Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மயக்கும் மான்விழி-15(Final)

அத்தியாயம் – 15

அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும்,

அடியில் இறங்கித்தான் தியாகம் வாங்க வேண்டும்.”

மான்விழி தாய்வீட்டிற்கு வந்து இன்றோடு சரியாக ஏழு நாட்கள் முடிந்துவிட்டது. வைதேகி மருமகளை வந்து பார்த்துவிட்டுச் சென்ற பிறகு அந்த வீட்டிலிருந்து எந்தத் தகவலும் இல்லை. அவளுடைய பெற்றோரும் அவளுடைய திருமண வாழ்க்கைச் சம்மந்தமாகப் பேச்சை எடுக்கவில்லை.

 

ஆரம்பத்தில் ருத்ரன் தவறு செய்தவன் என்கிற எண்ணம் இருந்தவரை அவன்மீது கோபமாக இருந்தாலும் நிம்மதியாக இருந்தாள். ஆனால் அவன் குற்றமற்றவன் என்று தெரிந்தப் பின் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பிடிவாதமாக அவன்மீது கோபம் இருப்பது போல் காட்டிக் கொண்டு பொய்யான முகமூடியை அணிந்து கொண்டு நடமாடினாள்.

 

ஏதோவொரு இனம்புரியாத உணர்வு அவளைக் கணவனிடம் பிடித்து இழுத்துக் கொண்டிருக்க அதைச் செயல்படுத்தவிடாமல் ஈகோ பின்னுக்கு இழுத்துப் பிடித்து முரண்டுச் செய்தது.

 

ஒவ்வொரு நாள் காலையும் கண்விழிக்கும் போது, தான் ருத்ரனுடைய வீட்டில் அவனுடைய அறையில் உறங்கி எழுகிறோம் என்று நொடிநேரம் தோன்றி மறையும் உணர்வை விரட்ட முயன்று இன்பமாகத் தோற்றுக்கொண்டே இருந்தாள்.

 

காணும் இடங்களிலெல்லாம் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் உருவம் ஒன்று கணநேரம் தோன்றி மறையும் மாயத்தைக் கண்டு வெட்கத்துடன் வியந்து போனாள்.

 

வேலைக்கு வரும் நாலாங்கரை மக்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் ‘உங்களுக்காக அங்கே ஒருவன் போராடிக் கொண்டிருக்கிறான். அவன்தான் என் கணவன்…’ என்று அலறும் நெஞ்சம் முழுக்க, பெருமை பூ பூத்து நிறைவதை ஆனந்தமாக அனுபவித்தாள்.

 

இந்தச் சுகானுபவங்கள் எல்லாம் மாமியார் அவளை வந்து பார்த்துவிட்டுச் சென்றதற்குப் பிறகு அடுத்த இரண்டு நாட்களுக்கு மட்டும்தான் சாத்தியமாக இருந்தது. அதன்பிறகு கணவன் வீட்டிலிருந்து எந்தத் தகவலும் வராததைத் தொடர்ந்து சுகமாகக் குளிர்வித்த அனுபவங்களெல்லாம் சுட்டெரிக்க ஆரம்பித்தது.

 

ஒவ்வொரு நாள் விடியலிலும் ‘ஐயோ… இன்னமும் நாம் இங்கேதான் இருக்கிறோமா…!’ என்கிற எண்ணம் தோன்றி அவளைச் சுணங்க வைத்தது.

 

மாயமாகத் தோன்றி இமைக்கும் நேரத்தில் மறைந்து போகும் அவன் உருவத்தை ‘இன்னும் கொஞ்சநேரம் பார்க்க முடியாமல் போய்விட்டதே…’ என்று ஏங்கும் போது’ நிஜத்தைத் தொலைத்துவிட்டு நிழலைத் துரத்திக் கொண்டிருக்கும் முட்டாளடி நீ…’ என்று அவள் மனமே அவளைக் குத்தும்.

 

நாலாங்கரை மக்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் ‘உங்களுக்காக ஊரை எதிர்த்துப் போராடுபவன் எனக்காக ஒரு அடிக் கூட எடுத்து வைக்க மாட்டேனென்கிறான்…’ என்கிற எண்ணம் தோன்றி அவள் கண்களைக் கண்ணீரால் நிறைக்கும்.

