Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 40

அத்தியாயம் – 40

மதுமதியை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றதும் தர்மராஜ் லக்ஷ்மிபுரத்திற்கு விரைந்தார். காலைநேரம் என்பதால் கார்முகிலன் வீட்டில்தான் இருப்பான் என்கிற அவருடைய கணக்குத் தப்பாகவில்லை. சோபாவில் சாய்வாக அமர்ந்து, விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தவனின் சிந்தனையை தர்மராஜ்ஜின் குரல் கலைத்தது.

 

“முகிலா…”

அவன் அவரை ஆச்சர்யத்துடன் பார்த்தபடி எழுந்தான்…

 

“வாங்க… என்ன… இப்போதானே ஃபோன்ல பேசினீங்க…?” குழப்பத்துடன் கேட்டான்.

 

‘சிறிதுநேரத்திற்கு முன் ஃபோனில் பேசியவர் எதற்காக இவ்வளவு அவசரமாகப் பரபரப்புடன் வந்திருக்கிறார்’ என்று கணநேரத்தில் அவன் யோசித்து முடிக்கும் முன்…

 

“முகிலா… மதுவை போலீஸ் கூட்டிட்டுப் போய்ட்டாங்கடா…” என்றார் பதட்டத்துடன். வயசாகிவிட்டதாலோ, என்னவோ அவருக்கு மதுமதியைக் கைது செய்துவிட்டார்கள் என்கிற விஷயத்தைத் தாங்க முடியவில்லை. இதுநாள் வரை அவரிடமிருந்த அதிகாரம், மிடுக்கு, எல்லாம் போன இடம் தெரியாமல் போய்விட்டது. கார்முகிலனையும் அவர் சொன்ன செய்தி பதட்டப்பட வைத்தது.

 

“என்னது…!” அவன் அதிர்ந்தான்.

 

“ஆமாடா… இப்போதான்… உன்கிட்டப் பேசிட்டு, ஃபோனைக் கட் பண்ணின அடுத்த நிமிஷம் போலீஸ்காரங்க வந்துட்டாங்க… எனக்கு ஒண்ணுமே புரியலடா…” அவர் கையை விரித்தார்.

 

“என்ன சார் சொல்றீங்க… எதுக்கு வந்தாங்க…? மதியை எதுக்குக் கூட்டிட்டுப் போனாங்க?”

 

“எல்லாம் அந்த நீலவேணி பொண்ணு ஏற்படுத்தின சிக்கல்தான்…”

 

“என்ன சார் சொல்றீங்க…?”

 

“அந்தப் பொண்ணு… தன்னோட சாவுக்குக் காரணம் மதுதான்னு லெட்டர் எழுதி வச்சிட்டா போலிருக்கு… அது போலீஸ் கையில கிடைத்துவிட்டது…”

 

“சார்…!”

 

“ஆமாம்டா… அந்தப் பொண்ணு பயங்கரமான கிரிமினல் புத்தி உள்ள பொண்ணுடா… பார்த்தியா… என்ன வேலை பண்ணி வச்சிருக்கான்னு…!”

 

“சார்… நீலாவைக் குறை சொல்வதை விடுங்க சார்… செத்துப் போய்ட்டா சார்… நீலா செத்துப் போய்ட்டா… ஒரு உயிர்… வாழ வேண்டிய ஒரு ஜீவன்… இந்த உலகத்தை விட்டுப் போய்விட்டது… அதைப்பற்றி உங்களுக்கு வருத்தமே இல்லையா…? கேட்பாரற்றப் பெண் என்றால் அவ்வளவு இளப்பமா…? ஒருத்தியின் உயிரே போய்விட்டது… அவள் மனதை நோகடித்துக் கொன்றவளை போலீஸ் கைது செய்துவிட்டது என்று நீங்கள் துடிக்கிறீர்கள்…! ஹா…! அனாதைகளின் உயிருக்கு இவ்வளவுதான் மதிப்பா…!”

