Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

கனல்விழி காதல் - 45

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 45

அத்தியாயம் – 45

‘அவ்வளவுதான்… எல்லாம் முடிஞ்சிடிச்சு. இனி திலீப் பாய் முகத்துல முழுக்கவே முடியாது… அவனை நம்பினதே தப்பு… வருவான்… நம்மள கூட்டிட்டு போவான்னு நெனச்சு ஏமார்ந்துட்டோம்!’ – அவன் மீதிருந்த நம்பிக்கை வற்றிப்போய்விட நொருங்கிப் போய் அமர்ந்திருந்தாள் மதுரா. உயிர், கல்யாண வீட்டில் இருக்க வெறும் கூடு மட்டும் தான் இங்கே இருந்தது. தவறு செய்துவிட்டோம்… அவனை நம்பியிருக்கக் கூடாது… அவனுக்கு மதிப்புக் கொடுத்திருக்கக் கூடாது என்று மனம் அரற்றியது. இப்போது நினைத்தால் கூட அவள் தனியாக கிளம்பிச் சென்றுவிடலாம். ஆனால் அதற்கும் மனம் ஒப்பவில்லை. அழுது கொண்டே அமர்ந்திருந்தாள். திடீரென்று தேவ்ராஜ் உள்ளே நுழைந்தான். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

 

‘இப்போதுதானே போனான்! அதற்குள் என்ன!’ – அவள் யோசித்து முடிப்பதற்குள், “இன்னும் ஒரு மணிநேரம்தான் இருக்கு சீக்கிரம் கிளம்பு….” – ஆணையிட்டான். மதுராவின் விழிகள் விரிந்தன… அழுகையில் சுருங்கியிருந்த முகம் ஆனந்தத்தில் மலர்ந்தது… ஓரிரு நிமிடங்கள் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. உண்மையைத்தான் சொல்கிறானா! – அவனை நம்பமுடியாமல் பார்த்தவள், “ஆர் யு சீரியஸ்?” என்றாள்.

 

புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருந்த தேவராஜ், “இன்னும் ஐம்பத்தி ஒன்பது நிமிஷம் தான் இருக்கு” என்றான்.

 

கூடை பூவை வாரி இறைத்தது போல் ஆனந்தத்தில் பிரம்மித்துப்போய் அவனை பார்த்தாள்.

 

“ஐம்பத்தி எட்டு நிமிஷம்…”

 

“நோ… நா நம்ப மாட்டேன். மண்டப வாசல்ல என்னைய விட்டுட்டு நீங்க போயிடுவீங்க”

 

“ஐம்பத்தி ஏழு…”- புன்னகையுடன் நிமிடங்களை எண்ணிக் கொண்டே இருந்தான். சட்டென்று கட்டிலிலிருந்து இறங்கி விறுவிறுவென்று தயாரானாள்.

 

“நிஜமா சொல்லுங்க… என் கூட வர்றீங்களா?” – இடையிடையே சந்தேகக் கேள்விகளையும் அவனிடம் வீசிக் கொண்டிருந்தாள்.

 

அவன் பதில் சொல்லவில்லை. ஆனால் அவளுக்கு நம்பிக்கை இருந்தது. அன்று போல் இன்று அவளை ஏமாற்ற மாட்டான். நிச்சயம் அவளோடு இனைந்து விழாவில் கலந்துகொள்வான். – பத்து நிமிடத்தில் பரபரவென்று தயாராகி, “ரெடி…” என்று அவனெதிரில் வந்து நின்றாள். கையில் ஒரு கவர் இருந்தது.

 

“என்ன இது?”

 

“இதை போட்டுக்கோங்க ப்ளீஸ்…” – அவனுக்கு புரிந்தது. அவள் கையில் வைத்திருப்பது அவளுடைய பெற்றோர் வாங்கி கொடுத்திருந்த உடை. அதை அணிந்துகொள்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அவளுடைய கெஞ்சும் பார்வை அவனுடைய மறுப்பிற்கு இடம்தரவில்லை. “இந்த ட்ரெஸ்ஸே ஓகே…” – “ப்ளீஸ்…”- அவன் சொல்ல வந்ததை முடிப்பதற்குள் இவள் இடையிட்டாள். “ஹும்ம்ம்…” – பெருமூச்சுடன் அவள் கையிலிருந்த கவரை பிடுங்கி கொண்டு உடைமாற்றும் அறைக்குள் சென்றவன் வெளியே வரும் பொழுது ஒரு அழகிய மெரூன் நிற ஷர்வானியின் வந்தான்.

