Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

கனல்விழி காதல் - 20

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 59

அத்தியாயம் – 59

நரேந்திரமூர்த்தி கீழே சென்ற சில நிமிடங்களிலேயே இராஜேஸ்வரி மகனைத் தேடி வந்தாள். “அண்ணன் சொன்னது உண்மையா? அவளை உள்ள வர சொன்னியா?” – அவள் விழிகள் மகனின் முகத்தை துளைத்தன.

 

“ம்ம்ம்…” – தாயை நிமிர்ந்து பார்க்காமல் கீழே குனிந்தபடியே ‘உம்’ கொட்டினான்.

 

‘என்ன!’ – மகனை அதிர்ச்சியுடன் பார்த்தாள் இராஜேஸ்வரி.

 

“ஏன்? அவளுக்கு என்ன உரிமை இருக்கு இங்க?” – ஆற்றாமையுடன் கேட்டாள். கசந்த புன்னகை ஒன்று தோன்றியது அவன் முகத்தில்.

 

“தேவ்… அவர் பண்ணிட்டு போன அசிங்கத்தை நீ அங்கீகரிக்கிறியா?” – படபடப்புடன் கேட்டாள்.

 

‘இல்லை’ என்பது போல் தலையசைத்தவன், “அதை நா அங்கீகரிச்சிருந்தேன்னா அவரோட பிணம் கூட இந்த வீட்டுக்குள்ள வந்திருக்க முடியாதும்மா” என்றான் அழுத்தமாக.

 

“அப்புறம் ஏண்டா அவளை உள்ள விட சொல்லுற?” – இராஜேஸ்வரியின் குரல் நடுங்கியது. அவன் கண்களை இறுக்கமாக மூடித்திறந்தான். “சில கசப்பான உண்மைகளை நாம மறுக்க முடியாதும்மா.. அவங்க ரெண்டு பேரும் இருபத்தியஞ்சு வருஷம் சேர்ந்து வாழ்ந்தது உண்மைதானே… அவரோட இறுதிச்சடங்குல கலந்துக்குற தார்மீக உரிமை அந்த பொம்பளைக்கு இருக்கு…” – உணர்வுகளற்ற இயந்திரம் போல் பேசினான்.

 

‘எப்படி! எப்படி இவனால் இந்த வார்த்தையை சொல்ல முடிந்தது! என்னுடைய உரிமைகளை பறித்தவள்! என்னுடைய குடும்பத்தை சிதைத்தவள்! என்னுடைய சந்தோஷத்தை அழித்தவள்! அவளுடைய தார்மீக உரிமையைப் பற்றி என் மகனே பேசுகிறானா!’ – அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வேதனையோடு மகனைப் பார்த்தாள்.

 

“சாகறவரைக்கும் அவரை வீட்டுக்குள்ள விடாம வச்சிருந்தியே தேவ்! கடைசிவரைக்கும் அவர் முகத்திலேயே முழிக்கலையே நீ… இதுக்குத்தானா? அந்த தரங்கெட்டவளுக்கு வக்காலத்து வாங்கத்தானா? அவளுக்கு சாதகமா எப்படிடா பேசுற? என்ன ஆச்சு உனக்கு?” – மகனின் சட்டையை பிடித்து உலுக்கினாள். கண்ணீர் தாரைதாரையாக கொட்டியது. தாயை அனைத்துப் பிடித்துக் கொண்ட தேவ்ராஜின் உடல் நடுங்கியது.

 

“என்னால அவரோடதாம்மா போராட முடியும். அவர் வச்சுக்கிட்டிருந்த பொம்பளையோட இல்ல…” – அளவில்லா துக்கத்திலும் வெறுப்பிலும் அவன் குரல் கரகாரத்தது. உடல் இறுகியது. மகனின் உள்ளக்கொதிப்பை உணர்ந்துகொண்ட இராஜேஸ்வரி, “தே…வ்…! என்… மக…னே…!” என்று அவனை கட்டிக் கொண்டு குலுக்கினாள்.

 

‘எனக்கு பிள்ளையாய் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக எத்தனை இன்னல்களை சந்தித்துவிட்டான் என் மகன்!’ – அவள் உள்ளத்தில் வேதனை பொங்கியது. இவன் மட்டும் இல்லையென்றால் இன்று இந்த குடும்பத்தின் நிலை என்னவாகியிருக்கும் என்கிற உண்மை அவள் நெஞ்சை கணக்கச் செய்தது. அவர் விட்டுச் சென்ற பிறகு இந்த குடும்பத்தை உயர்த்த அவன் பட்டபாடுகளும்… இழந்த சந்தோஷங்களும் கொஞ்சமா நஞ்சமா…! – மகனை நினைத்து அவள் மனம் கசிந்தது.

