Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இதயத்தில் ஒரு யுத்தம் – 21

அத்தியாயம் – 21

தனிமையில் விடப்பட்ட சூர்யா சில நிமிட சிந்தனைக்கு பிறகு அங்கிருந்து எப்படியும் தப்பித்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தாள். அறையிலிருந்து வெளியேறிய தீரஜ் வலது பக்கம் சென்றான். இடது பக்கம்தான் மாடிப்படி இருக்கிறது. அப்படியானால் அவன் கீழே போகவில்லை. இந்த நேரம் கீழே போய்விட்டால் அங்கிருப்பவர்களிடம் எதையாவது பேசி சமாளித்துவிட்டு தீரஜ்ஜின் கண்ணில் மீண்டும் படுவதற்குள் ஓடிவிட வேண்டும் என்று முடிவு செய்த பொழுதுதான் சர்ட்டிஃபிக்கெட்ஸ் பற்றிய ஞாபகம் வந்தது…
‘சர்டிஃபிகட்ஸாவது மண்ணாங்கட்டியாவது… எதுவும் வேண்டாம்… இங்கிருந்து தப்பித்தால் போதும்…’ என்று நினைத்தபடி வெளியே எட்டி பார்த்தாள். அவளுடைய நல்ல நேரம் மாடி ஹாலில் யாரும் இருக்கவில்லை. இதயம் “டம்… டம்…” என்று ட்ரம்ஸ் வாசிக்க… மெல்ல படியிறங்கி கீழே வந்தாள்.

 

கீழ் தளத்தில் சலீம் நின்று கொண்டிருந்தான். அதிர்ச்சியடைந்த சூர்யா மூச்சை இழுத்துபிடித்துக் கொண்டு முன்னேறினாள். சலீமோ எந்த சந்தேகமும் இல்லாமல் இவளை பார்த்ததும் “சாரி மேடம்… அன்றைக்கு நீங்க யாருன்னு தெரியாமல் பவன் சொன்னதை உண்மை என்று நினைத்து மோசமாக நடந்து கொண்டுவிட்டேன்…” என்றான் வருத்தத்துடன்.

 

“ம்ம்ம்… ஓகே…” என்று முனகலுடன் சொல்லிவிட்டு நகர்ந்தாள்.

 

“ஜி என்ன செய்றார் மேடம்… நான் அவரை பார்க்க மேல போகலாமா…?” என்று அவளிடம் விபரம் கேட்டான்.

 

தீரஜ் மாடியில்தான் இருக்கிறான் என்பதை உறுதி செய்து கொண்ட சூர்யா… அவனிடம் குறைந்தது ஒரு மணிநேரத்திற்கு யாரையும் நெருங்க விடக் கூடாது என்று முடிவு செய்து “இல்ல… ஒரு மணிநேரம் யாரும் அவரை தொல்லை செய்ய வேண்டாம் என்று சொல்ல சொன்னார்.” என்று ஒரு பிட்டை போட்டுவிட்டு ‘கடவுளே…! எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க உதவி செய்துவிடப்பா…’ என்று இறைவனிடம் பிராத்தனை செய்து கொண்டே வெளியே நடந்தாள்.
சலீம் அவளை பின் தொடர்ந்தான். சூர்யாவின் இதயம் தொண்டைக்கு எகிறியது… பிடிவாதமாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு… “நான் கிளம்புறேன்… டிரைவரை கார் எடுக்க சொல்லுங்க…” என்றாள் சாதாரணமாக.

 

பிரசாத்ஜியோடு பேசிக் கொண்டிருந்த பெண் பேச்சு வார்த்தை முடிந்து அவனுடைய அனுமதி இல்லாமல் மாடியிலிருந்து கீழே வந்திருக்க முடியாது என்று சலீம் நம்பியதால் சூர்யாவின் மீது எந்த சந்தேகமும் இல்லாமல் டிரைவரை அழைத்து காரை எடுக்க சொல்லி சூர்யாவை அனுப்பி வைத்தான்.

 

“அண்ணா உங்க போன் கொஞ்சம் கொடுங்க… அப்பாக்கு ஒரு கால் பண்ணிட்டு தர்றேன்…” காரில் சென்று கொண்டிருக்கும் போது நயமாக பேசி டிரைவரின் கைபேசியை கைபற்றிவிட்ட சூர்யா…. தன்னுடைய கைபேசியிலிருந்தே தந்தைக்கு அழைத்தாள்.

 

“அப்பா… உனக்கு ஒரு sms வந்திருக்கும்… செக் பண்ணு…” என்று சொல்லி பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டவள்…

 

“அண்ணா… காந்தி பார்க் போங்க…” டிரைவரிடம் சொன்னாள்.
கார் காந்தி பார்க்கை அடைந்ததும் கிருஷ்ணமூர்த்தி கையில் இன்டு பெரிய பைகளுடன் காரில் ஏறினார்.

