Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

இரும்பின் இதயம் – 19

அத்தியாயம் – 19

திருச்சியில் ஒரு நூதன திருட்டு நடந்து கொண்டிருந்தது. அது வெய்யில் காலம் என்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன் கீற்று கொட்டகை அல்லது பந்தல் போட்டு வெயிலின் கொடுமையிலிருந்து ஓரளவு தப்பித்துக் கொண்டிருந்தார்கள். ஓரளவு வசதியான மக்களும் நடுத்தரமக்களும் கலந்து வசிக்கும் பகுதியில் ஓட்டு வீட்டிற்கு முன் இப்படி பந்தலோ அல்லது கொட்டகையோ போடப் பட்டிருந்தால் அந்த வீட்டை திருடர்கள் குறிவைத்தார்கள். திருடுவதற்காக அல்ல. மக்களின் கவனத்தை திசை திருப்ப.

 

இரவு நேரத்தில் ஜன நடமாட்டம் குறைந்த பிறகு கொட்டகையை பற்றவைத்துவிட்டு அங்கிருந்து அகன்றுவிடுவது. தீ பிடித்து கொட்டகையிலிருந்து வீட்டிற்கு பரவி வீட்டில் இருப்பவர்கள் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்களும் எழுந்து தீயை பார்த்துவிட்டு சத்தம் போடும் போது அந்த தெருவே விழித்துக் கொள்ளும். அந்த நேரம் மக்கள் அனைவரின் கவனமும் தீயை அணைப்பதிலும் தீ பிடித்து எறியும் வீட்டை வேடிக்கை பார்ப்பது மற்றும் விபரம் சேகரிப்பதிலும் இருக்கும். அந்த மாதிரி நேரத்தில் அதே தெருவில் மற்ற வீடுகளில் ஆள் ஆரவாரம் இல்லாத வீடாக பார்த்து பணம் நகையை கொள்ளையடித்து சென்றுவிடுவது.

 

இதே போல் நான்கு சம்பவம் நடந்துள்ளது. இதில் ஆறு வீடுகள் கொள்ளையடிக்கப் பட்டுள்ளன. இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதால் மக்கள் மிக விழிப்புணர்வுடன் இருந்தார்கள்.

 

இந்த செய்தி சாருமதியின் வீட்டிற்கும் தெரியும். அவர்கள் வீட்டிற்கு முன் கொட்டகை போடப்பட்டிருந்தது.

 

“நாளைக்கு யாரையாவது ஆள் வர சொல்லு இந்த கொட்டகையை முதலில் பிரித்து போட வேண்டும்” என்று சாருமதியின் அன்னை  சொல்லிவிட்டு பத்து மணி ஆனதும் அனைவரையும் படுக்க சொல்லிவிட்டு  மின்விளக்கை அணைத்துவிட்டு அவரும் படுத்தார்.

 

மணி பதினொன்று இருக்கும். எதோ கருகும் வாசனை வந்தது. ‘கொஞ்ச நேரத்துக்கு முன் வீடு கொளுத்தும் கும்பலை பற்றி பேசிக்கொண்டிருந்ததால் ஏதேதோ பிரம்மையில் இப்படி தோன்றுகிறது’ என்று நினைத்தவர் மீண்டும் கண்களை நன்கு மூடிக்கொண்டு தூங்க முயன்றார். ஆனால் மூடிய கண்களுக்குள்ளும் வெளிச்சம் அடிப்பது போல்  தோன்ற கண்களை திறந்து பார்த்தால் ஜன்னல் பக்கம் நெருப்பு. எழுந்து ஓடிப்போய் பார்த்தால் கொட்டகை எரிந்துக் கொண்டிருக்கிறது.

 

“ஐயோ… சாரு… குட்டிமா… எந்திரிடீ… நெருப்பு பத்தி எரியுதுடீ… எந்திரி… எந்திரி… ஏங்க எந்திரிங்க… ஐயோ இந்த மனுஷன் இப்படி குடிச்சுட்டு நிதானம் இல்லாமல் படுத்திருக்காரே…! நான் என்ன செய்வேன்… சாரு… வாடி வெளியே…” என்று கத்த

 

சாருமதி அவளுடைய அறையிலிருந்து எழுந்து ஓடிவந்தாள்.

