Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Share Us On

[Sassy_Social_Share]

இரும்பின் இதயம் – 7

அத்தியாயம் – 7

“ஏங்க… நாளைக்கு ஞாயிற்றுக் கிழமைதானே… என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் வீட்டுக்கு கூப்பிட்டுருக்கேன்… எங்கேயும் வெளியே போயிட மாட்டீங்களே…?”

 

“இல்ல சாருமதி… நாளைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு… நான் வீட்டில் இருக்க மாட்டேன். உன் ஃப்ரெண்ட்ஸ்  உன்னை தானே பார்க்க வருவாங்க… நீ என்ஜாய் பண்ணு…”

 

“ப்ச்… அவங்களுக்கு உங்களை நான் அறிமுகப்படுத்த வேண்டாமா… ப்ளீஸ் இருங்களே….”

 

அவன் லேசாக சிரித்துக் கொண்டு “சாரி…” என்று தோளை  குலுக்கினான்.

 

அவளுக்கு எரிச்சல் வந்துவிட்டது… “எனக்காக இதை கூட செய்ய மாட்டீங்களா…?”  கொஞ்சம் குரலை உயர்த்திக் கேட்டாள்

 

அவன் அவளை கூர்மையாக பார்த்தான். “என்னை கட்டுப்படுத்த முயற்சி செய்யாதே… உன்னால் முடியாது…” உதட்டின் சிரிப்பு மாறாமலே சொன்னான்.

 

அவளுக்கு அழுகை வந்துவிடும் போல் ஆனது. அங்கிருந்து வேகமாக அகன்றாள்.

 

‘துணியும் நகையும் வாங்கிக் கொடுத்துவிட்டால் போதுமா… என்னோட இந்த சின்ன ஆசையை கூட நிறைவேத்தலைன்னா… நான் எந்த அளவுக்கு இவருக்கு முக்கியம்….?’ அவள் மனம் அவளை கேள்விக் கேட்டது.

 

ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே ஒரு டீ-ஷர்ட்டும்  ஜீன்ஸ்ஸும் மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டான்.

 

‘இவன் எங்க இவ்வளவு அவசரமா போறான்…? ‘ என்று சாருமதி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அலைவதை பொருட்படுத்தாமல் சென்றுவிட்டான்.

 

அவன் எங்கே போகிறான் என்று தெரிந்திருந்தால் பயத்தில் நடுங்கியிருப்பாள்.

 

_____________________________________________

 

“குட் மார்னிங் சார்…”

 

“மார்னிங்… சாப்பாடு கொடுத்திங்களா…?” கேட்டுக் கொண்டே அந்த மரப் பட்டறையின் உள்ளே நடந்தான். மரப்பட்டரையின் உள்ளே உள்ள ஒரு அறையில் தான் அவர்கள் நான்கு பேரையும் அடைத்து வைத்திருந்தார்கள்.

 

“கொடுத்தாச்சு சார்…”

 

அவன் உள்ளே போனான். தரையில் ஒரு மூலையில் அமர்ந்திருந்த நால்வரும் எழுந்து நின்றார்கள். அவனுக்கு ஒரு நாற்காலி அங்கு கொண்டுவந்து போடப்பட்டது. அதில் நிதானமாக அமர்ந்தான்.

 

“சொல்லுடா எதுக்குடா அந்த பொண்ண தூக்குனீங்க… டிரைவர் ராமனை  பார்த்து PC மாணிக்கம் கேட்டார். ”

  

“சார்… சார்… எனக்கு ஒன்னும் தெரியாது சார்… கார் ஓட்டுறது மட்டும் தான் சார் என்னோட வேலை…” அவர் ஜெயச்சந்திரனின் முகத்திலிருந்த கடுமையை பார்த்து முகம் வெளிறிப் போய் உண்மையை சொன்னார்.

 

அது உண்மை என்று தெரிந்தும் ஜெயச்சந்திரன் இன்ஸ்பெக்டர் மாறனுக்கு கண் ஜாடை காட்டினான். அவர் ஒரு லத்தியை கொண்டு வந்தார். இரண்டு  PC-க்கள் அவனது இரண்டு கையையும் விரித்து ஒருசேர முட்டிப் பக்கம் திருப்பி பிடித்துக் கொண்டார்கள்.

 

மாறன் தன் உயரத்துக்கு ஓங்கி  அவன் இரண்டு கை முட்டியிலும் ஒரு போடு போட்டார். அவன் வலியில் அலறிக்கொண்டு சுருண்டு கேழே விழுந்தான். அவனை மீண்டும் நிமிர்த்தி அதே மாதிரி மேலும் மூன்று முறை அடித்தான் மாறன்.

