மயக்கும் மான்விழி-8
4198
0
அத்தியாயம் – 8
“இராசா மகளானாலும் கொண்டவனுக்குப் பெண்டு தான்.”
சிதம்பரத்தைப் பார்த்ததும்…. “அப்பா….’ என்ற அலறலுடன் தந்தையைப் பாய்ந்தோடிக் கட்டிக் கொண்டாள் மான்விழி. சிதம்பரமும் மகளின் கண்ணீரில் கரைந்து போனார்.
“அம்மாடி… ஒன்னுமில்லடா… பயப்படாத… இவங்கல்லாம் நம்ம சொந்தக்காரவங்கதான்டா… எல்லாரும் நமக்கு வேண்டியவங்கதான்… பயப்பட எதுவுமில்ல தாயி… கண்ணத் தொட… தொடச்சுக்க…” என்று கண்ணீருடன் மகளுக்குத் தைரியம் சொன்னார்.
மகளுக்கு முன் ருத்ரனின் குடும்பத்தை விட்டுக் கொடுக்காமல் தாங்கிப் பேசினார்.
“பெரியவீட்டுல வாழ்க்கப்பட நீ குடுத்து வச்சிருக்கணும் தாயி… என்ன ஒன்னு… மாப்ள என்னுகிட்ட நேரடியா கேட்டிருந்தா நானே செறப்பா கல்யாணத்தப் பண்ணி வச்சிருப்பேன்… அவசரப்பட்டுட்டாரு… அதுனால ஒன்னும் இல்லம்மா.. நீ கலங்காத…”
“இவங்கதான் உன்னோட அத்த.. மாப்ளையோட அம்மா… இதோ.. இந்த ஆத்தா தான் மாப்ளையோட ஆச்சி… இனி உனக்கும் ஆச்சி…” என்று அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் மகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
அப்போதும் முகம் தெளியாத மகளைத் தனியாக அழைத்துச் சென்று பெற்றவரும் சித்தப்பாக்களும் பேசினார்கள்.
“என்னம்மா இன்னமும் கொழப்பமா இருக்க…?”
“அந்தாளு எதுக்குப்பா என்ன கல்யாணம் பண்ணினாரு…? ஏதோ நீங்க ஊர வாழவிடாமப் பண்றிங்கன்னு சொன்னாரே…!” என்றாள்.
மகளின் கேள்வியைக் கேட்டதும் சிதம்பரம் சிவாஜிகணேசனாக மாறிவிட்டார். ‘அடப்பாவிப் பாயலே… இதுதான் உண்மையான காரணமாடா…? பொண்ணக் கடத்திட்டு வந்து தாலிக் கட்டின நிமிஷத்துக்குள்ள எம்பொண்ணுகிட்ட என்ன பத்தித் தப்பாச் சொல்லி அவளப் பயமுறுத்திட்டியேடா…’ என்று தனக்குள் பொங்கிய எரிச்சலை வெளியே காட்டாமல்,
“அது சும்மா வயக்காட்டுப் பிரச்சனம்மா… அதெல்லாம் அப்பா சரி பண்ணிடறேன். நீ பயப்படாம இருக்கணும்டா…” என்று சாதாரணமாக மகளுக்குத் தைரியம் சொன்னார்.
சித்தப்பாக்களும் தங்கள் அண்ணனுக்கு ஒத்தூதினார்கள். ருத்ரனை விடச் சிறந்த ஆண்மகன் இந்த உலகிலேயே இல்லை என்பது போல் உயர்த்திப் பேசினார்கள். அவன் தங்களுக்கு மாப்பிள்ளையானது தங்களின் பாக்கியம் என்று பூரித்தார்கள். ருத்ரனுடனான அவளுடைய வாழ்க்கை ஓஹோவென்றிருக்கும் என்று ஆனந்தப்பட்டார்கள்.
‘மகளின் விருப்பம் இல்லாமல் நடந்த ஒரு கடத்தல் கல்யாணத்தில் பெற்றவர்கள் இவ்வளவு மகிழமுடியுமா…!’ மான்விழிக்குத்தான் குழப்பமாக இருந்தது. ஆனால் சிதம்பரம் சகோதரர்களுக்கு வேறு வழியில்லை.
