Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-5

அத்தியாயம் – 5

“பாராமுகம் காட்டும் உன்

நிலாமுகம் பார்க்க முடியாமல்

தனிமையை நான் தழுவுகிறேன்

தினம் தினம்…!”

 

பெங்களூர் கோரமங்களா ஆறாவது பிளாக்கில் அமைந்துள்ள ‘ஆதவ்’ அடுக்குமாடி குடியிருப்பில் நான்காவது தளத்தில்… மூன்றாவது வீட்டில் தொலைபேசி அலறியது. சோபாவில் கால்களை நீட்டி சாய்ந்து அமர்ந்து மடிக்கணினியில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த ஒரு நாகரீகமான இளைஞன் ‘இப்ச்…’ என்று அலுத்துக்கொண்டே எழுந்து சென்று போனை எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.

 

“ஹலோ….”

 

“……………..”

 

“சொல்லுடா அஷோக்…”

 

“…………..”

 

“அப்படியா…! எப்போ..?”

 

“……………”

 

நீண்ட நேரம் நண்பன் சொன்ன எதையோ கேட்டுக் கொண்டிருந்தவனின் நெற்றிச் சுருங்கியது.

 

“சரி நீ நம்பர் கொடு… நானே பேசிக்கறேன்…”

 

அஷோக் கொடுத்த கைப்பேசி எண்ணைக் குறித்துக் கொண்டவன், முகத்தில் குழப்பத்துடன் சோபாவில் வந்து அமர்ந்தான். சிறிதுநேர சிந்தனைக்குப் பிறகு கைப்பேசியை எடுத்து நண்பன் கொடுத்த எண்ணிற்கு அழைத்தான்.

 

“ஹலோ…” அந்தப் பக்கத்திலிருந்து ஒரு பெண் குரல் கேட்டது.

 

“குணா பேசுறேன்…” – அழுத்தமான குரல்.

 

“குணாண்ணா…! எப்படி இருக்கீங்க..? பேசியே ரொம்ப நாள் ஆச்சு… யு.எஸ்.லேருந்து எப்போ வந்தீங்க?” – ஜீவிதா ஆர்ப்பரித்தாள்.

 

அவளுடைய குரலிலிருந்த உற்சாகம் அவன் முகத்திலும் புன்னகையைக் கொண்டு வந்தது.

 

“நல்லா இருக்கேம்மா… நான் இங்க வந்து ஒரு மாசம் ஆகப்போகுது. நீ எப்படி இருக்க?”

 

“நான் நல்லா இருக்கேன்… இந்தியாலேயே செட்டில் ஆகப் போறீங்களா..? இல்ல திரும்பப் பறந்துடுவீங்களாண்ணா?”

 

“இங்கதான் இருக்கப்போறேன்… பெங்களூர்ல… நீ என்ன செய்ற?”

 

“எம்.ஈ பண்ணிட்டு இருக்கேன்… நம்ம காலேஜ்ல தான்…”

 

“ஓகே… ” – கொஞ்சம் தயங்கினான்.

 

“என்னண்ணா விஷயம்..? திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க?”

 

“ஜீவி… மதுக்கு என்ன பிரச்சனை?”

 

“மதுக்கா..? என்னண்ணா சொல்றீங்க?”

 

“கேள்விபட்டேன் ஜீவி… சொல்லு என்ன நடந்தது?”

 

“அண்ணா… அவளோட பர்சனல் விஷயத்தை… நான் எப்படிண்ணா…”

 

“அப்போ மதுவோட நம்பர் கொடு… நான் அவகிட்டயே பேசிக்கறேன்…”

 

“இல்லைண்ணா… வேண்டாம்… அவளோட வாழ்க்கை இப்போ தான் கொஞ்சம் சீராகியிருக்கு…”

 

“அப்போ இதுக்கு முன்னாடி சரியில்லாமத் தான் இருந்திருக்கு..?”

