Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 25

அத்தியாயம் – 25

அதிகாலையில் நீலவேணி அழைக்கிறாள் என்றதுமே… எதுவோ சரியில்லை என்று கார்முகிலன் மனதிற்குப் பட்டது. அதேபோல் அவன் கைப்பேசியைக் காதில் வைத்துக் குரல் கொடுத்ததும்… நீலவேணி,

“முகிலன்… முகிலன்…” என்று அழ ஆரம்பித்துவிட்டாள்.

“நீலா… என்ன ஆச்சு…?”

“முகிலன்… பாட்டி… பாட்டி…”

“பட்டி…? பாட்டிக்கு என்ன ஆச்சு நீலா?” அவனுக்கு அந்தப் பாட்டியைப் பிடிக்காது என்றாலும் நீலாவின் அழுகை அவனைப் பதட்டப்பட வைத்தது.

“பாட்டி… போ… போய்ட்டாங்க… என்னை விட்டுட்டுப் போய்ட்டாங்க… முகிலன் எனக்குப் பயமா இருக்கே…” அவள் சத்தமாக வாய்விட்டு அழுதாள்.

“என்ன…! என்ன சொல்ற நீ…?” கார்முகிலன் பலமாக அதிர்ந்தான்.

“ஐயோ… நான் என்ன செய்வேன்னு தெரியலையே… முகிலன் எனக்கு ரொம்பப் பயமா இருக்கே… ஐயோ… பாட்டி…” அவள் புலம்பினாள்.

“சரி… சரி… பயப்படாத… உன் பக்கத்துல இப்போ யார் இருக்காங்க…?” என்று கேட்டபடி, அவளுடன் பேசிக் கொண்டே அவசரமாகச் சட்டை பேன்ட்டை மாட்டிக்கொண்டான்.

“யாருமே இல்லையே… ஐயோ பாட்டி…” அவள் அழுதுகொண்டே அவனுக்குப் பதில் சொன்னாள்.

அவன் நீலவேணியுடன் பேசிக்கொண்டே படுக்கையறையை எட்டிப் பார்த்தான். மதுமதி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளைத் தொந்தரவு செய்யாமல் வெளியே வந்து கதவைப் பூட்டினான். சாவியை ஜன்னல் வழியாக உள்ளே போட்டுவிட்டு, வண்டியைக் கிளப்பிக்கொண்டு தேனிக்குப் பறந்தான்.

கார்முகிலன் தேனியை அடைந்தபோது மணி நான்கு முப்பது. அதிவேகமாக வண்டியைச் செலுத்தினான். நீலவேணியின் வீட்டிற்கு முன் கூட்டம் கூடியிருந்தது. என்னதான் வேதவல்லி பாட்டியையும், நீலவேணியையும் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களுக்குப் பிடிக்காது என்றாலும்… ஒரு மரணம் ஏற்பட்டுவிட்டது என்றதும் மனிதாபிமான அடிப்படையில் சிலர் அங்குக் கூடியிருந்தார்கள்.

உயிரற்ற உடல் மாலை போடப்பட்டு, நடு ஹாலில் படுக்க வைக்கப்பட்டிருந்தது. தலைக்கு மேல் காமாட்சி விளக்கு எரிந்து கொண்டிருந்தது. ஊதுபத்தியும், ஜவ்வாதும், ரோஜாப்பூ மாலையும் துக்க வீட்டின் மணத்தைப் பரப்பிக் கொண்டிருந்தது.

கார்முகிலனைக் கண்டதும் பாட்டியின் உடலுக்கு அருகில் அமர்ந்து அழுது கொண்டிருந்த நீலவேணி எழுந்து ஓடிவந்தாள். கார்முகிலனின் சட்டையைப் பிடித்து அவன் நெஞ்சில் சாய்ந்து அழுதாள். அந்தக் காட்சி அங்குக் கூடியிருந்த பெண்களை முகம் சுளிக்க வைத்தது. அவர்களைப் பொறுத்தவரை, கார்முகிலன் ஓர் அந்நிய ஆடவன். அவன் மீது இவள் விழுந்து அழுவது… அவர்களை எரிச்சல் கொள்ள வைத்தது. கார்முகிலனை அவர்கள் பார்க்கும் பார்வையிலும் சற்று மரியாதைக் குறைந்தது.