 

இன்று அவளை தடுக்க… அவளோடு போராட அவன் விரும்பவில்லை. வேண்டாம்… போராட வேண்டாம்… வாழ்க்கை முழுக்க அவன் போராடிக் கொண்டே இருக்க வேண்டுமா…! யார் வேண்டுமானாலும் வரட்டும் போகட்டும்… எதைப்பற்றியும் கவலையில்லை… என் மகனுடைய விருப்பம்… அவனுடைய நிம்மதி… அவனுடைய முடிவு… அதுதான் எனக்கு முக்கியம் என்று முடிவு செய்து, “நீ என்ன நினைக்கிறியோ செய்ப்பா. எதுவா இருந்தாலும் நீ எடுக்கறதுதான் முடிவு…” என்று நிறைந்த மனதோடு மகனுடைய முடிவுகளுக்கு வழிவிட்டு ஒதுங்கினாள் அந்த தாய்.

 

விஷயத்தை கேள்விப்பட்ட மதுரா ஆச்சர்யப்பட்டாள். தேவ்ராஜின் இந்த புது பரிமாணம் அவளை வியப்பில் ஆழ்த்தியது. மோனிகா விஷயத்தில் அவன் இப்படி ஒரு முடிவை எடுப்பான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. மாயாவும் பாரதியும் கொதித்துப்போனார்கள். உறவினர்கள் அவர்களிருவரையும் சமாதானம் செய்து அறைக்கு அழைத்துச் சென்றபிறகு, மோனிகா உள்ளே அனுமதிக்கப்பட்டாள். சிவமாறனை வந்து பார்த்து அழுதாள்… அவருக்கு செய்ய வேண்டிய இறுதி மரியாதையை செய்தாள். சற்று நேரம் இருந்துவிட்டு எந்த சச்சரவும் செய்யாமல் கிளம்பிவிட்டாள்.

 

இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளெல்லாம் செய்யப்பட்டுவிட்டன. சம்பிரதாயப்படி செய்ய வேண்டிய சடங்குகள் செய்யப்பட வேண்டும். அதற்கு தேவ்ராஜ் கீழே வர வேண்டும். வருவானா! மதுராவின் மனம் அடித்துக் கொண்டது. காலையிலிருந்து எத்தனையோ முறை அவனிடம் பேசிப் பார்த்துவிட்டாள். அவனுக்கு நெருக்கமான சில பெரிய மனிதர்கள் கூட பேசிப்பார்த்துவிட்டார்கள். ஒரு பலனும் இல்லை. அவன் மனதை கரைக்கவே முடியவில்லை.

 

பெற்ற தந்தை பிணமாகக் கிடக்கிறார். அவர் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல் இப்படி பிடிவாதமாக அமர்ந்திருக்கிறானே! அவன் மனதிற்குள் எத்தனையோ காயங்கள். அந்த காயங்களோடு இந்த நிகழ்வும் இன்னொரு காயமாக சேர வேண்டுமா? மனதில் மலைபோல் வெறுப்பை சேர்த்து வைத்துக் கொண்டே இருந்து எதை சாதிக்கப் போகிறான்! வேதனைதானே மிஞ்சும்! – கணவனுக்காக அவள் மனம் வருந்தியது. மீண்டும் ஒருமுறை மாடிக்கு ஓடினாள்.

 

காலையிலிருந்து பச்சைத்தண்ணீர் கூட அருந்தாமல் இதே நிலையில்தான் அமர்ந்திருக்கிறான். தனிமையும் தேவையற்ற சிந்தனைகளும் மனிதனை கொன்றுவிடாதா! “தேவ்…” – கணவனிடம் நெருங்கி தரையில் மண்டியிட்டு அமர்ந்து அவன் கைகளை பிடித்தபடி மெல்ல அழைத்தாள். மனைவியை நிமிர்ந்து பார்த்தான் தேவ்ராஜ்.

 

“வேண்டாம் தேவ்… இந்த பிடிவாதம் உங்களுக்கு நிம்மதியை கொடுக்காது. வாழ்க்கையில எல்லாருமே ஒருகட்டத்துல தப்பு பண்ணத்தான் செய்யிறோம். யாருமே யாரையுமே மன்னிக்கலன்னா இந்த உலகம் வெறுப்புலேயே அழிஞ்சிடாதா… தயவுசெஞ்சு கொஞ்சம் இறங்கி வாங்க… கீழ வந்து உங்க அப்பா முகத்தை ஒரு தரம் பாருங்க…” – கனிவோடு அவனுக்கு எடுத்துக் கூறினாள்.

