Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 1

அத்தியாயம் – 1

முற்பகல் பதினொரு மணி… கிளைவிட்டு படர்ந்து பரவியிருந்த மாமர நிழலையும் மீறி, மே மாத அக்கினி வெயிலின் வெப்பத்திலிருந்து தப்ப அங்கு  கூடியிருந்த இளைஞர் கூட்டம், கையிலிருந்த ஒரு குயர் லாமினேஷன் நோட்டை தற்காலிக விசிறியாக மாற்றிக் கொண்டிருந்தது.

 

பள்ளி விடுமுறையில் தனியாரால் நடத்தப்படும் கோடைகால கணினி வகுப்பு, ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த மாணவிகளுக்கு காலை பத்து மணிக்கு ஆரம்பித்தது. அந்த மாணவிகள் வரிசையாக மாமர நிழலில் நிறுத்தி வைத்திருந்த சைக்கிள்களில் ஆளுக்கு ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டு அரட்டையடித்தபடி… அடுத்த வகுப்பிற்காக காத்துக் கொண்டிருந்தார்கள் பதினொன்றாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த மாணவர்கள்.

 

“ஏண்டா சிவா… நாந்தான் சொன்னேல்ல… இன்னும் அர மணி நேரத்துக்கு அந்த புள்ளைங்க வெளிய வராதுங்கடா… இந்த வெக்கையில நொந்து போறதுக்கு பேசாம இந்நேரம் அண்ணாச்சி கடைக்கு போயி ஒரு லெசி அடிச்சுட்டு வந்திருக்கலாம்…”

 

“என்னடா மச்சான் சொல்ற…?”

“என்னத்தடா சொல்றது…? பசங்களுக்குன்னா ஒரு மணிநேம்தான் கிளாஸ்… ஆனா பொண்ணுங்களுக்குன்னா ஒன்றரை மணிநேரம்… ஹும்…”

 

“ஆஹா… என்னடா நாடக்குது இங்க…? இந்த கம்ப்யூட்டர் வாத்தியுமாடா…!” என்று சிவா ஆச்சர்யமாக கேட்க, ராம்குமார் எரிச்சலுடன் சொன்னான்,

 

“அதெல்லாம் இல்லடா… அந்த ஆளு ஒரு சாம்பாரு… ஒத்த பொண்ண பாக்க நாமல்லாம் இங்க இந்த வெக்கையில தவம் கெடக்குறோம்… அவரு என்னடான்னா மொத்தமா முப்பது புள்ளைகள ஒன்னா வச்சுகிட்டு கம்ப்யூட்டர கட்டிக்கிட்டு அழுவுறாரு…”

 

“அப்பறம் எதுக்குடா பதினொரு மணிக்கு முடிய வேண்டிய கிளாஸ் இன்னும் முடியல…? நம்பள மட்டும் டான்னு பன்னெண்டு மணிக்கெல்லாம் தொரத்திவிட்டுற்றாரு…” இன்னொருவன் சந்தேகம் கேட்டான்.

 

“நம்ம பசங்க விட்டா போதும்ன்னு தெறிச்சு ஓடிடுவானுங்க… ஆனா பொண்ணுங்க அப்படி இல்லடா… அவளுகளுக்கு கடைசி நேரத்துலதான் ஏகப்பட்ட சந்தேகம் வரும்…”

 

“பொண்ணுங்கல்லாம் அவ்வளவு மக்கா…! ஒ காட்… வாட் எ பிட்டி… வாட் எ பிட்டி…! ஆனா பாரு மச்சான்… நம்மகிட்டையெல்லாம் சந்தேகம் நெருங்கவே மாட்டேங்கிது…!”

 

“மச்சான்… நம்மகிட்ட சந்தேகம் மட்டும் இல்லடா… சாஃப்ட்வேரும் நெருங்காது…”

 

“அந்த கருமம் நமக்கெதுக்குடா மச்சான்…  கிளாஸ்க்கு வந்தமா… நாலு ஃபிகர பாத்தமா… பிராக்கெட் போட்டமா… பிக்கப் பண்ணினோமான்னு போயிட்டே இருக்கணும்….” என்று ராம்குமார் விளக்கம் சொன்னான்.