 

“முகிலா… என்னடா இப்படிப் பேசுற…? அங்க போலீஸ் ஸ்டேஷன்ல இருப்பது உன் மனைவிடா… அவளைப்பற்றி உனக்குத் தெரியாதா…? அந்தப் பெண் அப்படியல்லாம் மற்றவர்களைப் பேசக்கூடிய பெண்ணா…! கொஞ்சம் யோசிச்சுப் பாருடா…”

 

“இதுவரைக்கும் யோசிக்காமல் தான் சார் இருந்துட்டேன்… என் மனைவி அப்பாவி… குழந்தைக் குணம் கொண்டவள் என்று தவறாக நினைத்துக் கொண்டிருந்து விட்டேன். ஆனால் அவள் வீரராகவனின் மகள்தான் என்பதை என் தலையிலடித்துச் சொல்லிவிட்டாளே…! இனியும் யோசிக்காமல் இருக்கமுடியுமா…?” குதர்க்கமாகப் பேசினான்.

 

“பழைய விஷயத்தையும்… இப்ப நடக்குற விஷயத்தையும் சம்மந்தப்படுத்தாதடா முகிலா… மது மேல எந்தத் தப்பும் இல்லைடா… அந்த நீலவேணிக்கு உன் மேல ஆசை இருந்ததாம்… அதை மது கண்டுபிடிச்சுக் கேட்டபோது ‘ஆமாம்…’ என்று ஒத்துக் கொண்டாளாம்… அதற்குப் பிறகுதான் மது நீலவேணியை வீட்டைவிட்டுப் போகச் சொல்லியிருக்கா. அதுக்கு அவள் மதுவையே வீட்டைவிட்டு விரட்டப் போவதாகச் சொல்லிவிட்டு இங்கிருந்து கிளம்பிச் சென்றாளாம்… போனவள் என்ன நினைத்தாளோ எதையோ சாப்பிட்டுவிட்டு மேல போய்ட்டா… போனவ சும்மா போகாம மதுமேல பழியைப் போட்டு லெட்டர் வேற எழுதி வச்சிட்டுப் போய்ட்டா… பழிகாரி…” விளக்கம் கொடுத்ததோடு புலம்பவும் செய்தார் அந்தப் பெரியவர்.

 

“பழிகாரி நீலா இல்ல சார்… மதுமதிதான்…! இவ்வளவு அழகா கதையைச் சொல்லி நீலாவைக் குற்றவாளியாக்கப் பார்க்கிறாளே…! அப்பனையே மிஞ்சிட்டா…”

 

“டேய் முகிலா… நீ இன்னும் சின்னப்பிள்ளை மாதிரியே இருக்கடா… உனக்கு நிலைமையை எப்படிப் புரிய வைப்பது என்று எனக்குத் தெரியவில்லைடா… நான் உனக்கு நல்லது நடக்கவேண்டும் என்று நினைப்பவன்… என்மேல நம்பிக்கையிருந்தா நன் சொல்றதைக் கேளுடா…”

 

“என்னத்த கேட்கணும்…?” எரிச்சலுடன் கேட்டான் அவன்.

 

“என்னோடு போலீஸ் ஸ்டேஷன் வாடா… மதுவை ஜாமீன்ல கூட்டிட்டு வரணும்… நாளைக்குச் சனிக்கிழமை… இன்னிக்கே ஜாமீன் எடுத்தால்தான் உண்டு… இல்லன்னா மது ரெண்டு நாள் உள்ள இருக்கற மாதிரி ஆகிவிடும்…”

 

அவர் பேசியதைக் கேட்டபோது கார்முகிலனின் முகம் மாறியது. அவள் இரண்டு நாள் சிறையில் இருக்கக்கூடும் என்பதைக் கற்பனை கூடச் செய்ய முடியவில்லை. அதேசமயம் நீலாவிற்கு நியாயம் கிடைப்பதையும் அவனால் தடுக்க முடியவில்லை. தனக்குள் பொங்கியெழுந்த உணர்ச்சிகளை வெகுவாய்ச் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.

 

“என்னடா மரம் மாதிரி நிக்கிற…? வாடா…” அவர் அதட்டினார்.

