Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உயிரைத் தொலைத்தேன் – 5

அத்தியாயம் – 5

 

மாலை வேளையில், மொட்டைமாடியிலிருந்த பிரம்பு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து… எதிரே போடப்பட்டிருந்த மற்றொரு நாற்காலியில் காலைப் போட்டுக் கொண்டு, மேகங்களின் ஓட்டத்தைக் கவனித்தவாறே ஏதோ சிந்தனையில் இருந்த நீலவேணியின் கவனத்தை,

 

“என்ன நீலா யோசனை…?” என்கிற வேதவல்லி பாட்டியின் குரல் ஈர்த்தது.

 

“ஒண்ணுமில்ல பாட்டி…”

 

“என்னடா நீலா… உன் முகமே சரியில்லையே… நான் சொன்னதைப் பற்றி யோசிச்சுக்கிட்டு இருந்தியா…?”

 

“அதில் யோசிக்க என்ன பாட்டி இருக்கு…? நான்தான் முடிவையே சொல்லிவிட்டேனே…”

 

“இப்படிச் சொன்னா எப்படிம்மா…?”

 

“வேற எப்படிச் சொல்லச் சொல்ற…? இன்னும் எத்தனை நாள்… இந்தச் சாக்கடையில புரளச் சொல்ற…?” நீலவேணி வெடித்தாள்.

 

அவளுடைய கோபம் பாட்டியை எதுவும் செய்யவில்லை.

 

“நீ சொல்ற சாக்கடைதாம்மா நமக்கு இத்தனை நாள் சாப்பாடு போட்டது… அதை மறந்துட்டுப் பேசாத…”

 

பேத்தி பாட்டியை முறைத்தாள். அவளது சுட்டெரிக்கும் பார்வையில் வேறொருவராக இருந்திருந்தால் பொசுங்கியிருப்பார்கள். ஆனால் வேதவல்லி பாட்டி சாதாரண ஆள் அல்ல… அவர் பேத்தியின் முறைப்பை லட்சியம் செய்யாமல்…

 

“நமக்கு இதுதாம்மா விதி… இதை மாற்ற முயற்சி செஞ்சு வேதனையை விலை கொடுத்து வாங்கணுமா…?”

 

“என்னால முடியல பாட்டி… எனக்கு இந்த வாழ்க்கை வெறுத்துப் போச்சு… இந்த வாழ்க்கையிலிருந்து எப்படியாவது வெளிய வரணும் என்று நினைக்கிறேன்… நீ எனக்கு உதவி செய்யலைன்னாலும் பரவால்ல… கீழே பிடித்து மட்டும் இழுக்காத…”

 

“நீலா… நீ தேவையில்லாம குழப்பிக்கிற… நான் சொல்றதைக் கேளு… பாட்டி உனக்குக் கெடுதல் செய்ய மாட்டேன்… அந்த சினிமா டைரக்டர், தேனிக்கு ஷூட்டிங்குக்கு வந்திருக்காராம். வீட்டுக்கு வர்றேன்னு சொல்றாரு. வரச் சொல்றேன்… அவர்கிட்ட பேசி சினிமா வாய்ப்பை வாங்கப் பாரு… உன்னோட வாழ்க்கையே மாறிடும்…” பாட்டி முடிப்பதற்குள் பேத்தி சட்டென நாற்காலியிலிருந்து எழுந்தாள். எழுந்த வேகத்தில் அவள் அமர்ந்திருந்த நாற்காலி இரண்டடி பின்னுக்கு நகர்ந்தது.

 

“பா…ட்…டி…” அவள் ஆவேசமாகக் கத்தினாள்.

 

“என்னடி இது… புதுசா சத்தம் போட்டு ஊரைக் கூட்டுற…?”

 

“புதுசுதான்… எல்லாம் புதுசாத்தான் தெரியுது… விபரம் தெரியிறதுக்கு முன்னாடியே சாக்கடையில தள்ளிவிட்டுட்ட… விபரம் புரிஞ்சதுக்குப் பிறகு பார்த்தா, சுத்தியிருக்கிற எல்லாரோட வாழ்க்கையும் அழகா… பரிசுத்தமா இருக்கு. நான் மட்டும் சாக்கடையில புரண்டுகிட்டு இருக்கேன். எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்… என்னை விட்டுடு…” நீலவேணி கண்ணீருடன் வேண்டினாள்.

