Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-13

அத்தியாயம் – 13

இரவு வெகுநேரம் உறங்காமல் போராடிக் கொண்டிருந்த கணவன் மனைவி இருவரும்… விடியலில் கண்ணயர்ந்து விடிந்த பிறகு ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றார்கள்.

 

“ம்ம்மா… ம்ம்மா…” குழந்தைத் தாயை உலுக்கியது. மகள் குரல் கேட்டு மனைவிக்கு முன் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்த கார்முகிலன் “பொம்மு குட்டி…. எழுந்துட்டீங்களா..?” என்று மெல்லக் கேட்டான். குழந்தையின் கவனம் உறங்கிக் கொண்டிருந்த தாயை விட்டுவிட்டுத் தந்தையிடம் திரும்பியது.

 

மனைவியின் தூக்கம் கலைந்துவிடக் கூடாது என்று எண்ணி மகளைக் கட்டிலிலிருந்து தூக்கியவன், குழந்தைக்குச் செய்ய வேண்டிய அத்தனை வேலைகளையும் சத்தமில்லாமல் செய்து முடித்தான். பிறகு டிவியைப் போட்டு கார்டூன் சேனலை ஓடவிட்டவன், குழந்தையிடம் இரண்டு விளையாட்டுச் சாமான்களைக் கொடுத்து விளையாட விட்டுவிட்டு… அறையைப் பூட்டிக்கொண்டு குளிக்கச் சென்றான்.

 

குழந்தையின் பேச்சுக்குரல் எங்கோ கனவில் கேட்கிறது என்ற எண்ணத்தில் உறக்கத்தைத் தொடர்ந்து கொண்டிருந்த மதுமதி முகத்தில் “சுளீர்” என்று அடி விழவும் படக்கென்று விழித்தாள். எதிரில் மை பொட்டிட்ட குண்டு கன்னத்தில் குழிவிழ சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்த யாழினி “ம்மா… ம்மா…” என்றபடி தாயின் முகத்தில் மீண்டும் ஓர் அடியைக் கொடுத்தாள்.

 

“வாலுக் கழுத… நீதானா..? குளிச்சிட்டு ஃப்ரெஷா இருக்க… செல்லக்குட்டி எப்போ எழுந்தீங்க?” என்று கேட்டுக்கொண்டே எழுந்த மதுமதி, மகள் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளி முத்தம் கொடுத்தாள்.

 

குழந்தை தனியாக இருப்பாளே என்கிற பயத்தில் அரக்கபரக்கக் குளித்துவிட்டு வந்த கார்முகிலன் மனைவியின் சிரித்த முகத்தைக் கண்டு மனம் குளிர்ந்து… ‘ஹப்பாடா… பெரிய மேடம்கு மூட் அவுட் சரியாயிடுச்சு…’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டான். அந்த நிம்மதியின் ஆயுள் சில நொடிகள் தான்…

 

கணவன் வருவதை அவனுடைய காலடி ஓசையிலேயே புரிந்து கொண்ட மதுமதியின் புன்னகை நொடியில் வடிந்து… முகம் உணர்சிகளைத் தொலைத்துவிட்டு வறண்டு போனதில் அவன் மனம் புண்பட்டது. ஆனால் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை…

 

“எழுந்துட்டியா… சீக்கிரம் போய் ப்ரெஷ் பண்ணிட்டு வந்து… ஃபிளாஸ்க்ல பால் இருக்கு எடுத்துக் குடி… அப்புறம் குளிச்சுக்கலாம்…” – இரவு உணவு உண்ணவில்லையே… பசியாக இருப்பாளே என்கிற அக்கறையில் அன்புடன் கூறினான்.

 

“ம்ம்ம்…” என்று பட்டும் படாமல் பதில் சொல்லிவிட்டு, மாற்று உடையுடன் குளியலறைக்குள் நுழைந்தாள்.

 

‘பால் சாப்பிடாம குளிக்கப் போயிட்டாளே…!’ – அவளுடைய பசிக்காக இவன் வாடினான்.

 

அவள் குளித்துவிட்டு வரும் வரை காத்திருந்து காலை உணவை ஆர்டர் செய்தான். இப்போதும் சாப்பிடுவாளோ மாட்டாளோ என்கிற பயம் அவன் மனதை அரித்துக் கொண்டிருந்தது.

 

“பூரி செட் ஆர்டர் பண்ணினேன். ஆறிடப் போகுது… சாப்பிடலாம் மதி…” – அமைதியாகவே சொன்னான்.

 

“சரி…” ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு அவள் இருவருக்கும் பரிமாறியபடி “யாழிக்கு என்ன கொடுத்தீங்க?” – என்றாள்.

