Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 20

அத்தியாயம் – 20

ஒரே வாரத்தில் எளிமையாக என்றாலும் திருத்தமாக, திருமண ஏற்பாடுகளைச் செய்திருந்தார் வீரராகவன். பந்தல் போட்டு வாழைமரம் கட்டி, பெரிய ஒலிபெருக்கியில் திருமணச் சம்மந்தமான பாடல்களை ஒலிக்க விட்டிருந்தார்கள். வரவேற்பில் அழகான இளம்பெண்கள் பன்னீர் தெளித்து… கற்கண்டு, ரோஜாப்பு, சந்தனம் கொடுத்து வருபவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள். பட்டுப்பாவாடை, சட்டைப் போட்ட நண்டு சிண்டுகள் மணபெண்ணுக்குச் செய்யப்பட்ட அத்தனை அலங்காரங்களும் தங்களுக்கும் வேண்டும் என்று அடம் செய்து உதட்டில் சாயமும், கண்ணில் மையும், தலை நிறையப் பூவுமாக… இங்கும் அங்கும் ஓடியாடிக் கொண்டிருந்தார்கள். நாதஸ்வரமும் தவிலும் முழங்கியது… இளவட்டங்களின் கேலியும் கிண்டலும் தூள் பறந்தது… கார்முகிலன் முகத்தில் புன்னகையுடன் மணவறையில் மணமகளின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

“பெண்ணை அழைச்சுண்டு வாங்கோ…” ஐயர் குரல் கொடுத்தார்.

மத்திய வயதிலிருந்த ஒரு பெண், மணமகளின் கையைப் பிடித்து மணவறைக்கு அழைத்துவர… அசையும் ஓவியமாய்… நடக்கும் சிற்பமாய்… சிரிக்கும் சிவப்பு ரோஜாவாய்… அழகின் மொத்த உருவமாய் மதுமதி மணவறையை அடைந்து கார்முகிலனுக்கு அருகில் அமர்ந்தாள்.

அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு… மதுமதிக்குள் ஒரு நடுக்கம். ஐயர் சொல்லிக் கொடுத்த மந்திரத்தை அவர்களுடைய வாய்தான் உச்சரித்தது… மனமோ பொக்கிஷமான அந்தத் தருணத்தின் ஒவ்வொரு கணத்தையும் உள்வாங்கிக் கொண்டிருந்தது…

“இதுதானா… இதுதானா…
எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா…!
இவன் தானா… இவன் தானா…
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா…!”

மதுமதியின் மனம் ரகசியமாகப் பாடியது. அவள் தன்னருகில் கம்பீரமாக, ஒருவித கர்வத்துடன் தலைநிமிர்ந்து அமர்ந்திருக்கும் கார்முகிலனின் முகத்தைப் பார்க்காதது போல் கள்ளப்பார்வைப் பார்த்தாள்.

அவள் பார்த்ததை அவனும் பார்த்தான். இருஜோடிக் விழிகளிலிருந்து வெளிப்பட்ட மின்னல் ஒன்றோடு ஒன்று தாக்கி… அதன் அதிர்வலை இருவருக்குள்ளும் பாய்ந்தது. அவள் முகம்சிவக்க இன்னும் குனிந்து கொண்டாள். அவன் கர்வத்துடன் இன்னும் நிமிர்ந்து அமர்ந்தான்.

“இந்தாங்கோ… பொண்ணுக் கழுத்துல தாலியைக் கட்டுங்கோ…” என்று ஐயர் திருமாங்கல்யத்தைக் கையில் எடுத்துக் கொடுக்க… அதை வாங்கி,

“இனி நீதான் என் வாழ்க்கை…” என்று தெளிவாக அவள் காதோரம் கிசுகிசுத்தபடி கழுத்தில் அணிவித்தான்.