 

“அண்ணா… பஸ் ஸ்டேஷன் போங்க…” மீண்டும் டிரைவரிடம் சொன்னாள்.
அவர் பத்திரமாக சூர்யாவையும் அவளுடைய தந்தையையும் கோசிகாலன் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டார்.

 

அவருடைய கைபேசியை அவரிடம் ஒப்படைத்துவிட்டு சூர்யா தந்தையுடன் பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து மதுரா செல்லும் பேருந்தை தேடி சென்ற அதே நேரம் தீரஜ்பிரசாத் புயல் வேகத்தில் அதே பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தான்.

 

இருபது நிமிடத்திற்கு முன் சூர்யாவிற்கு தீரஜ் கொடுத்த ஒரு மணிநேரம் முடிந்துவிட்டதால், அவளை தேடி அவனுடைய அறைக்கு சென்றான். அவள் அங்கு இல்லை… பெரிதாக சத்தம் போட்டு சலீமை அழைத்து விபரம் கேட்டு தெரிந்து கொண்டவன்… டிரைவருக்கு போன் செய்தான். போன் அனைத்து வைக்கப்பட்டிருந்தது. உடனடியாக சிட்டியை சுற்றிக் கொண்டிருக்கும் தன்னுடைய ஆட்களுக்கு தொடர்பு கொண்டு கிருஷ்ணமூர்த்தியை கவனித்துக்கொள்ள சொன்னான். அவரை தீரஜ்ஜின் ஆள் ஒருவன் தொடர்ந்து கொண்டிருந்தான். பத்தே நிமிடத்தில் சூர்யா இருக்கும் இடம் தெரிந்துவிட்டது.

 

தீரஜ்ஜின் ஆட்கள் ஒவ்வொரு பேருந்தாக சலித்துக் கொண்டிருக்கும் போது சூர்யா ஏறியிருந்த பேருந்து, பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்தது. அங்கே வாயிலில் மதுரைவீரன் போல் நின்று கொண்டிருக்கும் தீரஜ்பிரசாத்தை பார்த்துவிட்டு பீதியுடன் கூட்டத்திற்குள் தன்னை மறைத்துக் கொண்டாள் அவள்.

 

அவளுடைய முயற்சி வெற்றிபெறவில்லை. அவன் அவளை மட்டும் பார்க்கவில்லை… அவளுடைய கண்களில் தெரிந்த பீதி… பயம்… தவிப்பு… அனைத்தையும் பார்த்தான்.

 

‘என்னை உரிமையோடு ‘டா’ போட்டு பேசி சிரித்த சூர்யாவா இன்று என்னை கண்டு பயந்து ஒளிகிறாள்…! என்னோடு ஒரு நாள் கூட பேசாமல் இருக்க முடியாத சூர்யாவா இன்று என்னிடமிருந்து பிரிந்து செல்ல துடிக்கிறாள்…! என்னோடு வார்த்தைக்கு வார்த்தை போர் செய்யும் சூர்யாவா இன்று நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் ஓடுகிறாள்…!’ உண்மையிலேயே அந்த நொடி அவனுடைய இதயத்தில் யாரோ ஆயிரம் ஊசிகளை செருகுவது போல் வலித்தது அவனுக்கு.

 

அவன் அவளுடைய பயணத்தை தடுக்கவில்லை. கூட்டத்திற்குள் முண்டியடித்து தன்னை நுழைத்துக் கொண்டு, தீரஜ் இருக்கும் பக்கம் கூட திரும்பாமல் நிற்கும் சூர்யாவின் மீது பதித்த பார்வையை விளக்காமல் நின்று கொண்டிருந்தான் அவன்.

 

அதுவரை அவன் தன்னை கவனிக்கவில்லை என்று நினைத்த சூர்யா பேருந்து சாலையில் ஏறிய பிறகு தலையை வெளிப்பக்கம் லேசாக நீட்டி தீரஜ் நின்று கொண்டிருந்த திசையை பார்த்தாள். கணநேரம் அவளுடைய கண்கள் தீரஜ்ஜின் கண்களை சந்தித்துவிட்டன. வெடுக்கென தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள். ஆனால் அந்த ஒரு நொடி பார்வை அவளுக்குள் ஆயிரம் கேள்விகளை எழுப்பின.