 

டிரைவர்  ராமன் வலியில் அரை மயக்கமா கிடந்தார். நான்கு போலீஸ்காரர்கள் சேர்ந்து மிதித்தும் உதைத்தும் புரட்டி எடுத்தார்கள். மீதியிருக்கும் மூன்று குற்றவாளிகளும் பயத்தில் உறைந்து போய் நின்றார்கள். ஒரு கட்டத்தில் ஜெயச்சந்திரன்

 

“ம்ம்… ம்ம்…” என்று நிறுத்த சொன்னதும் அனைவரும் ‘சுவிட்ச் ஆப் ‘ செய்தது போல் அடிப்பதை நிறுத்தினார்கள்.

 

கையால் சைகை செய்து அடிபட்டு ரெத்த வெள்ளத்தில் கிடந்தவனை அப்புறப் படுத்த சொன்னான். நிமிடத்தில் அந்த இடத்திலிருந்து அவன் அகற்றப் பட்டான்.

 

நிதானமாக இதுவரை அமர்ந்திருந்த நாற்க்காலியிலிருந்து எழுந்தான். சுண்டல் கடலை விற்கும் செல்வத்தை பார்த்து “சொல்லு… ” என்றான்.

 

அடியை விட அடி விழப்போகிறது என்ற பயத்திற்கு ஷக்தி அதிகம்… அந்த ஷக்தி வேலை செய்தது.

 

“அய்….யா… என்னை விட்டுடுங்கய்யா…. எனக்கு தெரிஞ்சதை எல்லாம் சொல்லிடுறேங்கையா….” என்று ஜெயச்சந்திரனின் காலில் விழுந்து அழுதான்.

 

“சரி சொல்லு….” என்றான் நிதானமாக.

 

“சுண்டல் விக்கிற இடத்துல விளையாட வர்ரப் பிள்ளைகளை பார்த்து வச்சு… எந்த பிள்ளைகளெல்லாம் தனியா வர்றாங்க… யார் யாரோட பெத்தவங்க கவனக் கொறைவா இருக்காங்க… இதெல்லாம் கவனிச்சு தகவல் சொல்றது பட்டும் தான் சார் என்னோட வேலை…”

 

“தகவல் யாருக்கு கொடுப்ப…?”

 

“இதோ இவங்க ரெண்டுப் பேருக்கும் தாங்க சார்…” என்று பக்கத்தில் இருந்த குமாரையும், முத்துவையும் கையை காட்டினான்.

 

“சரி… பிள்ளைகளை எங்க கொண்டு போவீங்க… இதுவரை எத்தனை பிள்ளைகளை கடத்தியிருக்கீங்க…?”

 

“எட்டு பிள்ளைகள் சார்… ஆனா அவங்கள எங்க கொண்டு போராங்கன்னு சத்தியமா தெரியாது சார்….”

 

“மாணிக்கம் அந்த ‘த்ரீ இன்ச் நீடில்’ கொண்டுவாங்க…”

 

“ஐயோ… வேண்டாம் சார்… வேண்டாம் சார்….” அலறினான். அவன் கேள்விப்பட்டிருக்கிறான். ‘ஊசியை வைத்து நகத்திக்குள் குத்துவார்கள். அப்படி குத்தும் போது ஒவ்வொரு முறையும் செத்து செத்து பிழைக்க வேண்டும்’ என்று… அதனால் பயத்தில் அலறினான். அதை பற்றிய விபரம் அவனுக்கு தெரியாது என்பது ஜெயச்சந்திரனுக்கு நிச்சயமாக தெரியும் என்ற போதும் அவன் செல்வத்தின் மீது இறக்கம் காட்டவில்லை.

 

செல்வத்தின் கைகளை இரண்டு போலீஸ்காரர்கள் பிடித்துக்கொள்ள  மாணிக்கம் ஊசியை எடுத்துக் கொண்டு அவன் அருகில் வந்தார்.

 

“சொல்றேன்… சொல்றேன்…” என்று அலறினான்.

 

அப்போது உள்ளே நுழைந்த மற்றொரு PC “சார் டிரைவர் கேஸ் முடிஞ்சிருச்சு…” என்றான்.

 

ஜெயச்சந்திரன் அவனை அதிர்ச்சியடந்ததை போல் பார்த்தான். பின் “பாடிய டிஸ்போஸ் பண்ணிடுங்க… விஷயம் வெளியே வரக் கூடாது” என்று சாதாரணமாக சொன்னான்.

