Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

இரும்பின் இதயம் – 14

அத்தியாயம் – 14

அன்று ரூபாவின் வழக்கு தீர்ப்பு சொல்லும் நாள். ஜெயச்சந்திரன் காலையிலேயே அவனுடைய அலுவலகத்திற்கு போவிட்டான். மற்ற வேலைகளை முடித்துக்கொண்டு அவர்கள் வழக்கு தீர்ப்பு சொல்லும் நேரத்திற்கு நீதிமன்றத்திற்கு சென்றான்.

 

பெரிய தலைகளின் குறுக்கீடு ஆரம்பத்திலேயே தடுக்கப்பட்டுவிட்டதால் எந்த சிக்கலும் இன்றி குற்றவாளிகளுக்கு அவரவர் குற்றங்க்களுக்கு தக்கபடி அனைவருக்கும் கடுங்காவல் தண்டனை அளித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அதுவரை காப்பகத்தில் தங்கவைக்கப் பட்டிருந்த மீட்கப்பட்ட குழந்தைகளை  அவரவர் பெற்றோரிடம் ஒப்படைக்க சொல்லி உத்தரவும் பிறப்பித்தார். ஜெயச்சந்திரனுக்கு நிறைவாக இருந்தது. ஒரு கடத்தல் கும்பலை வேரறுத்துவிட்ட திருப்த்தியுடன் வீட்டிற்கு கொஞ்சம் விரைவாகவே கிளம்பிவிட்டான்.

 

அவனை அவ்வளவு சீக்கிரம் வீட்டில் பார்த்த சாருமதிக்கு ஆச்சர்யமாக இருந்தது.

 

‘என்ன இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டார் ASP சார்…’ என்று நினைத்துக் கொண்டாள். அவனை பார்த்தே பல நாள் ஆகிவிட்டதால் அவளுக்கு லேசாக தொண்டை அடைத்தது. சமாளித்துக் கொண்டு அவனை கண்டுகொள்ளாமல் தோட்டத்திலிருந்து உள்ளே சென்றாள். அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவனும் அவனுடைய அறைக்கு சென்றான்.

 

அவன் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வீட்டில் அணியும் ஷார்ட்சும்,         டி-ஷர்ட்டும் அணிந்துகொண்டு அவனுடைய அறையில் உள்ள மேஜையில் இருந்த புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தான்.

 

மயக்கும் மாலை நேரத்தில் மெல்லிய இசை கேட்டபடி அவன் வேலை செய்து கொண்டிருக்கும் போது, சாருமதி அழகு பதுமையாக தலையில் சூட்டியிருந்த ஒரு துண்டு மல்லிகையின் வாசத்துடன், அவனுக்கு மாலை சிற்றுண்டியை கொண்டு வந்தாள். அறைவாசலில் அவள் நுழையும் பொழுதே நிமிர்ந்து பார்த்த ஜெயச்சந்திரனுக்கு  அங்கு இலகுவான புடவையில் தலை சீவி பூவைத்து பொட்டிட்டு எளிமையான தேவதையாக உள்ளே நுழைந்த மனைவியை பார்த்ததும் என்னவோ செய்தது.

 

லேசாக பூசினார் போல் இருந்த அவள் உடம்பு அவனுக்கு ஒரு குழந்தை விரைவில் வரப்போகிறது என்பதை ஞாபகப்படுத்தியது. அந்த நிமிடம் தனது எட்டு வயதில் தன் தாய் தந்தையுடன் அனுபவித்து இழந்த  குடும்பம் என்ற அமைப்பு தனக்கு மீண்டும் முழுமையாக கிடைத்துவிட்டதாக உணர்ந்தான். அதை மீட்டுக் கொடுத்த தன் மனைவி மீது அவனுக்கு இருக்கும் எல்லையில்லாத காதலை மனதார உணர்ந்தான்.

 

அவன் அவளை வைத்த கண் வாக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் சிற்றுண்டி தட்டை மேஜையில் வைத்துவிட்டு எதுவும் சொல்லாமல் வெளியே செல்ல திரும்பினாள். அவன் அவளுடைய கையை பிடித்து தடுத்து நிறுத்தி அவளுடைய இதழ் நோக்கி குனிந்தான்.

