Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-20

அத்தியாயம் – 20

கலைவாணியிடம் பேசிவிட்டு கைப்பேசியை அணைத்து மேஜைமீது தூக்கியெறிந்த கார்முகிலனின் மனம் கொதித்துக் கொண்டிருந்தது. இதுவரை காட்டாற்று வெள்ளம் போல் யாருக்கும் கட்டுப்படாமல் வாழ்ந்து கொண்டிருந்தவன் இன்று மனைவியின் வீண் பிடிவாதத்திற்குக் கட்டுப்பட்டுவிட்டான். அதை நினைக்கையில் அவனுக்கே அவன் மீது ஆத்திரமாக வந்தது.

 

‘நம்மள இன்னிக்கு வெளியே போக விடக்கூடாதுன்னு முடிவு பண்ணி… சாதிச்சிட்டா…’ – கோபம் அடங்காமல் சுவற்றை எட்டி உதைத்துவிட்டுக் கூண்டுபுலி போல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான்.

 

‘இத்தனை வருஷமா பேசவே தெரியாத ஊமச்சி மாதிரி இருந்துட்டு… இன்னிக்கு எவ்வளவு பேசிட்டா..!’ – நம்பமுடியாத திகைப்பிலிருந்து மீள முடியாமல் தலையை உலுக்கிக்கொண்டு கட்டிலில் அமர்ந்தான்.

 

‘நடிச்சேன்… நட்டாத்துல விட்டேன்னு… இதை…யே சொ…ல்லி சொ…ல்லி காட்டுறா…’ – ஆத்திரத்துடன் கையில் அகப்பட்ட தலையணையைத் தூக்கியெறிந்தவன்… ‘நான் என்ன வேணும்னா செஞ்சேன்… ஏமாந்து தொலைச்சுட்டேன்… அதையே புடிச்சுகிட்டுத் தொங்கினா ஒரு மனுஷனால என்னதான் செய்ய முடியும்… வாழ்க்கைய ரீவர்ஸ்ல போயா வாழ்ந்துட்டு வர முடியும்… பைத்தியக்காரி… பைத்தியக்காரி…’ – நரநரவென்று பல்லைக் கடித்தான்.

 

‘போதாததுக்கு… கலைவாணியை வேற… அந்தச் சனியன் புடிச்ச நீலவேணியோட ஒப்பிட்டுப் பேசித் தொலைக்கிறா… நம்ம மேல கோபம்னா அதை நம்மகிட்ட மட்டும் காட்ட வேண்டியதுதானே…! அதை விட்டுட்டு அடுத்த வீட்டுப் பெண்ணை வம்புக்கு இழுக்கறா… இவளையெல்லாம் என்ன தான் பண்றதோ தெரியல… அறிவுக்கெட்டவ…’ – அலையலையாக உள்ளே பொங்கும் கோபத்தைத் தணிக்க அருகிலிருந்த ஜக்கை எடுத்து மடமடவென்று தண்ணீரைக் குடித்தான்.

 

சில்லென்ற தண்ணீர் உள்ளே இறங்கியதும் அவன் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே கோபம் தணிந்தது. ‘அன்னிக்கு ஒரு நாள் தர்மா சார் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்னு சொல்லிட்டு லேட்டா வந்ததுக்காக… இன்னிக்கும் லேட்டாதான் வருவேன்னு முடிவே பண்ணிட்டாளே…! இந்தச் சின்ன விஷயத்துல கூட நம்மள நம்ப மாட்டேங்கிறா…’ – இந்த எண்ணம் வந்ததும் அவன் நிலைமையை நினைத்து அவனுக்கே சிரிப்பு வந்தது. ‘ரொம்பக் கஷ்டம்…’ என்று நினைத்துச் சிரித்துக் கொண்டே கட்டிலில் சாய்ந்தான்.

 

‘இவ்வளவு நாளும் உணர்வுகளை வெளியே காட்டாம மெஷின் மாதிரி வாழ்ந்தவ அட்லீஸ்ட் இப்போ கோபமாவது படுறாளே… ஒரு விதத்துல இதுவும் நல்ல விஷயம் தான்… மனசுல இருக்கற துன்பத்தையெல்லாம் கோபமா வார்த்தைகள்ல வெளியே கொட்டிட்டான்னா அப்புறம் ஆறுதலடஞ்சிடுவா… அதுவரைக்கும் நாம தான் பொறுமையா இருக்கணும்…’ – தனக்குத் தானே ஆறுதல் சொல்லி தேற்றிக் கொண்டான்.

