Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Share Us On


Readers Comments

Recent Updates

நிழல்நிலவு – 31

அத்தியாயம் – 31

வீசியெறியாத குறையாக டேவிட்டிடம் அலைபேசியை கொடுத்துவிட்டு அறைக்கு வந்த மிருதுளாவிற்கு ஆற முடியவில்லை. கிணற்றில் போட்ட கல் போல் மூன்று நாள் எந்த தகவலும் இல்லாமல் கம்மென்று இருந்துவிட்டு இன்று அழைப்பவன் ஒரு சம்பிரதாயத்துக்கு கூட அவளிடம் நலன் விசாரிக்கவில்லை. ஏதோ தில்லுமுல்லுகாரியிடம் பேசுவது போல் கொடுகொடுவென்று கொட்டுகிறான். கொலைகாரன்… கொடுமைக்காரன்… இவனிடம் இந்த கொடுகொடுப்பை தவிர வேறு என்ன இருக்கும்? – கோபம் பொங்கியது.

 

அத்தனை கோபத்திலும் அவன் என்ன சொன்னானோ அதைத்தான் அப்படியே செய்தாலே தவிர, ‘நீ என்ன சொல்வது… நான் என்ன கேட்பது’ என்கிற ரீதியில் எதிர்மறையாக நடக்க வேண்டும் என்கிற யோசனை கூட வரவில்லை அவளுக்கு. எத்தனை தொலைவில் இருந்தாலும் அந்த அளவுக்கு அவனுடைய ஆதிக்கம் அவளிடம் செல்லுபடியானது. அதைக் கூட உணராமல், அவன் ஏன் அப்படி கோபப்பட்டான் என்பதையே யோசித்து கொண்டிருந்தாள். என்னதான் மூளையை கசக்கிப் பிழிந்தாலும் தன்னிடம் எந்த தவறும் இருப்பதாக அவளுக்குத் தோன்றவில்லை. ‘அப்படியென்றால் அவன் ஏதாவது டென்ஷனில் இருந்திருப்பானோ! என்னவாக இருக்கும்?’ – சிந்தனை திசைதிரும்பியதும் கோபம் கவலையாக மாறியது.

 

‘அவன்தான் நம்மகிட்ட நல்லா இருக்கியான்னு ஒருவார்த்தை கேட்கல… நாமளாவது என்ன ஏதுன்னு விசாரிச்சிருக்கலாம்… என்ன மாதிரியான அழுத்தத்துல இருக்கானோ தெரியலையே!’ – வெகுவாய் கவலைப்பட்டாள். அவனுடைய நலனை விசாரிக்க தவறியதற்கு வருந்தினாள். ஆனால் தவறிய தருணம் தவறியதுதானே… அதை மீட்டெடுக்க முடியாதல்லவா…

 

******************

 

என்னதான் உறுதியாக முடிவெடுத்தாலும் ஓரிரண்டு நாட்களுக்கு மேல் அவனால் தன்னை பிரிந்திருக்க முடியாது என்கிற நம்பிக்கையில்தான் அன்று அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேறினாள் சுமன். ஆனால் ஒருவாரம் கழிந்தும் கூட அவனிடமிருந்து எந்த அழைப்பும் இல்லை. இவளாக தொடர்புகொள்ள முயன்றாலும் அழைப்பை ஏற்பதில்லை. இருபத்திநான்கு மணிநேரமும் அவனைப்பற்றியே நினைத்துநினைத்து நொந்து போனவள் அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல், நேரில் சென்று பார்க்கலாம் என்று எண்ணி புறப்பட்டாள். எப்படி இருந்தாலும் அவள் முகத்தை பார்த்துவிட்டால் நிச்சயம் அவனுடைய இந்த முரட்டு பிடிவாதம் நொறுங்கிவிடும் – நம்பிக்கையுடன் மருத்துவமனைக்குள் நுழைந்தவள் ரிஸப்ஷனிஸ்ட் சொன்ன செய்தியை கேட்டு திகைத்தாள்.

 

இரண்டு நாட்களுக்கு முன்பே சுஜித் மருத்துவமனையிலிருந்து வலுக்கட்டாயமாக டிஸ்சார்ஜ் செய்துகொண்டு சென்றுவிட்டான். அவனை கவனித்துக்கொள்வதற்கு கோர்த்தா, மூன்று பேர் அடங்கிய மருத்துவ குழு ஒன்றை அவனுடைய வீட்டிற்கே அனுப்பியுள்ளது.

