Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 47

அத்தியாயம் – 47

 

ஹாலின் வலது பக்கம் இரண்டாவது அறையினுள் நுழைந்த கார்முகிலன், கட்டிலில் ஓர் உருவம் படுத்திருப்பதைக் கண்டு அருகில் சென்றான். அவனுடைய கண்கள் அதிர்ச்சியில் விரிந்து மீண்டும் அந்த உருவத்தை ஆழ்ந்து நோக்கின…

 

‘மதியா…! என் மதியா இது…!’ அவனால் நம்பவே முடியவில்லை.

 

மனக்கவலை ஒரு மனுஷியின் உருவத்தை இந்தளவு மாற்றிவிடுமா…! அவனுடைய உருமாற்றமெல்லாம் என்ன மாற்றம்…! அவள் உருமாற்றத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது. வேரோடு பிடுங்கி வெயிலில் போட்ட கொடி போல் நைந்து, காய்ந்து, தலைமுடியெல்லாம் உதிர்ந்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிப் போய்… பார்க்கவே பரிதாபமாகப் படுத்திருந்தாள். அவன் மனம் ரணமானது. தாங்கமுடியாத வேதனையில் அவள் காலடியிலேயே அமர்ந்துவிட்டான்.

 

கார்முகிலனைப் போல் கர்வமான ஆண் அழுவதே அதிசியம் என்கிறபோது… அன்று அவன் ஒரு பெண்ணைப் போல் மனமுடைந்து குமுறி அழுதான் என்பது நம்பவே முடியாத உண்மையாகிப் போனது. சத்தமில்லாமல் குலுங்கி அழுதவனின் கண்ணீர் அவள் பாதத்தை நனைத்தது. காலில் பட்ட கூட உணர முடியாதபடி தூக்கமாத்திரை அவளை ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்த்தியிருந்தது.

 

நீண்ட நேரம் அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தவனின் துக்கம் நொடிக்கு நொடி அதிகமாகிக் கொண்டே இருந்தது. மலர்ந்த ரோஜாவாகச் சிரித்துக் கொண்டிருந்தவளை, காய்ந்த சருகாக மாற்றிவிட்டோம் என்கிற குற்ற உணர்ச்சி அவன் மனதை அறுத்தது.

 

அதற்குமேல் அங்கிருக்க முடியாமல், அதே அறையில் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கூடப் பார்க்கும் சிந்தனை இல்லாமல் வெளியேறினான்.

 

“தம்பி… என்ன ஆச்சு…? மது எழும்பலையா…?”

 

“இல்ல… தூங்கட்டும்… நான் நாளைக்கு வர்றேன்…”

 

“சரி… குழந்தையைப் பார்த்தியா…?”

 

“குழ…ந்…தை…!” அப்போதுதான் குழந்தையின் ஞாபகம் வந்தது அவனுக்கு. மழுப்பலாக “ம்ம்ம்…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டான்.

 

# # #

 

“மது… நேற்று முகிலன் இங்கு வந்திருந்தானம்மா…” கௌசல்யா மகளிடம் பேச்சை ஆரம்பித்தாள்.

 

குழந்தைக்கு உடைமாற்றிக் கொண்டிருந்த மதுமதி, சட்டெனத் தாயைத் திரும்பிப் பார்த்தாள். ஆனால் எதுவும் கேட்கவில்லை.

 

“நீ தூங்கிட்டு இருந்த மது… தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லிட்டுப் போய்விட்டான். இன்றைக்கு வருவதா சொல்லியிருக்கான்…”

 

மதுமதியின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. “ஓ…” என்ற ஒற்றை வார்த்தையுடன் பேச்சை முடித்துக்கொண்டு குழந்தையைக் கவனிப்பதில் முனைந்தாள்.

 

மகள் தம்பியை மன்னித்து அவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் கௌசல்யாவின் விருப்பம். அதை மறைக்காமல் மதுவிடம் தெரியப்படுத்தினாள்.

 

“மது… முகிலன் தப்புப் பண்ணிவிட்டான்… ஆனால் உன்னை வருத்த வேண்டும் என்று நினைத்துச் செய்யவில்லை. உண்மை இன்னதென்று தெரியாமல்… அறியாமையில் செய்துவிட்டான். இப்போது மனம் வருந்துகிறான். அவனுக்கு நம்மைவிட்டால் வேறு யார் இருக்காங்க சொல்லு… அவன் பண்ணின தப்புக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு… ஆனால் அவனை ஒதுக்கி மட்டும் தள்ளிவிடாதே மது… தாங்க மாட்டான்…” என்று கண்ணீர் உகுத்தாள்.

 

தாயின் முகத்தை விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்த மது பதிலேதும் சொல்லவில்லை.

 

“என்னம்மா…?” கௌசல்யா மகளின் பார்வையின் அர்த்தம் புரியாமல் கேட்டாள்.

