Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கவியோ! அமுதோ! – 2

தோப்பில் சந்திப்பு
அத்தியாயம் – 2

சுமார் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்தது அந்த தோப்பு. கண்ணுக்கெட்டும் தூரம் வரை தென்னை மரங்கள் சீரான இடைவெளியில் அடுக்கி வைத்தது போல் வரிசையாய் அணிவகுத்து நின்றன. அதோடு ஊடு பயிராக வெங்காயம், தக்காளி, கத்தரி, மிளகாய் உள்ளிட்ட காய்கறி வகைகளும் ஓராண்டு பயன் தரக்கூடிய பயிரான மஞ்சள், வாழை, பப்பாளி மற்றும் பத்து ஆண்டு பயன் தரக்கூடிய கொய்யா, சப்போட்டா போன்ற பழ மரங்களும் பயிரிடப்பட்டிருந்தன.
பறந்து விரிந்த அந்த தோப்பில் ஒரு பக்கம் பெண்கள் களையெடுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் தக்காளிப் பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் சில ஆண்கள், போர்செட்டிலிருந்து பாய்ந்து வந்து வாய்க்காலில் விழும் தண்ணீரை பாத்திக்கட்டி தோப்பின் ஒவ்வொரு பகுதிக்கும் சீராக பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். சற்று உள்ளே, தேங்காய் பிடிங்கிக் கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே விழுந்துக் கிடக்கும் தேங்காயையெல்லாம் கூடையில் பொருக்கி ட்ரக்கில் கொட்டிக் கொட்டும் வேலையும் நடந்து கொண்டிருந்தது. ஆண்டு முழுவதும் வேலை நடந்துக் கொண்டேயிருக்கும் மகனின் தோப்பைக் கண்டு அவர் மனம் பூரித்தது.

 

‘என்னதான் ஊருக்குள்ள தண்ணிப் பஞ்சம் வந்தாலும், கதிரு தோப்பு மட்டும் என்னைக்கும் செழிப்பத்தான் இருக்கும்’ – பெருமையோடு நினைத்துக் கொண்டார்.

 

“எலேய் மாரியப்பா, தம்பி எங்கடா நிக்கிது?” – பழனியப்பன் குரல் கொடுத்தார்.

 

தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த மாரியப்பன் “கெழக்கால கொய்யா தோப்புப் பக்கம் நிக்கிதுங்கையா”

 

“கத்திரிக்காயெல்லாம் பறிக்கிற பக்குவத்துக்கு வந்துட்டு போலருக்கே”

 

“ஆமாமா… இன்னும் ரெண்டு மூணு நாள்ல பறிக்க ஆரம்பிச்சுடலாம்”

 

“தேங்காயெல்லாம் லோடு ஏத்தியாச்சா?”

 

“ஏத்திகிட்டே இருக்கோமுங்க ”

 

“காய் எவ்வளவுன்னு போவுது?”

 

“அஞ்சுருவா ரேட்டுக்கு போவுது”

 

“வெலக் கொறஞ்சுட்டோ !”

 

“ஆமாங்கையா எறங்கிப் போச்சு”

 

வழி நெடுக்க கண்ணில் படுவோரிடமெல்லாம் பேசிக் கொண்டே கொய்யா தோட்டத்திற்கு வந்து சேர்ந்தார் பழனியப்பன். பத்தடி தூரத்தில் அவருக்கு முதுகுக் காட்டி நின்ற கதிர்வேல், நின்றுக் கொண்டே கொய்யா மரத்திலிருந்து பழங்களைப் பறித்துவிடும் உயரத்திலும் அதற்கேற்ற உடற்கட்டுடனும் இருந்தான். தன் நீண்ட கைகளை ஆட்டியாட்டி வேலையாட்களிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். சாதாரண லுங்கி பனியன்தான் அணிந்திருந்தான். ஆனாலும் அசாதாரணமான கம்பீரத்துடன் காணப்பட்டான். தன்னம்பிக்கையின் அடையாளம்… உழைப்பின் வெகுமதி…

 

“ஐயா வந்துருக்காரு தம்பி” – வேலையாள் ஒருவன் கூற கதிர்வேல் திரும்பிப் பார்த்தன். பழனியப்பனை கண்டதும் அவன் நெற்றி சுருங்கியது.