 

மனம் ஓரளவு தெளிந்துவிட்டது… ‘சரி… கீழ போய் என்ன செய்றான்னு பார்ப்போம்… நம்மள திட்டிட்டு அவ ஒரு மூலையில உட்கார்ந்து அழுதுகிட்டு இருப்பா…’ – தன்னைக் காயப் படுத்திவிட்ட வேதனையில் அவள் அழுது கொண்டிருப்பாள் என்கிற எண்ணம் ஒரு வகையில் அவனுக்கு உவப்பாக இருந்தது. அந்த இதத்தை அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே கதவு திறக்கும் ஓசைக் கேட்டது.

 

தலையைத் திருப்பிப் பார்த்தான். மதுமதி தான் உள்ளே வந்தாள். “என்ன நீங்க பாட்டுக்கு வந்து படுத்துட்டீங்க..? எழுந்து வாங்க சாப்பிடலாம்…” – எதுவுமே நடக்காதது போல் சாதாரணமாக அழைத்தாள். அவள் முகத்தில் வருத்தமோ, குற்ற உணர்வோ துளியும் இல்லாதது அவன் மனதைச் சுருக்கென்று தைத்தது.

 

பழைய மதுமதியாக இருந்திருந்தால் அழுது… கெஞ்சி… கொஞ்சி விதவிதமாக சாரி சொல்லி அவனை அன்பிலேயே குளிப்பாட்டியிருப்பாள். ஆனால் இன்றைய மதுமதி புதியவள். அவளுடைய அணுகுமுறைகள் அனைத்துமே புதிதாகத்தான் இருந்தன.

 

கோபத்தோடு அறைக்கு வந்த கணவனின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் “சொல்றது காதில விழலையா..? எழுந்து வாங்க…” என்று அவளுடைய காரியத்திலேயே கண்ணாக இருந்தாள்.

 

‘நான் சொன்னா நீ செஞ்சுதான் ஆகணும்…’ என்பது போல் அதிகாரத்தொனியில் ஒலித்த அவள் குரலில் ஒளிந்திருக்கும் உரிமை உணர்வை இனம்காண முடியாத கார்முகிலனின் மனம் உறுத்தியது.

 

என்ன தான் அவள் பாதிக்கப்பட்டிருந்தாலும்… அதை அவன் புரிந்து கொண்டிருந்தாலும்… அவளுடைய அதிகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மனம் வலித்தது. அன்புக்கு அடங்கலாம்… அதிகாரத்திற்கு எப்படி அடங்குவது…! சுய மரியாதையை விட்டுக்கொடுக்க முடியாமல் உள்ளம் கனன்றது… ஆனால் அவள் மீது அவன் கொண்டுள்ள கரைக்காணா காதலால் அனைத்தையும் சகித்துக் கொண்டான். அவள் மனம் ஆறுதலடைய… இழந்த அவளுடைய நம்பிக்கையை மீட்டெடுக்க எதையும் விட்டுக்கொடுக்கலாம் என்கிற பிடிவாதத்தில் தன்னைத் தானே சிறுகச் சிறுகச் சிதைத்துக் கொண்டான்.

###

“நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும் தான்

பேரு விளங்க இங்கு வாழணும்…

சோலைவனத்தில் ஒரு சோடிக்குயில் போலத் தான்

காலம் முழுக்கச் சிந்து பாடணும்…”

 

அந்தப் பெரிய திருமண மண்டபத்தின் மேடையின் ஒரு பக்கம், சிவரஞ்சனி இசைக்குழுவின் பாடகர் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து பாடிக் கொண்டிருக்க… இன்னொரு பக்கம் உறவினர்களும் நண்பர்களும் ஒவ்வொருவராக மேடையேறி, புது மஞ்சள் கயிறு மினுமினுக்க மாலையும் கழுத்துமாக நின்று கொண்டிருக்கும் மணமகள் கல்பனாவையும், மணமகன் ரவீந்தரையும் வாழ்த்திவிட்டு… அவர்களோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