 

“ம்ஹும்…” என்று தலையை அசைத்து, “ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டு மடியிலிருந்த குழந்தையின் பக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

 

வாசலில் கார் சத்தம் கேட்டது. கார்முகிலன் தான் வந்திருந்தான். கௌசல்யா வெளியே வந்து தம்பியிடம் விபரம் சொன்னாள்.

 

“தம்பி… மது உள்ளதான் இருக்கா. போய்ப் பேசு… அவ எடுத்தெறிஞ்சு பேசினாலும் நீ கோபப்படக் கூடாது… தப்பு முழுக்க உன்மேல தான் இருக்கு… அவ ரொம்பக் காயப்பட்டுப் போயிருக்கா… அதனால பார்த்துப் பேசு… அத்தான் வெளிய போயிருக்காரு… எனக்கு இங்க தோட்டத்துல கொஞ்சம் வேலை இருக்கு. இப்போ வந்துடறேன்…” என்று அவனுக்கு அறிவுரை சொல்லி வீட்டிற்குள் அனுப்பி வைத்தாள். அவர்களே தங்களுக்குள் முட்டிமோதி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று அவர்களைத் தனித்து விட்டுவிட்டு மூத்தவர்கள் விலகிக் கொண்டார்கள்.

 

கார்முகிலன் ஒருவித நடுக்கத்துடன் உள்ளே சென்றான். அங்கே மடியில் குழந்தையுடன் தரையில் சுவற்றில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள் மதுமதி. இவன் உள்ளே நுழைவது அவள் கடைக்கண்ணில் தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும் திரும்பாமல் அமர்ந்திருந்தாள்.

 

அவன் அவளை நெருங்கி சென்றான். மூச்சு விடுகிறாளா அல்லது சிலையாகிவிட்டாளா என்று சந்தேகமே வந்துவிடும் அளவிற்கு அசைவற்று அமர்ந்திருந்தவளுடைய இறுக்கம் அவன் மனதைக் கசக்கியது. தயக்கத்துடன் அவளுக்கருகில் அமர்ந்து,

 

“மதி…” என்றான் மெல்லிய குரலில்.

 

அவளிடம் அசைவில்லை. கண்கள் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையின் முகத்தில் ஆழ்ந்திருந்தன.

 

“மதி… ப்ளீஸ்…”

 

அவள் திரும்பவில்லை.

 

“ப்ளீஸ்… என்னை ஒருமுறை பார் மதி…” வெளிப்படையாகக் கெஞ்சினான்.

 

“……………….”

 

“நீ சொன்ன… நீலவேணியை வீட்ல சேர்க்க வேண்டாம் என்று எவ்வளவோ சொன்ன… நான்தான் கேட்கல… இப்போ அனுபவிக்கிறேன்…”

 

“அவளை ஒரு நல்ல தோழி என்று நம்பித்தான் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன் மதி… அவ மனசுல இவ்வளவு விஷமா…! நான் நினைச்சுக் கூடப் பார்க்கல மதி. அவ ஏமாற்றல… நான்தான் படுகேவலமா அவகிட்ட ஏமாந்திருக்கேன்… என்னோட முட்டாள்தனத்தால உன்ன ரொம்பக் கஷ்டப்படுத்திட்டேன்…” இறங்கிய குரலில் சொன்னான்.

 

“அன்றைக்கு நான் காலேஜ்ல இருந்தப்போ… அவ எனக்கு ஃபோன் பண்ணி, ‘சாகப்போறேன்’னு சொன்னா… அவ சாவுக்கு நீ தான் காரணமென்றும் சொன்னா… ஏதோ கோபத்துல பேசுறான்னு தான் நினச்சேன். எதுக்கும் நேரா போய்ப் பார்த்துப் பேசிட்டு வரலாமேன்னு அவ வீட்டுக்குப் போனா… பிணமா கிடக்கறா…! அந்த நேரத்துல… மதி…” அவன் குரல் கம்மியது. பேச சிரமப்பட்டான், தொண்டையைச் செருமிக் கொண்டு தொடர்ந்தான்…

 

“உன்னால ஒரு உயிர் போய்விட்டதுன்னு நம்பிட்டேன் மதி… உன் பக்கம் நியாயம் இருக்குமென்று என்னால் யோசிக்கவே முடியல… சாகும்போது யாராலும் பொய் சொல்ல முடியாதுன்னு நினச்சுட்டேன்… இவ்வளவு கிரிமினலா…! நான் எதிர்பார்க்கவே இல்ல…!!!” வேதனை படர்ந்திருந்தது அவன் முகத்தில்.

 

தூரத்தில் எங்கேயோ பார்த்தபடி சொன்னான்… “பெரிய நியாயவாதி மாதிரி… செத்துப் போனவளுக்குக் கிடைக்கற நியாயத்தைத் தடுக்கக்கூடாதுன்னு நினச்சு… நீ ஸ்டேஷன்ல இருக்கும்போது கூட…” அவன் ஒருநொடி தயங்கி பின் தொடர்ந்தான்.