 

அதுவரை அந்த நண்பர்கள் கூட்டத்திலேயே அழகாக… அந்த வயதிற்கு ஏற்ற உடற்கட்டுடன்… அறிவு கலை முகத்தில் மின்ன… தலைவன் தோரணையில் ஒரு சைக்கிள் கேரியரில் அமர்ந்து வாய் திறக்காமல் நண்பர்களின் அரட்டையை புன்சிரிப்புடன் ரசித்துக் கொண்டிருந்த ஜீவனின் முகம் பிரகாசமானது.

 

அவனுடைய முகமாற்றத்தை கண்டு மற்ற நண்பர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கண்ஜாடை காட்டிக் கொண்டு “கண்டு கொண்டேன்… கண்டு கொண்டேன்… காதல் முகம் கண்டு கெண்டேன்…” என்று கோரசாக பாடினார்கள்.

 

“ஏய்… அடங்குங்கடா…” என்று ஜீவன் சிரித்தபடி அதட்டினான். அதே நேரம் புற்றீசல் போல அந்த சிறு கட்டிடத்திலிருந்து வெளியேறிய மாணவிகளில் ஒருத்தி ஜீவனிடம் நெருங்கினாள்.

 

“எக்ஸ்கியூஸ் மீ… ” என்று சொல்லி அழகாக புன்னகைத்தாள்.

“ஓ… இது உங்க சைக்கிளா…? எடுத்துக்கோங்க… ” என்றபடி கீழே இறங்கினான் அவன்.

 

இதே வசனத்தை அசராமல் தொடர்ந்து ஒரு வாரமாக சொல்லிக் கொண்டிருக்கிறான். அவளும் அலுக்காமல் தலையை ஆட்டிவிட்டு சென்று கொண்டிருக்கிறாள்.

 

“என்னடா மச்சான் இது…? ஒரே டயலாக நீயும் ஒரு வரமா சொல்ற… அதுவும் பல்ல காட்டிட்டு போகுது…!” என்று நக்கலடித்த நண்பனின் தலையில் தட்டி  “மரியாதை…” என்று எச்சரித்தான்.

 

“யாருக்கு…? தோ போகுதே அதுக்கா…?”

“அது… இதுன்னு சொன்ன… மகனே சாகடிச்சுடுவேன்… அவ என்னோட ஆளுடா… இனி ஒன்னோட தங்கச்சி… சரியா மச்சான்… வா… சார் வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாரு…” என்று பொறுப்பாக பேசி நண்பர்களை வகுப்பிற்குள் தள்ளிக் கொண்டு போனான்.

 

வாத்தியார் கணினியை இயக்கி பாடம் நடத்திக் கொண்டிருந்தார். கணினி திரையில் ஒரு அழகிய முகம் தோன்றி ஜீவனின் கண்களை நிலைகுத்த வைத்தது. அவனால் பாடத்தை கவனிக்க முடியவில்லை. முதல் முதலில் அந்த பெண்ணை பார்த்த ஞாபகம் மனக்கண்ணில் தோன்றியது.

 

அன்று கணிதம் டியூஷனிலிருந்து வெளியே வந்து சைக்கிள் எடுப்பதற்காக நிறுத்தத்திற்கு சென்றான். அடுத்த வகுப்பிற்காக காத்திருந்த மாணவிகள் ஆங்காங்கே கூடியிருந்தார்கள். இவன் தன்னுடைய சைக்கிளில் முதுகுகாட்டி அமர்ந்து தோழிகளிடம் அரட்டையடித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் சொன்னான்…

“எக்ஸ்கியூஸ் மீ…”

கழுத்தை மட்டும் திருப்பி புருவத்தை உயர்த்தி கண்களால் ‘என்ன…?’ என்று அழகாக கேட்டாள் அந்த பெண்.