அவன் சங்கடத்துடன் நீலவேணியை விலக்கி நிறுத்தினான். அவள் கையை ஒருமுறை அழுத்தி அவளுக்கு ஆறுதல் கொடுத்துவிட்டு,

“என்ன ஆச்சு…? திடீர்னு எப்படி…?” என்று கேட்டான்.

“நைட் நல்லாத்தான் சாப்பிட்டுவிட்டுப் படுத்தாங்க… பாதி ராத்திரில என்னை எழுப்பி நெஞ்சு வலிக்குதுன்னு சொன்னாங்க… எனக்கு என்ன செய்றதுன்னே தெரியல… டாக்டர்கிட்டப் போகலாம் என்று சொன்னேன்… அப்புறம் பார்த்தா ஒரு பத்து நிமிஷத்துல…” அழுகையினூடே சொல்லிக் கொண்டிருந்தவள் கடைசியில் தேம்பினாள்.

“தைரியமா இரு நீலா…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு நடுத்தர வயது பெண் “இப்படி வந்து உட்கார் நீலா…” என்று நீலவேணியை கார்முகிலனிடமிருந்து பிரித்து அழைத்துக்கொண்டு வந்து பாட்டி உடலின் அருகே அமர வைத்தார்கள்.

கார்முகிலன் வாசல் பக்கம் வந்தான். பொழுது விடிந்துவிட்டது… அக்கம் பக்கத்து வீட்டு ஆண்கள் சிலர் பேசிக் கொண்டிருந்தார்கள். மேலும் பத்து நிமிடத்தில் தெருவில் உள்ளவர்களும் கூடிவிட்டார்கள். அவன் பொறுப்பாக நின்று ஆக வேண்டிய காரியங்கள் அனைத்தையும் செய்தான்.

மாலை ஆறு மணிக்குப் பாட்டியின் உடலை எடுத்தார்கள். கூடியிருந்த கூட்டம் கலைந்தது. நீலா தனிமையில் விடப்பட்டாள்… துணையாக இருந்த ஒற்றை உறவும் பறிபோய்விட்ட தன் நிலையை எண்ணி சுய அனுதாபத்தில் துவண்டாள்.

உடலை அடக்கம் செய்த பின், ஆண்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட… கார்முகிலன் மட்டும் நீலவேணியைத் தேடிவந்தான். அவள் ஆதரவற்றவளாக சோபாவில் சுருண்டு படுத்திருந்த நிலை அவனை மிகவும் பாதித்தது. அவன் அவளுக்கருகில் சென்று தரையில் அமர்ந்தான்.

# # #

அன்று முழுவதும் ஜீவிதா அவள் வீட்டு பால்கனியில் நின்றபடி நீலவேணியின் வீட்டை நோட்டம் விட்டுக் கொண்டுதான் இருந்தாள். எப்பொழுதும் அவள் இது போல் செய்வதில்லை. ஆனால், என்று கார்முகிலனை நீலவேணியோடு சேர்த்துவைத்துப் பார்த்தாளோ… அன்றிலிருந்து இந்த வேலை துவங்கிவிட்டது. அதிலும் ‘இன்றைக்கு அந்தக் கிழம் மண்டையைப் போட்டுவிட்டது… இந்த முகிலன் சார் வந்திருக்காரான்னு தெரிந்துகொள்ள வேண்டுமே…!’ என்று அவளுக்குள்ளிருந்த பரபரப்பு அவளை வீட்டிற்குள் நிற்க விடவில்லை.

ஆரம்பத்தில் அவன் அவள் கண்ணில் சிக்கவில்லை. ஆனால் சிறிதுநேரத்திலேயே கையில் ஒரு பாலித்தீன் பையுடன் அவன் வண்டியை நிறுத்திவிட்டு வருவது தெரிந்தது. கடைக்குப் போய் ஏதோ வாங்கிக் கொண்டு வந்திருக்கிறான் என்று தெரிந்து கொண்டாள்.

அதற்குப் பிறகு, அவளுடைய பார்வை இன்னும் கூர்மையாகியது. அடிக்கடி அவன் வெளியே போவதும்… உள்ளே வருவதும்… அவன்தான் அங்கு எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறான் என்று அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. அவள் பொறுமையாக நடப்பதை வேடிக்கைப் பார்த்தாள்.

காரியங்கள் முடிந்து கூட்டம் கலைந்துவிட்டது. ஜீவிதாவிற்கு ஏனோ பால்கனியை விட்டு எழுந்துவர மனம் இல்லை… அவள் மதுமதியைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

‘ஐயோ… மது… இந்த நீலவேணி பொல்லாதவள்டி… உன் வாழ்க்கையைக் கோட்டை விட்டுவிடாத…’ என்று மனதிற்குள் புலம்பினாள்.

