Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-22

அத்தியாயம் – 22

திருமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு வந்து குழந்தையோடு காரில் ஏறிய மதுமதியிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வண்டியைக் கிளப்பிய கார்முகிலனின் முகம் பாறை போல் இறுகியிருந்தது. மதுமதியும் கோபமாகத்தான் இருந்தாள். ‘திருமணம் முடிந்ததும் முடியாததுமாக இப்படி இழுத்துக்கொண்டு வந்துவிட்டானே…! நம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே வந்த குணா அண்ணாவுடன் நின்று ஒரு வார்த்தை பேச விடாமல் செய்துவிட்டானே…!’ – அவள் மனம் பொருமியது. ஜன்னல் வழியே வேடிக்கை பார்ப்பது போல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

 

“யார் அவன்..?” – கார்முகிலனின் கோபக்குரலில் கவனம் பெற்று, சட்டென்று திரும்பி அவன் முகம் பார்த்தாள்.

 

“என் மனைவியை வேலைக்கு அனுப்பணுமா வேண்டாமான்னு எனக்குத் தெரியாதா..? அவன் யாரு இதைப் பற்றியெல்லாம் பேசுறதுக்கு..?” – சீற்றத்துடன் கேட்டான்.

 

திருமணத்திற்கு வந்ததிலிருந்து ஒருவர் மாற்றி ஒருவராக அவளுடைய பழைய காயங்களையெல்லாம் கீறி ரணமாக்கிய வேதனையைத் தாங்க முடியாமல், அந்தக் காயங்களுக்குக் காரணமான கணவன் மீது கடுங்கோபம் கொண்டிருந்தாள். அந்தக் கோபத்தணல் குறைவதற்குள் அவளை விடாபிடியாகத் திருமண மண்டபத்திலிருந்து அழைத்துக்கொண்டு வந்ததோடு மட்டுமல்லாமல் தேவையில்லாத விசாரணையையும் அவன் ஆரம்பித்தது அவளைக் கொதிப்படையச் செய்தது. அவள் தன் கட்டுப்பாட்டை மீறி அவனிடம் பாய்ந்தாள்.

 

“என்னை வேலைக்கு அனுப்பறதுக்கும்… அனுப்பாததுக்கும் நீங்க யாரு..?”

 

சுள்ளென்று வந்து விழுந்த மனைவியின் வார்த்தைகளில் திகைத்த கார்முகிலன், பிரேக்கை அழுத்தி ‘க்ரீச்’ என்ற சத்தத்துடன் காரை நிறுத்தியபடி திரும்பி அவள் முகம் பார்த்தான்.

 

‘நீங்க யாரு..? நீங்க யாரு..?’ என்கிற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவன் செவிகளில் ஒலித்துக் கொண்டிருந்தன. அவனுடைய கோபமெல்லாம் போன இடம் தெரியவில்லை. கோபத்தைத் தாண்டிய ஏதோ ஓர் உணர்வு அவனை ஆட்கொண்டுவிட்டது.

 

அவனால் நம்ப முடியவில்லை…! மதுமதி தான் பேசினாளா…! அவளிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகளை அவன் கேட்டதே இல்லை. எவ்வளவோ தவறு செய்திருக்கிறான். அறியாமையில் தான் என்றாலும் அவளுக்கு எத்தனையோ கொடுமைகளை இழைத்திருக்கிறான். அப்போது கூட அவனை அந்நியப்படுத்திப் பேசாதவள் இன்று பேசிவிட்டாள். காதில் விழுந்த வார்த்தைகள் அவள் உதிர்த்தவை தான் என்பதை முழுதாக அவன் மனம் நம்புவதற்குள் மீண்டும் பேசினாள்.

 

“நான் என்ன செய்யணும்… செய்யக் கூடாதுங்கிறதை நான் தான் முடிவு பண்ணுவேன்… நீங்க என்ன சொல்றது…” – வார்த்தைகள் ஒவ்வொன்றும் கூர் கத்திகளாய் மாறி அவன் இதயத்தைக் கிழிக்கும் வலியைச் சகிக்க முடியாமல் கண்களை மூடி… ஆழ மூச்செடுத்துத் திறந்தான்.

 

“நான் உன்னைக் கட்டுப்படுத்தணும்னு நினைக்கல மதி… ஆனா நீ வேலைக்குப் போகணும்னு நினச்சா நான் ஹெல்ப் பண்ண மாட்டேனா?” – ஏக்கத்துடன் கேட்டுவிட்டுப் பரிதாபமாகத் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கும் கணவனைக் காணும்பொழுது அவள் வயிற்றைப் பிசைந்தது. ஆனால் இவனை எப்படி நம்புவது? இன்று இவ்வளவு ஏக்கமாகப் பார்ப்பவன் தானே அன்று தவிக்கவிட்டான்! பழைய சம்பவங்களை மறக்கவும் முடியாமல்… கணவனை மேலும் காயப்படுத்தவும் விரும்பாமல் நொந்து போய் மீண்டும் ஜன்னல் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். கார்முகிலன் விடவில்லை. வீணாக வாயைவிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டான்.