 

“ஐயோ… எப்படிம்மா…”

 

“போடி… போ வெளியே… ஓடி போய் யாரையாவது கத்தி உதவிக்கு கூப்பிடு… போ.. போ..” என்று அவளை வெளியே தள்ளினார்.

 

சாருமதியும் அவசரமாக வெளியே  ஓடினாள். அவள் வீட்டை விட்டு வெளியேறவும் முன் புற கொட்டகை சரிந்து விழவும் சரியாக இருந்தது.

 

“அம்மா… ஐயோ… யாராவது வாங்க… ராமு அண்ணா… சிந்து அக்கா… ஓடிவாங்க ஓடிவாங்க…” என்று பெருங்குரல்  எடுத்து கத்தினாள். பதட்டத்தில் அவளுக்கு நாவரண்டது.

 

சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தவர்களும் சத்தம் போட்டார்கள். தெருவே விழித்தது. ஆனால் சாருமதியின் நேரம் யாருக்கும் அவரவர் வீட்டை விட்டு வெளியே ஒத்தை கால் எடுத்து வைக்க மனம் வரவில்லை.

 

எங்கே நம் வீட்டிற்கு திருடன் வந்து வீட்டில் இருக்கும் பெண்களை அடித்துவிட்டு கொள்ளையடித்து சென்றுவிடுவானோ என்று ஆண்களும், தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளை போட்டுவிட்டு வர பயந்து தயங்கியபடி பெண்களும் பதட்டத்துடன் அவரவர் வீட்டில் இருந்தபடியே கத்திக் கொண்டிருந்தார்கள்.

 

மிக அருகில் இருக்கும் வீடுகளிலிருந்து சிலர் உதவிக்கு வந்தார்கள். அவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. அதற்குள் தீ வீட்டின் ஓட்டில் பிடித்துவிட்டது. சட்டத்திலிருந்த துருபிடித்த ஆணிகள் வெடித்ததில் அந்த பெரிய வீட்டின் ஓடு வேயப்பட்டிருந்த சட்டங்கள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தன.

 

தீ பக்கத்து வீடுகளுக்கும் பரவும் அபாயம் ஏற்ப்பட்டது. அப்போது யாரோ ஒருவர் சொன்னார் “யாராவது ஃபயர் சர்வீசுக்கு போன் பண்ணுங்கப்பா…”

 

பக்கத்து வீட்டுக்காரர்  தீயணைப்பு நிலையத்துக்கு ஃபோன் செய்தார். ஆனால் அவர்கள் “காவல் நிலையத்துக்கு ஃபோன் பண்ணி சொல்லுங்க சார்… அங்கேருந்து எங்களுக்கு ஃபோன் வந்தால் தான் நாங்கள் வருவோம்…” என்று சொல்லிவிட்டார்கள்.

 

அந்த மனிதர் உடனே காவல் நிலையத்திற்கும் தொடர்புகொண்டு விஷயத்தை சொன்னார்.  காவல் நிலையத்தில் முகவரியை கேட்டு எழுதிக்கொண்டு தீயணைப்பு நிலையத்திற்கு ஃபோன் செய்தார்கள். அப்படியே ஜெயச்சந்திரனுக்கும் ஃபோன் செய்தார்கள்.

 

“ஹலோ…” வேலை முடிந்து அப்போதுதான் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த ஜெயச்சந்திரன் சோர்வை வெளிக்காட்டாமல் பேசினான்.

 

“ஹலோ சார்… நான் ராஜப்பா நகர் ஸ்டேஷன்லேருந்து ஏட்டு ரங்கசாமி பேசுறேன் சார்…”

 

“ம்ம்ம்… என்ன விஷயம்?”

 

“சார் இங்க ஒரு வீடு தீ பிடித்து எரியுதுன்னு ஃபோன் வந்தது சார்.”

 

“ஃபயர் சர்வீசுக்கு இன்ஃபார்ம் பண்ணிவிட்டிங்களா…?”

 

“பண்ணியாச்சு சார்…”

 

“சரி நான் என்ன செய்யணும்? எனக்கு ஏன் கூப்பிட்டீங்க?”

 

“சார் அந்த வீட்டு அட்ரெஸ் உங்க சொந்தகாரவங்க வீடு சார்… நான் உங்களை அங்க பார்த்திருக்கேன். வீட்டுக்குள்ள ஆளுங்க மாட்டியிருக்கதா சொன்னாங்க…” என்றதும் ஜெயச்சந்திரன் படபடப்பாகிவிட்டான்.