 

மும்பை டிராபிக்கில் முட்டி மோதி அதிவேகமாக காரை செலுத்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக மண்டபத்திற்கு மனைவியோடு வந்து சேர்ந்தான் தேவ்ராஜ். அவர்கள் காரை விட்டு இறங்கியதுமே வாசலில் நின்றுக் கொண்டிருந்த உறவுகளெல்லாம் கேட்ட ஒரே கேள்வி “வாங்க வாங்க… என்ன இவ்வளவு லேட்டா வர்றீங்க…?” என்பதுதான். திருமணத்திற்கு முன்பு நடக்க வேண்டிய சடங்குகள் எல்லாம் நடந்து கொண்டிருந்தது. குடும்பத்தார் அனைவரும் மணமேடையில் இருந்தார்கள். மதுராவும் தேவ்ராஜும் காரிலிருந்து இறங்கியதுமே செய்தி மேடைக்கு பறந்து வந்துவிட, பம்பர் பரிசு அடித்தது போல் ஆனந்தத்துடன் பிரபாவதி ஓட்டமும் நடையுமாக வாசலுக்கே வந்துவிட்டாள். அவளை தொடர்ந்து நரேந்திரமூர்த்தியும் துருவனும் கூட வந்தார்கள். மனதிலிருந்த வருத்தம் எதையும் காட்டிக்கொள்ளாமல் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றார்கள்.

 

மதுரா தன் கணவனோடு சேர்ந்து மாப்பிள்ளையின் சகோதரி செய்ய வேண்டிய சடங்குகள் அனைத்தையும் நிறைவாக செய்து முடித்தாள். எந்த குறையும் இல்லாமல் திருமணம் நடந்து முடிந்தது. குடும்பத்தோடு சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்கள். மனதில் ஆயிரம் வெறுப்பு இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் தன் மனைவிக்கு தேவ்ராஜை அறிமுகப்படுத்தினான் திலீப். நண்பர்களும் உறவினர்களும் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் மணமக்களுக்கு வழங்கினார்கள். நரேந்திரமூர்த்தி, மணமக்களை வாழ்த்த மேடைக்கு வரும் பெரும்தலைகளிடமெல்லாம் தேவ்ராஜை தன்னுடைய மருமகன் என்று பெருமையாக அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்.

 

ஒருவழியாக அவரிடமிருந்து தப்பித்து தேவ்ராஜ் மனமேடையிலிருந்து கீழே இறங்கியதும் அதற்காகவே காத்துக் கொண்டிருந்தது போல் தொழில்வட்ட நண்பர்கள் அவனை சூழ்ந்துக் கொண்டார்கள். அவர்களோடு உரையாடிக் கொண்டிருந்தவனின் கண்கள் அடிக்கடி மேடைக்கு பாய்ந்தது. திருமண சடங்குகளிலும் அதற்கு பின் நடந்த போட்டோ செக்ஷனிலும் பிஸியாக இருந்த மதுராவின் பார்வையும் அடிக்கடி தேவ்ராஜை வருடியது. சில தருணங்களில் இவருடைய பார்வையும் ஒன்றோடொன்று உரசிக்கொண்டது. பூரிப்பில் மலரும் அவள் முகத்தை அல்லிப் பருகுவது போல் ரசித்தான் தேவ்ராஜ். முகம் சிவக்க அவள் நாணி தலைகுனியும் போதெல்லாம் அவன் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.

 

மீண்டும் ஒருமுறை அவன் கண்கள் அவளை சந்தித்த போது, “தேங்க்ஸ்..” என்று இதழசைவில் சொன்னாள். புன்முறுவலோடு அவளை ரசித்துப் பார்த்தவன், ‘கிளம்பறேன்’ என்பது போல் தலையசைத்தான். சட்டென்று பெரிதாக விரிந்தன அவளுடைய விழிகள். ‘என்ன?’ என்று புருவம் உயர்த்தி கண்ணசைவில் கேட்டான்.

