Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 8

அத்தியாயம் – 8

புனிதா அந்த ஊரில் உள்ள ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக வேலையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டது. அவள் எதிர்பார்க்கும் எதையும் ஜீவன் செய்யவில்லை. அதிகம் குடிக்கிறான்… புகை பிடிக்கிறான் என்பது கூட அவளுக்கு தெரிந்திருந்தது. அவன் மீதான அவளுடைய மதிப்பு குறைந்து கொண்டே இருந்தது.

 

அது ஜீவனுக்கும் தெரிந்தது. முன்பு போல் புனிதா தன்னை மதிப்பதில்லை என்பதை அவ்வப்போது உணர்பவன் அந்த நேரங்களில் எல்லாம் பயங்கரமாக தண்ணியடிப்பான்.

 

வீட்டில் உள்ளவர்கள் கேள்வி கேட்டால் அவர்களை கோபத்தால் அடக்குவான். தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளையை வீட்டில் உள்ள இரு வயதான பெண்களால் அடக்க முடியவில்லை. அதனால் அவனுக்கு திருமணம் செய்துவிடலாம் என்று சிவகாமி தீர்மானித்தாள்.

 

ஒரு நாள் அது பற்றி அவள் மகனிடம் பேசும் போது பர்சில் வைத்திருந்த புனிதாவின் பாஸ்போட் அளவிலான புகைப்படத்தை எடுத்துகாட்டி “இவதாம்மா உன்னோட மருமக… பேரு புனிதா…” என்றான் பெருமையுடன்.

 

சிவகாமிக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. இவன் விரும்பும் பெண்ணை கட்டி வைத்துவிட்டால் பிறகு இவனுடைய கொட்டத்தை அவள் வந்து அடக்கிவிடுவாள் என்று நினைத்து மகிழ்ந்தாள்.

 

# # #

ஒரு நாள் புனிதா ஜீவனை போனில் அழைத்து கோவிலுக்கு வர சொன்னாள்.

 

“சொல்லு பம்கின்… என்ன இன்னிக்கு நீயா மீட் பண்ண கூப்பிட்டிருக்க…!” என்று ஜாலியாக பேசிக் கொண்டே வந்து எப்பொழுதும் போல் அவளுடன் நெருக்கமாக அமர்ந்தான்.

 

அவள் முகத்தை சுளித்துக் கொண்டு தள்ளி அமர்ந்தாள். இவனுடைய புருவம் முடிச்சிட்டது… “என்ன…?” என்றான் அதட்டலாக.

 

‘ஒன்னுக்கும் ஆகலைன்னாலும் இந்த அதட்டலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…’ என்று நினைத்துக் கொண்டு

“பொது இடத்துல இப்படிதான் உரசிகிட்டு வந்து உக்காருவிங்களா…?” என்றாள்.

 

மனம் மகிழ்ச்சியாக இருக்கும் பொழுது எத்தனையோ நாள் அவளாக அவனுடன் நெருங்கி அமர்ந்திருக்கிறாள். அப்போதெல்லாம் பொது இடத்தை பற்றிய அவளுடைய அறிவு என்ன செய்து கொண்டிருந்தது என்கிற எண்ணம் தோன்றி அவனுடைய கோபத்தை கிளறியது. அதை வெளிக்காட்டிவிடக் கூடாது என்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டான்.

 

“கொஞ்ச நாட்களாகவே உன்னுடைய நடவடிக்கை ஒரு மாதிரிதான் இருக்கு… சொல்லு எதுக்கு என்ன வர சொன்ன…?” என்றான்.

 

“நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதை பற்றி நீங்க என்ன நினைக்கிறிங்க…?”

 

“இதுல நினைக்க என்ன இருக்கு…? உனக்கு எப்ப சரின்னு தோணுதோ சொல்லு… உடனே பொண்ணு கேட்டு வந்துடறேன்…” என்றான் அசால்டாக.

 

“கல்யாணத்துக்கு பிறகு என்னை எப்படி காப்பாத்துவிங்க?”

“ஏன்… என் மேல நம்பிக்கை இல்லையா…?”

 

“எப்படி நம்பறது? ஆறு வருஷத்துக்கு முன்னாடி என்ன நிலைல இருந்திங்களோ அதே நிலைலதான் இன்னிக்கும் இருக்கீங்க… எந்த விதத்திலும் ஒரு முன்னேற்றமும் இல்ல… உங்கள நம்பி நான் எப்படி கழுத்த நீட்றது?”

