Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இதயத்தில் ஒரு யுத்தம் – 14

அத்தியாயம் – 14

ஜக்சனகாலன்… கோசி காலனிலிருந்து சுமார் எழுபத்தேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அங்குதான் தீரஜ்பிரசாத்தின் ஆட்கள் பயன்படுத்துவது போலவே சிறுத்தை கொடி கட்டிய கருப்பு குவாலிஸ் காரில் இரண்டு புது முகங்கள் உலவிக் கொண்டிருந்தன.

 

பள்ளி வாகனம் ஒன்று அந்த குவாலிஸ் காரை கடந்து சென்றது. அடுத்த சில நிமிடங்கலில் அந்த கார் பள்ளி வாகனத்தை பின் தொடர்ந்து சென்று வழிமறித்து நின்றது.

 

வாகனத்தில் இருந்த ஆசிரியர்களும் வாகன ஓட்டுனரும் ஒரு கனம் திகைத்தார்கள். பின் என்ன விஷயமாக இருக்கும் என்று குழப்பத்துடன் வாகனத்திலிருந்து இறங்கினார்கள்.

 

“ஏய்… இறங்கு இறங்கு… வேகமா இறங்கு… சீக்கிரம் சீக்கிரம்…” இரண்டு புது முகங்களில் ஒருவன் இடி குரலில் முழங்கினான்.

 

“ஜி… என்ன பிரச்சனை…?” குழந்தைகள் உட்பட அனைவரும் கீழே இறங்கிய பின் வாகன ஓட்டுனர் ஒருவித தயக்கத்துடனும் பயத்துடனும் கேட்டார்.

 

அவருக்கு பதில் சொல்லாமல் ஒருவன் வாகனத்திற்குள் ஏறினான். மற்றவன் கீழே இருப்பவர்களை கவனித்துக் கொண்டிருந்தான்.

 

சிறிது நேரத்தில் வாகனத்தில் ஏறியவன் கீழே இறங்கி “இல்ல இல்ல… இந்த பஸ் இல்ல… ” என்றான் அவனுடைய சகாவிடம்.

 

“ஓ… சரி…” என்று அவனுக்கு பதில் சொல்லிவிட்டு “ஒரு சந்தேகத்துக்காகதான் உங்க வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தோம்… மற்றபடி எதுவும் இல்லை… பயப்படாமல் கிளம்புங்க…” என்று பள்ளி வாகன ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு, கீழே நின்று கொண்டிருந்த அனைவரையும் வாகனத்தில் ஏற்றி அனுப்பிவிட்டு தங்களுக்குள் ஒரு மர்ம புன்னகையை பரிமாறிக் கொண்டார்கள்.

 

அடுத்த ஐந்தே நிமிடங்களில் அந்த பள்ளி வாகனமும் அதை வழிமறித்த கருப்பு குவாலிஸ் காரும் வெவ்வேறு இடங்களில் மடக்கி பிடிக்கப்பட்டன.

 

“இறங்கு இறங்கு… சீக்கிரம்… சீக்கிரம்… ம்ம்… எல்லாரும் இறங்கனும்…” இடி குரலில் இப்போது வேறு ஒருவன் முழங்க அனைவரும் நடுக்கத்துடன் வேக வேகமாக பள்ளி வாகனத்திலிருந்து இறங்கினார்கள்.

 

“என்ன… நின்னுகிட்டு இருக்க… ஏறு… ஏறு… ம்ம்… அந்த பஸ்ல ஏறு… குழந்தைகளா.. ஏறுங்க… அந்த பஸ்ல ஓடி போய் ஏறுங்க… ம்ம்.. சீக்கிரம்…” மற்றொருவன் விரட்டினான்.

 

என்ன நடக்கிறது என்பதே புரியாமல் அனைவரும் அவர்கள் சொல்லும் பேருந்தில் ஏறினார்கள். அவர்களிடம் பேசிக்கொண்டிருப்பது பிரசாத்ஜியின் ஆட்கள் என்பதால் மறு பேச்சின்றி கீழ்ப்படிந்தார்கள்.

