Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இரும்பின் இதயம் – 13

அத்தியாயம் – 13

அன்று அலுவலகத்திளிருக்கும் போது ஜெயச்சந்திரனுக்கு இரண்டு மூன்று முறை சாருமதியின் நினைவு வந்துவிட்டது. மாலை விரைவாக வேலைகளை முடித்துக்கொண்டு அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வீட்டிற்கு கிளம்பிவிட்டான். வீட்டிற்குள் நுழைந்தவுடன் தேடினான். அவளை காணவில்லை.

 

“கந்தசாமி… சாருமதி எங்க…?”

 

“ஆசுபத்திரிக்கு கெளம்பி போனாங்கய்யா… ”

 

“எப்போ போனாங்க…”

 

“இப்போதாங்கயா… ஒரு அஞ்சு நிமிஷம் கூட ஆகியிருக்காது. ஆட்டோக்கு போன்பண்ணி வரசொல்லி போனாங்க…”

 

“சரி…” என்று சொல்லிவிட்டு அவனுடைய அறைக்கு சென்று காக்கி உடையை மாற்றிவிட்டு உடனே அவனும் மருத்துவமனைக்கு கிளம்பிவிட்டான்.

————————————————————————————————————–

ஜெயச்சந்திரனை அவ்வளவு அருகில் பார்த்ததும் சாருமதி விழிவிரித்தாள்.

 

“இவன் எங்கே இங்கே வந்தான்…?” அவள் குழப்பமாக அவனை பார்த்தாள்.

 

“உள்ளே போ சாருமதி…”

 

‘இப்போ எதுவும் கேட்க முடியாது. அதோடு நமக்காக டாக்டர் வேற உள்ளே காத்துக் கொண்டிருக்கிறார்கள்.’ என்று நினைத்த சாருமதி அவனோடு சேர்ந்து மருத்துவரின் அறைக்குள் சென்றாள்.

 

“வாங்க சார்… வாம்மா…” என்று அந்த மருத்துவர் அவர்களை வரவேற்றார்.

 

“எப்படி இருக்கீங்க சார்… உங்களை நான் ஒரு முறை ‘ லயன்ஸ் கிளப் ‘ மீட்டிங்ல மீட் பண்ணி பேசியிருக்கேன். உங்களுக்கு ஞாபகம் இருக்கான்னு தெரியல…” என்றார் அந்த பெண் மருத்துவர்.

 

“அதெப்படி மறக்கும்… நல்லா ஞாபகம் இருக்கு… டாக்டர் மதன் எப்படி இருக்கார்…?” என்று அவனும் விசாரித்தான்.

 

“நல்லா இருக்கார் சார்…’ என்று அந்த பெண் மருத்துவரும் ஜெயச்சந்திரனும் உபச்சாரமாக பேசிவிட்டு

 

“உள்ளே வாம்மா… ஒரு தடவை செக் பண்ணிவிடலாம்…” என்று சாருமதியை பார்த்து அந்த மருத்துவர் சொன்னார். அதன் பின் இருவரும் அதே அறையிலேயே இருந்த மற்றொரு பகுதிக்கு சென்று பரிசோதனை முடிந்தவுடன் திரும்பி வந்தார்கள்.

 

அப்போது ஜெயச்சந்திரன் “இவளுக்கு என்ன ஆச்சு டாக்டர்… வாந்தி, மயக்கம் எல்லாம் அதிகமா இருக்கே…” என்று அவன் பேசி முடிக்கும் முன், அந்த மருத்துவர்

 

“பிரக்னன்சி-ல இதெல்லாம் சகஜம் தான் சார்…”  என்றார்.

 

‘ஜெயச்சந்திரனுக்கு ஒரு நிமிடம் தான் சரியாகத்தான் கேட்டோமா…?’ என்று சந்தேகமே வந்துவிட்டது. அவன் ஆச்சர்யமாக சாருமதியை பார்த்தான்.

 

அவன் கண்கள் ஆச்சர்யம், மகிழ்ச்சி, ‘என்னிடம் ஏன் சொல்லவில்லை’ என்ற கோபம்… என்று பலவித உணர்வுகளும் பிரதிபலித்தன. ஆனால் அவன் கண்கள் பேசும் மொழியை  உணர்ந்துகொள்ள அவள் அவனுடைய கண்களை பார்க்க வேண்டுமே… அவள் வெகு கவனமாக மருத்துவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அல்லது கேட்பதுபோல் நடித்துக் கொண்டிருந்தாளோ…!