 

“எப்புடிப்பா இருக்க?” என்றார். அவன் பதில் சொல்லாமல் அவரை ஆராச்சிப்பார்வை பார்த்தான். அதை புரிந்துக் கொண்டவர், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்பா. அதான் பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்”

“என்ன விஷயம்?” – முகம் கொடுக்காமல் வேறுபக்கம் திரும்பி கொய்யா மரத்திலிருக்கும் காய்களை ஆராய்ச்சி செய்தபடி கேட்டான்.

வேலையாட்களை ஜாடையாகப் பார்த்துவிட்டு தயங்கினார். அதற்கான காரணத்தை புரிந்துக் கொண்டவன், “வாங்க…” என்றபடி நடந்தான்.

 

பழனியப்பன் மகனை பின்தொடர்ந்து சென்றார். போர் கொட்டகையை அடைந்ததும் அங்கு வேலை செய்துக் கொண்டிருந்தவனை வேறு வேலை சொல்லி அப்புறப்படுத்திவிட்டு தந்தையை கயிற்றுக் கட்டிலில் அமர சொன்னான்.

 

“நீயும் உக்காருப்பா” அவர் மகனை தன் அருகில் அமரும்படிக் கூற, அவனோ வாய்க்காலில் முகம் கைகால் கழுவிவிட்டு, துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு வரப்பில் அமர்ந்து, “சொல்லுங்க” என்றான்.

 

எதிர்பார்த்த விலகல்தான் என்றாலும் மனம் வருந்துவதை அவரால் தடுக்க முடியவில்லை. சற்று நேர மௌனத்திற்குப் பிறகு ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றிவிட்டு வாய் திறந்தார். “உனக்கு கல்யாணம் பண்ணனும்னு நானும் அம்மாவும் ஆசப் படுறோம்பா”

கதிர்வேல் தந்தையை நிமிர்ந்துப்பார்க்காமல், தன் காலுக்கடியில் ஓடிக் கொண்டிருக்கும் வாய்க்காலையே வெறித்துக் கொண்டிருந்தான்.

 

“நீ என்னப்பா நெனக்கிற?”

 

“…………..”

 

“நடந்ததையே நெனச்சுகிட்டு இருக்காத கதிரு. அடுத்தது என்ன செய்யனும்னு பாரு. இப்படியே இருந்துட முடியுமா?”

 

“……………..”

 

“மீராவும் எத்தனை நாளைக்குத்தான் தனியா இருக்க முடியும்?” – அவர் சொல்லி முடிப்பதற்குள் விசுக்கென்று நிமிர்ந்து “என்ன!!!” என்று அதட்டினான்.

 

“மீரா… மீராவ பத்தி” – அவர் தடுமாறினார்.

 

“மீராவா பத்தி?” – கண்கள் இடுங்க கேட்டான்.

 

“நீ என்னப்பா நெனக்கிற?”

 

“மீராவ பத்தி நான் நெனக்கிறதுக்கு என்ன இருக்கு?” எரிச்சலுடன் வார்த்தைகளைத் துப்பினான்.

 

ஓரிரு நொடிகள் அவர் எதுவும் பேசவில்லை. மௌனமாக மகனைப் பார்த்துக் கொண்டிருந்தார். பதிலுக்கு அவனும் தந்தையை முறைத்தான்.

 

“மீராவோட வாழ்க்கையை சரி பண்ண வேண்டிய கடமை நமக்கு இருக்குப்பா… அந்த பொண்ண அப்படியே விட்டுட முடியாது. நல்லா யோசிடா தம்பி”- கிட்டத்தட்ட கெஞ்சினார்.