 

‘எப்போதிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறான்…? ஏன் நம்மை தடுக்கவில்லை…? ஏன் அப்படி பார்த்தான்…? ஒரு மாதிரி…! அடிபட்ட சின்ன குழந்தை மாதிரி…! என்ன ஆச்சு இவனுக்கு…? ஒரு வேளை அவன் நம்மை பார்க்கவே இல்லையோ…!’ சந்தேகம் பெரிதாக எழுந்தது.
சில அடி தூரம் நகர்ந்துவிட்ட பேருந்திலிருந்து நன்றாக எட்டி பார்த்தாள். அவன் மாறாத பார்வையுடன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான். இப்போது அவள் தலையை உள்ளே இழுத்துக் கொள்ள மறந்து அவனை நன்றாக பார்த்தாள். வலி… ஏக்கம்… தவிப்பு… காதல்… கோபம்… எல்லாம் கலந்த ஒரு பார்வை… அவன் கடைசியாக அவளை பார்த்த பார்வை… அவளால் காலத்திற்கும் மறக்க முடியாத பார்வை…

 

அவன் உருவம் அவள் கண்களிலிருந்து மறைந்தது. அவனுடைய சோகமான கடைசி பார்வையை அவளால் மறக்க முடியவில்லை. அவனிடமிருந்து விலக விலக இனம் புரியாத வலி அவள் மனதை மென்று தின்றது. அவளுக்கு தீரஜ்ஜை மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் பிரசாத்ஜியை சுத்தமாக பிடிக்கவில்லை. அவர்கள் இருவரும் ஒருவர்தான் என்கிற சூழ்நிலையில் பிரசாத்ஜி மேலிருக்கும் வெறுப்பு தீரஜ் மேலிருக்கும் ஆசையை வென்று சூர்யாவை குழப்பி வேதனை படுத்தி அவனிடமிருந்து விரட்டிக் கொண்டு வந்துவிட்டது. மனதின் வேதனை தாங்காமல் அவள் தந்தையின் தோளில் சாய்ந்து கண்ணீர்விட்டாள். அவர் ஆறுதலாக மகளின் தலைகோதினார்.

 

# # #

 

மதுரா வந்து சேர்ந்த தந்தையும் மகளும் அங்கிருந்து ஆக்ராவிற்கு பஸ் ஏறினார்கள். “சென்னைக்கு கிளம்புகிறோம்… உடனே கிளம்பி காந்தி பார்க் வா…” என்று மகள் அனுப்பியிருந்த மெசேஜ் பார்த்துவிட்டு மறுபேச்சின்றி மகள் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு வந்து அவளோடு சேர்ந்து கொண்டு… அதுவரை அவளை கேள்வி கேட்காமல் பொறுமையாக இருந்த கிருஷ்ணமூர்த்திக்கு அதற்க்கு மேல் பொறுக்க முடியவில்லை. அவர் மகளை குடைய ஆரம்பித்துவிட்டார். தந்தையிடம் எதையும் மறைக்கும் நோக்கமில்லாத சூர்யா ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் அவரிடம் விளக்கிவிட்டாள்.

 

சூர்யா சொன்ன அனைத்தையும் கேட்டவருக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது.
“கண்ணு… கொஞ்சம் தண்ணி குடு…” என்றார்.

 

மதுராவில் வாங்கிய தண்ணீர் பாட்டிலை எடுத்து தந்தைக்கு திறந்து கொடுத்தாள் மகள். அதை வாங்கி மடமடவென பருகியவர், சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு…
“ஏங்கண்ணு… அந்தமாதிரி இடத்துலையா (பேப்பர் மில்) கண்ணு உன்னை அடச்சு வச்சிருந்தானுங்க… அந்த மனுசனை பார்த்தா எனக்கே அவ்வளவு மோசமானவர் மாதிரி தெரியலை… நீ அவரை சாதாரண மனிதர் என்று நினைத்து பழகியதில் ஒரு வியப்பும் இல்லை கண்ணு…” அவர் வியந்து போனார்.

 

“……………”

 

“இன்னைக்கு வேற உன்னை அங்க கொண்டு போயிட்டானுங்களே…! பெரிய ஆபத்துலேருந்து தப்பி வந்துருக்க கண்ணு…” அவர் கண்ணில் அச்சம் தெரிந்தது.

 

மகள் எவ்வளவு பெரிய கண்டத்திலிருந்து தப்பியிருக்கிறாள்…. அவருக்கு இந்த விஷயத்தை மனதிற்குள் அடக்கி வைக்க முடியவில்லை. யாரிடமாவது உடனே கொட்டிவிட வேண்டும் போல் இருந்தது. இதை பற்றி யாரிடம் பேச முடியும்… மனைவியிடம் மட்டும்தான் மகளை பற்றி முழுமையாக சொல்ல முடியும்…

 

ஆக்ராவில் விமானம் ஏறியவர்கள் சென்னை விமானநிலையத்தில் இறங்கியவுடன் வீட்டிற்கு சென்று மனைவியிடம் விளக்கும் பொறுமை இல்லாமல் கைபேசியில் சிந்தாமணியை அழைத்து சுருக்கமாக மூன்று வரியில் மகளுக்கு நடந்ததை சொல்லி முடித்தார். அதை கேட்ட சிந்தாமணி கண்ணீரும் கம்பலையுமாக மகளின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார்.

