Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

vidivelli

Share Us On

[Sassy_Social_Share]

விடிவெள்ளி – 34

அத்தியாயம் – 34

ஜீவனுடைய பாஸ்போர்டை (பார்த்து அவனுடைய பிறந்த தேதியை தெரிந்து கொண்டதிலிருந்து) பார்த்ததிலிருந்து பவித்ராவிற்கு புதிதாக ஒரு ஆசை முளைத்திருந்தது. அவன் திட்டினாலும் தன்னுடைய ஆசையை நிறைவேற்றியே ஆக வேண்டும் என்கிற முடிவில் இருந்தாள். இரவு பன்னிரண்டு மணியிருக்கும்… சிவகாமியும் பாட்டியும் ஹாலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாரகள். ஒற்றை மின்விசிறிக்கு அடியில் தாயும் பாட்டியும் படுத்துவிட்டதால் ஜீவன் மாடியில் உறங்கினான். பவித்ரா மெல்ல அடியெடுத்து வைத்து நடந்து வந்து… சத்தமில்லாமல் கதவைத் திறந்து கொண்டு வெளியேறி மொட்டை மாடியை நோக்கி சென்றாள்.

 

நீண்ட நேரம் உறக்கம் வராமல் பாயில் புரண்டு கொண்டிருந்துவிட்டு அப்போதுதான் கண்ணயர்ந்திருந்தான் ஜீவன். அவனுடைய படுக்கைக்கு அருகில் சென்று “க்கும்…” என்று தொடையை கனைத்தாள். அவன் விழிக்கவில்லை. “க்குகூம்” இன்னும் வேகமாக செருமினாள். அப்போதும் அவன் விழிக்கவில்லை.

 

‘ச்ச… சரியான கும்பகர்ணன்…’ என்று முணுமுணுத்தபடி “தூங்கறிங்களா… எழுந்திரிங்க…” என்றாள் கொஞ்சம் சத்தமாக. அவன் விரண்டு எழுந்து அமர்ந்து,

“என்ன ஆச்சு…?” என்று பதறினான்.

 

“இல்ல… இல்ல… ஒ… ஒண்ணும் இல்ல… கீ… கீழ ஏதோ… பூனை… இல்ல…. எலி… பெ… பெரிச்சாலி…” என்று தடுமாறினாள்.

“பெரிச்சாலியா…! எங்க…?” ஜீவன் எழுந்துவிட்டான்.

 

“கீழ… ரூ… ரூம்ல…”

 

“நம்ம ரூம்லையா…! பெருச்சாலியா…! வா பார்க்கலாம்…” என்று எழுந்து கீழே சென்றான்.

 

மாடிப்படி வரை அவனோடு நடந்த பவித்ரா அதற்கு மேல் அவனைத் தொடராமல் பின் தங்கிவிட்டாள்.

 

புதிதாக கட்டப்பட்டிருக்கும் இந்த அப்பார்ட்மெண்டில் பெரிச்சாலி எங்கிருந்து வரும் என்று சிறிதும் யோசிக்காமல் மனைவி சொல்லே மந்திரம் என்று எண்ணி வேகமாக கீழே வந்த ஜீவன்… ஹாலில் படுத்திருந்த பாட்டி மற்றும் தாயை கடந்து ரூம் கதவில் கைவைத்து உள்ளே தள்ளினான்.

 

கும்மிருட்டாக இருந்த அறையின் நடுவில்… அருகருகே ஏற்றப்பட்டிருந்த நான்கைந்து விளக்குகளின் ஒளி அவன் கண்ணைப் பறித்தன. மின்விளக்கை போடாமலே விளக்கின் ஒளியை நோக்கி சென்றான். ‘பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்கிற எழுத்துக்களைத் தாங்கிய சிறு கேக் எரியும் மெழுகுவர்த்திகளைத் தாங்கிக் கொண்டு ஒரு ஸ்டூலின் மீது அமர்ந்திருந்தது. அவன் முகத்தில் கீற்றாக சிறு புன்னகை அரும்பியது.

 

மின்விளக்கைப் போட்டான். அதே ஸ்டூலில் ஒரு வாழ்த்து அட்டையும் அதன் மீது அவளுக்கு அவன் பரிசளித்த கைபேசியும் இருந்தது. அவன் அவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கைபேசி “ஹாப்பி பரத் டே டு யு…” என்கிறப் பாடலை ராகத்தோடு பாடியது. அவன் கைபேசியை எடுத்துப் பார்த்தான். அவனுடைய மொபைலிலிருந்து தான் அழைப்பு வந்தது.

 

எடுத்து காதில் வைத்தான். “பிறந்தநாள் வாழ்த்துக்கள்…” என்கிற தேன்  குரல் அவன் செவியை வருடியது.

 

“அதை இங்க வந்து சொல்ல மாட்டியா…? கிறக்கமான குரலில் அவன் கேட்கும் பொழுதே, அவள் அறை வாசலில் வந்து நின்றாள்.

