Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மலர்மதி 3 – 4

அத்தியாயம் – 3

நாட்கள் இப்படியாக இறக்கை கட்டிக் கொண்டு பறந்தது. கல்லூரி முடித்ததும் வேலை தேட வேண்டும் என்கின்ற மிகப்பெரிய பொறுப்பு அவள் முன் மருட்டியது.வெறும் பி.காம். இதற்கு என்ன வேலை கிடைக்கும். மேலே படிக்க அவளுக்கு பயமாகக் கூட இருந்தது. மொத்த பணமும் கரைந்து விட்டால்? அதைவிட ஒரு வேலையை தேடிக் கொண்டு பின் கரஸ்சில் படித்துக் கொள்ளலாம். அவள் அதிக கம்பெனிப்படிகள் ஏறி இறங்க வேண்டியிருந்தது. பல தோல்விகளை சந்தித்த பின், துவண்டு விடாமல் போராடிப் பெற்றது தான் அந்த “ஸ்ரீநிவா ஸ்டீல்சின்” அக்கௌண்டண்ட் பதவி. அதிலும் அவர்களது முப்பது கிளைகள் தமிழகமெங்கும் பரவியிருக்க, அதற்கான தனி கணக்கு அலுவலகத்தல் தான் கணக்கு வழக்குகள் பார்க்கப்பட்டது. அதில் மலர்மதியோடு சேர்த்து மொத்தம் மூன்று அக்கௌண்டன்ஸ் அவர்களுக்கு தலைமையாய் ஒரு சி.ஏ. படித்தவர்.

 

மலர்மதி கத்துக்குட்டியாக இருந்த பொழுதும் அவளது சூடிகை தலைமைப் பொறுப்பு வகிக்கும் சி.ஏ.வுக்கு நிரம்பவும் பிடிக்கும். அதிகமாக சந்தேகம் கேட்பவளும் அவளே, அதிகமான தீர்வுகளை அவளே கண்டு கொண்டு அது பற்றி அவருடன் கலந்துரையாடவும் தயங்க மாட்டாள். மற்ற அக்கௌண்ட்ன்ஸ், சி.ஏ, படித்து விட்டதாலோ அல்லது வயதின் காரணமாகவோ லேசான நடுக்கமும், ஒதுக்கமும் கொண்டு பழகும் பொழுது, இவள் மட்டும் உரிமையோடு சார், சார் என்று சிறு குழந்தை போல் இவரிடம் ஆயிரம் பேசுவாள். வாஞ்சிநாதனுக்கு ஏதோ புது உற்சாகம் பிறந்தது போல் இருந்தது. அவரது அறுபதை நெருங்கிக் கொண்டிருந்த வயது சட்டென்று நாற்பதை தொட்டாற் போல் உணர்ந்தார்.

 

தனக்கொரு பெண் இருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாள் என்பது அவரது அசைக்க முடியாத நம்பிக்கை. ஆனால் என்ன செய்வது, அவருக்குத்தான் கடவுள் அந்த பாக்கியத்தை தரவில்லையே. இது குறை. அது தான் குறை என்று எடுக்காத மருத்துவப் பரிசோதனையும் இல்லை. போகாத கோயிலுமில்லை, அளிக்காத கொடையும் இல்லை. இருப்பினும் வாரிசு என்ற வார்த்தையே இல்லாமல் போய்விட்டது.

 

பின்பு, மலர்மதி தாய் தந்தையை இழந்தவள் என்று தெரிந்த பொழுது, மேலும் உருகிவிட்டார். அதன் பிறகு வெளிப்படையாகவே, “நீ என் மகள் போல” என்று அவளோடு உறவு கொண்டாடவும் விரும்பினார். முத்தாய்ப்பாய் மதிம்மா என்ற அழைப்பு வேறு… அப்படி வாஞ்சிநாதன் அழைத்தாலே மலர்மதி கண்கள் நிறைந்துவிடும். அவளது தந்தை வாய் நிறைய மதிம்மா என்று தானே அழைப்பார். அதுவும் அலுவலகம் முடிந்து அவர் வரும் பொழுது செருப்பைக்கூட கழற்றாமல் மதிம்மா… மதிம்மா… என்ற கூக்குரலோட வீட்டினுள் நுழைவார். அவர் வருமுன் மலர்மதி அவரை எதிர்கொள்ள வேண்டும். இல்லையேல் அவரது முகம் மாறிவிடும்… அப்படி ஒரு அன்பு.

 

அதேபோல் ஒரு அன்பு பிரவாகம்தான் வாஞ்சிநாதனுக்கு மலர்மதியிடம் உருவானது. அவளுக்கும் அதுபோலவே அன்பு பெருக, அதன் விளைவாக வாஞ்சிநாதனின் வீடுவரை அவளால் உரிமையுடன் செல்ல முடிந்தது. அவரது மனைவி கோமதியும் அன்பின் மறு உரு… மலர்மதியின் அம்மா என்ற வார்த்தையை கேட்டாலே அவளை கட்டிப்பிடித்து உச்சி முகர்வாள். நல்ல நாள் கிழமையில் இவளுக்கு புத்தாடை வாங்கித் தருவது அவர்களின் பழக்கங்களில் ஒன்றானது.