 

அவளிடம் ஒருவார்த்தைக் கூட சொல்லவில்லையே! ஏன் இப்படி அவளை ஒதுக்குகிறான்? அவள் இல்லாமல் இருந்துவிடுவானா என்ன? – கத்தி அழ வேண்டும் போலிருந்தது. சமாளித்துக் கொண்டு வெளியே வந்தவள், சுஜித்தின் வீட்டிற்கு வண்டியை விடுமாறு டிரைவரிடம் கூறினாள்.

 

வீட்டுப்பக்கமே வரமாட்டான்… அவனுடைய தந்தைக்கு அது பெரும் குறை… இப்போது நிம்மதியாக இருப்பார். சம்மந்தம் இல்லாமல் அவர் மீதும் கோபம் வந்தது அவளுக்கு.

 

ஆவேசமாக அழைப்பு மணியை விடாமல் அழுத்திக் கொண்டிருந்தாள். எரிச்சலுடன் கதவைத் திறந்தார் சுஜித்தின் தந்தை… வாட்டசாட்டமான மனிதர். கண்களில் கோபம் தெரிந்தது… சந்தேகமே இல்லை.. இந்த மனிதரின் குணம்தான் அப்படியே அவனுக்கும் கடத்தப்பட்டிருக்கிறது.

 

“என்ன விஷயம்?” – கடுப்புடன் கேட்டார். சுமனுக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம். அவன் செய்யும் தவறுகளுக்கெல்லாம் இவளை பொறுப்பாளியாக்குவதே அவருக்கு வேலை. இப்போதுகூட இவன் இப்படி அடிபட்டுக் கிடப்பதற்கு அவள்தான் கரணம் என்று கருதினார். பேஸ்மென்ட்டில் நடந்த கொலை… சர்வைவல் கேமிரா தில்லுமுல்லு… அதில் சுமன் செய்த குழப்பம் அனைத்தையும் அறிந்தே வைத்திருந்தார். எனவே அவளிடம் வெறுப்பை வெளிப்படையாகக் காட்ட அவர் தயங்கவில்லை.

 

அவருடைய கோபத்திற்கெல்லாம் அசைந்து கொடுக்கும் ஆள் அவள் அல்ல…

 

“நா சுஜித்தை பார்க்க வந்தேன். எங்க அவன்?” – அதட்டலாகவே கேட்டாள்.

 

முறைத்து கொண்டே அவளுக்கு வழிவிட்டு உள்ளே நகர்ந்தார். அவர்களுக்குள் சில நாட்களுக்கு முன்பு நடந்த வாக்குவாதம் அவருக்கு தெரியாது. தெரிந்திருந்தால் அவளை வாசலோடு திருப்பி அனுப்ப சற்றும் தயங்கியிருக்க மாட்டார்.

 

வீட்டுக்குள் நுழைந்ததும் விறுவிறுவென்று அவனுடைய அறைக்கு விரைந்தாள். சுஜித் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

 

“இப்போதான் தூக்கினாங்க மேடம்… ஸ்லீப்பிங் பில் போட்டிருக்காங்க…” – உடன் இருந்த நர்ஸ் கூறினாள்.

 

அவளிடம் அவனுடைய உடல்நிலை மனநிலையைப் பற்றியெல்லாம் விசாரித்தாள். அவனுடைய போனை எடுத்து தான் அனுப்பிய குறுஞ்செய்தியையெல்லாம் வாசித்துவிட்டானா என்று சோதித்து, வாசித்துவிட்டுதான் அழுத்தமாக இருக்கிறான் என்பதையும் தெரிந்துக் கொண்டாள்.

 

அதன்பிறகு அவன் விழிக்கும்வரை அவன் முகத்தை பார்த்தபடியே அருகில் அமர்ந்திருந்தாள். நர்ஸ் சொன்னபடி இரண்டு மணிநேரமெல்லாம் அவன் உறங்கவில்லை… அரைமணி நேரத்திலேயே புரண்டு படுத்தவன், சட்டென்று விழித்துவிட்டான். மாத்திரை கூட அவனுக்கு முழுமையாக உதவவில்லை என்று அவளுக்கு புரிந்தது.

 

அவளை பார்த்ததும் அவன் புருவம் சுருங்கியது… நிஜமா கனவா என்று தடுமாறுவது போல் தோன்றியது. அப்படியென்றால் அவன் கனவில் அவள் வருகிறாளா! வராமல் என்ன… நிச்சயம் வந்திருப்பாள்… – பெருமையுடன் புன்னகை பூத்தாள். அவன் முகம் கடுத்தது. எதுவுமே சொல்லாமல், அவளுக்கு முதுகுகாட்டி புரண்டு படுத்து கண்களை மூடிக் கொண்டான்.