 

“நெனச்சேன்… இந்த மாதிரி எதையாவது சொல்லி எம்மருமகனோட மனச கலைக்கத்தான் நீங்க இங்க வந்திருப்பிங்கன்னு நெனச்சேன். அது சரியா போச்சு. ஏம்மாப்ள… தெரியாமத்தான் கேக்குறேன்… உங்களுக்கு இதேதான் பொழப்பா?” – எங்கிருந்தோ திடீரென்று அங்கு வந்து சேர்ந்த அரசப்பன் பழனியப்பனை கடுமையாகப் பேசினார். பழனியப்பனுக்கு முகம் சிவந்துவிட்டது. அவருக்கு சரியான பதிலடிக் கொடுக்கத் துடித்த நாவை அடக்கிக் கொண்டு மகனை திரும்பிப் பார்த்தார். அவனோ அசையாமல் இறுகிப் போய் நின்றான்.

 

‘என்னைய ஒருத்தன் அவமானப்படுத்துனா நீ ஏன்னு கேக்க மாட்டியாடா?’ அவருடைய பார்வை கதிர்வேலை கேள்விக் கேட்டது. அவன் அசையவே இல்லை. வேறு வழியின்றி அவரே அரசப்பனுக்கு பதில் கூறினார்.

 

“ஒரு நல்ல அப்பனோட பொழப்பே மகனுக்கு நல்லது கெட்டத எடுத்து சொல்றது தானே மச்சான்”

 

“நல்லது கெட்டத எடுத்து சொல்றிங்களா? யாருக்கு நல்லத சொல்றிங்க? எம்மருமவனுக்கா இல்ல அந்த மீராவுக்கா?”

 

“ரெண்டு பேருக்கும் தான்”

 

“அது கெடக்கு நிறுத்துங்க மாப்ள. ஆடு நனையுதேன்னு ஒநாயி அழுத கதையா… நல்லது கெட்டத எடுத்து சொல்ல நீங்க வந்துட்டிங்க. எது நல்லது எது கெட்டதுன்னு பிரிச்சுப் பாக்குற பக்குவமெல்லாம் எம்மருமவனுக்கு எப்பையோ வந்துடிச்சு. நீங்க உங்க ஜோலிய பாருங்க” – தேள் போல் கொட்டினார்.

 

பழனியப்பனின் தன்மானம் அடிவாங்கியது. அவரால் அதற்கு மேல் அந்த இடத்தில் ஒரு நொடிக் கூட தாமதிக்க முடியாது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டார். மீறினால் வார்த்தை வலுத்துவிடும் என்பது புரிந்தது. ஆனாலும் மகன் மீது கொண்ட சிறு நம்பிக்கையினால் மச்சானையும் அவர் பேசிய வார்த்தைகளையும் புறம் தள்ளிவிட்டு மகனிடம் கேட்டர்.

 

“தம்பி… நா பேச வந்தது உன்கிட்ட. நீ என்ன முடிவு சொல்ற சொல்லு…” என்றார்.

 

அவனோ “கிளம்புங்க…” என்று ஒற்றை வார்த்தையில் முடித்துவிட்டான். கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாதக் குறைதான். அவர் வேதனையுடன் அங்கிருந்து புறப்பட்டார்.

 

######

 

அடுத்த ஒரு மணிநேரத்தில் அரசப்பனின் வண்டி வீட்டு வாசலில் வந்து நின்றது. கோபத் தணலில் சிவந்திருந்தது அவர் முகம். வாசலில் இருந்த மண் தொட்டியிலிருந்து தண்ணீர் எடுத்து கைகால் முகம் கழுவினார். அப்போதும் அவருக்குள் எரிந்துக் கொண்டிருந்த தீ அணையவில்லை. அந்த நேரம் பார்த்து வேலையாட்களுக்கு பதினொரு மணி காப்பியை விநியோகித்துக் கொண்டிருந்த பவானி வாசல்பக்கம் காப்பி தம்ளர்கள் அடுக்கப்பட்டிருந்த தட்டுடன் வந்தாள்.

 

“என்னண்ணே சீக்கிரம் வந்துட்ட. காப்பி எடுத்துக்குறீயா?”

 

“யாருக்கு வேணும் உன் காப்பித்தண்ணி. நீ குடுக்குற காப்பிக்கு ஏமாந்து போயிதான் உன்வீட்டுல வந்து கெடக்குறேன்னு நெனச்சியா?” சுள்ளென்று பாய்ந்தார்.

