Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 38

அத்தியாயம் – 38

இரவு பத்தரை மணி… தேனி பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த மதுமதி சாலையைக் கவனித்தாள். சாலையோர மின்விளக்கின் உபயமாக வெளிச்சம் பரவியிருந்தது. ஜன நடமாட்டம் அதிகமில்லை. சாலையின் எதிர்பக்கம் ஆட்டோ ஓட்டுனர்கள் சிலர் தங்கள் வாகனங்களுடன் வாடிக்கையாளர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள்.

பேருந்தில் பயணிக்கும் பொழுதே சிந்தித்து முடிவு செய்தபடி, ஆட்டோ ஒன்றைப் பிடித்து ஜீவிதாவின் வீட்டிற்குச் சென்றுவிட்டால்… உண்மையில் நீலவேணிக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும் என்கிற எண்ணத்தில் சாலையைக் கடக்க முயன்றாள். சிந்தனைகளைக் கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் சுற்ற விட்டுவிட்டு நிகழ்காலத்தில் என்ன நடக்கறது என்பதைப் பற்றிய யோசனை இல்லாமல் சாலையைக் கடக்க முயற்சித்ததால்… இடதுபுறத்திலிருந்து சீறி வந்த காரைக் கவனிக்கவில்லை அவள்.

பலத்த சத்தத்துடன் கார் வளைத்துத் திருப்பப்பட்டு நிறுத்தப்பட்டது. அந்த கார் ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் கடைசி நொடியில் நடக்கவிருந்த பெரிய விபத்துத் தவிர்க்கப்பட்டது. சாலை வெறிச்சோடி இருந்ததால் காரில் இருந்தவர்களுக்கும் ஆபத்தில்லாமல் போனது.

‘சடன் பிரேக்’ போட்டப்பட்டதில் கார் எழுப்பிய பயங்கரச் சத்தத்தில், அவளுடைய இதயம் வெடித்துவிடுவது போல் வேகமாகத் துடித்தது… வியர்வையில் உடல் நனைந்துவிட்டது. இரண்டு கைகளாலும் காதை அடைத்துக் கொண்டு, கண்களை மூடி, தலை கவிழ்ந்து, இறுகிப் போய் நின்றாள்… எந்தச் சூழ்நிலையிலும் உயிர் பயம் என்பது இல்லாமல் போகாது என்பதோடு, அது பொல்லாதது என்பதையும் தெரிந்து கொண்ட மதுமதிக்கு உடனே எண்ணங்கள் நீலவேணியிடம் சென்றன…

‘இவ்வளவு மகத்தான உயிரை அவள் எப்படி அவ்வளவு சுலபமாக மாய்த்துக் கொண்டாள்…!’ பிரமை பிடித்தவள் போல் நடு ரோட்டில் நின்று கொண்டிருந்த மதுமதியிடம்…

“மது… என்னம்மா இப்படிப் பண்ணிட்ட… பார்த்து வருவதில்லையா…? ஆமாம் நீ என்ன தனியாக நிற்கிற…? எங்க முகிலன்…? உன்னைத் தனியா விட்டுட்டு அவன் எங்க போனான்…?”

பழக்கப்பட்ட அந்தக் குரலில் தலையை நிமிர்த்திப் பார்த்தாள்… எதிரில் தர்மராஜ் நின்று கொண்டிருந்தார். அவள் கண்களில் கண்ணீர் திரண்டது…

“தாத்தா…” குரல் அழுகையில் கரைந்தது.

“என்னம்மா…? ஓரமா வா முதல்ல…” என்று சொல்லி அவள் கையைப் பிடித்துச் சாலையின் மறுபக்கம் அழைத்துக் கொண்டு வந்தார்…

“இப்போ சொல்லு… ஏன் இப்படி இருக்க…? எங்க அவன்…?” என்று கேள்வியை ஆரம்பித்தார்.

“தாத்தா… நீலா… நீலா இறந்துட்டா தாத்தா…” அவள் தேம்பினாள்.