 

வலது கை விரல்களை குவித்து வாய்க்கு கொண்டு சென்று ‘சாப்பிட்டுவிட்டு போகலாம்’ என்று சைகை காட்டினாள். அவன் இல்லை என்பது போல் தலையசைத்தான். உடனே அவளுடைய கண்கள் யாரையோ தேடின. ஆங்…! கண்டுபிடித்துவிட்டாள். மேடையின் மறுபக்கம் நின்றுக் கொண்டிருந்தான் துருவன். அவனிடம் ஓடிச் சென்று ஏதோ காதில் முணுமுணுத்தாள். மறு கணமே அவனுடைய பார்வை தேவ்ராஜின் மீது படிந்து தங்கையிடம் மீண்டது.

 

அவளிடம் எதோ சமாதானம் சொல்லிவிட்டு உடனே அங்கிருந்துச் சென்றான். அவள் என்ன செய்துக்க கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. புன்னகையுடன் நண்பர்களிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தாயை கண்களால் தேடினான். காணவில்லை. அவனுடைய புருவம் சுருங்கியது. வந்ததிலிருந்து தாயை பார்க்கவில்லையே என்று யோசித்தான். மாயாவையும் காணவில்லை. தூரத்திலிருந்து ஓரிருமுறை கண்ணில் பட்டதோடு சரி… எங்கு சென்றுவிட்டாள்! யோசனையுடன் மனைவியின் பக்கம் பார்வையை திருப்பினான். அவளும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

‘வா…’ – என்று தலையசைத்தான். கையிலிருந்த பொருட்களையெல்லாம் அருகிலிருந்த பெண்ணிடம் கொடுத்து பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்படி கூறிவிட்டு கணவனிடம் ஓடிவந்தாள்.

 

“அம்மா எங்க?” என்றான்.

 

அப்போதுதான் அவளுக்கே நினைவு வந்தது.. ‘வந்ததிலேருந்து ஆண்ட்டியை பார்க்கவே இல்லையே!’ – குற்றவுணர்ச்சியுடன் கையை பிசைந்தவள், “பார்க்கலையே!” என்றாள். அவன் முறைத்தான்.

 

“நானும் உங்க கூட தானே வந்தேன். வந்ததுலேருந்து பிஸி… சாரி… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பார்த்துட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு ஒரு அடி எடுத்து வைத்தவளை, “யாரை தேடி போற?” என்கிற மாயாவின் குரல் தடுத்தது.

 

“ஆண்ட்டியை…”

 

“இப்போதான் அவங்க நியாபகம் வருதா?” – முகத்தை சுளித்துக்கொண்டு கேட்டாள்.

 

“இல்ல அண்ணி… வந்ததுலேருந்து நா ஆண்ட்டியை பார்க்கவே இல்ல… அதான்…” – தடுமாறினாள்.

 

“கல்யாணத்துக்கு வரவே மாட்டேன்னு பிடிவாதம் பண்ணிட்டு உட்கார்ந்திருந்தியாம். இப்போ எப்படி வந்த?” – வெடுவெடுத்தாள். பதில் சொல்ல முடியாமல் மதுரா திணற தேவ்ராஜின் முகம் கறுத்தது.

 

“உன்னால எங்க அம்மா எல்லாருக்கும் முன்னாடி அவமானப்பட்டாங்க. தெரியுமா உனக்கு?” – அடிக்குரலில் சீறினாள். மதுரவன் கண்கள் கலங்க, “அம்மா எங்கன்னு சொல்லு முதல்ல…” என்று குறுக்கே புகுந்து தங்கையை அதட்டினான் தேவ்ராஜ்.

 

அதை சிறிதும் விரும்பாத மாயா தமையனை வெறித்துப் பார்த்துவிட்டு தாய் அமர்ந்திருக்கும் இடத்தை கைகாட்டினாள். கூட்டத்திலிருந்து ஒதுங்கி ஓரமாக ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள். அவள் மடியில் ஆதிரா உறங்கி கொண்டிருந்தாள்.

