Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இரும்பின் இதயம் – 2

அத்தியாயம் – 2

சரியாக எட்டு நாற்பத்தைந்துக்கு அலுவலகத்திற்க்குள்ளே நுழைந்த ஜெய்ச்சந்திரனை பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தார் PC மாணிக்கம்.

 

“சார்…. உங்களை பார்க்க ஒரு அம்மா வந்திருக்காங்க…” தன்னுடைய அறையில் வேலையில் ஈடுபட்டிருந்தவனிடம் மாணிக்கம் சொன்னார்.

 

“என்ன விஷயமா?” ஃபைல்லிலிருந்து கண்களை அகற்றாமலே கேட்டான்.

 

“கம்ப்ளைன்ட் கொடுக்கணுமாம்”

 

நிமிர்ந்து பார்த்தவன் “ரைட்டர்கிட்ட எழுதிக் கொடுத்துட்டு போக சொல்ல வேண்டியதுதானே…”

 

“உங்களை நேரா பார்த்து கொடுக்கணுமாம் சார்”

 

“சரி வர சொல்லுங்க …”

 

“ஓகே சார்…” விறைப்பாக மீண்டும் சல்யூட் அடித்துவிட்டு சென்றார்.

 

“சொல்லுங்க… என்ன விஷயம்?” உள்ளே நுழைந்த அந்த இருபத்தெட்டு வயது மதிக்கத்தக்க பெண்ணைப் பார்த்துக் கேட்டான்.

 

அவள் பேசவில்லை. மாறாக கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வடிந்தது.

 

ஜெயச்சந்திரனை அவள் கண்ணீர் எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை.

 

“என்னவிஷயம் என்று சொன்னால் என்னால் என்ன செய்ய முடியும் என்று பார்ப்பேன்… சொல்லுங்க…” என்றான் குரலை உயர்த்தாமல் அழுத்தமாக.

 

பால் வடியும் முகத்துக்கு சொந்தக்காரியான அந்த பெண் ஆத்திரத்திலும் அழுகையிலும் வார்த்தைகள் தொண்டை குழியிலேயே சிக்கிக்கொள்ள பேச்சு வராமல் தவிப்பை கண்களில் காட்டினாள்.

 

அது அவனுக்கு புரியவில்லையோ அல்லது புரிந்தும் புரியாமல் இருந்தானோ அது தெரியாது. அவள் பேசுவாள் என்று பார்த்தவனுக்கு பதில் அழுகையே கிடைத்ததும், அருகில் இருந்த மணியை அழுத்தினான்.

 

உள்ளே வந்த PC விறைப்பாக சல்யூட் அடித்துவிட்டு, அவன்  என்ன சொல்கிறான் என்று பார்த்தார். அவன் சைகையால் அந்த பெண்ணை வெளியே அனுப்ப சொன்னான்.

 

“ஏம்மா… வெளிய வாம்மா… சொல்றேன்ல்ல… வெளியே வாம்மா…” அதட்டினார்.

 

“இல்…இல்ல சார்… வ.. என்… சார்… கம்ப்ளைன்ட்….” அந்த பெண்ணுக்கு பேச்சு வந்துவிட்டது.

 

“என்னம்மா… ‘இல்ல… இருக்கு… ‘ வாம்மா முதல்ல வெளியே… சார்க்கு வேலை இருக்கும்….”

 

அந்த பெண்ணை இழுத்து வெளியே தள்ளாத குறையாக விரட்டினார்.

 

“சார்… ஒரே ஒரு நிமிஷம் சார்… எம்பொண்ண காணும் சார்… தயவு செஞ்சு விடுங்க சார்…” அவள் கெஞ்சினாள்.

 

அவளுக்கு பேச்சு வந்துவிட்டது என்பதை புரிந்துகொண்ட ஜெயச்சந்திரன் PC யை வெளியே இருக்கும் படி சைகை செய்தான்.

 

‘இப்போ சொல்லு ‘ என்பதுபோல் அந்த பெண்ணை பார்த்தான்.

 

“சார்… என் பேர் மல்லிகா… என் வீட்டுக்காரர் துபாய்ல வேல செய்றார். நானும் என் பொண்ணும் தனியாதான் இருந்தோம். இப்போ என் பொண்ண காணும் சார்…”

 

“என்ன வயசு..?”

 

“ஏழு வயசு..”

 

“பெயர்?”

 

“அனு”

 

“எப்போலேருந்து காணும் ?”

 

“முப்பத்தஞ்சு நாள் ஆச்சு சார்…”

 

“போலீஸ் ஸ்டேஷன்ல  கம்ப்ளைன்ட் கொடுத்தீங்களா?”

 

“குடுத்தேன் சார்… திருவரம்பூர் ஸ்டேஷன்ல… சார் அவ சின்ன பொண்ணு சார்… குழந்தை… ஒன்னும் தெரியாது சார்… எப்படியாவது கண்டுபுடிச்சு கொடுங்க சார்…?”

 

“சரி… என்ன நடந்ததுன்னு விளக்கமா எழுதி கையெழுத்து போட்டு கொடுத்துவிட்டு போங்க. ஆக்க்ஷன் எடுக்குறேன்” அவன் பேச்சை முடித்துவிட்டு கையில் இருந்த ஃபைல்லை  பார்த்தான்.

 

ரைட்டர் அந்த பெண்ணிடம் தேவையான விபரங்களை எழுதி வாங்கிக் கொண்டார்.