 

அவன் கைபேசியை காதிலிருந்து எடுத்துவிட்டு அவளை பார்த்தான். காதல் வழியும் அந்த பார்வையின் வீரியத்தைத் தாங்க முடியாமல் அவள் தலைக் கவிழ்ந்தாள். அவனுடைய புன்னகை அதிகமானது.

 

“என்ன இது…?”

 

“சின்ன செலிப்ரேஷன்…” அவள் முணுமுணுத்தாள்.

 

“நான் பிறந்த நாளெல்லாம் கொண்டாடறது இல்ல…”

 

“என்னோட ஆசைக்காக…” அவள் அவனை நிமிர்ந்துப் பார்த்து சொன்னாள்.

 

அவனோ அவளை விழுங்கிவிடுவது போல் பார்த்தான். அவளுக்கு மீண்டும் வெட்கம் வந்துவிட்டது. ‘ஐயோ… என்ன ஆச்சு இவனுக்கு…! இப்படியெல்லாம் பார்த்து வைக்கிறான்…!’ என்று கூச்சமாக உணர்ந்தாள். ‘விட்டால் விடிய விடிய பார்த்துக் கொண்டே இருப்பான் போலிருக்கு… ம்ஹும்… விடக் கூடாது…’ என்று நினைத்து…

 

“வாங்க… கேக் கட் பண்ணலாம்…” என்று சொல்லிவிட்டு அவள் கேக்கை நோக்கி செல்ல அவனும் அவளைப் பின்தொடர்ந்தான். ‘அடுத்த அறையில்தான் இரண்டு ஜீவன்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்… அவர்களை எழுப்பி பிறந்தநாளைக் கொண்டாடுவோம் என்கிற எண்ணம் இருவருக்குமே வரவில்லை… அந்த தனிமையின் இனிமையை இழக்க இருவருமே விரும்பவில்லை…

 

அவள் கத்தியை எடுத்து அவன் கையில் கொடுத்தாள். சிறு குழதை போல் அவனும் அவள் ஏற்றி வைத்திருந்த மெழுகுவர்த்திகளை ஊதி அணைத்துவிட்டு… கேக்கை வெட்டி ஒரு துண்டை எடுத்து அவளுக்கு ஊட்டினான். அவள் வெட்கத்துடன் வாங்கிக் கொண்டாள். பிறகு,

 

“நீங்களும் சாப்பிடுங்க…” என்றாள்.

 

அவன் அவளை சுட்டிக் காட்டி… பிறகு தன்னைச் சுட்டிக் காட்டினான். ‘நீ எடுத்துக் கொடு…’ என்று சொல்கிறான் என்று அவளுக்குத் தோன்றியது. அதனால் ஒரு கேக் துண்டை எடுத்து அவனிடம் நீட்டினாள்.

 

“ம்ஹும்…” என்றவன் இதழ் பிரிக்காமல் சிரிக்கும் அவன் வாயை சுட்டிக் காட்டினான்.

 

அவனுடைய சைகையின் அர்த்தத்தைப் அவள் புரிந்து கொண்டாலும்… அவன் சொல்வதை செய்ய முடியாத தயக்கத்துடன் திருதிருவென விழித்தாள். அவனோ புருவங்களை உயர்த்தி ‘என்ன…?’ என்று கண்களால் கேட்டான்.

 

அவள் தலையை குறுக்கே ஆட்டி ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு கையிலிருந்த கேக்கை அவனிடம் மீண்டும் ஒருமுறை நீட்டினாள். அவனோ சிரிக்கும் கண்களுடன் நேராக நிமிர்ந்து நின்று கையை மார்பின் குறுக்கேக் கட்டிக் கொண்டான். அவனுடைய பிடிவாதம் அந்த செயலில் தெளிவாக வெளிப்பட்டது.

 

அவளுக்குள் ஒரு இன்பப் படபடப்பு… கொஞ்சம் தவிப்பாகவும்  இருந்தது… ‘விடமாட்டான் போலருக்கே…! நல்லா மாட்டிக்கிட்டேன்… இதெல்லாம் தேவையா… பேசாம தூங்கினவனை நடு ராத்திரில எழுப்பி நிக்க வச்சு… இப்படி வம்புல மாட்டிக்கிட்டேனே…!’ என்று நினைத்தபடி வெட்கச் சிரிப்பும் தயக்கமுமாக அவனுக்கு ஊட்டினாள்.

 

அவனுடைய சீரான அழகிய பல்வரிசைகள் ‘கேக்’குடன் சேர்த்து அவளுடைய மென் விரலையும் பதம்பார்த்துவிட “ஆ…” என்று மெல்லிய அலறலுடன் அவனை முறைத்தாள். அவனோ குறும்பாக சிரித்தான்.

