Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இதயத்தில் ஒரு யுத்தம் – 5

அத்தியாயம் – 5

பிரபா சூர்யாவின் சிறுவயது தோழி. அவள் ஒரு ஆண்டிற்கு முன்பே கோசிகாலன் வந்துவிட்டாள். அவள் மூலம்தான் சூர்யாவிற்கு இங்கு வேலை கிடைத்துள்ளது. பயணக்களைப்பு தீர சூர்யாவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு, பிரபா அலுவலகம் சென்றுவிட்டாள்.

மதுராவிற்கு வந்த பிறகு இரண்டு நாட்களாக நன்றாக சாப்பிடுவதும் உறங்குவதும்… பிரசாத்ஜியை பற்றி விடுதியில் இருப்பவர்களிடம் ஓட்டை ஹிந்தியில் கதை கேட்பதுமாக பொழுதை கழித்துவிட்டு மூன்றாவது நாள்தான் அலுவலகத்திற்கு சென்றாள் சூர்யா.
பிரபாவின் வேலை நேரம் காலை எட்டு மணிக்கே துவங்கிவிடும் என்பதால், தோழியிடம் அலுவலகத்திற்கு வரும் வழியை தெளிவாக விளக்கி சொல்லிவிட்டு அவள் முன்பே அலுவலகத்திற்கு சென்றுவிட்டாள்.

தனியாக பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்த சூர்யா கடந்த இரண்டு நாட்களில் முளைத்திருந்த புது வழக்கப்படி,

“யார் இந்த பிரசாத்ஜி… அவர் எப்படி இருப்பார்?” என்று சிந்தனையை ஓடவிட்டாள். ஐம்பது வயது மனிதர் வெள்ளை ஜிப்பாவில் உயரமாக இருப்பது போல் ஒரு கற்பனை உருவம் அவளுடைய மனக்கண்ணில் தோன்றியது.

‘என்ன பவர்…! என்ன மாஸ்…! என்ன கண்ட்ரோல்…! இவர மட்டும் வாழ்க்கைல ஒரே ஒரு முறை சந்தித்துவிட்டால் போதும்…’ என்று பிரசாத்ஜியை அவள் மனதின் உச்சியில் உயர்த்தி வைத்துக் கொண்டிருக்கும் போது பேருந்து நிறுத்தம் வந்துவிட ஷேர் ஆட்டோவும் வந்து சேர்ந்தது.
பிரபா சொன்னபடியே ஷேர் ஆட்டோவில் ஏறி அமர்ந்த சூர்யா, வழியில் மனிதர்களால் பாதுகாக்கப் பட்டிருக்கும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டே சென்றாள். சிறிது நேரத்தில் ஆட்டோ மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் போடப்பட்டிருக்கும் சாலையில் சென்று கொண்டிருந்தது.

ஆட்டோவில் சூர்யாவை தவிர இரண்டு ஆண்களும் ஒரு ஆட்டோ ஓட்டுனரும் மட்டும்தான் இருந்தார்கள். லேசாக மழை தூறல் போட்டது. அந்த காட்டுக்குள் பாதி வழியிலேயே ஆட்டோ நின்றுவிட்டது. ஓட்டுனர் என்ன முயன்றும் அவரால் சரி செய்ய முடியவில்லை. மற்ற இரண்டு பயணிகளும் ஓட்டுனரிடம் சூர்யாவை பார்த்தபடியே இந்தியில் ஏதோ பேசினார்கள். அவர்களுடைய இந்தியை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவள் நெஞ்சுக்குள் இனம் புரியாத பீதி எழுந்தது.

‘இவனுங்க என்ன பேசிக்கிரானுங்க. நம்மை பற்றிதான் ஏதோ பேசிக்கிரானுங்க போலருக்கே…’ என்று உள்ளுக்குள் மிரண்டாள்.

சிறிது நேரத்தில், ஆட்டோவில் வந்த ஆண் பயணிகள் இருவரும் கால்நடையாக செல்ல முடிவு செய்து நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். அப்போதும் அவளுடைய பயம் தெளியவில்லை… ஆட்டோ ஓட்டுனரிடம் தனியாக மாட்டிக் கொண்டவளுக்கு மீண்டும் ஒரு சந்தேகம் எழுந்தது…
‘ஒருவேள இந்த டிரைவர்… ஆட்டோ ரிப்பேர் என்று பொய் சொல்லி, ஆட்டோவில் வந்த மற்ற பயணிகளை அனுப்பிவிட்டு நம்மை கடத்த நினைக்கிறானோ…!’ என்று தாறுமாறாக சிந்தித்தாள்.
அந்த எண்ணம் தோன்றியதும் அவசரமாக ஆட்டோவிலிருந்து கீழே இறங்கிவிட்டவள், லேசான சாரல் மழையில் நனைந்தபடி அந்த பக்கம் வேறு ஏதாவது வண்டி வருகிறதா என்று பார்த்துக் கொண்டே நின்றாள்.

அவளை ஏமாற்றாமல் தூரத்தில் ஒரு கருப்பு கார் வந்தது. லேசாக நனைந்த ஆடையுடன் முகத்திலும் கைகளிலும் நீர் திவளைகளுடன் மழையில் நனைந்த பளிங்கு சிலை போல் நின்ற சூர்யாவின் அழகு அந்த காரை இரண்டாவது முறையாக தயங்கி வேகத்தை குறைக்கச் செய்தது. ஆம் இரண்டாவது முறையாக…

கார் மெதுவாக அருகில் வந்துகொண்டிருக்கும் போது சூர்யா கையை ஆட்டி காரை நிறுத்த முயன்றாள். அருகில் வந்து நின்ற காரை பார்த்ததும் ஆட்டோ ஓட்டுனர் பம்மியதை சூர்யா கவனிக்கவில்லை.

