Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-32

அத்தியாயம் – 32

பொழுது சாயும் வரை வெளியே சுற்றிக் கொண்டிருந்த கார்முகிலன் மீண்டும் வீட்டிற்கு வரும்பொழுது, கூடத்தில் போடப்பட்டிருந்த சோபாவில் அமர்ந்து தரையில் விளையாடிக் கொண்டிருந்த மகளிடம் எதையோ சொல்லிக் கொண்டிருந்தாள் மதுமதி. புருவ மத்தியில் வைத்திருந்த சிறு அரக்கு நிற பொட்டும், லேசாக மையிட்ட விரிந்த விழிகளும், மெல்லிய புன்னகையில் மலர்ந்திருந்த இதழ்களுமாகப் பாந்தமாக இருந்தாள்.

அவளுக்கருகில் சென்று, அவள் கரத்தைத் தன் கரங்களுக்குள் எடுத்துக்கொண்டு… அவள் கண்களைப் பார்த்து ‘ஏன்டி இப்படிப் பண்ணின?’ என்று கேட்க வேண்டும் போல் தோன்றியது. நினைத்ததைச் செய்துவிடும் நோக்கில், காலணிகளை வராண்டாவில் கழட்டி விட்டுவிட்டு உள்ளே நுழைந்தான். அவளுடைய கைப்பேசி அலறியது…

“என்னண்ணா திடீர்னு ‘கட்’ ஆயிடுச்சு..?” – கைப்பேசியை எடுத்து பேசினாள்.

“……………………”

“நீங்க கோபமா போனை வச்சிட்டீங்களோன்னு நெனச்சுப் பயந்துட்டேன்ணா…” – மனைவியின் பேச்சில் முகிலன் தயங்கி நின்றான். அவள் குணாவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்ததும் ஏனோ அவனால் அவளிடம் இயல்பாகப் பேச முடியவில்லை.

“……………………”

“ரொம்ப தேங்க்ஸ்ண்ணா… என்னோட சூழ்நிலைய ரொம்ப சரியா புரிஞ்சுகிட்டீங்க… உங்களுக்கு ரொம்பக் கஷ்டம் கொடுத்துட்டேன்…”

“……………………”

“அதானே… எனக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்வீங்க நீங்க?” – மதுமதி பேசப் பேச முகிலனுக்கு அந்த இடத்தில் இருக்கவே முடியவில்லை. தடதடவென்று படியேறி மாடிக்குச் சென்றான்.

தன்னால் வேலைக்கு வர முடியாது என்று கூறி தன்னை நம்பி வேலைக்கு ஏற்பாடு செய்த குணாவின் நம்பிக்கையை உடைத்துவிட்ட மதுமதி, அவனைச் சமாதானம் செய்வதில் கவனமாக இருந்ததால்… வேகமாகப் படியேறிச் செல்லும் கணவனை நிமிர்ந்து பார்த்தும் அவனுடைய மனநிலையை உணரத் தவறிவிட்டாள்.

ஆணின் பலம், பலவீனம் இரண்டுமே பெண் தான். கார்முகிலனின் பலமாக இருந்த மதுமதியே இன்று பலவீனமாக மாறிப்போனாள். அவள் கொடுத்த ஏமாற்றம் அவன் மனதை வலுவிழக்கச் செய்தது.

‘நீங்க கோபமா போனை வச்சிட்டீங்களோன்னு நெனச்சுப் பயந்துட்டேன்ணா…’

‘என்னோட சூழ்நிலைய ரொம்ப சரியா புரிஞ்சுகிட்டீங்க…’

‘எனக்குச் செய்யாம வேற யாருக்குச் செய்வீங்க நீங்க?’ – மதுமதியின் குரல் தொடர்ந்து அவன் செவிகளில் ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தன.