 

“இந்த வாழ்க்கை வேண்டாம் என்றால்… அடுத்து என்ன செய்யப் போற…? படிப்பு இல்ல… வேலை இல்ல… வருமானத்துக்கும் வழியில்ல… அடுத்து என்ன செய்றதா உத்தேசம்… பத்து பாத்திரம் தேய்க்கப் போறேன்… ரோடு கூட்டப் போறேன்னு பிதற்றினே… உன்னைக் கொன்னே போட்டுடுவேன்… சண்டாளி… வயசான காலத்துல என்னை டென்ஷனாக்கியே கொன்னுடுவ போலிருக்கே…”

 

“ப்ச்… சும்மா உளறாத பாட்டி… நீ சொல்ற மாதிரியெல்லாம் என்னால கஷ்டப்பட முடியாது. அதேசமயம் இந்த வாழ்க்கையும் எனக்குப் பிடிக்கல… எல்லாரும் வாழற ஒரு சாதாரண வாழ்க்கை எனக்கு வாழணும். அதாவது, ஒரு குடும்பம்… குழந்தைங்க… அன்பான கணவன்… கொஞ்சம் பணம்… இப்படி…” அவள் கண்கள் கனவில் மிதந்தன.

 

“வேண்டாம் நீலா… எட்டாக் கனிக்கு ஆசைப்படாத… நம்மளோட ஆசை எல்லாம் காசு பணத்தோட நின்னுடணும்… அதுக்கு மேல நமக்குக் குடுப்பினை இல்லம்மா…”

 

“ஏன்… ஏன் குடுப்பினை இல்ல…? நான் தெரிஞ்சு எந்தத் தப்பும் செய்யல. நீயும்… உன் மகளும் என் வாழ்க்கையை நாசமாக்கிட்டீங்க… இப்போ எனக்கு விபரம் புரிஞ்சுப் போச்சு… என்னைப் புரிஞ்சு ஏத்துக்க ஒரு மனுஷன் கண்டிப்பா வருவான்… அவன்கிட்ட நான் என் வாழ்க்கையை ஒப்படைப்பேன்…”

 

“தூர்ந்த கிணற்றைத் தூர்வார்க்க நினைத்து, காலத்தைக் கடத்திவிட்டு… அப்புறம் வாழ்க்கையும் இல்லாமல், பணமும் இல்லாமல் அவதிப்படாதே… சொல்லிட்டேன்…” பாட்டி கோபமாகப் பேசிவிட்டுக் கீழே சென்றுவிட்டாள்.

 

நீலவேணி மீண்டும் நாற்காலியில் பழையபடி அமர்ந்துகொண்டு மேக ஓட்டத்தைக் கவனித்தாள். இப்போது ஒரு சிறு மேகக்கூட்டம் கருத்திருந்தது. அதற்குக் கண் காது மூக்கு வாயெல்லாம் இருப்பது போல் தோன்றியது. அது மெல்ல மெல்ல கார்முகிலனின் முகமாக மாறியது…

 

நீலவேணி அன்றொருநாள் வழியில் கார்முகிலனைப் பார்த்தது முதல் முறை அல்ல. அதற்குமுன்பே அவனைப் பலமுறை பார்த்திருக்கிறாள். அவனோடு வேலை செய்யும் ஸ்டீஃபன் நீலவேணியின் கஸ்டமர்தான். அவனோடு சேர்த்து வைத்து கார்முகிலனைப் பல இடங்களில் பார்த்திருக்கிறாள். அப்போதெலாம் கார்முகிலன் அவளைக் கவனித்ததில்லை. அவனுடைய தோற்றம் அவளுக்குப் பிடித்திருந்தது. அவனைப் பற்றி ஸ்டீஃபனிடம் நாசுக்காக விசாரித்தாள்.