“என்னது… எப்படிம்மா…?” அவரும் அதிர்ந்தார். ஓர் இளம்பெண் மரணித்துவிட்டாள் என்கிற அதிர்வு அவரிடம் தோன்றியது.

“தெரியல தாத்தா…” என்று ஆரம்பித்து, அன்று நடந்த அனைத்தையும் அவரிடம் ஒப்பித்தாள்… எதையும் விட்டுவிடவில்லை.

அனைத்தையும் கேட்டுவிட்டு “காலையிலிருந்து பிரச்சனைன்னு சொல்ற… சாப்பிட்டியா…?” என்று கேட்டார்.

“ம்ம்ம்… இல்ல தத்தா…”

“என்னம்மா பெண் நீ…! உன்னோட பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுத்து உனக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் சிசுவைப் பட்டினி போட்டுட்டியே…!” என்று அவளைக் கடிந்து கொண்டதோடு, முதல் வேலையாக பேருந்து நிலையத்திற்கு அருகிலிருந்த ஒரு சுமாரான உணவகத்திற்கு அழைத்துச் சென்று அவளைப் பசியாற வைத்தார்.

வயிற்றில் தெம்பு வந்ததும் ஓரளவுக்கு நிதானம் வந்தது… “நீங்க எப்படித் தாத்தா இந்த நேரத்துல இங்க…?” தர்மராஜ்ஜின் திடீர் வருகையைப் பற்றி அப்போதுதான் விசாரித்தாள்.

“இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தேன்… வேலை முடிய நேரமாகிவிட்டது. வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் என் காருக்கு குறுக்கே நீ வந்துவிட்டாய். நல்லவேளை டிரைவர் திறமையானவனாக இருந்ததால் தப்பித்தோம். இல்லையென்றால் இந்நேரம் நாம் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டிருந்திருக்க முடியாது… எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சமாளிக்க வேண்டாமாம்மா…? இப்படியா சுயநினைவே இல்லாதவள் போல ஓடும் காருக்கு குறுக்கே வந்து விழுவது…!” அவர்கள் பேசிக்கொண்டே நடந்து கார் இருக்கும் இடத்திற்கு வந்தார்கள்.

“சாரி தாத்தா… நான் ஏதோ ஞாபகத்துல வந்துட்டேன்…”

“சரி… சரி… விடு… உன் மேல தப்பில்லை… அந்த மடையனுக்கு மூளையே இல்லாமல் போய்விட்டது… எவ்வளவு சொன்னாலும் புத்தியே வராது…” என்று திட்டிக்கொண்டே கார்முகிலனுக்குக் கைப்பேசியில் அழைக்க முயன்றார்.

“வேண்டாம் தாத்தா… மாமா மேல தப்பில்லை… அவர் நீலவேணி இறந்துவிட்ட அதிர்ச்சியில் இருக்கார். அதோடு அந்தப் பெண்ணை அவர் நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வரலன்னா இந்நேரம் அவள் உயிரோடு இருந்திருப்பாளோ… என்கிற குற்ற உணர்வு கூட இருக்கும்…”

“சரி… அதுக்காக இப்படித்தான் காட்டுமிராண்டி மாதிரி நடந்துகொள்வதா…? யார் எப்படிப்பட்டவங்கன்னு சிந்திப்பதில்லை…! மடப்பயல்…” அவர் பொரிந்து கொட்டினார்.

மதுமதி எதுவும் பேசாமல் மௌனமாக நின்றாள்.

“சரி நீ சொல்லு… இப்ப எங்க போயிட்டு இருந்த…?”

“அந்த நீலவேணி தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்பே இல்லை தாத்தா… அவளுக்கு என்ன ஆச்சுன்னு விசாரிக்கலாம் என்று போய் கொண்டிருந்தேன்…”

“நல்லா நடு ராத்திரில விசாரிச்ச போ…” என்று சொல்லிவிட்டு,

“சரி… சரி… கார்ல ஏறு… உன்னை வீட்டுல கொண்டு போய் விடுறேன்…” என்றார்.

