Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

இரும்பின் இதயம் – 6

அத்தியாயம் – 6
 

 அந்த பார்க்கில் குழந்தைகள் கலகலப்பாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒருவன் அந்த குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டு குழந்தைகளோடு குழந்தையாக மாறி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தான். குழந்தைகளின் பெற்றோரும் அதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.

 

“அங்கிள் கேட்ச்…” ஒரு ஆறு வயது பெண் பந்தை தூக்கி அவனிடம் போட்டாள். அவன் அதை லாவகமாக பிடித்தான். பின் மீண்டும் அந்த பெண்ணிடம் போட்டான். இவ்வாறு இரண்டு மூன்று முறை விளையாடினான். நான்காவது முறை பந்தை கொஞ்சம் வேகமாக போட்டான். அது அந்த பார்க்கைவிட்டு வெளியே போய் விழுந்தது. பார்க்கை சுற்றி கம்பிவலை தான் என்பதால் வெளியே குழந்தைகள் போனால் உள்ளேயிருந்து அவர்களை பார்க்க முடியும்.

 

“அச்சோ… வெளியே போட்டுடீங்க அங்கிள்… நான் போய் எடுத்துட்டு வர்றேன்…”

 

“சரிம்மா… அம்மாகிட்ட சொல்லிட்டு போ…” அவன் அக்கறையாக சொல்லிவிட்டு வேறு குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்தான்.

 

“அம்மா ‘பால்’ எடுத்துட்டு வர்றேன்… வெளியே போயிடுச்சு”

 

“சரி எடுத்துட்டு வா… அம்மா கண்ணுல பட்ர மாதிரியே இருக்கணும்…”

 

“ஓகே…ம்மா ” அந்த குழந்தை வெளியே ஓடியது.

 

குழந்தையின் அம்மா அந்த குழந்தையை பார்த்தபடியே உள்ளே விளையாடிக் கொண்டிருந்த  தன்னுடைய மற்றொரு குழந்தையை கவனித்துக் கொண்டிருந்தாள்.

 

நிமிடத்தில் உள்ளே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை எதிலோ இடித்துக்கொண்டு கீழே விழுந்து அழுதது. அதை தூக்கி சமாதானப்படுத்தினாள்.

“பாப்பா… பந்து தேடி வந்தியா…? இங்கே கிடக்கு பார்…” என்றான் ஒருவன் வெளியே இருந்து

 

அந்தக் குழந்தை சிரித்துக் கொண்டே அந்த பந்தை நோக்கி ஓடியது. கோழிக்குஞ்சை அமுக்குவது  போல் அந்த குழந்தையை வாயை பொத்தி அருகில் இருந்த ‘அம்பாஸ்டர்’ காருக்குள் தள்ளி கதவை மூடினான். இவை அனைத்தும் ஒரே நிமிடத்தில் முடிந்துவிட்டது.

 

குழந்தையின் தாய் வெளியே சென்ற குழந்தையை காணாமல் தவித்தாள்.  பார்ப்பவர்களிடமெல்லாம் “ஐயோ… புள்ளைய காணுமே… பார்த்திங்களா பார்த்திங்களா…” என்று உயிரைவிட்டு கொண்டிருந்தாள்.

___________________________________________________________

“வணக்கம் மேடம்…”

 

“வணக்கம் சொல்லுங்க…? யார் நீங்க?”

 

“நாங்க “ராஜன் சில்க் ஹவுஸ்”-லேருந்து வந்திருக்கோம். சார் உங்களுக்கு டிரஸ் கொண்டு வர சொன்னாங்க… வெளியே வேன்ல இருக்கு…. சொன்னீங்கன்னா கொண்டுவர சொல்லுவேன். பார்த்து புடிச்சதா எடுத்துக்கோங்க…” அவர் பவ்யமாக சொன்னார்.

 

அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவள் கணவன் அவளை சுத்தமாக மறந்துவிடவில்லையே… அவளுக்காக துணிக் கடையையே வீட்டுக்கு கொண்டு வந்துவிட்டானே…

 

“இல்லைங்க… தப்பா எடுத்துக்காதிங்க…ஞாயிற்று கிழமை அவர் வீட்டில் இருப்பார். அப்போ வந்தீங்கன்னா அவரும் என்னோட சேர்ந்து எடுக்க வசதியா இருக்கும். அன்னிக்கு கொண்டுவாங்க…”

“சரி மேடம்…”

 

அவர்கள் அங்கிருந்து அகன்றார்கள். அன்று இரவு அவள் அதை பற்றி ஜெயச்சந்திரனிடம் பேசினாள்.

