Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இதயத்தில் ஒரு யுத்தம் – 3

அத்தியாயம் – 3

அதிகாலை நான்கு மணிக்கு ‘அந்தமான் எக்ஸ்பிரஸ்’ மதுரா சந்திப்புக்கு வந்து சேர்ந்தது. உடன் வருவதாக சொன்ன தந்தையை பிடிவாதமாக மறுத்துவிட்டு, தனியாக முப்பத்தொன்பது மணிநேரம் ரயிலில் பயணம் செய்து மதுரா வந்து சேர்ந்தாள் சூர்யா.

ரயிலில் ஏறும்போது காதில் விழுந்த தமிழ் பேச்சுக்கள் காணாமல் போய், இறங்கும் போது இந்தி பேச்சுக்கள் காதை துளைத்தன. சுமாரான கூடத்தில் எங்கு திரும்பினாலும் புதிய முகங்கள் அவளை மிரளச் செய்தது. அந்த மிரட்சியையும் மீறி அவள் கவனத்தில் பட்டது அந்த ரயில் நிலையத்தின் சுத்தம். எங்கு தேடியும் அவளால் அங்கு ஒரு சிறு குப்பையையும் காணமுடியவில்லை. மாறாக துப்புரவு பணியாளர்கள் தூய்மையான அந்த ரயில்நிலையத்தை மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டிருந்ததைதான் பார்க்க முடிந்தது.

‘நம்ம இந்தியாவுல இவ்வளவு சுத்தமான ரயில் நிலையமா…!’ என்று ஆச்சர்யப்பட்டு முடிப்பதற்குள் இன்னொரு ஆச்சர்யம் அவளை தாக்கியது.

“ஹாய்… சூர்யா…” பின்னாலிருந்து சூர்யாவின் முதுகை தொட்டாள் அவளுடைய தோழி பிரபா.

“ஹேய்… சரியான நேரத்துக்கு வந்துட்ட…! ஆமா யாரோட வந்த? எப்படி வந்த?”

“ஏன்…. கால் டாக்ஸில தனியாதான் வந்தேன்.”

“தனியாவா? லூசாடி நீ… இந்த நேரத்துல நீ தனியா வரலாமா?”

“ஏன்… வரக் கூடாதா? நீயும்தான் சென்னையிலேருந்து தனியா வந்திருக்க.”

“நானும் நீயும் சமமா? எனக்கு பாதுகாப்பா என் பேக்ல ஒரு கிலோ மிளகாப் பொடி வச்சிருக்கேன். நீ என்ன கொண்டுவந்த காமி…”

“ஹா… ஹா… ஒரு கிலோ மிளகாப் பொடியா? நார்த் சைடு வந்தா நம்ம ஊரைவிட கொஞ்சம் கூடுதல் கவனத்தோட இருக்கனும்ங்கறது உண்மைதான்… ஆனா மதுரால பாதுகாப்புக்கு அவசியமே இல்ல…”

“ஏன்… இங்க திருடனுங்களே இல்லையா…?” அலட்சியமாக கேட்டாள் சூர்யா.

“இல்ல…” அழுத்தமாக பதில் வந்தது பிரபாவிடமிருந்து.

“என்னால நம்ப முடியல… அது சரி… நான் முதல்லையே உன்கிட்ட கேட்க நினைத்தேன். என்னடி இந்த ரயில்நிலையம் இவ்வளவு சுத்தமா இருக்கு. எனக்கு ஏதோ விமான நிலையத்துக்குள்ள இருக்க மாதிரி ஒரு உணர்வு தோணுது.”

“இதுக்கே அசந்துட்டா எப்படி..? வெளிய வந்து மதுராவ பார். அப்புறம் சென்னையையே மறந்துடுவ.”

“பில்ட் அப் ரொம்ப அதிகமா கொடுக்குர… அப்படி என்னதான் இந்த ஊர்ல இருக்குன்னு நானும் பார்க்கதானே போறேன்…” என்று அலட்சியமாக பதில் சொன்னாள் சூர்யா.
அந்த அலட்சியமெல்லாம் சிறிது நேரம்தான். ரயில்நிலையத்திலிருந்து வெளியேறியதும் அவள் கண்ட காட்சி அவளை அசர வைத்தது.