 

அந்த வாரம் முழுவதும் கோபம், எதிர்பார்ப்பு, ஏமாற்றம், வருத்தம், அழுகை என்று உணர்ச்சிகரமாகக் கழிந்தது மான்விழிக்கு.

 

இப்படிப் பிடிவாதமாக இருந்து எதைச் சாதிக்கப் போகிறோம் என்று அலுப்பாக இருந்தது. பேசாமல் தன்னுடைய முகமூடியைக் கழட்டி எறிந்துவிட்டு அவனிடம் சென்றுவிடலாமா என்று கூடத் தோன்றியது. ஆனால் முடியவில்லை.

 

பலமாகச் சிந்தித்ததால் வந்த தலைவலியை விரட்டத் தோட்டத்திற்கு வந்தாள். வெளிக்காற்றை ஆழமாக உள்ளே இழுத்து மனப்புழுக்கத்தைத் தணிக்க முயல்கையில் அவள் செவிகளில் புல்லட்டின் ஒலி கேட்டது. பிரம்மையோ என்று அவள் நினைத்து முடிப்பதற்குள், சிதம்பரத்தின் வீட்டுவாசலுக்கு ருத்ரனின் வண்டி வந்துவிட்டது.

 

பத்தடி தூரத்தில் வீட்டின் பக்கவாட்டில் அமைந்துள்ள சிறிய தோட்டத்தில் நின்றபடிக் கணவனைப் பல நாட்களுக்குப் பிறகு பார்த்தவளுக்கு வார்த்தைகள் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள… மொழி மறந்து, விழி வியப்பில் விரிந்தது.

 

‘ஹை… வந்துட்டானே…!’ என்று மகிழ்ந்து… ‘எப்படித் திடீர்னு வந்தான்…!’ என்று வியந்து… ‘இவ்வளவு நாளும் வரவில்லையே…’ என்று வருந்தி ‘இப்போ மட்டும் எதுக்கு வரணும்…?’ என்று கடைசியாகக் கோபத்தை அவள் மனம் இறுக்கமாகப் பிடித்துக் கொள்ள, முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளின் பாவம் வந்து போனது.

 

வண்டியை வாசலில் நிறுத்தி நிதானமாக ஸ்டாண்ட் போட்டபடி மனைவியின் முகத்தில் தோன்றி மறைந்த உணர்வுகளைக் கணக்கெடுத்தான் ருத்ரன்.

 

வண்டிச் சத்தம் கேட்டுப் பின்பக்கத் தோட்டத்திலிருந்து வாசலுக்கு வந்த சிதம்பரம் மருமகனைக் கண்டு மகிழ்ந்து போய்,

 

“அடடே… வாங்க மாப்ள… வாங்க…” என்று அவர் போட்டச் சத்தத்தில் மான்விழியின் தாய் தங்கை என்று அனைவரும் வாசலுக்கு வந்துவிடப் பலமான வரவேற்புடன் அவன் மாமனார் வீட்டுக்குள் சென்றான்.

 

நடப்பதை ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மான்விழி வீட்டிற்குள் நுழையாமல் பின்பக்க வழியாகச் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

“மானு… இந்தா… மாப்ளைக்குத் தண்ணிக் கொண்டுபோய்க் குடு…” என்ற தாயின் சொல்லுக்கு,

 

“முடியாது…” என்று மறுப்பு சொன்னாள்.

 

மகளின் மறுப்பை மதிக்காமல் தாய் கட்டாயப்படுத்த வேறுவழியின்றித் தண்ணீர் சொம்புடன் கூடத்திற்குச் சென்றாள். மருமகன் முதல்முறையாக வீட்டிற்கு வந்திருந்த மகிழ்ச்சியில் ஏதேதோ கதைத்துக் கொண்டிருந்த சிதம்பரம் மகள் வந்ததைப் பார்த்துவிட்டு “தண்ணியாம்மா… குடு… குடு… மாப்ளைக்குக் குடு…” என்று மகளை ஊக்கப்படுத்தினார்.

 

மான்விழி தண்ணீர் சொம்பை ருத்ரனிடம் நீட்ட அவன் அதைக் கையில் வாங்காமல் புருவம் உயர்த்திக் கண்களால் என்னவென்று கேட்டான்.