இராசா மகளானாலும் கொண்டவனுக்குப் பெண்டு தான் என்று நினைத்தவர்கள் மகளின் வாழ்க்கை இதுதான் என்று ஆகிவிட்ட பிறகு அவளை எந்தவிதத்தில் மூளைச்சலவைச் செய்து அந்த வாழ்க்கைக்குத் தயாராக வேண்டும் என்பதைப் புரிந்து மான்விழியை மனதளவில் தயார் செய்தார்கள்.
ஆரம்பத்தில் “நான் இங்கு இருக்கமாட்டேன்… உங்களோடு வந்துவிடுகிறேன்… என்னையும் நம் வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்…” என்று அழுது அடம்பிடித்த மான்விழி… தந்தை மற்றும் சித்தப்பாக்களின் இரண்டு மணிநேர ஓதலுக்குப் பின் ஓரளவுச் சமாதானமாகி அழுகையை நிறுத்திவிட்டு அந்த வீட்டில் தங்குவதற்கு அரைமனதுடன் சம்மதித்தாள்.
காரணம், அவளுக்குச் சுயமாக எந்த முடிவும் எடுத்துப் பழக்கம் இல்லை. விருப்பமிருந்தாலும் இல்லையென்றாலும் பெற்றவர்கள் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தே பழகிவிட்டதால் இந்தமுறையும் தன்னுடைய விருப்பத்தைத் துறந்துவிட்டுத் தந்தையின் முடிவை ஏற்றுக்கொண்டாள். ஆனால் ருத்ரனை மட்டும் அவளால் மன்னிக்கவே முடியவில்லை…
# # #
கல்யாணம்தான் திடுமென நடந்துவிட்டது… மற்றச் சடங்குகளெல்லாம் முறையாக நல்லநாள் பார்த்து நடத்தவேண்டும் என்பதற்காக ஐயரை அழைத்து நல்லநாளைக் குறித்து வாங்கிக் கொண்டார்கள் அந்த வீட்டுப் பெரியவர்கள். திருமணம் நடந்த நாளிலிருந்து அடுத்த ஐந்தாவது நாள் அமோகமான நாள் என்று ஐயர் சொல்லிவிட்டுப் போய்விட்டார். அன்றே ஊருக்கும் உறவினருக்கும் விருந்துக் கொடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
மான்விழிக்கு ஒவ்வொரு நொடியும் யுகமாகக் கழிந்தது அந்த வீட்டில். ஒரு பிடி உணவுக் கூடத் தொண்டையை விட்டு இறங்க மறுத்துச் சண்டித்தனம் செய்தது. எதிரியின் வீட்டில் வசிப்பது போல் ஓர் அசௌகர்யம் அவளை ஆட்டிப்படைத்தது. வேதனைக்குரிய தன் நிலையை மறப்பதற்காகத் தன்னைச் சுற்றி நடப்பவைகளில் கவனத்தைச் செலுத்தினாள். பல அதிசயங்கள் அவள் கண்ணில் புலப்பட்டன.
தூக்கம் வராமல் அதிகாலையிலேயே விழித்துப் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கும் மான்விழி நான்கு மணிக்கெல்லாம் ஜன்னல் வழியாகக் கீழே நடப்பவைகளை வேடிக்கைப் பார்ப்பாள்.
அந்த வீட்டின் மூத்த மருமகள் ராஜேஸ்வரி சாணம் தெளித்து… கூட்டிப் பெருக்கி… வாசலையடைத்துப் போடும் மாக்கோலம் கண்ணைக் கவரும்.
ருத்ரனின் அறை பால்கனியில் நின்று பார்த்தால் கடைக்கோடியில் இருக்கும் மாட்டுத்தொழுவத்தைப் பார்க்கமுடியும். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் மாட்டுத் தொழுவம் சுத்தம் செய்யப்பட்டு ஊதுபத்தி ஏற்றப்பட்டிருக்கும் வாசம் இவள் மூக்கைத் துளைக்கும்.
ஆறு மணிக்கெல்லாம் வேலைக்காரர்கள் முதல் வீட்டு ஆட்கள் வரை அனைவருக்கும் ஒரே தரத்தில் மணக்கும் காப்பி விநியோகிக்கப்படும்.