 

அவளுடைய அழகில் விழுந்துவிட்டான் ஜீவன். பதில்பேச முடியாமல் சைக்கிளை கையால் சுட்டிக் காட்டி புன்னகைத்தான்.

“ஓ… இது உங்க சைக்கிளா…? எடுத்துக்கோங்க… ” என்றபடி புன்னகையுடன் கீழே இறங்கினாள்.

 

அந்த அழகான புன்னகையின் மூலம் தன்னை அறியாமலே அவனுடைய இளம் நெஞ்சில் காதல் விதையை விதைத்துவிட்டாள்.

 

அன்றிலிருந்து இன்றுவரை கிட்டத்தட்ட ஒரு வார காலமாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் விடாமல் அவளுடைய சைக்கிளில் ஏறி அமர்ந்து கொண்டு… அவள் சொன்ன வசனத்தை அப்படியே அவளிடம் சொல்லிக் காட்டுவந்தன் மூலம் அவனுக்கு அந்த பெண்ணின் மீது ஈடுபாடு இருக்கிறது என்பதை அவளுக்கு உணர்த்தினான். அவளும் புரிந்து கொண்டு தொடர்ந்து புன்னகையை பதிலாக கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.

 

அடுத்த ஒரு வாரத்தில் பள்ளி துவங்கிவிட்டது. கணினி வகுப்பு முடிந்துவிட்டது. இவன் பன்னிரெண்டாம் வகுப்பிலும் அவள் பத்தாம் வகுப்பிலும் சேர்ந்துவிட்டார்கள். அவளை பார்ப்பதற்கான வாய்ப்பு இவனுக்கு குறைந்துவிட்டது. ஒரே வாரத்தில் எதிலும் கவனம் செலுத்த முடியாமல் பைத்தியம் பிடித்தவன் போல் அந்த பெண்ணை மட்டும் நினைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்று வந்து கொண்டிருந்தான்.

 

ஒரு நாள் இவன் நண்பர்களுடன் தெருமுனையில் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர்களை கடந்து சென்ற ஒரு சைக்கிள் தேவையில்லாமல் பலமாக மணியடித்தபடி சென்றது. நண்பர்கள் அனைவருடைய கவனமும் அந்த சைக்கிளின் பக்கம் திரும்பியது. ஜீவனும் திரும்பி பார்த்தான். அவள்… அவள்தான் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாள். ஜீவனின் உடலில் புது ரெத்தம் பாய்ந்தது. அதுவரை உடன் இருந்த நண்பர்களை அம்போவென்று விட்டுவிட்டு தன்னுடைய சைக்கிளை எடுத்துக் கொண்டு அவளை தொடர்ந்தான்.

 

அவளுடைய சைக்கிள் ஒரு டியூஷன் சென்டருக்கு முன் சென்று நின்றது. மறுநாளே இவனும் அதே டியூஷனில் சேர்ந்துவிட்டான். காலை ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரைக்கும் பத்தாம் வகுப்பிற்கு டியூஷன்… எட்டு மணியிலிருந்து ஒன்பது மணி வரைக்கும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு டியூஷன். மீண்டும் பழையபடி அவர்களுடைய சந்திப்பு சைக்கிள் ஸ்டாண்டில் தொடர்ந்தது. இப்போதும் அவர்களுக்குள் பார்வை பரிமாற்றம் மட்டும்தான் நடந்து கொண்டிருந்தது.

 

ஜீவன் அந்த பெண்ணை பற்றிய முழுவிவரமும் சேகரித்துவிட்டான். பெண்ணின் பெயர் புனிதா என்பதோடு படிக்கும் பள்ளி மற்றும் வகுப்பு… வீடு இருக்கும் ஏரியா… உடன் பிறந்தவர்கள்… அப்பாவின் தொழில்… அம்மாவின் வேலை என்று அனைத்தையும் விரல் நுனியில் வைத்திருந்தான். ஆனால் படிப்பை கோட்டைவிட ஆரம்பித்திருந்தான்.

 

 
Comments are closed here.

error: Content is protected !!