 

“மதி ஜாமீன்ல வந்துட்டா… நீலாவோட உயிருக்கும், அவள் எழுதி வச்ச லெட்டருக்கும் என்ன மதிப்பு…?” கரகரப்பான குரலில் கேட்டான்.

 

அவனுடைய கேள்வியில் தர்மஜார் சிலிர்த்தெழுந்தார்.

 

“அப்படின்னா…! என்னடா சொல்ல வர்ற…? உனக்கு மதுவைவிட அந்த நீலாதான் முக்கியமா போயிட்டாளா…? ”

 

அவன் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றான்.

 

“சொல்லுடா… நீலவேணிதான் உனக்கு முக்கியமா… மது இல்லையா…?”

 

‘இல்லை… இல்லை… மதியைவிட வேறு எதுவுமே எனக்கு முக்கியமில்லை’ என்று அவன் மனம் கூக்குரலிட்டது. அதே நொடி அவன் மனக்கண்ணில் நீலவேணி கண்ணீருடன் தோன்றினாள்…

 

‘என்னை வார்த்தைகளால் குதறிக் கொன்ற உங்கள் மனைவியைக் காப்பாற்றப் போகிறீர்களா முகிலன்…? உங்கள் மனைவியும்… உங்கள் வாழ்க்கையும் தான் முக்கியம் என்று சுயநலமாக முடிவெடுக்கப் போகிறீர்களா முகிலன்…?” என்று கேள்விக் கேட்டு அவனைக் குன்றச் செய்தாள்.

 

இருவேறு விதமான உணர்ச்சிகள் அவனை வெவ்வேறு பக்கம் இழுக்க… பெரிய உணர்ச்சிப் போராட்டத்திற்கு ஆளானான். முடிவெடுக்க முடியாமல் கண்களை இறுக்கமாக மூடித் திறந்தான்.

 

“யோசிக்காதடா முகிலா… மது பயந்து போயிருக்கா… உன்னைத்தான் கூட்டிட்டு வரச் சொன்னா… வாடா…”

 

அவன் கண்களில் சலனம் தெரிந்தது. மதுமதியிடம் ஓடிச்சென்று அவள் பயத்தைத் துடைத்தெரிய வேண்டும் என்கிற தவிப்பு தெரிந்தது. ஆனாலும் அவன் அசையாமல் நின்றான்.

 

“என்…னடா…!?” தர்மராஜ் கெஞ்சலும் கோபமுமாகக் கேட்டார்.

 

“என்னால மதியைப் பார்க்க வரமுடியாது சார்…” இறங்கிவிட்ட குரலில் சொன்னாலும் தெளிவாகச் சொன்னான்.

 

அவர் அவனை முறைத்தார். அவன் வேறுபக்கம் பார்வையைத் திருப்பினான்.

 

“உன் குழந்தை அவள் வயிற்றில் இருக்குடா…” -அவன் கண்கள் கலங்கின. சாமர்த்தியமாக மறைத்துக் கொண்டான்.

 

“அந்தக் குழந்தையைச் சுமந்து கொண்டுதான் ஒரு உயிர் மடிவதற்குக் காரணமானாள்… அதை எப்படி மறக்க முடியும்…?”

 

“இவ்வளவு கல் நெஞ்சக்காரனாடா நீ…!” அவர் ஆச்சர்யத்துடன் கேட்டார். அவன் பதில் பேசவில்லை.

 

“நீ உதவிக்கு வராவிட்டால் மதுவிற்கு ஒன்றும் மரணதண்டனைக் கிடைத்துவிடாது. அவளைக் காக்க நான் இருக்கிறேன்… ஆனால் உன் நிலைமை…! எனக்கு உன்னைப் பார்த்தால் தான் பாவமாக இருக்கிறது. கையிலிருக்கும் பொக்கிஷத்தைக் குப்பையில் போட துணிந்துவிட்டாய்… சரி… இதுதான் உன் விதி என்றால் யாரால் மாற்றமுடியும்… நான் வருகிறேன்…” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென வெளியேறினார்.

