Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மலர்மதி 17 – 18

அத்தியாயம் – 17

 

பழைய நினைவுகளிலிருந்து விடுபட்ட மலர்மதி மீண்டும் நெற்றிப் பொட்டை இருக பற்றிக் கொண்டாள். ‘விண் விண்’ என்று தெரித்த நெற்றி தற்போது ‘டங்கு டங்கு’ என்று சுத்தியலால் அடிப்பது போல் வலித்தது.

 

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தன்யனோடு உண்டான தோழமைதான் அவளை மனதார சிரிக்க வைத்தது.

 

தோழமை என்று கூறி மறைக்க என்ன இருக்கிறது. அது காதல் தானே! ஆனால் போயும் போயும் இவனை ஏன் காதலித்துத் துலைத்தேன். முதல் நாள் உன் ரேட் என்ன என்று கேட்ட யோக்கியம் தானே இவன். தெரிந்தே குழிக்குள் விழுந்து கிடப்பது என் மடத்தனம் தானே. வேறு யாரை குறை கூற. மீண்டும் மீண்டும் அழுகையே வந்தது….

 

அப்படி அழுது கரைந்த நான்காவது நாளன்று தான் அவளது அறைக்கதவை தட்டி விட்டு கோமதியம்மாள் உள்ளே வந்தார்.

 

“அம்மாடி மலர் இன்றைக்கு ஒரு நாள் இந்த அம்மாவிற்காக முகம் கழுவி, சற்று பளிச்சென கீழே வாயேன்.” என்றாள் ஒரவித ஆர்வத்துடன்.

 

“என்ன அம்மா என்ன விஷயம்.” என்று விசாரித்த மகளிடம், “வெளியூரிலிருந்து விருந்தினர் வந்திருக்கிறார்கள் மலர், உன்னை பார்க்க வேண்டுமாம். இப்படி வீங்கிச் சிவந்த கண்களும், கலைந்த கேசமுமாய் அவர்கள் முன் நின்றால் நன்றாகவா இருக்கும், அதனால் சீக்கிரம் முகம் அலம்பி விட்டுக் கீழே வா.” என்றவள் அவள் மறுத்து பேசுமுன் அவ்விடம் விட்டு அகன்றாள்.

 

வேறு வழியில்லாமல் முகம் கழுவி, லேசாக பௌடர் பூசிக் கொண்டு கீழிறங்கினாள்.

 

கூடத்தில் கிடந்த சோபாவில் நடுத்தர வயதைக் கொண்ட இருவர் அமர்ந்திருந்தனர். இந்த அம்மாளின் ஜாடையைப் பார்த்தால்!! என்ற சிந்தனை முடிவடைந்த இடம், அவளுக்கு உவப்பாக இருக்கவில்லை. இவர்கள் ஏன் இங்? என்று தொடங்கியவள், இது அவர்கள் அண்ணன் வீடு, அவர்கள் வருவதை கேள்வி கேட்க இவள் யார். அவர்களின் முன் நின்று, மரியாதை நிமித்தமாக இருகரம் குவித்து,

 

“வாருங்கள்.” என்றாள்.

 

“நீதான் மலரா அம்மா… இப்படி உட்கார்.” என்று மலர்மதியின் கரம் பற்றி, அருகில் அமர வைத்துக் கொண்டாள் பானுமதி. ஒரு மல்லிகை பூச்சரத்தை ஆசையாய் மலர்மதியின் தலையில் சூடி அழகு பார்த்தாள்.

 

“என் கண்ணே பட்டுடும் போலவே! என் மகன் தவறான தேர்வை ஒரு போதும் செய்ய மாட்டான் என்று நான் சொன்னேனில்லையா!’’என்று பெருமை பட்டாள் பானுமதி, ஆமோதிப்பாய் தலையசைத்தார் சோமசுந்தரம்.

 

இங்கு என்ன நடக்கிறது, புரிந்தும் புரியாமலும் விழித்தாள் மலர்மதி.

 

“எங்கள் மகள் எப்படி விழிக்கிறாள் பாருங்கள் அண்ணி.