 

சிறிதுநேரம் யோசித்த ஜீவிதா பிறகு ஒரு முடிவிற்கு வந்தவளாக,

 

“ஆமாண்ணா… அவ கணவர் கொஞ்சம் சரியில்லாத ஆள்… தெரியாம லவ் பண்ணிட்டா… இப்போ கஷ்டப்படறா…” என்றாள்.

 

“சரியில்லாத ஆள்னா..? குடிப்பானா?”

 

“அதெல்லாம் கூடப் பரவால்லண்ணா…”

 

“வேற என்ன?”

 

“நீலவேணின்னு ஒரு பொண்ணுண்ணா… எங்க வீட்டுக்குப் பக்கத்துல தான் இருந்தா… கேரக்டர் சரியில்லாதவ”

 

“ம்ம்ம்…”

 

“அவகூட இவருக்குப் பழக்கம் உண்டு…” மூன்றாம் நபராக வெளியிலிருந்து பார்க்கும்பொழுது அவளுக்கு என்ன தெரிந்ததோ அதை உண்மையென்று நம்பி குணாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

 

“ஜீவி…!” – குணா அதிர்ந்தான்.

 

“ஆமாண்ணா… நானே நிறையத் தடவ அவரை அவளோட வெளியே பார்த்திருக்கேன்… இங்க அவ வீட்டுக்குக் கூட அடிக்கடி வருவாரு…”

 

“இதெல்லாம் மதுக்குத் தெரியுமா?”

 

“அவகிட்ட நான் சொல்லியிருக்கேன்… அப்போல்லாம் அவ அவரை ரொம்ப நம்பினா… அதனால என் பேச்சைக் கேக்க மாட்டேன்னு சொல்லிட்டா…”

 

“அப்புறம்…” – பதட்டமாகக் கேட்டான்.

 

“அப்புறம் கொஞ்ச நாள்ல… இந்த ஆள் அந்த நீலவேணியைக் கூட்டிட்டுப் போய் மது இருக்கற வீட்டிலேயே தங்க வச்சிட்டார்… மதுக்கு விஷயம் புரிஞ்சிடுச்சு போல… அவள வீட்டை விட்டுத் தொரத்திட்டா…”

 

“குட்…”

 

“ஆனா அந்த நீலவேணி பக்கா கிரிமினல்… அவ தன்னோட சாவுக்கு மது தான் காரணம் அப்படின்னு எழுதி வச்சிட்டுச் செத்துப் போய்ட்டா…”

 

“செத்துட்டாளா….!”

 

“ஆமாண்ணா… அவ தற்கொலை பண்ணிக்கிற மாதிரி நாடகம் தான் போட்டிருக்கா… அவ கெட்டநேரம் உயிரே போய்டுச்சு… ஆனா பாவம்… மது போலீஸ்ல மாட்டிகிட்டா…”

 

“போலீஸ்லயா..?!”

 

“ஆமாண்ணா… அப்போ அவ வயித்துல குழந்தை வேற இருந்துச்சு…”

 

“அவன் என்ன செஞ்சான்..?”

 

“அவரு என்ன செஞ்சாரு… இவளுக்கு டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்பினார்…”

 

“மது அவனை டைவர்ஸ் பண்ணிட்டாளா..?”

 

“எங்க..? குழந்தையைச் சாக்கு வச்சு அந்த ஆளை ஆள் கூடச் சமாதானம் செஞ்சிருப்பாங்க போல… இப்போ அவரோட தான் இருக்கா…”

 

“அவனோட இருக்காளா? இவளுக்கு என்ன பைத்தியமா? படிச்ச பொண்ணு தானே? சுயமா வாழத்தெரியாது?”

 

“அதெல்லாம் அவ்வளவு சாதாரணம் இல்லைண்ணா… அந்த ஆள் அவளுக்குத் தாய்மாமா வேற… அதான் வீட்டுல இருக்கற பெரியவங்க எல்லாம் பேசி அவளை, அவரோட திரும்பச் சேர்த்து வச்சிட்டாங்க…” – வருத்தத்தோடு சொன்ன ஜீவிதாவின் கண்கள் தோழிக்காகக் கலங்கின.