 

# # #

 

மதுமதியைக் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதும், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தார்கள். பிறகு அவளை ஒரு ஓரமாக அமரச் சொன்னார்கள். காவலர்கள் அவளைப் பெரிதாக எந்தத் தொல்லையும் செய்யவில்லையென்றாலும் அங்கு வந்து போகிறவர்களின் பார்வை அவளை ஆயிரம் ஊசிகளாய் மாறிக் குத்தியது. லாக்கப்பில் அடிவாங்கும் ஒரு கைதி எழுப்பும் ஓலம் அவளை உறைய வைத்தது. ஒவ்வொரு கணமும் நரக வேதனையுடன் கழிந்தது.

 

‘எப்போதடா மாமா வந்து நம்மை அழைத்துச் செல்வார்’ என்று எதிர்பார்ப்புடன் அவள் காத்திருக்கும்போது, கலங்கிய முகத்துடன் தர்மராஜ் உள்ளே வந்தார். உடன் ஒரு வழக்கறிஞரும் வந்தார். அவளுடைய பார்வை ஆவலுடன் தர்மராஜ்ஜுக்குப் பின்னால் சென்றது… அவள் எதிர்பார்த்தவன் வரவில்லை. ஏமாற்றத்துடன் தர்மராஜ்ஜைப் பார்த்தாள். அவர் இவளுடைய பார்வையைச் சந்திக்காமல் இன்ஸ்பெக்டரிடம் சென்றார்.

 

“வாங்க சிதம்பரம்… உட்காருங்க… இன்னிக்கு எந்த கேஸ் விஷயமா வந்திருக்கீங்க?” இன்ஸ்பெக்டர் வழக்கறிங்கரிடம் சிநேகமாகப் பேசினார்.

 

“மதுமதின்னு ஒரு பெண்ணைக் கைது பண்ணியிருக்கீங்களே… அது சம்மந்தமாதான் பேச வந்திருக்கேன்…”

 

“ஓஹோ… அந்த கேஸா… கிரிமினல் கேஸாச்சே…! FIR போட்டாச்சே சிதம்பரம்…”

 

“சார்… நல்ல குடும்பத்துப் பொண்ணு… கர்ப்பமா வேற இருக்கு… ரெண்டு நாள் உள்ள இருக்க முடியாது… பாத்துப் பண்ணுங்க சார்…”

 

“புரியுதுப்பா… நீங்கதான் இந்த கேஸ எடுக்கப் போறீங்கன்னு முதல்லையே ஃபோன் போட்டுச் சொல்லியிருக்க வேண்டியதுதானே… இப்ப ஒண்ணும் பண்ண முடியாதே…”

 

“சரி… பேச நேரம் இல்ல… நாங்க கிளம்புறோம்… அந்தப் பெண்ணுக்குத் தேவையானதைக் கொஞ்சம் பார்த்துச் செய்யுங்க… வெளியில போய்டாதீங்க… ஃபோன் பண்ணுறேன்… கோர்ட்டுக்கு வர்ற மாதிரி இருந்தாலும் இருக்கலாம்… வர்றேன்…” என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்லிவிட்டு, தர்மராஜ்ஜிடம் திரும்பி…

 

“சார்… நீங்க அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்றால் சீக்கிரம் பார்த்துட்டு வாங்க… உடனே கிளம்பணும்… நிறைய வேலை இருக்கு…” என்றார்.

 

தர்மராஜ் சங்கடத்துடன் மதுமதியை நெருங்கினார். அவர் எதிர்பார்த்தக் கேள்வியைத்தான் அவள் கேட்டாள்.

 

“மாமா எங்க தாத்தா…?”

 

“அம்மாடி… நீ கவலைப்படாதம்மா… உன்னை நான் வெளிய கொண்டு வர்றேன்…”

 

“மாமாவைப் பார்க்க முடியலையா தாத்தா…?” அப்போது கூட அவன் மீதான நம்பிக்கை சிறிதும் குறையவில்லை. இந்த அப்பாவிப் பெண்ணின் ஆழமான நம்பிக்கையை உடைக்க வேண்டுமே என்கிற தயக்கத்தில் அவர் மௌனம் காத்தார்.

