Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-10

அத்தியாயம் – 10

இறைவனின் சொந்த ஊர்… இயற்கையரசியின் வாசஸ்தலம்… கடல் மட்டத்திலிருந்து ஆயிரத்து அறநூறு மீட்டர் உயரத்தில் எழில் வாய்ந்த அழகிய மலை பூமி… முத்தரப்புழா, நல்லதண்ணி, குண்டலா ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் மூணாறு எனும் பசுமை நகரத்தை நோக்கி… வளைந்து நெளிந்து ஓடும் மலைப்பாதையில் அந்தச் சாம்பல் நிற இன்னோவா தவழ்ந்து ஏறிக் கொண்டிருந்தது.

 

சடசடவென்று பெய்து ஓய்ந்த மழையால் ஈரம் பூத்திருந்த ஜன்னல் கண்ணாடியின் வழியே கலங்கலாகத் தெரிந்த பசுமை அழகை லயித்து ரசித்த மதுமதி… தன் மடியில் அமர்ந்திருந்த குழந்தை, கண்ணாடியைத் தொட்டுப் பார்த்துச் சிரிக்க… பிஞ்சு கைபட்ட தடத்தின் வழியே தெளிவாய்த் தெரிந்த இயற்கையின் கொள்ளை அழகை மனம் சிலிர்க்க ரசித்துப் பார்த்தாள்.

 

வானத்தைத் தொட்டுப் பேசும் உயரம் வளர்ந்த பிறகும், பச்சை வெல்வெட் விரிப்பிற்குள் மறைந்து கொண்டு… வெண்பனி முகிலோடு ஒளிந்து பிடித்து விளையாடுவது போல்… பசுமையான மலையும் பஞ்சு போன்ற மேகக் கூட்டங்களும் ஒன்றையொன்று தீண்டி விளையாடும் அழகு அவள் இதயத்தைத் தீண்டியது.

 

சின்ன இடைவெளியில் தெரிந்த கொள்ளை அழகிற்கும், அதை முழுமையாகத் தனக்குள் சேகரிக்கும் பேராவல் கொண்ட தன் மனதிற்கும் இடையே… பார்வையால் பாலம் போடும் ஆர்வத்தில் ஜன்னல் கண்ணாடியை இறக்கியவளின் முகத்தில் மோதிய சில்லென்ற குளிர்காற்று அவள் நெஞ்சாங்குழி வரை சென்று குளிரச் செய்தது.

 

தாயின் பராமரிப்பில் ஆரோக்கியமான சூழ்நிலையில் வளரும் புஷ்டியான குழந்தைகளைப் போல் சாலையின் இருபக்கமும் ஓங்கிச் செழித்து வளர்ந்திருந்த காட்டு மரங்களின் முரட்டுத் தோற்றத்தோடும்… அதன் இலைகளின் மீது முத்து முத்தாய் ஜொலித்துக் கொண்டிருந்த மழைத்துளிகளோடும்… கார்முகிலனையும் தன்னையும் ஒப்பிட்டுப் பார்த்தவளுக்கு, பழைய நினைவுகளின் தாக்கத்தால் சிரிப்பில் கண்கள் சுருங்கி இதழ்கள் விரிய… முகம் சிவந்தது.

 

யதார்த்தமாய் மனைவியின் பக்கம் திரும்பிய கார்முகிலன் பிரம்மித்தான். அகத்திலிருந்து பொங்கிவரும் புன்னகை அவள் முகத்தைப் பௌர்ணமி நிலவாய் மாற்ற… காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு இமைதட்டும் நொடி கூட வீணோ என்றெண்ணி கண்ணிமைக்காமல் குதூகலத்தோடு காதல் மனைவியின் முகம் நோக்கினான்.

 

இருக்காதா பின்னே…! மனதார அவனிடம் நெருங்கி, தன் எண்ணங்களையும் உணர்வுகளையும் பகிர்ந்து கொள்ளாமல்… அவனிடம் எதையும் எதிர்பார்க்காமல்… அவனுடைய காதலை நம்பாமல்… உயிர்ப்பற்ற வாழ்க்கை வாழும் மனைவியை மனம்விட்டுப் பேசவைக்க… அவள் மனதை ஆறுதலடைய வைக்க இயற்கையையும், அதன் சக்தியையும் நம்பி இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்தவனுடைய கணக்குச் சரியாக வேலை செய்யத் துவங்கியுள்ளதே…! பிறகு அவன் குதூகலத்திற்கு என்ன குறை..?

