Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

இரும்பின் இதயம் – 17

அத்தியாயம் – 17

அன்று மாலை ஜெயச்சந்திரன் வேலை சம்பந்தமாக நீதிமன்றத்துக்கு சென்று கொண்டிருந்தான். வழியில் ஒரு வெள்ளை வேட்டி ஆசாமி  ட்ராஃபிக் போலீசுடன் தகரராறு செய்து கொண்டிருந்தார். அங்கு ஒரு சிறு கூட்டம் கூடிவிட்டது. ட்ராஃபிக் போலீஸ் அந்த ஆளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.

 

இந்த காட்சியை பார்த்தபடி போலீஸ் காரில் சென்று கொண்டிருந்த ஜெயச்சந்திரன், “டிரைவர்.. வண்டியை யு ‘டேர்ன்’ அடிச்சு திருப்பி சிக்னலுக்கு போங்க…” என்றான்.

 

“ஓகே சார்…” டிரைவர் அடித்த வளைவில் ஒடித்து திருப்பி பிரச்சனை நடந்துகொண்டிருந்த இடத்தில் கரை நிறுத்தினார்.

 

“என்னடா போலீஸ்காரன் நீ… யார் வண்டின்னு தெரியாம நிருத்திடுவியா..? உம் பேரென்னடா…?” என்று அந்த வெள்ளை வேட்டி ஆசாமி ட்ராஃபிக் போலீஸ்சிடம் கத்திக் கொண்டிருந்தார். கொஞ்சம் விட்டால் அந்த ஆள் போலீஸ்காரரை ஓங்கி அடித்துவிட்டிருப்பார். அவ்வளவு ஆர்ப்பாட்டமாக கத்திக் கொண்டிருந்தார்.

 

காரிலிருந்து இறங்கி வந்த ஜெயச்சந்திரன் “என்ன பிரச்சனை இங்க…?” என்று அதட்டலாக கேட்டுக் கொண்டு கூட்டத்திற்க்குள் நுழைந்தான்.

 

அவனை பார்த்த டிராஃபிக் போலீஸ் விறைப்பாக சல்யூட் அடித்துவிட்டு “சார்… கார் சிக்னல்ல நிக்காம ஸ்பீடா போனது. நான் துரத்தி வந்து நிறுத்திட்டேன். அதனால இவர் கத்திக்கிட்டு இருக்கார் சார்… ” என்றார்.

 

ஜெயச்சந்திரன் அந்த ஆளை பார்த்து “என்ன இது…?” என்று முறைப்பாக கேட்டான்.

 

அந்த ஆளுக்கு ஜெயச்சந்திரனின் நிமிர்வை பார்த்து இப்போது சுருதி கொஞ்சம் குறைந்திருந்தாலும் “ஹலோ… சார்… யார் மேல கைவக்கிரதுன்னு சொல்லி குடுங்க சார்.. இல்லைனா அப்புறம் பின்னாடி கஷ்டப் பட வேண்டியிருக்கும்…” என்று ஜெயச்சந்திரனிடமும் முறைப்பாக பேசினான்.

 

“கார் சாவியை குடு… கோர்ட்ல ஃபைன் கட்டிவிட்டு காரை எடுத்துக்கோ…” ஜெயச்சந்திரன் அமைதியாக கேட்டான்.

 

“ஹலோ.. போலீஸ்சு…. என்ன திமிரா… என்கிட்டயே சாவி கேக்குற…! மவனே…”

 

“ரப்ப்ப்…” அவன் இன்னும் என்னவெல்லாம் பேசியிருப்பானோ… ஆனால் அதற்குள் அவன் கன்னம் பழுத்துவிட்டது.

 

“சாவிய எடுடா…” புலியின் உறுமலாக வந்தது ஜெயச்சந்திரனின் குரல்

 

அவனுடைய ஒரு கை கன்னத்தை தாங்கியிருக்க மறுகையால் சாவியை எதுத்து கொடுத்தான். அதை வாங்காமல் அங்கு நின்ற டிராஃபிக்  போலீஸ்சிடம் கொடுக்குமாறு சைகை செய்தான்.