அந்தநேரம் கார்முகிலனின் வண்டி மீண்டும் நீலவேணியின் வீட்டிற்கு முன் வந்து நின்றது. ஜீவிதா பரபரப்பானாள்.

‘இந்த ஆள் எதுக்குத் திரும்பவும் இங்க வர்றார்…’ என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள்.

அதே கேள்வியை ஜீவிதாவின் தாய் அவளுக்குப் பின்னால் நின்றுகொண்டு கார்முகிலனின் மீது பார்வையைப் பதித்தபடி வாய்விட்டு கேட்டாள்…

“இந்த ஆள் எதுக்குத் திரும்பவும் இங்க வர்றார்…?”

தாயின் குரலைக் கேட்டுச் சட்டெனத் திரும்பிய ஜீவிதா,

“என்னம்மா…?” என்றாள்.

“இந்தா… இந்தப் பாலைப் பிடி… இங்க என்ன வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்க… உள்ள வா… அந்த நீலவேணி வீடு ஒரு புதைகுழி. அதுல இந்தப் பையன் இப்போ புதுசா மாட்டியிருக்கான் போலிருக்கு… ச்சை கருமம்… கருமம்…” என்று முணுமுணுத்தபடி உள்ளே சென்றாள்.

அம்மா முகிலன் சாரைத் தான் சொல்லிவிட்டுப் போகிறாள் என்று தெளிவாகப் புரிந்து கொண்டவள் ‘இதற்குமேல் தாமதிக்கக் கூடாது’ என்று முடிவு செய்து, மதுமதிக்குக் கைப்பேசியில் அழைத்தாள்…

“ஹலோ… ஜீவி… எப்படிடீ இருக்க?”

“நான் நல்லாத்தான் இருக்கேன்… நீ எப்படி இருக்க…?”

“சூப்பரா இருக்கேன்டி…”

“பேச்செல்லாம் நல்லாதான் இருக்கு… ஆனா காரியத்தில் தான் கோட்டை விட்டுடுவ போலிருக்கு…”

“என்னடிச் சொல்ற…?”

“ஆசை ஆசையா தவமிருந்து கல்யாணம் பண்ணினியே… உன் வீட்டுகாரர்… இப்போ எங்கடி அவர்…?”

“ஏன்டி கேட்குற…? அங்க தேனிக்குதான் வந்திருக்காங்க…”

“அவரை இங்க விட்டுட்டு நீ அங்க என்னடிப் பண்ணிக்கிட்டு இருக்க…?”

“என்ன ஜீவி நீ…! மாமா போற இடமெல்லாம் நானும் போக முடியுமா…? இன்னிக்கு நான் தூங்கிக்கிட்டு இருக்கும்போதே கிளம்பிட்டாங்க. ஃபோன் பண்ணி கேட்டேன்… தேனில இருப்பதா சொன்னாங்க… அங்க யாரோ இறந்துட்டாங்களாம். லேட்டா தான் வருவேன்னும் சொல்லிட்டாங்களே… ஆமாம்… இதெல்லாம் நீ ஏன்டி கேட்குற…? ”

“எல்லாத்தையும் உன்கிட்ட தெளிவாத்தான் சொல்லியிருக்காரு. ஆனா மது… அவர் இறந்ததா சொன்னாரே ஒரு கிழவி… அந்தக் கிழவிக்கு ஒரு பேத்தி இருக்கா… ரொம்ப மோசமானவ… சாரை அவ கூடப் பழகவிடாத… அவ்வளவுதான் நான் சொல்லுவேன்…”

“ச்ச… ச்ச… ஜீவி… மாமாவைப் பற்றி எனக்கு நல்லாத் தெரியும்… மாமா எந்தத் தப்பும் செய்யவே மாட்டாங்க… நீ எதுவும் குழப்பிக்காத…” என்று ஜீவிதாவிற்குத் தைரியம் சொன்னாள் மதுமதி.

அவளும் தோழியின் தைரியத்தைப் பார்த்து ‘நாம் தான் தேவையில்லாமல் பயப்படுகிறோம் போலிருக்கு’ என்று நினைத்துத் தன்னைத் தேற்றிக் கொண்டாள்.