 

“நீ என்னை ரொம்ப எதிர்பார்த்த நேரத்துல உன்ன பார்க்க வராமல் இருந்துட்டேன். உன்ன உயிரோடு கொன்னுட்டேன். யாராலையும்… கடவுளால கூட… ப்ச்… கடவுள் என்ன… என்னாலையே என்னை மன்னிக்க முடியல மதி…” அவன் கட்டுப்பாட்டை மீறி அவனுடைய கண்கள் கலங்கின.

 

அவனிடமிருந்த அகங்காரம் கர்வமெல்லாம் மாயமாக மறைந்துவிட்டிருந்தன. அவளுடைய ஒரு பார்வை தன்மீது படியாதா என்கிற ஏக்கம், கலங்கியிருந்த அவன் முகத்திலும் குரலிலும் வெளிப்பட்டது.

 

இதுவரை கம்பீரமாக நிமிர்ந்து நின்ற ஓர் ஆண், இன்று அவள் முன் கலக்கமும் ஏக்கமுமாக அமர்ந்திருக்கிறான். அவை எதுவும் அவளைப் பாதிக்கவில்லை. அவள் இறுகிப்போய் அமர்ந்திருந்தாள்.

 

“மதி… நான் கல்நெஞ்சக்காரன் தான்… பிடிவாதக்காரன் தான்… முரடன் தான்… மனிதர்களை எடைப்போட தெரியாத முட்டாள் தான்… இது அத்தனையும் எவ்வளவு உண்மையோ, அதே அளவு என் காதலும் உண்மைதான் மதி… நீ இல்லாத வாழ்க்கை எனக்கு பாலைவனம் தான்…” அவள் புரிந்துகொள்ள வேண்டுமே என்கிற தவிப்புத் தெரிந்தது அவனிடம்.

 

அவனுடைய பேச்சிற்கு அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை. அவன் மனம் சோர்ந்தது,

 

“உன்னை வீட்டை விட்டு அனுப்பிட்டு நான் மட்டும் நிம்மதியாவா இருந்தேன்…! உன்ன சப்போர்ட் பண்ணவும் முடியாம… உன்கிட்டேயிருந்து விலகி நிற்கவும் முடியாம… ஏதோ வாழ்ந்துட்டு இருந்தேன்… நீ தப்புப் பண்ணிட்டங்கிற எண்ணம் என்னை ஆட்டிப்படைச்சிடுச்சு மதி… நான் நிம்மதியா தூங்கி ரொம்ப நாள் ஆச்சு…”

 

“நீ இல்லாம என்னால நிம்மதியா தூங்க முடியல… அதுவும் இப்போ… உன் மேல எந்தத் தப்பும் இல்லைன்னு தெரிஞ்ச பிறகு… மனசாட்சி உறுத்துது மதி… ரொம்ப வலிக்குது… தாங்க முடியல…”

 

“மதி… என்னைப் பாரு… ஏதாவது திட்டு… எதுக்குடா இங்க வந்தன்னு கேளு… வெளியே போடா நாயேன்னு சொல்லு… ஏதாவது சொல்லு… மதி ப்ளீஸ்…” அவன் அவள் காலில் விழாத குறையாகக் கெஞ்சினான். அவளோ, அவனைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை.

 

“எனக்குப் புரியுது மதி… என் முகத்த பார்க்கவே உனக்குப் பிடிக்கல. பரவால்ல… என்னுடைய மடத்தனத்துக்கு இது தேவைதான்…” அவன் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளச் சிறிது இடைவெளி எடுத்துக் கொண்டான்.

 

“மதி… மன்னிப்புங்கறது ரொம்பச் சின்ன வார்த்தை… நான் செய்த தப்புக்கு அந்த வார்த்தையைச் சொல்லிட்டுத் தப்பிக்க முடியாதுதான்… ஆனாலும் நான் மன்னிப்புக் கேட்டுத்தான் ஆகணும்… உன்னால… முடிஞ்சா… என்னை மன்னிக்க முடிஞ்சா… மன்னிச்சிடு மதி… ப்ளீஸ்…”

 

அவன் மன்னிப்புக் கேட்டு முடித்த அடுத்தநொடி மதுமதியின் கண்களிலிருந்து வெளிப்பட்ட இரு துளி கண்ணீர் முத்துக்கள் அவள் கன்னத்தின் வழியே உருண்டோடி மடியில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையின் முகத்தில் விழுந்து தெறித்தன.

 

உறக்கம் கலைந்துவிட்ட குழந்தை வீறிட்டது. குழந்தையின் அழுகுரலில் தன்னிலைக்கு மீண்டவள், குழந்தையுடன் தன்னுடைய அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 
Comments are closed here.