Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

இதயத்தில் ஒரு யுத்தம் – 38

அத்தியாயம் – 38

 

தீரஜ்பிரசாத்திற்கு சூர்யாவின் மீதிருக்கும் காதல் ஒருநாளும் குறைந்ததில்லை. அவள் இன்னொருவனின் மனைவி என்று ஆகிவிட்ட பின்பு அவன் தன் காதலை மறக்க முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில், சூர்யா அவள் கணவனிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டாள்.
அதற்காக அவளுக்கு விவாகரத்தான அடுத்த நாளே ‘உனக்காக நான் காத்திருக்கேன்… என்னை திருமணம் செய்துகொள்…’ என்று கேட்கும் அளவுக்கு தீரஜ் நாகரீகம் இல்லாதவன் இல்லை. ஆனால் இப்போது அவன் அவனுடைய விருப்பத்தை அவளிடம் சொல்லியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

இந்த குழப்பத்தை சரி செய்யாவிட்டால் அந்த அரைவேக்காடு கிழம் மீண்டும் மகளை ‘கார்னர்’ பண்ணி குழந்தையை இவனிடம் விட்டுவிட்டு அவளை அழைத்துக் கொண்டு சென்னைக்கு பறந்தாலும் வியப்பில்லை…

 

ஆனால் முன்பு தீரஜ் சூர்யாவிடம் அவனுடைய காதலை சொன்ன போது அவள் நிராகரித்திருக்கிறாள். அதற்கான காரணம் அவன் அறிந்ததே…! அவனுடைய வாழ்க்கை முறையை அவள் வெறுக்கிறாள். பிரசாத்ஜி என்கிற அவனுடைய அடையாளத்தை வெறுக்கிறாள்.
அந்த வெறுப்பு அவள் மனதில் இருக்கும் போது மீண்டும் இவன் எப்படி அவளிடம் தன் விருப்பத்தை சொல்ல முடியும்…? அவன் தயங்கினான்.

 

தயக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு முறை சூர்யாவை கை நழுவவிடும் எண்ணம் தீரஜ்ஜுக்கு சுத்தமாக இல்லை…

 

அப்படியானால் அவளுடைய வெறுப்பை மாற்றியே ஆக வேண்டும். அவளுடைய வெறுப்பு மாற வேண்டுமானால் இவன் ‘பிரசாத்ஜி’ என்கிற அடையாளத்திலிருந்து வெளியே வந்து ஒரு சாதாரண மனிதனாக புது வாழ்க்கையை துவங்க வேண்டும்.

 

‘அவனுடைய அடையாளங்களா…? சூர்யாவா…? ‘ மீண்டும் எண்ணங்கள் அலைமோத ஆரம்பித்துவிட்டன. ஆனால் இந்த முறை மிக விரைவாகவே அவனுடைய இதயத்தில் ஆரம்பித்த யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டது.

 

தீரஜ் மிக ஆழமாக சிந்தித்து கடைசியாக எடுத்த முடிவு அவனுடைய அடையாளங்களை துறப்பது என்பதுதான். பிரசாத்ஜி என்கிற பெயரையும் மதுராவையும் தூர விளக்கி தள்ளிவிட்டு நாட்டின் மறுகோடிக்கு சென்று சூர்யாவின் கணவனாகவும் கீர்த்தியின் தந்தையாகவும் தன்னுடைய புதிய வாழ்க்கையை துவங்குவது என்று முடிவு செய்தான்.

 

‘இந்த எண்ணத்தை சூர்யாவிடம் எப்படி சொல்லி புரியவைப்பது…? நான் சொல்வதை அவள் சரியாக புரிந்துகொள்ள வேண்டுமே…’ அவனுக்கு தவிப்பாக இருந்தது.

 

தயக்கத்திலேயே நான்கு நாட்கள் ஓடிவிட்டன. நான்கு நாட்களாக இவன் எப்படி குழந்தையை பார்க்காமல் இருந்தான் என்பது அவனுக்கே ஆச்சர்யம்தான். ஆனால் இன்று என்னவோ காலை எழுந்ததிலிருந்து அந்த லட்டுகுட்டியை பார்க்க மனம் பரபரக்கிறது…

 

இன்று கீர்த்தியை பார்க்காமல் தாங்காது என்கிற நிலையில் தீரஜ் சூர்யாவின் வீட்டிற்கு புறப்பட்டான்.

