Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – [email protected]

Share Us On

[Sassy_Social_Share]

உனக்குள் நான்-37

அத்தியாயம் – 37

 

தர்மராஜ் மதுமதி ஏறி அமர்வதற்காக காரின் கதவைத் திறந்துவிட்டார். ஆவியைப் பிரிந்த வெறும் உடல் கூடு மட்டும் உள்ளே ஏறி அமர்ந்தது. அவர் மறுபக்கம் சுற்றி வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரைக் கிளப்பினார். காவல்நிலைய வளாகத்திலிருந்து வெளியே வந்து சாலையில் ஏறி போக்குவரத்தில் கலந்த அவர்களுடைய காரில் கனத்த அமைதி சூழ்ந்திருந்தது. மதுமதியின் முகத்தில் ஒருவித சோகம்… கண்களில் கலக்கம்… பேச்சை மறந்துவிட்ட ஊமை போல் சாலையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.

 

“என்னமா மது? எதுக்கு இப்படி இடிஞ்சு போய் உக்கார்ந்திருக்க?”

 

“…………………….” – அவளிடமிருந்து பதிலும் இல்லை, அந்த வெறித்த பார்வையும் மாறவில்லை.

 

“அம்மாடி… முகிலனுக்கு ஒண்…ணு…ம் இல்லம்மா. நமக்குத் தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் தான். பயப்படாத…” – தைரியம் கூறினார். அப்போதும் அவளிடமிருந்து பதில் இல்லை…

 

‘என்ன இப்படி உட்கார்ந்திருக்கா! கடைசி நேரத்துல இந்தப் பய சத்தம் போட்டானே… அதுல ஏதும் கோபமா இருக்காளோ…’ – சொந்தக் குழந்தைகளுக்கு மேலாக அவர்களை நினைத்து அக்கறை கொண்டுள்ள அந்த முதிய ஆத்மா கலங்கியது. இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்குள் புதிதாக எந்தவிதமான மனஸ்தாபங்களும் வந்துவிடக் கூடாது என்று எண்ணி அவளைச் சமாதானம் செய்ய முயன்றார்.

 

“மதும்மா… முகிலன் திட்டிட்டானேன்னு நினைக்கிறியா? அத்தனையும் உன்மேல இருக்கிற பாசம்மா…” அவர் சொல்லி முடிப்பதற்குள் சட்டென்று அவளுடைய பார்வை அவர் பக்கம் திரும்பியது.

 

“என்னம்மா அப்படிப் பார்க்கற? உன்மேல அந்தப் படவா எவ்வளவு உயிரா இருக்கான்னு நானே இன்னிக்குத்தானே பார்த்தேன்” – பெருமை பொங்க கூறினார்.

 

அவளுடைய நெற்றி கேள்வியாகச் சுருங்கியது. “இன்னிக்கு காலேஜ்ல என்ன தாத்தா நடந்தது?”

 

அவள் கேட்டது தான் தாமதம்… “மதியம் ஒரு பன்னிரண்டு மணி இருக்கும்மா… கலைவாணியோட அப்பா எனக்கு ஃபோன் பண்ணினாரு… நீ என்னவோ அந்தப் பொண்ண கண்டபடி திட்டிட்டன்னு சொன்னாரு. ‘நீங்கதானே அவரை ப்ராஜெக்ட் கைடா சிபாரிசு பண்ணினீங்க’ன்னு என்னைய புடிச்சுச் சத்தம் போட்டாரு. ‘சரி முகிலன் காலேஜ்ல தான் இப்ப இருப்பான். நான் அவன்கிட்டப் பேசுறேன்’னு சொல்லிட்டு போனை வச்சுட்டு அவனுக்கு போன் பண்ணினா…. அவன் போனை எடுக்கல. சரின்னு நான் நேரா காலேஜுக்குக் கிளம்பி போனேன்” என்று நடந்த அத்தனையையும் மூச்சு விடாமல் அவளிடம் விளக்க ஆரம்பித்தார்.

