இதயத்தில் ஒரு யுத்தம் – 18
4999
0
அத்தியாயம் – 18
விடுதியில் தன்னுடைய அறையில் நுழைந்த சூர்யாவிற்கு பிரபாவின் நினைவுகள் உயிரை துளைத்தன. தன்னை அமைதி படுத்திக்கொள்ள முயன்று தோற்றவள் சிறிது நேரத்தில் தன் பெற்றோருக்கு தொடர்பு கொண்டாள்.
“ஹலோ….”
“ஹலோ… எப்படி கண்ணு இருக்க…?”
“அப்பா…. பிரபாவுக்கு…. பிரபாவுக்கு ஒரு விபத்து நடந்துவிட்டது. இப்போ எப்படி இருக்கான்னு எனக்கு தெரியல… எனக்கு பயமா இருக்குப்பா… அப்பா… நீ உடனே இங்க வந்துருப்பா…”
“என்ன கண்ணு ஆச்சு…?” என்று விபரம் கேட்டவர் அழுது புலம்பும் மகளிடமிருந்து முழுமையாக எதையும் கேட்டு தெரிந்துகொள்ள முடியாமல் “சரி… சரி… நீ பயப்படாத… அம்மாவுக்கு இப்போ எதையும் சொல்ல வேண்டாம்… ரொம்ப பயந்துடுவா… நா உடனே கிளம்பி அங்க வர்றேன்…” என்று சொல்லி சூர்யாவை ஆறுதல் படுத்திவிட்டு, பிரபாவின் வீட்டிற்கு தகவல் சொல்லி அவளுடைய தந்தை கேசவனையும் அழைத்துக் கொண்டு அடுத்த விமானத்தில் டெல்லி வந்து, அங்கிருந்து வாடகை கார் எடுத்து கோசிகாலன் வந்து சேர்ந்தார்.
சூர்யா தன் தந்தைக்கு தகவல் சொன்னது மாலை ஆறு மணிக்கு. அவர் கோசிகாலன் வந்து சேர்ந்தது மறு நாள் அதிகாலை இரண்டு மணிக்கு. இடைப்பட்ட எட்டு மணிநேரம் சூர்யா தனிமையிலும் பயத்திலும் தவித்து போய்விட்டாள்.
சூர்யாவின் தந்தையும் பிரபாவின் தந்தையும் மகள்கள் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்ததும், சூர்யா தன் தந்தை கிருஷ்ணமூர்த்தியை பாய்ந்து கட்டிக் கொண்டாள். அவள் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது.
கேசவன் அவளுடைய பயத்தை பெரிதுபடுத்தாமல் “பிரபாவுக்கு என்னம்மா ஆச்சு…? அவ எங்க இப்போ…” என்று சூர்யாவை துளைத்தார்.
“அங்கிள்… அவ இப்போ லைஃப் லைன் மருத்துவமனையில இருக்கா…” என்று அவள் சொல்லி முடிக்கும் முன் அவர் காரில் ஏறிவிட்டார். அவரை தொடர்ந்து சூர்யாவும் அவள் தந்தை கிரிஷ்ணமூர்த்தியும் ஏறிக் கொண்டார்கள். கார் மருத்துவமனையை நோக்கி பறந்தது.
போகும் வழியிலேயே கேசவன் நடந்த விபரங்களை சூர்யாவிடமிருந்து கேட்டுக் கொண்டார். அவள் தீரஜ் பற்றி சொல்லாமல் பிரசத்ஜியை பற்றி அனைத்தையும் மறைக்காமல் சொன்னாள். அவருக்கு சூர்யாவின் மீது ஆத்திரம் வந்தது.
‘இந்த பெண்ணால்தான் நம் மகள் இன்று மருத்துவமனையில் கிடக்கிறாள்’ என்று அவரால் சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.
“உங்களுக்கு எதுக்கும்மா ரௌடி பயலுங்களோட பழக்க வழக்கம்… வேலைக்கு வந்தோமா… வந்த வேலையை பார்த்தோமான்னு இல்லாமல் எதுக்கு அவன் வீட்டுக்கு நீங்க போனிங்க…?” என்று சூர்யாவை ஏசினார். அவளுடைய வெளுத்த முகமும் சிவந்திருந்த கண்களும் அப்போதுதான் அவர் கண்களில் பட்டன.