பாவம் இதுதான் என்று விபரம் கூறாமல் நாம் பாட்டில் பேசினால் என்ன அர்த்தம்.”

 

“இங்கே பாரு மலர். உன்னை தன்யனுக்கு மணக்க, கேட்டு வந்திருக்கிறார்கள். அதுவும் தன்யன் அவசரம் அவசரம் என்று, எங்கும் பயணம் செய்யாத இவர்களை, தார் குச்சிக் கொண்டு கிளப்பி அனுப்பியிருக்கிறான், புரிகிறதல்லவா என் கண்ணு.” என்று மலர்மதிக்கு விரல்களால் சொடுக்கிட்டாள் கோமதி.

 

தன்யனுக்கு அவசரமா, எதற்கு பங்குகளை அவர் பெயரில் மாற்றவா? அதற்காக ஒரு முட்டாள் பெண் கிடைத்து விட்டாள் என்றா? அல்லது உண்மைத் தெரிந்து, அவள் மனம் மாறிவிடக் கூடாது என்றா? சீக்கிரம் திருமணம், சீக்கிரம் சொத்து மாற்று, சீக்கிரம் விவாகரத்து இதற்காகவா? இறுதியில் அந்த முட்டாள் பெண் தானே தானா! பாவி… பாவி… நான் தானா கிடைத்தேன்.

 

ஒருவேளை, அவளுக்குத் தாமதமாக புரிந்த அவளது மனம் அவனுக்கு முன்னமே தெரிந்து விட்டதா? தன்னை காதலிக்கும் முட்டாள் பெண் கிடைத்தால் தன் வேலை மிகவும் சுலபமாக இருக்கும் என்று நினைத்தானா? அப்படியென்றால் மலர்மதி மலிந்து விட்டாளா? ச்சே கூடாது… கூடாது…! தன்யன் நினைக்கும் முட்டாள் பெண் நானல்ல. இப்பொழுது அமைதி காப்பது மிகமிக முட்டாள்தனம் என்கின்ற முடிவிற்கு வந்தவள், “அம்மா ஒரு நிமிஷம்.” என்று அழைத்துக் கொண்டு சமையல் கட்டிற்குள் நுழைந்தாள்.

 

அவளது முகத்தை கூர்ந்து நோக்கிய கோமதியம்மா, “எது வானும் தயங்காமல் சொல் மலர், உன் விருப்பத்திற்கு மாறாக, யாரும் உன்னை கட்டாயப்படுத்த மாட்டோம்.”

 

“அ…அ…. அம்மா… அது…எ…எனக்கு இந்த திருமணத்தில் விரு… விருப்பமில்லை. அவர்களிடம் சொல்லிவிடுங்கள்.”

 

“ச்சே… இவ்வளவுதானா? அதற்கென்ன, உனக்கு பிடிக்கவில்லை என்றால் இத்திருமணப் பேச்சை இத்தோடு முடித்து விடுகிறேன் சரிதானா. அதற்காகவா கண் கலங்குகிறாய் பைத்தியம். இது வெறும் ப்ரபோசல் தானே, ஏற்பதும் ஏற்காததும் நம் விருப்பம்தானே!”

 

“அ…. அம்மா என்னால் உங்கள் உறவில்…”

 

“ஒரு பிரச்சனையும் வராது. அதுமட்டுமல்லாமல் பிடிக்காத இருவரை சேர்த்து வைப்பது, எங்கள் குடும்ப வழக்கமும் இல்லை. சரிதானா? நான் பேசிக் கொள்கிறேன். நீ அவர்களுக்கு கொடுக்க, சூடாக ஏதாவது தயாரித்து எடுத்து வா” என்றவர் கூடத்திற்கு சென்றார்.

 

ஓர் ஐந்து நிமிடத்திற்குப் பிறகு வாஞ்சிநாதன் வந்தார். வாஞ்சையுடன் அவளது தலையை வருடி, “ஏன்… அம்மா.” என்றார்.

