Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

இல்லறம் இதுதான்

Share Us On

[Sassy_Social_Share]

இல்லறம் இதுதான் – 8

அத்தியாயம் – 8

 

“இப்ப எதுக்கு அத்தை சங்கர் அத்தானையும் சாரதா அக்காவையும் இங்க வர சொல்லியிருக்கிங்க? ஒரு வாரத்துல புறப்பட்டு வாங்கன்னு சொல்லற அளவுக்கு அப்படி என்ன அவசரம்?” லட்சுமி போனில் கூறிய விபரத்தை உறுதிப் படுத்த கேட்டுக் கொண்டிருந்தாள் சிவா.

 

“எல்லாம் காரியமா தான்”

 

“அதான் என்னனு கேட்கறேன்”

 

“அவங்க வந்த உடனே உனக்கே தெரியும்”

 

“அப்ப  நீங்க சொல்ல மாட்டிங்களா?”

 

“ஆமாம்”

 

“சின்ன அத்தானுக்கு தெரியுமா எதுக்குன்னு?”

 

“ம்ஹும்… என்னை தவிர வேறு யாருக்கும் தெரியாது” அத்தை தீவிரமாக மறுக்க, சிவா எதுவும் செய்ய இயலாதவளாய் நின்றாள்.

 

மாடியில் சிவாவும் லட்சுமியும் நின்றுக்  கொண்டிருந்தார்கள்.

 

“அத்தை இதுவரைக்கும் என்கிட்டேயிருந்து எதையும் மறைச்சதில்லை அக்கா. என்ன விஷயம்னு தெரியல”

 

“நானும் பொறுமையா எவ்வளவோ தடவை கேட்டுப் பார்த்திட்டேன் சிவா, சொல்ல மறுக்குறாங்க. அதான் உனக்கு போன் பண்ணி வர சொன்னேன். பார்த்தா உன்கிட்டேயும் எதையும் சொல்ல மாட்டேங்கிறாங்க”

 

“இப்படி அவங்க மௌனமா இருக்கறதை பார்த்தா விஷயம் பெருசா இருக்குமோன்னு தோணுது”

 

“அதான் எனக்கும் பயமா இருக்கு”

 

“சரி எதுக்கு இந்த குழப்பம். நாளைக்கு காலைல விஷயம் தெரியத்தானே போகுது. காத்திருப்போம்”

 

“சரி கீழே போகலாம். அத்தை எதாவது தப்பா நினைச்சுக்கப் போறாங்க”

 

கீழே இறங்கிய இருவருடைய இதயமும் அடுத்த நாள் என்ன நடக்கப் போகிறதோ என்கிற கற்பனையில் தத்தளித்தன.

 

காலை 9.00 மணி மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மோகனும் லட்சுமியும் இருந்தனர். சங்கரும் சாரதாவும் இதர வேலைகளை முடித்துக் கொண்டு அவர்களிடம் வந்தார்கள்.

 

“டேய் மோகன். அம்மாவுக்கு இப்போ உடம்புக்கு எப்படி இருக்கு. உடம்பு சரியில்லைன்னு தந்தி வந்ததும் தவிச்சுப் போயிட்டேன்”

 

“எல்லாம் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா” – மோகன் காரை நோக்கிச் சென்றான்.

 

“மோகன்… உன்னோட காரா? புதுசாவா வாங்கியிருக்க?” விழிகளை விரித்தான்.

 

“இல்லடா… என் நண்பநோடது. உங்களை ரிசீவ் பண்ணறதுக்காக வாங்கிட்டு வந்தேன்” நால்வரும் காரில் ஏறினர்.

 

பயணத்தில் மௌனமே தலை தூக்கியது.

 

“இப்போ எதுக்காக ஹாஸ்ப்பிட்டல் போகணும், எங்களுக்கு என்ன உடம்புக்கு” என்று கத்திக் கொண்டிருந்தான் சங்கர்.

 

“முதல்ல செக்கப்புக்கு வர்ற. அப்புறம் சொல்றேன்” ராஜம் கண்டிப்புடன் கூறினாள்.

