Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 41

அத்தியாயம் – 41

மதுமதியின் உணர்ச்சியற்ற முகத்தின் உள் விவகாரத்தை, தர்மராஜ்ஜால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர் அவளுடைய காலை உணவிற்கு ஏற்பாடு செய்துவிட்டு சில ஆறுதல் வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, வழக்கறிஞருடன் காவல்நிலையத்திலிருந்து வெளியேறிச் சென்றார்.

 

“ஜாமீன் கிடைத்துவிடுமா சார்…?” தர்மராஜ் வழக்கறிஞரிடம் கவலையாகக் கேட்டார்.

 

“பார்க்கலாம் சார்… நான் கோர்ட்டுக்குப் போய் ஆகவேண்டியதைக் கவனிக்கிறேன். ஜட்ஜ்கிட்டப் பேசி இன்னிக்கே நம்ம கேசை எடுக்குறதுக்கு ஏற்பாடு செய்றேன்… நீங்க ஜாமீன் போடறதுக்கு ஆள் ஏற்பாடு செய்யுங்க…”

 

“சரி… எத்தனை பேர் வேணும்…”

 

“இரண்டு பேர் ஜாமீன் போடணும்… அவங்க பேர்ல சொந்த வீடு இருக்கணும்… வீட்டுவரி கட்டின ரசீது மற்றும் குடும்ப அட்டையுடன் அவர்களை கோர்ட்டுக்கு அழைத்துக்கொண்டு வாங்க. உங்க பேர்ல வீடு இருந்தால் நீங்களே ஒரு ஜாமீன் போடலாம்…”

 

“சரி… நான் ஏற்பாடு செய்றேன்…” என்று சொல்லியபடி மதுமதியின் தந்தைக்குக் கைப்பேசியில் தொடர்பு கொண்டார்.

 

வீரராகவனின் கார் அவருடைய மருத்துவமனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ‘தர்மராஜ் காலிங்’ என்று சத்தமிட்டு, கைப்பேசி அவருடைய கவனத்தை ஈர்த்தது.

 

“ஹலோ…”

 

“ஹலோ… நான் தர்மராஜ் பேசுறேன்…”

 

“சொல்லுங்க சார்… எப்படி இருக்கீங்க…?”

 

“இருக்கேன் சார்… உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்… இப்போ எங்க இருக்கீங்க…?”

 

“ஹாஸ்பிட்டல் போயிட்டு இருக்கேன்… என்ன விஷயம் சொல்லுங்க…”

 

“சார்… நான் சொல்றதைக் கேட்டு அதிர்ச்சியாக வேண்டாம்…”

 

“சொல்லுங்க… என்ன புதிர் போடறீங்க….? எதுவும் சீரியசான விஷயமா…? முகிலனுக்கும் மதுவுக்கும் ஒண்ணுமில்லையே…?”

 

“மதுவை போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க…”

 

“என்னது…!” அவருடைய கார் நட்டநடுச் சாலையில் கிரீச்சிடும் சத்தத்துடன் திடுமென நின்றது…

 

“அதிர்ச்சியாக வேண்டாம் என்று சொன்னேனே…! ஒண்ணும் பெரிய கேஸ் இல்ல…” தர்மராஜ் வீரராகவனின் மனநிலையை உணர்ந்து சமாதானம் சொல்ல முயன்றார்.

 

“அது என்ன கேஸா வேணுன்னாலும் இருந்துட்டுப் போகட்டும்… இப்போ மது எங்க இருக்கா…?” பதட்டத்துடன் கேட்டார் வீரராகவன்.

 

“ஸ்டேஷன்ல தான்…”

 

“நீங்க எங்க இருக்கீங்க…?”

 

“ஸ்டேஷன் வாசல்ல இருக்கேன்…”

 

“எப்போ அரெஸ்ட் பண்ணினாங்க…? எதுக்கு அரஸ்ட் பண்ணினாங்க…?”

அவர் விளக்கமாகச் சொன்னார்.

 

“எனக்குக் காலையிலேயே ஃபோன் பண்ணியிருக்க வேண்டியதுதானே சார்… ஆமாம்… முகிலன் என்ன சொல்றான்…? எங்க அவன்…?”

 

அவர் முகிலனின் நிலைப்பாட்டை விளக்கினார். வீரராகவன் சிறிதுநேரம் எதுவும் பேசவில்லை. பிறகு சொன்னார்,

 

“சரி… நீங்க யாரோ லாயர்கிட்ட பேசினதா சொன்னீங்களே… யார் அவர்…?”