 

“நீங்கள் தானே அப்பா சொன்னீர்கள். என் மகளை தன்யனுக்கு நிச்சயமாய் தரமாட்டேன் என்று.”

 

“அது, அன்று… ஆனால் இப்பொழுது அவன் குடும்பத்தை பொறுப்பாக கவனித்துக் கொள்கிறான். வார இறுதியை தாய் தந்தையரோடு கழிக்கிறான். உன்னை நன்றாகப் பார்த்துக் கொள்வான் மலர்.”

 

திருமணத்திற்குப் பிறகு வரும் வார இறுதிகள் பற்றி தன்யன் கூறியது நினைவிற்கு வந்து சிரிப்பை ஏற்படுத்தியது. இனி பெற்றோரைப் பார்க்க மாட்டார் அப்பா. இனி எப்போதும் வீணாவின் முந்தானையில்தான் இருப்பார், என்று கத்த வேண்டும் போல் இருந்தது. இருப்பினும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு,

 

“என்னவோ பிடிக்கலை அப்பா மன்னிச்சிடுங்க.”

 

“ச்சே… என்னடா இது, பெரியவார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு உனக்குப் பிடிக்கலைன்னா இது வேண்டாம். என் மகளுக்கு நல்ல வாழ்வு கைதப்பி போகுதேன்னு தான் கவலையா இருக்கு. இருந்தாலும் பரவாயில்லை, கடவுள் இதை விடவும் நல்லதோர் வாழ்வை உனக்குஅமைத்துக் கொடுக்கக் காத்திருக்கலாம். சரி விடு என்ன இது பக்கோடாவா, சீக்கிரம் எடுத்து வா சாப்பிடலாம்.” என்றார்.

 

“நீங்கள் எடுத்துப் போங்கப்பா, நான் காஃபி தயாரித்து எடுத்து வறேன்.” என்றவள் பாலை அடுப்பில் ஏற்றினாள். பால் பொங்கி வந்த தருவாயில், பானுமதியும் சோமசுந்தரமும் உள்ளே வந்தார்கள். என்ன கேட்பார்களோ என்ற அச்சத்தில் மலர்மதி முந்திக் கொண்டாள்.

 

“வாங்க ஆண்டி வாங்க அங்கிள் இதோ டூ மினிட்ஸ் காஃபி ரெடியாகிடும்.’’ என்று ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு காஃபி தயாரிக்கலானாள்.

 

“ஒரு நிமிஷம் மலர்மதி, நீ வேண்டாம் என்றதற்கு காரணம் என்ன வென்று நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?” பானுமதி.

 

“!….!!”

 

“கூற விருப்பமில்லை என்றால் பரவாயில்லையம்மா.” சோமசுந்தரம்.

 

“அ… அப்படி எதுவும் இல்லை அங்கிள். எனக்கு சிறு வயதிலிருந்தே ஒரு ஆசை.வாழ்வில் ஒரு நடுத்தர வர்க்கத்து மனிதனைத்தான் மணக்க வேண்டுமென்று. என் ஆசைகள், கனவுகள் எல்லாம் அந்த வாழ்வில் தான் கிடைக்கும். பணம் அதிகமிருந்தால் மூச்சு முட்டுவது போல தோன்றும். அதனால்தான்.” என்றாள் ஒருவாறு உண்மை, பொய் எல்லாம் கலந்து

 

“ஓ….” என்பது தவிர வேறு எதுவும் கூறாமல் இருவரும் வெளியேறினர். அதன் பிறகு ஃபோனுக்கு மேல் ஃபோன் வந்தது முதலில் அர்ஜுன்.

 

“என்ன ஆச்சு மலர் உனக்கு?…… தன்யன்அண்ணாவை நிராகரிக்க உனக்கு எப்படி மனம் வந்தது. எத்தனை பெண்கள் அண்ணாவின் கடைக்கண் பார்வைக்காக தவம் கிடக்கிறார்கள் தெரியுமா? நீயானால்… உன் வாழ்வை நீயே கெடுத்துக் கொண்டாய், வேறு நான் என்ன சொல்ல.” என்று உரிமையோடு திட்டினான்.

