Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 2

அத்தியாயம் – 2

ஜீவன் காலை ஒன்பது மணிக்கு டியூஷன் முடிந்ததும் நேராக பள்ளிக்கு சென்றால்தான் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியும். ஆனால் அவன் அதை செய்ய மாட்டான். டியூஷனிலிருந்து நேராக புனிதாவின் பள்ளிக்கு அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்ட்க்கு சென்றுவிடுவான். அங்கிருக்கும் பசங்களை நண்பர்களாக மாற்றிக் கொண்டு அவர்களுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பான்.

 

புனிதா ஆட்டோ ஸ்டாண்டை கடந்து பள்ளி வளாகத்திற்குள் நுழைவதை பார்த்து அவளிடம் தலையசைத்து விடைபெற்றுக் கொண்டுதான் அவனுடைய பள்ளிக்கு செல்வான். ஒவ்வொருநாளும் முதல் வகுப்பை கட் அடித்துவிட்டு ஒரு மணிநேரம் தாமதமாக பள்ளிக்கு வரும் ஜீவனை கண்டித்த வாத்தியார்கள் அவனுக்கு ஜென்ம எதிரியாகிப் போனார்கள்.

 

அன்றும் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்தது. புனிதாவை பார்த்துவிட்டு பள்ளிக்கு தாமதமாக வந்தான். கேட் பூட்டப்பட்டிருந்தது. வேறு வழியில்லாமல் மதில் சுவரில் ஏறி பள்ளி வளாகத்திற்குள் குதித்தான். உள்ளே விளையாட்டு வாத்தியார் பிரம்புடன் நின்று கொண்டிருந்தார். அவரை பாத்ததும் அதிர்ந்தவன் நொடியில் சமாளித்துக் கொண்டு “குட் மார்னிங் சார்…” என்றான்.

 

“இங்க என்னடா பண்ற?”

 

“கேட் பூட்டிட்டாங்க சார்… அதான்…”

 

“பூட்டிட்டா…? பூட்டிட்டா இப்படித்தான் திருட்டுபய மாதிரி சுவர் ஏறி குதிப்பியா…?” என்று கேட்டபடி கையிலிருந்த பிரம்பால் அடி பின்னிவிட்டார்.

 

ஐந்து ஆறு அடிகளை பல்லை கடித்து பொறுத்துக் கொண்டவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் அவர் அடிப்பதை தடுக்க முயன்றான். அவனுடைய அந்த செயலில் அவருடைய ஆவேசம் அதிகமானது. பிரம்பை சுழற்றி கண்மண் தெரியாமல் அடிக்க ஆரம்பித்துவிட்டார்.

 

அவனுடைய பொறுமை பறந்துவிட்டது. வாத்தியாரின் கையிலிருந்த பிரம்பை பிடிங்கி இரண்டாக உடைத்து போட்டுவிட்டான். அவர் அவனை திடுக்கிடலுடன் பார்த்தார்.

 

“என்ன சார் ரொம்ப ஓவரா அடிக்கிறிங்க…? இதுக்கு மேல என்மேல கை வச்சிங்க… அப்பறம் நல்லா இருக்காது சொல்லிட்டேன்…” என்று எச்சரித்தான்.

 

“என்னடா மெரட்ற…? வாத்தியாரையே மெரட்ற அளவுக்கு துணிஞ்சிட்டியா…? இனிமே உனக்கு இந்த பள்ளிகூடத்துல இடம் இல்ல… மரியாதையா வெளிய போடா… போயி உங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு வந்து டிசிய வாங்கிகிட்டு ஓடிடு…” என்று சொல்லி அவனை கேட்டுக்கு வெளியே தள்ளி கதவை மூடிவிட்டு… ஆபீஸ் ரூம் சென்று அவனுடைய வீட்டிற்கும் போன் செய்து விஷயத்தை சொல்லிவிட்டார்.