 

பள்ளி வாகனத்திலிருந்து குழந்தைகளும் மற்றவர்களும் வேறு ஒரு வாகனத்தில் மாற்றப்பட்டு பயணத்தை தொடர்ந்த சில நிமிடங்களில் அவர்கள் வந்த பழைய வாகனம் வெடித்து சிதறியது. அந்த இருவரும் தங்களுடைய உயிரை தியாகம் செய்து சுமார் முப்பது உயிரை காப்பற்றியிருந்தார்கள்.

 

ஜக்சனகாலனில் பிடிபட்ட இருவரும் கோசிகாலனில் உள்ள தீரஜ்பிரசாத்திற்கு சொந்தமான பழைய பேப்பர் மில்லிர்க்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

 

# # #

 

சூர்யாவும் பிரபாவும் பிரசாத்ஜியின் வீடு இருக்கும் தெருவை நெருங்கிவிட்டார்கள். ஆட்டோ அந்த தெருவிற்குள் அனுமதிக்கப் படவில்லை. அதனால் ஆட்டோவிலிருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். பிரபாவின் படபடப்பை குறைக்க எண்ணியா சூர்யா வழியில் இருந்த ஒரு காபி ஷாப்பிற்கு அவளை அழைத்தாள்.

 

“பிரபா… வா ஒரு காபி சாப்பிட்டுவிட்டு போகலாம்… டைம்தான் ஆகலையே…”

 

“ஓகே சூர்யா…” இருவரும் காபி கடையை நோக்கி நடக்கையில்…

 

“ஹலோ… மேடம்…” ஒரு குரல் அவர்களை கலைத்தது.
தோழிகள் இருவரும் குரல் வந்த திசையை நோக்கி திரும்பினார்கள்.

 

“ஹலோ….” என்று சூர்யா அந்த நடுத்தர வயது மனிதனிடம் பதில் பேசினாள்.

 

“உங்களை எங்கேயோ பார்த்திருக்கேனே….!” தினமும் தீரஜ்பிரசாத்துடன் சூர்யா பயணம் செய்வதை நன்கு அறிந்திருந்தும் தெரியாதவன் போல் கேட்டான் கல்யாண்.

 

“நான் கிருஷ்ணா கெமிக்கல்ஸ்ல வேலை செய்றேன். அங்கே பார்த்திருபீங்க…” அவள் எதார்த்தமாக பதில் சொன்னாள்.

 

“ஹோ… ஆமா… ஆமா… அங்கேதான் பார்த்திருக்கேன். என்ன இந்த பக்கம் வந்திருக்கீங்க?” ஆர்வமாக சூர்யாவிடம் பேச்சுக் கொடுத்தான்.

 

“பிரசாத்ஜியை பார்க்க வந்திருக்கோம். 11 மணிக்குதான் அப்பாய்ன்மென்ட்… அதான் ஒரு காபி சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று இங்கு வந்தோம்”

 

“அப்பாய்ன்மென்ட்….!?” கல்யாண் சூர்யாவை ஆச்சர்யமாக பார்த்தான்.

 

‘தினமும் அந்த பிரசாத் பயலோடு நீ அலுவலகத்திற்கு வருவதும்…. போவதும்…. ஊர் சிரிக்குது. இப்ப என்ன புதுசா கதைவிடற…?’ அவனுக்குள் ஆயிரம் கேள்விகள் மண்டையை குடைந்தன.

 

“சரி வாங்க… நானும் காபி ஷாப்க்குதான் வந்தேன்…” என்று சொல்லிவிட்டு அவர்களோடு ஒட்டிக் கொண்டான். பிரபாவின் பயம் அதிகமானது.

 

“நீங்க யார் சார்…? எங்க வொர்க் பண்றீங்க…?” என்று கேட்டாள் பிரபா.

 

“நானும் கிருஷ்ணா கெமிக்கல்ஸ்லதான் வேலை செய்றேனம்மா…?” என்று சாதூர்யமாக பேசினான். அப்பாவி சூர்யா அவனை அப்படியே நம்பினாள்.

 

“நீங்க இதுக்கு முன்னாடி பிரசாத்ஜியை பார்த்திருகீங்களா…?” அவன் காஃபியை சுவைத்தபடி சூர்யாவிடம் பேச்சுக் கொடுத்தான்.