 

தாலிக்கட்டி முடிந்து அரை மணிநேரம் ஆகிவிட்டதால் திருமணத்திற்கு வந்திருந்தவர்களில் பாதிபேர் உணவுக்கூடத்தில் நிறைந்திருக்க… மீதி பேர் சிறுசிறு குழுக்களாக அமர்ந்து ஆர்கெஸ்ட்ராவை ரசித்துக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழுக்களிடமிருந்து சற்று விலகி மடியில் குழந்தையோடு அமர்ந்திருந்த கார்முகிலனின் கண்கள் ஓயாமல் மனைவியையே தேடி அலைந்து கொண்டிருந்தன.

 

அரை மணிநேரத்திற்கு முன் நடந்த சம்பவம்… அன்று மதுமதி மயில் வண்ண நிறத்தில் பட்டுச்சேலை உடுத்தியிருந்தாள். அவள் அங்கங்களில் தரித்திருந்த தங்க நகைகளும், நெற்றியில் வைத்திருந்த சின்னச் சிகப்பு பொட்டிற்கு மேல் இட்டிருந்த சந்தனக் கீற்றும், கூந்தலிலிருந்து சரிந்து தோள்பட்டையில் தவழ்ந்து கொண்டிருந்த மல்லிகைச் சரமும், மென்சிரிப்பில் பளபளக்கும் ரோஜா இதழ்களும் அவள் அழகிற்கு அழகு சேர்க்க… கொடி போல் தன் கணவனோடு ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.

 

தலை குளித்துக் காற்றில் களைந்து நெற்றியில் விழும் கூந்தலை… அவள் அலுங்காமல் காதோரம் ஒதுக்கிவிடும் அழகை காணாதது போல் கண்டு ரசித்துக் கொண்டிருந்த கார்முகிலனின் மனம் கர்வத்தில் விம்மியது.

 

முழுக்கை சட்டையை முட்டிவரை மடக்கிவிட்டு… முதல் இரண்டு பட்டங்களை அலட்சியமாகத் திறந்துவிட்டு… கையில் காப்போடு… கருப்பு ரேமண்ட்ஸ் மாடல் போல் முன் வரிசையில் குடும்பத்தோடு அமர்ந்திருந்த கார்முகிலனும் ஒன்றும் அழகில் குறைந்தவன் இல்லை. அந்தத் திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் மணமக்கள் கவர்ந்தார்களோ இல்லையோ… இவர்களுடைய ஜோடிப்பொருத்தம் வெகுவாய்க் கவர்ந்தது.

 

“ஹாய் மது…” என்கிற உற்சாகக் குரலுடன் எங்கிருந்தோ வந்து சேர்ந்த ஜீவிதாவின் பார்வையும், கம்பீரமான கணவனுக்கு அருகில் உரிமையோடு அமர்ந்திருக்கும் தோழியின் முகத்தில் அன்புடன் பதிந்தது.

 

“ஜீவி…” அமைதியான குரலில் புன்சிரிப்புடன் தோழியை வரவேற்ற மதுமதி தனக்கு அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு “உக்காருடி…” என்றாள்.

 

“ஹலோ சார்…” கார்முகிலனிடம் மரியாதையுடன் கூறிய ஜீவிதா, அவன் “ம்ம்ம்…” என்று தலையசைக்கவும் மதுமதிக்கு அருகில் அமர்ந்து, “ஹேய்… யாழி குட்டி… அழகா இருக்கீங்களே…!’ என்று குழந்தையைக் கொஞ்சினாள்.

 

வெளியே குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்தாலும்… உள்ளே அவள் மனம் கார்முகிலனுக்கு ஏகப்பட்ட வசைகளைப் பாடிக் கொண்டிருந்தது.

 

‘பாடம் சொல்லிக் கொடுத்த டீச்சராச்சேன்னு ஒரு மரியாதைக்கு ஹலோ சொன்னா… அலட்சியமா ‘ம்ம்ம்’ போடுறாரே…! பதிலுக்கு ஒரு ஹலோ சொன்னா வாயில இருக்கற முத்தா கொட்டிடும்…! ஆளையும் மூஞ்சியும் பாரு… உர்ருன்னு… இந்தச் சிடுமூஞ்சிக் கூட மது எப்படித்தான் குப்பைக் கொட்டுறாளோ தெரியல…’

 

“நீ எப்போ வந்த ஜீவி..?” மதுமதியின் குரல் அவள் பாடும் வசைகளைத் தடுத்தது.