 

“ஏன் அமைதியாயிட்ட? என்னைவிட அவனுக்கு உன்மேல அதிகமா அக்கறை இருந்திட முடியுமா? இல்ல… உனக்கு என்ன தேவை… தேவையில்லைங்கறது தான் அவனுக்குத் தெரிஞ்சிடுமா?” – ஆற்றாமையுடன் அழுத்தமாகக் கேட்டான்.

 

சற்றுமுன் கணவனுக்காக இரங்கிய மனம் அவனுடைய அழுத்தமான கேள்வியில் மீண்டும் முறுக்கிக் கொண்டது.

 

“அக்கறையா…! நீங்களா…! அதுவும் என்மேல…! ஹா…” – ஏளனமாக ஒரு பார்வைப் பார்த்தாள். அந்த ஒற்றைப் பார்வை அவனை அடித்து வீழ்த்தியது. அவன் இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பவளிடமிருந்து வெளிப்பட்ட அந்தப் பார்வையைத் தாங்கிக் கொண்டு, அவன் இதயம் நின்று போகாமல் இன்னும் எப்படித் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது அவனுக்கே புரியவில்லை.

 

சொல்லாலும்… பார்வையாலும் அடுத்தடுத்து வாங்கிய பலமான அடியிலிருந்து மீளமுடியாமல் அடிபட்ட குழந்தை போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தைரியமானவன் தான்… முரடன் தான்… ஆனால் அந்த முரடனை அவள் குத்திக் குத்திக் கோழையாக்கிக் கொண்டிருந்தாள்.

 

“ஹும்ம்ம்… ” என்று பெருமூச்சுவிட்டு “க்கும்…” என்று தொண்டையை செருமி தன்னைச் சமாளித்துக்கொண்டு, “என்னோட அக்கறையைப் பற்றி ரொம்ப நல்லா தெரிஞ்சு வச்சிருக்க… சந்தோஷம்…” – வறட்சியாகக் கூறினான்.

 

எவ்வளவு பேசினாலும் அசராமல் திரும்பத்திரும்ப அவன் பதில் கொடுத்துக் கொண்டிருந்ததில் அவளுடைய கோபம் எல்லை மீறியது.

 

“ஆமாம்… அதைத் தெரிஞ்சு வச்சிருக்கிறதால தான் வேலைக்குப் போகணும்னு முடிவு பண்ணியிருக்கேன். எத்தனை நாள் உங்க காசுலயே உக்கார்ந்து சாப்பிட முடியும்? இன்னொரு தரம் வீட்டைவிட்டு வெளியே போறது மாதிரி நிலைமை வந்தா… கைல கொஞ்சமாவது சேமிப்பு இருக்க வேணாம்?” – இரக்கமின்றி நாவைச் சுழற்றி அவன் இதயத்தை ரணமாக்கினாள்.

 

உண்மையில் அவளுக்குக் குழந்தையை விட்டுவிட்டு வேலைக்குப் போகும் எண்ணமே இல்லை. ஆனால் அந்த நிமிடம் தன்னுடைய ஈகோவை நிலைநாட்ட வேண்டும் என்கிற வேகத்தில் பேசினாள்.

 

‘உங்க காசு… உட்கார்ந்து சாப்பிடறது… வீட்டை விட்டு வெளியே போறது…’ – எப்படியெல்லாம் நோகடிக்கிறா! அவனுக்கு உள்ளே வலித்தது. ஆனால் அவனுடைய வலியைப் பற்றி அதிகம் யோசிக்க நேரமில்லாமல் குழந்தையைப் பற்றிய பயம் அவனை உந்த, “அப்போ பொம்மு…!” என்றான் பதற்றத்துடன்.

 

“எனக்கு மட்டும் தான் குழந்தையா? உங்களுக்கு இல்ல? நீங்க வேலையை விட்டுட்டு பார்த்துக்கோங்க” அடாவடியாகப் பேசினாள். மற்ற நேரமாக இருந்திருந்தால் அவளுடைய இந்த அடாவடிப் பேச்சை ரசித்துச் சிரித்திருப்பான். அவளைச் சீண்டி விளையாடியிருப்பான். ஆனால் இன்று அவனால் எதுவும் முடியவில்லை. பலகீனப்பட்டுப் போயிருந்தான்.