 

துள்ளும் மனதோடு கேமராவை எடுத்து இயற்கையோடு சேர்த்து அதை ரசிக்கும் மனைவியின் முகபாவங்களையும் பதிவு செய்தான். ‘கிளிக்’ என்ற கேமராவின் சத்தம் கேட்டு, கணவன் பக்கம் திரும்பிப் பார்த்தவள் “நல்ல வியூவ் இல்ல…” என்று புன்னகையோடு கேட்டாள்.

 

அவள் முகத்திலிருந்து பார்வையை விலக்காமல் தலையை மட்டும் அசைத்து ‘ஆமாம்’ என்றான்.

 

“இறங்கி போய்ப் பார்க்கலாமா?” – ஆசையோடு கேட்டாள்.

 

“ம்ஹும்… மழை டைம்…. லீச் ப்ராப்ளம் இருக்கும்…” என்று சொல்லிவிட்டு காரைக் கிளப்பினான்.

 

‘ஹோ’வென்ற இரைச்சலும்… காற்றில் ஈரப்பதமும் அதிகரித்துக் கொண்டே இருக்க, “இன்னும் கொஞ்ச தூரத்துல சீயப்பாரா(சூச்சிபாரா) அருவி இருக்கு… இங்கேயே சத்தம் கேக்கக ஆரம்பிச்சிடுச்சுப் பாரு” என்றான்.

 

தேனியில் அடிக்கடி அருவிக்குச் சென்றிருந்தாலும், நீர்வீழ்ச்சியைப் பார்க்கும் ஆர்வம் ஊற்றெடுக்க, “அருவிகிட்டப் போறதுக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்?” என்றாள் மதுமதி.

 

“அஞ்சு நிமிஷத்துல போயிடலாம்…”

 

“ஓ…” என்று உற்சாகமாகக் கேட்டவள் பையிலிருந்து குழந்தைக்குத் தேவையான தொப்பி, காலுறை, கையுறை, ஸ்வெட்டர் என்று அனைத்தையும் அணிவித்தாள். மீண்டும் அவள் பார்வையை வெளிப்பக்கம் திருப்பும் பொழுது தூரத்தில் நீர்வீழ்ச்சி கண்ணில் பட்டது.

 

மலைராணியின் பசும்மேனியைக் கிழித்துக்கொண்டு துள்ளிவிழும் வெள்ளி மணிகள்… பாறைகளை முத்தமிட்டு மீட்டும் இசையும்… தத்தி தாவியாடும் நடனமும் அவள் மனதில் மகிழ்ச்சியை அருவியாய் பொங்கி வழியச் செய்தது. கொட்டும் நீர்வீழ்ச்சியில் லயித்திருந்தவள் கார் நின்றதைக் கூட உணரவில்லை.

 

“இறங்கி பார்….” – கார்முகிலன் மனைவியின் மோனத்தைக் கலைத்தான்.

 

அருவியிலிருந்து கண்ணை அகற்றாமல் காரிலிருந்து இறங்கியவள் “தும்பை பூவை மலை மேலேருந்து கவிழ்த்துக் கொட்டுற மாதிரி இருக்குல்ல…!” என்றாள் ரசனையுடன்.

 

“பூவைக் கொட்டும் போது எங்கேயாவது சலசலன்னு சத்தம் வருமா மதி…!” கேலி இழையோடும் குரலில் கேட்டான்.

 

“சரி… அப்போ… வெள்ளி சலங்கையைக் கவிழ்த்துக் கொட்ற மாதிரி இருக்குன்னு சொல்லலாமா..?” கணவனைத் திரும்பிப் பார்த்துக் கேட்டாள்.

 

சிரிப்பை அடக்க முயன்றபடி நின்றவன் “க…வி…தை…!?” என்று கேட்டுவிட்டுச் சத்தமாகச் சிரித்தான்.

 

“ப்ச்… கிண்டல் பண்ணாதீங்க… கவிதையெல்லாம் எனக்குத் தெரியாது… ஏதோ தோணிச்சுச் சொன்னேன்…” என்று வெட்கத்துடன் சிணுங்கினாள்.

 

‘வெட்கம்…! சிணுங்கல்…! மதி…!!!’ அவன் இன்ப திகைப்போடு மனைவியைப் பார்த்தான். ‘எவ்வளவு நாளாகிவிட்டது இவள் இப்படி உரிமையோடு நம்மிடம் பேசி… ‘மாமா’ என்கிற வார்த்தை மட்டும் மிஸ்ஸிங்… பரவாயில்லை… முதல் நாளே இவ்வளவு முன்னேற்றம் தெரிகிறது… இன்னும் மூன்று நாட்கள் இங்குதானே இருக்கப் போகிறோம்… அதற்குள் மொத்தமாக மாறிவிடுவாள்… என் மதி எனக்குக் கிடைத்துவிடுவாள்…!’ கார்முகிலனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.