 

# # #

 

கண்ணிலிருந்து மறையும் வரை தூரத்தில் செல்லும் பேருந்தையே வெறித்துக் கொண்டிருந்த தீரஜ் சோர்ந்து போனவனாக வீடு வந்து சேர்ந்தான்.

 

இதுவரை தோல்வியையே சந்திக்காதவன் அல்ல தீரஜ். சிறு வயதிலிருந்து தோல்விகளோடு போராடி அவைகளை முன்னேற்றத்தின் படிகளாக மாற்றி வெற்றிக்கொடி நாட்டிய சாமர்த்தியக்காரன்தான் அவன் என்றாலும், இன்று அவன் கண்ட தோல்வி அவனுக்கு மரணடியாகிப் போனது. அதற்கான காரணம் ‘சூர்யா…’ சூர்யாவை அவனால் இழக்க முடியாது… முடியவில்லை…

 

‘சூர்யா என்னை ஏன் உதறிச்சென்றாள்…? என்னை அவளுக்கு பிடிக்கவில்லையா…? ‘ அவன் யோசித்தான்

 

‘நிச்சயமாக இல்லை… அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். அதை அவள் சொல்லவில்லை என்றாலும் அவளுடைய முகமும் கண்களும் தெளிவாக சொல்கின்றன…’ அவன் மனமே அவனுக்கு பதில் சொன்னது…

 

‘பிறகு என்ன…? ‘ அவன் யோசித்தான். விடையும் கிடைத்தது…

 

‘அவளுக்கு அவனுடைய வாழ்க்கை முறை பிடிக்கவில்லை… அதை அவன் மாற்றிக்கொண்டால் சூர்யா சுலபமாக சமாதானமாகிவிடுவாள். ஆனால் அவன் மாற்றிக்கொள்வானா… ? ‘

 

‘நிச்சயம் மாட்டான்… எதற்காக மாற்றிக்கொள்ள வேண்டும்… அவனை பொறுத்தவரை அவனுடைய வாழ்க்கை முறை சரிதான்… இப்படிப்பட்ட வாழ்க்கையைதான் அவன் விரும்புகிறான். அவனால் இந்த நிலையிலிருந்து இறங்க முடியாது… இறங்கினால் அவனே இல்லாமல் போய்விடுவான்… அவனுக்கு சூர்யாவும் வேண்டும்… அவனுடைய அடையாளங்களும் வேண்டும்… ஆனால் இரண்டும் ஒன்றாக கிடைக்காது… அவளா…? அவனுடைய அடையாளங்களா…? இதுவா…? அதுவா…?’ அவன் இதயத்தில் ஒரு யுத்தம் துவங்கிவிட்டது…
மனபாரம் தாளாமல் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்து புகையை ஆழமாக இழுத்து விட்டான். மனபாரம் சிறிதும் குறையவில்லை. அவளுடைய ஞாபகம் அவனை உலுக்கியது. அவன் நிலைகொள்ளாமல் தோட்டத்திற்குள் நுழைந்தான். இயற்கை காற்று சில்லென்று முகத்தில் மோதியது. அந்த காற்றின் வருடல் அவன் மனபாரத்தை குறைப்பதற்கு பதில் சூர்யாவின் நினைவை அதிகப்படுத்தியது.

 

எங்கோ எப்போதோ கேட்ட திலிப்வர்மனின் பாடல் அவன் செவிகளில் இடைவிடமால் ஒலித்துக் கொண்டிருந்தது.

 

“கனவெல்லாம் நீதானே!
விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெல்லாம் நீதானே!
கலையாத யுகம் சுகம் தானே…

பார்வை உன்னை அலைகிறதே
உள்ளம் உன்னை அழைக்கிறதே
அந்த நேரம் வரும் பொழுது
என்னை வதைக்கிறதே….