சிறு மேடு பள்ளம் கூட இல்லாத கருமையான வழுவழுப்பான தார் ரோடு, அதன் இரு புறமும் சீராக வெட்டப்பட்ட பசுமையான புல்வெளி, சாலையோரம் பெரிய பெரிய மரங்கள், ஆங்காங்கே சரியாக பராமரிக்கப்படும் சாலையோர பூங்காக்கள், என்று மதுரா மிக அழகாக இருந்தது.
ஆங்காங்கே குப்பை தொட்டியும், அதற்குள்ளே(!) குப்பையும் காணப்பட்டன. பிச்சைகாரர்கள் இல்லை. தெருவில் மாடு, நாய் போன்ற விலங்குகள் இல்லை. சாலையில் வாகனங்கள் சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தன. ஆச்சர்யப்படும் விதமாக அனைவரும் போக்குவரத்து விதியை பின்பற்றினார்கள்.

சாலையோரம் நடப்பட்டிருந்த மரங்களில் மலர்ந்திருந்த மலர்களின் வாசனை, அதிகாலை ரம்யமான குளிர் காற்றுடன் கலந்து வந்து சூர்யாவின் நாசியை இதமாக வருடியது.

“ம்… ஹா… என்ன வாசனை…!” சூர்யா ஏதோ சொர்க்க பூமியில் கால் பதித்திருப்பதை போல் உணர்ந்தாள்.

அந்த இதமான சூழ்நிலை அவளை பேசவிடாமல் வாயடைக்கச் செய்தது. அமைதியாக மதுராவின் அழகை ரசித்தப்படி பிரபாவுடன் காரில் பயணம் செய்து கொண்டிருந்தாள்.
சிறிது நேர பயணத்திற்கு பின் கடலையொத்த அகண்ட யமுனா நதி கண்ணில் பட்டது. கரை தளும்பிய நீர், யமுனா நதியின் அழகை நின்று ரசிக்க சொன்னது.

“வாவ்…! ஏய்… காரை கொஞ்சம் நிறுத்த சொல்லுடி…”

“பையா… காடிக்கோ தோடஸ ருக்வாதோ…” பிரபா ட்ரிவரிடம் வண்டியை ஓரமாக நிறுத்தும்படி சொன்னாள்.

“இதுதான் யாமுனை ஆறா பிரபா…?” சூர்யா கேட்டாள்.

“ஆமாடி… மதுரா யமுனை ஆற்றங்கரையிலதானே இருக்கு… இந்த ஊருக்கு இதுவும் ஒரு ப்ளஸ் பாயிண்ட்…”

“எவ்வளோ தண்ணீ…! எப்பவும் இப்படிதான் இருக்குமா?”

“இல்லடி… மழை அதிகமா இருக்க வருஷம் இது மாதிரி வெள்ளம் இருக்கும். இல்லன்னா இந்த அளவு தண்ணி இருக்காது. இந்த வருஷம் நல்ல மழை… அதனாலதான் இந்த அளவு தண்ணி இருக்கு.”

“ச்ச… ‘ச்சான்சே’ இல்ல… சூப்பரா இருக்குடி… இங்கேயே இருக்கலாம் போல தோணுது.”
“ஹலோ மேடம்… நம்ம போகவேண்டிய ஊர் கோசிக்காலன்… மறந்துடாதிங்க…” என்று பிரபா விளையாட்டாக சொன்னாள்.

லேசாக சிரித்துக் கொண்ட சூர்யா “ஓகே… வா கிளம்பலாம்…” என்று சொல்லிவிட்டு காரில் ஏறி அமர்ந்தாள்.

கோசிக்காலன் வந்து சேரும் வரை சூர்யா சுற்றுப்புறத்தை கவனித்துக் கெண்டே இருந்தாள். மதுராவில் அவள் கண்ட சுற்றுப்புற சுத்தம், அழகு, பொது மக்களின் பொறுப்புணர்ச்சி அனைத்தும் எந்த ஒரு இடத்திலும் குறையவில்லை. எங்கும் பசுமை… எதிலும் தூய்மை…

“எப்படி பிரபா இது…! மதுரா இந்த மாவட்டத்தோட தலைநகரம். அந்த ஊர் சுத்தமாவும் அழகாவும் இருந்தது ஓரளவு என்னால ஏத்துக்க முடிஞ்சுது. ஆனா கோசிக்காலன் தொழில் நகரம். ஏகப்பட்ட தொழிற்ச்சாலைகள் இருக்கும் ஒரு ஊர் இவ்வளவு சுத்தமாவும் அழகாவும் இருக்கே…! இந்த மாநிலம் முழுக்க இப்படிதான் இருக்குமா?”

“இல்லடி… மதுரா மாவட்டம் மட்டும்தான் இப்படி இருக்கும். மற்ற மாவட்டமெல்லாம் மோசமாதான் இருக்கும்…”

“ஏன்டி…?” புரியாமல் கேட்டாள் சூர்யா.