 

“அவர் பேர் சிதம்பரம்… நீங்க கேள்விப்பட்டிருப்பீங்க…”

 

“ஆமாம்… ஆமாம்… தெரியும்… அவர் பக்கத்துல இருக்காரா…?”

 

“இருக்கார்… பேசுங்க…” என்று சொல்லி, தன் கைப்பேசியை வழக்கறிஞரிடம் நீட்டினார் தர்மராஜ்.

 

“வணக்கம்… நான் லாயர் சிதம்பரம் பேசுறேன் சார்…”

 

“வணக்கம் சார்… நான் டாக்டர் வீரராகவன். மதுமதியின் அப்பா… மது இப்போ ஸ்டேஷன்ல இருக்கான்னு தர்மராஜ் சார் சொன்னாரு….”

 

“ஆமாம் சார்… இன்னிக்குள்ள ஜாமீன்ல எடுத்துடலாம் சார்…”

 

“அதெல்லாம் அப்புறம் பாருங்க சார்… முதல்ல என் பொண்ண ஸ்டேஷன்லேருந்து வெளிய கொண்டுவாங்க. இனி ஒருநிமிஷம் கூட அவ அங்க இருக்கக்கூடாது…”

 

“என்ன சார் சொல்றீங்க…”

 

“லாயர் சார்… என் பொண்ணு இப்போ ப்ரெக்னன்ட்… ஏதாவது காரணம் காட்டி அவளை உடனே ஜி-ஹச்-ல அட்மிட் பண்ணுங்க. என் மகள் குற்றவாளிகளுக்கு மத்தியில் இருப்பதற்குப் பதில் நோயாளிகளுக்கு மத்தியில் இருப்பது எவ்வளவோ மேல்…”

 

வழக்கறிஞருக்கு ஒரு தந்தையின் வேகம் புரிந்தது. “சரி சார்… செஞ்சுடலாம்… செலவு கொஞ்சம் ஆகும்… ஒண்ணும் பிரச்சனை இல்லையே…”

 

“அதைப்பற்றிக் கவலைபடாதீங்க… என் பொண்ணு எவ்வளவு சீக்கிரம் அங்கிருந்து வெளியே வரமுடியுமோ… அவ்வளவு சீக்கிரம் வரணும்… அதுதான் முக்கியம்… சரி… தர்மராஜ் சார்கிட்டக் கொடுங்க… ”

 

கைப்பேசி இடம் மாறியது…

 

“சொல்லுங்க சார்…” தர்மராஜ்ஜின் குரல் ஒலித்தது.

 

“சார் நான் வீட்டுக்குப் போய் ஜாமீன் எடுக்கத் தேவையான டாகுமெண்ட்ஸ் எடுத்துட்டு வந்துடறேன்… நீங்களும் தேவையான டாகுமெண்ட்ஸ் எடுத்துட்டு கோர்ட்டுக்கு வந்துடுங்க…” என்று சொல்லிவிட்டு வீட்டிற்குக் காரைத் திருப்பினார்.

 

வீரராகவன் வழக்கறிஞரிடம் பேசிய அரை மணிநேரத்தில் மதுமதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

 

கண்கள் விழித்திருந்தாலும் ‘தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது…? தான் எங்கு இருக்கிறோம்…?’ என்று எதைப்பற்றியும் யோசிக்க முடியாதபடி அவளுடைய சிந்தனைகள் வேறு ஓர் உலகத்தில் சஞ்சரித்திருந்தன.

 

# # #

 

நீதிமன்றத்தில் மதுமதியை ஜாமீனில் எடுக்க பெரும் பரபரப்புடன் காத்திருந்தார்கள் அவளைச் சேர்ந்தவர்கள். கெளசல்யாவிற்கு விபரம் தெரிவிக்கப்படாததால் அவள் வரவில்லை. மாலை மூன்று மணிக்கு, மதுமதியின் ஜாமீன் வழக்கு விசாரிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் அலுவல் தொடர்பான அவசர வேலை காரணமாக நீதிபதி மதுரைக்குச் சென்றுவிட்டார். காவலர்கள் மதுமதியை ஆஜர் செய்ய அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்கள். அனைவருக்கும் ஒரே படபடப்பு… நீதிபதி வரவில்லையென்றால் மதுவை ஜாமீனில் எடுக்க முடியாது. இன்று எடுக்கவில்லை என்றால் இன்னும் இரண்டு நாட்களுக்கு எதுவும் செய்ய முடியாது.