 

அருவி நீரில் கொஞ்சம் காற்றில் பறந்து வந்து சாரலாக அவள் மேனியைத் தீண்ட உடலோடு சேர்ந்து அவள் உள்ளமும் சிலிர்த்தது… இனிமையான அந்தச் சுகத்தை அனுபவித்தவள் குழந்தையைக் கணவனிடம் கொடுத்துவிட்டு, அருவிக்கு அருகில் சென்று சாரலோடு விளையாடினாள்.

 

கண்களை மட்டும் விடுத்துத் தலை முதல் கால் வரை முழுதாகக் குளிர் புகாத துணியால் குழந்தையை மூடி பாதுகாப்புடன் எடுத்துக்கொண்டு மனைவிக்கு அருகில் வந்த கார்முகிலன் “பிடிச்சிருக்கா..?” என்றான்.

 

அருவியின் இரைச்சலில் அவன் என்ன சொல்கிறான் என்பது அவளுக்குக் கேட்கவில்லை. நுனி காலில் எக்கி நின்று தன் காதை அவன் வாயருகே கொண்டு சென்று என்னவென்று கேட்டாள். கள் குடித்த நரியின் நிலை என்ன என்பதை முகிலன் அந்த நொடி உணர்ந்தான்.

 

அவன் எதுவும் சொல்லாததால் மீண்டும் பாதத்தைத் தரையில் பதித்து… திரும்பி அவன் முகம் பார்த்தாள். அவன் முகமாற்றத்தைக் கண்டு அவன் நிலையை உணர்ந்தவள் சிரித்துக்கொண்டே அவன் கையைக் கிள்ளி “என்ன இது..?” என்றாள் கண்டிக்கும் குரலில்.

 

‘ஐயோ… இதெல்லாம் கனவா…! இல்லை நனவா…!’ அவனுக்கு நம்பவே முடியவில்லை. ஆனால் அவள் கிள்ளியது வலிக்கிறதே… நம்பித்தான் ஆக வேண்டும். அவள் அருவியை ரசிக்க… இவன் அவளை ரசிக்க… குழந்தை அங்கே சுற்றிக் கொண்டிருந்த குரங்குகளை ரசித்துச் சிரித்தது.

 

“நம்ம சுருளி அருவியை விட இது என்ன பெரிய அழகா..? இவ்வளவு ஆசையா பார்க்கற?” – முகிலன் மனைவியிடம் பேச்சுக் கொடுத்தான்.

 

“அருவின்னாலே அழகு தானே…!”

 

“பிடிச்சிருக்கா?”

 

“ம்ம்ம்… ரொம்ப…” சிரித்துக் கொண்டே சொன்னாள். வேறு என்ன வேண்டும் அவனுக்கு… கடவுளையே நினைக்காதவன் அந்த நொடி கடவுளுக்கு நன்றி சொன்னான்.

 

புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்… அங்கே இருந்த பெட்டிக்கடையில் வாழைப்பழம் வாங்கி குரங்கிற்குக் கொடுத்துக் குழந்தைக்கு விளையாட்டுக் காட்டினார்கள். சாலையோரம் நின்று தான் அந்த அருவியைப் பார்க்க முடியும் என்றாலும் ரசித்துப் பார்த்தார்கள்… இன்பம்… இன்பம்… இன்பம் மட்டும் தான் அவர்கள் மனதில் அந்த நிமிடம் நிறைந்திருந்தது. நேற்று என்ன நடந்தது… நாளை என்ன நடக்கப்போகிறது எதுவும் நினைவில் இல்லை…

 

###

 

காலை பதினோரு மணிக்கு அவர்களுடைய கார் சாலையின் இருபுறமும் காடுகளும்… தேயிலைத் தோட்டங்களும் நிறைந்த மூணாறுக்குள் நுழைந்தது.

 

“போகும்போதே யானை சவாரி பண்ணிட்டு ரூம்க்குப் போயிடலாமா..? இல்ல ரெஸ்ட் எடுக்கணுமா?” – கார்முகிலன் கேட்டான்.

 

“யானை சவாரியா…! ம்ஹும்… நீங்க வேணா போங்க… நானும் யாழியும் வரல…” பயத்தோடு பதில் சொன்னாள்.

 

அவளுடைய பயத்தைக் கண்டு சிரித்தவன், “பொம்முகுட்டி வராளா இல்லையான்னு நீ ஏன் சொல்ற? உனக்கு ரெஸ்ட் வேணுமா? வேண்டாமா..? அதை மட்டும் சொல்லு” என்றான்.