கனவெல்லாம் நீதானே!
விழியே உனக்கே உயிரானேன்…
நினைவெலாம் நீதானே!
கலையாத யுகம் சுகம் தானே…

சாரல் மழை துளியில்
உன் ரகசியத்தை வெளிபார்த்தேன்
நாணம் நான் அறிந்தேன்
கொஞ்சும் பனி பூவாய் நீ குறுக

எனை அறியாமல் மனம் பறித்தாய்
உன்னை மறவேனடி
நிஜம் புரியாத நிலை அடைந்தேன்
எதுவரை சொல்லடி

காலம் தோறும் நெஞ்சில் வாழும் உந்தன்
காதல் ஞாபகங்கள் தினம் தினம்…”

 

அன்றிலிருந்து தினம் தினம் சூர்யாவின் ஞாபகங்கள் தீரஜ் பிரசாத்தின் நெஞ்சை பிழிந்தன. முதன் முதலில் சென்னையில் அந்த பேருந்து நிறுத்தத்தில் கார் ஹெட் லைட் வெளிச்சத்தில்… மழையில் நனைந்து… பனி பூவாய் குறுகி அவள் நின்றது அவன் நினைவில் வந்தது.

 

மீண்டும் அதே போல் ஒரு சூழ்நிலையில் அவளை கோசிகாலனில் பார்த்தது நினைவில் வந்தது.
அன்று ஒரு குழந்தை, ‘திருடன்-போலீஸ்’ விளையாட்டு விளையாடுவது போல் அவள் நடந்து கொண்டது நினைவில் வந்தது… அதற்காக அவள் மன்னிப்பு கேட்டது… அதன் பிறகு அவனுடன் தினம் தினம் காரில் பயணம் செய்தது…. அவன் அவளிடம் காதல் சொன்னது… அதற்கு அவள் அவளுடைய எதிர்பார்ப்பை சொன்னது… அவர்கள் இருவரும் சேர்ந்து ஊர் சுற்றியது… அவளை அவனுடைய இடத்திலேயே மோசமான சூழ்நிலையில் அவன் பார்த்தது… அதன் பிறகு அவனை பார்க்கும் போதெலாம் அவள் அஞ்சி நடுங்கியது… பின் அவனை மூன்றாம் மனிதனை போல் தள்ளி நிறுத்தி குற்றம் சொன்னது… கடைசியாக அவனுடைய காதலை அவள் தூக்கி எறிந்துவிட்டு அவனிடமிருந்து தப்பித்து ஒளிந்து மறைந்து ஓடியது… என்று அவனுக்கு அவளுடைய ஞாபகங்கள் அனைத்தும் மாறி மாறி நினைவில் வந்து கொண்டே இருந்தது… அவன் மனம் அனலில் விழுந்த புழுவாக சுருண்டது.

 

தீரஜ்பிரசாத்தால் சூர்யாவின் நினைவுகளை துறந்து மதுராவில் ஒரு இடத்தில் கூட இருக்க முடியவில்லை. எங்கும் எதிலும் அவள் நிறைந்திருந்தாள். அவள் நினைவுகள் அவனை விடாமல் துரத்தியது. அவன் ஓடினான்… விரண்டு ஓடினான்… கடல் கடந்து கண்டம் கடந்து ஐரோப்பியாவிற்கு ஓடினான்… உள்ளே வேரூன்றிவிட்ட அவளை பிடுங்கியெறிந்துவிடும் வெறியுடன் ஓடினான்… அது அவனால் முடியுமா…? முடியும் என்றால் அதை அவன் மதுராவிலேயே செய்திருக்க முடியுமே…! எதற்காக ஓட வேண்டும்…?
உலகையே கட்டியாள புறப்பட்ட சர்வாதிகாரி பெனிடோ முசோலினி கிளாரேட்டா பெட்டகி என்ற பேரழகியை உயிருக்குயிராக நேசித்தான். ஒரு முறை முசோலினி கிளாராவை பற்றிக் கூறியது…

 

“என் வாழ்வின் வசந்தம் கிளாரா! என் இளமை அவள்!
என் வாழ்வில் நான் அடைந்த மிக இனிமையான செல்வம்”

 

ஆனால் முசோலினியின் அழிவிற்கு முதற்படி அவன் கிளாரா மேல் கொண்ட காதல்… கட்டுக்கடங்காத காதல்…

 

பெனிடோ முசோலினி, ஜோசப் ஸ்டாலின், அடால்ஃப் ஹிட்லர், ஈரான் மன்னன் ஷா போன்ற உலகையே ஆள நினைத்த சர்வாதிகாரிகள் எல்லாம் ஒரு கட்டத்தில் ‘காதல்… பெண்…’ என்னும் மந்திரத்தில் சிக்கி தவித்தவர்கள்தான். அப்படி இருக்க தீரஜ்பிரசாத் மட்டும் தப்பிவிட முடியுமா… அவனும் சிக்கி தவித்தான்…. சூர்யாவின் நினைவு மனதை அழுத்த விழிபிதுங்கினான்…

 

# # #

 

சென்னை வந்து சேர்ந்த சூர்யாவை அவளுடைய தாய் வாரி அணைத்து உள்ளே அழைத்து சென்றாள். பயண களைப்பில் இருந்தவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்து அவர்கள் இளைப்பாறிய பிறகு… மெல்ல மகளிடம் பேச்சை ஆரம்பித்தாள்.