 

அவன் தனிக்கட்டை என்பதும்… அவனுக்கு உறவினர்கள் யாருமில்லை என்பதும்… படிப்பிலும், வேலையிலும் கெட்டிக்காரன் என்பதும் அவளைக் கவர்ந்தது. ஏற்கனவே தன் வாழ்க்கைமுறையில் வெறுப்பாக இருந்தவள், இவன் தனக்கு ஏற்ற துணையாக இருப்பான் என்று நினைத்தாள். அதோடு திருமணத்திற்கு அவன் ஒருவனை சம்மதிக்க வைத்தால் போதும்… குடும்பம் என்று ஏதாவது இருந்தால் அவர்களையும் சேர்த்துச் சமாளிக்க வேண்டும்… அது முடியாத காரியம். அதனால் இவன்தான் தனக்கு ஏற்ற ஆள் என்று முடிவு செய்துவிட்டாள்.

 

அந்த நொடியிலிருந்து அவள் தன் பழைய வாழ்க்கையைத் தொடரவில்லை. பலமுறை பாட்டி நிர்பந்தித்தும் மசியவில்லை. எப்படியாவது கார்முகிலனைத் திருமணம் செய்துகொண்டு அவனோடு உற்ற துணையாக வாழ்ந்து, மீதி காலத்தைக் கழிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.

 

ஆனால் அவளைத் திருமணம் செய்துகொள்ள அவன் சம்மதிக்க வேண்டுமே…!!! அதை எப்படிச் சாதிப்பது…? முன்பின் தெரியாதவனிடம் சென்று அவள் தன்னைப் பற்றிச் சொன்னால்… அவன் அவளோடு நல்லவிதமாகப் பேசுவானா என்பதே சந்தேகம். இதில் திருமணத்தைப் பற்றி எப்படிப் பேசுவது… ஆனால் அவனை எப்படியாவது திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை மட்டும் அவள் மனதில் நாளுக்குநாள் வலுபெற்றுக் கொண்டே வந்தது. அவள் மன அமைதியை இழந்துவிட்டு இஷ்ட தெய்வத்திடம் ‘என்னை ஏன் இப்படியொரு நிலைக்கு ஆளாக்கினாய்…?’ என்று கேட்டுக் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள்.

 

‘நான் ஒழுக்கமான வாழ்க்கையை வாழ்ந்திருந்தால்… நிச்சயம் என்னுடைய அழகுக்கு ஒரு ராஜகுமாரனே என்னைத் திருமணம் செய்துகொள்ளத் தேடி வந்திருப்பான்… ஆனால் இப்போது…?’ அவள் மனம் எரிந்தது.

 

அந்த நேரத்தில் தான் கார்முகிலன் அவளை ஒருநாள் கோவிலில் பார்த்தான். அதைத் தொடர்ந்து வழியில் பார்த்தான். இவை இரண்டுமே தற்செயலாக நடந்த சந்திப்பு தான். ஆனால் அதைக் கடவுள் அவளுக்காக உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பாக அவள் நம்பினாள். அடுத்து அவன் தானாகத் தன் வீடு தேடி வருவான் என்றும் நம்பிக் காத்துக் கொண்டிருக்கிறாள்.

 

# # #

 

நீலவேணி முழுதாக மூன்று நாட்கள் காத்திருந்தும் கார்முகிலன் அவளுடைய வீட்டிற்கு வரவில்லை. அவளால் அதற்குமேல் பொறுக்க முடியவில்லை… ஸ்டீஃபனுக்கு ஃபோன் செய்து விசாரித்தாள். கார்முகிலன் இன்று கல்லூரிக்கு விடுப்பு எடுத்திருப்பது தெரிந்தது. அவன் அடிக்கடி செல்லும் நூலகத்தையும் அவனிடமே தெரிந்து கொண்டாள். இன்று அவன் இங்கு வந்தாலும் வரலாம் என்று உத்தேசித்துக் காலையிலேயே நூலகத்திற்கு வந்துவிட்டாள். காத்திருந்து காத்திருந்து அவனைப் பார்க்க முடியாமல் போனதால், இரண்டு மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டு வெளியே போனாள். ஒரு ஜூஸ் குடித்துவிட்டு திரும்ப வந்தாள்…

 

கார்முகிலன் லக்ஷ்மிபுரத்திலிருந்து தேனிக்கு வந்து கொண்டிருந்தான். அவன் மனதில் ஒரு சூறாவளி அடித்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட பதினெட்டு ஆண்டுகளுக்கு முன் அவனுடைய தாய் விற்ற பூர்வீக நிலத்தை அவன் இன்று வாங்கிவிட்டான். மகிழ்ச்சியடைவதற்குப் பதிலாகப் பழைய நினைவுகளால் மனம் பற்றி எரிந்தது.