 

“இவங்களுக்கு ‘ஹீமோக்லோபின்’ ரொம்ப கம்பியா இருக்கு சார்… நிறைய பேரிச்சம்பழம், சுத்தமான தேன், ஸ்ட்ராபெரி… இதெல்லாம் சாப்பிட்டால் சரியா ஆகிவிடும். கொஞ்சம் அயன் டேப்லேட்  கொடுத்துருக்கேன். தொடர்ந்து சாப்பிட சொல்லுங்க… ஒன்னும் பிரச்சனை இல்லை….” மருத்துவர் அவனிடம் சொல்லி முடித்தார்.

 

அவன் பிரம்மிப்பிலிருந்து மீண்டவனாக “இந்த வாந்தி…” என்று ஆரம்பிக்கவும்,

 

மருத்துவர் சிரித்துக்கொண்டே “அதெல்லாம் குறைந்தது மூன்று மாதத்திற்கு இருந்தே ஆகும் சார்… பயப்படாதீங்க… ரொம்ப அதிகமா இருந்தா ஏதாவது மருந்து எடுத்துக்கலாம். முடிந்த அளவு மாத்திரை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது… நீங்க கொஞ்சம் அவங்களை கவனமா பார்த்துக் கொண்டாலே போதும்… தைரியம் தான் முக்கியம். ” என்று அறிவுரை சொன்னார்.

 

‘நீங்க கொஞ்சம் அவங்களை கவனமா பார்த்துக் கொண்டாலே போதும்…’ என்ற மருத்துவரின் வார்த்தையை கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். அவளை இனி கவனித்து பாத்துக்கொள்ள வேண்டும் முடிவெடுத்துக்கொண்டான். அந்த முடிவே அவனை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டுவிட்டது.

 

மருத்துவமனையிளிருந்து வெளியே வந்து காரில் ஏறும் வரை ஜெயச்சந்திரன் சாருமதியிடம் எதுவும் கேட்கவில்லை. பின்னர் மெதுவாக

“உனக்கு போன முறை மருத்துவமனைக்கு வந்த போதே தெரியுமா…?” என்று கேட்டான். ஏனோ அவன் மனம் ‘அவளுக்கும் இப்போதுதான் தெரியும் …’ என்று அவள் சொல்லவேண்டும் என்று ஆசைப் பட்டது.

 

ஆனால் சாருமதியோ “ஆமாம் எனக்கு அப்போதே தெரியும்…” என்று கொஞ்சமும் தயக்கம்  இல்லாமல் சொன்னாள்.

 

‘ஏன் என்னிடம் சொல்லவில்லை…’ என்று அவன் கேட்கவில்லை. அதற்க்கு அவள் என்ன பதில் சொல்வாள் என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் ‘ஒரு நாள் மருத்துவமனைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராததற்கு    கிட்ட-தட்ட ஒரு வாரம் தான் கருவுற்றிருப்பதை என்னிடம் சொல்லாமல் விட்டுவிட்டாளே… இத்தனைக்கும் அன்று ஏன் வரமுடியவில்லை என்று விளக்கம் சொல்லி மன்னிப்பும் கேட்ட பின்பும்…’ ஏதேதோ எண்ணி அவன் மனம் வருந்தியது.

 

இந்த வருத்தத்தில் ஏதாவது பேசினால் அவளுடைய மனம் நோகும்படி நிச்சயம் ஏதாவது பேசிவிடுவோம் என்று அவன் வாயை இறுக்கமாக மூடிக்  கொண்டான். ஆனால் அவனுடைய மௌனம் அவளுக்கு வேறுமாதிரி தோன்றியது.

 

‘குழந்தையை பற்றி தெரிந்தும் ஒரு சந்தோஷத்தையும் முகத்தில் காணுமே… இவன் என்ன மனிதனா இல்லை இரும்பா… ச்சை..’ அவள் சலித்துக் கொண்டு கார் கதவில் சாய்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.

———————————————————————————————————

ஜெயச்சந்திரன் சாருமதியை கண்ணும் கருத்துமாக தானே கவனித்துக் கொள்ள ஆசைப்பட்டான். ஆனால் அவனுக்கு அதற்க்கு நேரமும் இல்லை தெரியவும் இல்லை. வீட்டில் ஒரு பெண் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தான்.