 

“மதி கோவத்துல ஏதாவது பேசியிருப்பா சார்… ஆனா நிச்சயமா தப்பால்லாம் பேசியிருக்கவே மாட்டா… எனக்குத் தெரியும்” – அலட்டிக்கொள்ளாமல் உறுதியாகக் கூறினான்.

 

“அட என்னடா நீ… அந்தப் பொண்ணு அழுது ஊர கூட்டிட்டாளாம். அவ அப்பன் என்கிட்ட கெடந்து குதிக்கறான்… நீ என்னடான்னா சாதாரணமா பேசிக்கிட்டு இருக்க?” – கல்லூரியில் ஆசிரியர்கள் அறையில் முகிலனுடன் தர்மராஜ் பேசிக் கொண்டிருக்கும் பொழுது வெளியேயிருந்து நாராசமாக ஒலித்தது ஒரு குரல்.

 

“டேய் கார்முகிலா… வெளியே வாடா… காலேஜ்ல ப்ரோஃபஸர்னா… பெரிய ஆளாடா நீ..? வெளியே வாடாங்கிறன்ல…”

 

“மச்சி… அவனை இப்படியெல்லாம் கூப்பிட்டா வரமாட்டான்டா… உள்ள போயி சட்டைய புடிச்சு இழுத்துட்டு வந்து நிக்க வச்சு கேக்கணும்டா… ஊரான் வீட்டுப் பொண்ணுங்கன்னா அவ்வளவு இளக்காரம்…” – வேறு ஒரு குரல்.

 

முகிலனும் தர்மராஜும் ஒருவரையொருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள். சட்டென்று பொங்கிய ஆவேசத்துடன் எழுந்தான் முகிலன்.

 

“நீ இருடா… நான் பார்க்கறேன்” என்று முகிலனை முந்திக்கொண்டு தர்மராஜ் வெளியே வர அவரைத் தொடர்ந்து முகிலனும் வந்தான்.

 

வியர்வையில் குளித்த உடலும்… செம்மை படர்ந்த விழிகளுமாக… இரண்டு இளைஞர்கள் வெறியோடு நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைப் பார்க்கும்பொழுதே நன்றாகக் குடித்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. அது லஞ்ச் பிரேக் டைம் என்பதால் அவர்களைச் சுற்றி சிறு கூட்டம் கூடக் கூடிவிட்டிருந்தது. ஒரு பியூன் மட்டும் “இங்கல்லாம் இது மாதிரி சத்தம் போடகூடாது சார்… கிளம்புங்க சார்…” என்று அவர்களை அப்புறப்படுத்த முயன்று கொண்டிருந்தான்.

 

அந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன் கலைவாணியின் அண்ணன் கதிரவன் என்பது முகிலன் மற்றும் தர்மராஜ் இருவருக்குமே தெரிந்தது. ஸ்டாஃப் ரூம் வாசலில் முகிலனின் தலையைக் கண்டதுமே இன்னும் ஆவேசமாகக் கத்த ஆரம்பித்தான் கதிரவன்.

 

“டேய்… அங்க என்னடா ஒளிஞ்சுகிட்டு நிக்கற? ஆம்பளதானடா நீ? என் தங்கச்சிக்கிட்ட தப்புத்தப்பா பேசுனீங்களாமே..? இப்போ என்கிட்ட பேசுடா பார்க்கலாம்…” எகிறினான்.

 

அவன் கூறிய ஸ்டேட்மெண்ட் அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ‘கார்முகிலன் சார் இந்தப் பையனோட தங்கச்சிக்கிட்ட தப்பா பேசினாரா…!’ – சுற்றியிருந்த அத்தனை பேரின் பார்வையும் முகிலன் மீது பாய்ந்தது. சிலரின் பார்வையில் கேள்வி… சிலரின் பார்வையில் ஏளனம்… சிலரின் பார்வையில் ஆச்சர்யம்… பலவிதமான பார்வைகள். அதுவரை அலம்பல் செய்து கொண்டிருந்தவர்களைத் தடுத்து வெளியே அனுப்ப முயன்ற பியூன் கூட ஒருநொடி தயங்கி முகிலனின் பதிலை எதிர்பார்த்து நின்றான். ஆனால் அவன் முகத்தில் கோபம் இருந்தே தவிர… அவன் நின்ற இடத்திலிருந்து அசையவும் இல்லை. அவர்களை எதிர்த்து எதுவும் பேசவும் இல்லை. அவனுடைய அமைதி தர்மராஜுக்கே ஆச்சர்யமாக இருந்தது.