 

ஜீவனுடைய தந்தை ராஜன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாரடைப்பால் காலமாகிவிட்டார். தாய் சிவகாமி இல்லத்தரசி. தந்தையின் பென்ஷன்தான் குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ஒரே தம்பி பதினொன்றாம் வகுப்பு படிக்கிறான். தந்தை இல்லாத குழந்தைகளுக்கும் மகளுக்கும் பாதுகாப்பாக அவனுடைய தாய் வழி பாட்டி அவர்களுடன்தான் வசிக்கிறார்.

 

நான்கு பேர் கொண்ட இந்த குடும்பம் வசிப்பது ஒரு சமையலறையையும் ஒரு ஹாலையும் கொண்ட சிறு ஓட்டு வீட்டில்தான். நன்றாக படிக்கக் கூடிய தன் மகன் ஜீவன் தங்கள் குடும்பத்தை விரைவில் தூக்கி நிறுத்துவான் என்று நம்பிக் கொண்டிருந்த தாய் சிவகாமிக்கு, அன்று பள்ளியிலிருந்த வந்திருந்த போன் கால் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

 

பகல் முழுக்க ஊரை சுற்றித் திரிந்த ஜீவன் மாலை எப்பொழுதும் போல் வீட்டிற்கு வந்தான். அதுவரை சிவகாமிக்குள்ளே பொங்கிக் கொண்டிருந்த ஆத்திரம் மகனை கண்டதும் சீறி வெடித்தது.

 

“காலையிலேருந்து என்னடா போயி சுத்திட்டு வர்ற…? ”

 

தாயின் சீற்றத்தில் திகைத்தவன் “என்ன… என்னம்மா…? ஸ்கூல்க்குதான்  ” என்று தடுமாறினான்.

 

“பொய் சொன்ன பல்ல ஒடச்சிடுவேன் ராஸ்க்கல்… நல்லா படிச்சு வாழ்க்கைல உருப்புடுவேன்னு பார்த்தா ஊர சுத்தி நாசமா போய்டுவ போலருக்கே… வாத்தியாரையே எதிர்த்தியாமே…! அவ்வளவு கொழுப்பாடா உனக்கு…?” என்று அரை மணிநேராம் விடாமல் திட்டி… அழுது தீர்த்தாள்.

 

ஜீவனுக்கு பதில் பேச முடியவில்லை. தன் மீதும் தவறு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டிருந்தான் என்பதால் அமைதியாக இருந்தான். மறுநாள் சிவகாமி மகனுடன் பள்ளிக்கு வந்தாள்.

 

“வாங்கம்மா… நீங்கதான் இந்த தருதளையோட அம்மாவா…?” விளையாட்டு வாத்தியார் நக்கலாக கேட்டார்.

 

தாயிடம் அவர் அப்படி பேசியது ஜீவனை உசுப்பியது.

 

“சார்… என்ன சார் தறுதலை தனம் பண்ணிட்டேன் நான்…?” என்றான் முறைப்பாக.

 

“என்னடா மொறக்கிற? ஏதோ நல்லா படிக்கிற பையனாச்சேன்னு உன்ன இத்தன நாளும் கண்டுக்காம விட்டுட்டேன். இப்பதானே தெரியிது உன்னோட லட்சணம். தினமும் ஒரு மணி நேரம் லேட்டாதான் ஸ்கூல்க்கு வர்றியாம்…? என்ன சங்கதி?”

 

“நான் மட்டுமா லேட்டா வர்றேன். நீங்க எத்தனை நாள் லேட்டா வந்திருக்கிங்க. கனகராஜ் சார் எத்தனைநாள் உங்களுக்கு பதிலா ரீஜிஸ்ட்டர்ல சைன் போட்டிருக்காருன்னு காமிக்கட்டுமா…?” என்றான் திமிராக.

 

“பாத்திங்களா… பாத்திங்களா… உங்க முன்னாடியே எப்படி பேசுறான்னு… இவனெல்லாம் இனி படிக்கிறதுக்கு லாயக்கு இல்ல… ஹெச்-எம் ரூம்க்கு போயி டிசிய வாங்கிகிட்டு கெளம்புங்க…” என்று சொல்லி சிவகாமியை பீதிக்குள்ளாக்கினார்.