 

குணா எதுவும் பேசவில்லை. கார்முகிலன் மீது கொலைவெறியே உண்டானது. அவனை நினைத்தாலே வெறுப்பாக இருந்தது. ‘தங்கமான பெண்ணுக்கு இப்படியொருவன் தான் வாழ்க்கை துணையாக அமைய வேண்டுமா…! ச்ச…’ – என்று எண்ணியபடி காலை உதைத்தவன், “ஜீவி… நான் மதுவைப் பார்க்கணும்…” என்றான்.

 

“ஐயையோ… என்னண்ணா சொல்றீங்க? அந்த ஆளைப் பற்றி இப்போ தானே சொன்னேன்… திரும்ப அவகிட்டப் பேசணும்னு சொல்றீங்க. அம்மா அப்பா கூடவே பேசக்கூடாதுன்னு சொல்லி அவளை டார்ச்சர் பண்ணின கொடுமைக்கார ஆள் அவர்… நானே அவளா பேசினா மட்டும் தான் பேசுவேன்… நம்மால அவளுக்குப் பிரச்சனை வரக் கூடாதுண்ணா…”

 

“இல்ல ஜீவி… நான் மதுகிட்டப் பேசியே ஆகணும்… அவன்கிட்ட அடிமைபட்டுக் கிடக்க வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லவே இல்லை… ஜீவி… இந்த உலகம் ரொம்பப் பெருசு… எவ்வளவோ நல்லவங்க இருக்காங்க… மது சந்தோஷமா இருக்கணும்… அதுக்கு நம்மால முடிஞ்சதை நாம செய்யணும்மா…”

 

ஜீவிதா யோசித்தாள். குணா சொல்வதும் சரியென்று பட்டது. “சரிண்ணா… நான் ஏற்பாடு பண்றேன்… நீங்க அவசரப்பட்டு வேற யார்கிட்டயும் நம்பர் வாங்கிப் பேசிடாதீங்க… அவர் போனை எடுத்துட்டார்னா பெரிய பிரச்சனையாயிடும்…” என்று எச்சரித்தாள்.

 

“சரிம்மா… ” என்று சொல்லிவிட்டு குணா கைப்பேசியை அணைத்தான்.

###

 

“யாரைப் பார்க்கணும்?” – வெள்ளை வேட்டிச் சட்டையும், நெற்றியில் பட்டையுமாகக் கையில் ஒரு லெதர் பையுடன் வாசலில் நின்று கொண்டிருந்த ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆணிடம் கேட்டான் கார்முகிலன்.

 

“மதுமதி வீடு தானே?” – புதியவர் கேட்டார்.

 

“ஆமாம்… நீங்க?”

 

“நான் மதுமதியோட ஃப்ரண்ட் கல்பனாவோட அப்பா… என் மகளுக்குக் கல்யாணம்… பத்திரிகை கொடுக்க வந்தேன்…”

 

“ஓ… உள்ள வாங்க…” அவரை வீட்டிற்குள் அனுமதித்தவன் “மதி…” என்று குரல் கொடுத்து மனைவியை அழைத்தான்.

 

“என்ன..?” என்று கேட்டபடி கையில் குழந்தையோடு மாடியிலிருந்து எட்டிப் பார்த்தவள்… தோழியின் தந்தையைப் பார்த்ததும் “அப்பா… வாங்கப்பா…” மலர்ந்த முகத்தோடு கீழே இறங்கி வந்தாள்.

 

“உக்காருங்கப்பா… நல்லா இருக்கீங்களா? கல்பனா எப்படியிருக்கா? அம்மா நல்லா இருக்காங்களா? ராஜேஷை காலேஜ்ல சேர்த்தாச்சா..?” என்று வரிசையாகக் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருந்தாள்.

 

மனைவி வந்திருப்பவரின் குடும்பத்தையே விசாரித்ததிலிருந்து அவருடைய மகள் இவளுக்கு நெருங்கிய தோழியாகத்தான் இருக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டான்.