காரின் கண்ணாடி இறக்கப்பட்டது. உள்ளே இருந்தபடியே சூர்யாவை பார்த்த அந்த கம்பீரமான வாலிபன், புருவத்தை உயர்த்தி “என்ன…?” என்று கண்களால் கேட்டான்.

“ஹலோ சார்… நான் கிருஷ்ணா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிடெட்’ போகணும். உங்களால என்னை அங்க விட்டுட முடியுமா ப்ளீஸ்…” என்று சரளமான ஆங்கிலத்தில் சூர்யா வினவ
காருக்குள் இருந்தவன் அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் காரின் பின் கதவை திறந்துவிட்டு, கண்களால் சைகை காட்டி அவளை ஏற சொன்னான்.

அவன் திறந்துவிட்ட கதவை மூடிவிட்டு, காரை பின் பக்கமாக சுற்றி வந்து, மறுபுற கதவை திறந்து உள்ளே ஏறி அமர்ந்தாள் சூர்யா. அப்படி அவள் காரை சுற்றி வரும் போது காரின் பதிவு எண்ணை மனதில் ஏற்றிக் கொண்டாள்.

அவள் ஏறி அமர்ந்ததும் கார் புறப்பட்டது. கார் நகர்கிறது என்பதையே சில நிமிடங்களுக்கு பிறகுதான் சூர்யா உணர்ந்தாள்.

“வாவ்… ரொம்ப நல்ல கார்… ரொம்ப நல்ல டிரைவிங் சார்…” என்று ஆங்கிலத்தில் காரை ஓட்டுபவனிடம் புகழ்ந்துவிட்டு, அவளுடைய தோழி பிரபாவிற்கு கைபேசியில் அழைத்தாள்.

“ஹலோ… பிரபா…”

“சொல்லுடி..”

“நான் சொல்வதை கவனமாக கேட்டுக் கொள் பிரபா..” என்று சுத்த தமிழில் பிரபாவிடம் பேச்சை ஆரம்பித்தாள் சூர்யா.

“என்னடி… மதுராவுக்கு வந்து தமிழ்பற்று அதிகமாயிடுச்சா…?” கிண்டலாக கேட்டாள் பிரபா.

“அதையெல்லாம் நான் பிறகு நேரில் விளக்கமாக உனக்கு சொல்லுகிறேன். என்னால் யாரையும் நம்ப முடியவில்லை…. நான் இப்போது ஒரு புதியவனுடன் மகிழ்வுந்தில் வந்து கொண்டிருக்கிறேன். அவனுடைய மகிழ்வுந்து பதிவு எண், மாதுரி, வண்ணம் அனைத்தும் உனக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன். நான் இன்னும் சிறிது நேரத்தில் அலுவலகம் வரவில்லை என்றால் நீ நேராக காவல் நிலையம் சென்று நான் உனக்கு கொடுத்த தகவல்களை அவர்களிடம் கொடுத்து என்னை காப்பாற்று…. இல்லை… இல்லை… வேண்டாம்…. பிரசாத்ஜியிடம் சென்று முறையிட்டு என்னை காப்பாற்று…”

“ட்ரிட்….” கார் ஒரு முறை பிரேக் அடிக்கப்பட்டு, மீண்டும் மிதமான வேகத்தில் கிளப்பப்பட்டது. அதை கவனிக்காத சூர்யா தோழியிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்
‘என்ன ஆச்சு இவளுக்கு… புது இடத்துல மூளை எதுவும் குழம்பி போச்சா…?’ என்று நினைத்த பிரபா…

“என்னடி உளறிகிட்டு இருக்க…?” என்று கேட்டுவிட்டாள்.

“உளறலெல்லாம் எதுவும் இல்லை. கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தால் உளறல் என்று சொல்கிறாயே… முட்டாள்… பைத்தியக்காரி… சொல்வதை செய்… மறந்துவிடாதே… பிரசாத்ஜியிடம் உடனே சென்று முறையிட்டு என்னை காப்பாற்றிவிடு…” அவள் அதிகாரமாக சொன்னாள்.

“ம்ம்ம்….” சூர்யாவிடம் வாங்கிய வசவில் அவளை எதிர்த்து பேச துணிவின்றி குழப்பத்துடன்

‘ம்ம்ம்’ கொட்டினாள் பிரபா.

“கவனமாக இரு… மறந்துவிடாதே…” என்று எச்சரித்துவிட்டு கைபேசியை அணைத்தவள், ஏதோ ஒரு பெரிய காரியம் செய்துவிட்டது போல் களைத்துப் போனாள்.
சிறிது நேரத்தில் “கிருஷ்ணா கெமிகல்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்று ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதியிருந்த பெரிய நுழைவாயில் கண்ணில் பட்டது. அந்த நுழைவாயில் முன் தீரஜ்பிரசாத் காரை நிறுத்த, சூர்யா காரிலிருந்து கீழே இறங்கினாள்.

“தேங்க் யு சோ மச் சார்…” என்று அவள் ஆங்கிலத்தில் நன்றி சொல்ல…

“பரவாயில்லை. பத்திரமாக சென்று வாருங்கள்….” என்று அவன் சுத்த தமிழில் பதில் சொன்னான்.
மிரண்டு விழித்த சூர்யா சுதாரிப்பதற்குள் அவன் கண்களில் சிரிப்புடன் காரை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டான்.

 
Comments are closed here.

error: Content is protected !!