 

மாமனார் வீட்டில் உள்ள அனைவரிடமும் இன்முகமாகப் பேசிக்கொண்டிருப்பவன் மனைவியை மட்டும் அளவிடுவது போல் ஒரு மார்க்கமாகவே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

‘வீட்டிற்கு வந்தவனை ‘வாங்க…’ என்று அழைக்கவில்லை. இப்போது மட்டும் என்ன கரிசனம்…’ என்பது போல் அவன் பார்க்க அதைப் புரிந்தும் புரியாதது போல் “தண்ணி…” என்று அவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டுக் கையிலிருந்த சொம்பை டீப்பாயில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டாள்.

 

மகளின் செய்கையில் உடன்பாடில்லாத சிதம்பரம் டீப்பாயில் இருந்த சொம்பை அவசரமாக எடுத்து மருமகனிடம் நீட்டி “தப்பா எடுத்துக்காதிங்க மாப்ள… சின்னப் பொண்ணு…” என்று சமாதானம் சொன்னார்.

 

“விடுங்க மாமா… அவளப் பத்தி எனக்குத் தெரியாதா…” என்று சிரித்துக் கொண்டே மாமனாரைச் சமாதானம் செய்துவிட்டுச் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தான். அவரும் தன் மகளின் மீது மருமகனுக்குப் பெரிய அளவில் கோபமில்லை என்று தெரிந்து நிம்மதியடைந்தார்.

 

மாப்பிள்ளை வந்திருக்கும் விபரம் தெரிந்து அக்கம் பக்கத்திலிருக்கும் சிதம்பரத்தின் தம்பிகளும் நெருங்கிய பங்காளிகளும் அவருடைய வீட்டிற்கு வந்து மருமகனுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டுச் சென்றார்கள். இதற்கிடையில் உள்ளே விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.

 

இரண்டு மணிநேரம் கரைந்துவிட்டது. “வாங்க மாப்ள சாப்பிடலாம்…” என்று சிதம்பரம் அழைக்க ருத்ரன் மறுக்காமல் எழுந்து உணவுக் கூடத்திற்குச் சென்றான்.

 

உள்ளுக்குள் விருப்பத்தோடும், வெளியே தாயின் கண்டிப்பிற்கு இணங்கியும் மான்விழி கணவனுக்குப் பரிமாறினாள். சிதம்பரமும் அவனுடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்தினார். கொஞ்சமும் சங்கோஜமில்லாமல் ருத்ரன் அசைவ உணவை வெளுத்து வாங்க மான்விழி ரகசியமாக மகிழ்ந்தாள்.

 

மதிய உணவு முடிந்து மீண்டும் வெற்றிலைப் பாக்கை மென்றபடி சிதம்பரம் மருமகனிடம் பேச்சு வார்த்தையை ஆரம்பிக்க, அவனும் நிஜாம் பாக்கை மென்றபடி அவருடைய அறுவையைச் சகித்துக் கொண்டிருந்தான்.

 

“என்னங்க… இப்படிக் கொஞ்சம் வாங்க…” என்ற மனைவின் குரலைக் கேட்டுச் சமையலறைப் பக்கம் சென்ற சிதம்பரம் சிறிதுநேரத்தில் பேயறைந்த முகத்துடன் மருமகனிடம் வந்து “நீங்க கொஞ்சநேரம் போயிப் படுங்க மாப்ள…” என்றார்.

 

தன்னிடம் பிளேடு போட்டதற்காக உள்ளே அவர் மனைவியிடம் சரியாக மாத்து வாங்கியிருக்கிறார் என்பதை அவருடைய முகக்களையிலிருந்தே தெரிந்து கொண்டவன் லேசாகச் சிரித்தபடி எழுந்தான்.

 

“மானு…” என்று மருமகனுக்குப் படுக்கையைத் தயார்படுத்திக் கொடுப்பதற்காக மகளை அழைத்தார்.

 

“இருக்கட்டும் மாமா… நானே போய்க்கிறேன்… மான்விழியோட ரூம் எது…?” என்று கேட்டுக்கொண்டு அவர் கைகாட்டிய அறைக்குள் நுழைந்தான்.