 

“இல்ல சார்… இன்னிக்குதான் முதல் முறை பார்க்கப் போறேன்… கொஞ்சம் படபடப்பா இருக்கு… அதான் ஒரு காஃபி சாப்பிட்டால் சரியாக இருக்கும் என்று நினைத்து இங்கு வந்தோம்…”

 

“ஹோ… சரிம்மா… பிரசாத்ஜி கெட்டவங்களுக்கு ரொம்ப மோசமானவர். ஆனா நல்லவங்களுக்கு ரொம்ப நல்லவர்…” அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே தீரஜ்பிரசாத்தின் ஆள் பவன் சூர்யா கல்யாணுடன் பேசிக் கொண்டிருப்பதை கவனித்தான். அதை பார்த்த கல்யாண் லேசாக தன்னை மறைத்துக்கொள்ள முயன்றான்.

 

பவன் அந்த இடத்திலிருந்து அகன்றதும் மீண்டும் சகஜநிலைக்கு வந்த கல்யாண், கட்டை விரலை உயர்த்திக் காட்டி சூர்யாவிற்கு வாழ்த்து சொல்லி அவளை பிரசாத்ஜியை சந்திக்க வழியனுப்பி வைத்தான்.

 

பவன் சூர்யாவை கவனித்துக் கொண்டேதான் இருந்தான். பிரபாவின் வெளிரியமுகமும், கல்யாண் தீரஜ்பிரசாத்தினால் நசுக்கப்பட்ட நச்சு பூச்சி என்பதும், சூர்யாவின் மேல் அவனுக்கு சந்தேகத்தை ஏற்ப்படுத்திவிட்டது. அதோடு பவன் இதற்கு முன் சூர்யாவை தீரஜ்பிரசாத்துடன் பார்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

 

அதன் பிறகு சூர்யா தீரஜ்பிரசாத்தின் வீட்டை நெருங்க அவளுக்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் முளைத்தன.

 

“யார் நீங்க….?” தீரஜ்பிரசாத்தின் வீட்டு நுழைவாயில் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பே தோழிகள் இருவரும் விசாரிக்கப்பட்டார்கள்.

 

“என் பேர் சூர்யா… இது என்னோட தோழி பிரபா… நாங்க பிரசாத்ஜியை பார்க்க வந்திருக்கோம்.”

 

“என்ன விஷயமா…?”

 

“விஷயம் எதுவும் இல்ல… பார்க்கணும்…”

 

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யாரோட காஃபி ஷாப்ல பேசிகிட்டு இருந்தீங்க?”

 

“அது கிரிஷ்ணா கெமிக்கல்ஸ்ல எங்களோட வேலை பார்ப்பவர்….”
சூர்யா தனக்கு தெரிந்த விபரங்களை சொன்னாலும், அவளுடைய பதில்கள், கேள்வி கேட்பவனின் சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

சூர்யா எந்த காரணமும் இல்லாமல் பிரசாத்ஜியை சந்திக்க வந்திருக்கிறாள்… அவளுடன் இருக்கும் பெண்ணின் பார்வையும் முகமும் ஒருவித மிரட்சியுடன் இருக்கிறது… சிறிது நேரத்திற்கு முன் அவள் பேசிக்கொண்டிருந்த ஆள் கிருஷ்ணா கெமிக்கல்ஸ்ல் வேலை செய்பவன் அல்ல… அவன் பிரசாத்ஜியை பகையாளியாக நினைப்பவன்… இவை அனைத்தும் சூர்யாவின் மீதான சந்தேகத்தை வலுபடுத்த, அவன் அவளை உள்ளே விட மறுத்தான்.

 

“நீங்க உள்ளே போக முடியாது. கிளம்புங்க…. கிளம்புங்க…” அதிகாரமாக சொன்னான் பவன்.

 

“நாங்க பிரசாத்ஜியை பார்க்க முன்அனுமதி வாங்கியிருக்கோம். அவரை பார்க்காமல் போக முடியாது.” சூர்யா எப்பொழுதும் போல் தன் குரலை உயத்த பிரபா நடுங்கிவிட்டாள்.

 

“ஏய்… வந்துடுடி போயிடலாம்…” அவள் தன் தோழியின் கையை பிடித்து இழுத்தாள்.
சூர்யா பிரபாவிடமிருந்து கையை உருவ முயன்ற நேரம் பிரபா சூர்யாவை விட்டுவிட, அவள் தடுமாறி பவன் மீது விழுந்துவிட்டாள்.