 

“நாங்க எல்லாரும் நல்லா இருக்கோம்மா… உனக்குத்தான் இடையில என்னென்னமோ பிரச்சனை வந்துடுச்சின்னு கேள்விபட்டேன்… கல்பனா கூட அடிக்கடி உன்னைப் பார்க்கணும்னு சொல்லுவா… ரெண்டு தடவ காம்காபட்டிக்கு அழைச்சுக்கிட்டு வந்தேன்… ஒரு தடவ நீ ஆஸ்பத்திரில இருந்த… இன்னொரு தடவ தூக்க மாத்திரை போட்டுக்கிட்டு நல்லா தூங்கிகிட்டு இருந்த… ரெண்டு தடவையும் உன்னோட பேச முடியாம போச்சேன்னு உன் ஃப்ரண்டுக்கு ரொம்ப வருத்தம்…”

 

அவர் பேசப்பேச மதுமதியின் முகம் வாடியது. அதைப் பார்த்ததும் கார்முகிலனின் முகம் சூடாகி சிவந்தது. ‘இந்த மனுஷன் எதுக்கு இங்க வந்து உக்கார்ந்துகிட்டுப் பழசையெல்லாம் ஞாபகப்படுத்திக்கிட்டு இருக்காரு…’ என்று எரிச்சலோடு நினைத்தான்.

 

மதுமதியின் வாடிய முகத்தைக் கவனித்த கல்பனாவின் தந்தை உடனடியாக அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். “சரி விடும்மா… எல்லார் வாழ்க்கையிலயும் இது மாதிரி ஒரு கட்டம் வரத்தான் செய்யும்… இப்போ எப்படியிருக்க? நல்லா இருக்கியா? குழந்தை எப்படி இருக்கு..?” என்று இன்றைய நிலவரத்தைப் பற்றி விசாரித்தார்.

 

“நல்லா இருக்கோம்ப்பா… என்ன சாப்பிடறீங்க..?”

 

“ஒண்ணும் வேண்டாம்மா… வரிசையா பத்திரிகை கொடுக்கப் போன வீட்டுலயெல்லாம் எதையாவது குடிச்சிட்டுத் தான் வர்றேன்…”

 

“பத்திரிக்கையா? என்னப்பா விசேஷம்? கல்பனாவுக்கா?” – மகிழ்ச்சியோடு கேட்டாள்.

 

“ஆமாம்மா… வர்ற பத்தாம் தேதி உன் ஃப்ரண்டுக்கு தேனில கல்யாணம். கட்டாயம் நீ குடும்பத்தோட வந்துடணும்… நீங்களும் வந்துடுங்க சார்…” என்று இருவரையும் முறையாக அழைத்தார்.

 

கார்முகிலன் “ம்ம்ம்” என்று தலையசைக்க, “நிச்சயமா வந்துடறோம்ப்பா…” என்று உறுதி கொடுத்தாள் மதுமதி.

 

“சரிம்மா நான் கிளம்புறேன்…”

 

“போயிட்டு வாங்கப்பா…” மதுமதி விடைகொடுக்க அவர் புறப்பட்டார்.

 

கார்முகிலனுக்கு மதுமதி அந்தத் திருமணத்திற்குச் செல்வதில் விருப்பமில்லை. இப்போது வந்துவிட்டுப் போனவரே நடந்து முடிந்த விஷயங்களைப் பற்றி இந்தக் கிளறு கிளறிவிட்டுப் போகிறார். அப்படியிருக்க… அங்குப் போனால் இன்னும் யாரெல்லாம் அதைப்பற்றிப் பேசுவார்களோ என்ற பயம் சூழ்ந்தது. ஆனால் தோழியின் திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற மனைவியின் ஆர்வத்தைப் பார்க்கும்பொழுது அவளைத் தடுக்கவும் மனம் வரவில்லை. அந்தத் திருமணத்தில் ஏதோ விபரீதமாக நடக்கப்போகிறது என்பதை மட்டும் அவன் உள்ளுணர்வு சொல்லிக்கொண்டே இருந்தது.
Comments are closed here.