அவளுடைய பிறந்த வீடும் ஒரு விவசாயக் குடும்பம்தான். இவர்கள் அளவு இல்லையென்றாலும் அவர்களுக்கும் ஏக்கர் கணக்கில் நிலம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அங்குத் தோட்டவேலைச் செய்பவர்களுக்கு வீட்டில் சாப்பாடு கிடையாது. அவரவர் எடுத்துக் கொண்டு வந்துவிட வேண்டும். அவளுக்குத் தெரிந்து அந்தக் கிராமத்தில் எல்லோருமே அந்த முறையைத்தான் பின்பற்றினார்கள். ஆனால் ருத்ரனின் வீடு மட்டும் வித்தியாசமாக இருந்தது.
இங்கு வீட்டைச் சுற்றியிருக்கும் பெரிய தோட்டத்தில் வேலைச் செய்ய வரும் இருபதிலிருந்து முப்பது வேலைக்காரர்களுக்குத் தினமும் வீட்டில்தான் சமைப்பார்கள். கொள்ளைப்புறம் மண்ணில் அடுப்பைக் கட்டிப் பெரிய பேரல் போலப் பாத்திரங்களை வைத்துத் தினமும் சமையல்காரர்கள் வைதேகியின் மேற்பார்வையில் சமையல் செய்வார்கள். முதலாளி சாப்பிடும் அதே சத்தான உணவைச் சுடச்சுட தொழிலாளியும் சுவைப்பான்.
“இன்னைக்குப் பழைய சோத்துக்குத் தொட்டுக்க ஒன்னும் கொண்டாரல… எதுனாச்சும் இருந்தாக் குடு தாயி…” என்று கேட்கும் தன் வீட்டு வேலைகாரர்களுக்கு முதல்நாள் மீந்துப்போன பழைய குழம்பைக் கொடுக்கும் தன் தாயை விட வைதேகி உயர்ந்தவளாகத் தெரிந்தாள்.
வேலைக்காரர்களை அதட்டி வேலை வாங்கும் பீமனும் தேவனும் அதே வேலைக்காரர்களுக்காகப் பாட்டியிடம் பரிந்துகொண்டு வரும்பொழுது வேறு மனிதர்களாக மாறிவிடுவார்கள். அவர்களுக்கு முன் வேலைக்காரர்களை மனிதர்களாகவே நடத்தாத தன் தந்தை மிகவும் தாழ்ந்திருப்பதாகத் தோன்றியது அவளுக்கு.
அடுத்தவர்களின் மீதான அக்கறையைக் கூட அதட்டலுடன் காட்டும் வள்ளி பாட்டி… அனைவரையும் அன்பிலேயே குளிப்பாட்டும் வைதேகி… எப்பொழுதும் கிண்டலும் கேலியுமாக இருக்கும் ராஜேஸ்வரி… கபடமில்லாத அவளுடைய இரு பெண் குழந்தைகள்… பொறுப்பான பீமன் மற்றும் தேவன்… என்று அந்த வீட்டில் ருத்ரன் ஒருவனைத் தவிர அனைவருமே நல்லவர்களாகத் தெரிந்தார்கள்.
பாட்டியிடம் இருக்கும் ஆளுமையும் அக்கறையும் அந்த வீட்டில் இருக்கும் நண்டு சிண்டுகளுக்குக் கூட இருந்தது அவளை வியக்க வைத்தது.
அவன் ஒருவன் மட்டும் இல்லையென்றால் இந்த வீடு சொர்க்கம்தான் என்று நினைத்தபடி நாட்களைத் தள்ளினாள். நான்கு நாட்கள் கழிந்து ஐந்தாவது நாள் விடிந்துவிட்டது… இடைப்பட்ட நாட்களில் ஒரே வீட்டில் இருந்தாலும் மான்விழி ருத்ரனைக் கண்ணால் கூடப் பார்க்கவில்லை. எப்போது வீட்டிற்கு வருகிறான் போகிறான் என்பதே தெரியவில்லை. இரவில் கூட வயலிலேயே தங்கிவிட்டான் போலும்…
‘இப்படியே அவன் நம் கண்ணில் படாமலே இருந்து தொலைத்தால் நிம்மதி…’ என்கிற அவளுடைய எண்ணத்தைப் பொய்யாக்குவது போலக் கதவைப் ‘படார்…’ என்கிற சத்தத்துடன் திறந்துகொண்டு அவள் இருந்த அறைக்குள் நுழைந்தான்.