 

“வீட்லேருந்து காலையிலேயே கிளம்பி ரொம்ப நேரமா ட்ராவல் பண்ணிக்கிட்டே இருக்கோம்… குழந்தைக்குச் சோர்வா இருக்கும்…”

 

மதுமதியின் மடியில் அமர்ந்து லாலிபாப்பைச் சப்பிக் கொண்டே வட்டவிழியை உருட்டி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மகளைப் பார்த்தான்.

 

“சோர்வா…! யாருக்கு..? என் பொண்ணுக்கா..? போ…டி… அங்க பாரு… எப்படி வேடிக்கை பார்க்கிறாங்கன்னு… யானைய பார்த்தா மேடம் இன்னும் குஷியாயிடுவாங்க… உனக்குக் கஷ்டமா இருக்கா… அதை மட்டும் சொல்லு…”

 

“கஷ்டமால்லாம் இல்ல… ஆனா நான் யானையில ஏறமாட்டேன்… சும்மா பார்த்துட்டுத் தான் இருப்பேன்… சரியா?”

 

“அதை அங்க போய்ப் பார்த்துக்கலாம்…” என்று சொல்லிவிட்டு கார்மேலகிரி யானை பூங்காவிற்கு (Carmelagiri Elephant park) வண்டியை விட்டான்.

 

பார்க் என்று சொன்னதும் சீராக வெட்டப்பட்ட புல் தரையோடும்… அழகிய பூக்களோடும் பெயருக்கு ஒன்றிரண்டு யானைகள் எங்கேயாவது கட்டப்பட்டிருக்கும் என்றும்… சவாரி செய்ய வேண்டும் என்று விரும்பினால் மட்டும் அதை அவிழ்ப்பார்கள் என்றும் நினைத்து காரிலிருந்து இறங்கிய மதுமதி, அடர்ந்த காட்டு மரங்களையும், சரிவான மலைப்பாதையையும் கண்டு புருவம் சுருக்கி “பார்க் இங்க எங்க இருக்கு..?” என்றாள்.

 

“இதுதான் பார்க்… உள்ள வா… போய்ப் பார்க்கலாம்…” என்று குழந்தையை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, மறு கையில் மனைவியைப் பிடித்து அழைத்துச் சென்றான் முகிலன்.

 

மெல்லிய பூந்தூறல் முத்தமிட்டு நனைத்துக் கொண்டே இருப்பதால் ஈரம் காயாமலிருந்த பூமியும்… பாசிப் படர்ந்த மரங்களும்… வித்தியாசமான பறவைகளின் ஓசையும்… மதுமதிக்கு அந்தச் சூழ்நிலை மிகவும் பிடித்திருந்தது. கணவனோடு கைக்கோர்த்து ஆர்வத்தோடு சரிவான பாதையில் இறங்கினாள்.

 

பத்தடி தூரம் இறங்கியதுமே பாதைக்கு அருகிலேயே கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு மரத்தில் கட்டப்பட்டிருந்த பெரிய தந்தங்களோடு இருந்த முரட்டு யானையைக் கண்டதும் அரண்டு நடையை நிறுத்திவிட்டாள் மதுமதி.

 

“என்னாச்சு..? வா…”

 

“என்ன இதை இப்படி வழில கட்டி வச்சிருக்காங்க…!”

 

“நம்மள வரவேற்கத்தான்… வேற எதுக்கு… பயப்படாம வா…”

 

“இல்ல… நாம வேற ஏதாவது வழியிருந்தா அந்த வழில போவோமா..? அதோ அந்தப் பக்கம் ஒரு பாதை இருக்குப் பாருங்க…”

 

“அங்க மட்டும் யானை இல்லையா… அங்க பாரு…” அவன் காட்டிய திசையைப் பார்த்தாள். அங்கேயும் சில யானைகள் கட்டப்பட்டிருந்தன. அப்போது தான் கண்களைச் சுழற்றி அந்த ஏரியாவை முழுவதுமாகப் பார்த்தாள். கிட்டத்தட்ட பத்து, பதினைந்து யானைகள் ஆங்காங்கே மரங்களில் கட்டப்பட்டிருந்ததோடு… தும்பிக்கையை ஆட்டி ஆட்டி வழியில் போவோர் வருவோரை குசலம் விசாரித்துக் கொண்டும் இருந்தது.

 

மதுமதி நிற்கும் இடத்திலிருந்து அசைய மாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்க… “இங்க இருக்கற யானைகள் எல்லாம் ரொம்பச் சாது மதி… ஒண்ணும் பண்ணாது… வா…” என்று கூறியபடி முன்னே சென்றான்.