 

அந்த செய்தி அங்கிருந்த அனைவருக்குமே அதிர்ச்சி என்றாலும் மீதியிருந்த குற்றவாளிகள் மூவரும் அதிர்ச்சியில் உறைந்தேவிட்டார்கள்.

 

செல்வத்தை மட்டும் வேறு ஒரு அறையில் அடைக்க சொல்லிவிட்டு, இப்போது குமாரையும் முத்துவையும் மட்டும் அதே அறையில் அடைக்க சொல்லிவிட்டு வெளியேறினான்.

 

______________________________________

 

“இங்கேயிருந்து வெளியே போகவே முடியாதுடா குமார்…” முத்து ஒருவித நடுக்கத்துடன் சொன்னான். அவன் சமுதாயத்தில் கவுரவமான ஆசிரியர். ஆனால் உண்மையில் பணத்தின் மேல் உள்ள பைத்தியத்தில் எதையுமே செய்யத் தயங்காத குள்ளநரி. அந்த குள்ளநரி உயிருக்கு பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது.

 

“ஏன்ணே அப்படி சொல்ற? மேடம்க்கு தெரிஞ்சா நம்பள விட்டுடுவாங்களா…?” முரட்டுத்தனம் மட்டுமே மூலதனமாகக் கொண்ட மெக்கானிக் கொஞ்சம் தைரியமாக பேசினான்.

 

“தெரிஞ்சாதானேடா…”

 

“என்னண்ணே சொல்ற… எப்படிதான் இங்கேயிருந்து வெளியே போறது. இப்படி இருட்டு ரூம்ல போட்டுவச்சிருக்கானுங்க… தப்பிக்கவும் வழி தெரியல… என்னதான் செய்றது…?”

 

“அப்ரூவரா மாற வேண்டியதுதான். வேற வழியே இல்லை. இங்கிருந்து உயிரோட போகணுன்னா அதுதான் ஒரே வழி…”

 

“சும்மா உலராத… அப்ரூவரா மாறுனா மேடம் சிக்கல்ல மாட்டிக்குவாங்க… அப்புறம் வெளியே போயும் ஒரு பயனும் இல்ல…”

 

“உனக்கு இந்த ASP ஜெயச்சந்திரனை பத்தி தெரியலடா… உக்காந்த இடத்திலேயே இவன் எல்லா வேலையும் செய்வான்னு கேள்வி பட்டிருக்கேன். ஆனால் இன்னைக்கு நேர்லயே பார்த்துட்டேன். வீணா அடி வாங்கி சாகாம சொல்றதை கேளு…”

 

இருவரும் தாங்கள் பேசிக்கொள்வது ‘ரெகார்ட்’ ஆகிக்கொண்டிருப்பது தெரியாமல் தீவிர விவாதத்தில் இருந்தார்கள்.

 

மாலை மீண்டும் ஜெயச்சந்திரன் அந்த கட்டிடத்திற்கு வந்தான். இருவரையும் தனித்தனியாக விசாரித்தான். இருவரும் உண்மையை கக்கினார்கள்.

 

“இப்போ பிள்ளைகள் எல்லாம் சென்னைல இருக்குதுங்க சார்… பத்து பிள்ளைகள் சேர்ந்தவுடன்  மும்பைக்கு கொண்டு போய் வித்துவிடுவோம். அதுக்கு அப்புறம் அவங்க பிள்ளைகளை என்ன செய்வாங்கன்னு எங்களுக்கு தெரியாது.”

 

“சென்னைல எங்க வச்சுருக்கீங்க…”

 

“வேளச்சேரியில… ரூபா மேடம் பாதுகாப்புல இருக்காங்க சார்….”

 

“நடிகை ரூபாவா…?”

 

“ஆமா சார்…”

 

நடிகை ரூபா சில வருடங்களுக்கு முன் நம்பர் ஒன் கதாநாயகி. இப்போது அவளுக்கு படங்கள் எதுவும் இல்லை… அவள் குடும்பப் பாங்கான வேஷங்களில் மட்டும் நடிப்பாள். ஆனால் உண்மையில் மந்திரி ஒருவரின் ஆசைநாயகி என்று ஒரு பேச்சு உண்டு.

 

“அவங்களுக்கும் இந்த கடத்தலுக்கும் என்ன சம்பந்தம்?”

 

“அவங்க தான் சார் எங்களுக்கு சம்பளம் கொடுப்பாங்க…. இதை செய்றதே அவங்க தான்.”

 

ஒரே மாதிரி தகவலை இருவரும் தனித்தனியாக தனித்தனி அறையிலிருந்து சொன்னார்கள்.
Comments are closed here.