 

“கரெக்ட்தான்… ஆறு வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தேனோ அதே மாதிரிதான் நான் இன்னிக்கும் இருக்கேன்… ஆனா நீ அப்படி இல்ல… படிச்சுட்ட… பெரிய ஆளா ஆயிட்ட… மாற்றம் இருக்கத்தானே செய்யும்….! என்னை மாதிரி ஆளையெல்லாம் எப்படி நம்புவிங்க…?” குதர்க்கமாக பேசினான்.

 

“இப்படி குத்தி பேசுற வேலையெல்லாம் வேண்டாம்… வாழ்க்கைல முன்னேற்றம் இருக்கனும்ன்னு சொல்றது தப்பா…?”

 

“தப்பு இல்லமா… தப்பே இல்ல… நல்லா பேசு… நீ என்ன பேசினாலும் கண்டுக்காம உன்னையே சுத்தி சுத்தி வருகிறவன்தானே நான்… எனக்கெல்லாம்  மரியாதை ஒரு கேடா…?”

 

“சும்மா கண்டதையும் பேசி என்னை குழப்பாதிங்க ஜீவா… கல்யாணத்துக்கு பிறகு குடும்பத்தை நடத்த பணம் வேணும்… என்ன செய்விங்க சொல்லுங்க…?”

 

“பணம்… பணம்… பணம்… ச்சை… இதை விட்டா உனக்கு வேற பேச்சே கிடைக்காதா… எனக்கும் ஒருத்தன் வேலை குடுக்காமலா போய்டுவான்… சம்பாரிச்சு தொலைப்பேன்டி… நீ என்னை நம்பிதொலை…” அவன் கோபத்தை அடக்க முயன்று தோற்றுவிட்டான்.

 

“இப்ப எதுக்கு நீங்க இவ்வளவு கோவப்படுரிங்க…? பணம் இல்லன்னா வாழ்க்கைல எதுவுமே இல்ல… அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க…”

 

“அப்போ… பணம் இல்லன்னா காதலும் இருக்காதா…?”

 

“நிச்சயமா இருக்காது… எப்படி ஜீவா இருக்கும்…? பணத்துக்காக தினம் தினம் போராடற நிலை வந்ததுன்னா காதல் எப்படி உயிரோடு இருக்கும்…?” அவள் நிதானமாக அவன் கண்களை பார்த்து கேட்டாள்.

 

“இருக்காதுன்னா எழுந்து போடி… நான் இவ்வளவுதான்… இப்படித்தான் இருப்பேன்… உனக்கும் எனக்கும் சரிப்படாது… நீ கெளம்பு…” என்று ஆத்திரத்தில் கத்தினான்.

 

அவள் கண்களில் திரண்ட நீருடன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து விருட்டென்று எழுந்தாள்.

 

“இன்னையோடு நம்ம உறவு முடிஞ்சிடுச்சு…” என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் நடந்தாள்.

 

‘போனா போடி… நீ இல்லன்னா என்னால வாழ முடியாத…?’ என்று குமுறியபடி அவனும் அவளை திரும்பி பார்க்காமல் அமர்ந்திருந்தான்.

# # #

இன்றோடு ஜீவன் புனிதாவிடம் பேசி மூன்று நாட்களாகிவிட்டது. இப்போது அவனுடைய கோபம் முழுவதும் போய்விட்டது. தான் கொஞ்சம் அதிகமாக கோபப்பட்டுவிட்டோம் எனபது கூட புரிந்தது. ‘என்னுடைய இயலாமையை நீ கூட புரிந்துகொள்ளவில்லை பம்கின்…’ என்கிற வருத்தம் மட்டும்தான் இப்போது இருக்கிறது.

 

ஆனாலும் அவன் அவளிடம் பேசவில்லை. இது போல் அவர்களுக்குள் சண்டை வருவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பல முறை ஜீவனுடைய வளர்ச்சிக்காக புனிதா அவனிடம் சண்டை போட்டிருக்கிறாள். யார் முதலில் சமாதானம் செய்வது என்கிற ஈகோ பார்க்காமல் இரண்டு மூன்று நாட்களில் எப்படியும் சமாதானம் ஆகிவிடுவார்கள்.