 

“புருஷன்… புருஷன்னு உங்களையே சுத்திச் சுத்தி வந்துட்டுக் கடைசில நடுரோட்ல நின்னேன். இப்போ குழந்தை, குழந்தைன்னு… மறுபடியும் அதே தப்பை பண்ண சொல்றீங்களா?”

 

“சரி… இதைப்பற்றி அப்புறம் பேசலாம்…” – அவள் கோபமாக இருக்கிறாள் என்பதை உணர்ந்து விஷயத்தை ஆறப்போட முயன்றான்.

 

“அப்புறம் பேசறதுக்கெல்லாம் ஒண்ணுமில்ல. கண்டிப்பா நான் வேலைக்குப் போகத்தான் போறேன்”

 

ஒரு நொடி மனைவியின் கண்களை நேருக்கு நேர் பார்த்தவன் “சரி…” என்கிற ஒற்றை வார்த்தையுடன் காரைக் கிளப்பினான்.

###

 

முகத்தில் மலர்ச்சி என்பது மருந்துக்கும் இல்லாமல், எதையோ பறிகொடுத்தவன் போல் ஹால் சோபாவில் கால்களை நீட்டி… கண்களை மூடி… உயரமான தலையணையை முதுகிற்கு அணைவாகக் கொடுத்துச் சாய்ந்தமர்ந்திருந்த கார்முகிலனின் புருவங்கள் முடிச்சிட்டிருந்தன. அவன் காதில் பொருத்தியிருந்த ஐபாடில் எண்பதுகளில் வெளியான ஏதோ ஒரு சோகப்பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்க வேண்டும். தன்னுடைய சொல்லடிகள் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து வெளிவர முடியாமல் அவன் மனம் அல்லாடிக் கொண்டிருப்பது மதுமதிக்குப் புரிந்தது.

 

வெளியிலிருப்பவர்கள் கொடுத்த அழுத்தம் தாங்காமல் கோபத்தில் எதையோ பேசிவிட்டாள். ஆனால் அதையே நினைத்து அவன் மறுகிக் கொண்டிருப்பதை அவளால் பார்க்க முடியவில்லை. எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய திமிரை இழக்காதவன் இன்று ஓய்ந்து படுத்திருப்பது அவளை என்னவோ செய்தது.

 

அதற்காக தன்னுடைய நிலையிலிருந்து இறங்கி அவனைச் சமாதானம் செய்யவும் அவளால் முடியவில்லை. என்ன செய்வது…! குழந்தை…! ஆம் குழந்தையைச் சமாதானத் தூது விட்டால் என்ன…! – இந்த எண்ணம் தோன்றியதும் நொடிகூட தாமதிக்காமல் யாழினியைத் தூக்கிக்கொண்டு வந்து கணவன் படுத்திருந்த சோபாவிற்கு அருகில் விட்டுவிட்டுச் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள்.

 

சிறிதுநேரம் தரையில் விளையாடிக் கொண்டிருந்த யாழினி தந்தையைக் கவனித்துவிட்டு அவனிடம் நெருங்கி “ப்பா… ப்பா… எந்தி… ப்பா…” என்று அவன் ஆடையைப் பிடித்து இழுத்தாள். கண்விழித்துத் திரும்பிப் பார்த்தான்.

 

மாலை குளியல் முடித்து… பௌடர் போட்டு… கன்னத்திலும் நெற்றியிலும் மை பொட்டு வைத்து… மிருதுவான காட்டன் ஆடை அணிந்து… புதிதாகப் பூத்த மலர் போல் நின்று கொண்டு… அணில் பல்லைக் காட்டி அழகாகச் சிரிக்கும் மகளைக் கண்டதும், அவன் மனதில் புகைமூட்டம் போல் சூழ்ந்திருந்த துன்பங்களெல்லாம் கலைந்தோடின.

 

“பொம்மு குட்டி… இங்க என்னடா பண்றீங்க?” என்று எழுந்து அமர்ந்தான்.

 

“பால்… பால்…” என்று தரையில் கிடந்த பத்தை எடுத்துத் தந்தையிடம் போட்டு விளையாட அழைத்தாள்.

 

“ஓ… பால் விளையாடணுமா..? அப்பா இ…தோ வந்துட்டே…ன்…” என்று வேகமாக எழுந்து முகத்தைக் கழுவிவிட்டு வந்தவன்… குழந்தையின் சிரிப்பே தன் மனக்காயங்களுக்கு மருந்தென நம்பி யாழினியைத் தோட்டத்திற்குத் தூக்கிக்கொண்டு வந்தான்.