 

கீர்த்திக்கு ஆறு மாதம் முடிந்துவிட்டது. ஆனால் ஆறு மாத குழந்தைக்கு உரிய உடல் வளர்ச்சி இருந்தாலும் மன வளர்ச்சி இல்லை… அதாவது ஆறு மாத குழந்தையின் செயல்பாடுகள் எதுவும் கீர்த்தியிடம் இல்லை. ஒரு மாத குழந்தை எப்படி இருக்குமோ அது போலதான் இருந்தது. ஆனால் அழகாக இருந்தது.

 

இவன் குழந்தையை பார்க்க வந்த போது குழந்தை மர தொட்டிலில் படுத்து கை காலை அசைத்துக் கொண்டிருக்க அதன் அருகே அமர்ந்திருந்த சூர்யா அந்த அழகை ரசித்துக் கொண்டிருந்தாள். உள்ளே வந்தவன் குழந்தையிடம் குனிந்து அதன் முகம் பார்த்து சிரித்தான். அதுவும் இவனை பார்த்து வேகமாக கை காலை அசைத்து ஆட்டிக் கொண்டே சிரித்தது.
அவன் குழந்தையை கையில் அள்ளிக் கொண்டான். அவனுக்கு அதை வாய்விட்டு ‘கண்ணே… மணியே…’ என்று கொஞ்ச தெரியவில்லை. ஆனால் அதை நெஞ்சோடு அனைத்து அவனுடைய அன்பை குழந்தைக்கு தெரியப்படுத்தினான். அதுவும் அவனுடைய அன்பை புரிந்து கொண்டது போல் அவனோடு சுகமாக அணைந்து கொண்டது…

 

குழந்தையையோடு தோட்டத்திற்கு வந்த தீரஜ் தோட்டத்தில் இருக்கும் பூ, மரம், செடி, கொடி, அணில், கிளி என்று எல்லாவற்றையும் பற்றி குழந்தையிடம் பேசினான். அதற்கு புரிகிறதா இல்லையா என்பதை பற்றி கவலைப்படாமல் பேசிக் கொண்டிருந்தான்.
சூர்யா பால் பாட்டிலுடன் தோட்டத்திற்கு வந்தாள்.

 

“குழந்தைக்கு பால் கொடுக்கிற நேரம்…” அவள் விட்டேற்றியாக தீரஜ்ஜிடம் பேசினாள்.
அவன் அங்கு போடப்பட்டிருந்த கல் பெஞ்ச்சில் வசதியாக சாய்ந்து குழந்தையை மடியில் வைத்தபடி அமர்ந்து கொண்டு,
“அதை இங்க கொடு…” என்று பால் பாட்டிலுக்காக கையை நீட்டினான்.

 

சூர்யா அவனை சந்தேகமாக பார்த்தபடியே பாட்டிலை அவனிடம் நீட்டினாள். அதை வாங்கியவன் லாவகமாக குழந்தைக்கு பால் புகட்டினான். சூர்யாவிற்கு எரிச்சல் வந்தது…
‘இதெல்லாம் இவனுக்கு ரொம்ப தேவையா…? எதுக்கு இங்க அடிக்கடி வந்து இதெல்லாம் செஞ்சு என் உயிரை எடுக்கறான்…?’ அவள் மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டாள். அவளை மறந்துவிட்டு அவன் அவனுடைய வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அக்கரைத்தான் அவளுடைய எரிச்சலுக்கு காரணம்.

 

வயிறு நிரம்பியதும் குழந்தை அவன் மடியிலேயே உறங்கிவிட்டது.

 

“உட்கார் சூர்யா…” அவன் அமைதியாக சொன்னான்.

 

“எனக்கு வேலை இருக்கு… நான் போகணும்…” அவள் முறைப்பாக சொல்லியபடி உள்ளே வீட்டை நோக்கி திரும்பினாள்.