அவள் அவனுடைய வேகத்தில் லேசாக அதிர்ந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் அலட்சியமாகக் கையிலிருந்த பழைய குமுதத்தைப் பத்தாவது முறையாகப் புரட்டினாள்.
“ஏய்… என்னடி… திமிரா…?” அவன் பல்லை நறநறவெனக் கடித்தபடிக் கேட்டான்.
“யாருக்குத் திமிரு…? எனக்கா…!” அவளும் எதிர்கேள்விக் கேட்டாள்.
“மணி பதினொன்னாகப் போகுது… இன்னும் கொஞ்சநேரத்துல எல்லாரும் வர ஆரம்பிச்சிடுவாங்க… நீ என்னடான்னா இப்படி உக்காந்துருக்க… இதுக்குப் பேரு திமிருல்லாம வேற என்ன…?” எரிச்சலுடன் கேட்டான்.
அவனும் என்ன செய்வான் பாவம்… வெளியூரில் இருந்த சொந்தபந்தங்கள் எல்லோரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்… சுற்றுவட்டாரத்தில் பழக்கப்பட்ட அனைவருக்கும் முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது… ஊரில் உள்ள அனைவரும் ஒன்றாகத் திரளப் போகிறார்கள். எளிமையாக நடந்து முடிந்த ருத்ரனின் திருமணத்திற்கு… ஆடம்பரமான விருந்து ஏற்பாடுச் செய்யப்பட்டிரும் போது, அந்த விழாவின் நாயகி குளிக்காமல், தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல்… பஞ்சத்தில் அடிபட்டவள் போல் அமர்ந்திருந்தால் யாருக்குத்தான் கடுப்பாகாது.
“ஏன்டி… அம்மாவும் ஆச்சியும் கிளிப்பிள்ளைக்குச் சொல்ற மாதிரி சொல்றாங்களாம்… நீ… சொல்லச் சொல்லக் கேக்க மாட்டேங்கிறியாம்… என்ன சங்கதி…? ” அவன் கோபத்தை அடக்கிக் கொண்டு பொறுமையாகக் கேட்டான்.
“இந்த மெரட்டல்லாம் என்னுகிட்டே வேண்டாம்… இங்க நடந்திருக்கிற கல்யாணத்துக்கு விருந்தெல்லாம் ஒரு கேடா…? எனக்கு இதெல்லாம் சுத்தமாப் பிடிக்கல… நான் இந்த ரூம விட்டு வெளிய வரமாட்டேன்… விருந்துக்கு வர்றதுங்களுக்கு நல்லா ஆக்கிப் போடுங்க… கொட்டிக்கிட்டுக் கெளம்பட்டும்…” வெறுப்பாகப் பேசினாள்.
“ஓங்கி ஒன்னுக் குடுத்தேன்னு வச்சுக்க… மூஞ்சி மொகரையெல்லாம் பேந்துரும் ஜாக்ரத… என்ன…? ஊர்க் கூடுன சபைல என்ன அவமானப்படுத்தலாமுன்னு நெனக்கிறியா…? தொலைச்சிடுவேன்… தொலைச்சு…” அவன் சுட்டுவிரலை அவள் முகத்துக்கு நேராக நீட்டி எச்சரித்தான்.
“ஹும்…” என்று அவள் அலட்சியமாக முகம் திருப்பினாள்.
“ஏய்… என்னடி நொடிக்கிற…? நீ வந்து சபைல உக்காரலன்னா ஒன்னும் குடி முழுகிடாது… இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு விருந்தாளிங்க வர்றதுக்கு… அரை மணிநேரத்துல வீடு பூந்து உந்தங்கச்சியத் தூக்கிட்டு வந்து… தாலியக் கட்டிச் சபைல உக்கார வச்சிருவேன்… உன்ன தூக்க முடிஞ்ச எனக்கு உந்தங்கச்சியத் தூக்க முடியாதா…? பாக்குறியா… தூக்கிக் காட்டட்டுமா…? சொல்லுடி…”
அவனுடைய குரலில் இருந்த தீவிரம் அவளை உலுக்கியது. அவள் செயலிழந்துப் போனாள். அவன் முகத்தைப் பார்த்தபடியே நின்றாள்.