 

இந்த முறை புனிதாவே போன் செய்யட்டும் என்று ஜீவன் காத்திருந்தான். காரணம் அவள் அவனுடைய நிலைமையையும் மனநிலையையும் புரிந்து கொண்டு மீண்டும் வரட்டும் என்று காத்திருந்தான். அவள் வந்துவிடுவாள் என்று நம்பிக் கொண்டும் இருந்தான். ஆனால் நடந்தது வேறு…

# # #

“இதுதான்ம்மா மாப்பிள்ளையோட போட்டோ… பார்த்துட்டு பிடிக்குதான்னு சொல்லு…”

 

புனிதா தந்தை கொடுத்த படத்தை வாங்கி பார்த்தாள். மாப்பிள்ளை அழகாக இருந்தான். அந்த புகைப்படத்தோடு இணைக்கப்பட்டிருந்த காகிதத்தில் அவனை பற்றிய விபரங்கள் அனைத்தும் இருந்தன. படித்து பார்த்துவிட்டு “எனக்கு பிடிச்சிருக்குப்பா…” என்றாள் தெளிவாக.

 

“நாளைக்கு மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெண் பார்க்க வருவதா சொல்லி இருக்காங்கம்மா… நமக்கு ஓகேன்னா ஒரு மாசத்துல கல்யாணம் வச்சுக்கலாம்ன்னு சொல்றாங்க… நீ என்னம்மா சொல்ற?”

 

“எனக்கு சொல்றதுக்கு எதுவும் இல்லப்பா… உங்க விருப்பப்படி செய்ங்க…”

 

“சரிம்மா… மாப்பிள்ளை என்னோட ஓல்ட் ஸ்டுடென்ட்தான். ரொம்ப நல்ல பையன். நம்ம சைடுலேருந்து யோசிக்க வேண்டியது இல்ல… அவரும் உன்னை வெளிய எங்கையோ பார்த்திருக்காராம். ரொம்ப பிடிச்சிருக்காம்… அதனால நாளைக்கு வரும்போதே நிச்சயத்தையும் முடிச்சுக்கலாம்ன்னு நினைக்கிறேன்….”

 

“சரிப்பா…” என்று கலக்கமே இல்லாமல் தெளிவாக சொல்லி தந்தையை மகிழ்ச்சி படுத்தினாள் புனிதா.

 

அன்று ஜீவனிடம் பிரிவை சொல்லிவிட்டு வந்ததற்கு பிறகு காதல் தோல்வியின் வருத்தமோ… எதையோ இழந்துவிட்ட துயரமோ அவளிடம் சிறிதும் இல்லை. மாறாக அவளுடைய மனதில் ஒரு பெரிய விடுதலை உணர்வுதான் இருந்தது. ஏதோ பெரிய சிலந்தி வலையிலிருந்து தப்பிவிட்டார் போல் ஒரு நிம்மதி கூட வந்துவிட்டது.

 

அன்று இரவு முழுக்க ‘அப்படி அவனிடம் என்னதான் இருக்கிறது…! எதற்காக அவனை இத்தனை வருடம் காதலித்தோம்….?’ என்று சிந்தித்து பார்த்தாள்.

 

அவனுடைய அழகான உருவமும்… தைரியமும்… குறும்பு பேச்சும் ஏற்ப்படுத்திய ஈர்ப்பை… அவனுடைய வெற்றியில் மயங்கிய வயது கோளாறை… இனக்கவர்ச்சியை… காதல் என்று நினைத்து அவனிடமும் சொல்லிவிட்டாள். அந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தவளுக்கு அவனுடைய தொடர் தோல்வியை கண்டதும் காதல் பறந்துவிட்டது. ஆனால் ஒரு முறை காதல் என்று சொல்லிவிட்டதால் அந்த வாக்கை மீற முடியாமல் இத்தனை ஆண்டுகள் தவித்துக் கொண்டிருந்திருக்கிறாள். ஒரு முறை ஜீவன் கோபத்தில் பிரிவை சொன்னதும் அதையே உடும்பாக பிடித்துக் கொண்டு  தன்னுடைய வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாள்.

 

அடுத்த வாரமே மூக்கில் வேர்த்தது போல் அவளுடைய தந்தை ஒரு புகைப்படத்துடன் வந்துவிட்டார். இவளும் மறுக்காமல் சம்மதம் சொல்லிவிட்டாள். அவளுடைய வாழ்க்கையை சரியாக அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற பரபரப்பில் ஜீவன் என்கிற ஜீவனின் வாழ்க்கை தன்னால்தான் தடம் புரண்டது என்பதை சிந்தித்து பார்க்க மறந்துவிட்டாள்.
Comments are closed here.

error: Content is protected !!