 

‘அட….ப்பாவி…!’ பவித்ராவிற்கு ஆச்சர்யமாக இருந்தது… அவனுடைய குறும்பில் விரல் வலித்தாலும் மனம் இனித்தது. முகமாற்றத்தைச் சிரமப்பட்டு மறைத்துக் கொண்டு “பாருங்க… எப்படி ஆயிடுச்சுன்னு… வலிக்குது…” என்று விரலை அவனிடம் நீட்டினாள்.

 

“எங்க… காட்டு பார்க்கலாம்…” என்று அவளுடைய மென்கரத்தைப் பிடித்தவன் சிவந்திருந்த வெண்டைப் பிஞ்சு விரலில் இதழ் பதித்தான். அவனுடைய திடீர் தாக்குதலில் அவள் நிலைகுலைந்தாள். கடுவன் பூனையாக இருந்தவன் காதல் மன்னனாக மாறியதன் விந்தை புரியாமல் மயங்கி நின்றாள். ஒவ்வொரு விரலாக முன்னேறியவன் அவள் இதழ் நோக்கி குனியும் பொழுது அவனுடைய நோக்கம் புரிந்து மின்னலாக அவனிடமிருந்து பதறி விலகினாள்.

 

‘ச்ச… ஒரு நிமிஷத்துல எல்லாத்தையும் எப்படி மறந்தேன்…!’ அவளுடைய இதயம் வேகமாகத் துடித்தது… உடல் நடுங்கியது… மேல்மூச்சுக் வாங்கியது…

 

அவளுடைய பதட்டத்தை கூச்சம் என்று நினைத்தவன் “பவி…” என்று மீண்டும் அவள் கையை பிடித்தான். அவள் வெடுக்கென்று உருவிக் கொண்டாள். அவனுக்கு எரிச்சல் வந்தது… “என்ன…?” என்றான் கோபமாக.

 

“உங்களுக்குத்தான் என்னை பிடிக்காதே…! உங்க முன்னாடி நிற்க கூட எனக்கு தகுதி இல்லன்னு சொன்னிங்களே…! ஒரு நிமிஷத்துக்கு மேல என் முகத்தை உங்களால பார்க்கக் கூட முடியாதே…! இப்போ எப்படி…?” என்று கேட்டவளின் கண்கள் கலங்கின.

 

“இப்ச்… அது அப்போ…” என்று அவன் ஏதோ சமாதானம் சொல்ல விழைகையில் “நான் எதையும் மறக்கல…” என்றாள்.

 

“அதெயெல்லாம் மறக்காதவ இந்த கருமத்தையெல்லாம் எதுக்குடி செய்ற…?” என்று கேக்கையும் வாழ்த்து அட்டையையும் சுட்டிக்காட்டிக் கடுப்படித்தான். அவள் முகம் அவமானத்தில் கலங்கி சிவந்தது. அதைக் காணச் சகிக்காமல் வேகமாக வெளியேறி மாடிப் படிகளில் ஏறினான்.

 

அவன் அந்தப்பக்கம் சென்றதும் இங்கே தரையில் சரிந்து அமர்ந்தவளிடமிருந்து அடக்க முயன்றும் முடியாமல்… விம்மல் வெடித்து அழுகை பீறிட்டது. சிவனேன்னு இருந்தவனை வலிய அழைத்துவந்து அவன் உணர்வுகளை சோதித்துவிட்டோமே என்கிற குற்ற உணர்ச்சி மனதை அரித்தது. நமக்காக இவ்வளவு மாறியிருப்பவனை புன்படுத்திவிட்டோமே என்று மனம் தவித்தது… இன்னும் நான்கு நாட்களில் ஊருக்கு போகப் போகிறவன் ஆசையாக நெருங்கிய பொழுது பிடிவாதத்தை விட்டுக் கொடுக்க முடியாமல் அவனை நோகடித்துவிட்டோமே என்று வேதனை வருத்தியது. மகிழ்ச்சியாக ஆரம்பித்த பேச்சு இப்படி கோபத்திலும் அழுகையிலும் முடிந்துவிட்டதே என்று கண்ணீரில் கரைந்தவள் வெகுநேரம் கழித்து  மனதைத் தேற்றிக் கொண்டு எழுந்தாள்.

 

‘நாம் செய்தது சரிதான்… சொந்த நாட்டை விட்டு போகப் போகிறோம் என்கிற வருத்தத்தில்… அவன் மனம் நெகிழ்ந்திருக்கும்… இந்த  பலவீனமான  தருணத்தில் அவனோடு இசைந்து வாழ்ந்தால்… என்னுடைய அப்பழுக்கில்லாத காதலுக்கு என்ன மரியாதை…? நான் அவனை உயிராய் நேசிப்பது போல் அவனுக்குள்ளும் நேசம் மலரட்டும்… இன்னும் கொஞ்ச நாள்தான்… அவன் விரும்பிய மனைவியாக… அவனுக்குப் பிடித்த மனைவியாக அவனுக்கு முன் நிற்கும் காலம் வெகு தொலைவில் இல்லை… அதுவரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை…’ என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டாள்.
Comments are closed here.

You cannot copy content of this page