 

“என்ன… என்ன ஆச்சு தாத்தா…?”

 

“அம்மாடி மது… அவனை நான்தான் படிக்க வைத்து ஆளாக்கினேன்… அதற்காக நான் எத்தனையோ நாள் பெருமைப்பட்டிருக்கேன்… ஆனால் இன்றைக்கு வருத்தப்படுகிறேன் கண்ணம்மா… அந்தப் படவா பயலை ஆளாக்கியதற்காக வருத்தப்படுகிறேன்…” அவர் தளர்ந்துவிட்ட குரலில் சொன்னார். இதற்குமுன் அவர் அப்படிப் பேசி மதுமதி பார்த்ததே இல்லை. கார்முகிலனிடம் கூட அதிகாரத் தொனியில்தான் பேசுவார். ஆனால் இன்று அவருடைய நடவடிக்கைகள் முற்றிலும் வேறுவிதமாக இருந்தன. அவள் குழப்பத்துடன் கேட்டாள்.

 

“ஏன் தாத்தா இப்படிப் பேசுறீங்க…? மாமா என்ன சொன்னாங்க…?”

 

“அவன் வரமாட்டேன்னுட்டாம்மா…”

 

“நேர்ல போய்… என்னோட நிலைமையை எடுத்துச் சொன்னீங்களா தாத்தா…? ஒருவேள மாமாவுக்கு சரியா புரியலையோ… என்னவோ…” அவர் சொன்னதை அவளால் நம்பமுடியவில்லை. அதனால் சப்பைக்கட்டுப் பேசி தன்னைத் தானே சமாதானம் செய்ய முயன்றாள்.

 

அவளுடைய பேச்சு தர்மராஜ்ஜுக்கு எரிச்சலை ஏற்படுத்திவிட்டது…

 

“அட என்னம்மா நீ…! என்னத்த புரியாது…? அதெல்லாம் நல்லா புரியற மாதிரிதான் சொன்னேன் அந்த மடையனுக்கு… எல்லாத்தையும் கேட்டுவிட்டுக் கடைசில அந்த நீலவேணியின் மரணத்துக்கு யார் பதில் சொல்றதுன்னு கேட்கிறான்…” அவர் ஆத்திரத்துடன் சொன்னார்.

 

“இல்ல தாத்தா… மாமா அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்…” அவள் உறுதியுடன் சொன்னாள். அவர் அவளைப் பாவமாகப் பார்த்தார்.

 

“உன்னோட கள்ளமில்லா அன்புக்கு அவன் தகுதியானவன் இல்லைம்மா… விட்டுடு…”

 

“உங்களுக்கு மாமாவைப் பற்றித் தெரியாது தாத்தா… உங்க ஃபோனைக் கொஞ்சம் கொடுங்க… நான் பேசுறேன்…” படபடக்கும் இதயத்துடன் அவருடைய கைப்பேசியை வாங்கி முகிலனின் எண்ணை அழுத்தினாள்.

 

“ஹலோ…” அந்தப் பக்கம் அவனுடைய குரல் கேட்டது.

 

“மாமா… நான் மதி பேசுறேன் மாமா… நான்… இங்க… மாமா… மாமா… மா…மா…” ஃபோன் துண்டிக்கப்பட்டு விட்டது. நம்பமுடியாத அதிர்ச்சியுடன் மீண்டும் முயற்சித்தாள்… மீண்டும் மீண்டும் முயற்சித்தாள். பலன்… அவனுடைய ஃபோன் சுவிட்ச் ஃஆப் செய்யப்பட்டுவிட்டது.