 

தன் கையிலிருந்த பந்தை அவன் தூரத்தில் தூக்கிப் போட, குழந்தை அதை ஓடிச்சென்று எடுப்பதில் குஷியாகி சிரித்து விளையாடியது. முகிலன் தன் கவலைகளை மறந்து குழந்தையின் சிரிப்பில் லயித்த நேரம், வாசலில் அந்த கார் வந்து நின்றது. திரும்பிப் பார்த்தான். காரிலிருந்து குணா இறங்கினான்.

 

‘இவன் எங்க இங்க வர்றான்! நம்ம நிம்மதியைக் குலைக்கணும்னே கங்கணம் கட்டிக்கிட்டுத் திரியறானே!’ – எரிச்சலானான். ஆனாலும் வீட்டிற்கு வந்தவனை வரவேற்க வேண்டுமே என்கிற மரியாதைக்காக “வாங்க…” என்றான்.

 

“ம்ம்ம்…” – தலையசைத்தான் குணா.

 

‘வாங்கன்னு சொன்னா எவ்வளவு திமிரா தலையாட்றான்! வாயத் திறந்து பேச முடியாதோ!’ – கோபம் சுள்ளென்று வந்தது. கட்டுப்படுத்திக் கொண்டான்.

 

கார் சத்தம் கேட்டு வெளியே எட்டிப் பார்த்த மதுமதி, குணாவைப் பார்த்துவிட்டு “வாங்கண்ணா…” என்று வாய் நிறைய அழைத்துக்கொண்டே வாசலுக்கு வந்தாள். அவளைப் பார்த்ததும் தான் குணாவின் முகத்தில் சிரிப்பு வந்தது.

 

“சொன்ன மாதிரியே சரியா அஞ்சு மணிக்கு வந்து நிக்கிறீங்க…! காலேஜ்ல இருக்கும் போதெல்லாம் டைம் கீப் அப் பண்றதுல நீங்க ரொம்ப வீக்காச்சே…!” – அழகாகச் சிரித்தாள்.

 

‘இவன் எப்போ அஞ்சு மணிக்கு வர்றதா சொன்னான்…! போன் பண்ணியிருப்பான் போல…’ – மனதில் நினைத்துக் கொண்டான்.

 

“ஹா… ஹா… அதெல்லாம் இன்னமும் ஞாபகம் வச்சிருக்கியா நீ..?” – சிரிப்புடன் கேட்ட குணாவின் குரல் அவன் சிந்தனையில் குறுக்கிட்டது.

 

“மறக்குமா…!”

 

“இது குழந்தைக்கு…” – கையிலிருந்த துணிக்கடை பையை அவளிடம் நீட்டினான்.

 

“எதுக்குண்ணா இதெல்லாம்…” – தயக்கத்துடன் வாங்கிக்கொண்டு “தேங்க் யு” என்றாள்.

 

கார்முகிலனிடம் இருந்த குழந்தையின் பக்கம் திரும்பிய குணா “ஹேய்… யாழி பேபி… கம்… கம்… கம்…” என்று குழந்தையைத் தூக்க முயன்றான். அது முகத்தைத் திருப்பிக் கொண்டு தந்தையின் தோளில் சலுகையுடன் சாய்ந்து கொண்டது. மகளின் அந்தச் சிறு செயலில் பெரிதாக மகிழ்ந்தான் கார்முகிலன். தன் குழந்தையின் ஆதரவு அவனுக்கு யானை பலத்தைக் கொடுத்தது.

 

கர்வத்துடன் நிமிர்ந்து நின்று குணாவை நேருக்கு நேர் பார்த்து “புது ஆளுங்ககிட்ட அவ்வளவு சீக்கிரம் பழகமாட்டா… டைம் எடுப்பா..” என்றான். குணா சிறிதுநேரம் வாசலில் நின்றபடியே குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்க, “உன் ஃப்ரண்ட உள்ள கூட்டிட்டுப் போ மதி…” என்றான் கார்முகிலன்.

 

மதுமதி சட்டென்று கணவன் பக்கம் திரும்பினாள். என்னதான் அவள் அவனை வார்த்தைகளால் குதறியெடுத்தாலும் வெட்டிக்கொண்டு ஓடாமல் தானாக நெருங்கி வந்து ஒட்டிக் கொள்கிறானே! அவள் மனதில் கார்முகிலன் மீது இரக்கம் சுரந்தது.

 

குணாவின் பக்கம் திரும்பி “உள்ள வாங்கண்ணா…” என்று அவனை உள்ளே அழைத்ததோடு, கணவன் பக்கம் திரும்பி “குழந்தையைத் தூக்கிக்கிட்டு நீங்களும் உள்ள வாங்க…” என்று கணவனையும் உள்ளே அழைத்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.

 
Comments are closed here.

error: Content is protected !!