 

“என்னண்ணே ஏன் இப்படி பேசுற?”

 

“வேற எப்புடி புள்ள பேசணும்? பூசி மொழுகி பேசியே மனுசன ஒண்ணுமில்லாம ஆக்குரதுல புருஷனும் பொண்டாட்டியும் ஜாடிகேத்த மூடிதான்” – கடுப்படித்தார். அவளுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது புரிந்துவிட்டது. இப்போது நாம் எதை பேசினாலும் வம்பாகிவிடும் என்கிற எண்ணத்தில் அவருக்கு மறுமொழிக் கூறாமல் மாட்டுத் தொழுவத்தின் பக்கம் செல்ல எத்தனித்தாள்.

 

“இந்தா புள்ள… நா சொல்றத நல்லா கேட்டுக்க” – அரசப்பனின் குரல் பவானியை தடுத்தது. அவள் நின்றாள்.

 

“எம்மருமவன் நாடால்ற ராஜா. அவனுக்கு எப்பேர்பட்ட பொண்ணு பாக்கனும்னு எனக்கு தெரியும். சும்மா கட்டிக் கழிஞ்சதெல்லாம் கொண்டுவந்து அவந்தலையில கட்டலாம்னு நெனச்சிங்க… நா மனுசனாவே இருக்கமாட்டேன் சொல்லிபுட்டேன்” – எச்சரிப்பது போல் சுட்டுவிரல் நீட்டிப் பேசினார். பவானிக்கும் கோபம் வந்தது.

 

“கட்டிக்கழிஞ்சதா! யார சொல்ற?” – தமையனை அக்னிப் பார்வை பார்த்தாள் பவானி.

 

“ஏன்… உனக்கு தெரியாதா? நீ சொல்லாமத்தான் உம்புருஷன் வந்து மீராவ கட்டிக்கன்னு எம்மருமவனுகிட்ட கெஞ்சிகிட்டு இருந்தாரா?” – இகழ்ச்சியாகக் கேட்டார்.

 

“அண்ணா!” – துடித்துப் போனாள் பவானி.

 

“சும்மா கத்தாத. அந்த மீரா என்ன கன்னிப் பொண்ணா? அறுத்துப் போனவதானே? அவளுக்கு மறுதாரம் கட்டிவைக்க நெனச்சா, அதுக்கு தகுந்த மாதிரி ஒரு மாப்ளைய பாத்து கட்டி வையி. அதவிட்டுட்டு எம்மருமவனோட வாழ்க்கையில வெளையாடாத” – வார்த்தைகளை விஷமாய் கக்கினார்.

 

“போதும் நிருத்துண்ணே….” – பவானி சகோதரனை அடக்க முயன்றுக் கொண்டிருந்த போது அவளுடைய பார்வை எதேர்சையாக வைக்கோல் போர் பக்கம் திரும்பியது. அங்கே அதிர்ந்த முகமும் கலங்கிய கண்களுமாக ஸ்தம்பித்துப் போய் நின்றாள் அந்த இளம் பெண்.

 

“மீ…ரா…” – பவானியின் இதழ்கள் முணுமுணுத்தன.

 
4 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Raji Raja says:

  When will the story continue mam? I am new to this site.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  அரசப்பனுக்கு என்ன பிரச்சனை,கதிர் மாமாவை கட்டினால் என்ன கட்டாவிட்டால் என்ன ,எதற்காக தங்கையிடம் தங்கை பெண்ணைப்பற்றி கடுமையாக பேசணும் .

  நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   Nithya Karthigan says:

   கமெண்ட் கொடுத்ததற்கு நன்றி தோழி… உங்களை தொடர்ந்து தளத்தில் பார்ப்பது மகிழ்ச்சி… அரசப்பனின் பிரச்சனை என்னவென்று விரைவிலேயே தெரிந்துகொள்வீர்கள்… நன்றி… 🙂


   • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Thadsayani Aravinthan says:

    ஓ மீரா கதிருக்கு தன் சகோதரனின் மனைவியா.

error: Content is protected !!