 

பெருமூச்சுடன் அவளிடமிருந்து கையை உருவிக் கொண்டவன், “கீழ போ…” என்றான் வறண்ட குரலில்.

 

“உணர்ச்சிவசப்பட்டு எடுக்கற எந்த முடிவும் சரியானதா இருக்காது தேவ். கொஞ்சம் நிதானமா யோசிச்சு பாருங்க. உங்க அப்பா அவரோட கடமையை செய்யல… அதுக்காக நீங்களும் அதையே செய்யணுமா சொல்லுங்க?” – அவள் பதில் சொல்லவில்லை. அசையாமல் சிலை போல் அமர்ந்திருந்தான்.

 

“இன்னைக்குத்தான் தேவ் கடைசி வாய்ப்பு… இதை தவறவிட்டுட்டீங்கன்னா அப்புறம் எவ்வளவு வருத்தப்பட்டாலும் எதுவும் செய்ய முடியாது…”

 

“வருத்தப்படறதா! ஹா… அதெல்லாம் நிறைய பட்டாச்சு… இனி புதுசா என்ன படப்போறோம்… நீ கிளம்பு” – விரக்தியாகப் பேசினான்.

 

“தப்பு பண்ணறவங்களை தண்டிக்கிறதை விட மன்னிக்கும் போதுதான் தேவ் நமக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்… ஒரு தரம் முயற்சி பண்ணிதான் பாருங்களேன்…” – அவளால் முடிந்த அளவு அவனுக்கு எடுத்துக்கூறினாள்.

 

“மன்னிக்கிறதா! அவரையா! தப்புப் பண்ணினவங்கள மன்னிக்கலாம்… துரோகம் பண்ணினவங்கள எப்படி மன்னிப்ப? அவர் பண்ணின துரோகத்தோட வலி இன்னமும் என் நெஞ்சுல ஆறாம இருக்கு… தெரியுமா உனக்கு?” – சீறினான்.

 

“அப்பா அம்மாவோட அரவணைப்புல கஷ்ட்டம் தெரியாம சுகமா வளர்ந்த உனக்கு என்னோட வலி புரியாது. இப்படி வந்து வெட்டி நியாயம் பேசத்தான் தோணும்… போ இங்கிருந்து…” – ஆவேசப்பட்டு அவளை விரட்டினான். ரௌத்திரம் தெறிக்கும் அவன் முகத்தை பார்க்கவே அச்சமாக இருந்ததது. ஆனால் அஞ்சி ஒதுங்கும் நேரம் அல்லவே இது… மனதில் தைரியத்தை கொண்டுவந்து அவன் கையை பிடித்தாள்.

 

“அவரு உங்க அப்பாதானே தேவ்… இதே தப்பை நீங்க பண்ணியிருந்தா அவ உங்களை மன்னிக்காம போயிடுவாரா? செத்துப்போன மனுஷனுக்கு கடைசிகாரியம் செய்யக் கூட உங்களுக்கு மனசு இல்லையா!” – ஆற்றாமையுடன் கேட்டாள்.

 

“இல்ல…” – முரட்டுப்பிடிவாதத்துடன் கூறினான்.

 

“இப்படி கல்லு மாதிரி இருந்து என்னத்த அள்ளி கட்டிக்க போறீங்க? கொஞ்சம் கூட உங்க மனசுல ஈவு இரக்கமே இல்லையா? அந்த மனுஷன் செத்தே போய்ட்டாரு… இன்னமும் அவர்மேல வன்மமா இருக்கீங்களே! அவ்வளவு கல்லா உங்க மனசு?” – ஆத்திரப்பட்டாள்.“ஆமாம்… கல்லுதான்…. என்கிட்ட மனசு இல்ல… மனசாட்சி இல்ல… இங்க வெறும்… வெறும் கல்லுதான் இருக்கு” என்று மடார் மடாரென்று நெஞ்சைத்தட்டிக் காட்டியவன், “போதுமா இல்ல… இன்னும் ஏதாவது தெரிஞ்சுக்கணுமா?” என்றான் சீற்றத்துடன். அவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போதே, யாரோ கதவை திறந்தார்கள். கணவன் மனைவி இவருடைய பார்வையும் அறைவாசல் பக்கம் செல்ல, அங்கே இராஜேஸ்வரியோடு நரேந்திரமூர்த்தியும் உள்ளே வந்து கொண்டிருந்தார்கள்.