 

“நீங்க பண்ணறது ஒண்ணுமே புரியில. உங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு வர சொல்லிட்டு இப்போ எங்களுக்கு செக்கப்புன்னு சொல்றிங்க. என்னம்மா இது?”

 

“அவசியம் தெரிஞ்சுக்கனுமா?”

 

“ஆமாம்”

 

“சரி சொல்றேன்… உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணமாகி எத்தனை வருஷமாச்சு?”

 

“அஞ்சு வருஷம் ஆச்சு. அதுக்கு இப்போ என்ன?”

 

“இன்னும் சாரதா வயித்துல ஒரு புழு பூச்சி கூட வரலை”

 

“அஞ்சு வருஷம் தானே… அதுக்குள்ள என்ன அவசரம்?”

 

“ஊர்ல தலை காட்ட முடியல. முதல் மருமகளுக்கு இன்னும் குழந்தை பிறக்கலை. அதனால் தான் இரண்டாவது மருமகளுக்காவது அந்த பாக்கியம் கிடைக்குமான்னு சின்னவனுக்கு கல்யாணம் பண்ணியிருக்கா ராஜம்னு எல்லோரும் பேசிக்கிறாங்க”

 

“அதுக்காக?”

 

“மனசு திருப்திக்காக ஒரு செக்கப் பண்ணிட்டா சந்தோஷப்படுவேன்”

 

“இதை அடுத்தவாட்டி செஞ்சிருக்கலாம்ல்ல? இவ்வளவு செலவு பண்ணி எதுக்கு இந்த அவசரம்”

 

“என்னை பொருத்தவரைக்கும் பணம் பெருசு இல்ல. மன நிம்மதி தான் பெருசு. அதுவும் இல்லாம சின்னவளுக்கு குழந்தை பிறக்கத்தான் போகுது. அதுக்கு  முன்னாடி சாரதாவுக்கும் ஒரு குழந்தை பிறந்தால் தான் அவளுக்கு மரியாதை”

 

“சரி சரி… இதையெல்லாம் சாரதாகிட்ட சொல்லிடாதிங்க. அவ தூங்கி எழுந்ததும் நானே பக்குவமா சொல்லிகிறேன்”

 

“எப்படியோ நான் சொன்னது நடந்தா சரிதான்”

 

சாரதாவும் சங்கரும் மாடியில் அமர்ந்திருந்தனர். எப்படி ஆரம்பிப்பது என்று தான் தெரியவில்லை. அம்மா சொல்வதிலும் தப்பில்லை. ஆனால் சாரதாவின் மனமும் புண்படக் கூடாது. இப்போது என்னவென்று இவளிடம் நான் சொல்லி புரிய வைக்கப் போகிறேன். கேள்விகள் விஸ்வரூபமெடுத்து அவன் முன் நிற்க, சாரதாவே ஆரம்பித்தாள்.

 

“உங்க அம்மா நல்லா தானே இருக்காங்க. அப்புறம் எதுக்கு நம்மளை வர சொன்னாங்களாம்?”

 

“உன்னை எங்க அம்மாவுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சாரதா. உன் மேல ரொம்ப அக்கறை”

 

“புதிர் போடாதிங்க. விஷயத்துக்கு வாங்க.”

 

“லட்சுமி இருக்கால்ல…” இழுத்தான்.

 

“அவளுக்கென்ன?”

 

“இன்னும் ஒரு வருஷத்துல அவளுக்கு குழந்தை பிறந்தா என்னவாகும்?”

 

“அவளுக்கு குழந்தை பிறந்தா நமக்கு என்ன?”

 

“நம்ம மரியாதை போயிடும் சாரதா”

 

“எப்படி?”

 

“நமக்கு இன்னும் குழந்தை பிறக்கலையே”

 

சாரதா அதிர்ந்தாள்.

 

“நமக்கு முன்னாடி அவங்களுக்கு குழந்தை பிறந்தா ரோட்டுல போறவன் கூட நம்மை மதிக்க மாட்டான். அதான் நம்ம ரெண்டு பேரையும் செக்கப்புக்கு போக சொல்லி அம்மா சொல்றாங்க”

 

“நினச்சேன். எனக்கு ஏதாவது குறை இருந்தா நல்லா குத்திக் காட்டலாம்ல. அதான் உங்க அம்மா இப்படி பண்ணுறாங்க” – இயலாமையில் உடைந்து அழுதாள். சங்கர் அவளை சமாதானம் செய்ய முயன்றான்.

