Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 14

அத்தியாயம் – 14

துஷ்மன் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும், ‘ராப்-அப்’ பார்ட்டி சென்றவாரம் பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சினி டைம்ஸ் மேக்ஸீனில் அட்டைப்படமாக வந்திருந்தது. முன்னாள் கதாநாயகியும், தற்போதைய ஆடை வடிவமைப்பாளருமான மோனிகா அகர்வால் தன்னுடைய கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான சிவமாறனுடன் நெருக்கமாக நின்று போஸ் கொடுத்திருந்தாள்.

 

கையிலிருக்கும் மேகசீனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் தேவ்ராஜ். அவனுக்குள் இருக்கும் மனிதத்தை முற்றிலும் அழித்து, அவனை மிருகமாக்கும் வல்லமை வாய்ந்த படம். பழி என்னும் விஷத்தை அவனுக்குள் சுரக்கச் செய்யும் சுரப்பி அந்த புகைப்படம். உறவின் மீது அவநம்பிக்கையையும், ஒப்பந்தத்தின்மீது அதீத நம்பிக்கையையும் அவனுக்குள் கொண்டுவந்தது கூட இதே போன்றதொரு படம்தான்.

 

இது போன்ற படங்களையோ அல்லது விடியோக்களையோ எங்கேயாவது பார்க்க நேர்ந்தால், அல்லது அவர்களை பற்றி கேட்க நேர்ந்தால், அவனால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ளவே முடிவதில்லை. மனம் உலைக்களனாகக் கொதிக்கும். உள்ளே பற்றி எரியும் நெருப்பில் ஒவ்வொரு நாளும் அவன் வெந்து சாம்பலாகி கொண்டிருக்கிறான். அந்த தீயை எப்படி அணைப்பது! அவர் அழிய வேண்டும். அவருடைய அழிவில்தான் அவனுடைய நிம்மதி பிறக்கும். அதனால்தான் பிடித்தான்…. உடும்பு பிடியாக பிடித்து மூச்சு திணற வைத்தான்.

 

அவனுடைய பிடியிலிருந்து தப்பிக்க சிவமாறன் பல முயற்சிகளை எடுக்கத்தான் செய்தார். இராஜேஸ்வரியை சந்தித்துப் பேசினார். அவனுடைய நண்பர்கள் மூலம் தூதுவிட்டார். பிறகு சில நாட்கள் அமைதியாக இருந்து பார்த்தார். எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றதும் இறுதியாக அவனை நேரில் சந்திக்கவும் முயற்சி செய்தார். தேவ்ராஜ் எதற்கும் அசைந்துக் கொடுக்கவில்லை.

 

இயக்குனர் அரவிந்த் குப்தாவும் தனக்கு தெரிந்த வழியில் முயற்சி செய்து பார்த்தார். ஊடகங்களை அணுகினார். அதை சுலபமாக தடுத்தான் தேவராஜ். ஊடகத்தில் சொல்ல நினைத்ததை வீடியோவாக பதிவிட்டு சமூக வலயத்தளங்களில் உலவவிட்டார். தனக்கு பிடித்த மீன்பிடி விளையாட்டை, தன்னுடைய தொழில்நுட்ப குழுவை வைத்து விளையாடி, பொதுவெளியில் உலவிய வீடியோக்களை ஒன்றுவிடாமல் உருவிவிட்டான். ஏதாவது ஒன்றிரண்டு தனிப்பட்ட குழுக்களில் சுற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதனால் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை. காவல்துறை உயர் அதிகாரியிடம் தனிப்பட்ட முறையில் பேசி பஞ்சாயத்தைக் கூட்டினான் அரவிந்த் குப்தா. அண்டர் வேர்ல்ட் தாதாவையும் அணுகிப் பார்த்தான். அவனுடைய அனைத்து முயற்சிகளுக்கும் அசால்டாக அல்வா கொடுத்தான் தேவ்ராஜ்.

 

நாட்கள் பறந்தோடின. படம் வெளியீட்டுக்காக காத்திருந்த ஆறுமாதங்கள், எட்டு மாதங்களாக நீண்டது. அனைவரின் நம்பிக்கையும் தரைமட்டத்திற்கு தாழ்ந்தது. சிவமாறன் மீளமுடியாத நிதி நெருக்கடியில் சிக்கினார். இதற்கு மேல் தலைதூக்கவே முடியாது என்கிற உறுதி, பரிபூரணமாக அவனுக்கு கிடைத்த பிறகுதான், தன்னுடைய பிடியை விலக்கிக் கொண்டான். ஆனாலும் மனிதர் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு போஸ் கொடுக்கிறாரே!

