Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

kanal60

Share Us On

[Sassy_Social_Share]

கனல்விழி காதல் – 60

அத்தியாயம் – 60

தேவ்ராஜ் சிவமாறனைப் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன. வீட்டில் நடந்த திருமணம்… நல்லது கெட்டது எதற்கும் அவரை அழைக்கவில்லை… அவராக வந்தாலும் அனுமதிக்கவில்லை. எள்ளளவும் அவன் அவரை மதிக்கவில்லை. துரும்பைவிட கேவலமாக நடத்தினான். செக்யூரிட்டியைவிட்டு வெளியே துரத்தியடிக்கச் சொன்னான்… பிச்சைக்காரனைப் போல் நாள் முழுக்க கேட்டிற்கு வெளியே நிறுத்திவைத்தான். மிகப்பெரிய கடன் சிக்கலில் சிக்க வைத்தான். செதில் செதிலாக அவரை சிதறடிக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் செய்தான். அனைத்திற்கும் காரணம் அவர் செய்த துரோகம்… அவர் கடமை தவறினார்… அவருடைய மரியாதையை இவன் குலைத்தான். நியாயம் என்று மனதிற்குப் பட்டதைத்தான் செய்தான். இப்போதும் அதை சரி என்றுதான் நினைக்கிறான். ஆனால் உள்ளுக்குள் ஏதோ ஒரு நடுக்கம்… அவர் முகத்தை பார்க்க முடியாத தயக்கம்… அதை கோபம் என்றுதான் இவ்வளவு நேரம் நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அதையும் தாண்டிய ஒரு உணர்வு… குறுகுறுப்பு… வலி… இன்னதென்று சொல்ல முடியவில்லை… அந்த கண்ணாடிப்பெட்டியை நெருங்க நெருங்க அவன் கால்கள் வலுவிழப்பதை உணர்ந்தான்.

 

இவ்வளவு நேரமும்வெளியே வராத அவருடைய மகன் இப்போது வருகிறான் – அவனுடைய கோபமும் அதற்கான காரணமும் ஊரறிந்த விஷயம் என்பதால் அனைவருடைய பார்வையும் அவன் மீதே பதிந்திருந்தது. ஒரு பக்கம் நரேந்திரமூர்த்தி, இன்னொரு பக்கம் இராஜேஸ்வரி, பின்னால் மதுரா… மூவரோடும் சேர்ந்தார் போல் நடந்து கண்ணாடிப்பெட்டியை நெருங்கினான். நெஞ்சுக்குழிக்குள் ஒரு அழுத்தம்… அடிவயிற்றில் ஒரு கலக்கம்… தொண்டையை பிடிப்பது போன்ற உணர்வு … கண்களை கரித்தது… சமாளிக்க முடியவில்லை… இறுதியாக அவர் முகத்தை பார்க்க வேண்டும் என்கிற உந்துதல்… ஆம்… அவனுக்குள் முட்டி மோதிய அந்த உந்துதலை அவன் உணர்தான்.

 

தயக்கத்துடனும் தடுமாற்றத்துடனும் அவன் பார்வை கண்ணாடிப்பெட்டிக்குள் துயில்கொண்டிருக்கும் அவர் முகத்தில் பதிந்தது. ஆழிப்பேரலை போல் உள்ளே ஒரு பேருணர்வு பொங்கி அவனை புரட்டிப்போட, ‘ஓ…’ என்று ஓங்கி ஒலித்த அவன் ஓலத்தை தொடர்ந்து பெரிய சத்தத்துடன் அதிர்ந்தது அவர் படுத்திருந்த கண்ணாடிப்பெட்டி. அதிர்ச்சியில் திடுக்கிட்டுப்போன அனைவரும் என்ன நடந்தது என்று ஊகிப்பதற்குள் இன்னொரு முறை அதிர்ந்தது அந்த கண்ணாடிப்பெட்டி. அதைத் தொடர்ந்து, “இந்த மனுஷிக்காக நீ ஒழுங்கா இருந்திருக்கக் கூடாதய்யா…! இந்த மனுஷிக்காக நீ ஒழுங்கா இருந்திருக்கக் கூடாதாய்யா…!” என்று அங்காரமாகக் கத்தியபடி மேலும் இருமுறை அவர் படுத்திருந்த பெட்டியை ஓங்கி ஓங்கி அடித்தான். மூன்று முறை அவன் அடியை தாங்கிய கண்ணாடி நான்காவது முறை தெறித்து ஐந்தாவது முறை நொறுங்கியது… நொடியில் அந்த இடமே இரத்த வெள்ளமாக மாறியதில், “ஆ…” – “ஐயோ…” – “கடவுளே! என்று பலவித குரல்கள் ஒருங்கே ஓங்கி ஒலித்தன. “ஐயையோ… கையி… தே…வ்… ரெத்தம்… பிடிங்க.. பிடிங்க…” – கணவனை தடுக்க முடியாமல் சத்தம் போட்ட மதுராவின் உடல் பேரதிர்ச்சியில் நடுங்கியது. “ஏ… ஏய்… தேவ்… விடு… விடுடா… ஏய்..” என்று அவனை பிடிக்க முயன்ற நரேந்திரமூர்த்தியின் முயற்சி, புலியோடு போராடும் பூனையின் முயற்சியாக பலனற்றுப் போனது…