 

அந்த பெண்ணுக்கு ஏமாற்றமாக இருந்தது. இவர் இப்படி பட்டும் படாமலும் பேசுறாரே… இவர் என்ன செஞ்சுட போறார்… கடவுளே… எம்பொண்ண நீதாம்பா மீட்டுக் கொடுக்கணும்… அவள் கடவுளிடம் முறையிட்டுக்கொண்டே வெளியே வந்தாள்.

 

_______________________________________________________________________________________

தன் சக்திக்கு அதிகமாக சுமையை சுமந்துகொண்டு வந்த அந்த அரசு பேருந்திலிருந்து முண்டியடித்துக் கொண்டு இறங்கினார்கள் சாருமதியும் கவிதாவும்.

 

முதலில் இறங்கிய சாருமதியை அடுத்து இறங்கிய கவிதா,

 

“ஐயோ.. சாரு…” என்று அவளை பின்னாலிருந்து அணைத்தாள்.

 

அதற்குள் சாருமதியும் என்ன நடந்துவிட்டது என்பதை உணர்ந்து நின்று தன் தோழியின் அணைப்பில் அடங்கிக் கொண்டாள்.

 

“என்னடி சாரு… இப்படி கிழிஞ்சிருச்சு…?”

 

சாருமதியின் கண்கள் கலங்கின. ஆனாலும் அழுகையை விழுங்கிக்கொண்டு நிமிர்ந்தாள். ‘நான் ஏன் அழனும்… நாட்டில் என்னை விட ஏழை மாணவிகள் எவ்வளவோ பேர் உள்ளார்கள். பஸ் பாஸ் கொடுக்கும் அரசு, மாணவ மாணவிகளுக்கு தேவையான அளவு பஸ்ஸை கல்லூரி நேரத்திற்கு விடாததற்கு இந்த அரசாங்கம் தான் வெட்கி அழவேண்டும்…’ தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டு தோழியை பார்த்து சிரிக்க முயன்றாள்.

 

அவர்கள் கல்லூரிக்கு முன் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு பின்னால்  நின்று கொண்டிருந்தார்கள். சாருமதியின் சுடிதாரில், கூட்டத்தில் மாட்டி கிழிந்த முதுகுபகுதியை ஊக்கை  மாட்டி திருத்திக் கொண்டிருந்தாள் கவித்தா.

 

கவிதாவும் சாருமதியும் Bsc கணினி அறிவியல் இறுதி ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.

 

“இருந்த நாலு சுடிதார்ல ஒன்னை பஸ்சுக்கு காவு கொடுத்தாச்சு… ஹம்…” என்று  பெரு மூச்சு விட்டாள் சாருமதி.

 

அவள் படிக்கும் கல்லூரி ஓரளவு நடுத்தர மாணவிகள் படிக்கும் கல்லூரி என்பதால் அவளுக்கு தன் ஏழ்மை நிலை குறித்து எந்த தாழ்வு மனப்பான்மையும் தோன்றியதில்லை. ஆனால் ‘வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய சுகங்கள் எதையுமே அனுபவிக்க கொடுத்துவைக்கவில்லையே’ என்று ஏக்கம் அவளுக்கு உண்டு. ஆசைகளே இல்லாத துறவி என்று அவளை சொல்ல முடியாது. எல்லா ஆசைகளும் ஏக்கங்களும் நிறைந்த சாதாரண பெண் தான் அவள்.

 

ஐந்து வயதில் பள்ளிக்கு போகும்போது அவள் தோழி சொல்லுவாள்  “ஏய் நேத்து எங்க அப்பா எனக்கு five ஸ்டார் வாங்கி தந்தாங்களே…”

 

“five ஸ்டார்ன்னா என்னப்பா…?”

 

“ஐயேய்ய… உனக்கு தெரியாதா… அது முட்டாயிப்பா… நல்லாருக்கும்….”

 

அப்போது அவள் நினைத்துக் கொள்வாள் ‘அந்த மிட்டாய் நட்சத்திர வடிவில் இருக்கும் போல ‘ என்று. ஐந்து வயதில் five ஸ்டார் சாப்பிட ஏற்பட்ட ஆசை அவளுக்கு பதினைந்து வயதில் நிறைவேறியது. ஆனால் அப்போது அவளுக்கு அந்த மிட்டாய் சுவைக்கவில்லை. அப்போது அவளது தேவைகளும் ஆசைகளும் மாறியிருந்தன.

 

அந்தந்த வயதில் அனுபவிக்காத சுகங்கள், காலம் கடந்து கிடைத்தாலும் அதன் சுகமும் மதிப்பும் குறைந்துவிடுகிறது அல்லது இல்லாமலே போய்விடுகிறது.

 

அப்படித்தான் சாருமதிக்கும்… ஐந்து வயதில் ஆசைப்பட்ட மிட்டாய் கிடைக்கவில்லை. பத்து வயதில் ஆசைப்பட்ட உடை கிடைக்கவில்லை, பதினைந்து வயதில் ஆசைப்பட்ட சைக்கிள் கிடைக்கவில்லை… இப்போ இருபத்தியோரு வயதில் ஆசைபடும் வாழ்க்கை கிடைக்குமா…? கிடைத்தது ஆனால்….
2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Sadha says:

    Nice ud


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Kanimozhi Ramesh says:

    Nice sis jai ku pair charu va sis

error: Content is protected !!