###

 

உள்ளே நுழைந்த ருத்ரன் அந்த அறையை ஒருமுறை கண்களால் வட்டமடித்தான். சின்னதாக ஒரு கட்டில். சரியாக விரிக்கப்படாத மெத்தை விரிப்பின் மேல், பக்கத்துக்கு ஒன்றாகக் கிடந்த தலையணைகள். ஓரமாக ஒரு மேஜை. அதில் ஒரு தண்ணீர் பாட்டில் மற்றும் இரண்டு கதைப் புத்தகங்கள். ஒருபுற சுவற்றில் பெரிதாக ஓர் அலமாரி. அதில் முதல் இரண்டு அடுக்குகள் நிறையப் புத்தகங்கள் தூசிப் படிந்த நிலையில். மீதி இரண்டு அடுக்குகளில் அலங்காரமாகவும் தேவையில்லாமலும் பல பொருட்கள். மறுபுற சுவற்றில் ஒரு ஜன்னல். அதற்குப் பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் நாற்காலி. அதன்மீது கால்களை மடித்து வைத்துக்கொண்டு உள்ளே வருபவர்களுக்கு முதுகுக் காட்டி அமர்ந்திருக்கும் மான்விழி.

 

அறையை அளவெடுத்தபடி உள்ளே நுழைந்த ருத்ரன் நிதானமாகச் சட்டையைக் கழட்டி மேஜைமீது ஒருபக்கமாக வைத்துவிட்டுத் தலையணையை எடுத்து முதுகுப் பக்கம் வைத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்தமர்ந்தான்.

 

அரவம் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிய மான்விழி கணவனைத் தன்னறையில் கண்டுவிட்டு “இங்க என்ன செய்றிங்க…?” என்றபடி எழுந்தாள்.

 

“தெரியல…? கொஞ்சநேரம் தூங்கப் போறேன்… ஜன்னல அடச்சு உக்காராம அந்தப் பக்கமா போயி உக்காரு. காத்து வரட்டும்…” அலட்டிக்காமல் பேசினான்.

 

“ஹலோ… இது என்னோட ரூம்… நீங்க தூங்கறதுன்னா உங்க வீட்டுலப் போயி தூங்குங்க. இங்க எதுக்கு வந்திங்க…?”

 

“இது என்னம்மா கேள்வி… மாமனாரு வீட்டுக்கு எதுக்கு வருவாங்க? விருந்து சாப்பிடத்தான். சாப்பிட்டாச்சு… இப்போ ரெஸ்ட் எடுக்கப் போறேன். ”

 

“மாமனாரு வீடா…? அது எப்போலேருந்து…?”

 

அவள் எரிச்சலுடன் கேட்க… அவனோ, “எனக்குக் கல்யாணம் ஆனதிலிருந்து…” என்றான் சிரித்தபடி.

 

அவள் பதில் பேசாமல் அவனை முறைத்தாள். அவனுடைய சிரிப்பு அதிகமானது. “இப்படி வா…” என்று அழைத்தான்.

 

“எதுக்கு…?” என்றாள் துடுக்காக.

 

அவனுக்குக் கோபம் வரவில்லை. “எதுக்கு வீட்லேருந்து திடீர்ன்னு கெளம்பி வந்துட்ட…?” என்றான் இலகுவான குரலில்.

 

அவளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை. அதனால்… “அப்படித்தான் வருவேன்…” என்று வீம்புடன் சொல்லிவிட்டு அசையாமல் அவனை முறைத்தபடியே நின்றாள். அவனும் அவளுடைய கண்களிலிருந்து பார்வையை அகற்றவில்லை. அவளுடைய கண்கள் லேசாகப் கலங்கியது போல் இருந்தது.

 

அவன் எழுந்து அவளை நெருங்கி வந்தான். அவளுடைய ஒரு கையைப் பிடித்துத் தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டு அவள் கண்களைப் பார்த்துச் சொன்னான்.

 

“மன்னிச்சுடு…” அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கித்தானே தியாகம் வாங்க வேண்டும் அவனும் இறங்கி வந்தான்… ஆனால் அவள் முறுக்கிக் கொண்டு,

 

“எதுக்கு…?” என்றாள்.