 

“சுஜித்… உன்ன பார்க்கத்தானே வந்திருக்கேன். எதுக்கு இப்படி மூஞ்சியை திருப்பிக்கிற? நா என்னடா பண்ணினேன்?” – பாவமாகக் கேட்டாள்.

 

அவனுக்கு பாவம் வரவில்லை… கோபம் தான் வந்தது… பற்களை நறநறத்தபடி அசையாமல் படுத்திருந்தான்.

 

“எத்தனை மெசேஜ் பண்ணினேன்… எல்லாத்தையும் படிச்சுட்டு ஒண்ணுக்கு கூட ரிப்லை பண்ணலடா நீ. ஒருவாட்டி கூட கால் அட்டெண்ட் பண்ணல… லூசு மாதிரி மூணு நாளா உன்னையே நெனச்சுக்கிட்டு இருந்தேன் தெரியுமா?”

 

“திரும்பு சுஜித்… சொல்றேல்ல… ஒரே ஒரு தரம் திரும்பேன்…” – அவனை பிடுத்து உலுக்கினாள். சுஜித் எழுந்து அமர்ந்தான்.

 

“இப்போதான் எல்லாத்தையும் மறந்து கொஞ்சம் நார்மல் ஆயிட்டு வர்றேன்… ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கிற? ஏன் எனக்கான ஸ்பேஸை கொடுக்க மாட்டேங்கிற? காண்ட் யு ஜஸ்ட் லீவ் மீ அலோன்?” – அவனுடைய வார்த்தைகளும் முகபாவமும் அவளை வெகுதூரம் தள்ளி நிறுத்தியது. அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பரிதவித்தாள் சுமன்.

 

“ப்ளீஸ்டா… என்கிட்ட இப்படி யாரோ மாதிரி பேசாத… நாம வேற எதை பத்தியும் நினைக்க வேண்டாம்.. உன்னையும் என்னையும் பத்தி மட்டும் நினைப்போம். நா இங்கேயே உன்கூடவே வேணுன்னாலும் இருந்துடறேன். நாம அங்க மகல்பாட்னாவுக்கு போகவே வேண்டாம். ப்ளீஸ்டா சுஜித்…” – கெஞ்சினாள்.

 

மகல்பாட்னா என்கிற பெயரை கேட்டதுமே சுஜித்திடம் நிறைய மாற்றம் தெரிந்தது. நரம்புகள் புடைக்க இறுகி போனான். வியர்வை துளிர்த்தது…

 

“நீ கிளம்பு… திரும்ப வராத…” – உறுதியாக கூறினான். சுமன் வெடித்து அழுதாள். அவனுடைய இந்த புது பரிமாணத்தை அவளால் நம்பவே முடியவில்லை.

 

“ஷட்-அப்… ஜஸ்ட் ஷட்-அப்… ஓகே? என் கண்ணு முன்னாடி உட்கார்ந்துகிட்டு இப்படி அழுதுகிட்டு இருக்காத… கிளம்புன்னா கிளம்பு… காதுல விழல?” – சீற்றத்துடன் சத்தம் போட்டான். மூச்சின் சமநிலை மாறியது. வியர்வை அதிகரித்து உடல் நனைந்தது.

 

“சார் டென்ஷன் ஆகாதிங்க… மேடம்… அவரோட பிபி அதிகமாக கூடாது… ப்ளீஸ் நீங்க கிளம்புங்க. சார் கொஞ்சம் ஸ்டேபிள் ஆனதும் பேசிக்கலாம்” – இருவருக்கும் இடையில் நர்ஸ் புகுந்தாள்.

 

சுமனின் மனம் விட்டுப்போய்விட்டது. “நாய்க்குட்டி மாதிரி பின்னாடியே ஓடி வர்றேன்ல… அதான்… இப்படி தூக்கியெறியிற. நா இல்லன்னாதாண்டா உனக்கு என்னோட அருமை தெரியும். நா போறேன்… திரும்பி வரமாட்டேன்… நீ சந்தோஷமா இரு…” – அழுதுகொண்டே அந்த இடத்திலிருந்து சென்றுவிட்டாள்.

 

‘போ போ’ என்று விரட்டிவிட்டது அவன்தான்… அவளும் அழுது கொண்டே போய்விட்டாள். இனி என்ன? – தளர்ந்து போய் பொத்தென்று கட்டிலில் அமர்ந்தான். தலை கவிழ்ந்திருந்தது. கண்களிலிருந்து கண்ணீர் முத்துமுத்தாக வடிந்து தரையில் விழுந்து தெறித்தது.