 

“எப்படிய்யா… எப்படி விட்டுட்டு போன…? எப்படி நீ போகலாம்…” – நரேந்திரமூர்த்தியையும் தன்னை சுற்றி நின்றி தடுக்கும் பெண்களையும் மீறிக் கொண்டு மீண்டும் பெட்டியை உடைக்க முயன்றவனை அருகிலிருந்த ஆண்கள் சிலர் பாய்ந்து வந்து பிடித்தார்கள்.

 

“தே…வ் பாய்… விடுங்க… விட்டுடுங்க…” என்று பாரதியும் தவித்துவிழுந்தாள். கணப்பொழுதில் மகனின் கை… சட்டை… கண்ணாடிப்பெட்டி… தரை என்று எங்கு பார்த்தாலும் ரெத்தமாகிவிட்டதைக் கண்டு பதறிய இராஜேஸ்வரி வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டாள். எங்கோ அமர்ந்திருந்த மாயாவும் பதறியடித்துக் கொண்டு தமையனை நெருங்கினாள். அதற்குள் கூட்டம் அவர்களை சுற்றிவளைத்துவிட்டது. நரேந்திரமூர்த்தியும் இன்னும் சிலரும் தேவ்ராஜை வலுக்கட்டாயமாக அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த முயன்றார்கள். மதம்பிடித்த யானையை கட்டி இழுப்பது போல் அனைவரும் ஒன்றுகூடி இழுக்க, அவனோ யாருக்கும் அடங்காமல் திமிறினான். காட்டாற்றின் வெள்ளம் போல் கரைபுரண்டன அவன் உணர்வுகள்.

 

“ஐயையோ… தெரியாம கூட்டிட்டு வந்துட்டேனே… எப்படியாவது அந்த பக்கம் இழுத்துகிட்டு போயிடுங்களேன்… கடவுளே! எவ்வளவு ரெத்தம்!” – பெற்றவளின் மனம் துடித்தது. தலை கிறுகிறுத்து கண்களை இருட்டிக் கொண்டு வந்தது. அவளை இரண்டு பேர் பிடித்து அமரவைக்க வேண்டியதாகிவிட்டது. பெரும் போராட்டத்திற்குப் பிறகு தேவ்ராஜை வேறுபக்கத்திற்கு இழுத்துச் சென்று அவனுடைய கை காயத்திற்கு வைத்தியம் செய்ய முற்பட்டார்கள். அவ்வளவு சுலபமாக அது சாத்தியப்படும் போல் தோன்றவில்லை. அவ்வளவு போரையும் இழுத்துத்தள்ளும் சக்தி அவன் ஒருவனுக்கு எங்கிருந்து வந்து. அவ்வளவும் ஆண்டுக்கணக்கில் அடக்கியதாக்கி வைத்திருந்த உணர்வுகளின் வெளிப்பாடு. எரிமலைபோல் வெடித்துச் சிதறினான். அந்த ஆக்ரோஷத்தை கண்கொண்டு பார்த்தவர்களின் அதிர்ச்சியை வார்ததையில் வடிக்க முடியாது. இது ஏதோ விபரீதத்தில்தான் முடியப்போகிறது என்கிற அச்சத்தில் அனைவரும் உறைந்து போன தருணத்தில் அவன் தானாகவே மெல்ல ஓய்ந்து… தளர்ந்து அமர்ந்தான். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு அவனுடைய காயம்பட்ட கைக்கு வைத்தியம் பார்க்கப்பட்டது.

