யார் இந்த பொன் மாரியம்மாள்?
2110
5
திறமைகள் கட்டுப்படுத்தப்பட்டு வீட்டிற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் ஏராளமான தமிழ் பெண்களை போல் தனது முப்பத்தைந்து வயது வரை குடும்பமே உலகமென்று சாதாரணமாக வாழ்ந்துக் கொண்டிருந்த பொன் மாரியம்மாள் இன்று கோவில்பட்டியில் ஆலமரம் போல் வேர்விட்டு விருட்சமாய் வளர்ந்து நிற்கும் ஸ்ரீ கோகுலம் கலைவளர் பள்ளியின் நிறுவனர்.
“நா ஒண்ணும் பெருசா சாதிக்கலங்க… என் பொண்ணு பாட்டு, டான்ஸ், ஸ்கேட்டிங், யோகான்னு எல்லா கலையையும் கத்துக்கணும்னு ஆசைப்பட்டேன். எங்க ஊர்ல அதுக்கான வசதி இல்ல… சரி அந்த வசதிய நாமலே ஏற்படுத்திட்டா போச்சுன்னு முடிவு பண்ணி செயல் படுத்தினேன். அவ்ளோதான்…” என்று சாதாரணமாக பேசும் இவருடைய விடா முயற்சியும் கடின உழைப்பும்தான் ஸ்ரீ கோகுலம் கலைவளர் பள்ளியின் வெற்றிக்குக் காரணம்.
2008 ம் ஆண்டு கோடை விடுமுறையில் தன் மகளோடு சேர்த்து மூன்று குழந்தைகளுக்கு ஒரு டான்ஸ் மாஸ்டரை ஏற்பாடு செய்து தனது வீட்டிலேயே நடன வகுப்பை ஆரம்பித்திருக்கிறார். அக்கம் பக்கத்தில் இருந்த குழந்தைகளின் பெற்றோரும், தன் மகளுடைய பள்ளி தோழிகளின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கும் சேர்த்து நடனம் கற்றுக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டதால் உற்சாகத்துடன் அனைத்து குழந்தைகளையும் ஸ்ரீ கோகுலத்தில் இணைத்துக் கொண்டார்.
“ஒரு குழந்தைக்கு இருநூறு ரூபாய் தான் ஃபீஸ் வாங்கினேன். ஃபீஸ் குறைவுங்கறதுனால கிட்டத்தட்ட நாற்பது பிள்ளைங்க திமுதிமுன்னு வந்து சேர்ந்துட்டாங்க. வசூல் பண்ணின மொத்த பணத்தையும் மாஸ்ட்டருக்கே கொடுத்துட்டேன். அவரும் சந்தோஷமா தொடர்ந்து குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சாரு. என்னுடைய தொழிலும் மெல்ல சூடு பிடிக்க ஆரம்பிச்சது. நானும் எல்லா கிளாஸ்க்கும் டீச்சர்ஸ தேடி பிடிச்சேன். ஸ்டுடென்ட்ஸ் ஒருத்தர பார்த்து ஒருத்தர் தானா வந்து சேர்ந்தாங்க. வெறும் மூன்று மாணவர்களுடன் ஆரம்பிச்ச ஸ்ரீ கோகுலம், இன்னிக்கு நூற்றுக்கும் மேலான மாணவர்களை கொண்டுள்ள கலைவளர் பள்ளியா முழு வடிவம் எடுத்துரிச்சு…” என்று தன்னுடைய ஆரம்பக்கட்ட அனுபவத்தை நினைவுக் கூர்ந்தவரின் முகத்தில் வெற்றிப் பெருமிதம் மிளிர்கிறது.
அது மட்டும் அல்ல… பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பொன் மாரியம்மாள் இன்று ஒரு ஹிந்தி ஆசிரியை. பொருளாதாரத்திற்கும் ஹிந்திக்கும் என்ன சம்மந்தம்…! அதை அவர் தான் கூற வேண்டும்.