 

********************

 

“இதுதான் நம்மளோட பிளான்… ராகேஷ் சுக்லா நாளைக்கு காலையில சரியா எட்டு மணிக்கு டெல்லியில வந்து இறங்குறார்… அவர் தங்கற அதே ஹோட்டல்ல, அவருக்கு புக் பண்ணியிருக்கற ரூமுக்கு எதிர்த்த ரூமை நாம ஏற்கனவே புக் பண்ணிட்டோம். நம்ம ஆளுங்க ரெண்டு பேர் அந்த ரூம்ல தங்கி நிலவரத்தை கவனிக்கிறாங்க… ஹோட்டலுக்கு வெளியே ரெண்டு பேர் தனித்தனியா நின்னு நிலவரத்தை கவனிக்கறாங்க. ராகேஷ் ஹோட்டலுக்கு வந்ததும்… அவர் தனியா தான் வர்றாரா… இல்லை கார்ட்ஸும் கூட வர்றாங்களாங்கற விபரத்தை சேகரிச்சு பாஸ் பண்ணறது மட்டும் தான் வெளியே இருக்க ரெண்டு பேரோட வேலை”

 

“கார்ட்ஸ் கூட இருந்தா பிளான் எ – அட்டாக் பண்ணி ஆளை போடறது… கார்ட்ஸ் இல்லைன்னா பிளான் பி – சைலண்டா உள்ள நுழைஞ்சு மேட்டரை முடிச்சிட்டு தற்கொலை மாதிரி செட்டப் பண்ணிடறது…” – பகவானுடைய பேச்சில் நம்பிக்கை நிறைந்திருந்தது.

 

“இதெல்லாம் சாத்தியமா? எக்சிகியூஷன்ல எங்கேயாவது தப்பு நடந்துட்டா என்ன செய்றது?” – சிறு கலக்கம் தெரிந்தது ஜெனார்த் நாயக்கின் குரலில்.

 

“தப்பு நடக்க வாய்ப்பே இல்ல… பிளான் எ எக்சிகியூஷன் – ரூம்ல இருக்க ரெண்டு பேர், புதுசா உள்ள நுழையிற மூணு பேர் மொத்தம் அஞ்சு பேர்… எல்லாருமே பிரபஷனல் கில்லர்ஸ். சந்தர்ப்பம் பார்த்து சரியான நேரத்துல அட்டாக் பண்ண கூடியவங்க. எப்படி பண்ணணுங்கறதை சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி, டீம் ஹெட் அந்த நேரத்துல பிளான் பண்ணிக்குவான்”

 

“பிளான் பி எக்சிகியூஷன் – ராகேஷ் ஹோட்டல் ரூம்ல நுழைஞ்சதுமே, எதிர்த்த ரூம்ல தங்கியிருக்கும் ரெண்டு பேரும் கேமிராவை ஹேக் பண்ணிட்டு பறந்துடுவாங்க. அடுத்த நிமிஷமே நம்மளோட கில்லர்ஸ் ஹோட்டலுக்குள்ள நுழஞ்சிடுவாங்க. மொத்தம் மூணு பேர்… ஒருத்தன் டோர் லாக்கை ரிப்ரோகிராம் பண்ணி கதவை திறப்பான். ரெண்டாவது ஆள் ராகேஷை சத்தமில்லாம முடிப்பான். மூணாவது ஆள் தடயங்களை அழைச்சிட்டு தற்கொலை மாதிரி செட் பண்ணிடுவான். லாக்கை திறந்தவன் மறுபடியும் அதை பழையபடி ரிப்ரோகிராம் பண்ணி கதவை மூடிடுவான். மூணு பேரும் வந்த அடையாளமே இல்லாம வெளியேறிடுவாங்க… அதிகபட்சம் முப்பது நிமிஷம்… தப்பு நடக்க வாய்ப்பே இல்ல…” – பகவான் உறுதியாகக் கூறினார். ஜெனார்த் நாயக்கிற்கும் அப்படித்தான் தோன்றியது.

 

மறுநாள் காலை… அவர்கள் எதிர்பார்த்தபடியே சரியாக எட்டுமணிக்கு ராகேஷ் சுக்லா டெல்லி விமானநிலையத்தில் வந்து இறங்கினார். அவருடைய பிரத்தியேக பாதுகாவலர்கள் மூன்று மணிநேரம் தாமதமாக அடுத்த விமானத்தில் வருவதால், அவரை பாதுகாக்கும் பொறுப்பை தற்காலிகமாக ஏற்றிருந்த உள்ளூர் ஏஜென்ஸி ஒன்றின் ஏஜெண்டுகள் அவரை கமுக்கமாக காரில் ஏற்றிக் கொண்டு பறந்தார்கள்.

