Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இதயத்தில் ஒரு யுத்தம் – 22

அத்தியாயம் – 22

மிதமான குளிர்… மெல்லிய வெளிச்சம்… மிகவும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு பூவால் அலங்கரிக்கப்பட்ட உயர்தர அறை… அதில் ஈரம் காயாத மஞ்சள் கயிறை கழுத்தில் சுமந்தபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தவளின் அருகில், மருதாணி சிவப்பேரியிருந்த அவள் கரத்தை வருடியபடி அமர்ந்திருக்கும் கணவன்.

 

சூர்யாவிற்கு இந்த சூழ்நிலை இனியமையாக இல்லாமல் கசந்தது. கணவன் ஆசையாக கையை வருடுவது சுகமாக இல்லாமல்… எரிச்சலாக இருந்தது.

 

அவளால் நம்பவே முடியவில்லை…. ‘இதுவரை எதற்கும் கட்டாயப்படுத்தாத தாய் தந்தை இந்த திருமணத்திற்கு சம்மதிக்க சொல்லி கட்டாயப்படுத்திவிட்டார்களே…! அதுவும் எப்படி…. விஷ கோப்பையையை அவளுக்கு முன்னால் வைத்து ‘திருமணத்திற்கு சம்மதம் சொல் அல்லது இந்த விஷத்தை உன் கையாலேயே எங்களுக்கு கொடுத்து கொன்றுவிடு…’ எப்பேர்பட்ட வார்த்தைகள்…! அவளால் முடியுமா…? பெற்றவர்களை கொன்றுவிட்டு அல்லது அவர்களது மரணத்திற்கு காரனமாகிவிட்டு அவளால் நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா…? வாழ வேண்டாம்… செத்துவிடலாம் என்றாலும் அவளுடைய மரணம் பெற்றோரை எப்படி பாதிக்கும் என்பதை நினைத்தால் அவளால் சாகவும் முடியவில்லையே…. என்ன செய்வது…? என்ன செய்ய முடியும் அவர்கள் சொல்வதை கேட்டுத்தான் ஆக வேண்டும்….’

 

கேட்டாகிவிட்டது… பெற்றோரின் நிம்மதிக்காக ‘என்றாவது ஒரு நாள் தனக்கு நிம்மதி கிடைக்கும்…’ என்று நம்பிக்கொண்டிருந்த அவளது நம்பிக்கையையை ஒரேடியாக குழி தோண்டி புதைத்தாயிற்று… அவளுக்குள் முழுமையாக புதைந்திருக்கும் ஒருவனை இன்னும் ஆழமாக உள்ளுக்குள் புதைத்துவிட்டு… மற்றொருவனுக்கு கழுத்தை நீட்டியாயிற்று… அவனும் உரிமையுடன் அவளுடைய கையை பிடித்துக் கொண்டிருக்கிறான். இந்த நரக வேதனையை அவள் சகித்துதான் ஆக வேண்டும்… வாழ்க்கை முழுக்க…

 

“வாவ்… என்ன கலர்… என்ன ஹைட்… என்ன ஸ்டைல்… என்னதான் சொல்லு…. சூர்யாவுக்கு நிகர் சூர்யா தான்… யாரும் உன்கிட்ட நிக்க முடியாது… ஐ லவ் யு டியர்…” அவளுக்கு அவனை சுத்தமாக பிடிக்கவில்லை என்று தெரிந்தும், கபிலன் புது மனைவியின் கையை விடாமல் பிடித்தபடி அவளை சீண்டினான்.

 

“…………………….” அவளிடமிருந்து பதில் வரவில்லை.

 

‘திமிர்… உடம்பெல்லாம் திமிர்… இந்த திமிரை அடக்கத்தானே இந்த திருமணமே…’ அவன் உதட்டில் ஏளன புன்னகை பூத்தது…

 

“என்ன எதுவுமே பேச மாட்டேங்கிற…? பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு அதிகமா பேசின… இப்போ என்ன ஆச்சு…? சரி விடு… மாப்பிள்ளை கிடைக்காம ரொ….ம்ப நாள் தேடி… தேடி… தோற்றுபோய் உன்னோட லெவல் என்னன்னு தெரிஞ்சுட்டுருப்ப… எப்படி பேச்சு வரும்…?” அவன் வேண்டும் என்றே அவளை காயப்படுத்தினான். அன்றொரு நாள் அவளிடம் அவன் பட்ட அவமானத்திற்கு இன்று பழி தீர்த்துக் கொண்டான்.