 

“அதுக்கு இல்ல சாரதா. நாம இப்போ செக்கப் பண்ணி இப்போவே ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்டா நமக்கும் சீக்கிரம் குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்கு.அதை புரிஞ்சுக்கோ”

 

 

“அப்படியா? ட்ரீட்மென்ட் எடுத்தா  நமக்கு குழந்தை பிறக்குமல்ல?” விழிகளை விரித்து விசும்பிக் கொண்டேக் கேட்டாள்.

 

“கண்டிப்பா பிறக்கும்டா செல்லம்” ஆதரவாக மனைவியை அனைத்துக் கொண்டான்.

 

திருமணம் என்பது எதக்கு? சந்தோஷமாக சல்லாபம் செய்யவா? இல்லவே இல்லை.. பெற்றோர்கள் நம் வாழ்நாள் முழுவதும் நம்மோடு வர இயலுமா? முடியாது. அதனால் தான் நம் இன்ப துன்பங்களை பகிர்ந்துக்கொள்ள நமக்கொரு துணியை தேர்ந்தெடுக்கிறார்கள். சிலர் அவர்களுடைய வாழ்க்கையை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள். மற்றபடி ஆன் பெண் உறவு வம்ச விருத்தியெல்லாம் அதில் ஒரு பக்கமே தவிர அதுவே புத்தகமல்ல. தனக்கு ஏற்ப்படும் சந்தோஷ அனுபவத்தை கேட்டு சந்தோஷப்படுவதர்க்கும் துக்கத்தைக் கேட்டு ஆறுதல் கூறுவதற்கும் ஒரு துணைவேண்டும் என்பது தான் ஒவ்வொருவருடைய தேடல். சாரதாவின் அந்த தேடலுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தான் சங்கர்.

 

அதே சமையம் மோகனும் லட்சுமியும் தங்களுடைய அறையில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

 

“உங்க அம்மா சொன்னதைக் கேட்டிங்களா?”

 

“ம்ம்ம்” கம்ப்யூட்டர் திரையில் கண்களைப் பதித்தவாறே இவளுக்கு ‘ம்ம்ம்’ கொட்டினான்.

 

“சின்னவளுக்குக் குழந்தைப் பிறக்கத்தான் போகுதுன்னு சொன்ன போது என் முகத்துல அறஞ்ச மாதிரி இருந்தது”

 

“அதுக்கென்ன இப்போ” கம்ப்யூட்டர் திரையிலிருந்து அப்போதும் அவன் கண்கள் விலகவில்லை.

 

“முதல்ல அந்த கம்ப்யூட்டரை ஆஃப் பண்றிங்களா?”

 

“இப்போ உனக்கு என்னதான் பிரச்சனை?”

 

“உங்களுக்கு உணர்ச்சியே இல்லையா? அத்தை சங்கர் அத்தானை எப்படி கேட்டாங்கன்னு பார்த்திங்கல்ல?”

 

“பார்த்தேன்”

 

“நாளைக்கு நமக்கும் இதே நிலை தான்வரப் போகுது. அப்போ என்ன சொல்லுவிங்க?”

 

 

“நான் இன்னும் செடியே நடல. அதுக்குள்ள ஏன் பூ பூக்க மாட்டேங்குதுன்னு கேட்டா நான் என்னம்மா பதில் சொல்லறதுன்னு எங்க அம்மாவையே திருப்பிக் கேட்பேன்” என்று அசால்ட்டாகக் கூறினான்.

 

 

உச்சந்தலையில் இடி இறங்கியது போல் இருந்தது அவளுக்கு. வார்த்தைகள் உதடு தாண்டி வர மறுத்தன.

 

“எனக்கு தூக்கம் வருது. குட் நைட்” என்று படுத்துவிட்டான்.

 

ஐந்து நிமிடம் பிடித்தது அவளுக்கு அதிர்ச்சியிலிருந்து மீள. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டேயிருந்தது.

 
Comments are closed here.

error: Content is protected !!