 

ராகேஷ் சுக்லாவின் ஒவ்வொரு அசைவையும் கவனித்துக் கொண்டிருந்த கோர்த்தா ப்ளாக் குழுவின் பட்சிகள் இரண்டு, அவரை விமான நிலையத்திலிருந்து பின்தொடர்ந்து வருவதை – அவரோ அவரை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்த ஏஜெண்டுகளோ யாரும் கவனிக்கவில்லை. காரணம், ரிலே’ ஓட்டம் போல் ஒவ்வொரு குறிப்பிட்ட தூரத்திலும் அவரை பின்தொடரும் வாகனமும் பட்சிகளும் மாறிக் கொண்டே இருந்தார்கள். அதை கண்டுபிடிப்பது சற்று சிரமமான காரியம்தான்.

 

கார் ஹோட்டலை வந்தடைந்தது. வெளியே நோட்டமிட்டுக் கொண்டிருந்த பட்சிகள் ராகேஷ் ஏஜென்ட்டுகளோடு ஹோட்டலுக்குள் நுழைந்துவிட்டார் என்கிற தகவலை கில்லர் ஸ்குவார்டிற்கு கொடுத்துவிட்டு பறந்துவிட்டது.

 

சுக்லா, ஹோட்டலுக்கு வந்ததும் எந்த விளம்பரமும் இல்லாமல் நேராக தனக்கு ஒதுக்கப் பட்டிருந்த அறைக்கு சென்றார். அவர் உள்ளே நுழைவதற்கு முன் பாதுகாப்பு ஏஜென்ட் உள்ளே நுழைந்து அறையை முழுமையாக சோதித்து அவருடைய பாதுகாப்பை உறுதி செய்து கொண்ட பிறகே அவரை உள்ளே அழைத்தான். பாதுகாப்பு குழுவோடு உள்ளே நுழைந்தார் சுக்லா. பால்கனி இல்லாத அறை… மெயின் டோர் வழியாக மட்டும்தான் உள்ளே நுழைய முடியும்… பாதுகாப்பிற்கு எந்த பிரச்சனையும் இல்லை. திருப்தியாக அறையிலிருந்து வெளியேறிய பாதுகாப்பு குழு, அந்த தளத்திலிருந்தும் கீழே இறங்கியது. இனி கண்ட்ரோல் ரூமிலிருந்து கண்காணித்தால் போதும்… தேவைப்பட்டால் மேலே வரலாம்..

 

எதிர் அறையில் பதுங்கியிருந்த பகவானின் ஆட்கள், பாதுகாப்பு லென்ஸ் வழியாக அவருடைய அறை வாயிலை நோட்டமிட்டு நிலவரத்தை கில்லிங் ஸ்குவார்டிற்கிற்கு கொடுக்க, கேமிராவை ஹேக் செய்யும்படி ஆர்டர் வந்தது. அடுத்த சில நிமிடங்களில் அதை முடித்துவிட்டு அவர்கள் வெளியேறவும் கில்லிங் ஸ்குவார்டில் இருக்கும் மூவரும் ஒன்று கூடி மேலே வரவும் சரியாக இருந்தது. அறிமுகமற்றவர்கள் போல் ஒருவரை ஒருவர் கடந்துச் சென்றார்கள்.

 

கொலைகாரர்கள் என்று சத்தியம் செய்து சொன்னால்கூட யாரும் நம்பமாட்டார்கள். தோற்றத்தில் அத்தனை மிடுக்கும் நேர்த்தியும் இருந்தது அவர்களிடம். கட்டுமஸ்தான உடலை உயர்தரமான ஆடையிலும், குரூரம் நிறைந்த குணத்தை இயல்பான முகத்திலும் மறைத்துக் கொண்டு வெகு சாதாரணமாக மூன்றாம் தளத்திற்கு வந்துவிட்டார்கள்.