 

அந்த ஆள் மறு பேச்சின்றி சாவியை டிராஃபிக் போலீஸ்சிடம் கொடுத்தான்.

 

“பேர் என்னையா.. ம்ம்… ஐயப்பன்…” என்று அந்த டிராஃபிக் போலீஸ் காரரின் சட்டையில் இருந்த பெயர் அட்டையை பார்த்துவிட்டு அவனே தெரிந்துகொண்டு “அவன் கத்தும் போது நீ அவனுக்கு தாளம் போட்டுக்கிட்டு இருக்க. நாலு தட்டு தட்ட வேண்டியதுதானே…” என்றான் அவரை கண்டிக்கும் விதமாக.

 

“இல்ல சார்.. அவர் பெரிய ஆளுங்களை தெரியும் என்று சொன்னார்…” என்று இழுத்தார்.

 

ஜெயச்சந்திரன் அவரை பார்த்த கடுமையான பார்வையில் அந்த போலீஸ் வாயை மூடி தலை குனிந்தார்.

 

“டிரைவர் வண்டியை எடுங்க…” என்று சொல்லிக்கொண்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்து கார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு நடக்கும் போது இடையில் ஒரு பெண்

 

“வணக்கம் சார்…” என்றாள்.

 

“வணக்கம்… நீங்க…” அடையாளம் தெரியாமல் கேட்டான்.

 

“என் பேர் மல்லிகா சார்… என் பொண்ணு காணாம போனப்போ உங்ககிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருந்தேன். என் பொண்ணு கெடைச்சிட்டா சார். உங்களால தான் சார் என் பொண்ணு எனக்கு கெடச்சா… ரொம்ப நன்றி சார்…” என்று அவனிடம் உருக்கமாக நன்றி சொல்லிவிட்டு அருகில் நின்ற அவளுடைய மகளை காட்டி “இது தான் சார் என் பொண்ணு…” என்றாள் அந்த பெண்.

 

அந்த குழந்தையை பார்க்கும் போது மனதிற்குள் இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது ஜெயச்சந்திரனுக்கு. அந்த குழந்தை அவளுடைய அம்மா போலவே மிகவும் அழகாக இருந்தது. குண்டு கன்னங்களும் பெரிய விழிகளும் அந்த குழந்தையின் அழகுக்கு அழகு சேர்த்தன. ‘ இதே மாதிரி சாருமதி சாயல்ல என்னோட குழந்தையும் அழகா இன்னும் கொஞ்ச நாள்ல இந்த உலகத்துக்கு வந்துவிடும்…’ மகிழ்ச்சியில் அவன் உடல் சிலிர்த்தது.

 

அந்த குழந்தையிடம் முழங்காலிட்டு அமர்ந்து

 

“உன் பேர் என்ன…? ” என்று ஆசையாக கேட்டான்.

 

“A.அனு…” என்று அது கொஞ்சும் குரலில் கொஞ்சம் வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னது.

 

“என்ன படிக்கிற…”

 

“3rd ஸ்டாண்டர்ட் ‘B’ Section” என்றது அந்த குழந்தை.

 

அவன் அந்த குழந்தையின் குண்டு கன்னத்தில் தன் இயல்புக்கு மாறாக அழுந்த முத்தமிட்டு டிரைவரிடம் சொல்லி அருகில் இருந்த கடையில் ஒரு சாக்லேட்  பார் வாங்கி வர சொல்லி கொடுத்தான். அந்த குழந்தை மகிழ்ச்சியாக

 

“தேங்க்ஸ்…” என்று சொல்லிவிட்டு வாங்கிக்கொண்டது.

 

“நாங்க வர்றோம் சார்…” என்றாள் அந்த பெண்.

 

“வாங்க… குழந்தையை பத்திரமா பார்த்துக்கோங்க…” என்றான்.

 

அவர்கள் இருவரும் சற்று தள்ளி நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் ஏறும்வரை அவர்களையே பார்த்துக்கொண்டு நின்றான்.