 

எல்லோரும் வழக்கறிஞரின் முகத்தை… முகத்தை… பார்க்கிறார்கள். அவர் நீதிபதிக்குப் பயந்து… பயந்து… தொடர்பு கொண்டு விபரம் கேட்கிறார். அவரை எரிச்சல்படுத்தி விடவும் கூடாது… மீறினால் ஜாமீன் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளது. அதனால் அவர் சொல்லும் சால்ஜாப்பை அப்படியே ஏற்றுக்கொண்டு வீரராகவனையும் தர்மராஜ்ஜையும் சமாதானம் செய்ய முயன்றார். அவருடைய அனுபவத்தில் ஒரு ஜாமீன் கேஸுக்கு இவ்வளவு தூரம் அவர் பதட்டப்பட்டது இதுதான் முதல்முறை…

 

அவருடைய ரத்த அழுத்தத்தை வெகுவாக ஏற்றிவிட்டு, மாலை ஐந்து மணிக்கு நீதிபதி தேனி வந்து சேர்ந்தார். பெரிதாக எந்த விசாரணையும் இல்லாமல் மதுமதிக்கு ஜாமீன் வழங்கி கையெழுத்துப் போட்டார்.

 

# # #

 

வீரராகவனின் கார் மதில்சுவரைத் தாண்டி தோட்டத்தைக் கடந்து வந்து, வீட்டு வாசலில் நின்றது. முதலில் காரிலிருந்து இறங்கிய வீரராகவன்… காரைச் சுற்றிக் கொண்டு சென்று மறுபக்கக் கதவைத் திறந்துவிட்டார். மதுமதி கிழே இறங்கினாள்.

 

வீரராகவனின் வருகையைப் பொருட்படுத்தாமல் தோட்டத்தில் மண்ணைக் கொத்திக் கொண்டிருந்த கௌசல்யா உள்ளுணர்வு உந்த திரும்பிப் பார்த்தாள்… களைந்த கேசமும், மெலிந்த உடலும், தளர்ந்த ஆடையும், களையிழந்த முகமுமாக காரிலிருந்து இறங்கும் மகளைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

 

“மது…!!!” என்ற கூவலுடன் மகளிடம் ஓடினாள். அருகில் சென்றதும் மகளின் மேடிட்ட வயிறு கண்ணில்பட்டது. சந்தோஷமும் துக்கமும் போட்டிப் போட்டுக் கொண்டு தாக்க… அவள் கண்களில் கண்ணீருடன் மகளைக் கட்டிக் கொண்டாள். மதுமதி உணர்ச்சிகளைத் தொலைத்துவிட்டு அசையாமல் நின்றாள்.

 

“கௌசி… மதுவை உள்ள கூட்டிட்டுப் போ…” வீரராகவன் மென்மையாகச் சொன்னார்.

 

கௌசல்யா அவசரமாக மதுவைத் தன்னிடமிருந்து விடுவித்துவிட்டு “என்ன திடீர்னு கூட்டிட்டு வந்திருக்கீங்க…? ஏன் மது ஒருமாதிரி இருக்கா…?” என்று கணவனிடம் கேட்டபடி மகளின் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள்.

“அதெல்லாம் பிறகு சொல்றேன்… நீ மதுவைக் குளிக்க வச்சு அவளுக்கு ஏதாவது சாப்பிடக் கொடு…”

 

‘கார்முகிலனுக்கும் மதுமதிக்கும் ஏதோ பிரச்சனைப் போலும்… மது கோவித்துக்கொண்டு அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள்…’ என்று நினைத்து மகளை எப்படிச் சமாதானம் செய்து தம்பியுடன் சேர்த்து வைப்பது என்று கணக்கிட்டுக் கொண்டே மகளுக்குக் குளிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள் கௌசல்யா.

 

தன்னை மறந்து ஷவரில் நின்று கொண்டிருந்த மதுமதி “மது… என்னாம்மா இன்னும் செய்ற…? சீக்கிரம் குளித்துவிட்டு வாம்மா…” என்கிற தாயின் குரல் கேட்டுத் தன்னிலைக்கு வந்தாள்.