 

“பால் மட்டும் தான் கொடுத்தேன்…”

 

“சரி… நீங்க சாப்பிடுங்க… நான் குழந்தைக்குக் கொடுத்துட்டு அப்புறம் சாப்பிட்டுக்கறேன்…” தன்னுடைய உணவை மூடி வைத்துவிட்டுக் குழந்தைக்குத் தனியாக எடுத்தாள்.

 

அவள் தட்டை மூடி வைத்ததும் இவனுடைய உணவு தொண்டைக்குழியிலேயே சிக்கிக் கொண்டது. “முதல்ல… நீ சாப்பிடுடி… அப்புறம் குழந்தைக்குக் கொடுக்கலாம்…” – பல்லைக் கடித்துக்கொண்டு அழுத்தமாகச் சொன்னான்.

 

ஏற்கனவே சிரிப்பின் சாயல் சிறிதுமின்றி வறண்டிருந்த அவள் முகம்… அவன் காட்டிய கடுமையால் மேலும் இறுகியது. அவனோ அசராமல் அவளை முறைத்துக் கொண்டிருந்தான்.

 

அவனுடைய கோபத்தைப் பற்றித் தெரிந்திருந்தவளுக்கு, இப்போது தான் சாப்பிடாமல் குழந்தைக்கு ஊட்ட ஆரம்பித்தால் அவனுடைய உணவு குப்பைக்கூடைக்குச் சென்றுவிடும் என்பது புரிந்தது. அதனால் தான் முட்டிக்கொண்டு வந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டு, பூரியைப் பிய்த்து உள்ளே தள்ளிவிட்டு மகளுக்கு ஊட்ட ஆரம்பித்தாள்.

 

உர்ரென்று இருக்கும் மனைவியின் முகத்தை அவன் கவனித்துக் கொண்டே இருந்தாலும் வெளியே சென்று இயற்கை எழிலைப் பார்த்தால் மீண்டும் உற்சாகமாகி விடுவாள் என்கிற நம்பிக்கையில், அவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இருபது நிமிடப் பயணத்தில்… மாட்டுப்பட்டி அணைக்கு மனைவியை அழைத்துச் சென்றான்.

 

அணைக்கட்டிலிருந்து பாய்ந்து வந்து திமுதிமுவென்று பேரிரைச்சலோடு ஆற்றில் விழும் தண்ணீரை அங்கே கூடியிருந்த மக்கள் ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏதோ சொல்வதற்காக மனைவியின் பக்கம் திரும்பினான் கார்முகிலன். அவளோ தூரத்தில் தனிமையில் நின்ற ஒற்றை மரத்தை விழியகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் படர்ந்திருந்த ஒருவித சோகம் அவனைச் சங்கடப்படுத்தியது.

 

‘ம்ஹும்… இந்த லொக்கேஷன் இவ மனச டச் பண்ணல… டீ எஸ்டேட்டை பார்த்தா குஷியாயிடுவா… அங்க கூட்டிட்டுப் போக வேண்டியது தான்…’ உடனடியாக முடிவெடுத்தான்.

 

“மதி….”

 

“ம்ம்ம்..?”

 

“கிளம்பலாமா?”

 

“ம்ம்ம்…”

 

“வா…” – அவள் கையிலிருந்த குழந்தையை வாங்கிக் கொண்டவன் முன்னே நடக்க, அவள் அவனைப் பின் தொடர்ந்தாள்.

  

மீண்டும் ஒரு பத்து நிமிடப் பயணத்தில் அவர்களுடைய கார் ஒரு தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்தது. சுற்றிப் பார்த்தால் எங்கும் பசுமை எதிலும் அழகு… இரண்டு நாட்களாக அவள் ரசித்துக் களித்த இயற்கை இன்று அவள் மனதைத் தொடவில்லை போலும். பார்வையை வெளிப்பக்கம் திருப்பாமல் கண்களை மூடி கார் சீட்டில் சாய்ந்திருந்தாள்.

 

“மதி… ”

 

கண்விழித்துக் கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.

 

“இறங்கிப் போய்ப் பார்க்கணுமா?”

 

“ம்ஹும்… இல்ல…” – சுரத்தில்லாமல் ஒலித்தது அவள் குரல்.

 

“என்னாச்சு?”

 

“தலைவலி…”

 

“ரூம்க்குப் போகணுமா?”

 

“இல்ல… நீங்க சுத்திப் பார்க்கணும்னா பாருங்க… நான் அப்படியே சீட்ல கண்ண மூடி படுத்துக்கறேன்” – மீண்டும் கண்களை மூடி சீட்டில் தலை சாய்த்துக் கொண்டாள்.