 

‘தோற்றுப் போய்விட்டேனா…! என் காதல் தோற்றுவிட்டதா…! என் நேசத்திற்கு சக்தி இல்லாமல் போய்விட்டதா…!’ அவளால் நம்ப முடியவில்லை. நாய்க்குட்டி போல் அவன் காலையே சுற்றிச் சுற்றி வந்தவளை அவன் எட்டி உதைத்துவிட்டான் என்கிற உண்மையை நம்பமுடியாமல், உயிரோடு சமாதியில் அடைப்பட்டவள் போல் மூச்சு முட்டிப்போனாள்.

 

“அ…ம்…மா…!!!” என்ற முனகலுடன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்தாள்.

 

ஒரே நொடியில் அவளுடைய பலமான நம்பிக்கைச் சிகரம் நொறுங்கிவிட்டதில் நிலைகுலைந்தாள். இதயத்தில் இரத்தம் கசிந்தது… ஏமாற்றம் தந்த வலியும், வேதனையும் அவளைத் துவளச் செய்தன…

 

“மது… மதும்மா… என்ன ஆச்சு…?” தர்மராஜ் பதறினார்.

 

போலீஸ்காரர்களின் கவனம் இவர்கள் பக்கம் திரும்பியது.

 

“தண்ணி… குடிக்கத் தண்ணி வேணும்…” அவள் குரல் எழும்பாமல் கேட்டாள்.

 

குடிக்கத் தண்ணீர் கொடுக்கப்பட்டது. அழுக்கு டம்ளரில் கொடுக்கப்பட்ட தண்ணீரை அருவெருப்பின்றி மடமடவெனக் குடித்து முடித்தாள். மனதிலோ, உடலிலோ சிறிதும் தெம்பில்லை… மனம் தன் இழப்பைக் குத்திக் குடைந்து, ஆராய்ந்து தன்னைத் தானே ரணமாக்கிக் கொண்டது…

 

‘மாமாவா… என் மாமாவா இப்படிச் செய்தார்…! நான் போலீஸ் ஸ்டேஷனில் இருப்பது தெரிந்தும் அவர் மனம் பதறவில்லையா…! இவரிடமா நான் என் காதலைக் கொட்டினேன்… இவரிடமா என் வாழ்க்கையை ஒப்படைத்தேன்… இவருக்காகவா என் பெற்றோரை ஒதுக்கினேன்… இவர் நிம்மதிக்காகவா என் மனஅமைதியைத் தொலைத்தேன்…! ஈஸ்வரா…!!!’ அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது.

 

‘இதெல்லாம் கனவாக இருக்குமோ…! ஆமாம் கனவாகத்தான் இருக்கும்… பயங்கரமான கனவு… நீலா இறந்தது கூடக் கனவுதான்… எல்லாமே கனவுதான்… கனவே தான்…!’ அவள் நம்பிக்கையைக் கொண்டுவர முயற்சிக்கும் போது பொங்கிவந்து கன்னத்தை நனைத்த கண்ணீர் அவளை ஏளனம் செய்தது.

 

‘பைத்தியக்காரி… இன்னுமா அவனை நம்புகிறாய்…!’ என்று கேள்விக் கேட்டு அவள் இதயத்தைப் பிழிந்தது.

 

‘நடப்பதெல்லாம் நிஜம்தான் போலும்…! கைபிடித்து அக்னியைச் சுற்றிவந்து… வாழ்க்கை முழுவதும் உன்னைக் கைவிடமாட்டேன் என்று சத்தியம் செய்தவன், இன்று நெருப்பு வளையத்திற்குள் சிக்கித் தவிக்கும் நம்மைக் கைகழுவி விட்டது உண்மைதானோ..! ஆம்… உண்மைதான்… இல்லையென்றால் இந்த நரகத்திலிருந்து நம்மை மீட்க வந்திருக்க வேண்டுமே…! ஏன் வரவில்லை…? அந்த நீலா சொன்னது உண்மைதானோ… அவர் நம்மைக் காதலிக்கவே இல்லையோ…! ‘

 

இந்த எண்ணம் தோன்றியவுடன்… அவளுடைய துயரம், எவ்வளவோ அடக்க முயன்றும் தோற்று அழுகையாக வெடித்தது… தர்மராஜ் மட்டுமல்ல, காவல்நிலையத்தில் இருந்த அனைவரும் விக்கித்துப் போனார்கள். இதயத்திற்கு இரும்பு கவசம் போட்டுக்கொண்ட காவலர்களைக் கூட வேஷமில்லாத, களங்கமில்லாத அவளுடைய கண்ணீர் அசைத்துப் பார்த்தது.