“ஆர்வம் இருந்தா எதுவுமே சாத்தியம்தாங்க… ஸ்ரீ கோகுலம் பள்ளிக்கு ஹிந்தி சொல்லி கொடுக்க வந்த டீச்சர்கிட்ட பிள்ளைகளோட சேர்ந்து நானும் ஹிந்தி கத்துக்கிட்டேன். ….. பரீட்சை எழுதி பாஸ் பண்ணி ஹிந்தி டீச்சர் ஆகிட்டேன்” என்று பதில் சொன்னவர் “பிள்ளைங்க படிக்கும் போது கூட சேர்ந்து நாமும் படிச்சா என்ன கெட்டா போக போகுது…” என்று இடக்காக கேள்வி வேறு கேட்கிறார்.
மத்திய அரசின் முறையான அனுமதியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஸ்ரீ கோகுலம் கலையை கற்றுத் தருவதோடு, கற்றுத் தேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் அரசு சான்றிதழையும் பெற்றுத் தருகிறது. ஸ்ரீ கோகுலத்தில் கலை படித்த பல மாணவர்கள் இன்று பல இடங்களில் நல்ல ஊதியத்துடன் வேலைக்கு அமர்ந்துள்ளார்கள். இந்த பள்ளியை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் இவருடைய இறுதி நோக்கம் தான் என்ன…?
“கலையை கற்றுக் கொடுப்பதுதாங்க என்னுடைய நோக்கம். தமிழ் நாட்டுல அதுவும் கிராமங்கள்ல கலையை கத்துக்கரதுக்கான வாய்ப்புகள் ரொம்ப குறைஞ்சு போச்சு. படிப்புக்கு கொடுக்கற முக்கியத்துவத்தை யாரும் கலைக்கு கொடுக்கறது இல்ல. நல்லா படிச்சா நல்ல வேலைக்கு போயி கை நிறைய சம்பாதிக்கலாம். வீடு வாங்கலாம்… கார் வாங்கலாம்… உயர்தர வாழ்க்கையை வாழலாம். இதையெல்லாம் கலை கொடுக்கும்னு என்ன நிச்சயம்னு நினைக்கற மக்கள் ஒரு விஷயத்தை யோசிச்சு பார்க்க மறந்தடறாங்க. இந்த படிப்பும் பதவியும் பணமும் கொடுக்காத மிகப்பெரிய சொத்தை கலை கொடுக்கும். அதுதான் ஆரோக்கியம்.”
“மூச்சுப் பிடிச்சு அடிவயிற்றிலிருந்து பாடும் பொழுது செய்யற மூச்சு பயிற்சியும், உடலை வளைச்சு நடனமாடும் போது செய்யற உடற் பயிற்சியும், ஓடியாடி விளையாடும் போது கிடைக்கற மன மகிழ்ச்சியும் எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காதுங்க. அவ்வளவு ஏன்…? இன்னிக்கு லட்சங்களில் சம்பாதிக்கற சாஃப்ட்வேர் எஞ்சினியர் பலபேர் ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் கிளாஸ், யோகா கிளாஸ்னு தேடி ஓடறாங்க. அவங்கல்லாம் சின்ன வயசுல ஏதாவது ஒரு கலையை பழகியிருந்தாங்கன்னா அவங்களுடைய ஸ்ட்ரெஸ் ரிலீவிங்கு அதுவே பெரிய உதவியா இருந்திருக்கும்.”
“அது மட்டும் இல்லைங்க. இந்த காலத்து குழந்தைகள் நிறைய பேருக்கு இணையதளமும் செல் போனும் தான் முக்கியமான விளையாட்டு சாதனமா இருக்கு. இந்த நவீன விளையாட்டு சாதனத்துல நல்லதைவிட கெட்ட விஷயங்கள் கொட்டிக்கிடக்கு. ஆனால் கலையில் நல்ல விஷயங்கள் மட்டும் தான் இருக்கு. குழந்தைகள் உடல் மற்றும் மன ஆரோக்யத்தோட வளர்றதுக்கு ஏதாவது ஒரு கலையை கத்துக்கறது ரொம்ப முக்கியம். இப்போ இருக்கற பெற்றோர்கள் அதை புரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டாங்க. தங்களுடைய குழந்தைகள் ஏதாவது ஒரு கலையை கத்துக்கனும் அப்படிங்கறதுல ஆர்வமா இருக்காங்க. ஆனா வாய்ப்புகள் குறைவா இருக்கு”
இதை சரிசெய்யும் வழிதான் என்ன?
