Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

இரும்பின் இதயம் – 18

அத்தியாயம் – 18

 “வணக்கம் மாப்பிள… நல்லா இருக்கீங்களா…?” சாருமதியின் தந்தை ஜெயச்சந்திரனை அவனுடைய அலுவலகத்தில் சந்தித்தார்..

 

“வணக்கம்… வாங்க, உக்காருங்க. என்ன சாபிட்றீங்க?”

 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாப்ள… உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லிவிட்டு போகலாமுன்னு தான் வந்தேன்.”

 

“ம்ம்ம்… சொல்லுங்க என்ன விஷயம்?”

 

“சாருவுக்கு நாலு நாளா காச்சல். டாக்டர்கிட்ட காட்டியும் ஒன்னும் கேட்கல. அதுதான் உங்களுகிட்ட ஒரு வார்த்தை சொல்லிவிட்டு போகலாம் என்று வந்தேன்.” என்றார்.

 

அவர் தெளிவாக ‘நீங்க சாருவை பார்க்க வாங்க…’ என்று அழைக்காமல் அவனிடம் செய்தியை மட்டும் தெரியப்படுத்தினார். ‘நீ வந்தாலும் சரி… வரவில்லை என்றாலும் சரி.. சொல்ல வேண்டிய கடமைக்கு நான் சொல்லிவிட்டேன்.’  என்று மனதில் நினைத்து கொண்டு அவனுடைய முகத்தை பார்த்தார்.

 

ஜெயச்சந்திரனை பொறுத்தவரை காய்ச்சல் எல்லாம் ஒரு வியாதியே இல்லை. அது அவனுக்கு ‘தும்மல்’ ‘இருமல்’ மாதிரி தான். அதனால் அவன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

 

“எந்த மருத்துவமனையில் சேர்த்துருக்கீங்க?” என்று கொஞ்சமும் பதட்டம் இல்லாமல் சாதாரணமாகக் கேட்டான்.

 

அவர் அந்த மருத்தவமனை, அவளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவரின் பெயர்  எல்லாம் சொன்னார்.

 

“சரி நான் டாக்டர்கிட்ட பேசுறேன்…” என்று சொன்னான்.

 

“அப்போ நான் வரேன் மாப்ள…” அவர் கிளம்பிவிட்டார்.

 

விஷயத்தை கேள்விப்பட்ட சாருமதியின் தாய்க்கு கொஞ்சம் வருத்தம் தான்.

 

‘எம் புருஷன் என்ன தான் குடிகாரனா இருந்தாலும் எனக்கு உடம்பு சரியில்லன்னா குட்டி போட்ட பூனை மாதிரி என்னையே சுத்தி சுத்தி வருவாரே… என் மகளுக்கு இப்படி பட்ட தலை விதியாவா இருந்திருக்கும்…’  அவருக்கும் மருமகனின் மேல் கொஞ்சம் எரிச்சல் வந்துவிட்டது.

————————————————————————————

ஜெயச்சந்திரனுக்கு சாருமதியை பார்த்துக் கொண்டிருக்கும் மருத்துவரை ஏற்கனவே தெரியும் என்பதால் சாருமதியின்  அப்பா கிளம்பியதும் அவன் மருத்துவரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினான்.

 

“ஹலோ டாக்டர். நான் ஜெயச்சந்திரன்…”

 

“வணக்கம் சார்… சொல்லுங்க சார்…” என்றார் அந்த மருத்துவர்.

 

“சாருமதிக்கு இப்போ எப்படி இருக்கு? ”

 

“இன்னிக்கு காலையிலிருந்து கொஞ்சம் மோசமா இருக்கு சார். அவங்க கர்பமா இருப்பதனால் வீரியம் அதிகம் உள்ள மாத்திரை மருந்து கொடுக்க முடியவில்லை…”

 

இப்போது ஜெயச்சந்திரனுக்கும் நிலைமையின் தீவிரம் கொஞ்சம் புரிந்தது.

 

“என்ன செய்யலாம் டாக்டர்….”

 

“GFC-ல ‘அட்மிட்’ பண்ணி ‘அப்சர்வேஷன்ல’ வச்சு குழந்தைக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்கலாம் சார். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா fever -அ குறைத்து விடலாம்.”