‘இதுவும் சின்ன பொண்ணுதானே… ‘சிறு பிள்ளை விட்ட வெள்ளாமை வீடு வந்து சேராது…’ என்பது போல் ரெண்டு பேரும் சிறு பிள்ளை தனமாக நடந்து கொண்டது இவ்வளவு பெரிய ஆபத்தில் கொண்டுவந்து விட்டுவிட்டது….’ அவர் எதுவும் பேச முடியாமல் சீட்டில் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டார்.
சிறிது நேரத்தில் மருத்துவமனை வந்துவிட மூவரும் உள்ளே சென்றார்கள். பிரபாவின் உறவினர்கள் அவளை பார்க்க வந்திருக்கும் விஷயம் நிமிடத்தில் தீரஜ்பிரசாத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அவனுடைய அனுமதி கிடைத்த பிறகே மருத்துவமனை நிர்வாகம் அவர்களை உள்ளே அனுமதித்தது.
பிரபாவை பார்த்த சூர்யா மீண்டும் கதறி அழுதாள். அவள் அழுவதை பார்த்த கேசவன் அவளுக்கு ஆறுதல் சொல்லும்படி ஆகிவிட்டது.
காலை பத்து மணிக்கு மருத்துவரை சந்தித்து பேசினார்கள்.
“பிரபாவிற்கு கீழே விழுந்ததில் தலையில் பலமாக அடிபட்டு மூளைக்கு செல்லும் நரம்பு ஒன்று பாதிக்கப் பட்டுள்ளது. அதை சரி செய்ய ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்…. ” மருத்துவர் அலட்டிக் கொள்ளாமல் சொன்னார்.
“…………….” கேசவன் பேச்சிழந்து விழித்தார்.
“அந்த அறுவை சிகிச்சை செய்தால் எங்க மகள் எங்களுக்கு பத்திரமாக திரும்ப கிடைப்பாளா…?” கிருஷணமூர்த்தி விபரம் கேட்டார்.
“கண்டிப்பா… ஆனா அந்த அறுவை சிகிச்சை எங்களால் செய்யமுடியாது. மூளை மற்றும் நரம்பியல் துறையில் இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர் டெல்லியில் ஒரு பிரபல மருத்துவமனையில் வேலை செய்கிறார். அவரிடம் நானே இது போல் இரண்டு நோயாளிகளை அனுப்பியுள்ளேன். அவர்கள் இன்று நலமாக உள்ளார்கள். ஆகவே உங்கள் மகளும் குணமாக நூறு சதவிகிதம் வாய்ப்பு உள்ளது.”
“அப்படியென்றால் தாமதிக்காமல் பிரபாவை அந்த மருத்துவமனைக்கு மாற்றிவிடுங்கள்….” கிருஷ்ணமூர்த்தி தயங்காமல் சொன்னார்.
“அதில் ஒரு சிக்கல் உள்ளது. அந்த அறுவை சிகிச்சை செய்ய நாற்பது லட்சம் செலவாகும். அதோடு பிரபாவை இங்கு சேர்த்திருப்பது பிரசாத்ஜி. அவருடைய அனுமதி இல்லாமல் நாங்கள் எதுவும் செய்ய முடியாது.”
“அவன் யார் என் பெண்ணை பற்றி முடிவு எடுக்க…?” அவ்வளவு நேரம் மெளனமாக இருந்த கேசவன் வெடித்தார்.
“நான் என் பெண்ணை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்வேன்… என்ன வைத்தியம் வேண்டுமானாலும் செய்வேன்…” என்று சொன்னவர் அப்போதுதான் உணர்ந்தார். ‘பிரபாவிற்கு வைத்தியம் செய்ய நாற்பது லட்சம் தேவையாம்… நான் என்ன செய்வேன்… என் மகளை எப்படி காப்பாற்றுவேன்…’ அவர் மனம் புலம்பி அழுதது.
Comments are closed here.