 

யாரும் அவளிடம் நெருங்கவில்லை. கண்ணீர் வறண்டு போய் விசும்பல் மட்டும் எஞ்சியிருந்த போது, தர்மராஜ் குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தார். மறுக்காமல் வாங்கிப் பருகினாள்.

 

‘ஏன் மாமா இப்படிச் செய்தீங்க…? என்னை ஏன் ஒதுக்கிட்டீங்க… நான் எந்தக் குற்றமும் செய்யவில்லையே மாமா…! நான் குற்றமே செய்திருந்தாலும் தாலிக் கட்டிய கடமைக்காகவாவது என்னைக் காத்திருக்க வேண்டாமா…? நீங்கள் கொலையே செய்திருந்தாலும் என்னால் உங்களை யாரிடமும் விட்டுக்கொடுக்க முடியாதே…! உங்களால் மட்டும் எப்படி மாமா முடிந்தது…? இக்கட்டான சூழ்நிலையில் என்னைக் கைவிட்டுட்டீங்களே மாமா…!’ அவள் மனம் அரற்றியது.

 

“என்னம்மா…! இப்படி ஒடஞ்சு போயிட்டியே…!” வருத்தத்துடன் கேட்டார் தர்மராஜ்.

 

விரக்தியாகப் புன்னகைத்தாள் “உண்மை புரிஞ்சிடுச்சு தாத்தா… கசப்பான உண்மை…” துக்கத்தை மீறிய வெறுமை படர்ந்தது அவள் மனதில்… அவளுக்குள்ளிருந்த ஏதோ ஒன்று அவளிடமிருந்து பிரிந்து வெளியேறுவதை அவளால் உணர முடிந்தது.

 

“அம்மாடி… நீ மனசை விட்டுடாதம்மா… அவன் வரவில்லையென்றால் என்ன… நான் இருக்கேம்மா… உன் அப்பா இருக்காரு… விபரம் தெரிஞ்சா பறந்து வந்திடுவார்… நீ கவலைப்படாமல் இருடா ராஜாத்தி…” பெரியவர் ஆறுதல் சொல்ல முயன்றார்.

 

அவளுக்கு ஆறுதல் தேவைப்படவில்லை. இனி உலகத்தில் உள்ள அனைவரும் ஒன்று திரண்டு வந்து அவளைக் காப்பாற்றினாலும் ஒன்றுதான்… உதவிக்கு யாருமே இல்லாமல் தூக்கிலிடப்பட்டாலும் ஒன்றுதான்… மனம் வெறுமையாக இருந்தது. அழுகையும் வரவில்லை… சிரிப்பும் வரவில்லை… உணர்ச்சிகள் மரத்துப் போய்விட்டது போல் தோன்றியது… அமைதியாகச் சென்று முன்பு அமர்ந்திருந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டாள்.

 

“வேடன் மீது காதல் கொண்டு
கர்வத்தோடு கைபிடித்த
களங்கமற்ற வெண்புறா நான்…

கூர்ராயுதமோ… வெறி கொண்ட உன் செவ்விழியோ
என்னை மிரட்டவில்லை… மரண
பயமும் என்னை நெருங்கவில்லை…!

உன் கைகத்தி என் மென்கழுத்தில் இறங்கும்போதும்
உன் கண்களுக்குள் தேடிச் சோர்ந்தேன்
என் காதலின் சாயலை…!

உயிர் வாழும் துடிப்புமில்லை… தவிப்புமில்லை…
நீயென்னை கொள்ளும் முன்பே மரணித்துவிட்டேன்
தோற்றுவிட்ட மனவலியிலேயே…!”
Comments are closed here.