 

அப்போது யானை அவனைத் தும்பிக்கையால் தொட்டுத் தடவ… “டேய் தம்பி… எப்படிடா இருக்க?” என்று அவன் யானையைப் பலமாகத் தட்டி நலம் விசாரித்தான்.

 

‘என்ன இவன்…! கையில குழந்தையோட யானைகிட்டப் போயி நலம் விசாரிச்சுக்கிட்டு இருக்கான்… அதைப் பார்த்தா இவனுக்குத் தம்பி மாதிரியா இருக்கு..?’ என்று நினைத்தவள் தன் பயத்தைப் புறம் தள்ளிவிட்டுக் குழந்தையைக் கணவனிடமிருந்து வாங்கும் நோக்கில் அவனிடம் நெருங்கினாள்.

 

“நீங்க தட்ற மாதிரியே அதுவும் உங்களைத் தும்பிக்கையால ரெண்டு தட்டுத் தட்டி நல்லா இருக்கேன்னு சொன்னா என்னாகிறது…” என்று கலக்கத்தோடு கேட்டவள் “பாப்பாவைக் குடுங்க…” என்று யாழினியை அவனிடமிருந்து கிட்டத்தட்ட பிடுங்கினாள்.

 

ஆனால் யாழினியோ தாயிடம் வராமல் தந்தையின் சட்டைக் காலரை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு “எல்லிஃப்… இன்னாக்கு… இன்னாக்கு… எல்லிஃப்… இன்னாக்கு…” என்று யானையிடம் பேச்சுவார்த்தை நடத்தினாள்.

 

“ஹேய்… குட்டி…. உனக்கும் எலிஃபெண்ட் வேணுமா..? வாங்க… வாங்க… தொட்டுப் பாருங்க…” என்று மகளை யானையைத் தொட்டுப் பார்க்கச் சொன்னான் கார்முகிலன்.

 

“பாத்து… பாத்து… குழந்தையை ஏதாவது பண்ணிடப் போகுது…” என்று மதுமதி பதறினாள். “ஒண்ணும் பண்ணாதுமா…” என்று மலையாளம் கலந்த தமிழில் அவளுக்குத் தைரியம் சொன்ன யானைப்பாகன் “ரைட் போகணுமா சார்…” என்று கார்முகிலனிடம் கேட்டார்.

 

“ஆமாம்…” என்று தலையசைத்தான்.

 

குழந்தைக்கு யானையிடம் துளியும் பயமில்லை. யானையும் பாகன் சொல்வதைக் கேட்டுத் தும்பிக்கையை வளைத்துக் கொடுக்க… அதில் இரண்டு பக்கமும் கால் போட்டு அமர்ந்து கொண்டது குழந்தை.

 

“என்னதிது..? சின்னக் குழந்தையை யானைகிட்ட கொடுத்து ஊஞ்சல் ஆடச் சொல்றீங்க… தூக்குங்க…” – கணவனிடம் கோபமாகச் சொன்னாள்.

 

“ஒண்ணும் செய்யாதுடி… எவ்வளவு அழகா உக்காந்திருக்கா என் பொண்ணு…!” என்று சிலாகித்தபடி கேமராவை எடுத்துப் படம் பிடித்தான்.

 

போகப் போக மதுமதிக்கும் பயம் கொஞ்சம் நீங்கிவிட, அவளும் யானையின் தந்தத்தை மெல்ல தொட்டுப் பார்த்தாள்.

 

“யானை ரைடுக்கு ரெடி சார்…” என்று கொட்டடியிலிருந்து சத்தம் வந்தது.

 

“வா…” என்று அவள் கையைப் பிடித்தான்.

 

ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் பயத்தினால் “ரைடா…! நமக்கா…! நான் வரல…” என்று மதுமதி பின்வாங்க அவன் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றான்.

 

கணவனுடைய கட்டாயத்திற்காகவும்… குழந்தையின் ஆசைக்காகவும் மதுமதி அவர்களோடு யானையின் மீது ஏறினாலும்… காட்டு மரங்கள் அடர்ந்த மலை சரிவுகளில் அசைந்து அசைந்து நடக்கும் யானையின் மீது அமர்ந்து பயணம் செய்த அற்புதமான அனுபவத்தை வாழ்நாள் முழுக்க அவளால் மறக்கவே முடியாது.
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sudhakar Sundarachari says:

    Just now finished “Uyirai Tholaithen” n started Unakkul Naan. Superb n very practical story line. Long way to go Mam……….Keep going…….