வீரராராகவன், கௌசல்யா, தர்மராஜ் ஆகிய மூவரின் கண்களும் ஆனந்த கண்ணீரை உதிர்த்தன. அதே தேனியில் தன் படுக்கையறையில் துவண்டு போய்ப் படுத்திருந்த நீலவேணியின் கண்களும் கண்ணீரை அருவி போல் கொட்டிக் கொண்டிருந்தன. பொறாமையா… கோபமா… ஏமாற்றமா… எது அவளைத் தாக்கியது என்று தெரியவில்லை. அல்லது அந்த மூன்றுமே தாக்கிவிட்டதோ என்னவோ… அவள் வலிதாங்க முடியாமல் துடித்தாள். அலைபாய்ந்த மனதை அடக்கமுடியாமல் தவித்தாள். தற்கொலை செய்துகொண்டு செத்துவிடுவோமா… எதற்கு இந்த வேதனையை அனுபவிக்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிவு வரவில்லை. மனமும் உடலும் பலகீனப்பட்டு எழுந்திருக்க முடியாமல் படுக்கையில் கிடந்தாள்.

‘ஏன் நீலா வரவில்லை…’ என்று அவ்வப்போது கார்முகிலன் நினைத்தாலும், அவன் மனம் அந்தப் பிரச்னையைப் பற்றிச் சிந்திப்பதற்கு முதலிடம் கொடுக்கவில்லை… அவன் மனம் வேறு ஒரு மயக்கத்தில் இருந்தது.

அவள் கையைப் பிடித்துக் கொண்டு அரசாணியைச் சுற்றி வந்தது, குடத்திற்குள் மோதிரம் எடுக்கும் சாக்கில் சில்மிஷம் செய்தது, நண்பர்கள் கொடுத்த ஒரேயொரு குளிர்பானத்தை இருவரும் இரண்டு ஸ்ட்ராவில் குடித்தது, பந்தியில் அவன் அவளுக்கு இனிப்பு ஊட்டியது, அவள் அவனுக்கு இனிப்பு ஊட்டியது, புகைப்படம் எடுக்கும் சாக்கில் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டு நின்றது… அனைத்தையும் கார்முகிலன் மறுக்காமல் இன்முகத்துடன் அனுபவித்தான்.

நேரம் ஓடிவிட்டது… மாலை நெருங்கிவிட்டது… குடும்பத்தாரையும் மிக நெருங்கிய உறவினர்களையும் தவிர, மற்றவர்கள் கிளம்பிவிட்டார்கள். மணமக்களும் புறப்படத் தயாரானார்கள்.

கார்முகிலனை நெருங்க அச்சப்பட்ட வீரராகவன், தர்மராஜ்ஜிடம் அவனிடம் பேசும் பொறுப்பை ஒப்படைத்தார்.

“முகிலா… கார் ரெடியா இருக்குப்பா… நல்லநேரம் இருக்கும்போதே நீங்க ரெண்டு பெரும் கிளம்புங்க…”

“ஓகே சார்…” என்றபடி நாற்காலியிலிருந்து எழுந்தவன், மதுமதியிடம் கண்களால் கிளம்பலாம் என்று சமிஞ்சை செய்தான். அவளும் எழுந்து கொண்டாள்.

“முகிலா… முதல்ல பெண் வீட்டுக்குப் போங்க… அங்க போய்ப் பால்பழம் சாப்பிட்டுவிட்டு லக்ஷ்மிபுரம் வந்தால் போதும்…” என்றார் தர்மராஜ்.

கார்முகிலனின் முகம் சட்டென மாறியது…

“அங்கேயா… அங்க எதுக்கு நாங்க போகணும்…?” என்றான் கோபத்தை உள்ளடக்கியபடி.

“இது என்னப்பா கேள்வி… கல்யாணம் முடிந்து முதலில் பெண் வீட்டிற்குப் போய்விட்டு தான் மாப்பிள்ளை வீட்டிற்கு வரணும்… கிளம்பு… கிளம்பு… நேரமாகுதுப் பார்… நல்லநேரம் முடிந்துவிடப் போகுது பார்…” என்று அவனை விரட்டினார். அவனுக்கு நின்று பேச நேரம் கொடுத்தால், அவன் எதையாவது பேசி பூதத்தைக் கிளப்பிவிடுவான் என்று நினைத்தார்.

அவன் அசரவில்லை. அவர் எவ்வளவுதான் அவசரத்தைக் காட்டி அவனைப் பரபரப்பாக்க முயன்றாலும் அவன் நிதானமாகக் கல்லுப்பிள்ளையார் போல அவரை முறைத்துக் கொண்டு நின்றான்.

“என்னடா…? என் முகத்துல என்ன இருக்குன்னு இப்படிப் பார்த்துக்கிட்டு இருக்க… கிளம்பு… நேரமாகுதுப் பார்…” என்றார்.