 

‘உண்மையிலேயே தலைவலியோ…! இல்ல சும்மா சொல்றாளா..?’ – அவனுக்கு விளங்கவில்லை. எதுவாக இருந்தாலும் இனி அவளுடைய மனம் இந்த இயற்கையில் லயிக்கும் என்கிற நம்பிக்கை அவனுக்கு இல்லாமல் போனது. காரை ஹோட்டலுக்கு விட்டான்.

 

ஹோட்டல் அறையில் குழந்தை டிவி பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க… மதுமதி பால்கனியில் நின்று இலக்கில்லாமல் எதையோ பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“மதி… வந்து படு…” – கார்முகிலன் அழைத்தான்.

 

“நீங்க படுங்க…” – திரும்பிப் பார்க்காமல் சொன்னாள்.

 

“தலைவலி எனக்கு இல்ல…” – அக்கறை கலந்த கோபத்தில் சொன்னான்.

 

அவளிடமிருந்து பதில் வரவில்லை.

 

‘அழுத்தக்காரி… தலைவலின்னு கதை சொல்லியிருக்கா…’ – எரிச்சலோடு நினைத்தவனுக்கு மனைவியின் மீது லேசாகக் கோபம் வந்தது.

 

மனதை அமைதிப்படுத்துவதற்காகக் கட்டிலில் மல்லாந்து படுத்து ஐபாடைக் காதுக்குக் கொடுத்துக் கண்களை மூடி, பிடித்த பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தவன்… இரவு சரியாக உறங்காததாலோ என்னவோ அப்படியே உறங்கிவிட்டான்.

 

மீண்டும் அவன் கண்விழித்த போது அவனுக்கருகில் குழந்தை உறங்கிக் கொண்டிருக்க, மதுமதி பால்கனியில் கிடந்த பிரம்பு நாற்காலியில் அமர்ந்திருந்தாள்.

 

ஓரிரு நிமிடங்கள் மனைவியைக் கண்களால் வருடியவன், பிறகு உறங்கிக் கொண்டிருந்த மகளுடைய கன்னத்தில் ஆசையாக ஒரு முத்தம் கொடுத்தான். மீசைக் குத்திவிட்டது போலும்… குழந்தை லேசாகச் சிணுங்கிவிட்டு மீண்டும் உறக்கத்தைத் தொடர்ந்தது.

 

புன்சிரிப்போடு எழுந்து குளியலறைக்குள் சென்றவன் ரெஃப்ரெஷ் செய்துவிட்டு வெளியே வரும் பொழுது யாழினி தாயின் மடியில் அமர்ந்து வெளியே வேடிக்கைப் பார்த்தபடி எதையோ மழலைமொழியில் பேசிக் கொண்டிருந்தாள்.

 

“பொம்மு குட்டி…! எழுந்துட்டீங்களா..?” என்று குழந்தையைக் கொஞ்சியவனுக்குச் சூடாக ஒரு காபி சாப்பிட வேண்டும் போலிருந்தது. ஆனால் எட்டு கட்டளைப் பட்டியலுக்குக் கட்டுப்பட்டு, இன்டர்காமில் ரிசப்ஷனுக்கு அழைத்துப் பால் ஆர்டர் செய்தான்.

 

அதற்குள் குழந்தைக்கு உடம்பு துடைத்து பௌடர் போட்டு, வேறு உடை அணிவித்த மதுமதி… குழந்தைக்கும் லாக்ட்டோஜன் ஆற்றிக் கொடுத்தாள்.

 

“சரி… கிளம்பு ஒரு ‘வாக்’ போயிட்டு வரலாம்…” – கார்முகிலன் மனைவியை அழைத்தான்.

 

“இல்ல நான் வரல…”

 

“ஏன்..?”

 

“தலைவலி…”

 

“தலைவலியா..?” – பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான்.

 

“ம்ம்ம்…” அசராமல் சொன்னாள்.

 

ஓரிரு நிமிடங்கள் அவள் முகத்தையே முறைத்துப் பார்த்தவன், தன் ஷூவை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினான்.

 

யாழினி தந்தையோடு வெளியே செல்ல வேண்டும் என்று அவனிடம் தாவியபடி அழவும் “அப்பாவோட நீங்க வர்றீங்களா செல்லம்… வாங்க… வாங்க…” என்று மகளைத் தூக்கிக் கொண்டான்.

 

“கொஞ்ச நேரத்துல இருட்டிடும்… அவ எதுக்கு..?” மதுமதி தடுத்தாள்.

 

“வேலையைப் பாருடி…” – சற்று எரிச்சலுடன் சொன்னவன் மகளோடு அறையிலிருந்து வெளியேறினான்.
Comments are closed here.

error: Content is protected !!