“இல்ல தாத்தா… நீலவேணிக்கு என்ன ஆச்சுன்னு தெரியாமல் நான் வீட்டுக்குப் போகமாட்டேன்…”

“சரி வேண்டாம்… வா நம்ம வீட்டுக்குப் போகலாம்… உன்னோட விசாரணையெல்லாம் நாளைக்குப் பகல்நேரத்துல வச்சுக்கோ..” என்று அதட்டி அவளை அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

# # #

மதுமதி பேருந்துநிலையத்தில் தர்மராஜ்ஜுடன் பேசிக் கொண்டிருந்த அதேநேரம்… மனதின் பாரம் தன்னை பூமிக்கு உள்ளே உள்ளே அழுத்துவது போல் பிரமை தோன்றியது கார்முகிலனுக்கு. மனதை லேசாக்க எண்ணிப் புகையை ஊதித் தள்ளிக் கொண்டிருந்தான். மதுமதியை வீட்டைவிட்டு அனுப்பிய பிறகும் அவனுடைய மனம் அமைதியடையவில்லை.

பெற்றோரைப் பார்க்கவேண்டும் பேசவேண்டும் என்று வெகு நாட்களாகத் துடித்துக் கொண்டிருந்தவள் இதுதான் வாய்ப்பு என்று எண்ணி அவர்களைத் தேடிச் சென்றிருப்பாள்… இந்நேரம் வீரராகவனிடம் நம்மைப்பற்றிப் புகார்ப் பட்டியல் படித்துக் கொண்டிருப்பாள் என்கிற நினைவில் மதுமதியைப் பற்றிய சிந்தனைகளைப் புறந்தள்ளி விட்டான்.

ஆனால் நீலவேணியின் நினைவு அவனை வாட்டியது. பாதுகாப்புக் கொடுப்பதாகச் சொல்லி ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்துவிட்டு, அவளுடைய உயிரையே குடித்துவிட்டோமே…! அவளை இங்கு அழைத்துக்கொண்டு வராமல் இருந்திருந்தால் இந்நேரம் அவள் உயிரோடு இருந்திருப்பாளே…! என்கிற எண்ணங்கள் அவனைத் துரத்தின. அவனால் ஓர் இடத்தில் நிலைகொள்ள முடியவில்லை.

‘ஐயோ… நீலா… அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டாயே…! இந்தக் கொடுமையான குற்ற உணர்வை நிரந்தரமாக எனக்குக் கொடுத்துவிட்டாயே…!’ என்று உள்ளுக்குள் புலம்பினான்.

வீட்டின் அழைப்புமணி அடித்தது… கையிலிருந்த சிகரெட்டை அணைத்துவிட்டு சோபாவிலிருந்து எழுந்து சென்று கதவைத் திறந்தான். இரண்டு காக்கிச் சட்டைகாரர்கள் நின்று கொண்டிருந்தார்கள்.

“நீங்க தானே கார்முகிலன்…?” இளம்வயது சப்-இன்ஸ்பெக்டர் கேட்டார்.

“ஆமாம் சார்…”

“கொஞ்சம் விசாரிக்கணும்… உள்ளே போய்ப் பேசலாமா…?”

“வாங்க…”

மூவரும் வீட்டிற்குள் வந்தார்கள்.

“உட்காருங்க…” கார்முகிலன் சொன்னான்.

சப்-இன்ஸ்பெக்டர் ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டார். எதிரில் கார்முகிலன் அமர்ந்தான். ரைட்டர் ஒரு பக்கம் அமர்ந்து, கார்முகிலனின் வாய் வார்த்தைகளைக் காகிதத்தில் எழுதத் தயாராக இருந்தார்.

“சொல்லுங்க சார்… என்ன விஷயம்…?”

“நீலவேணியை நீங்கதானே மருத்துவமனையில் அட்மிட் செய்தது…?”

“ஆமாம் சார்… ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணமாட்டேன்னு சொன்னதால போலீஸ் கம்ப்ளைண்ட் கூடக் கொடுத்திருக்கேனே…!”