 

“எல்லாத்துக்கும்…”

 

“முடியாது” அவள் பட்டென்று சொன்னதும் அவனிடம் ஒரு ஆச்சர்யம் தோன்றியது. இதழ்களில் மீண்டும் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

 

“முடியாதா…!” என்றான்.

 

“ஆமாம்… மன்னிக்கமுடியாது…” என்றாள் அழுத்தமாக.

 

“ஏன்…?” என்றான் சிரிப்பு மாறாத முகத்துடன்.

 

“எதுக்கு மன்னிக்கணும்…” அழுத்தமாகக் கேட்டாள்.

 

“பாவமுன்னு மன்னுச்சுடேன்…”

 

“பாவமா…! நீங்களா…?” அவள் நக்கலாகக் கேட்டபடித் தன் கையை அவனிடமிருந்து உருவிக் கொண்டாள்.

 

“வீட்ல மருமக இல்லன்னு அம்மாவும் ஆச்சியும் என்ன போட்டுப் படுத்தறாங்க… என்ன பார்த்தா பாவமா இல்லையா…!” என்றான் முகத்தை அப்பாவி போல் காட்ட முயன்றபடி.

 

அவனுடைய அந்த முயற்சி அவள் முகத்தில் லேசாகச் சிரிப்பைக் கொண்டு வந்தது.

 

“ரொம்ப முயற்சி பண்ணாதிங்க… சகிக்கல..” என்றபடி அந்த இடத்திலிருந்து நகர்ந்து மேஜைக்கு அருகில் சென்று பாட்டிலை எடுத்துத் தண்ணீர் குடித்தாள்.

 

அவள் அவனுடைய மூக்கை உடைத்துவிட்டதில் கொஞ்சம் சோர்ந்தவன் “இப்ச்… சாயங்காலம் வீட்டுக்குக் கெளம்பலாம் மான்விழி… தயாராகு…” என்றான்.

 

“உங்க வீட்டுக்கு நான் வர மாட்டேன்…” என்றாள் அழுத்தமாக.

 

“வரலன்னா போடி… நீ ஒருத்திதான் எங்க வீட்டுக்கு மருமகளா…? நீ இல்லன்னா என்ன…? உன் தங்கச்சி இங்கதானே இருக்கா… அவளக் கல்யாணம் பண்ணி எங்க வீட்டு மருமகளா கூட்டிட்டுப் போறேன்…” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆவேசமானவள் “என்னது…!” என்று கையிலிருந்த காலி பாட்டிலை அவன் மீது தூக்கி எறிந்தாள்.

 

முதலில் திகைத்தவன் அனிச்சையாக அவள் எறிந்த பாட்டிலைக் கையில் பிடித்துவிட்டு “ஏய்… என்னடி அடிதடில எறங்கிட்ட…!” என்றான்.

 

“அடிக்கிறதா…! உங்களையெல்லாம் கொல்லாம விடக் கூடாது… எவ்வளவு திமிர் இருந்தா என்னுகிட்டயே இந்த மாதிரி பேசுவிங்க…” என்று கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு அவனைச் சுற்றிச் சுற்றி அடித்தாள்.

 

“ஐயையோ… இருடி… அவசரப்படாத… சொல்றதக் கேட்டுட்டு அடிடி… ஏய்… நிறுத்துடி… நிறுத்து… நிறுத்து…” என்று சொல்லிக் கொண்டே அங்குமிங்கும் நகர்ந்து அவள் கொடுக்கும் அடிகளிலிருந்து தப்பித்துக் கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் அவளை எட்டிப் பிடித்துக் கட்டியணைத்து முத்திரையைப் பதித்துவிட்டதில் அவள் சிலையானாள்.

 

முதலில் தன்னிலைக்கு மீண்ட ருத்ரன் அவளை விடுவித்த நொடி அவனிடமிருந்து பதறியடித்து விலகிய மான்விழியின் இதயம் வேகமாக அடித்துக் கொள்ள கண்களில் நீர் கோர்த்துவிட்டது.