 

ராகேஷ் சுக்லா தனியாக அறையில் இருக்கிறார். தப்பிச் செல்ல பால்கனிகூட இல்லை… ஒரே கதவுதான்… அதையும் இப்போது உடைத்துக் கொண்டு உள்ளே நுழைய போகிறது அந்த கொலைகாரக் குழு…

 

இதோ… கதவில் பொருத்தப்பட்டிருந்த டிஜிட்டல் லாக்கை, சில நிமிட போராட்டத்தில் ரிப்ரோகிராம் செய்து திறந்துவிட்டான் ஒருவன். மூவர் முகத்திலும் மகிழ்ச்சி மின்னி மறைந்தது… துப்பாக்கியை தயார் நிலையில் வைத்தபடி கதவை மெல்ல திறந்து கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தான் ஒருவன். அறை காலியாக இருந்தது. குளியலறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்டது. சகாக்களுக்கு சாதகமாக தலையசைத்து சிக்னல் கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தான். மற்ற இருவரும் அவனை பின்தொடர்ந்தார்கள். அவர்களுடைய கவனம் முழுவதும் குளியலறையை நோக்கியிருந்தது. ஒரே நொடிதான்… மின்னல் வெட்டியது போல் கண்ணிமைக்கும் நேரத்தில் இடைவிடாமல் மூன்று முறை வெடித்தது துப்பாக்கி… யார் யாரை சுட்டது… எங்கிருந்து வெடித்தது என்று எதையும் ஊகிக்கும் முன்னர் மூவரும் இரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தார்கள். அவர்களிடம் அசைவில்லாததை உறுதி செய்து கொண்டு எச்சரிக்கையுடன் சோபாவுக்கு பின்னாலிருந்து வெளிப்பட்டான் அர்ஜுன் ஹோத்ரா.

 

ஆம்… அர்ஜுன் ஹோத்ராவே தான்… ராகேஷ் சுக்லா அர்ஜூனாக மாறியது மிகவும் பழைய டெக்னிக் தான்… திரைப்படங்கள் பலவற்றில் நாம் பார்த்து பழகிய டெக்னிக்… ஆனால் உலகின் சில முக்கிய இன்டெலிஜெண்ஸ் ஆப்பரேஷன்ஸை கவிழ்த்துவிட்ட டெக்னிக்…

 

லோக்கல் ஏஜெண்ட்ஸ் என்கிற போர்வையில் இருந்த அர்ஜுனும் அவன் சகாக்களும் ராக்கேஷ் சுக்லாவோடு அறைக்குள் நுழைந்தார்கள். வெளியே வரும்போது ராகேஷ் சுக்லாவின் உடை பாதுகாப்பு ஏஜென்ட் போல் மாறியிருந்தது. ஆளோடு ஆளாக அவர் வெளியேறிவிட அர்ஜுன் எதிரிகளை எதிர்பார்த்து உள்ளேயே தங்கிவிட்டான். தருணம் பார்த்து தாக்கி சாய்த்தும்விட்டான்…

 

இது ஒரு துரித போர்… ஒரே அறை… மூவருக்கு ஒருவன்… அனைவர் கையிலும் ஆயுதங்கள்… மிகவும் ஆபத்தான ஆப்பரேஷன்… இங்கு வெற்றியை முடிவு செய்தது தகவல் தான். அவர்களுக்கு கிடைத்த பொய்யான தகவல்… அவனுக்கு கிடைத்த உண்மையான தகவல்… உண்மையும் பொய்யும் இடம்மாறியிருந்தால் வெற்றியும் கைமாறியிருக்கும். ஆனால் அதற்கு இடம் கொடுப்பவன் அர்ஜுன் ஹோத்ராவாக இருக்க முடியாதே!

 

தரையில் கிடந்தவர்களின் ஆயுதங்களை கைப்பற்றிவிட்டு, கழுத்து வளைவில் கைவைத்து நாடியை சோதித்தான். ஒருவன் உயிரோடிருந்தான்… அவன் முக்கியம்… துரிதமாக செயல்பட்டு அவன் காயத்திற்கு முதலுதவி செய்து ரெத்தப்போக்கை கட்டுப்படுத்தினான்.

 

அவன் அதை செய்து கொண்டிருக்கும் பொழுதே, ஏஜெண்ட்ஸ் என்கிற போர்வையில் கண்ட்ரோல் ரூமில் இருந்த கோர்த்தாவின் ஆட்களில் இருவர் தடதடவென்று அந்த அறைக்குள் நுழைந்தார்கள். எந்த இடைவேளையில் அவர்களுக்கு சிக்கினல் கொடுத்தானோ! அது அவனுக்கே வெளிச்சம்…

 