 

முகிலனின் அமைதி கதிரவனுக்கு இன்னும் உற்காகத்தைக் கொடுக்க அவன் வரைமுறையின்றி மோசமான வார்த்தைகளைப் பிரயோகித்து அவனை அசிங்கப்படுத்தினான். மற்றொருவன் நண்பனுக்குப் பின்பாட்டு பாடினான்.

 

“ஏய் தம்பி… என்ன நீ பாட்டுக்குப் பேசிக்கிட்டே போற? இந்தப் பிரச்னையைப் பத்தி நான் உங்க அப்பாகிட்டப் பேசிட்டேன். எதுவா இருந்தாலும் நீ உங்க அப்பாகிட்ட கேட்டுக்க…” – என்று கதிரவனிடம் கூறியவர், பியூனிடம் திரும்பி “என்னய்யா பூச்சி புடிக்கற மாதிரி பம்மிகிட்டு நிக்கற… போயி வாட்ச் மேனை வரச் சொல்லி இவங்கள வெளியே அனுப்பு…” என்று தர்மராஜ் கடுப்படித்தார்.

 

“யோவ்… என்னய்யா… வாட்ச் மேன்னா என்ன பெரிய கொம்பா… வெங்காயம்… இந்த உருட்டல் எல்லாம் எங்கையாவது வச்சுக்கோ… என்கிட்ட வேண்டாம்… ஆமா… நீ என்ன எப்ப பார்த்தாலும் அவனுக்குக் கொடி புடிச்சுக்கிட்டே திரியிற? நீ தான என் தங்கச்சியை இவன்கிட்ட ப்ராஜெக்ட்டுக்கு அனுப்பின…”

 

“மச்சி… இவன்தானாடா அந்தக் கிழட்டு வாத்தி..? அப்ப இவனத்தான்டா முதல்ல கவனிக்கணும்…” – கதிரவனின் நண்பன் தர்மராஜின் கையைப் பிடித்திழுத்தான்.

 

நொடியில் அவனிடம் பாய்ந்து சென்ற முகிலன், தர்மராஜின் கையை அவனிடமிருந்து விடுவித்து அவனை மறுபக்கம் தள்ளிவிட்டான். போதையில் இருந்தவன் தடுமாறிக் கீழே விழுந்தான்.

 

“இவனுங்ககிட்ட எதுக்கு நீங்க பேசுறீங்க… வாங்க…” அவர் கையைப் பிடித்து கார் பார்க்கிங் நோக்கி நடக்க ஆரம்பித்தான். இது பிரச்சனை செய்யும் இடம் அல்ல… இங்கே இருந்தால் மிருகமாகிவிடுவோம் என்று நினைத்து அங்கிருந்து அகன்றுவிட நினைத்தான். கதிரவன் அவனை விடவில்லை.

 

“டேய்… பொண்டாட்டிய அடக்கி வைக்க வக்கில்ல… எங்களை அடிக்க வந்துட்டியா… அதான்டா அவ ரௌடி ரங்கம்மா மாதிரி சிலிர்த்துகிட்டுத் திரியிறா…” – முகிலனின் நடை தடைபட்டு, தர்மராஜை பிடித்திருந்த கையை விட்டுவிட்டுச் சட்டென்று திரும்பினான். தாடை இறுகி… நாசி விடைத்து… நெற்றி நரம்புகள் புடைத்து… அவன் முகம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே பயங்கரமாக மாறியது.

 

“இங்க நிக்க வேண்டாம்… வாடா போகலாம்…” – அவன் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கவனித்தவர், பிரச்சனை தீவிரமடைவதை உணர்ந்து கவலையுடன் அவன் கையைப் பிடித்து இழுத்தார்.