 

கபிலனுடைய அதிகப்படியான எதிர்பார்ப்பால் அவனுடைய திருமணம் தள்ளிப்போய் கொண்டே இருந்த நேரத்தில்தான் சூர்யாவின் பெற்றோர் தரகர் மூலம் தங்கள் விருப்பத்தை சொல்லி அனுப்பியிருந்தார்கள். அவனுடைய பெற்றோருக்கும் அவளை மருமகளாக்கிக் கொள்ள முழு விருப்பம்.

 

சூர்யாவின் அடாவடி பேச்சை கபிலன் வெறுத்தாலும்… திருமண வியாபாரத்தை பொருத்தவரை அவள் நல்ல உருப்படிதான் என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டதோடு, தான் அவளிடம் பட்ட அவமானத்திற்கு அவளிடமே பழிதீர்த்துக்கொள்ளும் வாய்ப்பை கூடுதல் பயன்பாடாக நினைத்துக் திருமணத்திற்கு சம்மதம் சொன்னான்.

 

அதனால்தான் அவ்வப்போது கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அவளை காயப்படுத்த முனைவான். அதற்கெல்லாம் சூர்யா காயப்பட்டுவிடவில்லை. அவள் மனதில் ஏற்கனவே மிகப்பெரிய ரணம் இருக்கிறது. இவன் பேச்செல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனால் அவன் அவளிடம் உரிமை பாராட்டுவதைதான் அவளால் சகிக்க முடியவில்லை.
அவனிடம் சிக்கியிருந்த கையை மெதுவாக உருவிக்கொண்டு கட்டிலிலிருந்து எழுந்து ஜன்னல் பக்கம் சென்று நின்றுகொண்டாள். அவன் பேச்சில் காயமடைந்துதான் தனிமையை நாடுகிறாள் என்று நினைத்த கபிலனின் முகத்தில் வெற்றி புன்னகை பூத்தது…

 

‘ஹா… என்னையா அவமானப்படுத்தின…? எம் மூஞ்சி ஊறவச்ச உளுந்து வடையா…! இருக்குடி உனக்கு… முதலிரவுலேயே ரொம்ப காய்ச்ச வேண்டாம்… வாழ்க்கை முழுக்க என்னோடதானே இருக்க போறா… அப்புறம் பார்த்துக்கலாம்….’ என்று நினைத்தவன் அவளை சமாதானம் செய்ய முடிவு செய்து அவளிடம் நெருங்கினான்.

 

“என்ன சூர்யா…? கோவமா…? சாரிடா செல்லம்… முதல் நாளே உன்ன காயப்படுத்திட்டேன்…” என்று சொல்லிக்கொண்டே அவளை பின்னாலிருந்து அணைத்தான். அவனுடைய ஸ்பரிசம் அவளை தீயாய் சுட அவள் பதறி விலகினாள்”

 

அவளுடைய விலகலில் எரிச்சலடைந்தவன் அவளை முறைத்தான். “என்ன…?” என்று கடுமையான முகத்துடன் அவளிடம் வினவினான்.

 

“பிடிக்கல…” ஒற்றை வார்த்தையாக அவளிடமிருந்து பதில் வந்தது.

 

“என்ன பிடிக்கல…?” அவன் விடாமல் கேட்டான்.

 

“உங்கள பிடிக்கல…” அவளும் அழுத்தமாகவே பதில் சொன்னாள்.

 

ஆனால் அந்த பதிலை கேட்டவனின் முகம் பயங்கரமாக மாறிவிட்டது. அவளுடைய பதில் அவனை மிருகமாக்க “உனக்கு பிடிச்சா என்ன… பிடிக்கலன்னா எனக்கு என்னடி…? எனக்கு பிடிச்சிருக்கு… அது போதும்…” என்று சொல்லி அவளை கட்டாயப்படுத்தி கணவனின் உரிமையை நிலைநாட்டினான்.

 

தினமும் இதே கதை தொடர்ந்தது. மாமனார், மாமியார், கணவன் என்று ஒரு முழுமையான குடும்பத்திற்குள் சூர்யா இருந்தாலும் அவள் தனிதீவில் இருப்பது போல் உணர்ந்தாள். மாமனார், மாமியார் அவளிடம் கடுமையாகவும் நடந்துகொள்ளவில்லை கரிசனமாகவும் நடந்துகொள்ளவில்லை. கபிலன் அவளிடம் அவனுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகவும், அவளை காயப்படுத்துவதர்காகவும் மட்டுமே பேசினான். மற்றபடி அவளை ஒரு மனித பிறவியாக அவன் நினைக்கவே இல்லை. இப்படியே எந்திரதனமாக ஒரு மாத காலம் ஓடிவிட்டது…

 

கபிலன் அன்று மிகவும் உற்சாகமாக வீட்டிற்கு வந்தான்.  “அம்மா… அம்மா…” உள்ளே நுழையும் போதே அவனுடைய அம்மாவை சத்தமாக அழைத்தபடி வந்தான்.