 

“நான் வந்து அரை மணிநேரம் ஆச்சுடி… கல்பனா உன்னைக் கேட்டுகிட்டே இருந்தா… வாயேன் ஒரு தடவ போய்ப் பார்த்துட்டு வந்துடலாம்…” சாதூர்யமாக கார்முகிலனிடமிருந்து தோழியைப் பிரித்துக் கூட்டிச் செல்ல முயன்றாள்.

 

“பார்த்துட்டு வந்திடுறேன்… கொஞ்சம் வெயிட் பண்ணுங்க…” என்று கணவனிடம் சொல்லிவிட்டுத் தோழியுடன் கிளம்பியவளைத் தடுத்து “பொம்மு குட்டியை என்கிட்ட விட்டுட்டுப் போ… நான் பார்த்துக்கறேன்…” என்று மகளை வங்கிக்கொண்டு மனைவியை மட்டும் அனுப்பி வைத்தான்.

 

அப்போது போனவள் தான்… திருமணமும் முடிந்து கூட்டமும் கலைய ஆரம்பித்துவிட்டது… இன்னும் வரவில்லை… எங்குப் போனாள்…! யாரிடம் கேட்பது… இவனுக்குத் தெரிந்தவர்கள் ஒருவரும் இல்லை… அவளைத் தெரிந்தவர்கள் யார் என்பதும் இவனுக்குத் தெரியவில்லை.

 

நேற்றும் இப்படித்தான்… பிடிவாதமாக அவனை வரவேற்பிற்கு அழைத்துக்கொண்டு வந்தவள் இவனைத் தனியாக அமர வைத்துவிட்டுக் குழந்தையுடன் நட்பு வட்டத்துக்குள் இணைந்து கொண்டாள். விழா முடியும் வரை இவனிடம் நெருங்கவே இல்லை. கைப்பேசியின் துணையுடனே நேரத்தைப் பிடித்துத் தள்ளியவன் ஒரு வழியாக விழா முடிந்ததும் தான் மனைவியையும், குழந்தையையும் கண்ணில் பார்த்தான்.

 

இன்றும் அவனுக்குத் தனியாக அமர்ந்திருப்பதில் விருப்பமே இல்லையென்றாலும் மனைவியைத் தடுக்க முடியவில்லை. குழந்தையாவது தனக்குத் துணையாக இருக்கட்டும் என்று எண்ணி தானே வைத்துக் கொண்டான். ஆனால் அதுவே அவனுக்குப் பெரிய தலைவலியாகிவிட்டது.

 

மதுமதி தோழியோடு சென்ற சிறிது நேரத்திலேயே குழந்தை மெல்ல சிணுங்க ஆரம்பித்தது… “ம்மா… ம்மா…” என்று தாயைத் தேடியது. என்ன சொல்வான் அவன்…! “பொம்மு குட்டி… என்ன வேணும்…” என்று சமாதானம் செய்ய முயன்றான். கைப்பேசியை எடுத்து கார்டூன் போட்டுக் காட்டினான்… அது ஓரளவு பலன் தந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் குழந்தை மீண்டும் அழ ஆரம்பித்தது.

 

மகளைச் சமாதானம் செய்ய முடியாமல் தவித்தவனுடைய கோபம் மனைவியின் பக்கம் திரும்பியது… கோபத்தை அடக்கிக் கொண்டு கைப்பேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான். ரிங் சென்று கொண்டே இருந்தது அவள் எடுக்கவில்லை.

 

‘ச்ச… குழந்தையோட ஞாபகம் கூட இல்லாம அப்படி எங்க போய்த் தொலைஞ்சா…’ – எரிச்சலுடன் நினைத்தபடி மகளுக்கு வேடிக்கை காட்டுவதற்காக வாசல்பக்கம் வந்தவனுக்கு அந்தக் காட்சி கண்ணில் பட்டது.
Comments are closed here.

error: Content is protected !!