 

அவர் இருக்கும் நிலையில் ‘ராப்-அப்’ பார்ட்டியையெல்லாம் நினைத்துக் கூட பார்க்கக் கூடாது. ஆனால் அவர் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்தார். சந்தோஷமாகக் கொண்டாடினார். அதை உலகிற்கு வெளிப்படுத்தவும் செய்தார். அந்த வயதிலும் அவருடைய தன்னம்பிக்கையும், திறமையும் அவனை ஆச்சரியப்படுத்தியது. தேவ்ராஜிற்கே தந்தையாயிற்றே! சாய்ப்பது அவ்வளவு சுலபமா என்ன! – எரிச்சலுடன் கையிலிருந்த வார இதழை தூக்கியெறிந்தான்.

 

****************

அன்று அமாவாசை… இருண்டுக் கிடைக்கும் வானத்தை வெறித்தபடி மொட்டைமாடியில் தன்னந்தனியாக நின்றுக் கொண்டிருந்தார் சிவமாறன். அவருடைய பார்வை வெகு தொலைவில்… பல ஆண்டுகள் பின்னோக்கி இருந்தது. மனம் குற்ற உணர்வில் கனத்தது. அப்போது அவருக்கு முப்பது வயது… அவளுக்கு வெறும் பதினாறு… வாய்ப்பு கேட்டு அவரிடம் வந்தாள். குழந்தையாக இருக்கிறாளே என்று திருப்பி அனுப்பிவிட்டார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் கழித்துதான் அவளை பார்த்தார். மூன்றே ஆண்டுகளில் முன்னணி நடிகைகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதல் இடத்திற்கு வந்து நட்சத்திரமாக ஜொலித்தாள்.

 

அப்போது இருந்த ஒரு பிரபல இயக்குனர்தான் அவளை, அவருடைய படத்திற்கு சிபாரிசு செய்தார். சம்பளம் அதிகமாக கேட்கிறாள் என்று அப்போதும் அவர் அவளை தவிர்த்தார். ஆனால், ஏனோ தெரியவில்லை… அவள் தானாகவே முன்வந்து சம்பளத்தை குறைத்துக் கொண்டு அந்த படத்தில் தன்னை ஒப்பந்தம் செய்து கொண்டு நடித்துக் கொடுத்தாள். ஏனென்று கேட்டதற்கு கதை மிகவும் பிடித்துவிட்டதாகக் கூறினாள். உண்மை காரணம் என்னவென்று பின்னாளில்தான் அவருக்குத் தெரிந்தது.

 

அப்படி ஒன்றும் அவர் ஆணழகன் அல்ல… பெரிய படைப்பாளியும் அல்ல… அப்போதிருந்த திரைப்படத் துறையில் பெரிய தயாரிப்பாளரும் அல்ல… பிறகு எப்படி…! – இன்றுவரை அவருக்கு புரியாத புதிர் அதுதான். பைத்தியக்காரத்தனமான காதல்! அது எப்படி அவளுக்கு அவர் மீது வந்தது! தன்னைவிட பதினாறு வயது பெரியவனை… அழகில் தனக்கு சிறிதும் பொருந்தாதவனை… ஏற்கனவே திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தகப்பனானவனை… எப்படி அவள் காதலித்தாள்! எதை பார்த்து அந்த காதல் வந்தது! – அவர் மனம் வேதனைப்பட்டது. அந்த காதல் மீது… அந்த முட்டாள்தனத்தின் மீது கோபம் பொங்கியது.

 

ஆரம்பத்தில் அவளை உறுதியாகத்தான் தவிர்த்தார். அவள் தன்னிடம் நெருங்கும் பொழுதெல்லாம் மனைவியின் முகத்தையும், மொட்டும் மலருமாக இருக்கும் மூன்று குழந்தைகளின் முகத்தையும் நினைவில் கொண்டுவந்து தன்னை நெருப்புப் பிழம்பாகத்தான் வைத்திருந்தார். ஆனால் அவள் அந்த நெருப்பில் வெந்து சாக துணிந்துவிட்டாள். அவருக்காக எதையும் இழக்க… எதையும் வீட்டுக் கொடுக்க தயாராகிவிட்டாள்.

 

அடிக்கடி போனில் பேசுவாள். ஏதாவது காரணத்தைத் தேடி கண்டுபிடித்து, அலுவலகத்தில் வந்து பார்ப்பாள். அவள் தவறாக எதுவும் பேசியதில்லை. எல்லைத்தாண்டி பழகவும் முயற்சித்ததில்லை. ஆனால் பார்வையில் ஒரு நெருக்கம் இருக்கும். பேச்சில் அக்கறை இருக்கும். சிரிப்பில் ஈர்ப்பிருக்கும். முகத்தில் அப்பாவித்தனம் விரவியிருக்கும். அவர் பயந்தார்… இந்த பார்வையும் சிரிப்பும் தன்னை மீளமுடியாத எல்லைக்கு இழுத்துச் சென்றுவிடுமோ என்று பயந்தார். அதனால் அவளை தவிர்க்க நினைத்தார். முடியவில்லை… அவள் விலகவில்லை… எனவே கடுமையாக நடந்து கொண்டார்.