 

“என் தங்கச்சியக் கல்யாணம் பண்ணுறேன்னு சொன்னவர் என்னுகிட்ட இப்படி நடந்துக்கறிங்களே… அசிங்கமா இல்ல…?” என்றபடி அவன் முகத்தை நேருக்குநேர் பார்த்தாள்.

 

விரிந்த அவள் விழிகளை ஆழமாகப் பார்த்து “உன் தங்கச்சிய என் தம்பிக்குக் கல்யாணம் பண்ணி என் வீட்டுக்கு மருமகளா கூட்டிட்டுப் போறதுக்கும்… இந்த மான்விழிகிட்ட நான் மயங்குறதுக்கும் என்னடீ சம்மந்தம் இருக்கு…?” என்று கிறக்கமான குரலில் கேட்டான்.

 

“சும்மா சமாளிக்காதிங்க… நம்ம கல்யாண விருந்தன்னைக்குக் கூட இதே மாதிரி காவ்யாவ உங்க வீட்டுக்கு மருமகளா கொண்டு வர்றதப் பத்திப் பேசினிங்க…”

 

“அன்னைக்கும் என் தம்பிக்கு காவ்யாவக் கல்யாணம் செய்றதப் பத்திதான் பேசுனேன்… நீ தப்பா நெனச்சா நா என்ன செய்ய முடியும்… சொல்லு…” என்றபடி பிடிவாதமாக அவளுடைய கையைப் பிடித்து அழைத்து வந்து கட்டிலில் அமர செய்தான்.

 

அவள் பதில் பேசாமல் மெளனமாக அமர்ந்திருந்தாள்.

 

“மான்விழி… உனக்குப் படிக்கிறதுன்னா ரொம்பப் பிடிக்குமா…?” என்றபடி அவளுக்கருகில் அமர்ந்தான்.

 

“அது எதுக்கு இப்ப…?” சற்று எரிச்சலுடன் கேட்டாள்.

 

“இல்ல… இங்க இவ்வளவு புத்தகம் அடுக்கியிருக்கே… அதான் கேட்டேன்…”

 

“அதெல்லாம் காலேஜ் புக்ஸ்…”

 

“தூசி படிஞ்சுப் போயிருக்கு…?”

 

“ம்ம்ம்… காலேஜ் போனா தானே அதையெல்லாம் படிக்கலாம்…”

 

“மன்னிச்சிடு மான்விழி… என்னாலதான் உன்னோட படிப்புக் கெட்டுப் போச்சு… எதப் பத்தியும் யோசிக்காம உன்னோட மனநிலை என்னன்னு தெரிஞ்சுக்காம… உன் கழுத்துலக் கட்டாயப்படுத்தித் தாலிக் கட்டினது பெரிய தப்பு… என்னால நீ எதையும் இழந்ததா இருக்கக் கூடாது… நீ கண்டிப்பா படிப்பத் தொடரணும்… நான் ஏற்பாடு பண்ணுறேன்…” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் அவனை உக்கிரமாக முறைத்தாள்.

 

“ஏய்… என்ன…?” அவளுடைய அக்னிப் பார்வையில் குழம்பிப்போன ருத்ரன் கேட்டான்.

 

“இந்தக் கல்யாணத்துல நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம்…. நான் இந்தப் புத்தகக் கூட்டத்துகிட்டேருந்து தப்பிச்சதுதான். அது பொறுக்கலையா உங்களுக்கு…?”

 

“புத்தகக் கூட்டமா…! என்னடி இப்படிச் சொல்ற…?”

 

“வேற எப்படிச் சொல்றது…? படிக்கிறதுன்னா எனக்குச் சுத்தமாப் பிடிக்காது”

 

“அப்பறம் எதுக்குடி காலேஜூக்குப் போன…?”

 

“அது… அப்பாவோட கட்டாயத்துக்காகப் போனேன். அதோட ப்ரண்ட்ஸ் எல்லாரும் காலேஜ்ல சேர்ந்துட்டாங்க. நா மட்டும் வீட்டுல இருந்து என்ன செய்றது…? ”

 

“எப்ப பார்த்தாலும் புக்கோடையே திரியுவியே… அது…?”

 

“அது கதை புக்கு… நாவல் படிக்க மட்டும் பிடிக்கும். மத்தபடி பாடப்புத்தகமுன்னா அலர்ஜி… படிகிடின்னு சொல்ற வேலைய இன்னையோட விட்டுடுங்க… சொல்லிட்டேன்…” என்று மிரட்டினாள்.