 

“என் குணத்திற்கு உங்கள் அண்ணா ஒத்து வர மாட்டார் அர்ஜுன், அவர் சரியான சிடுமூஞ்சி, அதிகம் பேசக் கூட மாட்டார். இப்படிப்பட்டவரை நான் எப்படி மணக்க முடியும் சொல்.” என்று அப்பாவியாய் இவள் கேட்கவும், வேறு பேச முடியாமல் தொடர்பை துண்டித்தான் அர்ஜுன்.

 

அடுத்தது ஸ்ரீகாந்த், “ஏன் மலர் இப்படிச் செய்தீர்கள்? யானை தன் தலையில் தானே மண்ணை வாரி இறைத்துக் கொள்ளுமாம். அதுபோல் இருக்கிறது உங்கள் முடிவு. தனா அண்ணா உங்களை உண்மையாக நேசிக்கிறார். அவரது கண்களில், உங்கள் மேல் இருந்த காதல் உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று ஸ்ரீகாந்த் கூறக்கூற அவளுக்குப் பாவமாக இருந்தது. தன்னை போலவே தன்யனுக்கு இவள் மேல்மேல் காதல் என்று இவனும் ஏமாந்து விட்டானே. இருப்பினும் அதனைக் கூற மனம் வராமல், “உங்கள் அண்ணனுக்கு மட்டும் காதல் இருந்தால் போதுமா ஸ்ரீ, எனக்கு… என் மனது பற்றி எதுவுமே இல்லையா?” சம வயதான ஸ்ரீகாந்திடம் அவளால் பேச முடிந்தது.

 

“என்ன உளறல் மலர்.”

 

“என் மனதின் விருப்பம் உங்களுக்கு உளறலாக தெரிகிறதா ஸ்ரீ?”

 

“கண்ணைத் திறந்து கொண்டே குழியில் விழுவது என்றால் இதுதான் போலும். இனி நான் சொல்ல எதுவுமில்லை.” என்று போனை வைத்தான்.

 

மூன்றாவதாக மதுசூதனன், “வந்து… நீங்கள் அவசரப்பட்டு முடிவெடுக்கிறீர்களோ என்று தோன்றுகிறது மலர்மதி. கொஞ்சம் நாட்கள் எடுத்துக் கொண்டு யோசித்துச் சொல்லுங்களேன்.”

 

“அடடா மதுசூதனன் சாரா பேசுவது, என்ன ஆச்சர்யம் உங்களுக்கு பேசக் கூட தெரிகிறதே, நல்லது, இருப்பினும் உங்களிடம் ஒன்று தெரிவிக்கிறேன். நான் நன்கு யோசித்து எடுத்த முடிவுதான் இது. இதில் மாற்றமில்லை. மன்னித்து விடுங்கள்.” என்று வைத்தவளுக்கு இதயம் ஓவென அலறியது. இனி யாரும் தொலைபேசியில் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்கின்ற நிம்மதி பரவியது. இனி அழுகையை இழுத்துப் பிடித்து, ஆட்களுக்கு ஏற்றாற் போல் கதை புனைந்து என்று நடிக்கத் தேவையிராது அல்லவா. ஆனால் அவள் எதிர்பாராத இன்னொருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இந்த முறை ஐஎஸ்டி கால்… யூஎஸ்ஏ-விலிருந்து, எடுத்த எடுப்பிலேயே,

 

“மலர் அண்ணியா பேசுவது… நான் கனிமொழி பேசுகிறேன் நலமா?”என்றது அந்த தேன் குரல்.

 

“நான் மலர்மதி பேசுகிறேன். நலம்… நீங்கள் நலமா?” என்றாள், மலர்மதியில் ஓர் அழுத்தம் கொடுத்து.