அவளுடைய பேச்சில் எந்தவிதமான விகல்பத்தையும் அவன் உணரவில்லை. நல்ல நட்பையும், தூய்மையான அன்பையும் தான் உணர்கிறான். ஆனால் அவளுடைய நட்பும் அன்பும் அவனிடம் மட்டும் வற்றிப் போய்விட்டதே என்கிற ஏமாற்றம் அவனை வதைத்தது. அவனைத் தவிர மற்ற எல்லோரிடமும் அன்புடன் பேசுகிறவள், அவனிடம் மட்டும் இயல்புக்கு அதிகமாகவே கோபத்தைக் கொட்டுகிறாள். எல்லோரையும் மகிழ்விக்கும் அவளுடைய உயிர்ப்பான சிரிப்பு அவனைக் கண்டுவிட்டால் மட்டும் செத்துவிடுகிறது. ஏன் இப்படி..?

அவளுக்காக எத்தனையோ பழக்கங்களை மாற்றிக் கொண்டிருக்கிறான். எத்தனையோ விருப்பங்களை விட்டுக் கொடுத்திருக்கிறான். ஆனால் இந்த உரிமை உணர்வு…! அதை அடாவடியாக அவன் காட்டும் விதம்…! இவையிரண்டுமே அவன் இரத்தத்தில் ஊறி அவனோடு இரண்டற கலந்த அவனுடைய இயல்பல்லவா! அதை எப்படி அவனால் புறந்தள்ள முடியும்..?

அவனுடைய நேசத்திற்குரிய மதி… அவன் இதயத்தை மொத்தமாக ஆக்கிரமித்திருக்கும் மதி… அவனை ஒதுக்கி வைக்கிறாள் எனும்பொழுது அவனுக்கு உரிமை உணர்வில் கோபம் வந்தது. சண்டை போட வேண்டும் போல் தோன்றியது… ஆனால் அவன் அதைச் செய்யவில்லை. மாறாக அவனைக் கொல்லத் துடிக்கும் உரிமை உணர்வை, கொன்றுவிடப் போராடினான். வலித்தது… உயிரும் உணர்வும் உள்ள மனிதனின் உடல் அங்கத்தை வெட்டித் துண்டிப்பது போல் உயர்வலி வலித்தது.

‘எனக்கு மட்டும் ஏன் இந்த வேதனை? எல்லோரையும் போல நானும் நிறைகுறைகள் நிறைஞ்ச மனுஷன் தானே? மத்தவங்க மாதிரித் தானே நானும் சரி எது… தப்பு எதுன்னு தெரியாம தப்புப் பண்ணி தொலைச்சேன்… ஆனா எனக்கு மட்டும் எதுக்குப் பிறந்ததிலிருந்தே தண்டனை..? அப்பா முகமே தெரியாது… அம்மாவையும் பாதிலயே இழந்துட்டேன்… அக்கா, அத்தான், சொந்தபந்தம்… எல்லாரையும் ஒதுக்கிட்டு அனாதையா ரோட்ல நின்னேன்… தெய்வாதீனமா தர்மா சார் வந்தாரு… அவர்கூடப் படிக்க வச்சாரே தவிரப் பாசமா ஒரு வார்த்தைப் பேசினது இல்ல… கடைசியா தேவதை மாதிரி ஒருத்தி வந்தா… மதி… என்னோட மதி…’ – இனியும் அவள் நம்முடைய மதிதானா என்று நினைக்கும் பொழுதே அவன் மனம் அனலில் விழுந்த புழுவாய்ச் சுருண்டது.