 

“சூர்யா…. உட்காருன்னு சொன்னேன்…” சத்தமில்லாமல் அழுத்தமாக சொன்னான்.
‘இந்த அதிகாரத்துக்கெல்லாம் குறைச்சல் இல்ல…’ அவள் முனுமுனுத்தபடி அவனுக்கு பக்கத்தில் உள்ள மற்றொரு கல் பெஞ்ச்சில் அமர்ந்தாள்.

 

“சென்னை போறதை பற்றி என்ன முடிவு பண்ணியிருக்க?”

 

“அதுதான் மதுரா மகாராஜா போகக் கூடாதுன்னு உத்தரவு போட்டுடீங்களே…” அவள் நக்கலும் கோபமுமாக அவனுக்கு பதில் சொன்னாள். அவளுக்கு தெரியும்… இந்த முறை அவனை மீறி அவ்வளவு சுலபமாக அவளால் மதுராவை விட்டு சென்றுவிட முடியாது என்று. அதனால் இப்போதைக்கு சென்னை பயணத்தை ரத்து செய்திருந்தாள்.

 

நக்கலும் கோபமுமாக அவள் பேசியதில் தீரஜ் குளிர்ந்துபோனான். பழைய சூர்யா… வார்த்தைக்கு வார்த்தை அவனிடம் வாயாடும் சுட்டி பெண் சூர்யா லேசாக எட்டிப் பார்த்ததை ஆனந்தத்துடன் உணர்ந்தவனின் கண்கள் லேசாக சிரிப்பில் சுருங்கின…

 

“சரி… நீயும் குழந்தையும் சென்னைக்கு போகலாம். நான் எதுவும் சொல்ல மாட்டேன். ஆனால் ஒரு கண்டிஷன்…” அவன் புதிர் போட்டான்.

 

“என்ன கண்டிஷன்…?”

 

“என்னையும் கூட்டிட்டு போகணும்…”

 

“என்னது… உன்னையா…! உன்னை எதுக்கு நான் கூட்டிட்டு போகணும்…?”

 

“ஏன்னா… கீர்த்தியை பிரிஞ்சு என்னால இருக்க முடியாது…” அவனால் சூர்யாவையும் பிரிந்து இருக்க முடியாதுதான். ஆனால் அதை சொல்லாமல் குழந்தையை மட்டும் சொன்னான்.

 

“அதுக்காக…?”

 

“அதுக்காகத்தான் என்னையும் உன்னோடு கூட்டிட்டு போக சொல்றேன்…”

 

“விளையாடறியா…? நீ அடிக்கடி இங்க வந்து போறத எத்தனை பேர் பார்க்கிறாங்க. அவங்களுக்கெல்லாம் நீ இங்க கீர்த்தியை பார்க்கத்தான் வர்ற… என்கிட்ட தேவையில்லாமல் பேசகூட மாட்டேன்னு தெரியுமா…? அவங்க மனசுலையெல்லாம் நம்மை பற்றி என்ன நினைப்பு இருக்கும் என்று உனக்கு தெரியுமா… இந்த தொல்லையிலிருந்து தப்பிக்கதான் நான் சென்னை போறேன்னு சொல்றேன்… நீ அங்கேயும் வர்றேன்னு சொல்ற…! யாரோ ஒரு ஆண்பிள்ளையை அழைச்சுட்டு போயி நின்றால் என்னை பற்றி அங்க எல்லோரும் என்ன நினைப்பாங்க…?” அவள் படபடப்பாக பேசினாள்.

 

அவள் சொல்வது பெரிய விஷயமே இல்லை என்பது போன்ற பாவனையில் “யாரோ ஒரு ஆண்பிள்ளையை ஏன் நீ கூட்டிட்டு போகணும்… உன்னோட கணவனா என்னை கூட்டிட்டு போ…” என்று அவன் சொல்லிவிட்டான்.

 

“தீரஜ்…” அவள் சத்தமாக அவனை அதட்டினாள்.
Comments are closed here.