“பத்து நிமிஷத்துல திரும்ப வருவேன்… குளிச்சுட்டு… இந்தப் பட்டுப்புடவை… நகையெல்லாம் போட்டுக்கிட்டுத் தயாரா இருக்கணும்… இல்லன்னா நான் மனுஷனா இருக்கமாட்டேன்…” என்று மிரட்டிவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினான். அவள் கண்களில் தெரிந்த பீதி அவள் தயாராகப் பத்துநிமிடம் கூடத் தேவையில்லை என்பதை அவனுக்குச் சொன்னது.
‘இப்ப மட்டும் என்ன மனுஷனாவா இருக்க… கொள்ளிவாய்ப் பிசாசு மாதிரி கண்ணுல நெருப்பப் பறக்கவிட்டுக்கிட்டுப் பேசுற ராட்சச ஜென்மம்தானடா நீ… போயும் போயும் உன்னோட என்ன கூட்டுச் சேர்த்தானே இந்த ஆண்டவன்…! எல்லாம் என் தலைவிதி…’ என்று நொந்து கொண்டே குளியலறைக்குள் நுழைந்தாள்.
# # #
அந்தக் கிராமத்து திருமணவிருந்து பட்டிணங்களில் நடக்கும் திருமண வரவேற்பு போல் அல்லாமல் வித்தியாசமாக நடந்துமுடிந்தது. நடுவீட்டில் இருந்த சோபா செட், ஊஞ்சல் போன்ற பெரிய பொருட்களை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டு விசாலமான கூடம் தயார்ப்படுத்தப்பட்டிருந்தது. மணப்பெண் போல் அலங்கரிக்கப்பட்ட மான்விழி அந்தக் கூடத்தின் நடுவில் வீற்றிருக்க அவளைச் சுற்றி நெருங்கிய உறவுக்கார பெண்கள் அமர்ந்திருந்தார்கள். விருந்துக்கு வந்த அனைத்துப் பெண்களும் மான்விழியை வந்து சந்தித்து வாழ்த்துச் சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
ருத்ரன் பட்டுவேட்டிச் சட்டையில் வெளியே விருந்துக்காகப் போடப்பட்டிருந்த பெரிய பந்தலில் ஆண்களுடன் பேசிக்கொண்டும்… வருபவர்களை வரவேற்றுக் கொண்டும் இருந்தான். விருந்துக்கு வந்திருந்த பொட்டுப் பொடுசெல்லாம் பந்தலில் வைக்கப்பட்டிருந்த வெற்றிலைப்பாக்குத் தட்டில் இருந்த நிஜாம் பாக்கை ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்…
ஓர் ஆட்டு மந்தையையும்… கோழிப் பண்ணையும் விருந்துக்குப் பலியாக்கி… மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, சிக்கன் கிரேவி, சிக்கன் 65, இரத்தப் பொரியல், குடல் கூட்டு, மூளை வறுவல், முட்டை அவியல் என்று அசைவ விருந்து அமர்க்களப்பட்டது.
“சைடு டிஷ் இங்க இருக்கு… மெயின் எங்கப்பா…?” என்று கேட்கும் ஆண்களுக்கு வீட்டை ஒட்டியிருக்கும் தென்னந்தோப்பை கைகாட்டினார்கள் பீமனும் தேவனும். அங்கு வேறு தனியாகத் தள்ளாடும் தண்ணி பார்ட்டி நடந்து கொண்டிருந்தது.
இதுதான் கிராமத்தில் விருந்தைக் கொண்டாடும் முறையென்றாலும் அன்று அந்த வீட்டில் கூடியிருந்த மக்கள் வெள்ளம் அந்த விருந்தின் பிரம்மாண்டத்தைப் பறைசாற்றியது.