அவன் பதில் பேசாமல் காரில் சென்று அமர்ந்தான். அவளும் அவனைத் தொடர்ந்தாள். டிரைவர் காரைக் கிளப்பினான்.

‘ஹப்பாடா… எதுவும் முரண்டு பிடிக்காமல் போய்விட்டானே… நல்லது…’ என்று நினைத்துக் கொண்டார். கைப்பேசியை எடுத்து வீரராகவனுக்குச் செய்தி தெரிவித்தார்.

கௌசல்யாவும் வீரராகவனும் மணமக்களை வரவேற்க முன்னதாகவே சென்றுவிட்டார்கள். வீரராகவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ‘திருமணத்திற்குப் பிறகு தொடர்பே இருக்கக் கூடாது என்று கண்டிஷன் போட்டவன்… பாலும் பழமும் சாப்பிட எப்படி வருவான்… கட்டாயம் முரண்டு பிடிப்பான். எப்படிச் சமாளிக்கப் போகிறோம்… உறவினர்களின் கேலிக்கு ஆளாகிவிடுவோமோ…’ என்று பயந்து கொண்டிருந்தார். ஆனால் நல்லநேரம் தர்மராஜ் நயமாக அவனிடம் பேசி, அனுப்பி வைத்துவிட்டார்… அவர் உற்சாகத்துடன் மணமக்களை வரவேற்க வேண்டிய ஏற்பாடுகள் சரியாக நடக்கிறதா என்பதைப் பற்றி உறவுக்காரப் பெண்மணியிடம் விசாரணையைத் துவங்கினார்.

நேரம் கடந்துகொண்டே இருந்தது… மணமக்கள் வந்தபாடில்லை. அவர் மணிக்கட்டைத் திருப்பி நொடிக்கொரு முறை மணியைப் பார்ப்பதும்… பின் ரோட்டைப் பார்ப்பதுமாக நேரத்தைக் கடத்திக் கொண்டிருந்தார். ஒரு மணிநேரம் கழிந்தும் மணமக்கள் வந்தபாடில்லை…

“பொண்ணு மாப்பிள்ளை கிளம்பிட்டாங்களா கௌசல்யா…? என்ன இன்னமும் காணோம்…?” என்று பெண்கள் கௌசல்யாவைத் துளைக்க ஆரம்பித்தார்கள்.

‘இங்க இருக்கற தேனியிலிருந்து வர்றதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்…! என்ன ஆச்சு…?” வீரராகவன் பதட்டமானார்.

கௌசல்யா வீட்டிற்குள்ளிருந்து வெளியே வந்தாள். வீரராகவனை நெருங்கியவள், எங்கோ பார்த்தபடி, யாரிடமோ கேட்பது போல் கேட்டாள்…

“எங்க இன்னும் அவங்களைக் காணோம்… கிளம்பிட்டாங்களா…?”

“அப்பவே கிளம்பிவிட்டதா தர்மராஜ் சார் சொன்னாரு… இன்னமும் காணோமே…!” என்றார் குழப்பத்துடன்.

“போன் பண்ணி கேட்க வேண்டியதுதானே…” என்றாள்.

“இதோ…” என்று சொன்னவர் உடனே தர்மராஜ்ஜைத் தொடர்பு கொண்டார்.

“என்ன சொல்றீங்க சார்… இன்னும் அவங்க வரலையா… அவங்க கிளம்பி ஒரு மணிநேரத்துக்கு மேல ஆச்சே… இந்நேரம் அங்க வந்திருக்கணுமே…!” என்றார் தர்மராஜ்.

“தெரியலையே சார்… இன்னும் அவங்க வரல… எதுக்கும் நீங்க முகிலனுக்கு ஒரு தடவ ஃபோன் செய்து பாருங்க. எங்க இருக்காங்கன்னு கேளுங்க… ஏதாவது பிரச்சனைன்னா நான் இங்கிருந்து வேற கார் அனுப்புறேன். உடனே பேசிட்டு எனக்குத் தகவல் சொல்லுங்க…” என்றார் படபடப்பு குறையாமலே.