 

சாருமதியின் அம்மாவை அழைத்து சாருமதிக்கு துணையாக இருக்க சொல்லலாமா என்று நினைத்தான். ஆனால் அவர்கள் ஜெயச்சந்திரனை ஒரு இடத்தில் பார்த்தால் அந்த இடத்தில் இருக்க மாட்டார்கள். எப்போதாவது அவன் அவளுடன் அவளுடைய அம்மா வீட்டிற்கு போனால் அவளுடைய அம்மாவை பார்க்கவே முடியாது. சமையலறையை விட்டு வெளியே வரவே மாட்டார்கள். கிராமத்து வழக்கப்படி மருமகனிடம் நின்று பேசாத குணம். அவர்களை கொண்டுவந்து இவன் இருக்கும் வீட்டில் இருக்க வைத்தால் தினம் தினம் சங்கடப்படுவார்கள் என்று யோசித்து மாமியாரிடம் உதவி கேட்கும் முடிவை கைவிட்டான்.

 

மருத்துவமனையில் கேட்டு ஒரு நடுத்தர வயது நர்ஸ்சை வேலைக்கு அமர்த்திக் கொண்டான். அந்த பெண்மணி(கமலம்) சாருவை நன்கு கவனித்துக் கொண்டாள். அதனால் ஜெயச்சந்திரன் நிம்மதியாக இருந்தான்.

 

சாருமதிக்கு காலை நேர உபாதைகள் இருந்துகொண்டே இருந்தது. கமலம் அவளுக்கு தேவையானதை கொடுத்து அவளை நன்றாக பார்த்துக் கொண்டதாலும்… அவள் மேல் ஜெயச்சந்திரனுக்கு சிறு கோபம் இருந்ததாலும் ஜெயச்சந்திரன் சாருமதியின் பக்கம் திரும்பவே இல்லை.

 

ஒருவாரம் இதே போல் கழிந்தது. ஜெயச்சந்திரனுக்கு வேலைப்பளு அதிகமானது. அவன் இரவு நேரம் கழித்து வீட்டிற்கு வருவான். காலையில் விரைவாக கிளம்பிவிடுவான். சாருமதிக்கு அவனை கண்ணால் கூட பார்க்க முடியவில்லை. அவளால் அவனுடைய அருகாமைக்காக ஏங்காமல் இருக்க முடியவில்லை. அதனால் சரியாக உறங்காமல் அவன் வரும் வரை கண்களை மூடி படுத்திருப்பாள். அவன் வரும் அரவாரம் கேட்டால் எழுந்து அவனுக்கு தேவையானதை எடுத்துக் கொடுப்பது போல் அவன் முகம் பார்த்து கொஞ்சம் அமைதியடைந்து கொள்வாள்.

 

ஜெயச்சந்திரனுக்கு சாருமதியின் தூக்கம் கெடுவது பிடிக்கவில்லை. இரண்டு நாட்கள் சொல்லி பார்த்தான். மூன்றாவது நாள் அவளுக்கு தனியறையில் படுக்கை ஏற்பாடு செய்து அவளுடைய பொருட்களை அந்த அறைக்கு மாற்ற ஏற்பாடு செய்துவிட்டான். சாருமதிக்கு இது தாங்க முடியாத இடியாக தோன்றியது.

 

பெண்களுக்கு பொதுவாகவே கருவுற்றிருக்கும் போது சிறு விஷயமும்  பூதாகரமாக பயமுறுத்தும். அவளுக்கோ  கணவனோடு சரியான புரிதல் இல்லை. அதனால் இந்த சிறு மாற்றத்தை சரியான கோணத்தில் எடுத்துக் கொள்ள தெரியாமல் மனதை குழப்பிக் கொண்டாள்.

 

தினமும் இரவு வெகுநேரம் கழித்துதான் ஜெயச்சந்திரன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். வந்தவுடன் சாருமதியின் அறைக்கு  போய் அவளை ஒரு முறை பார்த்துவிட்டு தான் அவனுடைய அறைக்கு போவான். அது அவளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவள் மாத்திரையின் வேகத்தில் நல்ல உறக்கத்தில் இருப்பாள். அவள் அவனை பார்த்தே நாள் கணக்கில் ஆகிவிட்டிருந்தது.

 

இப்படியே ஒருமாதம் கழிந்தது. சாருமதி இந்த ஒரு மாதத்தில் கணவன் மீது பலவித கோபங்களை நெஞ்சிலிருந்து கழுத்துவரை சேர்த்து வைத்திருந்தாள். அது எப்போது வேண்டுமானாலும் சாருமதியின் வாய் வழியாக விஷ வார்த்தைகளாக ஜெயச்சந்திரன் மீது விழும் அபாயத்தில் இருந்தது. அவனோ அதை புரியாதவனாக தன் மனைவியை நன்கு பார்த்துக் கொள்கிறோம் என்று நிம்மதியாக வேலையில் கவனமாக இருந்தான்.
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    NICE UD

error: Content is protected !!