அடுத்த சில நிமிடங்கள் அந்த அறையில் பரபரப்பாக வேலைகள் நடந்தன. பிணங்களை ரெத்தம் கசியாமல் பாடி பேகில் பேக் செய்து, அதை துணியால் மூட்டை போல் கட்டி, லண்டரி சர்வீஸ் மேன் வேஷத்தில் வந்த கோர்த்தா ஆள் மூலம் ஹோட்டலைவிட்டு அப்புறப்படுத்தினார்கள். உயிருக்கு ஊசலாடி மயங்கிவிட்டவனை மிக சாமர்த்தியமாக லிப்ட் மூலம் – தரை தளத்தில் கோர்த்தா ஆள் ஒருவனுக்கு புக் செய்யப்பட்டிருக்கும் அறைக்கு கடத்தி, அந்த அறையின் பால்கனி மூலம் பார்க்கிங் லாட்டிற்கு எடுத்துச் சென்று சிலநிமிடத்தில் வேனில் ஏற்றி கொண்டு பறந்துவிட்டார்கள். பதினைந்து நிமிடத்திற்குள் தடயங்கள் வெகு துரிதமாக அழிக்கப்பட்டன. அங்கே ஒரு யுத்தம் நடந்து முடிந்ததற்கான அறிகுறி எதுவுமே இல்லாமல் வழக்கம் போல் இயங்கி கொண்டிருந்தது அந்த ஹோட்டல்.

 

மூன்று மணிநேரம் தாமதமாக வருவதாக போக்கு காட்டிவிட்டு ஒருவாரத்திற்கு முன்பே டெல்லுக்கு வந்து இறங்கிவிட்ட அர்ஜுன் ஹோத்ராவின் குழு, வந்த வேலையை கச்சிதமாக செய்து முடித்துவிட்டது.

 

*******************

 

‘கில் பிஃபோர் யு ஆர் கில்ட்’ – “நீ கொல்லப்படுவதற்கு முன் கொன்றுவிடு” – போர்க்களத்தில் சொல்லப்படும் ஓர் அழகிய வாய்மொழி. அதைத்தான் செய்து முடித்திருந்தான் அர்ஜுன். சற்று தயங்கியிருந்தாலும் அந்த மூவரின் தோட்டாக்களுக்கும் அவன் இரையாகியிருப்பான். இந்நேரம் அவனுடைய உடல் பாடி பேகில் பேக் செய்யப்பட்டிருக்கும்… இங்கு வாழ வேண்டும் என்றால் கொல்ல வேண்டும்… கொன்றால் மட்டும் தான் வாழ முடியும். நிதர்சனம் நெஞ்சை நிமிர செய்தது. உள்ளே குறுகுறுத்த மனிதம் உள்ளத்தின் ஏதோ மூலையில் தூக்கியெறியப்பட்டது. ‘புஸ்ஸ்ஸ்’ என்கிற சத்தத்துடன் உச்சந்தலையில் சீறிப்பாய்ந்துக் கொண்டிருந்த ஷவரை அணைத்துவிட்டு டவலை எடுத்தான்.

 

அவள் முகம் நினைவில் வந்தது… திரும்ப பார்க்க முடியாமல் போய்விடுமோ என்கிற நூல் நுனியளவிலான எண்ணம் அவன் மனதை குத்திக் கொண்டிருந்தது. அன்றைய வெற்றியின் பலனே அதுதான் என்பது போல் மனம் பரபரத்தது. ‘மடத்தனம்…’ – தன்னைத்தானே கடிந்து கொண்டபடி குளியலறையிலிருந்து வெளியே வந்து உடைமாற்றி தயாரானான்.

 

பக்கத்து அறையில் தான் ராகேஷ் சுக்லா தங்கியிருக்கிறார். அவருடைய மீட்டிங் வெற்றிகரமாக முடிய வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்… அது தொடர்பாக சில போன் கால்கள் செய்ய வேண்டியிருந்தது. பேசி முடித்துவிட்டு அலைபேசியை கீழே வைத்தவனுக்கு முன்பிருந்த அதே பரபரப்பு… அவளிடம் பேச வேண்டும் போல்… அவள் குரலை கேட்க வேண்டும் போல்… பத்திரமாக இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும் போல்… அத்தனையும் அவன் விருப்பத்திற்கு மாறான உணர்வுகள்… இடம் கொடுக்க விரும்பாமல், சுக்லாவை சந்திக்கச் சென்றான்.

 

சந்திப்பு நடக்கவிருக்கும் இடம் நேரம் பயண விபரம் அனைத்தையும் விலக்கிக் கூறிவிட்டு, அவருடைய மெய்ப்பாதுகாவலர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி கூறிவிட்டு கீழே வந்தான். தரைத்தளத்தில் இயங்கும் ரெஸ்டாரண்டை தவிர்த்து, அவன் உண்ணக்கூடும் என்று ஊகிக்க முடியாத ஒரு ஹோட்டலில் உண்டுவிட்டு சுக்லாவுக்கும் பார்சல் வாங்கி கொண்டு வந்தான்.

