் நன்றாக இருப்பீர்கள் என்று சொன்னாலே போதுமே… இதை விட பெரும் வரம் வேரொன்றுமில்லையே… இவ்வரங்களை பெற, அவள் எத்தனை நல்லது செய்திருப்பாள் என்று அங்கு வந்த அனைவருக்கும் புரிகிறது.

 

அதுவரை அவளை விளையாட்டுப்பிள்ளை, வெட்டி வேலை பார்க்கிறாள் என்றுப் பேசியவர்கள் கூட, இன்று கனலியைப் பெருமையாய் தான் பார்த்தனர்.

 

ஒருவாராக அனைத்தும் முடிந்து, மண்டபத்தை விட்டு, நிலவனின் வீட்டிற்கு வந்திறங்கினர் அனைவரும். ஆலம் சுற்றியதும் உள்ளே வந்தவள், அத்தையிடம் “எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு அத்த, என்னை விடச்சொல்லு தூங்கனும்..” என்றதும், நாயகி திருதிருவென விழிக்க, சந்திரா மகளிடம் சாமியாட, புத்திமதி என்ற பெயரில் கிழவிகள் இரண்டும், இவளின் இருபக்கமும் அமர்ந்து காதை பஞ்சராக்க,

 

‘ஏன்டா இதுங்ககிட்ட சொன்னோம், பேசாம நெடுமாறன் கால்லயே விழுந்து, குப்புற அடிச்சு படுத்துருக்கலாம்.’ என்று நொந்து போனவள், அந்த வீட்டைச்சுற்றி பார்வையை ஓட்ட, வேறொரு இடத்தில் ஆண்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, நிலவனும் அங்குதானிருந்தான்.

 

பேச்சு அங்குதனிருந்தாலும், பார்வை இவர்களிடம் தான். இவளின் நொந்து போன முகத்தைப் பார்த்து சிரிப்பு வந்தாலும், வெளிக்காட்டாமல் எழுந்து வந்தவன், “பொம்மி எனக்கு ஒரு ஹெல்ப் செய்யேன்.. மேல என்னோட மொபைல் வச்சுட்டேன், எடுத்துட்டு வாயேன்..” என்றதும்,

 

“டேய்… நீ தெய்வம்தாண்டா மாமா..” என மனதுக்குள் கவுன்டர் கொடுத்தவள், அவர்கள் மறுக்கும் முன் எழுந்து ஓடியே விட்டாள். அவள் செல்லவும், மற்றவர்களின் பார்வை இவன் மேல் திரும்புவதற்குள், இவனும் மாடியை நோக்கி ஓடியிருந்தான்.

 

இவர்களின் செயல்களைப் பார்த்து, “இதுங்களா கல்யாணமே வேண்டாம்னு ஒத்தக்கால்ல நின்னுச்சிங்க..” என புலம்பிக் கொண்டனர். இனி அடிக்கடி இப்படி புலம்பப் போவதை அறியாமல்..

 

முட்டகண்ணி முழியழகி – 7
முட்டக்கண்ணி முழியழகி-9
Leave a Reply

avatar
  Subscribe  
Notify of
Don`t copy text!