 

சற்றுநேரத்தில் அனைவரையும் ஆட்டிப்படைத்துவிட்டு ஒன்றும் தெரியாத பச்சைக்குழந்தை போல் அமைதியாக அமர்ந்திருக்கும் மகனைக் கண்ட இராஜேஸ்வரி, “அடேயப்பா… தெரியாம கூட்டிட்டு வந்துட்டேண்ணா இவனை! மேல அழைச்சுக்கிட்டு போயி… தூக்கத்துக்கு மாத்திரை கீத்திரை கொடுத்து படுக்க வச்சிருங்க… இங்க செய்ய வேண்டியதையெல்லாம் துருவனை வச்சு செஞ்சுக்குவோம்” – பீதியுடன் கூறினாள் இராஜேஸ்வரி.

 

“இல்ல ராஜி… அவன் மனசுல இருந்ததையெல்லாம் கொட்டித்தீர்த்துட்டான். கொஞ்ச நேரத்துல ரிலாக்ஸ் ஆயிடுவான். அவனே செய்வன் நீ பதறாத”

 

“இவ்வளவு ரெத்தம் போயிருக்கே அண்ணா…” – மகன் சிந்திய இரத்தத்தை நினைத்தாலே அவள் வயிறெல்லாம் கலங்கியது.

 

“எல்லாம் சரியாயிடும் ராஜி… இன்னையோட எல்லாம் முடிஞ்சதுன்னு நினைச்சுக்க” – தங்கைக்கு ஆறுதல் கூறினார். அவர் சொன்னபடியேதான் நடந்தது. தேவ்ராஜின் மனம் இயல்புநிலைக்கு திரும்ப சில மணிநேரங்கள் எடுத்தாலும் உறவினர்கள் பொறுமையாக காத்திருந்ததால் அவனே அனைத்து காரியங்களையும் செய்ய முடிந்தது.

 

சிவமாறனின் மறைவுக்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு வாரம் நரேந்திரமூர்த்தியின் குடும்பம் தேவ்ராஜின் வீட்டில்தான் தங்கியிருந்தது. திலீப் மட்டும் அதில் விதிவிலக்கு. முழுநேரமும் அவனால் அங்கு இருக்க முடியவில்லை என்றாலும் அவ்வப்போது வந்து பார்த்துவிட்டு சென்றான். அடுத்தடுத்த நாட்களில் நடக்கும் சாங்கியங்களிலும் தவறாமல் கலந்து கொண்டான்.
சிவமாறன் என்னதான் குடும்பத்திலிருந்து விலகியே இருந்திருந்தாலும், இழப்பின் தாக்கம் வீட்டில் அனைவரிடமும் இருந்தது. அதிலும் தேவ்ராஜும் பாரதியும் தான் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பது போல் தோன்றியது. அழுதழுது மாய்ந்தேனும் மெல்ல தேறி வந்தாள் பாரதி. ஆனால் தேவ்ராஜ் ஒருமாதிரி இறுக்கமாகவே இருந்தான். அவனை தேற்றி இயல்புநிலைக்கு கொண்டுவர வேண்டுமே என்கிற கவலை மதுராவை பயங்கரமாக பீடித்தது. தன்னால் முடியுமா என்கிற தயக்கத்தை மீறி முடிய வேண்டும் என்கிற பிடிவாதத்தை தனக்குள் ஆழமாக வேரூன்றிக் கொண்டு அவனை சுற்றிச் சுற்றி வந்தாள். சற்று நேரம் அவன் தனிமையில் அமர்ந்திருந்தாலும் விடாமல் சென்று ஏதாவது பேச்சு கொடுத்தாள். இரவில் உறக்கம் வராமல் அவன் எழுந்து உலாவும் போது தன்னுடைய தூக்கத்தை தூர எறிந்துவிட்டு அவனோடு சேர்ந்து நடைபழகினாள். நேரம் தவறாமல் அவனுடைய காயம்பட்ட கையை கவனித்து மருந்திட்டாள். அப்படி மருந்திடும் போது அவன் முகம் சற்றே சுளித்தாலும் இவளுக்கு உள்ளே சுரீரென்று வலிக்கும். பூவிதழோ… மயிலிறகு என்பது போல் மென்மையான வருடலில் அவனுடைய காயத்தை சுத்தம் செய்து மருந்து பூச பழகிக் கொண்டாள். அவளுடைய அக்கறையும் அரவணைப்பும் அவனுடைய மனக்காயத்திற்கும் சேர்த்து அருமருந்தாக மாறியது.