 

“கீழ எல்லாம் ரெடியாயிடிச்சுப்பா.. நீ வரணும்” என்றார் நரேந்திரமூர்த்தி.

 

எழுந்து நின்று கைகளை பின்னால் கட்டிக்க கொண்டு, “நா வரல… நீங்களே பார்த்துக்கோங்க” என்று இறுகிய குரலில் பிடிவாதத்துடன் கூறினான்.

 

“தேவ்!!” – பதட்டத்துடன் வெளிப்பட்டது இராஜேஸ்வரியின் குரல். அவனுடைய பார்வை தாயின் முகத்தில் படிந்தது.

 

“நீ என்ன வேணுன்னாலும் சொல்லு… எவ்வளவு கோவமா வேணுன்னாலும் இரு… ஆனா இதை தவிர்க்க முடியாதுப்பா… அவரோட ஒரே பையன் நீ… இந்த பாவத்தை பண்ணிடாத…” – பரிதவிப்புடன் மகனை நோக்கினாள்.

 

“நா அவரோட பையன் இல்ல… எனக்கும் அவருக்குமான உறவு எப்பவோ அறுந்து போச்சு”

 

“தே…வ்…!!!” – நடுங்கியது இராஜேஸ்வரியின் குரல்.

 

“வேண்டாம் தேவ்… அப்படி சொல்லாத… ஆயிரம் தப்பு பண்ணியிருந்தாலும் அவர் உன்னோட அப்பா… அவருக்கு செய்ய வேண்டியதை செஞ்சுடு…” – தாயின் உடைந்த குரலும் ஆறாய் பெருகும் கண்ணீரும் அவனை வதைத்தது.

 

“இந்த கண்ணீருக்கு அவர் தகுதியானவர் இல்லம்மா…” என்றான் வருத்தத்துடன்.

 

“இந்த மனசுக்கு அதெல்லாம் தெரியிலையேப்பா… உன்ன மாதிரி அழுத்தமா என்னால இருக்க முடியலையே!” என்று உடைந்து அழுதவள், “வாப்பா… வந்து அவருக்கு செய்ய வேண்டியதை செய்…” என்று மகனின் கையைப் பிடித்து இழுத்தாள். அவன் அசையவே இல்ல. திகைப்புடன் அவனைப் பார்த்த இராஜேஸ்வரி, “அவரு ரொம்ப பெரிய கொடுமையை எனக்கு செஞ்சுட்டுப் போய்ட்டாரு… அதைவிட பெரிய கொடுமையை நீயும் எனக்கு செஞ்சுடாத… உன்ன கெஞ்சி கேட்டுக்கறேன்…” – கண்ணீர் கொட்டியது.

 

“ஆயிரம் பேரு சுத்தி நின்னாலும் அவர் பிணத்துக்கு பக்கத்துல நீ இல்லன்னா அது அனாதை பிணம்தான்டா… நீ கொள்ளி வைக்கலன்னா அது இரவல் கொள்ளிதான்… அந்த கொடுமையை எம்புருஷனுக்கு நீ செஞ்சுடாத… அதை தாங்கற சக்தி என்கிட்ட இல்ல… உன்ன கையெடுத்து கும்பிடறேன்…” – “ம்மா… போதும்… போதும்…” – மேலே பேசவிடாமல் தாயை அதட்டி அடக்கினான்.

 

அவளுடைய கண்ணீரை பார்க்க முடியவில்லை அவனுக்கு. அவளுடைய அழுகையை தாங்க முடியவில்லை. இந்த கண்ணீரை நிறுத்த… இந்த வேதனையை போக்க எத்தனையோ போராட்டங்களை சந்தித்திருக்கிறான்… இன்று மீண்டும் இன்னொரு போராட்டம்… விருப்பமே இல்லாமல்… சிறிதும் மனம் ஒப்பாமல் கீழே செல்ல முடிவெடுத்தான்.

 
6 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  உணர்சிபூர்வமான பதிவு,இங்கே அவரவர்க்கு அவரவர் செய்வது நியாயம்தான்,யாரையும் குறைகூற முடியாது.

  நன்றி


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Sow Dharani says:

  Very emotional update


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  Dev oda manaporatathuku eppodhudhaan vidivu kidaikumo


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  nice ud sis


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  jayashree swaminathan says:

  Hi thanks for a lovely update!as usual you have dealt with feelings .superb narration.


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Priya Priya says:

  FIRST