 

“ஜீவா… வாய மூடிகிட்டு இருக்கமாட்ட…?” என்று மகனை அடக்கிவிட்டு

 

“மன்னிச்சிடுங்க சார்… இதுதான் கடைசி வருஷம்… பப்ளிக் பரிச்சை வேற இருக்கு… கோபப்படாதிங்க சார்… இந்த ஒரு தடவ மன்னிச்சிடுங்க…” என்று அந்த வாத்தியாரிடம் கெஞ்சினாள் சிவகாமி.

 

அவர் சிறிதும் இளகவில்லை. வேறு வழி இல்லாமல் ஹெச்-எம் வாத்தியாரிடம் கெஞ்சினாள். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு அவர் ஜீவனை மன்னித்தார். அதுவும் அந்த தாயின் கண்ணீருக்காக.

 

# # #

வயதின் வேகத்தை ஜீவனுக்கு கட்டுப்படுத்த முடியவில்லை. அவன் மனம் அவனை மீறி செயல்படுவதை அவனால் தடுக்க முடியவில்லை. ஆட்டோ ஸ்டாண்டை புனிதா கடக்கும் பொழுது அவள் வீசும் கடைக்கண் பார்வைக்காக யாரை வேண்டுமானாலும் எதிர்க்கலாம் என்று தோன்றும். ஆட்டோ ஸ்டாண்ட் பசங்கள் “டேய்… மச்சான்… உன்னோட ஆளு வந்துடுச்சுடா…” என்று புனிதாவை பார்த்து ஏக்க பெருமூச்சு விடும் பொழுது உலகத்தையே வென்றுவிட்ட திருப்தி கிடைக்கும். அந்த திருப்திக்காக எதை வேண்டுமானாலும் இழக்கலாம் என்று தோன்றும்.

 

அதனால்தான் அவ்வளவு பிரச்னைக்கு பிறகும் அவனால் ஒழுங்காக பள்ளிக்கு செல்ல முடியவில்லை. முன்பெல்லாம் ஒரு மணிநேரம் தாமதமாக பள்ளிக்கு சென்றவன் இப்போதெல்லாம் அரை மணிநேரம் தாமதமாக செல்கிறான். அவ்வளவுதான் வித்தியாசம். இவனுடைய இந்த ஒழுங்கீன நடவடிக்கை ஆசிரியர்களை இவனுடமிருந்து தள்ளி வைத்தது. இவனுக்கும் ஆசிரியர்கள் மீது இருந்த வெறுப்பு படிப்பின் பக்கம் திரும்பியது.

 

 

பள்ளியிலும் பாடத்தை கவனிக்காமல் புனிதாவுடன் கனவில் காதல் பாட்டு பாடுவது… வீட்டிலும் பாட புத்தகத்தை படிப்பதற்கு பதில் காதல் கவிதைகளை எழுதுவது… காதல் கீதத்தை சத்தமாக ஒலிக்கவிட்டு வீட்டை அதிர செய்வது என்று அவனுடைய நடவடிக்கைகள் அத்தனையும் மாறிப் போய்விட்டன. தாயும் வாத்தியார்களும் அவனை வழிக்கு கொண்டுவர முடியாமல் சோர்ந்து போய்விட்டார்கள். இப்படியே இரண்டு மாதம் ஓடிவிட்டது.

 

இப்போதெல்லாம் வாரத்தில் மூன்று நாட்கள்தான் ஜீவன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தான். மீதி நேரங்களில் ஆட்டோ ஸ்டாண்ட்தான் அவனுடைய வாசஸ்த்தளம். அன்று புனிதா பள்ளிக்கு சீருடை அணியாமல் அழகிய வண்ண உடையில் சென்று கொண்டிருந்தாள். ஆட்டோவிற்குள் அமர்ந்திருந்த இவனை பார்த்து புன்னைக்கவும் மறக்கவில்லை அவள்.

 

ஜீவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. அவசரமாக ஆட்டோவிலிருந்து இறங்கி அவனுடைய சைக்கிளை எடுத்து வேகமாக இயக்கி அவளை பின் தொடர்ந்து சென்று மடக்கினான்.