 

“வர்றேம்மா…” என்று தாய்க்குப் பதில் கொடுத்துவிட்டு, ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தவளின் நடவடிக்கைகள் கௌசல்யாவைக் குழப்பின. தன்னுடைய வேலைகளைத் தானே செய்துகொள்ளத் தெரியாத குழந்தை போல் ஈரத்தலையுடன் அமர்ந்திருந்த மகளைப் பார்த்து வியந்த கௌசல்யா… மகளின் கூந்தலை ஹேர் டிரையரின் உதவியுடன் உலரச் செய்து, அவளைச் சாப்பிட வைக்க முயற்சித்தாள். முடியவில்லை…

 

பாலைக் குடித்துவிட்டு மெத்தையில் கண்களை மூடி, சுருண்டு படுத்துவிட்ட மகள் உறங்குவதாக நினைத்த கௌசல்யா கணவனைத் தேடி வந்தாள்.

 

‘என்ன ஆச்சு…? மது ஏன் இப்படி இருக்கா…? முகிலனுக்கும் மதுக்கும் என்ன பிரச்சனை…? நீங்க மதுவை எங்க பார்த்தீங்க…?” என்று கேள்விகளை அடுக்கினாள்.

 

வீரராகவன் நடந்ததைச் சொன்னார். அனைத்தையும் கேட்ட கௌசல்யா சத்தமில்லாமல் அழுதாள். யாருக்காக அழுவது… வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நடைபிணமாக வந்து நிற்கும் மகளுக்காக அழுவதா…? கையிலிருந்த வைரத்தைக் குப்பையில் போட்டுவிட்டு, கண்ணாடிக் கல்லை வைரமென்று நம்பிக்கொண்டிருக்கும் ஏமாளித் தம்பியை நினைத்து அழுவதா…?

 

கார்முகிலனும் மதுமதியும் கௌசல்யாவின் இரண்டு கண்கள்தான் என்றாலும், இன்றைய சூழ்நிலையில் மதுமதிக்காகத் தான் கௌசல்யாவின் மனம் தவித்தது. அவளுக்கு ஜீரணிக்கவே முடியவில்லை. தன் செல்ல மகள் இன்று ஒரே நாளில் என்ன பாடுபட்டுவிட்டாள்… எத்தனை கசப்பான அனுபவங்களைப் பெற்றுவிட்டாள் என்று எண்ணியெண்ணி மருகினாள். இதற்கெல்லாம் தன் கூடப்பிறந்தவன் காரணமாகிவிட்டானே என்கிற குற்ற உணர்வு அவளைக் கொன்றது.

 

இவையனைத்திற்கும் சிகரம் வைத்தது வீரராகவனின் நடவடிக்கைதான்… தன் மகளுக்கு இவ்வளவு கொடுமை செய்துவிட்ட கார்முகிலனைப் பற்றியோ, அவனுக்குப் பெண்ணைத் திருமணம் செய்துகொடுத்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்த தன்னைப் பற்றியோ… வீரராகவன் ஒரு வார்த்தைக் கூடக் குறைச் சொல்லாமல் இருந்தது அவளை மிகவும் பாதித்துவிட்டது.

 

நொந்துபோன கௌசல்யா தனிமையில் தளர்ந்து அமர்ந்துவிட்டாள். எவ்வளவு பிரச்சனையிலும் சோர்ந்து போகாமல் தன் எதிர்ப்பைப் பிடிவாதமாகக் காட்டும் குணமுடைய மனைவியின் இன்றைய சோர்ந்த முகத்தைப் பார்க்கச் சகிக்காமல் அவளை நெருங்கினார் வீரராகவன்.

 

“கௌசி… மது என்ன செய்றா…?” அவளுடைய தனிமையைக் கலைக்க எண்ணிப் பேச்சுக் கொடுத்தார்.

 

“தூங்குறா…” கௌசல்யாவின் குரல் சுரத்தின்றி ஒலித்தது.

 

“சாப்பிட்டாளா…?”

 

“பால் மட்டும் குடிச்சா…”

 

“பால் மட்டுமா…! டிஃபன் சாப்பிடலையா…?”

 

“ம்ஹும்… இட்லியைத் தட்டில் வைத்துக்கொண்டு எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறாள். சாப்பிடச் சொல்லி பிடிவாதமாகச் சொன்னால்… ஒரு மணிநேரமாக ஒரு இட்லியைச் சாப்பிடுகிறாள்…” கெளசல்யாவிற்கு மேல பேசமுடியாமல் தொண்டை அடைத்தது.

 

வீரராகவனுக்கும் கவலையாகத்தான் இருந்தது. ஆனாலும் மனைவி வருத்தப்படுவது பிடிக்காமல் “கவலைப்படாதே கௌசி… சீக்கிரமே எல்லாம் சரியாகிவிடும்…” என்று சொல்லி ஆறுதலளிக்க முனைந்தார்.