 

மலர்மதிக்கு இது பிடிக்கும். அது பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து சமைத்து கணவரிடம் கொடுத்தனுப்புவதும் பழக்கமாகிவிட்டது. அவரும் தன் பங்கிற்கு அவள் சாப்பிடுவதைப் பார்த்து திருப்தியுருவார். முதலில் அவர் உணவு கொடுக்கும் பொழுது, அதனை ஏற்க மிகவும் தயங்கினாள் தான். சிலமுறை வெளிப்படையாக மறுத்தும் இருக்கிறாள். உடன் வேலை செய்பவர்கள் தவறாக எண்ணிவிட்டால் தலையை காக்காபிடித்ததாக கதை கிளப்பினால், அதனை அவளால் தாங்க முடியாது. ஆனால்,

 

“எங்கள் மகளாக நினைத்து கொடுக்கிறோம், நீ நிராகரிப்பது கஷ்டமாக இருக்கறது.’’

 

என்று வாஞ்சிநாதன் கரகரப்பான குரலில் கூறியது, மற்றது காற்றில் பறந்தே போய்விட்டது. கண்ணீருடன் கோமதியம்மாளின் அன்பால் கிடைத்த உணவை சுவைக்கலானாள். எப்போதும் ஹாஸ்டல் சாப்பாட்டில் மலர்மதிக்கு அதிகம் பற்று கிடையாதுதான். ஏதோ பசி அடங்குவதற்காக சாப்பாடு என்கிற ரீதியில்தான் அவள் சாப்பிடுவது. சில நேரம் வயிற்றைத் திறந்து சாப்பாட்டை கொட்டிக் கொண்டால் தேவலை என்று தோன்றும். நாவால் சுவைத்து விட்டால் பிறகு நிச்சயம் வாந்தி தான். என்பது போலவும் பலமுறை தோன்றியிருக்கிறது.

 

ஆனால் அதற்காக ஹாஸ்டல் மாறவும் முடியாதுதான். இதை விடவும் மலிவாக இந்த சென்னையில் கிடைப்பது கஷ்டம்தான். அதனாலேயே, ஏதோ தின்றேன் என்று பெயர் பண்ணுவதைப் போல்தான் எப்போதும் அவள் சாப்பிடுவது. அதன் விளைவு ஒட்டிய கன்னம், ஒளியிழந்த கண்கள். இப்போதானால் மதிய நேரமேனும் வீட்டுச்சாப்பாட்டை… இல்லை இல்லை அம்மாவின் அன்பால் உருவான உணவை ருசிக்கையில் உண்மையாகவே சற்று பூசினாற் போலவும், பளபளப்பாகவும் மெருகேறி விட்டிருந்தாள். குறிப்பாக ஞாயிறன்று மலர்மதி வாஞ்சிநாதன் வீட்டில்தான் இருப்பாள். மூவரும் அமர்ந்து ஏதேனும் படம் பார்ப்பார்கள். சீட்டு விளையாடுவார்கள். ஒன்றாக சமைப்பார்கள். பேசிக் கொண்டே சமைத்ததை உண்ணுவார்கள். அன்று மூன்று வேளை உணவும் அவளுக்கு கோமதி கையால்தான். வெவ்வேறு காரணங்களால் ஒளியிழந்த ஆறு கண்களும், மூன்று மனங்களும் மீண்டும் ஒளிப் பெற்று மின்னின.

 

தங்களுடனே தங்கிவிடுமாறு எத்தனையோ முறை வாஞ்சிநாதனும் கோமதியும் அவளை வற்புறுத்தி கேட்டுக் கொண்ட போதிலும், அவள் சிறிதும்செவி சாய்க்கவில்லை. எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவள் ஒப்பவில்லை. ஆனாலும் அவளோடான ஞாயிறேனும் வாய்த்ததே என்று இருவரும் சந்தோஷப்பட்டுக் கொண்டார்கள். நாட்கள் சந்தோஷமாக நகர்ந்தன.

 

அத்தியாயம் – 4

கொஞ்ச நாளாகவே மலர்மதியிடம் பல மாற்றங்கள் நிகழ்வதை வீணா கணக்கிட்டாள். எப்போதும் சோகம் நிரம்பிய பார்வை, ஒட்டிய கன்னங்கள். எலும்புகளை போர்த்திய தோல், விட்டத்தை வெறித்தபடி படுத்திருப்பது என்று மிகமிக சோகமான காட்சிகளுக்கு மட்டுமே பொருந்துவாள் என்று அவளை கணக்கிட்டிருந்த வீணாவிற்கு, கொஞ்ச நாட்களாக அவளது பூசினாற் போன்ற தேகமும், குழைந்த கன்னங்களும் மலர்ந்த கண்களும், சிரிக்கும் உதடுகளும் புதிதாகத் தெரிந்தது. வந்தபோது இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும், மிகப் பெரிய மாறுபாடு இருந்தது. மாறுபாடு என்ன மாறுபாடு, அழகு தேவதையாய் ஜொலித்தாள். அதுதான் நிஜம்.

 

நிறத்தில் மலர்மதியை விட வீணா தான் வெண்மையாக இருப்பாள். ஆனால் முகத்தில் களை இருக்காது. பார்லரில் இருக்கும் அத்தனை அழகு கையறாக்களையும்செய்து தன்னை அழகாகக் காட்டிக் கொள்வதில் அவளுக்கு எப்போதுமே ஒரு ஆர்வம் உண்டு.

 

மலர்மதி மாநிறம்தான், ஆனால் களையான முகம். சிற்பி உளி கொண்டு செதுக்கினாற்போல ஓர் முக அமைப்பு. இப்போது மனம் முழுவதும் நிரம்பியிருந்த சந்தோஷத்தின் அடையாளமாக மெருகேறியிருந்த மேனி. இதையெல்லாம் காண்கையில் வீணாவினுள் பொறாமைத் தீ கனன்று கொண்டே இருந்தது. அவளது இந்தத் தீ எரிமலையாவது போல் ஓர் சம்பவமும் நடந்தது.
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Yuvaquen says:

    Nive update

error: Content is protected !!