ஒரேயொரு விஷயம் மட்டும் மான்விழிக்குப் புதிராக இருந்தது… அவளுக்குத் தெரிந்துத் திருமணம் முடிந்துப் பெண் வீட்டுக்காரர்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு விருந்திற்கு வரும்பொழுது பெண்ணுக்குச் செய்ய வேண்டிய சீர்வரிசை அனைத்தையும் லாரியில் ஏற்றிக்கொண்டு வந்து சபையில் இறக்குவார்கள். ஆனால் இங்கு அது போல் எதுவும் வரவில்லை. சிதம்பரம் அவருடைய உறவினர்களை மட்டும்தான் திரட்டிக் கொண்டு வந்திருந்தாரே தவிர சீர் எதுவும் கொண்டு வரவில்லை…
‘இந்த மண்ணாங்கட்டி மாப்பிள்ளைக்குச் சீர் ஒரு கேடா… என்று அப்பா நினைத்திருப்பார்…’ என்று மான்விழி கற்பனைச் செய்து கொண்டாள்.
ஆனால் அதிலும் ஒரு குழப்பம் இருந்தது. விருந்துக்கு வந்திருந்த மான்விழியின் தாய், தங்கை மற்றும் உறவினர்கள் மாப்பிள்ளை வீட்டைக் கொண்டாடினார்கள். அவளை அதிஷ்டக்காரி என்றார்கள். சிலர் பொறாமையில் வெந்தார்கள். சிலர் மகிழ்ச்சியில் பூரித்தார்கள். ஆக மொத்தம் எல்லோர் மனத்திலும் கிடைப்பதற்கரிய பொக்கிஷம் மான்விழிக்குக் கிடைத்துவிட்டது என்கிற எண்ணம் நிரம்பியிருந்ததை அவளால் உணரமுடிந்தது. அப்படி இருக்கும்போது, ‘மாப்பிள்ளைக்குச் சீர் ஒரு கேடா என்று அப்பா எப்படி நினைத்திருப்பார்…?’ என்கிற குழப்பத்திற்கு அவளுக்கு விடை கிடைக்கவில்லை.
அன்று அந்தச் சபையில் சீர்வரிசை வந்து இறங்காததற்குக் காரணம் சிதம்பரம் இல்லை, ருத்ரன் தான் என்று தெரிந்தால் அவள் எப்படி ரியாக்ட் செய்திருப்பாளோ தெரியாது.
மாலை மயங்கியதும் கூடியிருந்த மக்கள் வெள்ளம் கரைந்தது. விருந்து என்கிற பெயரில் இவர்கள் அடித்த கூத்தில் மான்விழி வெகுவாகக் களைத்துப் போயிருந்தாள். அத்தோடு அவளைவிடாமல் அன்றிரவே அவள் தலையில் அடுத்த அணுகுண்டையும் தூக்கிப் போட்டார்கள்.
“மானு… குளிச்சிட்டுத் தலைய சீவி இந்தப் பூவ வச்சுக்கம்மா… புதுசா சாதா சீல எதுனாச்சும் இருந்தா அதக் கட்டிக்க…” மான்விழியுடன் அன்று தங்கிவிட்ட அவளுடைய மாமன் மனைவி சொன்னாள்.
“தூங்கப் போறப்ப எதுக்கு மாமி இவ்வளவு பூ… வை நாளைக்கு வச்சுக்குறேன்… அதோட ஒரு நாளைக்கு ஒருதரம் குளிச்சா பத்தாதா… சும்மா சும்மா குளிகுளின்னு… போ மாமி…” என்றுவிட்டுக் கட்டிலில் சுருண்டுப் படுத்துக் கொண்டாள்.
அவளைக் கெஞ்சிக் கூத்தாடிக் குளிக்க அனுப்பினாள் அந்தப் பெண். அவள் குளித்து முடித்து மீண்டும் அறைக்குள் நுழையும்பொழுது அந்த அறையே மாறியிருந்தது. தேவையில்லாத பொருட்களெல்லாம் அப்புறப்படுத்தப்பட்டிருந்தது. கட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சிறு டீப்பாயில் பழங்களும் இனிப்பு வகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
“மாமி… என்ன இதெல்லாம்…!” அவள் அதிர்ந்து போய்க் கத்தினாள்.