 

“அட்ரஸ் சொல்லுங்க…”

 

அவர் முகவரியை சொன்னார். அவனுக்கு இதயம் ஒரு நொடி நின்றுவிட்டது. அது அவனுடைய மாமனார் வீட்டு முகவரியேதான்…”

 

“டிரைவர்… வண்டியை திருப்பு… ராஜப்பாநகர் போ… ம்ம்.. சீக்கிரம் போ… ஃபாஸ்ட் ஃபாஸ்ட்…” என்று விரட்ட அவர் கண்மண் தெரியாமல் வண்டியை விரட்டினார்.

 

தீ கொழுந்துவிட்டு ஓங்கி எரிந்து கொண்டிருந்தது. இப்போது ஒரு பத்து பேர் சேர்ந்து குடத்திலும் வாளியிலும் நீர் கொண்டுவந்து ஊற்றி தீயை அணைக்க போராடிக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு சாருமதியும் போராடிக் கொண்டிருந்தாள்.

 

முன் பக்கம் கொட்டகை விழுந்துவிட்டது… பின்பக்கம் ஓடு சரிந்துவிட்டது. உள்ளே மாட்டிக்கொண்டவர்களால் வெளியே வர முடியவில்லை. வெளியிருந்து யாராலும் அவர்களுக்கு உதவ முடியவில்லை.

 

அந்த நேரம் ஜெயச்சந்திரனின் கார் புயல் வேகத்தில் “க்ரீச்…” என்ற சத்தத்துடன் நின்றது. காரிலிருந்து குதித்து இறங்கியவனின் கண்கள் சாருமதியை தேடின. அவள் மேடிட்ட வயிறோடு தீயோடு போராடிக் கொண்டிருந்தாள். வேகமாக அவளை நெருங்கியவன் அவளுடைய கையை பிடித்து இழுத்துவந்து காரில் தள்ளி கதவை சாத்தினான்.

 

“ஐயோ… அம்மா… அப்பா.. உள்ள… திறங்க கதவை…” என்று கத்தினாள். அவனுக்கு புரிந்துவிட்டது. உள்ளே மாட்டியிருப்பது மாமனாரும் மாமியாரும்.

 

சாருமதியின் பதட்டத்தை கவனிக்காமல் அவன் எரிந்து கொண்டிருக்கும் வீட்டை நெருங்கினான். ஒருமுறை வீட்டை வெளிப்பக்கமாக சுற்றிப் பார்த்தான். எந்த வழியாகவும் உள்ளே போக முடியாது என்று தெரிந்து கொண்டான்.

 

பக்கத்து வீட்டுக்காரரிடம் “கடப்பாரை இருக்கா…” என்று கேட்டான். சில நொடிகளில் இரண்டு மூன்று கடப்பாரைகள் யார் யாரோ கொண்டு வந்தார்கள்.

 

அதில் ஒன்றை எடுத்து மெதுவாக சுவர் அதிகம் அதிராமல் வெளிப்பக்கம் இருந்த ஜன்னலை பெயர்த்து எடுக்க முயன்றான். சுவர் அதிர்ந்தாள் ஓடு சரிந்துவிழும் அபாயம் இருந்ததால் மெதுவாக செய்யவேண்டியதாக இருந்தது.

 

ஒருவழியாக ஜன்னலை அகற்றிவிட்டு உள்ளே சென்று பார்த்தால் சாருமதியின் அப்பாவும் அம்மாவும் சனல் சாக்கை வீட்டில் இருந்த இரண்டு குடம் தண்ணீரை வைத்து நனைத்து ஓட்டிலிருந்து சரிந்து விழும் தீயை அனைத்துக் கொண்டிருதார்கள்.

 

“அத்தை… மாமா… வாங்க… வாங்க… என்று இருவரையும் இழுத்துக்கொண்டு ஜன்னல் வழியாகவே மீண்டும் வெளியே வந்தான். அதற்குள் தீயணைப்பு வண்டியும் வந்துவிட வீரர்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டார்கள்.
2 Comments


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Niveta Mohan says:

    Innum oru Epi kidaikkumaaa sissy.. Plss


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    ugina begum says:

    nice ud

You cannot copy content of this page