“மதுரா மாவட்டம் முழுக்க பிரசாத்ஜி கட்டுப்பாட்டுல இருக்கு. இங்க கழிவுகளை முறையா வெளியேற்றாத தொழிற்சாலைகளை தொடர்ந்து நடத்த முடியாது. நாம வாழற இடத்தை சுத்தமா வச்சுக்கணும் என்பது இந்த ஊர்ல எழுதப்படாத விதி…”

“பிரசாத்ஜி இந்த பகுதி MLA -வா இல்ல மந்திரியா…?”

“அதல்லாம் இல்லடி… இங்கல்லாம் ஒரு சில ஏரியாவை இந்திய அரசாங்கம் பேருக்குதான் ஆட்சி செய்து… மற்றபடி அந்த பகுதி முழுக்க அங்க இருக்க ‘டான்’ கடுப்பாட்லதான் இருக்கும். அவங்கள மீறி அந்த எரியால எந்த அதிகாரியும் எதுவும் செய்ய முடியாது… அதே மாதிரிதான் மதுராவும் முழுக்க முழுக்க பிரசாத்ஜி கட்டுப்பாட்ல இருக்கு…”

“என்னடி இது…! சினிமால காமிக்கற சீனையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க…! இதுமாதிரி அண்டர் வேர்ல்ட் சமாச்சாரமெல்லாம் மும்பைலதானே நடக்கறதா நான் கேள்விப்பட்டிருக்கேன்…!”

“அந்த அளவு மோசமா இல்லைன்னாலும் யுபி-லையும் சில பேர் இருக்காங்காடி… அதுல நம்பர் ஒன் பிரசாத்ஜிதான்… கொஞ்சம் நல்லவரும் கூட… போகப்போக நீயே தெரிஞ்சுக்குவ… “

“நீ அவர பார்த்துருக்கியா…?”

“நான் அவரை நேர்ல பார்த்தது இல்ல. ஆனா அவரோட ஆளுங்க சிறுத்தை கொடிகட்டின, கருப்பு குவாலிஸ் கார்ல மதுரா மாவட்டம் முழுக்க இருப்பாங்க. மக்களுக்கு நல்லது பண்ணுவாங்க. ஆனா தப்பு பண்றவங்களுக்கு ரொம்ப மோசமானவங்க… மக்களுக்கு அவங்க மேல மரியாதையும் இருக்கு அதைவிட பயமும் அதிகமா இருக்கு…”

“பயமா…?” சூர்யா ஆர்வமாக கேட்டாள்.

“ஆமாடி… பயம்தான். ஒரு முறை நாலஞ்சு ரௌடி பசங்க ரெண்டு பொண்ணுங்கள கலாட்டா பண்ணிட்டானுங்க… பிரசாத்ஜிக்கு விஷயம் தெரிஞ்சு போச்சு… அஞ்சு பத்து நிமிஷத்துல அவரோட ஆளுங்க ஸ்பாட்க்கு வந்து அவனுங்கள அடி பின்னியெடுத்ததோட… கார்ல அள்ளிபோட்டு எங்கயோ கொண்டு போனாங்க… அதுக்கப்புறம் கைய வெட்டிட்டாங்க கால வெட்டிட்டாங்கன்னு பேசிக்கறாங்க… உண்மை என்னன்னு தெரியல… “

“ஓ…” சூர்யா ஆச்சர்யமாக கேட்டாள்.

சூர்யாவிற்கு முகம் தெரியாத பிரசத்ஜியை மிகவும் பிடித்துவிட்டது. நான்கு பேர் ஒருவனை பார்த்து பயந்தாலே அவனை ஒரு ஹீரோவாக நினைப்பவளுக்கு ஒரு மாவட்டத்தையே கட்டுப்படுத்தி வைத்திருக்கும் பிரசாத்ஜியை நினைத்தால் ஹீரோக்களின் சக்கரவர்த்தியாக தோன்றியது… அவளுக்கு மேலும் பிரசாத்ஜியை பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்தது.

“ம்…. அப்புறம்…” என்று தோழியை தூண்டினாள்.

“ஆமா… நான் என்ன கதையா சொல்லிக்கிட்டு இருக்கேன். அப்புறம்… விழுப்புரம்ன்னு கேட்டுகிட்டு இப்படி வாசல்லையே நின்னா நான் இன்னிக்கு ஆஃபீஸ் போன மாதிரிதான்… வாடி உள்ள போகலாம்…” என்று சொல்லி சூர்யாவின் இரண்டு பைகளையும் தன்னுடைய இரண்டு கைகளிலும் தூக்கி கொண்டு மகளிர் விடுதிக்குள் பிரபா நுழைய, அவளை தொடர்ந்தாள் சூர்யா.

 
Comments are closed here.

error: Content is protected !!