# # #

துக்கத்தில் கூட ஆதரவு கொடுக்க யாருமின்றி, தனிமையில் துவண்டு கிடக்கும் நீலவேணி கார்முகிலனை மிகவும் பாதித்தாள். அவன் மனம் அவளுக்காக இரக்கப்பட்டது. அவனும் ஒரு காலத்தில் இப்படி ஆதரவில்லாமல் துவண்டு கிடந்தவன் தானே…! அவன் மனம் பழைய நினைவுகளை வேதனையுடன் அசைப்போட்டது. பேச்சு வராமல் நீண்டநேரம் நீலவேணியைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தான்… அவளுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று அவனுக்குப் புரியவில்லை.

“நீலா..” அவன் அவளை மென்மையாக அழைத்தான்.

அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“எதாவது சாப்பிட்டியா…?”

அவள் தலையை ஆட்டினாள். அவள் எதற்குத் தலையாட்டுகிறாள் என்று அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

“சாப்பிடலையா நீலா…?” என்றான்.

“இல்ல… சாப்பிட்டுவிட்டேன்… பக்கத்து வீட்டு அம்மா இட்லி கொண்டுவந்து கொடுத்தாங்க…” என்றாள் எங்கோ பார்த்தபடி.

அவள் சரியாகச் சாப்பிட்டிருக்க மாட்டாள் என்று ஊகித்தவன், உள்ளே சென்று பார்த்தான்… ஒரு பாத்திரத்தில் இட்லியும் சட்னியும் இருந்தது. அதை ஒரு தட்டில் போட்டு எடுத்துக்கொண்டு வந்து அவளைச் சாப்பிடச் சொன்னான்… அவள் மறுத்தாள். அவன் கட்டாயப்படுத்தினான்… அவன் பேச்சிற்குக் கட்டுப்பட்டு இரண்டு இட்லிகளை விழுங்கித் தண்ணீரைக் குடித்துக்கொண்டாள்.

அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். நேரம் சென்று கொண்டே இருந்தது… மணி பத்தாகிவிட்டது என்பதைச் சுவர் கடிகாரம் சத்தம் கொடுத்து ஞாபகப்படுத்தியது. அப்போதுதான் அவனுக்கு ஒரு விஷயம் புரிந்தது… இரவு நேரத்தில் நீலா எப்படித் தனியாக இருக்க முடியும்…! அவனும் அவளோடு தங்க முடியாதே…! ஏனோ அவனுக்கு அவளோடு தனியா அந்த வீட்டில் தங்க தயக்கமாக இருந்தது.

சிறிதுநேர யோசனைக்குப் பிறகு நீலாவிடம் கேட்டான்…

“நீலா… டைம் ஆச்சு… ஒரு ரெண்டு மணிநேரம் உன்னால தனியா இருக்க முடியுமா… நான் போய் மதியை அழைத்துக்கொண்டு வந்து விடுகிறேன்…”

“எதுக்கு முகிலன்…?”

“மணி பத்து நீலா… நான் கவனிக்கவே இல்லை… இதற்குமேல் நான் இங்கு உன்னோடு தனியாக இருந்தால் சரியாக இருக்காது… இனி மதியையும் தனியாக இங்கு வரச் சொல்ல முடியாது. அதனால் கொஞ்சநேரம் நீ சமாளித்துக் கொண்டால், நான் போய் அவளை அழைத்துக்கொண்டு உடனே வந்துவிடுகிறேன்… என்ன சொல்ற…?” என்று அவளிடம் கேட்டான்.

‘மதி…’ என்கிற பெயரைக் கேட்டதும் நீலவேணிக்குத் துக்கம் கூட இரண்டாம் பட்சமாகிவிட்டது.

“ஐயோ… அதெல்லாம் வேண்டாம் முகிலன்…” என்றாள் பட்டென்று. மதுமதியைச் சந்திக்கவே நீலவேணி விரும்பவில்லை…

“ஏன் நீலா…?” கார்முகிலன் புரியாமல் கேட்டான்.

“இல்ல… இந்த நேரத்துக்குப் பிறகு அவங்களுக்கு எதுக்குச் சிரமம்…”

“அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லை… நான் போய் உடனே அழைத்துக்கொண்டு வருகிறேன்…” என்று எழுந்தான்.

“ஐயோ நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க… எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை… நீங்க இப்போ கிளம்புங்க… காலைல வாங்க போதும்…” என்று சொல்லிச் சமாளித்து அவனை அனுப்பிவைத்தாள்
Comments are closed here.

error: Content is protected !!