 

“வா…” – மனைவியின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு தாயிடம் சென்றான்.

 

“தூங்கிட்டாளா… ரூம்ல கொண்டு போயி படுக்க வைக்க வேண்டியதுதானே?” – குழந்தையின் தலையை வருடியபடி கேட்டான்.

 

“இப்போதான் தூங்கினா… அதோட ரூம்லயெல்லாம் தனியா குழந்தையை படுக்க வைக்க முடியாது. யாரு வர்றாங்க போறாங்கன்னு தெரியாது…”

 

“சாரி ஆண்ட்டி…” – மதுரா முணுமுணுத்தாள். குழந்தையின் முகத்தில் பார்வையை பதித்திருந்த இராஜேஸ்வரி மருமகளை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை அவளுக்கு பதில் சொல்லவும் இல்லை.

 

பிரபாவதி செய்த அவமரியாதை அவள் மனதிலிருந்து நீங்கவில்லை. மதுராவிடம் எவ்வளவு தூரம் எடுத்துச் சொன்னாள்! கேட்டாளா? இப்போது இங்கு வராமலா போய்விட்டாள். அவள் பட்ட அவமானம் திரும்ப வந்துவிடுமா? – இராஜேஸ்வரியின் மனம் புழுங்கியது. தாயின் வேதனையை கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த மாயாவின் மனத்திலும் கோபத்தீ கனன்றது.

 

“என்னம்மா பிரச்சனை? ஏன் என்னவோ மாதிரி இருக்கீங்க?” – தாயின் முகத்தை துளைத்தது தேவ்ராஜின் பார்வை.

 

“எல்லாரும் இங்கதான் இருக்கீங்களா? வாங்க… சாப்பிடலாம்…” – இராஜேஸ்வரி பதில் சொல்வதற்கு முன் அங்கே வந்து சேர்ந்தான் துருவன்.

 

“மாயா… குழந்தையை வாங்கிக்க. ஆண்ட்டி நீங்களும் வாங்க… வாங்க தேவ்… மது நீயும் வா…” – அங்கிருந்த இறுக்கமான சூழ்நிலை உறுத்த அனைவரையும் தனித்தனியாகவே அழைத்தான்.

 

“குழந்தையை வச்சுக்கிட்டு நீ எப்படிம்மா சாப்பிடுவ?”

 

“நா அப்புறமா துருவன் கூட சாப்பிட்டுக்கறேம்மா… நீங்க போங்க…” என்று கூறி ஆதிராவை தூக்கிக்கொண்டாள். தாய் மற்றும் மனைவியோடு உணவு கூடத்திற்கு வந்தான் தேவ்ராஜ். விருந்து சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வீட்டு மாப்பிள்ளை சாப்பிட்டு முடிக்கும் வரை கூடவே நின்று கவனித்தான் மைத்துனன்.

 

அவன் சற்று விலகிய நேரத்தில், “என்ன ஆச்சு? ஏன் டல்லா இருக்கீங்க?” என்றுமீண்டும் கேட்டான் தேவ்ராஜ்.

 

“ஒண்ணும் இல்ல நீ சாப்பிடு” – பட்டுக்கத்தரித்தது போல் கூறிவிட்டு உணவில் கவனமாக இருப்பது போல் பாவனை செய்தாள் இராஜேஸ்வரி. அவனிடம் எதையும் சொல்ல அவள் விரும்பவில்லை. ஏனென்றால் இந்த சின்ன விஷயம் மதுராவுக்கும் அவனுக்கும் இடையே பெரிய விரிசலைக் கூட ஏற்படுத்தலாம். அதனால் வாயை திறக்கவே கூடாது என்கிற முடிவில் இருந்தாள்.

 

உணவை முடித்துக் கொண்டு வெளியே வரும் போது தாய்க்கு தெரியாமல் மனைவியிடம் கேட்டான். “எதுக்கு அம்மாகிட்ட சாரி சொன்ன?”