 

“என்ன கண்ணு… அப்பா என்னென்னவோ ஃபோன்ல சொன்னாரே… உன்ன எதுக்கு கண்ணு அந்த ஆளு கடத்தினாறு…? அந்த மாதிரி ஆளோட உனக்கு எதுக்கு கண்ணு சகவாசம்…? ”

 

“அவன் என்னை ஏமாத்திட்டாம்மா… அவன்தான் அந்த பிரசாத்ஜின்னு எனக்கு தெரியாது… என்னை நல்லா ஏமாத்திட்டாம்மா… அவனோட உண்மையான முகம் தெரிஞ்சிருந்தா நான் அவனோட பழகியிருக்கவே மாட்டேன்…” சிந்தாமணியிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆத்திரம் தொண்டையை அடைக்க அவள் கேவி அழுதாள்.

 

“என்ன கண்ணு… எதுக்கு கண்ணு நீ அழுவுற…. ஐயையோ… நீ கலங்கினா என்னால தாங்க முடியுமா…? நா அழுதா என்ன திட்டுவியே… இப்ப நீயே அழுவலாமா…?” சிந்தாமணி மகளின் கண்ணீரை தாங்க முடியாமல் பதறினாள்.

 

“எனக்கு தெரியும் கண்ணு… நீ இந்த மாதிரி ஆளுக்களோட பழக மாட்டேன்னு… ஏதோ நம்ம கெட்ட நேரம் நீ அந்த ஊருக்கு போகணும்… அந்த ஆளு கண்ணுல படனும்… நம்ம இதெல்லாம் அனுபவிக்கனுமுன்னு தலையில எழுதியிருந்திருக்கு… அதை யாரால மாத்த முடியும்…? ஏதோ… சனியன் இத்தோட விட்டுதேன்னு நெனச்சுக்க…” என்று மகளுக்கு சொல்வது போல் தனக்கும் ஆறுதல் சொல்லிக் கொண்டாள் சிந்தாமணி.

 

சூர்யா முன்பு போல் படபடப்பாக யாரிடமும் எதுவும் பேசுவதில்லை. பெற்றோருக்கு அறிவுரை சொல்வதை சுத்தமாக விட்டுவிட்டாள். அவர்கள் எது சொன்னாலும் அதுவே அவளுக்கு வேதவாக்கானது. சிரிப்பை மறந்தேவிட்டாள்.

 

அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. மனதை ஒருநிலை படுத்த முடியாமல் அதன் போக்கில் விட்டுவிட்டாள். அது முழுக்க முழுக்க தீரஜ்பிரசாத்தின் நினைவுகளையே அசை போட்டுக் கொண்டிருந்தது. அவனிடம் இருக்கும் நல்ல குணங்களை சுகமாக அசைப்போடும் மனது, அவனுடைய மற்றொரு முகத்தின் நினைவுகளை அசை போடும் போது அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும்.

 

மகளின் மெலிந்த உடலும், சோர்ந்த முகமும் எப்போதும் சிரிப்பை துளைத்துவிட்டு விட்டத்தை வெறித்தபடி அமர்ந்திருக்கும் நிலையம் பெற்றோரை வருத்தியது.
அவளை சகஜமாக்க நினைத்து அவர்கள் பேச்சு கொடுத்தால் அந்த நேரம் மட்டும் தன்னை சகஜமாக காட்டிக்கொள்ளும் சூர்யா சில நிமிடங்களிலேயே மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவிடுவாள்.

 

‘எத்தனை நாள் இப்படியே இருப்பாள்… நிச்சயம் சில நாட்களில் பழைய சூர்யாவாக மாறிவிடுவாள்..’ என்று நம்பிய பெற்றோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
நாட்கள்தான் நகர்ந்து கொண்டிருந்தன. சூர்யாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அவளுடைய அடி மனதில் புதைந்து இருக்கும் காதல் அவளை சகஜமாக இருக்க விடாமல் படுத்தியது. அதே நேரம் தீரஜ்பிரசாத்தின் கையாட்களின் அநாகரீகமான பேச்சும், நடத்தையும், கொலைவெறி தாக்குதலும் அவன் மீது வெறுப்பை எற்படுத்திவிட்டது. அவள் இந்த இரண்டு உணர்வுகளுக்கும் இடையில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்தாள்.

 

இவ்வளவு துன்பத்திலும் அவளுடைய ஒரே ஆறுதல் பிரபாவின் உடல்நிலை முன்னேற்றம்தான். சென்னைக்கு திரும்பியதிலிருந்து அடிக்கடி தோழியை சென்று சந்தித்துக் கொண்டிருந்தவள் அன்றும் அப்படித்தான் பிரபாவின் வீட்டிற்கு சென்றாள்.