 

“ஓ… வந்து சாரி அண்… மலர்மதி, நாங்கள் எல்லோரும் ஏதேதோ கனவு கண்டுவிட்டோம். ஆனால் நிஜத்தில் வேறு ஏதோ நடக்கிறது, பரவாயில்லை. ஆனால் எப்போதும் நமக்குள் அழகான நட்பு.. தொடர வேண்டும்… உங்களை அம்மா அப்பா பார்க்க வந்த பொழுது, என் சார்பாக ஒரு பரிசு கொடுத்திருந்தேன். அன்று அதனை அவர்களால் கொடுக்க முடியவில்லையாம். அதனால் பார்சலில் அனுப்பி விட்டார்கள். இன்று அல்லது நாளை உங்களுக்கு அந்த பரிசு வந்து சேரும். அதனை நிராகரிக்காமல் பெற்றுக் கொண்டால் நான் சந்தோஷப்படுவேன். என் சந்தோஷம் தவிர வேறு எந்த உள்நோக்கமும் இல்லை சத்தியமாக.” என்று முடித்த தேன் குரலுக்கு மறுப்பு தெரிவிக்க மலர்மதியால் முடியவில்லை.

 

“இப்படி அன்போடு ஒரு தோழி வேண்டியால், மறுக்கத் தோன்றுமா சொல், நிச்சயம் பெற்றுக் கொள்கிறேன், பரிசுக்கு மிக்க நன்றி.”

 

“ரொம்பவும் தேங்க்ஸ் மலர்.” என்று தொடர்பை துண்டித்தாள்.

 

எப்படிப்பட்ட குடும்பத்தை இழந்திருக்கிறாள்.நிச்சயமாக இவளின் பிறந்த நேரமே சரியில்லை. எல்லாக் கோள்களும் தன் துவேஷத்தை இவள் மீதுதான் காண்பிக்கின்றன. எந்த ஜென்மத்து பாவமோ மீண்டும் கண்களில் நீர்த்தேக்கம், இது என்று முடியும். அதற்கான விடை அவளிடமே இல்லை.

 

அத்தியாயம் – 18

 

தன்யனின் பெற்றோர் வந்து சென்ற மூன்றாம் நாள், கட்டிலில் அமர்ந்த வண்ணம் தலையணையில் கண் மூடி சாய்ந்திருந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் தன்பாட்டில் கொட்டிக் கொண்டிருந்தது.

 

கதவினைக் கூட தட்டாமல் புயலென அவளது அறைக்குள் நுழைந்தான் தன்யன். சுதாரித்து, கண் விழித்து கண்ணீரைத் துடைப்பதற்குள் டிரெஸ்சிங் டேபிளின் ஸ்டூலை இழுத்துப் போட்டுக் கொண்டு அவளெதிரில் அமர்ந்தான்.

 

“இப்பொழுது சொல் என்னை நிராகரித்ததன் காரணம் என்ன?’’ அவளை நேராகப் பார்க்காமல் நிலம் பார்த்து வினவினான்.

 

“வ….வ….வந்து…எ…என….”

 

“உஷ்… என்ன சொல்லப் போகிறாய், என் அப்பாவிடம், மாமாவிடம், தம்பிகளிடம் நீ கூறிய கதைகளையா. பணக்கார இடம் வேண்டாம், விருப்பமில்லை, நான் சிடுமூஞ்சி இப்படி எனக்கும் ஒரு கதை வைத்திருப்பாயே அது வேண்டாம். எனக்கு தேவை உண்மைக் காரணம்.” சிவந்த கண்களால் அவளது முகம் பார்த்தான்.

 

“காரணங்கள்… நான்… கூறியது தான்.” முடிக்க முயன்றவளிள் தோள் பற்றி, “எங்கே என் கண்களைப் பார்த்துச் சொல்.” எரித்து விடுவது போல் அவளை முறைத்தான்.

 

கண்ணீர் மட்டுமே பதிலாக வந்தது.

 

“இந்தக் கண்ணீரின் பொருள் என்ன?”

 

“இப்படி தோள் வலிக்கும் வண்ணம் அழுந்தப் பற்றியிருந்தால் கண்ணீர் வராமல் வேறு என்ன வரும்?” அழுகையினூடே வெடித்தாள்.

 

“அப்படியானால், நான் உள்ளே வரும் பொழுது துடைத்தாயே அது என்னவோ?”