‘தேவதையா என் வாழ்க்கையில வந்தவ… அம்மாவுக்குப் பிறகு சாப்பிட்டியான்னு கேட்டா… நிம்மதியான தூக்கத்த கொடுத்தா… சொந்தபந்தத்த மீட்டுக் கொடுத்தா… சந்தோஷத்த உணர்த்தினா… காதலையும் பாசத்தையும் மழையா பொழிஞ்சா… ஆனா இப்போ…’

‘தப்புப் பண்ணினவன் தான்… இல்லன்னு சொல்லல. ஆனா என்னதான் தப்புப் பண்ணியிருந்தாலும்… மனசளவுல நான் கொஞ்சம் நல்லவன் தானே! என்னோட இதயமும் மென்மையானது தானே! எவ்வளவு இழப்பைத் தாங்குவேன்… மதியை இழந்துட்டு என்னால வாழ முடியுமா…!’ – கலங்கினான். சிந்தித்துச் சிந்தித்து அவனுக்குத் தலைவலியே வந்துவிட்டது.

“சாப்பிட வாங்க…” – படுக்கையறைக்கு வந்த மதுமதி தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த கணவனை இரவு உணவுக்காக அழைத்தாள்.

மனைவியை நிமிர்ந்து பார்த்தவனின் முகம் களையிழந்து போய் இருந்தது. “என்னாச்சு?” – குழப்பத்துடன் கேட்டாள்.

“ம்ஹும்… ஒண்ணுமில்ல” என்று தலையைக் குறுக்காக ஆட்டிவிட்டு பால்கனிக்கு எழுந்து சென்றான்.

“ஒகே… லேட் பண்ணிடாம சீக்கிரம் சாப்பிட வந்திருங்க…” என்று கூறிவிட்டுக் கீழே சென்றுவிட்டாள்.

முகிலன் சட்டென்று திரும்பி மனைவியின் முதுகை வெறித்தான். அதற்குமேல் அவனிடம் அவளுக்கு அக்கறை இல்லையா! அன்று அவளுடைய சாதாரண நடவடிக்கைகள் கூட அவனைப் பெரிதாகப் பாதித்தன. சாப்பிட வேண்டுமே என்கிற கடமைக்காகக் கீழே சென்றான். சூடாக மனைவி பரிமாறிய மல்லிகைப் பூ இட்லி தொண்டைக்குழியிலேயே சிக்கிக் கொண்டது. உணவின் சுவையை நாவுணரவில்லை. தண்ணீரைக் குடித்துக் குடித்து உள்ளே தள்ளியவன், இரண்டு இட்லியுடனே எழுந்து கைகழுவி விட்டான்.

“என்னாச்சுப்பா..?” என்று கேட்ட அக்காவிடம் “வயிறு சரியில்ல…” என்று அவள் கண்களைப் பார்க்காமல் கூறிவிட்டு மாடிப்படிகளில் ஏறினான்.

“ஏன் முகிலன் டல்லா இருக்கான்?” – வீரராகவன் மகளிடம் கேட்டார்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா… நல்லா தான் இருக்காரு…” என்று கூறிய மதுமதி, ‘நேத்து அந்த கலைவாணி வந்துட்டுப் போனதிலிருந்தே இப்படித்தான் இருக்காரு… அவளை ஒரு வார்த்தைச் சொன்னது இவருக்குப் பொறுக்க முடியல போல…’ என்று மனதிற்குள் கணவனைக் கறுவினாள்.

##

அன்றைய இரவு… விளக்குகளெல்லாம் அணைக்கப்பட்ட இருண்ட அறை… சீலிங் ஃபேன் சுற்றும் ஒலி மட்டும் அந்த அறையின் நிசப்தத்தில் மெல்லிய கீறல்களைப் போட்டுக் கொண்டிருந்தது. கட்டிலின் ஒரு பக்கம் படுத்திருந்த மதுமதியும் குழந்தையும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, கார்முகிலன் மட்டும் உறங்க முடியாமல் விழித்துக்கிடந்தான். அவன் மனம் குறுகுறுவென்று ஒரே விஷயத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தது.

மனஅழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருக்க மூச்சு முட்டுவது போல் உணர்ந்தான். எழுந்து அறையிலிருந்து வெளியேறி மொட்டை மாடிக்குச் சென்றான். பௌர்ணமி இரவில் விண்ணிலிருந்து அவனைப் பார்த்த முழுமதியில் மதுமதியின் சிரித்த முகம் தோன்றியது. ‘எப்பேர்ப்பட்ட பொக்கிஷம் இவ…! மனதளவுல விலகிப் போனவ… இப்போ ஒரேடியாக விலகிப் போகப் பார்க்கறா…! அவ மனசு கொஞ்சம் கூடச் சமாதானமாகல…’

‘ஒரே வீட்டுல இருக்கும்போதே விலகி ஓடுவா… இதுல வெளியூருக்கெல்லாம் போயிட்டான்னா எல்லாமே கைவிட்டுப் போச்சுன்னு தான் நெனச்சுகணும்… நெனச்சுக்கறது என்ன… அதான் பட்டவர்த்தனமா தெரியுதே! எப்போ அவ நம்மகிட்ட அவளோட வேலையைப் பற்றியோ… பெங்களூர் பயணத்தைப் பற்றியோ பேசலயோ அப்போவே அவ நம்மள சுத்தமா ஒதுக்கிட்டான்னு புரியலையா..? இனியும் நம்மள மன்னிப்பா… மனசுல ஏத்துக்குவான்னு நெனைக்கிறது சுத்த மடத்தனம்…’ – நினைக்கும் பொழுதே ஆத்திரம் தொண்டையை அடைத்தது. சத்தமாகக் கத்தி அழவேண்டும் போலிருந்தது. அழ கூடாது என்கிற பிடிவாதத்துடன் உணர்வுகளை மனதிற்குள் போட்டு அழுத்தி அடக்கினான்.

இந்த வேதனையெல்லாம் அவளுடைய மடியில் தலைசாய்த்துப் படுத்தால் நொடியில் காணாமல் போய்விடும். ஆனால் முடியவில்லை… தயக்கம் அவனை அவளிடம் நெருங்கவிடாமல் தடையாக நின்றது. தலையைக் குலுக்கி சிந்தனைகளை உதற முயன்றான். மனதைக் கனக்க வைக்கும் சிந்தனைகளை அப்படிச் சுலபமாக உதறிவிட முடியுமா என்ன!

சற்றுநேரம் நடக்கலாம் என்று நினைத்து, நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து எதிர்பக்கத்திற்குச் சென்றான். மொட்டைமாடி கொடியில் காய வைக்கப்பட்டிருந்த நீளமான துணி ஒன்று அவனை வருடியது. ஏதோ தோன்ற சட்டென்று நின்று நிலவொளியில் அந்தத் துணியைக் கவனித்துப் பார்த்தான். அவனுடைய உள்ளுணர்வு அவனை ஏமாற்றவில்லை. மதுமதியின் சேலையே தான்…

அவ்வளவு தான்… அவனுக்குள் ஒருவித உணர்ச்சிப் போராட்டம் பிரளயமாக வெடித்தது. மனம் அவன் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. அதுவரை அவன் தனக்குள் அடக்கி வைத்திருந்த உணர்வுகளெல்லாம் கட்டவிழ்த்துக் கொள்ள, கொடியில் கிடந்த சேலையை உருவி சுருட்டி முகத்தில் புதைத்துக்கொண்டு கதறியழுதான். தாயை இழந்தபோது கூட வாய்விட்டு அழாதவன் இன்று தனிமையில், இருட்டில் கட்டுப்பாடின்றிக் கண்ணீர் விட்டான்.

இழக்கப்போகும் சொர்க்கத்தின் மதிப்பு பலமடங்கு உயர்ந்து நின்று அவன் மனதைச் சக்கையாய் பிழிய… அவனுக்குள்ளிருந்த ஆண் என்கிற திமிர்… தான் என்கிற கர்வம்… உரமேறிய மனவலிமை… அத்தனையும் அழிந்தன. அந்த நொடியில் அவனே மொத்தமாக அவளுக்குள் தொலைந்துபோனான்.




Comments are closed here.

You cannot copy content of this page