 

“எப்படி இருக்க பிரபா…?”

 

“நல்லா இருக்கேன் சூர்யா…” மெல்லிய புன்னகையுடன் சொன்னவள் மிகவும் மெலிந்திருந்தாள். அறுவை சிகிச்சைக்காக மொட்டையடிக்கப் பட்டிருந்த தலையில் கொஞ்சம் முடி வளர்ந்திருந்தது. தோழியை அந்த நிலையில் பார்க்கும் பொழுது சூர்யாவின் குற்ற உணர்ச்சியும் தீரஜ் பிரசாத்தின் மீதான கோபமும் அதிகமானது.

 

“சாரி பிரபா… எல்லாமே என்னாலதான்… என்னை மன்னிச்சிடு…” என்றாள் அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு.

 

“விடுடி… எத்தனை முறை சாரி சொல்லுவ…? அன்னிக்கு நடந்தது ஒரு விபத்துதான் சூர்யா… நீயும்தான் பாதிக்கப்பட்டிருக்க… நம்மை அடித்தவனை கூட பிரசாத்ஜி கடுமையா தண்டித்ததா கேள்விப்பட்டேன்… அப்படி பார்த்தால் அவனுக்கும் பாதிப்புதான்… இதுக்கு யாரையுமே பொறுப்பாக்க முடியாது…”

 

“பிரசாத்ஜி பவனுக்கு தண்டனை கொடுத்தானா…! உனக்கு எப்படி தெரியும்? ” சூர்யா ஆச்சர்யமாக கேட்டாள்.

 

“அவரோடு வந்தவர் அப்பாகிட்ட சொன்னாராம்…”

 

“வந்தவரா…? தீரஜ் சென்னை வந்தானா…?” சூர்யா தன்னை மீறி ஆர்வமாக கேட்டாள்.

 

அவளுடைய குரலில் இருந்த ஆர்வத்தை கவனித்து அதற்கான அர்த்தத்தை ஊகிக்கும் நிலையில் பிரபாவின் உடல் நிலையும் மனநிலையும் இல்லை என்பதால் தோழியின் கேள்விக்கு நேரடியாக பதில் சொன்னாள்.

 

“ஆமாம் சூர்யா… கொஞ்ச நாட்களுக்கு முன் ஒருமுறை வந்தார். பிறகு அடிக்கடி போனில் என்னுடன் பேசுவார். அப்பாவிடம் கூட பேசுவார். முன்பெல்லாம் அபா அவர் மீது பயங்கர கோபத்தில் இருந்தார். ஆனால் இப்போது அவருடைய நடவடிக்கை அப்பாவையே இலக்கிவிட்டது. சூர்யா… பார்வைக்கு அவர் தப்பானவரா தெரிந்தாலும்… உண்மையில் ரொம்ப நல்லவர்டி… ” என்று தீரஜ்பிரசாத்திற்கு சான்றிதழ் வழங்கினாள்.

 

அதற்கு மேல் சூர்யாவிற்கு எதுவும் பேச முடியவில்லை. எப்பொழுதும் போல் தீரஜ் பிரசாத்திற்குள் இருக்கும் நல்லவனை ஆதரிக்கவும் முடியாமல்… கெட்டவனை வெறுக்கவும் முடியாமல் மன போராட்டத்துடன் வீடு வந்து சேர்ந்தாள்.
மகளின் மன மாற்றத்திற்காக மாதக்கணக்கில் காத்திருந்த கிருஷ்ணமூர்த்தி அவளிடம் சிறு முன்னேற்றம் கூட இல்லாததை கண்டு ஒரு கட்டத்தில் மௌனம் களைந்தார்.

 

“கண்ணு… உனக்கு அந்த மனுஷன்… அவர் பேரு என்ன… ஆங் பிரசாத்ஜி… அவரை இன்னும் நீ மறகலையா…? அவ்வளவு மோசமான ஆள் என்று தெரிந்தும் நீ இப்படி இருக்கலாமாம்மா…?”

 

“……………….”

 

“நீ இப்படி இருக்கறத எங்களால பார்க்க முடியல கண்ணு… அவரை பிடிச்சிருந்தா சொல்லு… நான் அவர்கிட்ட பேசி உன்னை அவரோட சேர்த்து வைக்கிறேன்… உன்னை கல்யாணம் செஞ்சுக்க அவருக்கு விருப்பம்ன்னு அவர் சொன்னாதா நீதானே சொன்ன… அவர் எந்த ஆட்சேபனையும் சொல்ல வாய்ப்பு இல்ல… நீ சரின்னு சொன்னா உடனே கல்யாணம்தான்… சொல்லு கண்ணு… உன்னோட விருப்பம் என்னன்னு வெளிப்படையா சொல்லிடு கண்ணு…”

 

“……………….” அவள் மெளனமாக இருந்தாள்.