“எதுவுமே கிடைக்கலன்னு சோர்ந்து போயிடக் கூடாது. கிடைக்கரவரைக்கும் தேடனும். கிடைக்கவே இல்லன்னா உருவாக்கணும். மொத்தத்துல போராடனும்” – சிரித்துக்கொண்டே சிம்பிளாக கூறுகிறவர் இந்த துறையில் வெற்றிபெற என்னென்ன மாதிரியான போராட்டங்களை சந்தித்திருப்பார்.
“குருவை தொடர்ந்து தக்க வச்சுக்கறதுதாங்க பெரிய சவால். அவங்களுடைய எதிர்பார்ப்பு என்னங்கறத சரியா புரிஞ்சுகிட்டு நிறைவேத்தனும். நமக்கு அதிக லாபம் வரணும்னு நினைக்காம அவங்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்து தேவையான வசதிகளை செய்து கொடுக்கணும். அதே போல ஒரு குருவை மட்டுமே நம்பி இருக்காம இரண்டு மூன்று பேரை தொடர்பில் வச்சுக்கறது நல்லது. அடுத்து பெற்றோர்களின் பொறுமை… பிள்ளைகளை ரெண்டு மாதம் பாட்டு கிளாஸ்க்கு அனுப்பிட்டு மூன்றாவது மாதம் என் பிள்ளை ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர்’ ஆகனும்ன்னு வந்து நிக்கற பெற்றோர்கள் பலர் இருக்காங்க. நினைத்ததும் கலையை அப்படியெல்லாம் உடனே கத்துக்க முடியாதுன்னு அவங்களுக்கு சொல்லி புரிய வைக்கணும். அப்புறம் இசை கருவிகளின் விலை ரொம்ப அதிகமா இருக்கறதால பல மாணவர்களுக்கு சொந்தமா வாங்க முடியாது. அதனால வீட்டுல பயிற்சி செய்ய முடியிறது இல்ல. கலைக்கு பயிற்சி ரொம்ப முக்கியம். அதனால முடிந்த அளவு பள்ளியிலேயே அதிக நேரம் பயிற்சி செய்ய வைக்கணும். அப்படி ஆர்வத்தோடு படிக்கற பிள்ளைகளை மேடையில ஏற்றி அரங்கேற்றம் பண்ணி அழகு பார்க்கறதை ஸ்ரீ கோகுலம் என்றைக்குமே தவறவிட்டது இல்ல…” – எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் மட்டுமே ஆதாரமாகக் கொண்டு ஜெயித்துக் காட்டியவர் தான் இந்த பொன் மாரியம்மாள்.
உங்களுக்கும் இந்த துறையில் களமிறங்க விருப்பமா? இதன் நெளிவு சுளிவுகளை தெரிந்து கொள்ள ஆர்வமா? உங்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் இங்கே பதிவிடுங்கள். உங்களுக்கு பதிலளிக்க காத்திருக்கிறார் பொன் மாரியம்மாள்.
– சகாப்தம்
5 Comments
வாழ்த்துக்கள் பொன்ஸ் கற்பதற்க்கு வயது வேண்டாம் ஆர்வம் மட்டுமே போதும்னு நிருபிச்சிட்டீங்க சூப்பர்👏👏👏
Akka neenga Hindi teacher mattum dhaanu ninaichen but neenga kutti institute ah nadathureenga….super….congratulations ka…
நன்றிடா ஹதீஜா.
ஆமாம் டா…வீட்டிலேயே சின்னதாக தான்.
Super.. hats off to her efforts!
நன்றி மா