 

“ஏற்கனவே ஒருத்திய கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயி கலி தின்னவதானடா உன் பொண்டாட்டி… இன்னமும் அவளுக்குத் திமிரு அடங்கலையா? முதல்ல நீலவேணி… இப்போ கலைவாணியா… மகளே அவ மட்டும் என் கையில சிக்கினா…!!” – கீழே விழுந்தவன் விரைந்து எழுந்து வெறியுடன் கத்தினான்.

 

அவ்வளவு தான்… முகிலன் ரௌத்திரத்தின் எல்லை என்ன என்பதை அங்கிருந்த அனைவரும் அன்று தெரிந்து கொண்டார்கள். கண்ணிமைக்கும் நேரம் கூட அதிகம் என்று தான் சொல்ல வேண்டும்… மின்னல் வேகத்தில் அவனிடம் பாய்ந்தவன், ஓங்கிச் செவிட்டில் ஒன்று கொடுத்தான். பொறி கலங்கிபோய்க் கீழே விழுந்தான் கதிரவனின் நண்பன்.

 

“யார் மேலடா கை வைக்கற? …… நாயே… உன்ன கொல்லாம விட மாட்டேன்டா…” – நண்பன் அடிபட்டு கீழே விழுந்ததும் வெறியான கதிரவன், முகிலனிடம் பாய்ந்து வந்து சிக்கிக்கொண்டான். எதிரியிடம் சிக்கிக்கொண்ட நண்பனைக் காப்பாற்ற, கீழே விழுந்தவன் மீண்டும் எழுந்து பாய்ந்து வந்து தானும் மாட்டிக்கொண்டான். சிக்கியவனையும் மாட்டியவனையும் சிந்தாமல் சிதறாமல் வளைத்துப் பிடித்து, எலும்பை உடைத்துப் பட்டாசு வெடித்தான் முகிலன். இருவரும் கல்லடி பட்ட நாய் போல் கதறிய போதும் விடாமல், சமதர்ம முறையில் தானதர்மங்களை வழங்கி மரியாதைச் செய்தான்.

 

இனியும் தாமதித்தால் கொலை கேஸாகிவிடும் என்று பயந்து சுற்றியிருந்தவர்கள் முகிலனிடமிருந்து அவர்களைக் காத்தருளினார்கள். சற்றுநேரத்தில் நடந்து முடிந்துவிட்ட களேபரத்தில் பதட்டமடைந்துவிட்ட தர்மராஜ் முகிலனை அதட்டி அடக்கி காருக்கு அழைத்துக்கொண்டு சென்றார். கொஞ்சம் விட்டிருந்தால் என்னவெல்லாம் நடந்திருக்குமோ…! அவர் உடல் வெடவெடவென்று நடுங்கியது.

 

“ஏன்டா இப்படியிருக்க? காட்டுப்பய மாதிரி இந்த அடி அடிக்கற… செத்துக் கித்துப் போய்த் தொலஞ்சுட்டானுவன்னா எவன்டா போயி கைக்கட்டி நிக்கிறது… மடப்பயலே… உனக்கெல்லாம் எவ்வளவு சொன்னாலும் மண்டையில ஏறாதுடா… வண்டியில ஏறுடா…” – கையைப் பிடித்திழுத்து அவனைக் காருக்குள் தள்ள முயன்றார்.

 

“விடுங்க சார் கைய… என்ன பேச்சுப் பேசறான் அந்த நாயி. அவன சும்மா விடச் சொல்றீங்களா” – கையை உதறிவிட்டு தர்மராஜையே முறைத்தான்.

 

மெதுவாக அவனிடம் பேசி சமாதானம் செய்து ஒருவழியாக அவனை காரில் ஏற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு, அடிபட்டுக் கிடந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். பிறகு விஷயத்தை கதிரவனின் தந்தைக்கு ஃபோன் செய்து கூறினார். அவர் பயந்தது போலவே அந்த மனிதர் ‘தையா தக்கா’ என்று குதித்ததோடு முகிலனின் மீது கேஸும் கொடுத்துவிட்டார்.
Comments are closed here.

You cannot copy content of this page