 

ஆட்டோவில் ஏறும் முன் அந்த பெண் ஜெயச்சந்திரனை திரும்பிப்பார்த்தாள். ஆட்டோவில் ஏறிவிட்ட குழந்தை மறுபக்கம் தலையை நீட்டி எட்டிபார்த்து ஜெயச்சந்திரனுக்கு கையை ஆட்டி ‘டாட்டா’ சொன்னது. ஜெயச்சந்திரனும் திரும்ப சொன்னான். அந்த குழந்தை ‘flying kiss’ கொடுத்தது. இவனும் திரும்ப கொடுத்து கையை ஆட்டினான். அந்த குழந்தையின் தாய் ஆட்டோவில் ஏறாமல் ஒரு கையால் ஆட்டோவை பிடித்துக்கொண்டு அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதை ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு ஜெயச்சந்திரனை பார்த்து புன்னகைத்துவிட்டு ஆட்டோவில் ஏறிச் சென்றாள்.

 

இந்த காட்சியை எதிர் பக்கம் சாலையில் மற்றொரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த சாருமதி கவனித்தாள். அவளுக்கு ஆட்டோவிற்க்குள் அமர்ந்திருந்த குழந்தையை பார்க்க முடியவில்லை. அவளால் ஆட்டோவிர்க்கு வெளியே நின்று கொண்டிருத அந்த அழகிய பெண்ணையும் ஜெயச்சந்திரனையும் மட்டும் தான் பார்க்க முடிந்தது.

 

மருத்துவமனையிலிருந்து சாருமதி திரும்பி வந்து கொண்டிருக்கும் போது ஜெயச்சந்திரனை பார்த்தாள். அவன் ஒரு அழகான இளம் வயது பெண்ணுக்கு கையை அசைத்து டாட்டா’ காண்பித்து கொண்டிருந்தான். பின் அவள் ஆட்டோவில் ஏறும் போது ஜெயச்சந்திரனை திரும்பிப்பார்த்தாள். இவன் அவளுக்கு ‘flying kiss’ கொடுத்து மீண்டும் ‘டாட்டா’ காட்டினான். அவள் சிரித்துக் கொண்டே அந்த ஆட்டோவில் ஏறி சென்றுவிட்டாள். இது தான் சாருமதி பார்த்த காட்சி.

 

இந்த காட்சியை பார்த்த சாருமதிக்கு நெஞ்சு கொதித்தது. வயிறு எரிந்தது. ‘எத்தனை நாள் இவள் அவனுக்கு அலுவலகம் செல்லும் போது வழியனுப்பி ‘டாட்டா’ சொல்லியிருப்பாள். ஒரு நாலாவது பதிலுக்கு சொல்லியிருப்பானா..? இப்போது இத்தனை பேர் பார்க்க நடு ரோட்டில்… எவளோ ஒரு மினுக்கி இவனை பார்த்து இளிக்கிறாள்… இவன் அவளுக்கு பறக்கும் முத்தம் கொடுக்கிறான்… ச்சை…’

 

அவள் மனம் அவளுடைய கட்டுப்பாட்டை மீறி கற்பனை செய்தது. ஒரே ஒரு நொடி ‘அவனுடைய குண இயல்புக்கு அவனால் அவள் நினைப்பது போல் ஒரு இழிவான செயலை செய்யமுடியுமா…?’ என்று சிந்தித்திருக்கலாம். ஆனால் காலையிலிருந்து சோர்ந்திருந்த அவளுடைய மனம்  நல்லவிதமாகவும் ஜெயச்சந்திரனுக்கு சாதகமாகவும் சிந்திக்க மறுத்தது. எவ்வளவு முயன்றும் சாருமதிக்கு அவளுடைய மனதின் ஓட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அவளை அவளே மனதால் துன்புறுத்திக் கொண்டாள்.

 

மனதின் வேதனை உடலில் பிரதிபலித்தது. அன்று இரவு முழுவதும் சாருமதிக்கு நல்ல காய்ச்சல். உடல் அனலாக கொதித்தது.

 

“இந்த ராத்திரி வேளையில் எந்த மருத்துவமனைக்கு கொண்டு போக முடியும். வீட்டு வாசல்ல காரா நிக்குது… உடனே கொண்டு போக.. ஏதாவது கஷாயம் வச்சு கொடு… காலையில அழைச்சுகிட்டு போகலாம்…” என்று சொல்லிவிட்டார் சாருமதியின் தந்தை.