“ஏய்… ஷ்… ஷ்… எதுக்கு இப்புடிக் கத்துற…? மெதுவாப் பேசு மானு…”
“என்ன மாமி பண்ணுற இங்க… இதெல்லாம் எதுக்கு இப்ப…?”
“என்னா எதுக்கு…? நீ என்ன சின்னப் புள்ளையா…? இந்த ஏற்பாடெல்லாம் இப்பப் பண்ணாம வேற எப்பப் பண்ணுறது….? பேசாமத் தலையச் சீவிப் பூவ வச்சுகிட்டு லேசா பௌடர பூசிக்க. கண்ணுக்குத் தெரியிற மாதிரி நல்லா பெரிய பொட்டா வச்சுக்க…” என்று அதட்டலாகப் பேசி மான்விழியை அடக்கினாள்.
எதிர்த்து வாதாடிய இளையவளின் பேச்சு மாமியிடம் எடுபடவில்லை. தோற்று போனவளாய் அலங்காரம் செய்து கொண்டு ‘உம்’ என்ற மூஞ்சியுடன் அமர்ந்திருந்தாள்.
கதவுத் திறக்கும் சத்தம் கேட்டது. அவள் கால்கள் தானாக எழுந்து நின்றன. உள்ளே வந்தது ருத்ரன்தான். எப்பொழுதும் அவன் முகத்தில் அவள் காணும் கடுகடுப்பை இப்போது காணவில்லை. மாறாக ஒரு கனிவு. அதிலும் ஒரு கம்பீரம்.
“உக்காரு… உக்காரு… ஏன் நிக்கிற…?” அதட்டலான அக்கறை.
அவள் கட்டிலின் விளிம்பில் அமர்ந்தாள். இதயம் படபடவென அடித்துக் கொண்டது. அவனிடம் எந்தப் படபடப்பும் தெரியவில்லை.
கதவை அடைத்துவிட்டதால் இறுக்கமாக உணர்ந்தவன் இயல்பாக அவன் அணிந்திருந்த வெள்ளைச் சட்டையைக் கழட்டி ஹாங்கரில் மாட்டிவிட்டு பனியனுடன் காற்று வாங்க காற்றாடிக்குக் கீழே வந்து அமர்ந்தான். அது அவளுக்கருகில் அமரும்படி ஆகிவிட்டது.
மூச்சுமுட்ட அவள் சட்டென எழுந்தாள். முகத்தில் அடி வாங்கியது போன்ற உணர்வில் அவனுடைய முகம் சுருங்கியது.
“என்ன ஆச்சு…?” பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு கேட்டான்.
“உங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா…? ஏன் இப்படி இருக்கீங்க…?”
“ஏன்…? நான் என்ன செஞ்சேன்…?” அவன் புரியாமல் கேட்டான்.
“கல்யாணத்துல தான் என்னோட விருப்புவெறுப்புக்கு மதிப்பு இல்லாமப் போச்சு… மற்றதுக்காவது என்னோட விருப்பத்தக் கேக்கலாம்ல… இந்தக் கருமத்துக்கெல்லாம் இப்ப என்ன அவசரம்…?”
“கல்யாணமுன்னு ஒன்னு நடந்தா இதெல்லாம் இருக்கத்தான் செய்யும்… இதெல்லாம் இல்லாம இங்க என்ன பொம்மக் கல்யாணமா நடந்திருக்கு…?” அவன் கடுப்புடன் கேட்டான்.
“ஆமா… குண்டாக்கட்டியா பொம்ம மாதிரிதானே என்ன தூக்கிட்டு வந்து தாலிக் கட்டுனிங்க… அப்பறம் இதுக்குப் பேரு பொம்மக் கல்யாணம் இல்லாம காதல் கல்யாணமா…?”
“இங்க பாரு மான்விழி… நாம ரெண்டு பேருமே விரும்பி இந்தக் கல்யாணத்தப் பண்ணிக்கல. ஆனாலும் நடந்த கல்யாணம் நடந்ததுதான்… நாம ஒன்னா சேர்ந்து வாழ்ந்துதான் ஆகணும். மாத்து வழியே கெடையாது…” பக்குவமாக எடுத்துச் சொல்ல முயன்றான்.