 

சமயலறையில் செக்கு மாடாக சுழன்றுகொண்டிருந்த சூர்யாவும் அவனுடைய கூச்சலை கேட்டு வெளியே எட்டிப் பார்த்தாள்.

 

“என்னப்பா…?”

 

“நான் ரொம்ப நாளா எதிர்பார்த்துகிட்டு இருந்தது இன்னிக்கு எனக்கு கிடச்சிருக்கும்மா…”

 

“அப்படியா… ரொம்ப சந்தோஷம்பா… என்ன விஷயம்…?”

 

“எனக்கு மதுராவுல கிருஷ்ணா கெமிக்கல்ஸ்ல வேலை கிடைச்சிருக்கு… முன்பு சூர்யா வேலை பார்த்த அதே கம்பெனிதான்…”

 

சூர்யாவிற்கு தலையில் ஒரு பெரிய இடி விழுந்தது போல் இருந்தது.
“இந்த கம்பெனில வேலை வாங்கணும் என்பது என்னோட ரொம்ப நாளைய கனவும்மா… இந்தியாவிலேயே நம்பர் ஒன் கெமிக்கல் ஃபேக்டரி இதுதான். நான் இப்போ வாங்குற மாதிரி நான்கு மடங்கு சம்பளம் அதிகம் கிடைக்கும்… ”

 

அந்த நேரம் வெளியே சென்றிருந்த அவனது தந்தையும் “என்னப்பா சமாசாரம்… எல்லாரும் ரொம்ப சந்தோசமா இருக்கீங்க…?” என்று கேட்டபடி உள்ளே நுழைந்தார்.
அவருக்கு விளக்கம் அளித்தவன் பேருக்கு கூட சூர்யாவின் பக்கம் திரும்பவில்லை.

 

“அம்மா… அவள ஏதாவது நல்ல ஸ்வீட் செய்ய சொல்லும்மா…” என்று தாயிடம் சொல்லி மனைவியிடம் சொல்ல சொல்லிவிட்டு சட்டை பட்டனை கழட்டியபடி அவனுடைய அறையில் நுழைந்தான். அந்த அளவுதான் அவன் அவளை மதித்தான்.

 

இதுவரை சூர்யா அவனிடம் தானாக பேசியதில்லை. ஆனால் இன்று அப்படி பேசும் நிலை ஏற்பட்டுவிட்டது. வேறு வழியில்லாமல் கபிலனை தொடர்ந்து அவளும் அவர்களுடைய அறைக்குள் நுழைந்தாள்.

 

“இங்க என்ன பண்ற…? ஸ்வீட் செய்ய சொன்னேனே… செய்யலையா…?” அதிகாரமாக வினவினான். என்னவோ அவளுக்கான இடம் சமையலறைதான் என்பது போல…
இதுதான் தலைவிதி என்று ஏற்றுக்கொண்டப் பின் எதிர்த்து சண்டை போட்டு எதை சாதிக்க போகிறோம் என்கிற விரக்தியில் “உங்ககிட்ட பேசணும்…” என்று அமைதியாகவே பேச்சை ஆரம்பித்தாள் சூர்யா.

 

“என்னத்த பேசப்போற…?”

 

“மதுராவுக்கு நாம போக வேண்டாம்…”

 

“ஹா…ஹா… மதுராவுக்கு நாம போறதா…! ஹேய்… எனக்கு மட்டும்தான் அங்க வேலை கிடைச்சிருக்கு… நீயும் என்னோட ஓட்டிகிட்டு கிளம்புற… ஒட்டுண்ணி…” அவன் அவளை மட்டம் தட்டினான்.

 

அவளுக்கு முகத்தில் அடிவாங்கியது போல் ஆனது. எதுவும் பேசாமல் அந்த அறையிலிருந்து வெளியேறி சமையலறைக்குள் தஞ்சம் புகுந்தாள்.

 

‘எப்படியோ நாம் மீண்டும் மதுரா செல்ல தேவையில்லை… அதுவே போதும்…’ அவள் மனம் சமாதானம் அடைய முயன்று முடியாமல் தோற்றது. அவளுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது….

 
Comments are closed here.

error: Content is protected !!