 

“…..!….!!…”

மௌனம் காத்தாள்.

 

“முட்டாள்…” உறுமினான்.

 

“நான் முட்டாள் என்று தெரிந்து தானே என்னை மணக்கத் தேர்ந்தெடுத்தீர்கள்?”

 

“என்ன உளறல்…?’‘

 

“!….!!….”

முஷ்டியை இரண்டு முறை மூடித் திறந்தவன் வேகமாக சில மூச்சுக்களை வெளியேற்றினான்.

 

“இங்கே பார் மதி… உன் பெயரில் இருக்கும் மதி உன்னிடம் இல்லை. இருப்பினும் சற்று புரிந்து கொள்ள முயற்சி செய். நீ என் கண்களில் எதைக் கண்டாயோ ஆனால், உன் கண்களில் நான் கண்ட காதல் மெய்தான். அதில் எள்ளளவும் எனக்கு சந்தேகமில்லை. அதனால் தான் அம்மா அப்பாவை கோவையிலிருந்து சிரமப்பட்டு வரவழைத்தேன். உன் இந்த பதிலை நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. உடைந்து விட்ட அம்மா அப்பாவை பத்திரமாக கோவைக்கு அழைத்துச் சென்று விட்டு, அவர்களுடன் இரண்டு நாள் தங்கி, எனக்கு ஒன்றும் பெரிய இழப்பு இல்லை, என்பது போல் ஒருவாறு நடித்து, அவர்களை தேற்றிவிட்டு, நேரே இங்கே தான் வருகிறேன், நீயானால்?!!”

 

“நடிப்பு…. நீங்கள் தான் நடிப்பதில் வல்லவராயிற்றே.”

 

“இன்னமும் நீ சரியான காரணத்தைக் கூறவில்லை.”

 

காரணம் தானே வாங்கிக் கொள்.

 

“வீணா!’’

 

“வீணாவிற்கு என்ன? அதுதான் மதுசூதனன் வாழ்விலிருந்து அவளை நீக்கி விட்டேனே!”

 

“ஆஹா ஹா… அவர் வாழ்விலிருந்து நீக்கி உங்கள் வாழ்வில் சேர்த்துக் கொண்டீர்களாக்கும்.”

 

“என்ன உளறல் மதி?”

 

“உளறலா… திரைப்படத்தில் கூட நிஜ அண்ணன் தம்பிகள் ஒரே கதாநாயகியுடன் படங்கள் நடித்தால் பார்க்க மனம் ஒப்பாது எனக்கு. அண்ணன் அணைத்த பெண்ணை, தம்பியும் அணைத்து ஆடும் பொழுது, குமட்டிக் கொண்டு வரும். இங்கானால் தம்பியின் காதலி உங்களுக்கு வைப்பாட்டியா?”

 

‘பளார்…!!!’ கன்னம் சூடேறுவது உரைத்தப் பிறகுதான், அவன் அடித்திருக்கிறான் என்பதே புரிந்தது.

 

“…..!!”

 

“என்ன தைரியம் உனக்கு, ச்சே… என்னைப் போய்,……. வேண்டாம் மலர்மதி. இந்த சந்தேகம் சரியல்ல, அதுவும் வாழ்வு முழுமைக்குமான பந்தத்தில் ஈடுபடவிருக்கும் நமக்குள் இப்படி ஒரு சந்தேகம் மூள்வது சரியல்ல. இன்றே இதனை தீர்த்துவிடலாம். சொல் உனக்கு என்ன தெரிய வேண்டும்?”

 

“எனக்கு எதுவும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இங்கிருந்து சென்றால் போதுமானது. அல்லது இது உங்கள் மாமன் வீடென்று உரிமை கொண்டாடினால், நான் போகிறேன். திரும்பவும் ஹாஸ்டலுக்கு.’’

 

“உனக்கு என் காதலை எப்படி புரிய வைப்பேன்” முடிகளுள் விரல் வைத்து கலைத்து சிந்தித்தவன் சட்டென நிமிர்ந்தான்.