“எனக்கு உங்களச் சுத்தமா பிடிக்கல…” அவள் எடுத்தெறிந்துப் பேசினாள்.
“எனக்கும்தான் உன்ன ஆரம்பத்துல பிடிக்கல… இப்போ, பிடிக்கிற மாதிரி என்னோட மனச மாத்திக்கிட்டேன். நீயும் மாத்திக்க… எல்லாம் பிடிக்கும்…” மீண்டும் அவனுடைய பேச்சில் அலட்சியம் திரும்பியிருந்தது.
“நா இவ்வளவு தூரம் சொல்றேன்… புரிஞ்சுக்கவே மாட்டிங்களா…?” என்று அவள் எரிச்சலுடன் பொறியும் பொழுது “புரிஞ்சுக்கணுமுன்னுதான் நெனக்கிறேன்… நீ எங்க விடுற…?” என்றபடி அவன் அவளை நெருங்கிக் கொண்டிருந்தான்.
“இ… இங்…க பாருங்க… வே… வேண்டாம்… சொல்லிட்டேன்… அப்… அப்புறம் நா… நா என்ன செய்வேன்னு எனக்கே தெ… தெரியாது…” அவள் மிரட்டலாகப் பேசிக் கொண்டே பதட்டத்துடன் பின்னடைந்தாள்.
இப்போது அவன் மீசைக்குளிருந்து லேசான சிரிப்பு எட்டிப்பார்த்தது… அதோடு அவன் கால்கள் அவளை நோக்கிப் பயணித்தன…
“சரி.. சரி… இருங்க… நா… நா… மனச மாத்திக்கணும்ல… அதுக்குக் கொஞ்சம் டைம் குடுக்கலாம்ல…” மானரோஷத்தை விட்டுக் கெஞ்சிவிட்டாள்.
அவளுடைய கெஞ்சலை அவன் மதிக்கவில்லை. பின்னடைந்துச் சுவரில் இடித்துக்கொண்டு விழித்தவளைத் தன்னுடைய இருகரங்களையும் சுவற்றில் ஊன்றிச் சிறைச் செய்தான்.
அவனுடைய செயலில் அதிர்ந்தவள் அடுத்து என்ன நடக்குமோ என்கிற பீதியில் விழித்தாள். அவளுடைய கண்களை ரசனையுடன் பார்த்தவன்,
“உனக்கு எம்மாமனாரு பொருத்தமான பேருதான்டி வச்சிருக்காரு…” என்றவன்… “மா…ன்…வி…ழி…” என்று அவளுடைய பெயரை ஒருமுறை அனுபவித்து உச்சரித்துவிட்டு “மயக்கும் மான்விழி…” என்றான் புன்னகையுடன்.
அவள் அவனை விசித்திரமாகப் பார்த்தாள்.
ஒரு கரத்தைச் சுவற்றிலிருந்து எடுத்து ஒற்றை விரல் கொண்டு நெற்றி காது கன்னம் எனக் கோலமிட்டபடி,
“மூக்கு முழியெல்லாம் நல்லாத்தான் இருக்கு… இந்த வாய்தான் கொஞ்சம் ஓவரா பேசுது… என்ன பண்ணலாம்…” என்று கேட்டு அவளை நடுங்க வைத்தான்.
இதழ்களை இறுக்க மூடி, விழிவிரித்துக் கண்களில் பயத்தைக் காட்டியவளைப் பார்த்துக் கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாகச் சிரித்தவன், அன்பாக அவள் கன்னத்தில் தட்டிப் “போய்த் தூங்கு” என்று அவளை விடுதலைச் செய்தான்.
குடுகுடுவென அவனிடமிருந்து விடுபட்டு அறையின் மறுகோடிக்கு ஓடியவள் அதுவரை அவஸ்த்தையுடன் அரைகுறையாக எடுத்துக் கொண்டிருந்த சுவாசத்தை ஆழமாக எடுத்துத் தன்னைச் சமன்படுத்திக் கொண்டாள்.
அவன் தன்னுடைய படுக்கையைத் தரையில் விரித்துப் படுத்து நிமிடத்தில் உறங்கிவிட்டான்.
Comments are closed here.