“சரி சார்… நான் உடனே பேசிட்டு உங்களுக்குக் கூப்பிடறேன்…” என்று சொல்லிவிட்டு கார்முகிலனின் கைப்பேசிக்கு அழைத்தார் தர்மராஜ்.

# # #

மணமக்கள் சென்று கொண்டிருந்த காரை டிரைவர் மிதமான வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான்.

“தம்பி… காரை லக்ஷ்மிபுரம் ரோட்டில் விடு…” என்றான் கார்முகிலன். டிரைவர் கொஞ்சம் வியப்புடன் கண்ணாடி வழியாக கார்முகிலனைப் பார்த்தான். மதுமதிக்கும் வியப்பாகத்தான் இருந்தது.

‘தர்மராஜ் சார்கிட்ட மறுப்புச் சொல்லாமல் வந்தவன் இப்படிச் செய்கிறானே…’ என்று நினைத்தபடி அவனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள்…

“மாமா… நமக்காக அங்க காத்துக் கொண்டு இருப்பாங்களே…!”

இப்போது அவன் அவளை வியப்புடன் பார்த்தான். திருமணத்திற்குப் பிறகு இப்போதுதான் அவனுடன் முதல்முறையாக பேசுகிறாள். அவள் அவனிடம் பேசிய முதல் வார்த்தை ‘மாமா…’.

அவளுடைய ‘மாமா’ என்ற அழைப்பு அவனை என்னவோ செய்தது. ‘நமக்கு அக்காவும் இல்லை… இவள் நமக்கு அக்காள் மகளும் இல்லை… பிறகு ஏன் இவள் நம்மை மாமா என்று கூப்பிட வேண்டும்…’ என்று அவன் பிடிவாதமாக நினைத்துக் கொண்டாலும், தேன் தடவிய குரலில் கொஞ்சிக்கொண்டு ‘மாமா’ என்று அவள் அழைக்கும்போது அதைத் தடுக்க அவனுக்கு முடியவில்லை.

“சார்… காம்காபட்டிக்குதானே உங்களை அழைச்சுக்கிட்டு வரச் சொன்னாங்க…” என்றான் டிரைவர் மதுமதியைத் தொடர்ந்து…

“நீ லக்ஷ்மிபுரம் ரோட்டில் காரை விடு…” என்றான் அவன் அழுத்தமாக. அவன் குரலில் இருந்த அழுத்தம் டிரைவரை அடுத்தக் கேள்வி கேட்கவிடாமல் தடுத்தது… மதுமதியையும்தான்.

கார் ஓர் அழகிய வீட்டிற்கு முன் சென்று நின்றது. கார்முகிலனும் மதுமதியும் காரிலிருந்து இறங்கினார்கள். மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்ட கார் புது வீட்டிற்கு முன் வந்து நின்றதும், பக்கத்து வீட்டுப்பெண் எட்டிப் பார்த்தாள். அவள் எதிர்பார்த்தபடியே மணமக்கள் தான் வந்திருந்தார்கள். அவள் அவசரமாக ஓடிவந்தாள்.

“தம்பி… தம்பி… என்ன நேரா இங்க வந்துட்டீங்க… பொண்ணு வீட்டுக்குப் போகலையா…?” என்றாள்.

“இல்லை பெரியம்மா…” என்றான் கார்முகிலன்.

“சரி… சரி… கொஞ்சம் இப்படி நில்லுங்க… நான் போயி ஆரத்திக் கரைச்சு எடுத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு நிற்காமல் உள்ளே ஓடி, ஆரத்தி கரைத்து எடுத்துவந்து மணமக்களுக்குத் திருஷ்டிக் கழித்து உள்ளே வரவேற்றாள். அதற்குள் இன்னும் பலர் அங்குக் கூடி மணமக்களை அவர்கள் வீட்டிலேயே உபசரித்தார்கள்.

மதுமதி வீட்டைக் கண்களால் அளந்தாள். பெரிய மாளிகை போல் இல்லாவிட்டாலும் அழகான வசதியான வீடுதான்… வீட்டில் ஒரு பக்கத்துச் சுவற்றில் பர்வதத்தின் பெரிய படம் மாட்டப்பட்டிருந்தது. மற்றொருபக்கம்…

‘புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே…
அது இன்னொரு முறை உன்னை அவமானப்படாமல் காப்பாற்றும்…
-ஹிட்லர்’

என்ற வாசகம் பெரிதாக லேமினேட் செய்யப்பட்டு மாட்டப்பட்டிருந்தது. மதுமதிக்கு நெருடலாக இருந்தது. ‘மாமா அப்பா அம்மாவை மன்னிக்கவே மாட்டாரோ…’ என்கிற பயம் எட்டிப் பார்த்தது.