 

கௌசல்யா அவரைப் பார்த்து வியந்தாள். அவளுடைய வியப்பை இன்னும் அதிகமாக்கினார் அவர்.

 

“நீ சாப்பிட்டியா கௌசி…?” பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கேள்வியை மனைவியைப் பார்த்து கேட்கிறார். பாசமில்லாமல் இல்லை… பாசத்தை விட, பயம் அதிகமாக இருந்தது. அதுதான் அவர் மனைவியிடம் சகஜமாக இல்லாததற்குக் காரணம். இன்று பயத்தைத் தள்ளி வைத்துவிட்டார். காரணம்… மனைவி ஓரளவு தைரியமாக இருந்தால்தான் மகளை மீட்டெடுக்க முடியும் என்று நம்பினார்.

 

கணவனைப் பார்த்துக் கொண்டிருந்த கௌசல்யாவின் கண்கள் கலங்கின. அந்தக் கலக்கத்திற்கான காரணம் மகளின் நிலை என்று அவர் நினைத்தார். ஆனால் உண்மை அதுவல்ல… மகளின் எதிர்காலம் சிக்கலாகிவிட்ட வருத்தம் நெஞ்சில் நெருஞ்சி முள்ளைப் போல் குத்திக் கொண்டிருந்தாலும், அவள் மனம் கலங்குவதற்குக் காரணம்… கணவனிடம் இத்தனை ஆண்டுகளாகத் தான் நடந்து கொண்ட விதம் சரிதானா என்கிற சந்தேகம் முதல்முறையாக அவளுக்குள் எழுந்திருந்தது தான்.

 

அவர் தேவதையாக பூஜித்த மகள்… வாழ்க்கையில் அவருக்கிருந்த ஒரே சந்தோஷம், பிடிப்பு எல்லாமே அந்த மகள் தான். அவளுடைய வாழ்க்கையை அழித்து அவளை நடைபிணமாக மாற்றிவிட்டவன் தன்னுடைய தம்பி… அவனுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதற்காகத் தன் மகளையே காவு கொடுத்தவள் கௌசல்யா… நியாயமாகப் பார்த்தால் வீரராகவன் கௌசல்யாவையும்… கார்முகிலனையும்… சாடியிருக்க வேண்டும். ஆனால் அவர் அவளைக் குறை சொல்லாததோடு அவளுடைய நலத்தையும் விசாரிக்கிறார்… என்ன மனிதர் இவர்…!

 

தன்னுடைய தாயின் மரணத்திற்குக் கணவன் மட்டும்தான் காரணம் என்று மூர்க்கமாக நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு இப்போது உண்மையில் அன்று நடந்தது என்ன என்று சிந்திக்கத் தோன்றியது. மருத்துவமனை கட்டுவதற்குத் தன் தாயிடமிருந்து வாங்கிய பணத்தை ஏமாற்றிவிட்டார் என்று இத்தனை நாட்களாக பொருமிக் கொண்டிருந்தவளுக்கு… இன்று, தான் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க அவருடைய தாயை அனுப்பியதும்… தன்னுடைய தம்பி அவருடைய தாயை அவமதித்து அனுப்பிவிட்டதும் நினைவில் வந்தது.

 

உடல் நலமில்லாமல் இருந்த தன் தாய்க்கு மருத்துவ உதவி செய்யவில்லை என்று இத்தனை நாட்களாக அவரைக் கரித்துக் கொட்டிய மனம், அவர் திருப்பதிக்குக் கிளம்புவதற்கு முன் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்துவிட்டுச் சென்றதும்… அதைச் செய்யாமல் விட்டது அவருடைய பெற்றோர்கள் தான் என்பதும்… அந்தத் தவறுக்காக அவர் தன் பெற்றோரை முழுவதுமாக ஒதுக்கிவிட்டதும் நினைவில் வந்தது.

 

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தாயைப் பார்க்கத் துடித்த தன்னை, கட்டாயப்படுத்தி அன்று திருப்பதிக்கு அழைத்துச் சென்ற அவருடைய அரக்கத்தனம் இன்று அவருடைய அறியாமையாகத் தோன்றியது.

 

இவையெல்லாம் சப்பைக்கட்டுகள் என்று அறிவு எடுத்துரைத்தாலும்… மனமோ, ‘அவருக்கு நீ கொடுத்த தண்டனை மிக அதிகம்…’ என்று இடித்துரைத்தது. கௌசல்யா ‘தவறு செய்துவிட்டோமோ…!’ என்று குழம்பிப் போனாள்.
Comments are closed here.

You cannot copy content of this page