 

சூர்யா அந்த முரடன் மீது விழுந்ததும் பிரபா பயத்தில் கத்த ஆரம்பித்துவிட்டாள். அவளுடைய ‘கீச்’ குரல் முரடனை எரிச்சல் படுத்தியதோடு அவர்கள் மீதான சந்தேகம் அவனுக்கு கடுங்கோபத்தை மூட்ட… கோபத்தில் நிதானம் இழந்தவன் ஆவேசமாக சூர்யாவை தன்னிடமிருந்து விளக்கி கீழே தள்ளிவிட்டு… தன் முழு பலத்தையும் பிரயோகித்து பிரபாவின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்டான்.

 

தோழிகள் இருவரும் வெவ்வேறு திசையில் தடுமாறி விழுந்தார்கள். மண் தரையில் விழுந்த சூர்யா எழுந்துவிட்டாள். தார் சாலையில் விழுந்த பிரபா எழவே இல்லை…

 

“ஆ… ஐயோ… பிரபா… பிரபா…” சூர்யா பிரபாவை தூக்கி மடியில் வைத்துக் கொண்டு அழுது புலம்பினாள்.

 

பிரபாவிடமிருந்து எந்த அசைவும் இல்லை. அங்கு நடந்த கலவரத்தை பார்த்துவிட்டு பாதுகாப்புக்காக அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த பிரசாத்ஜியின் ஆட்கள் இன்னும் இரண்டு பேர் அந்த இடத்திற்கு வந்துவிட்டார்கள்.

 

“என்ன ஆச்சு… என்ன சத்தம் இங்க…?” நேற்றுதான் நேபால் பாடரிலிருந்து கோசிகாலன் வந்திருந்த சலீம் அதட்டலாக கேட்டான்.

 

“ஜி… இந்த ரெண்டு பொண்ணுங்களும் கல்யாண் அனுப்பின ஆளுங்க… இங்க வந்து கலாட்டா பண்ணுதுங்க…” தன் மீது தவறு இல்லை என்று நிரூபிக்க சூர்யாவின் மீதும் பிரபாவின் மீதும் பழியை போட்டான் பவன்.

 

“உனக்கு எப்படி தெரியும்…?”

 

“கல்யாண்கிட்ட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசிகிட்டு இருந்ததை நானே பார்த்தேன் ஜி. அதனாலதான் விசாரிச்சுகிட்டு இருந்தேன். அதுக்குள்ள இந்த பொண்ணு என்னை கீழ தள்ளிட்டு உள்ள நுழைய பார்த்துச்சு….” என்று சூர்யாவை காட்டி சொன்னவன் “அதனாலதான் நானும் கை நீட்டுற மாதிரி ஆயிடிச்சு…” என்று தன்பக்க ஞாயத்தை சொல்லி முடித்தான்.

 

சூர்யா ஓரளவு இந்தி கற்றுக் கொண்டுவிட்டாலும் அவன் பேசிய கொச்சை இந்தியை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால் அவள் மறுத்து எதுவும் பேசாமல் பிரபாவை கவனித்துக் கொண்டிருந்தாள்.

 

தன் சகா சொன்ன விஷயங்களை பரிபூரணமாக நம்பிவிட்ட சலீம்,
“இந்த பெண்ணை நம்ம இடத்துல அடச்சு வைங்க…” என்று சூர்யாவை காட்டி சொன்னதோடு, பிரபாவை சுட்டிக்காட்டி “இவளை மருத்துவமனைக்கு கொண்டு போ…” என்று உத்தரவிட்டான்.
அங்கு என்ன நடக்கிறது என்பதை உணரும் முன்பே சூர்யா கைகள் பின்னால் கட்டப்பட்டு வலுக்கட்டாயமாக ஒரு குவாலிஸ் காரில் ஏற்றப்பட்டாள்.

 

தீரஜ்பிரசாத் ஒரு பெண்ணுடன் பழகிக் கொண்டிருப்பது, அவனுக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும், அவன் எந்த பெண்ணுடன் பழகிக் கொண்டிருக்கிறான் என்பது அநேகமானவர்களுக்கு தெரியாது. அதனால்தான் இன்று சூர்யா தீரஜ்பிரசாத்தின் ஆட்களாலேயே கடத்தப்பட்டுவிட்டாள்.
Comments are closed here.

error: Content is protected !!