“அவங்களுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்…?”

“பிரெண்ட்ஸ்…”

“எப்படிப் பழக்கம்…?”

அவன் விளக்கமாகச் சொன்னான். அவள் அவனோடு பழக ஆரம்பித்ததிலிருந்து அவளுடைய நடவடிக்கைகள் சரியாக இருந்ததால்… அவளுடைய பழைய வாழ்க்கைமுறையைப் பற்றி அவன் பேசவில்லை.

“அவங்க எதனால தற்கொலை செய்து கொண்டாங்கன்னு உங்களுக்குத் தெரியுமா…?”

“சரியா தெரியல சார்…” மதுமதியை உள்ளே கொண்டுவராமல் மழுப்பினான். அதற்காகத் தன்னைத் தானே வெறுத்தான்.

“அவங்க கடைசியா உங்ககிட்ட என்ன பேசினாங்க…?”

“நான் நீலாவின் வீட்டுக்குப் போனபோது நீலாவுக்கு நினைவில்லை. அதனால என்கிட்ட எதுவும் பேசல…”

“மத்தியான நேரத்துல எதுக்காக நீங்க நீலவேணியின் வீட்டிற்குப் போனீங்க…?”

“எனக்கு ஃபோன் பண்ணி ‘மனசு சரியில்லை’ என்று புலம்பி அழுதாங்க… அதனால, நான் காலேஜ்ல பர்மிஷன் போட்டுவிட்டு அங்குப் போனேன்…”

“என்ன பிரச்சனை என்று ஏதாவது சொன்னாங்களா…?”

“இல்லை…”

“உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?”

“ஆமாம்…”

“உங்களுடைய நட்பு விஷயம் உங்கள் மனைவிக்குத் தெரியுமா…?”

“தெரியும். நீலாவின் பாட்டி இறந்தபிறகு அவள் எங்களோடுதான் சிலகாலம் வசித்தாங்க.”

“ம்ஹும்… எவ்வளவு நாட்களாக…?”

“ஒரு நாலஞ்சு மாதமா இங்கதான் இருந்தாங்க…”

“ஆனால்… இன்று நீலவேணி தற்கொலை செய்துகொண்டது தேனியில் தானே… அதாவது நீலவேணியின் வீட்டில்…”

“ஆமாம்…”

“எப்போது உங்கள் வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டிற்குச் சென்றார்கள்…?”

“இன்றுதான்…”

“உங்கள் மனைவிக்கும் நீலவேணிக்குமான உறவு எப்படி இருந்தது…?”

“பிரச்சனை என்று எதுவும் இல்லாமல் இருந்தது…”

“இப்போ உங்கள் மனைவி எங்கே…?”

“அது… வந்து…”

“என்ன ஆச்சு…?”

“எனக்கும் என் மனைவிக்கும் கொஞ்சம் பிரச்சனை… அதனால் அவள் இப்போது என்னோடு இல்லை… ”

“ஓஹோ… எப்போ நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சீங்க…?”

“இன்னிக்குத்தான்… சாயங்காலம்…”

காவல் அதிகாரியின் கண்கள் இடுங்கின.

“இப்போ அவங்க எங்க இருப்பாங்கன்னு தெரியுமா…?”

“ஏன் கேட்கறீங்க…?”

“விசாரிக்கணும்…”

“அவ அம்மா வீடு காம்காபட்டியில் இருக்கு. அங்குதான் இருப்பாள்…”

“ஓகே… ஏதாவது விபரம் தேவைப்பட்டால் திரும்ப வருகிறேன்…”

கார்முகிலனின் ஸ்டேட்மெண்ட்டை எழுதி முடித்த ரைட்டர் அவனிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார். காவலர்கள் புறப்பட்டுவிட்டார்கள். கார்முகிலன் மீண்டும் சிகரட்டை எடுத்துப் பற்ற வைத்தான்.
Comments are closed here.

You cannot copy content of this page