 

“வந்ததுலேருந்து அவங்களை நான் பார்க்கவே இல்ல… அதோட என்னை கல்யாணத்துக்கு கிளம்ப சொல்லி ரொம்ப பிடிவாதப்படுத்தினாங்க. நா கேட்கல. அதான்…”

 

“ஓ! சரி நா கிளம்பறேன். நீங்க ரெண்டு பேரும் எப்படி… வர்றீங்களா… இல்ல லேட்டா ஆகுமா?”

 

“நாங்க இப்போ உடனே கிளம்ப முடியாதுப்பா. சாயங்காலம் வீட்டுக்கு போய்ட்டுதான் வர முடியும். மதுரா கூட நைட் அங்கேயே தங்கிக்கட்டும். கல்யாண வீடு ரெண்டு நாள் இருந்துட்டு வரட்டும்” என்றாள்.

 

உடனே அவனுடைய பார்வை மதுராவிடம் பாய்ந்தது. ‘இல்ல… நானும் நைட் ஆண்ட்டி கூட வீட்டுக்கு வந்துடறேன். நாளைக்கு பொண்ணு வீட்டில எதுவும் பங்ஷன் இருந்தா நம்ம வீட்லேருந்தே போயிக்கலாம்” என்றாள். அவன் முகத்தில் திருப்திப் புன்னகை மலர்ந்தது.

 

“சரி… அப்போ நா கிளம்பறேன்” என்று கூறினான். அப்போது, “லஞ்ச் அரேஞ்மென்ட்ஸ் எல்லாம் எப்படி இருந்தது தேவ்?” என்றபடி அங்கே வந்தார் நரேந்திரமூர்த்தி.

 

“ம்ம்ம்… நல்லா இருந்தது…” என்று கூறியவன் தொடர்ந்து, “ஓகே மாமா… டைம் ஆச்சு. நா கிளம்பறேன். பார்க்கலாம்…” என்று அவரிடம் கைகுலுக்கினான். துருவன் மாயா என்று அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு சிரித்த முகத்தோடு புறப்படும் கணவனை நிறைவோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மதுரா.

 

 
7 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Pon Mariammal Chelladurai says:

  சில அம்மாக்கள் இப்படித்தான். மகளோட வாழ்வில் விளையாடுறது…?


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  தன் மனைவி தான் வரவில்லை என்றவுடன் தன் வீட்டு திருமணத்திற்கு போகவில்லை ,அப்போ தன்மனைவி அவர்களை விட தன்னை முக்கியமுள்ளவனா நினைக்கின்றார் என்று நினைத்தவுடன்தான் இந்த இளக்கம் வந்திருக்கும்,அதனால்தான் மதுராவை அழைத்துக்கொண்டு திருமணத்திற்கு வந்தது ,பிரபாவதி இராஜேஸ்வரியை ஒழுங்காய் வரவேற்கவில்லை முக்கியத்துவம் கொடுக்கவில்லை அதனால்தான் தன் தாய் கவலையாக இருந்தார் என்று அறியும்போது ,மதுராவை நோக்கி என்ன கடும் சொற்கள் துப்பாக்கி குண்டு போல சீறிக்கொண்டு வருகின்றதோ தெரியவில்லை.

  நன்றி


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  super dev but amma kobathai yepadi sari panna pooraaaaaaa


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Meena PT says:

  கொஞ்சம் அன்பும் இரக்கமும் இருக்கிறது கல்யாணத்துக்கு வந்துட்டான். பிரபாவதி என்ன பிரச்சினை பண்ணாங்க ளோ அது தெரியவரும் போது தேவ் என்ன செய்வா னோ


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Lakshmi Narayanan says:

  Lovely update Nithya … Enna da ithu madura ku vantha sothanai ithurumba enna Ada porano


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Vatsala Mohandass says:

  அவன் தாயின் மனம் வருந்தி விட்டதே… இனி எப்படி மாறுவானோ??


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  பரவாயில்லை என் நம்பிக்கை வீண்போகலை…..அவன் ஸ்திரமாக மறுத்து இருந்தாலும் மதுராவின் அன்பு அவனை மாற்றும் என்று…..

  நித்தியா நல்லா தான போய்ட்டு இருக்கு இப்ப என்ன புது பிரச்சினை கிளம்ப போகுதோ?😕

error: Content is protected !!