 

அன்று இராஜேஸ்வரிக்கும் அவருக்கும் பெரிய சண்டை. இவளால்தான்… யாரோ எதையோ இட்டுக்கட்டி சொல்லபோய் அதை நம்பி இராஜேஸ்வரி அவரை கேள்விகேட்டாள். நெறிதவறாமலிருக்க அவர் எவ்வளவு போராடிக் கொண்டிருக்கிறார். அது தெரியாமல் இவள் ஏதோ குற்றவாளியை கேள்வி கேட்பது போல் கேட்டுவிட்டாள். உடனே அவர் சீறிப்பாய, வாக்குவாதமாகி இருவருக்கும் சண்டையாகிவிட்டது.

 

வீட்டில் பிரச்சனை பண்ணிவிட்டு அப்போதுதான் அலுவலகத்திற்கு வந்தார். இங்கே வந்து பார்த்தால் இவள் காத்துக் கொண்டிருக்கிறாள். கண்மண் தெரியாத ஆத்திரம் அவரை ஆட்கொண்டது.

 

பெரிய முன்னணி நடிகை… தயாரிப்பாளரின் அலுவலகத்திற்கு வந்து அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கிறாள் என்றால் கிசுகிசுப்பு வரத்தானே செய்யும்! அவருடைய வீட்டில் பூகம்பம் வெடிக்கத்தானே செய்யும்! அதுதான் அவருடைய ஆத்திரத்திற்கான மூலம். இதற்கு இன்றே ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்கிற வேகத்தோடு, “எதுக்கு இங்க வந்த?” என்று ரிசப்ஷனில் வைத்தே கேட்டார். அலுவலகத்தில் இருந்த அனைவரும் வேடிக்கைப் பார்த்தார்கள்.

 

அவளுக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. “உங்களை பார்க்கத்தான் வந்தேன்” என்றாள் மெல்லிய குரலில்.

 

“சரி சொல்லு… என்ன விஷயம்”

 

இப்படி கத்தரித்துக் கேட்டால் அவளால் என்ன சொல்ல முடியும். “உள்ள போயி பேசலாமா?” என்றாள் தாழ்ந்த குரலில். அவ்வளவுதான்… அவருடைய பொறுமை பறந்துவிட்டது. ஆணின் ஆதிக்க புத்தி மேலெழுந்து தலைவிரித்தாடத் துவங்கியது.

 

அவளை தரக்குறைவாக பேசினார். அவளுடைய பெண்மையை கேள்வி கேட்டார். வார்த்தைகளால் கொச்சைப் படுத்தினார். அவள் திகைத்துப் போய்விட்டாள். அதுவரை நேசத்தைப் பார்த்த அவளுடைய விழிகளில், அன்று அவர் பரிதவிப்பையும் ஏமாற்றத்தையும் கண்டார். சட்டென்று பேச்சை நிறுத்திவிட்டார். தலையெடுக்கத் துவங்கிய குற்றஉணர்ச்சியை உள்ளேயே அழுத்தி அடக்கி வைத்துவிட்டு அவளை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தார்.

 

“நீங்க என்ன ஸ்க்ரீன்ல பார்க்கறீங்களோ அந்த அளவுதான்… அதுக்கு மேல… பேக் டோர் ரிலேஷன்ஷிப் எல்லாம்…. ஐ நெவர்…” – அவளால் பேச முடியவில்லை. கண்களில் கண்ணீர் மட்டும் தாரைதாரையாய் வடிந்தது. ஓரிரு நிமிடங்கள் அவரையே பார்த்துக் கொண்டிருந்தவள் பிறகு சட்டென்று திரும்பிச் சென்றுவிட்டாள்.

 

பெண்களை காயப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் ஆண்களுக்கு இது ஒரு சுலபமான வழி. அதிலும் நடிகை என்றால் சொல்லவே வேண்டாம். இப்படித்தான் என்று முத்திரையே குத்திவிடுவார்கள். அவளுக்கும் அப்படி ஒரு முத்திரையைத்தான் அனைவர் முன்பாகவும் அவர் குத்தி அனுப்பினார்.