 

அதே நொடி அவள் அவனுடைய நெஞ்சில் இரண்டு கைகளையும் ஊன்றி அவனை பின்னுக்கு தள்ளிவிட்டு “ச்சீ…” என்று அருவருப்பாக கத்திவிட்டு அறையிலிருந்து வெளியேர முயன்றாள்.

 

“நில் சாருமதி…” என்றான் அழுத்தமாக. அவன் குரலில் என்றும் இல்லாத கடினத்தன்மை இருந்தது. அந்த குரல் பொதுவாக அவன் குற்றவாளிகளிடம் பயன்படுத்துவது. முதல் முறையாக சாருமதியிடம் பயன்படுத்தினான்.

 

அந்த குரலுக்கு கட்டுப்பட்டு அவள் நின்றாள். ஆனால் அவனை திரும்பிப் பார்க்கவில்லை.

 

“என்ன சீ…” அழுத்தமாக கேட்டான்.

 

அவள் அவனை திரும்பிப் பார்த்தாள். அந்த பார்வையில் என்ன இருந்தது… அவனுக்கு அதைப்பற்றி அக்கறை இல்லை..

 

“என்ன ‘சீ’-ன்னு கேட்டேன். சீ -ன்னு எதை சொல்லுவாங்கன்னு உனக்கு தெரியுமா…?” இவ்வளவு கடுமையாகவும் குரலை மாற்ற முடியுமா…?

 

ஆனால் அந்த கடுமை சாருமதியை அசைக்கவில்லை. “அந்த பேரை சொல்லி நிச்சயம் உங்களை கூப்பிட மாட்டேன். அது நன்றி உள்ளது. ஒரு வேலை சாப்பாடு போட்டால் நன்றியோடு பாசத்தையும் காட்டி வாலை ஆட்டிக்கொண்டு பின்னால் ஓடிவரும்… உங்களை அந்த பேர் சொல்லி அழைத்தால் அதற்குத் தான் கேவலம்.”

 

“நாய்ன்னு சொல்லக் கூட என்னை தகுதி இல்லாதவன்னு சொல்ற… அப்படி என்ன நான் தரம் தாழ்ந்துட்டேன்….” அவன் சிரமப்பட்டு தன் கோவத்தை அடக்கிக் கொண்டிருக்கிறான் என்பது சிவந்துவிட்ட அவனது முகத்திலும், விடைத்திருந்த மூக்கிலும் தெரிந்தது.

 

“உங்களோட தரம் தாழ்ந்ததோ இல்லையோ என்னோட தரத்தை தாழ்த்திட்டிங்க…”

 

“ஓஹோ… அப்படி என்ன உங்களோட தரத்தை தாழ்த்திட்டோம்… அதையும் நீங்களே சொல்லுங்க..” அவன் நக்கலாக வினவினான்.

 

“நான் யார் இந்த வீட்டுல…? உங்களோட பொண்டாட்டின்னு மட்டும் சொல்லிடாதிங்க… எல்லா வீட்டிலேயும் ஒரு மனைவிக்கு கிடைக்குற எதுவும் எனக்கு இந்த வீட்டில் கிடைக்கல… இந்த வீட்டில் இருக்கிற டிவி சோபா மாதிரி நானும் ஒரு ஜடம் அவ்வளவுதான். ஆனால் என்ன ஒரு வித்தியாசம் அதெல்லாம் விலை கொடுத்து வாங்கின பொருட்கள், நான் தாலியை கட்டி இழுத்து வரப்பட்ட அடிமை. மற்றபடி எனக்குன்னு மனசோ அதில் ஆசாபாசங்களோ இருக்கக் கூடாது … ” அவள் முகத்தை கைகளால் மூடிக்கொண்டு அழுதாள்.

