Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 18

அத்தியாயம் – 18

“…ணா டேபிள் மேல ரெண்டு அடை வச்சுருந்தேனே., எடுத்துண்டேளா!”

கோமளம் சமையலறையிலிருந்து கத்தினாள்.

 

“நன்னா கேட்ட போ… உன் அடைய விண்டு வாய்லப் போட்டுத்தான்,

அரைமணி நேரத்துல ஆறுதரம் போய்ட்டு வந்துட்டேன்… வயித்த கலக்கினது இன்னும் நின்ன பாடக் காணோம். மணி இப்போவே ஒன்பதாகப் போறது. நான் இன்னும் ஆபீஸுக்கு போய் தலைய காமிச்சுட்டு, கோர்ட்டுக்கு போகனும்”

 

“நன்னா போங்கோளேன் யார் வேண்டாங்கறது”

 

“போய்ண்டுதானே இருக்கேன் நன்னா, காலம்பறலேருந்து”

 

“ஆண்டவா… நான் அத்தச் சொல்லல!

கோர்ட்டுக்கு போறதச் சொன்னேன். வெறுவயத்தோட அனுப்ப வேண்டாமேன்னுட்டு, ரெண்டே ரெண்டு துண்டு வார்த்து கொடுத்தேன்”

 

“நன்னா கொடுத்த போ! இன்னிக்கு அந்த மாயவரம் கொலை கேஸு வேற… அந்த வக்கீல நெனச்சாலே வயத்த கலக்கும்,  இதுல இது வேற”

 

“ஒன்னும் ஆகாது. போறச்சே  லொப்போரெட் ஒன்ன வாங்கி போட்டுண்டு  போங்கோ”

 

“நன்னா இதைச்சொல்லு, கோமளம் MBBSனு நெனப்பு மனசுல, கருமத்த மூணாங் கிளாஸ் தாண்டல”

 

“இங்க வாய் பேசாதேள், போய் அந்த மாயவரத்தான் வக்கீலாண்ட காமிங்கோ உங்க சமத்த” மோவாயைக் கண்ணத்தில் இடித்தபடி கணவரை வழியனுப்பிவிட்டு உள்ளே சென்றாள் கோமளம்.

 

அயனாவரம் மனநல மருத்துவமனை தாண்டி, வலதுபக்கம் திரும்பும், சந்தில், வால் பிடித்தது போல் கூடவே வரும் சுவறைக் கடந்து வாட்டர் டேங்க்கிற்கு முன் சடாரென வலதுபக்கம் இறங்கினால்…. உள்ளடர்ந்து உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், கடைசியாக  இருந்தது கோவிந்தாச்சாரி ஆபீஸ். 50,60 வீடுகள் இருந்தாலும், அமைதியாக இருந்தது

குடியிருப்புகள்.

 

வயிறு கொஞ்சம் தேவலாம்போல இருந்தது ச்சாரிக்கு.  ரெண்டு மூணு ஜூனியர்ஸ் நீட்டிய  பைல்களை சரிபார்த்துக் கொண்டிருந்த கோவிந்தாச்சாரி, வாசலில் நிழலாடுவதைப் பார்த்து தலை நிமிர்ந்தார்.

 

அவன் நின்றிருந்தான். அயல்நாட்டு விமானிப் போல அத்தனை நேர்த்தி. “எஸ்”

 

“உங்களிடம் தனியாக கொஞ்சம் பேச வேண்டும். பத்து நிமிடம்தான். உஷாவுடைய க்ளாஸ்மெட் ஷர்மியோட ப்ரதர்தான் நான். உங்க டாட்டர் உஷாதான், என்னுடைய கேஸிற்கு உங்களை ரெகமண்ட் செஞ்சாங்களாம்”

 

உஷா பேரைக் கேட்டதும் ச்சாரியின் உத்தரவிற்கு காத்திராமல் ஜூனியர்ஸ் அகன்றனர்.

 

பரவால்லையே நம்ம பொண்ணு! என்ற பெருமிதத்தோடு தனது ஹைதர் காலத்து ரிவால்விங் சேரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டார் ச்சாரி.

“சொல்லுங்கோ”

 

வெகு நிதானமாக தனது செல்போனில் விரல்களால் விளையாடியபின், அதை அவரின் மேஜை மேல் தள்ளியபடி அவன் சொன்னான்…

“என் பெயர் எழிலன். இதைக் கொஞ்சம் பாருங்கள்”

 

என்னவோ உலக அதிசயத்தைப் பார்க்கப் போகிற மாதிரி, கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக்கொண்ட ச்சாரி, செல்போனைப் பார்த்ததும் உச்சகட்ட அதிர்ச்சியாகி, வாயைத் திறந்த வேளை…

 

“ஷ்ஷ்… சத்தம்… சத்தம்… கூடாது… உங்க பொண்ணு என் கஸ்டடில… அதை மறந்துறாதீங்க!”

என்றான் எழிலன்.

 

வாயில் ப்ளாஸ்த்திரி ஒட்டி, கை கால்கள் கட்டியபடி அழுது கொண்டிருந்தாள்  உஷா….  செல்லில்.

 

ச்சாரி, தன் இரு கைகளாலும் வாயைப் பொத்தியபடி சத்தத்தையும் அடக்கி, வயிற்றில் கரைபுரண்டு ஓடிய கடாமுடா சத்தத்தையும் அடக்கி, முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை அடக்கமுடியாமல் வழிய விட்டார்…

 

அவர் நிலை எழிலனை என்னவோ செய்தது. உஷாவின் அப்பா என்பதாலா! இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சொன்னான்…

 

“ச்சாரி சார். உங்க அருமைப் பொண்ணு, ஒரேப் பொண்ணு, இருக்கும் நிலை பாத்துட்டீங்கள்ல. நீங்க ஒரு வக்கீல். எப்படி நடந்துக்கனும்னு மட்டும் இல்ல எப்படி நடந்துக்கக் கூடாதுன்னும் உங்களுக்கு நல்லாத் தெரியும்.  நான் சொல்லத் தேவையில்லை! உங்களிடம் ஒரு சின்ன உதவி.. அவ்வளவுதான்.

நான் இப்போ உங்களிடம் ஒரு கடிதம் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் போய் விடுவேன்.

அந்தக் கடிதத்தில் கேட்டிருக்கும் விவரங்கள் மட்டும் எனக்குப் போதுமானது.

சரிய்ய்யா நாலு மணிக்கு இங்கே வரேன். விவரங்கள் தயாராக இருக்கனும். இருக்கும். ஏன்னா, எப்பவும் காலேஜ் விட்டு வர்ற மாதிரியே நாலறைக்கு உஷா உங்க வீட்ல இருக்கனுமில்லையா”

என்று கூறியபடி… நிதானமாக வாட்டர் கூலரிலிருந்து தண்ணீர் எடுத்து  குடித்துவிட்டு, ச்சாரிக்கும் டேபிளின் மேல் வைத்தான். சற்றே பாட்டிலைத்தூக்கி அதனடியில் கடிதத்தை  வைத்துவிட்டு, ” கூல்” என்றபடி எழிலன் வெளியேறினான்.

 

அவன் வெளியேறியதும்,  கலக்கிய வயிற்றை வெளியேற்ற, ஓடினார் ச்சாரி…
Comments are closed here.

error: Content is protected !!