 

“ஐயோ… என்ன இது…? இப்படி வழில வந்து நிக்கிறிங்க… யாராவது பார்த்தா தப்பாயிடும்… வழி விடுங்க ப்ளீஸ்…” புனிதா பதறினாள்.

 

“புனிதா…” என்று அவளை அழைத்து ஏதோ சொல்ல வந்தவன் உடனே நிறுத்தி “புனிதாதானே…?” என்று அவளுடைய பெயரை உறுதி செய்து கொண்டான்.

 

“ஆமாம்… உங்களுக்கு எப்படி தெரியும்…?” என்றாள்.

 

“பசங்கள்ட்ட விசாரிச்சேன்… என் பேரு என்னன்னு தெரியுமா…?”

 

“ம்ஹும்… தெரியாது… ஸ்கூல்க்கு டைம் ஆச்சு… விலகுங்க… நான் போகணும்…”

 

“போகலாம்… போகலாம்… வெயிட் பண்ணு… என்ன இன்னிக்கு கலர் டிரஸ்ல வந்திருக்க…? பிறந்த நாளா…?”

“ம்ம்ம்… ஆமாம்…”

“ஸ்வீட் எங்க…?” என்றான் அவளுடைய தயக்கத்தை பார்த்து ரசித்துக் கொண்டே.

 

அவள் அவசரமாக ஸ்கூல் பையில் இருந்த ஒரு கவரை திறந்து அதிலிருந்து ஒரு டைரி மில்க் சாக்லெட்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

 

“ஒன்னே ஒண்ணுதானா…? கவர்ல நிறைய வச்சிருக்க போலிருக்கே…!”

 

“இதெல்லாம் பிரண்ட்ஸ்க்கு… லேட் ஆச்சு நான் போகணும்…” என்றாள் குழந்தை போல். அவனை ஒதுக்கிவிட்டு செல்வதற்கு சாலையில் ஏகப்பட்ட இடம் இருந்தும் அவனுடைய அனுமதிக்காக தயங்கிக் கொண்டிருந்தவளை பார்த்து சிரித்துவிட்டு… அவள் கொடுத்த சாக்கலேட் கவரில் கையில் இருந்த மார்க்கரால் கையெழுத்திட்டு அவளிடமே திருப்பிக் கொடுத்தான்.

 

“என்ன…?”

 

“மத்தியம் லஞ்ச் என்ன…?”

 

“லஞ்ச் எடுத்துட்டு வரல… இன்னிக்கு வீட்டுக்கு போறேன்…”

 

“வீட்டுல இன்னிக்கு பிரியாணியா…?”

“ம்ம்ம்… ஆமாம்…”

 

“சரி மத்தியானம் லஞ்ச்க்கு வீட்டுக்கு போகும் போது திரும்ப உன்கிட்ட வந்து பேசுவேன். அப்போ இதே சாக்லேட்டை என்கிட்ட திரும்ப குடுக்கணும்… அடையாளத்துக்குத்தான் சைன் போட்டிருக்கேன்… கெளம்பு…” என்று சொல்லி அவளுக்கு வழிவிட்டான்.

 

புனிதாவிற்கு இன்ப படபடப்பு… நடு வீதியில் யாரெல்லாம் தாங்கள் பேசியதை கவனித்தார்களோ என்கிற அச்சத்தை மீறிய மகிழ்ச்சி அவளை ஆட்கொண்டது.

 

‘எவ்வளவு தைரியமா வந்து பேசுறான்… ஹப்பா… சரியான ரௌடி…’ என்று செல்லமாக நினைத்தாள்.

 

அவன் கையெழுத்திட்டு கொடுத்த டைரி மில்க்கை தனியாக எடுத்து வைத்துக் கொண்டாள்.

 

அன்று முழுக்க அவளால் பாடத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. எப்போது ஒரு மணியாகும்…? எப்போது மீண்டும் அவனை பார்ப்போம் என்று பரபரத்தது அவள் உள்ளம். ஒவ்வொரு மணித்துளியாக நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள்.

 

 
Comments are closed here.

error: Content is protected !!