 

“என்ன இப்படி மெரட்டுற? ம்ஹும்… நீ படிப்ப முடிச்சே ஆகணுமே…!”

 

“அதெல்லாம் முடியாது…”

 

“ஏன் முடியாது…? நம்ம கல்யாணம் நடக்கலன்னா நீ காலேஜ் போயிக்கிட்டுதானே இருந்திருப்ப… அதுமாதிரி நெனச்சுக்கோ…”

 

“முடியாது… முடியாது… முடியாது… நான் காலேஜூக்குத் திரும்பப் போகவே மாட்டேன்…”

 

“அப்படியா… சரி விடு… உன்ன எப்படி காலேஜூக்கு அனுப்பறதுன்னு எனக்குத் தெரியும்”

 

“என்ன தெரியும்?”

 

“உன்ன எப்படி காலேஜ்லேருந்து தூக்கிட்டு வந்தேனோ அதே மாதிரிக் கொண்டுபோய் விட வேண்டியதுதான்…” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் அவள் அவனைத் தாக்க ஆரம்பித்துவிட்டாள்.

 

“கட…த்து…விங்களா… காலேஜ் போலன்னா… க… கடத்திட்டு… போயி… படிக்க… சொல்லு…விங்களா…?” என்று கேட்டபடி அவனுடைய தோள், கை என்று சரமாரியாக அடிக் கொடுத்தாள். நறுக்கென்று நகத்தால் கிள்ளினாள்.

 

“ஐயோ… விடுடி ராட்சசி… விட்டுடு…” என்று கத்திக் கொண்டு அவள் கொடுக்கும் அடிகளிலிருந்து தப்பிப்பது போல் பொய்யாக முயன்று சத்தமாகச் சிரித்தான்.

 

அவனை அடித்து அடித்து அவளுடைய கை வலித்த பிறகு சோர்ந்து அமர்ந்தாள். பூட்டிய அறைக்குள் மனைவியிடம் அவ்வளவு அடிகளையும் வாங்கிக் கொண்டு அதன் பிரதிபலிப்பாகப் பிரகாசமான பல்ப் ஒன்றை முகத்தில் எரியவிட்டு, அவளுடைய சிவந்திருந்த கைகளை எடுத்து இதழ்பதித்து “இப்பக் கோவம் போச்சா…?” என்றான்.

 

மான்விழிக்குப் பெரிய ஆச்சர்யம். ‘முதல் நாள் அவனை மரியாதைக் குறைவாகப் பேசிய பொழுது அவ்வளவு ஆத்திரப்பட்டவன் இன்று இவ்வளவு அடிகளையும் வாங்கிக் கொண்டு சாந்தமாக இருக்கிறானே…!’ என்று வியந்தாள்.

 

“அடிக்கடி இந்தக் கண்ண உருட்டி இப்படிப் பார்த்தா என்ன அர்த்தம்…? கோவம் போச்சா இல்லையா…?”

 

“போகல…” என்றாள் வீம்பாக.

 

“நாலாங்கர நெலத்தை எல்லாம் அந்த ஜனங்களுக்கே பொதுச் சொத்தா எழுதி வச்சிட்டேன்… ”

 

அவளுடைய விழிகள் அடுத்த ஆச்சர்யத்தில் இன்னும் பெரிதாக விரிந்தன.

 

அவன் அவள் கண்களைக் காதலுடன் பார்த்து மீண்டும் கேட்டான்… “இப்பக் கோவம் போச்சா…?”

 

அவள் வேண்டுமென்றே “போகல…” என்றாள்.

 

“நாலாங்கரைக்கு நம்ம போர் தண்ணியும் ஆத்துத் தண்ணியும் தடையில்லாம போறதுக்கு ஏற்பாடு செஞ்சுட்டேன்… ஒரு வாரமா அந்த வேலையில மும்முரமா இருந்ததுனால இந்தப் பக்கம் வர முடியல… இப்பக் கோவம் போச்சா…?” என்றான் அவள் மனதைப் படித்தவன் போல்.