“ஏங்க… இன்னிக்கு துணிக்கடைகாரர் டிரஸ் கொண்டுவந்தார்.”

 

“ம்ம்ம்… எடுத்துக்கிட்டியா…? பிடித்திருந்ததா…?” அவன் டிவியில் நியூஸ் பார்த்துக் கொண்டே அவளிடம் கேட்டான்.

 

“நான் பார்க்கவே இல்லைங்க… ஞாயிற்று  கிழமை கொண்டுவர சொல்லிவிட்டேன். நீங்களும் கூட இருந்தால் புடிச்சதா எடுக்கலாமே…”

 

அவன் சட்டென அவளை திரும்பிப் பார்த்தான். “அதெல்லாம் உனக்குத்தானே கொண்டுவர சொன்னேன்… உனக்கு பிடித்தால் எடுத்துக் கொள்ள வேண்டுயதுதானே…” புரியாதவனாக கேட்டான்.

 

அவளுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “இல்லை… உங்களுக்கு பிடிச்சிருந்தா நல்லா இருக்குமேன்னு…”

 

அவன் லேசாக சிரித்தான். “நாளைக்கு வர சொல்றேன்… உனக்கு பிடித்ததாக எடுத்துக் கொள்… அவர் கூட இன்னொருவர் வருவார். அவர் நகைகளுக்கான ‘கேட்லாக்’  கொண்டுவருவார். அதில் உனக்கு பிடித்ததாக பார்த்து ஆர்டர் கொடுத்துவிடு….”

அவளுக்கு ஏமாற்றமாக இருந்ததோடு லேசாக கோபமும் வந்தது.

 

‘ஏன்… ஒரு நாள் ஒரு மணி நேரம் என்னோடு துணி எடுப்பதில் செலவு செய்தால் தான் என்ன…?’  கேட்க நினைத்ததை உள்ளுக்குள்ளேயே விழுங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

_________________________________________________

 

இவ்வளவு விரைவாக மாட்டிக் கொள்வோம் என்று முத்து நினைக்கவே இல்லை. அவன் சரியாகத்தானே திட்டம் போட்டான். எங்கே ஓட்டை விழுந்தது…?

 

அந்த குழந்தையை பார்க்கைவிட்டு வெளியே அனுப்பிவிட்டு படபடக்கும் நெஞ்சோடு காத்திருந்தால் அவன் நண்பன் குமார் கச்சிதமாக காரியத்தை முடித்தான். அவன் குழந்தையை காரில் ஏற்றியதை கண்ணார பார்த்துவிட்டு அந்த குழந்தையின் அம்மா தவிக்கும் போது அவளுக்கு ஆறுதலும் சொல்லிவிட்டு, பார்க்கை விட்டு வெளியே வந்தால் தடி தடியாக மூன்று எருமைகள் ‘ஏன் எதற்கு’ என்று சொல்லாமல் ‘மொத்து மொத்தென்று மொத்தி’ காரில் ஏற்றி இங்கு கொண்டுவந்து தள்ளி விட்டுவிட்டதுகள்.

 

“அண்ணே இவனுங்க யாருன்னே…? எதுக்குன்னே நம்பள கடத்தி வச்சிருக்கானுங்க?”

 

“நீ எப்படா இங்க வந்த…?”

“நானாவா ஆசபட்டு வந்தேன்… பூங்காவுல புள்ளைங்கள கணக்கு பார்த்துக்கிட்டு இருந்தேன். ரெண்டு பேரு வந்தானுங்க… யாரோ கூப்பிடுறதா சொல்லி காருகிட்ட அழைச்சிகிட்டு வந்தானுங்க… நானும் நம்பி வந்தேன். உள்ள அள்ளி போட்டிக்கிட்டு இங்க வந்து தள்ளிப்புட்டானுங்க…” கடலை விற்கும் செல்வம் சொன்னான்.

 

“எப்போ தூக்கிகிட்டு வந்தானுங்க…?”

 

“அது ஆச்சு… நாலுநாள்… நம்பள கடத்தி இவனுவளுக்கு என்ன கெடைக்க போகுதுன்னு தூக்கிகிட்டு வந்திருக்கானுங்க… முட்டா பசங்க…”

 

“ஏய்…. நம்பள கடத்திகிட்டு வரலடா… இவனுங்க போலீஸ்…”

“அய்யய்யோ… போலீஸா… அப்பன்னா நம்பள ஜெயில்ல போடாம இங்க ஏன் வச்சிருக்கானுங்க…?”