 

“சரி அப்படியே செய்யுங்க. எதாவது எமர்ஜன்சின்னா என்னோட பர்ஸ்னல்  நம்பர் தர்றேன்.  அதுல  எனக்கு கூப்பிட்டு சொல்லுங்க.” என்றான்.

 

“ஓகே சார்…” என்று பேச்சை முடித்தார் அந்த மருத்துவர்.

———————————————————————————————–

ஜெயச்சந்திரன் செய்த ஏற்ப்பாட்டினால்  சாருமதிக்கு சிறப்பான வைத்தியம் கிடைத்தது. அவளுடைய உடல்நிலை கொஞ்சம் கொஞ்சமாக தேறியது. தாயும் வயிற்றில் இருக்கும் குழந்தையும் எந்த ஆபத்தும் இல்லாமல் வீடு திரும்பினார்கள்.

 

தினமும் சாருமதியின் உடல் நிலை பற்றிய விபரங்களை மருத்துவருக்கு தொடர்புகொண்டு தெரிந்துகொண்ட ஜெயச்சந்திரன் ஒருமுறை கூட சாருமதியை வந்து பார்க்கவில்லை. ஆனால் அவள் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்லும் வரை ஆன அனைத்து செலவுகளுக்கும் ‘செக்’ போட்டு மருத்துவமனைக்கு அனுப்பி ஒரு கணவனுடைய கடமையை அதில் மட்டும் சரியாக நிறைவேற்றினான்.

 

“செலவு நிறைய ஆகிவிட்டது போலருக்கேம்மா… என்ன செஞ்ச?” வீட்டிற்கு வந்ததற்கு பின் சாருமதி தாயிடம் கேட்டாள்.

 

“எல்லாம் மாப்பிள்ளை அனுப்பிவிட்டார்ம்மா…” சுரத்தே இல்லாமல் பதில் வந்தது தாயிடமிருந்து.

 

“அவர் என்னை பார்க்க வரவே இல்லையாம்மா..?” சாருமதி முடிந்த அளவு ஏக்கத்தை வெளிக்காட்டாமல் கேட்டாள்.

 

“வந்தார்ம்மா… உனக்கு தெரியாது… நீ தான் கண் முழிக்கவே இல்லையே… உடம்பு கொஞ்சம் தேறினதும் நீ உன் வீட்டுக்கு போம்மா… மாப்பிள்ளையும் தனியாவே இருக்கார்ல்ல… இங்க வர சங்கட படுவார். அதுதான் உன்னை மருத்துவமனையில வந்து பார்த்துட்டாரே…’ எப்படியாவது மகளை மருமகனோடு சேர்த்துவைத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் அவளுடைய தாய் பேசினார்.

 

அவர் சொல்வதில் உண்மை இல்லை என்பதை அவருடைய சோர்ந்த முகமே சாருமதிக்கு காட்டிக் கொடுத்தது. ஆனாலும் அம்மாவின் மனம் சங்கடப் படக் கூடாது என்று “சரிம்மா இதை பற்றி அப்புறம் பேசலாம். நான் கொஞ்சம் படுக்குறேன்…” என்று சொல்லிவிட்டு அந்த இடத்திலிருந்து அகன்றாள்.

 

——————————————————————————–

 

நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது. சாருமதியின் உடல் நன்கு தேறிவிட்டது. அவளுக்கு நம்பிக்கை தளர்ந்துவிட்டது. ஜெயச்சந்திரன் அவன் பிடியிலிருந்து இனியும் இறங்கி வந்து அவளை அழைத்து செல்வான் என்று அவளுக்கு நம்பிக்கை இல்லை. அவளாலும் அவளுடைய பிடிவாதத்தை விட்டுவிட்டு அவனிடம் செல்ல முடியவில்லை. வேறு என்ன செய்வது. இப்படியே எத்தனை நாள் இருப்பது….?

 

அவனை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தாயிற்று. அவனுக்கும் நான் தேவைப் படவில்லை. பின் அவனுடைய உதவியும் பணமும் மட்டும் எதற்கு…? அதுவும் வேண்டாம். இனிஒரு முறை அவனிடம் கையேந்தும் நிலை தனக்கு வரவிடக் கூடாது என்று நினைத்த சாருமதி ஒரு முடிவு செய்தாள்.