 

“கண்ணு… இது நீ சரியான முடிவு எடுக்க வேண்டிய நேரம் கண்ணு… இப்போ தப்பான முடிவு எடுத்துட்டா வாழ்க்கையே தப்பாயிடும்… சொல்லு உனக்கு அந்த மனுஷன் மேல விருப்பமா… சொல்லு…” அவர் எப்படியும் இன்று மகளை பேச வைத்துவிட வேண்டும் என்கிற ஆதங்கத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

 

“…………………..”

 

“நீ வேணுன்னா அவர்கிட்ட ஒரு தடவ போன்ல பேசி பார்க்கிறியா…?”

 

“வேண்டாம்பா…. நான் அவனை மறக்க முயற்சி செய்றேன்… ஆனா அது முடியாம சிரமப்பட்றேன்…”

 

“அப்படின்னா…?”

 

“இனி அவன் என் வாழ்க்கைல இல்லவே இல்ல… அது மட்டும் உறுதி…”

 

சூர்யாவின் உறுதியான பேச்சு கிருஷ்ணமூர்த்திக்கு தெம்பு கொடுத்தது. அவருக்கும் மகளை ஒரு தாதாவிற்கு திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லை. இருந்தாலும் மகளுக்காக இறங்கி வந்தார். இப்போது அவளே நல்ல முடுவு எடுத்துவிட்ட பிறகு என்ன கவலை…. அவர் சூர்யாவின் மனதையும் கவனத்தையும் வேறு திசையில் திருப்பினால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்று நினைத்தார்.

 

வேலைக்கு அனுப்பினால் அவள் வேலையில் கவனம் செலுத்தி தீரஜ்ஜை மறக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் டூப்ளிகேட் சர்ட்டிஃபிகேட் வாங்குவதற்கு எப்படியும் மூன்று மாதமாவது ஆகும். அதற்க்கு பிறகும் வேலைக்கு போனால் அங்கும் தீரஜ் போல் எவனாவது வந்து தொல்லை கொடுத்தால் இவள் தாங்க மாட்டாள். அதனால் ‘பாதுகாப்பாக ஒரு நல்ல பையன் கையில் பிடித்து கொடுத்துவிட்டால் பிறகு அவன் அனைத்தையும் பார்த்துக்கொள்வான்’ என்று கணக்கு போட்டார். சிந்தாமணியும் அந்த கணக்குதான் சரி என்று சான்றிதழ் வழங்கினாள். பிறகு என்ன… சூர்யாவின் கருத்தை அறியாமலே மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பித்துவிட்டது.

 

சூர்யாவின் ஜாதகம் பல வரன்களை தட்டிகழிக்க, மாப்பிள்ளை பிடிக்காமல் கிருஷ்ணமூர்த்தி சிந்தாமணி தம்பதியர் மீதி வரன்களை தட்டிக் கழித்தனர். இப்படியே சூர்யாவிற்கு மாப்பிளை தேடும் படலம் மாத கணக்கில் நீடித்தது. அந்த நேரத்தில் சிந்தாமணி ஒரு யோசனை சொன்னாள்.

 

“என்னங்க… நேத்து கோவில்ல கபிலன் தம்பியோட அத்தையை பார்த்தேன். அவருக்கும் இன்னும் பொண்ணு அமையலையாம். நாம வேணுன்னா இன்னொரு தடவ ஆள் விட்டு கேட்டு பார்க்கலாமா…?”

 

“அவங்களுக்கு விருப்பம் இல்லைன்னு ஒரு முறை சொல்லிவிட்டாங்க. பிறகு எப்படி அவங்ககிட்ட நாமளா பேசுறது…? அது சரிவராது சிந்தா…”

 

“இப்போ நம்ம சூழ்நிலை சரியில்ல… சூர்யா நமக்கு ஒரே பொண்ணு…. அவளோட வாழ்க்கை நல்லபடியா அமையிறது நமக்கு ரொம்ப முக்கியம்… சூர்யாவுக்கு அந்த பையன் பொருத்தமா இருப்பான்… இதையெல்லாம் யோசிச்சு நாம கொஞ்சம் இறங்கி போனா தப்பில்லைங்க…”

 

“சரி சிந்தா… நான் தரகர்கிட்ட சொல்லி பேசி பார்க்க சொல்றேன்…” அவர் அரைமனதாக சம்மதித்தார்.

 

 
Comments are closed here.

error: Content is protected !!