 

அதன் பிறகு மூன்று நாட்கள் அவள் அவரை தொடர்புகொள்ளவில்லை. மூச்சுக்கு முன்னூறு முறை போன் செய்பவள் மூன்று நாட்களாக அழைக்கவில்லை என்றதும் அவருடைய மனம் அவளுக்குப் பின்னால் செல்ல துவங்கியது. அப்போது மட்டும் மனைவி குழந்தைகளையெல்லாம் வசதியாக மறந்துவிட்டார். தானாகவே அவளை அழைத்துப் பேசினார். இன்னும் ஒருநாள் விட்டிருந்தால் அவளே அவரை அழைத்திருப்பாள் என்பது வேறு கதை. ஆனால் அன்று அவர்களுக்குள் உருவான சிறு இடைவெளியை முதலில் உடைத்தெறிந்து அவர்தான்.

 

சிவமாறன் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார். “என்னால ராஜியையும் குழந்தைகளையும் பிரிய முடியாது. அவங்களுக்கு துரோகம் பண்ணவே முடியாது” – மனதாரத்தான் கூறினார். குடும்பத்தை வீட்டுக் கொடுக்கும் எண்ணம் எள்ளளவும் அவர் மனதில் இல்லை. ஒரே நேரத்தில் இரண்டு குடும்பங்களை கொண்டு ஓட்டும் கீழ்த்தரமான வேலையையும் அவர் செய்ய விரும்பவில்லை. எனவே அவளை அழைத்துப் பேசினார். புரியவைக்க முயன்றார். அவளும் புரிந்துக் கொண்டாள். நண்பர்களாக மட்டும் இருப்போம் என்று முடிவு செய்து கொண்டார்கள்.

 

காதல் இருக்கும் இடத்தில் நட்பெல்லாம் எத்தனை நாட்களுக்கு என்கிற கேள்வி அவர்களுக்குள் எழாமல் போய்விட்டது பாவம். ஆரம்பத்தில் நட்பு என்று நினைத்துதான் பழகிக் கொண்டிருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் சிவமாறனுக்குள் ஒரு மாற்றம் வந்தது. நடிப்புதான் என்றாலும், அவள் நடிகர்களோடு நெருங்குவது அவரை சங்கடப்படுத்தியது. நாளுக்கு நாள் சங்கடம் அதிகமாகி மனஉளைச்சலுக்கு ஆளானார். அதை அவளிடம் வெளிப்படுத்தவும் அவர் விரும்பவில்லை.

 

அவளுடைய தொழிலில் குறுக்கிடும் உரிமை அவருக்கு இல்லை என்பது அவர் அறிந்ததுதானே! அமைதியாகத்தான் இருந்தார். ஆனால் அணுஅணுவாக அவரை அளந்து வைத்திருக்கும் அவளுக்குத் தெரியாதா… அவருடைய விருப்பு வெறுப்பு என்னவென்று. சட்டென்று புதுப் படங்களின் ஒப்பந்தத்தை நிறுத்திக் கொண்டாள். ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொடுத்த படங்களை மட்டும் முடித்துக் கொடுப்பது என்கிற முடிவிற்கும் வந்துவிட்டாள்.

 

இது மிகப்பெரிய முடிவு… இந்த இடத்திற்கு வர அவள் எவ்வளவு பாடு பட்டிருக்கிறாள்… உழைத்திருக்கிறாள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். அத்தனை ஆண்டுகள் கடின உழைப்பின் பலனை அனுபவிக்கும் காலம் இது. வெற்றிக்கனியை ருசிக்கும் காலம். இதையே வீட்டுக் கொடுக்க துணிந்துவிட்டாளே! அதுவும் அவருக்காக! அவளுக்காக எதையுமே செய்யாத அவருக்காக! ‘இது அநீதி… பெரும் அநீதி…!’ அவர் உள்ளம் உறக்கக் கூவியது. அதே உள்ளம் அடியாழத்தில் ரகசியமாய் மகிழவும் செய்தது.

 
6 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  இப்படிப்பட்ட ஆண்கள மிகச்சரியாக காரணம் கற்பிப்பார்கள்,அதுவும் தன் மீது துளியளவு கூட குற்றம் இருக்காத மாதிரி அதனை காட்டிக்கொள்வார்கள்,அப்படிப்பட்ட ஒருவர்தான் சிவமாறன்,தேவ்வின் தந்தை மீதான கோபம் நியாயமானதே,அதற்காக உறவுகள் மீது அவநம்பிக்கை கொள்வது தவறு.

  நன்றி


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thank you Thadsayani…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Uma Deepak says:

  ம்ம்.. என்ன சொல்லன்னு தெரியல .. தேவ் செய்தது சரி தான்.. ஆனால் மதுரா விஷயத்தில் கொஞ்சம் ஓவரா ஓவர்..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thanks Uma Deepak…


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pons says:

  தேவ் பாவம்..


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
   admin says:

   Thanks Pons akka…

error: Content is protected !!