“அதுதான்டா பிரச்சனை… நாம இங்க இருக்கது வெளியே யாருக்குமே தெரியாது. இது பார்க்க ரைஸ்மில் மாதிரி இருந்தது… என்ன பிளான் பண்றானுங்கன்னு புரியல…. ஆனால் ஏதாவது கேட்டால் அப்பாவி மாதிரி சாதிச்சுடுடா… அப்போதான் நாம இங்கிருந்து போக முடியும்… ”

 

“சரிண்ணே….”

இவர்கள் பேசிக்கொண்டிருப்பதை அங்கே ஜெயச்சந்திரன் கேட்டுக் கொண்டிருக்கிறான் என்பதை அறியாமல் இருவரும் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

—————————————————————————————————————————

டிரைவர் ராமனும் மெக்கானிக் குமாரும் ஒரு இருட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். வேளா  வேளைக்கு சாப்பாடு வந்துவிடும். அந்த இருட்டு அறையை தவிர வேறு எங்கும் எதுக்கும்… எதுக்குமே போக முடியாது. இந்த இடத்தில் அடைபட்டு நான்கு நாட்கள் இருக்கும். அதுவும் ஒரு ஊகத்தில் தான் சொல்லமுடியும். இரவு பகல் வித்தியாசம் தெரியவில்லை. எப்பவுமே ஒரே இருட்டாக தான் இருக்கிறது. எப்போவாவது போலீஸ்காரன் வந்தால் மட்டும் ஒரு குண்டு ‘பல்ப்’ எறியும்.

 

“அந்த குழந்தையை காரில் ஏற்றிவிட்டு அந்த தெருவை தாண்டுவதற்க்குள் மடக்கி பிடித்து அந்த குழந்தையையும் காப்பாற்றி நம்பளையும் இங்க வந்து அடைத்து விட்டாங்கலேப்பா…?” டிரைவர் ராமன் குமாரிடம் புலம்பினார்.

 

“மேடம்க்கு தெரிஞ்சாலும் நம்பள காப்பாத்துவாங்க… எங்க இருக்கோம்னே தெரியல… அவங்களுக்கு எப்படி தகவல் சொல்றது…?”

 

“என்னமோ போ… உன்னோட சேந்தா சவாரிக்கு காசு கூட கெடைக்குதேன்னு வந்தால் கலி திங்க வைக்காம விட மாட்டீங்க போல…”

 

“என்ன ராமா… காசு வாங்கும் போதுமட்டும் இனிச்சுது… இப்போ கசக்குதா…?”

 

“ஆமா… வண்டி ஓட்டுறதை தவிர எனக்கு என்ன தெரியும் எல்லாம் தெரிஞ்சவங்கல்லாம் வெளிய இருக்கும் போது நாம மாட்டிக்கிட்டோம்…” அவர்கள் அவர்களுக்கே தெரியாமல் தெளிவாக ஜெயச்சந்திரனுக்கு விபரம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

 

“நீ யார சொல்ற… முத்து அன்னனையா…?”

“ஆமா… அவருக்கு தானே எல்லாம் தெரியும்? அவர விட்டுபுட்டு நம்பள பிடிச்சுகிட்டு வந்திருக்கே… நாளைக்கு நம்பள அடிச்சு கேட்டா என்னாத்த சொல்லி தப்பிக்கிறது….?”

 

“இதுக்கு தான்டா உனக்கெல்லாம் எல்லா விஷயத்தையும் சொல்லக் கூடாதுங்குறது…..”

________________________________________________

“அறிவழகன்…. நாளைக்கு நாலு பேரையும் ஒரே இடத்துல இருக்க வையுங்க… விஷயம் முழுசா தெரிஞ்ச ஆள் குமாரும் முத்துவும்தான்… மத்த ரெண்டு பேரும் அவனுகளுக்கு ஹெல்ப் பண்றவனுங்கதான்… அவனுகளுக்கு ஒன்னும் தெரியாதுன்னு நினைக்கிறேன். ”  மைக்ரோ போன் உதவியால் அவர்களின் உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த ஜெயச்சந்திரன் சொன்னான்.

 

ஜெயச்சந்திரன் இப்படி முடிவு செய்ததாலும் மறுநாள் அவன் ‘விபரம்  தெரியாதவர்கள்’ என்று குறிப்பிட்டவர்களையே உயிர் போகும் அளவுக்கு அடிக்க உத்தரவிட்டான்.
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Niveta Mohan says:

    Yes, jei plan potta thappa mudiyuma sikkittanungale,…..
    But jei… Mathi kuda Time spend pannalaam la…..