 

மனதில் சிறு அளவில் கூடக் கோபம் இல்லாதபோதும், சிரிக்கத் துடிக்கும் இதழ்களை முயன்று கட்டுப்படுத்திக் கொண்டு “போகவே இல்ல…” என்று பிடிவாதமாகச் சொன்னவளைக் கைகளுக்குள் சிறைச் செய்து செவ்விதழின் சுவையறிந்தான்.

 

இன்பமாகக் கழிந்த சில நொடிப்பொழுதில் நூறு ஜென்மம் வாழ்ந்து முடித்துவிட்ட நிறைவுடன் விலகிய இருவரும், வார்த்தைகளை மறந்து மௌனமொழியில் உணர்வுகளைப் பரிமாறிக் கொண்டு, அவர்களுக்குள்ளே பரவி படர்ந்திருந்த காதலைச் சிலிர்ப்புடன் உணர்ந்தார்கள்.

 

தன்னிலை மறந்து நின்றவளின் முகத்துக்கு நேராகக் கையை அசைத்து அவள் கவனத்தைக் கவர்ந்து “இப்பக் கோவம் போச்சா…?” என்றான் சிரிப்புடன்.

 

அப்போதும் வெட்கச் சிரிப்புடன் “இல்ல… போகல…” என்றாள்.

 

“அப்டியா…?” என்றபடி அவன் அவளை மீண்டும் நெருங்க “போய்டிச்சு… போய்டிச்சு…” என்று பதறியடித்துக் கொண்டு விலகி “என்ன திடீர்னு ரொம்ப காதல்ல கரைஞ்சுப் போறீங்க…?” என்றாள்.

 

“முதல் தடவ உன்ன பாலத்துல பாத்தப்ப எதுவும் தோணல… அதே மாதிரி புல்லட் கண்ணாடில உன்னோட முகத்தப் பாத்தப்பவும் பெருசா எந்த எண்ணமும் தோணல… அதுக்குப் பிறகு எப்போன்னு தெரியல… ஆனா பெருசா எனக்குள்ள மாற்றம் வந்துடுச்சு… கொஞ்சம் கொஞ்சமா… மயங்கிட்டேன்… இந்த மான்விழிகிட்ட…” என்றான்.

 

அவள் அவனை நம்பாமல் பார்த்தாள்.

 

“நம்ப முடியலையா…?”

 

அவள் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள்.

 

“எனக்கும்தான் நம்ப முடியல… ஆனா நிஜம்… நீ வீட்ல இல்லாத இந்த ஒரு வாரமும் வீடு எனக்கு வெறுமையா ஆயிட்ட மாதிரி தோணிச்சு… உன்ன உடனே வந்து பாக்கணுமுன்னு மனசு அடிச்சுக்கிடுச்சு… வம்புப் பண்ண நீ பக்கத்துல இல்லாதது ஒரு கை உடஞ்ச மாதிரி இருந்துச்சு… தூக்கம் வரல… பசிக்கல… வேலை நேரத்துல கூட உன்னோட நெனப்பு நடுநடுவுல என்ன தொல்லை பண்ணும்… இதெல்லாம்தான் காதல்னா நா காதல்ல கரஞ்சுதான் போறேன்… முழுசாக் கரைஞ்சுக் காணாமப் போறதுக்குள்ள கொஞ்சம் காப்பாத்தும்மா…” என்று அவன் நீட்டமாக வசனம் பேச

 

‘இங்க நானே கரஞ்சுக் காணாமப் போயிட்டேன்… இதுல நா எப்படி உங்களக் காப்பாத்துறது…?’ என்று அவள் முணுமுணுத்தாள்.

 

அவளுடைய முணுமுணுப்பை அவன் புரிந்து கொண்டான்.

 

“ஏய்…! என்ன…! இப்போ என்ன சொன்ன நீ…?” என்று அவன் ஆர்வமுடன் அவளைப் பார்க்க அவளோ வெட்கத்துடன் விலகி ஓட… இவன் தடுக்க, அவள் திமிர அங்கே அவர்களின் காதல் நாடகம் ஆரம்பமானது. இனி அவளுக்காக அவனும்… அவனுக்காக அவளும் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

சுபம்




11 Comments

You cannot copy content of this page