மணமக்கள் இருவரையும் பூஜையறைக்கு அழைத்துச் சென்று மதுமதியை விளக்கேற்ற சொன்னாள் ஒரு மூத்த பெண்மணி. அவர்கள் இருவரும் கண்களை மூடிக் கடவுளைப் பிராத்தனைச் செய்து கொண்டார்கள்.

பிறகு பாலும் பழமும் கொடுத்து மாப்பிள்ளையைக் குடிக்கச் சொல்லி… அவன் பாதிக் குடித்ததும்… அதே டம்ளரை பெண்ணிடம் கொடுக்கச் சொன்னார்கள். அவள் வெட்கத்துடன் வாங்கிக் கொண்டாள். சுற்றியிருந்த கூட்டம் அந்தத் தருணத்திற்காகவே காத்திருந்தார் போல் கேலி கிண்டலில் குதித்தார்கள். மதுமதிக்கும் கார்முகிலனுக்கும் மனநிலை இயல்பானது. மகிழ்ச்சியுடன் அவர்களின் கிண்டலை ரசித்தார்கள்.

சிறிதுநேரத்தில் கூட்டம் கொஞ்சம் கலைந்தது. அந்த நேரம் கார்முகிலனின் கைப்பேசி அலறியது.

“ஹலோ…”

“ஹலோ… எங்கடா இருக்க…? நீ இன்னும் அங்க போயி சேரலையாம்…” என்றார் தர்மராஜ்.

“எங்க…?” என்றான் கார்முகிலன்.

“எங்கையா…? உன்னை எங்கடா நான் போகச் சொன்னேன்…?” என்றார் பெரியவர்.

அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் “சார்… நாங்க லக்ஷ்மிபுரத்தில் இருக்கோம்… நீங்களும் இங்க வந்திடுங்க. காம்காபட்டிக்குப் போக வேண்டாம் என்றான்.”

“அடேய்… நான் என்ன சொன்னா… நீ என்னடா செஞ்சு வச்சிருக்க…? அங்க போக மாட்டேன்னு இங்கேயே சொல்லிவிட்டுப் போயிருக்க வேண்டியது தானே… நான் வேற அவங்ககிட்ட நீ அங்க வர்றதா சொல்லிட்டேன். அவங்க காத்திருந்து காத்திருந்து ஏமாந்து போய்ட்டாங்களேடா…” என்றார் வருத்தத்துடன்.

“அதனால் என்ன… நானும் ஒருநாள் அவங்களுக்காகக் காத்திருந்து காத்திருந்து ஏமாந்தவன் தானே…” என்றான் அலட்டிக் கொள்ளாமல்.

தர்மராஜ் எரிச்சலானார் “சரி வைடா போனை… அங்க வந்து உன்னைப் பேசிக்கிறேன்…” என்று சொல்லிவிட்டுக் கைப்பேசியை அணைத்தார். மிகுந்த சங்கடத்துடன் வீரராகவனுக்குத் தகவல் சொன்னார்.

கார்முகிலன் இப்படிச் செய்வான் என்று வீரராகவன் எதிர்பார்க்கவில்லை. முடியாது என்றால் முடியாது என்று நேரடியாகச் சொல்லிவிடுவான்… இப்படி வருகிறேன் என்று சொல்லாமல் சொல்லி ஏமாற்றுவான் என்று நினைக்கவில்லை. அதனால் அவர் மிகவும் ஏமாற்றமடைந்து வருந்தினார். அதோடு வீட்டில் கூடியிருக்கும் உறவினர்களின் கேள்விகளைச் சமாளிப்பது பெரும் தலைவலியாக இருந்தது. கெளசல்யாவிற்கும் அதே தலைவலி தான். அவர்களிருவரும் ‘இன்னும் என்னென்ன காத்திருக்கிறதோ…!’ என்று நினைத்துக் கதிகலங்கினார்கள்.
Comments are closed here.

error: Content is protected !!