 

இப்படியே ஒரு வாரம் ஒட்டுப்புல் போல அவனை சுற்றிக் கொண்டே திரிந்ததில் உள்ளூர அவளுக்குள் ஒரு மாற்றம் உண்டாவதை உணர்ந்தாள். அவளுடைய சின்ன உலகத்தில் அனைத்திற்கும் மேல் அவன்தான் என்பது போல் ஒரு எண்ணம் அவளுக்குள் தோன்ற துவங்கியது. இவ்வளவு நாளும் அவன் மீது ஆசை இல்லாமல் இல்லை… அது ஒரு விதம்… ஈர்ப்பும் பாசமும் கலந்த ஒரு கலவையான உணர்வு… ஆனால் இப்போது அதையும் தாண்டி ஒரு அழுத்தமான அன்பை உணர்கிறாள். அந்த அன்பை உணர்ந்த மனதிற்கு அவனுடைய துன்பங்களை சகித்துக்கொள்ள முடியவில்லை… அவனுடைய வலிகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு நொடியும் அவனைப்பற்றியே சிந்தித்து… அவனுக்காகவே செயல்பட்டு… பூனைக்குட்டிப் போல் அவனையே சுற்றி வரும் மதுராவின் மீது அவனுக்கும் அன்பு ஆறாய் பெருகியது.

 

புரையோடி போயிருந்த காயத்தை கீறி சுத்தம் செய்வது போல் மனதில் மண்டிக்கிடந்த வெறுப்பை மொத்தமாகக் கொட்டிக் கவிழ்த்துவிட்டதாலோ… அல்லது அந்த புண்ணுக்கு புனுகு பூசுவது போல் மதுரா இதமாக நடந்துகொண்டதாலோ தேவ்ராஜின் மனம் வெகுவாய் ஆறுதலடைந்திருந்தது. அதுமட்டும் அல்ல… கூட்டுப்புழு போல் அவன் மதுராவின் இணக்கத்தில் இதம் காண துவங்கியிருந்தான். அவளுக்குள் மொத்தமாக தன்னை இழந்துக் கொண்டிருந்தான். எதற்கெடுத்தாலும் மதுரா மதுரா என்று அவளை ஊறுகாய் போல் தொட்டுக்கொள்ள துவங்கியிருந்தான். அதை அவளும் வெகுவாய் ரசித்தாள். இந்த சூழ்நிலையில் தான் மதுராவின் கல்லூரித் தோழி ஒருத்தி அவளை சந்திக்க வந்திருந்தாள்.

 

மதியம் ஒரு மூன்று மணியிருக்கும். தந்தையின் இழப்பை எண்ணி வருந்திக் கொண்டிருந்த தங்கையின் மனதை திசைதிருப்புவதற்காக மாயா பாரதியை வெளியே அழைத்துச் சென்றிருந்தாள். இராஜேஸ்வரி தன்னுடைய அறையில் ஓய்வாக படுத்திருந்தாள். மதுரா மட்டும் தேவ்ராஜின் நினைவுகளை அசைபோட்டபடி தனியாக வீட்டை சுற்றி வைத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் கையிலிருந்த அலைபேசி ஒலித்தது. அவளுடைய தோழி சோனியா அழைத்திருந்தாள். மதுரா மிகவும் உற்சாகமாகிவிட்டாள்.

 

“ஹேய் சோனி… எப்படி இருக்க?” என்று மகிழ்ச்சியாக பேசத் துவங்கினாள் மதுரா.

 

“நான் நல்ல இருக்கேன். உன்ன பார்க்கறதுக்காக வந்திருக்கேன் ஆனா செக்யூரிட்டி உள்ள அனுமதிக்க மாட்டேங்கிறாரே! உன்ன பார்க்கறது அவ்வளவு கஷ்ட்டமான விஷயமா?” என்றாள் உள்ளே துளிர்த்த கோபத்தை மறைக்க முயன்றபடி.

 

“என்ன சொல்ற… அப்படி சொல்லியிருக்க மாட்டாரே” என்றாள் மதுரா குழப்பத்துடன்.

 

“வேணுன்னா நீயே கேளு” என்று கூறி அலைபேசியை கைமாற்றினாள்.

 

“என்ன சார்… ஏன் அவங்கள உள்ள அனுமதிக்கல நீங்க… ஷி இஸ் மை ஃபிரண்ட்” என்றாள் சிறு கோபத்துடன்.