 

‘அவனுடைய தாய் எதற்காக அந்த நிலத்தை விற்றாள்… பிறகு எப்படி ஏமாற்றப்பட்டாள்… அதைத் தொடர்ந்து என்னென்ன கொடுமைகளெல்லாம் நடந்து முடிந்துவிட்டன…’ என்கிற எண்ணங்கள் அலையலையாக அவன் மனதில் தோன்றி அவனை அமைதியிழக்கச் செய்தன.

 

தேனியை அடைந்ததும் அமைதியைத் தேடி அவன் நூலகத்திற்குச் சென்றான். இரண்டு மணிநேரம் நூலகத்தில் கழித்தபிறகு மனம் பழைய நினைவுகளைப் பின்னுக்குத் தள்ளி கொஞ்சம் சாந்தப்பட்டிருந்தது.

 

அவன் நூலகத்திலிருந்து வெளியே வரும் நேரம் நீலவேணி உள்ளே நுழைந்தாள். இருவரும் ஒருவரையொருவர் நேருக்குநேர் பார்த்தார்கள்… இருவர் முகத்திலும் புன்னகை வந்தது.

 

‘இவ்வளவு நேரம் இவன் உள்ள தான் இருந்தானா…? எப்படிப் பார்க்காமல் விட்டேன்…?’ அவள் தன்னையே கேட்டுக் கொண்டாள்.

 

“எப்படி இருக்கீங்க முகிலன்…?”

 

“நல்லா இருக்கேன் நீலா… நீங்க…?”

 

“ம்ம்ம்…” அவள் அழகாகப் புன்னகைத்தாள்.

 

அவளுடைய கையில் இரண்டு மூன்று குடும்ப நாவல்கள் இருந்ததை அவன் கவனித்தான். அவனுடைய கையில் இரண்டு ஆங்கிலப் புத்தகங்கள் இருந்ததை அவள் கவனித்தாள். அது என்ன புத்தகம் என்று அவளுக்குப் படிக்கத் தெரியவில்லை.

 

‘இவனுக்குத் தான் எந்தவிதத்தில் பொருத்தம்…’ என்கிற பயம் தோன்றியது. இருந்தாலும் ஆசை விடவில்லை…

 

“வீட்டுக்கு வரச் சொன்னேன்… வரவே இல்லையே…” என்று பேச்சைத் தொடர்ந்தாள்.

 

“சாரி நீலா… கொஞ்சம் வேலை… வர முடியல…”

 

“விருப்பம் இல்லைன்னு சொல்லுங்க…”

 

“ச்ச… ச்ச… அதெல்லாம் இல்லை… நிஜமாவே டைம் இல்ல…” என்று பச்சை பொய் சொன்னான். உண்மையில் அவள் அழைத்ததைப் பற்றி இவன் நினைக்கவே இல்லை.

 

“நிஜமாவா…?”

 

“நிஜமாதான்…”

 

“அப்படின்னா… இன்னிக்கு வரலாமே…”

 

‘இன்னிக்கும் வேலை இருக்கு…’ என்று சொல்லி அவன் தவிர்த்திருக்கலாம். ஆனால் ‘ஏன் இந்தப் பெண்ணின் வீட்டிற்கு ஒருமுறை போய்விட்டு வரக்கூடாது…?’ என்று நினைத்தவன்

 

“சரி… வர்றேன்…” என்றான். அவளுக்குள் மகிழ்ச்சி பொங்கியது.

 

“ஓ… தேங்க் யூ… இதோ… ஒரு நிமிஷத்துல வந்துடறேன்…” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஓடி வந்தாள்.

 

அவள் அப்படி ஓடிவரும் போது ‘இவள் ஏன் இப்படி நம் மீது ஆர்வம் காட்டுகிறாள்…!’ என்று நினைத்தவன் அவளுடைய ஸ்கூட்டியைத் தன் வண்டியில் அமர்ந்தபடி பின் தொடர்ந்தான்.

 
Comments are closed here.

error: Content is protected !!