 

சாருமதியை பார்த்து பார்த்து வேதனையில் ஒவ்வொரு நொடியும் விடியலுக்காக கண்விழித்து காத்துக் கொண்டிருந்தார் அவளுடைய அன்னை…

————————————————————————————

“வணக்கம் டாக்டர்… ரெண்டு நாள் ஆகியும் நீங்க கொடுத்த மாத்திரையிலும் ஊசியிலும் ஜுரம் குறையவே இல்லையே…. வயித்துல இருக்க குழந்தைக்கு ஏதும் ஆபத்து இல்லையே…?” சாருமதியின் தாய் சாருமதியை சோதித்துக் கொண்டிருந்த மருத்துவரிடம் கேட்டார்.

 

“எல்லா டெஸ்ட்டும் எடுத்து பார்த்துட்டேம்மா… ஒன்னும் பிரச்சனை இருக்க மாதிரி தெரியல… எதுக்கும் நீங்க இந்த பெண்ணை பார்த்துகிட்டு இருக்க மகப்பேறு மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போங்க. அவங்க குழந்தைக்கு ஏதாவது பிரச்சனையான்னு பரிசோதித்து சொல்லுவாங்க…” என்று அவர்கள் வீட்டிற்கு அருகில் கிளினிக் வைத்திருக்கும் மருத்துவர் சொன்னார்.

 

அந்த அறையிலிருந்து வெளியே வந்த அவளுடைய தாய் “ஏங்க… மாப்பிள்ளைகிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டு வந்துடுங்க….” என்றார் சாமதியின் தந்தையை பார்த்து.

 

“என்ன எங்க போக சொல்ற…? அந்த மனுஷன் அன்னைக்கே என்கிட்ட முகம் கொடுத்து பேசல… நா என்னாத்த அவருகிட்ட போய் சொல்றது. நம்பளால முடிஞ்சதை பார்ப்போம் வா நீ…” என்று சொல்லிவிட்டு சாருமதியையும் அவளுடைய தாயையும் அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஏறி அவளை தொடர்ந்து பரிசோதித்து வரும் பெண் மருத்துவரிடம் சென்றார்.

 

அங்கே சென்றதில் இதுவரை குழந்தைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இதே காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் கொஞ்சம் சிரமம் தான் என்று தெரிந்து கொண்டார்கள்.

 

சாருமதியை அதே மருத்துவமனையில் அனுமதித்துவிட்டார்கள்.  சாருமதியின் பெற்றோரும் மருத்துவரும் சாருமதியின் காய்ச்சல் குறைவதற்காக இரவும் பகலும் காத்திருந்தார்கள். ஆனால் அது குறைவது போல் தெரியவில்லை.

 

அந்த நேரத்தில் ஜுர வேகத்தில் சாருமதி உளறினாள். அவள் என்ன பேசுகிறாள் என்று யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை. வார்த்தைகள் குழறலாக வந்தது. சாருமதியின் தாய் பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டார்.

 

“ஏங்க… உங்கள கும்பிட்டு கேட்டுக்குறேன். மாப்பிள்ளைக்கு ஒரு வார்த்தை தெரியப் படுத்திவிடுங்க. நாளைக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா அவர் உங்களை தான் கேள்வி கேட்பார். என்னதான் அடிச்சுகிட்டாலும் புடிச்சுகிட்டாலும் அவர் பொண்டாட்டி புள்ளை அவருக்கு இல்லைன்னு ஆகிவிடாது. நீங்க ஒரு எட்டு போய்விட்டு வந்துடுங்க…” என்று எடுத்து சொல்லி கெஞ்சினார்.

 

இப்போது அவருக்குமே கொஞ்சம் பயம் வந்திருந்ததால் “சரி நான் போய் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன். நீ இங்கேயே இரு. புள்ளைய தனியா விட்டுட்டு எங்கேயும் போய்விடாத…” என்று சொல்லிவிட்டு ஜெயச்சந்திரனின் அலுவலகம் நோக்கி சென்றார்.
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    nice ud

You cannot copy content of this page