 

அந்த நிமிடம் அவனுக்கு அவள் இதற்க்கு முன் பேசியது எல்லாம் மறந்துவிட்டது… அவள் அவனை நாய்க்கு ஒப்பிட்டதை கூட மறந்துவிட்டான். அவள் அழுவது வேதனையாக இருந்தது. எப்படியாவது அவள் அழுகையை நிறுத்த வேண்டும் என்று நினைத்து கேட்டான்…

 

“அப்படி என்னதான் உனக்கு இந்த வீட்டில் குறை சாருமதி…”

 

அவள் சட்டென நிமிர்ந்தாள் சிவந்திருந்த முகம் அதிர சொன்னாள் “ஐயோ… என்னை அப்படி கூப்பிடாதிங்க…. நீங்க இப்படி என்னை சாருமதி… சாருமதின்னு கூப்பிடுவதிலிருந்தே தெரியுது… உங்க மனதிலிருந்து என்னை எவ்வளவு தூரம் விலக்கி நிறுத்தியிருக்கீங்கன்னு… உங்க மனசுல எனக்கு கொஞ்சம் கூட இடம் இல்லை…”

 

“பேரை சுருக்கி கூப்பிட்டாதான் நீ என் மனசுல இருக்குறதா அர்த்தமா… இது என்ன அபத்தமான பேச்சு…?”

 

“அப்படித்தான்… நிச்சயமா அப்படித்தான்… இதுவரை எனக்கு நெருக்கமானவங்க யாரும் என்னை சாருமதின்னு முழு பெயர் சொல்லி அழைத்ததில்லை. புதுசா பார்க்குறவங்க, பழக்கமில்லாதவங்க தான் இப்படி கூப்பிடுவாங்க…. நீங்க என்ன என்கிட்ட புதுசா பழகுரவரா….? அப்படி தினம் தினம் புதுசா பழகனும்ன்னா நான் எதுக்கு… ஒரு விலைமாது போதுமே…” அவள் கையை நீட்டி நீட்டி அவனை குற்றம் சாட்டி பேசினாள்.

 

அவள் சொன்ன வார்த்தை அவனை மிகவும் காயப்படுத்தியது….

 

“ஏய்… கையை நீட்டி பேசுன கையை ஒடச்சிடுவேன் ஜாக்கிரதை… என்ன… விட்டா நீ பாட்டுக்கு பேசிகிட்டே போற…? நீ என் பொண்டாட்டிடீ… உனக்கு நான் தாலி கட்டியிருக்கேன். உன்னை நான் தொடுவதை அசிங்கமா பேசினால்  நான் மிருகமாயிடுவேன் சொல்லிட்டேன்…” என்று உறுமினான்.

 

“ஓஹோ…. அது ஒன்னுக்கு தான் தாலி கட்டியிருக்கீங்களா…?” என்று கேட்டவள்… எந்த பெண்ணும் செய்ய தயங்கும் ஒரு காரியத்தை நொடியில் செய்துவிட்டாள். அந்த செயல் அவள் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிட்டது.

 

ஆம்.. ஜெயச்சந்திரனுக்கும் சாருமதிக்குமான வாதம் வலுத்துவிட்டதில் என்ன பேசுகிறோம் என்று புரியாமல் தன்னையே ஒரு விலைமாதுவுக்கு ஒப்பிட்டு பேசிவிட்டாள் சாருமதி.

 

அவனோ அவர்களின் உறவை அவள் கேவலப்படுத்துகிறாள் என்று அவளை கண்டிப்பதற்காக ‘உனக்கு நான் தாலி கட்டியிருக்கிறேன். உன்னை நான் தொடுவதை தவறாக பேசினால் நான் மிருகமாகிவிடுவேன்…’ என்று சொல்லவும்…

 

‘தாலி கட்டிவிட்டால் எது வேண்டுமானாலும் செய்துவிடுவீங்களா…  ‘ என்று நினைத்த சாருமதி… “ஓஹோ…. அது ஒன்னுக்கு தான் தாலி கட்டியிருக்கீங்களா…? என்னை தொடுவதற்காக மட்டும் தான் இந்த தாலி என்றால் எனக்கு இந்தே தாலியே வேண்டாம்…”  என்று எதையும் யோசிக்காமல் தாலியை கழட்டி அவன் முகத்தில் வீசியடித்தாள்.

 

கண்கள் ரத்தமாக சிவந்துவிட… அவன் திகைத்து நின்றுவிட்டான்
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    HAYOOO

You cannot copy content of this page