 

உணவு விஷயத்தில் அவன் எப்பொழுதுமே அதீத கவனத்தோடுதான் இருப்பான். தன் பிரத்தியேக சமையல்காரரை தவிர வேறு யாரையும் நம்பமாட்டான். அது ஒரு வியாதி போலவே அவனை தொற்றிக் கொண்டிருக்கிறது. இன்றும் அந்த எச்சரிக்கைதான், தங்கியிருக்கும் இடத்தைவிட்டு வெகுதூரம் தள்ளி உள்ள ஒரு ஹோட்டலை தேடி அவனை துரத்தியது.

 

சுக்லாவுக்கு உணவை கொடுத்துவிட்டு அறைக்கு திரும்பியவனுக்கு அடுத்த இரண்டு மணிநேரத்திற்கு வேலை எதுவும் இல்லை. அவள் நினைவு அரிக்கத் துவங்கியது. அலைபேசியை எடுத்து டேவிட்டிற்கு அழைத்தான். நான்கைந்து முறை ரிங் சென்ற பிறகு அழைப்பு ஏற்கப்பட்டது… ஆனால் யாரும் பேசவில்லை… மாறாக மறுபுறத்திலிருந்து பெரிதாக சத்தம் கேட்டது… சிரிப்புச் சத்தம்…

 

“ஹேய்…!!! ஆவ்… ஐயோ…!!! விடு… டே…வி…ட்…!! ப்ளீஸ்… ஹா ஹா…” – மிருதுளாவின் சிணுங்கல் சிரிப்பும் களிப்புமாக அவன் செவியை எட்ட, சட்டென்று உடல் விறைத்து நிமிர்ந்தான் அர்ஜுன்.

 

“விட்றதா? என்ன பண்றேன் பாரு உன்ன… ஹா ஹா… எங்க… இப்போ எப்படி… அட… ஏய்… ஹா ஹா…” – மேல்மூச்சு வாங்கும் டேவிட்டின் உல்லாச குரல் அவன் அடிவயிற்றில் அமிலத்தை ஊற்ற  துடித்துப்போனான்…

 

“நோ-நோ-நோ… ஹேய்…!!! கைய விடு… ஹா ஹா…” – மகிழ்சியும் துள்ளலுமாக கத்தினாள் மிருதுளா… அவன் அலைபேசி அழைப்பில் தொடர்பில் இருப்பதை இருவருமே அறியவில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்! நெஞ்சுக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் உள்ளம் எரிந்தது. கொலை செய்யும் போதுகூட வராத பதட்டம் இப்போது அவனை நிலைகுலைய செய்தது.

 

“ஹலோ… டேவிட்… ஹ…லோ… ஏய்… பேசுடா…” – ஆத்திரத்துடன் கத்தினான். ஆனால் அந்த பக்கத்திலிருந்து சீண்டல்களும் சிணுங்கல்களும் மட்டுமே அவனுக்கு பதிலாகக் கிடைத்தது. “டா…மிட்…!” – கடுங்கோபத்துடன் அழைப்பை துண்டித்துவிட்டு அலைபேசியை கடாசினான்.

 

நிழல்நிலவு - 30
நிழல்நிலவு - 32
9
Leave a Reply

avatar
8 Comment threads
1 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
7 Comment authors
Kurinji Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
Member

Superb episode n waiting for the next episode eagerly….

Member

A big surprise…. evalo quick a next epi athuvum long epi …. Arjun avanoda wk success panitan. Aana mirthu va ena pana poran.. jealousy la ph thooki pottu ena aaka pokuthu…. ila sujith suman a vendam sonatha pola ajuvum misunderstandla miruthu voda morachutu nikka porano theriyala… aana intha ella confusion kum nithya ji answer theruyum….. but solla than time aakum. Epo nu avangaluku matum than theriyum.

Member

David ethum drama panurano….

Guest
Afrin

ARjun ku theva thaan! I love this jealousy part

Member

Nice ud sis….

Member

Nithu..
Thank you so much for the ud..
I love this ud..
I love the way you write..
One of the excellent story from you..

Kurinji
Guest
Kurinji

Fastaa epi kothutathukku big ths

Pagvan blan a.b..

Arjun ellathaiyum poojiyam akkitaan..
Manathin osai kettu uraiyaada ninaithal kathaliyin osai siripudan poramai.

Devid intha velaiyil tavari sermthutiyoo..

Guest

Wow sis ethu unmai thana😁 surprise ud… Superb sis👍 nice nice… Sirku jealous ah😊😊😊

Guest
Reena

Wow … great ud 👍🏻👍🏻👍🏻
Eagerly waiting for next ep

error: Content is protected !!
Don`t copy text!