 

“சாரி மேம். சாரோட ஆர்டர். புதுசா எந்த காரும் உள்ள வராகி கூடாதுன்னு சொல்லியிருக்கார்”

 

“ஏன்?”

 

“தெரியாது மேம்”

 

“சரி… அவ என்னோட ஃபிரண்ட் தான். உள்ள அனுப்புங்க”

 

“சாரி மேம்…”

 

“வாட்!!”

 

“சாரோட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்” – வெகுவாய் தயங்கினான். மதுராவிக்கு முணுக்கென்று கோபம் வந்தது. ‘நம்ம ஃபிரண்டுன்னு சொல்லியும் உள்ள விட முடியாதுன்னு சொல்றானே!’ என்கிற கோபத்துடன் தானே வெளியே வந்தாள். தோழியை பார்த்து ஆயிரம் முறை மன்னிப்புக் கேட்டுவிட்டு, “கார்தானே உள்ள வராகி கூடாது… நீ வரலாம் வா” என்று கூறி அவளுடைய கையைப் பிடித்து உள்ளே அழைத்தாள்.

 

“இட்ஸ் ஓகே மது… நீ எப்படி இருக்க?” என்று மதுராவிடம் நலம் விசாரித்தவள் காருக்குள் கத்தையாக வைத்திருந்த பத்திரிகை காட்டிலிருந்து ஒன்றை உருவி அதில் மதுரா மற்றும் தேவ்ராஜின் பெயரை எழுதி அவளிடம் நீட்டினாள்.

 

“உனக்கு இங்க என்ன பிரச்சனைன்னு தெரியல. உன்னால கல்யாணத்துக்கு வர முடியுமான்னும் தெரியல. ஆனா நீ வரணும்னு நா ரொம்ப ஆசைப்படறேன்” என்றாள்.

 

சட்டென்று பத்திரிக்கையை வாங்கி கொண்டு அவளை அனைத்துக் கொண்ட மதுரா, “வெரி சாரி சோனி… ஐம் வெரி சாரி… எப்பவும் இங்க இந்த மாதிரி இல்ல… இப்போ என்னன்னு எனக்கே புரியல… புதுசா இருக்கு. ஏதாவது செக்யூரிட்டி இஷுவா இருக்கும்னு நினைக்கறேன். அதனாலதான்… இல்லன்னா இப்படியெல்லாம் நடந்ததே இல்ல… வெரி சாரி…” என்று வெகுவாய் வருந்தினாள்.

 

“இட்ஸ் ஓகே மது… விடு… நீ கல்யாணத்துக்கு வரணும். நான் எதிர்பார்ப்பேன்” என்றாள்.

 

“நிச்சயமா வருவேன் சோனி… கடைசி வரைக்கும் உன் கூடவே இருந்து எல்லா பங்ஷனையும் முடிச்சுட்டுதான் வருவேன்… ஹாப்பி?” என்று உறுதி கொடுத்துவிட்டு மீண்டும் அவளை உள்ளே அழைத்தாள். ஆனால் சோனியா மறுத்துவிட்டதால் சற்று நேரம் கேட்டிற்கு வெளியே நின்றபடியே பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவள் விடைபெற்று சென்ற பிறகு பத்திரிக்கையோடு உள்ளே வந்தாள் மதுரா.

 
4 Comments


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  vijaya muthukrishnan says:

  hai Nithya
  very very super update. eagerly waiting for your next ud


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Hadijha Khaliq says:

  Pent up anger ellam oru vazhiya veliya vandiruchi….thirumba rendu perum pazhaiya maadhiri oruthoruthar Dev um madhura um purinjika aarambichitanganu partha yaar intha soniya pudhusa? adhuvum wedding invitation oda….oru vela maapillai Kishor ah irukumo? Idhunaala thirumba pazhaiyapadi kobappaduvano?


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  ugina begum says:

  HOOOOOO DEVIN THUDIPPUU ….YENNA SOLVATHU


 • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
  Thadsayani Aravinthan says:

  Hi mam

  தான் ஆடவிட்டா உம் தன் சதை ஆடுமல்லவா அதுதான் தேவ்விடயத்தில் நடந்தது,சோனி திருமண விடயத்தை வைத்து திரும்பவும் மதுராவுக்கும் தேவ்விற்கும் ஏதாவது பிரச்சனை வருமா.

  நன்றி

error: Content is protected !!