 

மலர்மதி சுதாரிப்பதற்குள் சட்டென அவளை இழுத்து அணைத்தவன் இதழ்களில் முத்திரைப் பதித்தான். தன் பலம் கொண்டு திமிரியவளால் விடுபட முடியவில்லை. மெல்ல மெல்ல அந்த முத்தத்தில் கரைந்து போனாள். மனதின் ஆழத்தில் கொள்கையாவது, இன்னொன்றாவது எல்லாவற்றையும் மறந்து, தனாவையே மணந்து கொண்டால் என்ன? எப்படியும் சட்டப்பூர்வமான மனைவி நான்தானே, என்ற குரல் எழவும் தோய்ந்து போனாள் மலர்மதி. இறுதியில் தன்னையும் மாற்றி விட்டானே. என்ற கோபத்தோடு, அவள் திமிரி எழுவதற்குள் அவனே விடுவித்தான்.

 

“இப்போது புரிகிறதா மதி.” அவன் குரலில் ஒரு கிரக்கமிருந்தது.இதழ்கிடையில் ஒரு புன்னகையும்.

 

“நன்றாக புரிகிறது. அன்று வீணாவின் இதழ்களில் காயத்தை பார்த்தேன். அது எப்படி நேர்ந்ததென்று இப்போது புரிகிறது. இன்னமும் சற்று நேரம் நீங்கள் இங்கிருந்தால், அவளுக்கு அன்று உடையை சீர் செய்ய நானிருந்தேன். இன்று எனக்கு யார் இருக்கிறார்கள். உங்கள் பலத்தைக் கொண்டு இதைத்தவிர வேறு என்னதான் உங்களால் செய்ய முடியும்.” மீண்டும் கண் கலங்கினாள்.

 

“ச்சே…” ஆத்திரத்துடன் எழுந்து கொண்டான்.

 

“நீ இப்படி தரக்குறைவாய் சிந்திப்பாய் என்று நான் நினைக்கவில்லை. இருப்பினும் விளக்கமளிக்க வேண்டியவன் நான் என்பதால் பேசுகிறேன். அன்று லீ மெரிடியனில் நடந்தது ஒரு நாடகம். யாரோ அதனை திரித்து உன்னிடம் கூறியிருக்கிறார்கள்.”

 

ஒற்றை புருவம் மேல் எழ அவனை ஏளனமாய் பார்த்தவள் “நான்காவது டேபிளில் இருந்தது நான். நீங்கள் வீணாவிடம் பேசியது எல்லாம், என் செவி வாயிலாக நானே கேட்டேன். நானே பார்த்தேன். அந்த இரண்டாவது மாடி தனியறைக்கு நீங்கள் லிப்டில் செல்வது வரை…” மேலே பேச முடியாமல் விம்மி அழுதாள்.

 

“ஐயோ! கண்மணி வேண்டாம், எதனை உனக்குத் தெரியாமல் முடிக்க வேண்டுமென்று நான் நினைத்தேனோ, அதனை நீ பார்க்கும்படியாகிவிட்டதா?” தன்யனின் கண்களும் கலங்கின.

 

“அதுதான் குட்டு உடைந்து விட்டதே. நீங்கள் போகலாம்.” ஏதோ கூற முயன்ற தன்யனை வெட்டி, “நீங்கள் போகவில்லை என்றால், எனது உயிர் போய் விடும்.” என்றாள் குரலில் உறுதியோடு. மறு பேச்சின்றி வெளியேறினான் தன்யன்.

 

தனக்குள்ளேயே குமுறிக் கொண்டிருந்தாள் மலர்மதி. எல்லாம் முடிந்தது. இனி என்ன என்று நினைக்கும் பொழுதே அழுகை வந்தது அவளுக்கு, எனக்கே விலை பேசியவர்தானே இவர். இவரிடம் என் மனம் ஏன் சாய வேண்டும்? எல்லாம் விதி!
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sumithra Ramalingam says:

    Arumaiyana story. Eduvum theera visàrippadu nalladunnu puriyum paďi azhaga solli irukkieenga

error: Content is protected !!