 

‘தன்னுடைய தேவைக்கு தானே சம்பாதிப்பது’ என்று முடிவு செய்து வேலைக்கு போக திட்டமிட்டாள். நல்ல வேலை வேண்டுமென்றால் PG முடித்திருக்க வேண்டும். ஆனால் சாருமதி UG தான். சரி… ஓரளவு சுமாரான வேலை தேடிக்கொள்ளலாம் என்று நினைத்தால் அவளுடைய certificates எல்லாம் ஜெயச்சந்திரனுடைய வீட்டில் இருக்கிறது. என்ன செய்வது…?

 

‘அப்பாவை போய் எடுத்துவர சொல்லலாம். ஆனால் ஏற்கனவே ஒருமுறை அம்மாவிடம் இதுபோல் கேட்டு நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டது நினைவில் இருக்கிறது. அதனால் அம்மாவிடமும் அப்பாவிடமும் இதை பற்றி பேசமுடியாது.’ என்று முடிவு செய்து ஜெயச்சந்திரனுக்கே அவனுடைய கைபேசியில் அழைத்தாள்.

 

“ஹலோ ….”

 

கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு பின் சாருமதியின் குரலை கேட்ட ஜெயச்சந்திரனுக்கு உடம்பில் புது ரெத்தம் பாய்ந்தது. பேச்சுவராமல் நின்றுவிட்டான்.

 

“ஹலோ… நான் சாருமதி பேசுறேன்…”

 

“ம்ம்… சொல்லு  சாருமதி…” முயன்று நிதானத்தை வரவழைத்துக் கொண்டு பேசினான்.

 

“என்னோட certificates எல்லாம் பீரோல வச்சிருக்கேன். அதை எடுத்து யார்கிட்டையாவது கொடுத்தனுப்புங்க…:” மிடுக்காக விஷயத்தை மட்டும் சொன்னாள். அவளுக்குமே நீண்ட நாட்களுக்கு பிறகு அவனுடைய குரலை கேட்டது கொஞ்சம் நடுக்கமாகத்தான் இருந்தது. ஆனால் அவள் ஏற்கனவே தன்னை தயார் படுத்திக்கொண்டு பேசியதால் கொஞ்சம் சாமர்த்தியமாக பேசினாள்.

 

“அதெல்லாம் உனக்கு எதுக்கு இப்போ?”

 

“அது உங்களுக்கு தேவை இல்லாதது…”

 

“விஷயத்தை சொன்னாள் கொடுத்தனுப்ப முடியுமா முடியாதான்னு சொல்லுவேன்” என்றான்.

 

“அதெல்லாம் சொல்ல முடியாது. என்னோட certificates உங்களுக்கு எதுக்கு? அதை ஒழுங்கா யார்கிட்டையாவது கொடுத்தனுப்புங்க…” என்று மிரட்டலாக சொன்னாள்.

 

அவனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. ‘எத்தனை நாள் அச்சு…? இந்த மாதிரி இவளுடைய பேச்சை கேட்டு…’ என்று நினைத்துக் கொண்டான்.

 

“அதெல்லாம் கொடுக்க முடியாது. உனக்கு வேண்டும் என்றால் நீயே வந்து எடுத்துக்கோ…” என்றான்.

 

‘அவள் இந்த வீட்டிற்குள் வந்துவிட்டால் அப்புறம் எப்படியும் அவளை இங்கிருந்து திரும்ப அனுப்ப கூடாது. எப்படியாவது சமாதானம் செய்துவிட வேண்டும்’  என்று நினைத்துக்கொண்டான்.

 

ஆனால் அவள் வேறு முடிவெடுத்துவிட்டாள். certificates கிடைக்கவில்லை என்றதும் எங்கு certificates  இல்லாமல் வேலை கிடைக்குமோ அங்கு வேலை தேடினாள்.

 

அப்படி வேலை தேடியதில் அவளுக்கு ஒரு கணினி மையத்தில் வேலை கிடைத்தது. அவள் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள். அவளுடைய அம்மா தடுத்தும் கேட்கவில்லை. ஜெயச்சந்திரனுக்கும்  இந்த விபரம் தெரியவந்தது. ஆனாலும் ‘எவ்வளவு தூரம் நீ போவ… போ…’ என்று அவனும் கண்டுக்காமல் இருந்தான். இப்படியே ஒரு மாதம் கழிந்தது. அப்போதுதான் திருச்சியில் ஒரு புது பூகம்பம் கிளம்பியிருந்தது….
2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    NICE UD


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Niveta Mohan says:

    Akka next episode please……….

error: Content is protected !!